31 பேசா மடந்தை

31 பேசா மடந்தை?

போதை மருந்து தடுப்பு பிரிவின் விசாரணை அறையில் அமர்ந்திருந்தார் குமரேசன்.

"நீங்க என்னை எதுக்காக வர சொன்னிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா, சார்?"

"நாங்க ராகேஷை அரெஸ்ட் பண்ணி இருக்கோம்"

"ராகேஷா?"

"ஆமாம்... எம் எம் கம்பெனியில வேலை செய்றாரே, அந்த ராகேஷ் தான்"

"ஓ...  அவரா?"

"உங்களுக்கு அவரை தெரியுமா?"

"ஏன் தெரியாது? ரொம்ப நல்ல பிள்ளையாச்சே"

"நீங்க அவருக்கு 25 லட்சம் கொடுத்ததா அவரு சொல்றாரு"

"ஆமாம், கடனா கொடுத்தேன்"

"கடனாவா?"

"ஆமாம். சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்க போறதா சொன்னாரு. அதுக்காக ரொம்ப நாளா என்கிட்ட பணம் கேட்டுக்கிட்டு இருந்தாரு. நான் அவரோட வேலை செய்ற திறனை கூர்ந்து கவனிச்சேன். அவரோட கடினமான உழைப்பு எனக்கு திருப்தியை தந்தது. அதனால அவருக்கு புதுசா தொழில் தொடங்க பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணேன்"

"அவரு கடின உழைப்பாளி அப்படிங்கிறதுக்காக மட்டுமே நீங்க எப்படி சார் அவருக்கு பணம் கொடுத்துட முடியும்?"

"அது மட்டும் காரணம் இல்ல. அவர் மகிழனுக்கு ரொம்ப நெருக்கமான ஃப்ரெண்ட். ஒரு ஹை கிளாஸ் பையனோட  ஃப்ரெண்ட்ஷிப்பை இவ்வளவு நல்லா மெயின்டைன் பண்ண முடியும்னா, அவர் ரொம்ப உண்மையானவரா இருக்கணும். அதை நான் மனசுல வச்சுக்கிட்டு தான் ஹெல்ப் பண்ணேன்"

"அவருக்கு கடன் கொடுத்ததுக்கு ஏதாவது டாக்குமெண்ட் வச்சிருக்கீங்களா?"

"ஓ... வச்சிருக்கேனே"

"நாங்க அதை பார்க்கலாமா?"

"தாராளமா பார்க்கலாம். நான் அதை கொண்டு வந்து உங்க கிட்ட காமிக்கிறேன்"

"அந்த டாக்குமெண்டை பத்தி ராகேஷ் ஏன் எங்ககிட்ட சொல்லல?"

"அவர் அதைப்பத்தி உங்க கிட்ட சொல்லலையா? ஒருவேளை நீங்க திடீர்னு அரெஸ்ட் பண்ணதால, அவர் பதட்டமாக இருக்காருன்னு நினைக்கிறேன்"

"சரி. நீங்க டாக்குமெண்ட் காப்பியை எங்ககிட்ட சப்மிட் பண்ணா, நாங்க ராகேஷை ரிலீஸ் பண்றோம்"

"நிச்சயமா பண்றேன் சார். நான் என்னோட லாயரை அதை கொண்டு வர சொல்றேன்"

"சரி"

"சார் நான் ஒரு ஃபோன் பண்ணிக்கலாமா?"

"பண்ணிக்கோங்க"

தனது அலைபேசியை எடுத்த குமரேசன், தனது வழக்கறிஞருக்கு ஃபோன் செய்து, அந்த பத்திரங்களை கொண்டு வரச் சொன்னார்.

இதற்கிடையில்,

பூங்குழலி அவர்களது அறைக்கு செல்லாமல், மின்னல்கொடியுடன் சமையலறையிலேயே இருந்துகொண்டு மலரவனை திணறடித்துக் கொண்டிருந்தாள். மலரவன் எவ்வளவு முயன்ற போதும், பூங்குழலியை அவனால் பேச வைக்கவே முடியவில்லை. அவளது பிடிவாதத்தை பார்த்து வியந்து தான் போனான் மலரவன். அவள் இப்படியே இருந்தால் தன்னுடைய வாழ்க்கை என்னாவது? இதற்கு ஒரு முடிவு கட்டுவது என்று தீர்மானித்து தனது அறைக்குச் சென்றான்.

அப்போது மின்னல்கொடியிடம் வந்த கீர்த்தி,

"ஆன்ட்டி, அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்களாம். நான் போய் பாத்துட்டு வரட்டுமா?" என்றாள் கவலையாக.

"அய்யய்யோ என்ன ஆச்சும்மா? பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையே?"

"கால்ல அடிபட்டு வீங்கி இருக்காம் ஆண்ட்டி"

"சரி இரு. நான் மகிழினை உன் கூட அனுப்பி வைக்கிறேன்"

சரி என்று தலையசைத்தாள்  கீர்த்தி. மகிழனை அழைத்த மின்னல்கொடி,

"மகிழா, கீர்த்தியோட  அம்மாவுக்கு கால்ல அடிபட்டு இருக்காம். அவ கூட போய் அவங்க அம்மாவை பாத்துட்டு அவளை அவங்க வீட்ல விட்டுட்டு வா"

"நான் போக மாட்டேன்" என்றான் கராராக.

"மகிழா..."

"இவங்க அம்மா கீழ விழுந்தாலும் எனக்கு கவலை இல்ல. இவ அவங்கள போய் பார்த்தாலும் எனக்கு கவலை இல்ல. ஆனா, என்னை போக சொல்லாதீங்க" என்று அங்கிருந்து நடந்தான் மகிழன்.

முகத்தை மூடி அழுவது போல் பாசாங்கு செய்தாள் கீர்த்தி.

"என்னங்க, நீங்க கூட்டிகிட்டு போய் அவளை விட்டுட்டு வாங்க" என்றார் மின்னல்கொடி, மணிமாறனிடம்.

வேறு வழியில்லாமல் கீர்த்தியுடன் சென்றார் மணிமாறன்.

அங்கு வந்த மலரவன், பூங்குழலியிடம் பேச முயற்சி செய்ய, அவள் அதற்கு பிடி கொடுக்காமல், மின்னல்கொடியின் பின்னால் நழுவி ஓடினாள். அதை கவனித்த மின்னல்கொடி, மலரவனை பார்த்து ஏளனமாய் சிரித்து விட்டு,

"பேசா மடந்தையே...!" என்று பூங்குழலியின் கன்னம் கிள்ளினார்.

பெருமூச்சு விட்ட மலரவன், தனது கைபேசியை எடுத்து ஸ்டீவுக்கு ஃபோன் செய்தான்.

"விஷ் யு ஹாப்பி மேரீட் லைஃப் மலழ்" என்றான் ஸ்டீவ்.

"தேங்க்யூ ஸ்டீவ். ஸ்டேஜ் லைட்டிங் பத்தி நீ அனுப்பின மெசேஜை பார்த்தேன். நம்ம இதை முடிவு செய்ற வேலையை பூங்குழலிகிட்ட விட்டுடணும்னு நினைக்கிறேன். ஏன்னா அவ தானே இதை செலக்ட் பண்ணா?"

"யூ ஆர் ரைட்"

"என்கிட்ட அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ண சொல்லி அவகிட்ட சொல்லு"

"நானா?"

"ஆமாம்"

"ஆனா அவங்க உங்க கூட தானே இருக்காங்க?"

"இல்ல... இப்ப அவ என் கூட இல்ல. எங்க அம்மாவோட இருக்கா"

"ஆனா எதுக்காக?"

"அதெல்லாம் இங்க அப்படித்தான்"

"ஓஹோ..."

"நான் சொன்னதை செய்"

"ஷ்யூர்"

"இப்ப வேண்டாம். கொஞ்ச நேரம் கழிச்சு செய்"

"ஓகே... டன்."

அழைப்பை துண்டித்தான் மலரவன். இந்த பெண்ணை தன் வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு சாதாரணமாக இருக்காதோ என்று நினைத்தான் அவன்.

.........

குமரேசனின் வழக்கறிஞர், பத்திரங்களை கொண்டு வந்து போலீசில் கொடுத்தார். அதைப் பெற்று பரிசோதித்த அலுவலர், அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டார். யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அந்த பத்திரங்கள் வெகு எளிமையாய் இருந்தது.

"நாங்க ஃபார்மாலிட்டிசை முடிச்சிடுறோம்" என்றார் அந்த அதிகாரி.

"நான் ராகேஷை மீட் பண்ணலாமா?" என்றார் குமரேசன்.

சில நொடிகள் யோசித்த அந்த அதிகாரி, அவர்களுக்கு அனுமதி வழங்கினார். விசாரணை அறைக்கு அழைத்து வரப்பட்டான் ராகேஷ். அங்கு இருந்த குமரேசனை பார்க்கவே அவன் சங்கோஜப் பட்டான். அவர் தன் பெயரை கூறியதற்காக தன்மீது கோபமாக இருப்பார் என்று எண்ணினான்.

"எதுக்காக எனக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை பத்தி நீங்க போலீஸ்ல சொல்லல? அதைப்பத்தி சொல்லி இருந்தா பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு போயிருக்காதே" என்றார் குமரேசன்.

அவர் தனக்கு உணர்த்த வந்த விஷயத்தை உணர்ந்து கொண்டான் ராகேஷ்.

"திடீர்னு என்னை போலீஸ் சுத்தி வளைக்கவும் எனக்கு பதட்டமா போயிடுச்சு சார். என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல" என்று சமாளித்தான் ராகேஷ்.

"என்னோட லாயர் டாக்குமெண்ட்ஸை போலீஸ்ல ஒப்படைச்சிட்டாரு. உங்களை சீக்கிரமாகவே ஃபார்மாலிட்டிஸை முடிச்சிட்டு அவங்க விட்டுடுவாங்க. ஒன்னும் பயப்பட வேண்டாம்" என்றார் குமரேசன்.

"எனக்காக இவ்வளவு தூரம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்" என்றான் ராகேஷ்.

அவனது கண்களில் தெரிந்த நன்றி உணர்ச்சியை கவனிக்க தவறவில்லை குமரேசன். அவருக்கு வேண்டியது அது தான்.

கள்ள புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார் குமரேசன். உண்மையில் அவர் ராக்கேஷிடம் எந்த பத்திரத்தையும் எழுதி வாங்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சாதாரண தாளில் அவன் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொண்டார், முன்னெச்சரிக்கையாக. ராகேஷ் கைது செய்யப்பட்ட விஷயம் தெரிந்தவுடன், அது சம்பந்தமான பத்திரத்தை தயார் செய்ய சொல்லி தனது வழக்கறிஞரிடம் அவர் கூறினார். ராகேஷிடம் அவர் பெற்ற கையெழுத்தின் பிரதியை டிஜிட்டல் பிரிண்டில் எடுத்து அதை அவர்கள் புதிதாய் தயார் செய்த பத்திரத்தில் பொருத்திவிட்டார்கள்.

இதோடு பிரச்சனை முடிந்து விட்டது என்று தான் குமரேசன் எண்ணினார்... ஆனால்...!

........

பத்திரங்களை பற்றி மித்திரன் கூறிய போது குழப்பம் அடைந்தான் மலரவன். அவன் எதிர்பார்த்தது இதுவல்ல. குமரேசன் பின்வாங்குவார், ராகேஷ் உண்மையை மகிழனிடம் கூறுவான் என்று தான் அவன் எண்ணியிருந்தான். ஆனால் குமரேசன் புத்திசாலித்தனமாய் இந்த விஷயத்தை கையாண்டு விட்டார். ஆனால் அவரை புத்திசாலி என்று கூறி விட முடியாது. அவருடைய திட்டத்தில் இருந்த மிகப்பெரிய ஓட்டையை கவனிக்காமல் விட்டுவிட்டார் குமரேசன். அந்த ஓட்டை மலரவனின் கண்களில் பட்டுவிட்டது.

மலரவன் கூறியது போலவே, பூங்குழலிக்கு ஃபோன் செய்து,  மேடையில் பொருத்தப்பட வேண்டியிருந்த மின்விளக்குகள் பற்றி மலரவனிடம் அவளை பேச சொன்னான் ஸ்டீவ்.

"அதை நீங்களே அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ணுங்களேன் ஸ்டீவ்"

"இல்ல மேடம். அந்த லைட்டிங்கையெல்லாம் செலக்ட் பண்ணினது நீங்க தான். அதனால அவர்கிட்ட அதைப் பத்தி நீங்க பேசுறது தான் சரியா இருக்கும். அது நம்மளோட டைமை ரொம்ப மிச்சப்படுத்தும். ஏன்னா, நீங்க தான் இப்போ அவர் கூடவே இருக்கிங்களே. நீங்க ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி என்ன செய்யணும்னு என்கிட்ட சொன்னா நான் அதை செஞ்சிடுவேன்"

"சரி. நான் இதைப் பத்தி அவர் கிட்ட பேசுறேன்"

"தேங்க்யூ சோ மச் மேம்," என்று அழைப்பை துண்டித்தான் ஸ்டீவ்.

தன்னிடம் பூங்குழலியை பேச வைப்பதற்காக இது மலரவன் போட்ட திட்டம் என்று பூங்குழலிக்கு தெரியாது தான். ஆனாலும் அவனிடம் பேசாமலேயே அதை செய்ய ஒரு உபாயத்தை கண்டுபிடித்து விட்டாள் பூங்குழலி.

..........

குமரேசன் இல்லம்

முதல் நாள் நடந்தவற்றை கேள்விப்பட்ட சுஜாதா, கொதித்துப் போனார். எவ்வளவு தைரியம் இருந்தால் தனது மகளை ஒரு இரவெல்லாம் அறைக்கு வெளியில் நிற்க வைத்திருப்பான் மகிழன்? எவ்வளவு தைரியம் இருந்தால் அவளை கை நீட்டி அடித்திருப்பாள் பூங்குழலி? மணிமாறனும் மின்னல்கொடியும் எப்படி இதையெல்லாம் நடக்க விட்டார்கள்?

"மகிழனை உன்னோட வழிக்கு கொண்டுவர நீ எந்த முயற்சியும் செய்யலையா? நீ தானே சொன்ன, நான் அவனை சுலபமா என் காலில் விழ வைச்சிடுவேன்னு?" சுஜாதா.

"அவன் ஒரு பேய், மாம். நம்ம மேல அவன் கடுமையான கோபத்தில் இருக்கான். நான் அவனுக்கு பணம் கொடுக்கிறேன்னு சொன்னதுக்கு பிறகும், நான் பேசுறதை கேட்க அவன் தயாரா இல்ல. அவன் ஒரு கல்லு"

"நீ என்ன செய்யப் போற?"

"நான் என்ன செய்யப் போறேன்னு எனக்கு ஒன்னும் புரியல. ஆனா நிச்சயம் அவங்க சந்தோஷமா  இருக்கவே கூடாது"

"அவன் ஏற்கனவே உன் மேல கோவமா இருக்கான். கோபத்துல அவன் உன்னை ஏதாவது செஞ்சுட்டா என்ன செய்றது?"

"ஏதாவது செஞ்சு மகிழனை நம்ம வழிக்கு கொண்டு வந்தே ஆகணும்"

"உனக்கு இன்னும் அப்படி நடக்க வைக்க முடியும்னு நம்பிக்கை இருக்கா?"

"நம்பிக்கையோடு இருக்கிறதை தவிர எனக்கு வேற வழியில்ல. அவன் இஷ்டத்துக்கு அவனை விட்டுட கூடாது"

"சரி, நான் யோசிச்சு ஏதாவது செஞ்சு, அவனை உன் காலடியில் விழ வைக்கிறேன்" என்றார் சுஜாதா.

.........

மேடை விளக்கு அலங்காரம் பற்றி தனக்கு பூங்குழலி வாட்ஸ் அப்பில் தகவல்கள் அனுப்பி கொண்டிருந்ததை பார்த்த மலரவன் அசந்து போனான். அவள் அவ்வளவு சுலபமாய் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது அவனுக்கு புரிந்து போனது. அவள் அனுப்பிய எந்த தகவலையும் அவன் திறந்து பார்க்கவே இல்லை. அவள் தனக்கு தகவல் அனுப்புவதே தனக்கு தெரியாது என்பது போல் சாதாரணமாக இருந்தான். பூங்குழலியோ அவனுக்கு தகவல் மேல் தகவலாக அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆனால் மலரவன் அவற்றை பார்ப்பதாய் இல்லை. இந்த நிலை மாலை வரை தொடர்ந்தது.

தங்கள் அறைக்கு வந்த பூங்குழலி, அங்கு மலரவன் இல்லாததால், கட்டிலில் அமர்ந்து அவனுக்கு மேலும் ஒரு தகவல் அனுப்பினாள். அப்பொழுது அவர்கள் அறைக்குள் நுழைந்த மலரவன், கதவை சாத்தி தாளிட்டான். அதை செய்யும் போது அவன் தனது கண்களை பூங்குழலியின் மீதிருந்து அகற்றாமல் செய்தான். அவனது பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த பூங்குழலி, எழுந்து நின்றாள். அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. திடீரென்று அவளை நோக்கி வேகமாய் நடந்த மலரவன், அவளை பின்னோக்கி நகர வைத்தான். அவள் சுதாகரித்துக் கொள்வதற்கு முன், அவள் இடையை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். பூங்குழலியின் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தன.

"நம்ம உறவை ஏத்துக்க உனக்கு உண்மையிலேயே டைம் வேணுமா பூங்குழலி? எவ்வளவு நாள் எடுத்துக்க போற? என்னால உன்கிட்ட இருந்து விலகி இருக்கவே முடியல. உன் மனசை தயார்படுத்திக்கிட்டு நீ ஏன் நம்ம உறவை உடனே ஏத்துக்க கூடாது? நான் உன்னை தொட்டா அதுல என்ன தப்பு? உன்னை கட்டி பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? நான் உன் புருஷன் தானே...!" அவளை முத்தமிட அவள் கன்னத்தை நோக்கி குனிந்தான் மலரவன்.

தனது பலத்தை திரட்டி, அவனை பிடித்து தள்ளினாள் பூங்குழலி.

"நீங்க இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. நீங்க எப்பவும் எல்லை மீற மாட்டீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. நான் நினைச்ச மாதிரி நீங்க இல்ல. மத்தவங்களுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. எல்லாரும் ஒன்னு தான். உங்களைப் பத்தி என் மனசுல நான் எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்திருக்கக் கூடாது..." என்று மூச்சிரைக்க பேசய அவள், மலரவன் கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

தன் தலையை சாய்த்து,  சுவர் கடிகாரத்தை பார்த்தான் மலரவன், அன்று காலை அவள் பார்த்ததை போலவே. அப்பொழுது தான் பூங்குழலிக்கு புரிந்தது, அவள் செய்தது என்ன என்பது. தன் புருவம் உயர்த்தி கிண்டலாய் சிரித்தான் மலரவன். தான் சவாலில் தோற்று விட்டதை உணர்ந்த பூங்குழலி கண்களை இறுக்கமாய் மூடினாள்.

"இப்போ நம்ம லைட்டிங் பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா மேடம்?" என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

தன் முகத்தை திருப்பிக் கொண்டு வேறெங்கோ பார்த்தபடி நின்றாள் பூங்குழலி.

"பேசா மடந்தையா நீ? எவ்வளவு பேச்சு..." புன்னகைத்தான் அவன்.

பூங்குழலி அவனைப் பார்த்து முறைக்க, அவனது புன்னகை விரிவடைந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top