29 இது உங்களுக்கல்ல

29 இது உங்களுக்கல்ல

தன் அப்பாவுக்கு அழைப்பு விடுத்தாள் கீர்த்தி.

"ஹலோ பேபி. குட் மார்னிங். எப்படி இருக்க?" என்றார் குமரேசன்.

"நான் நல்லா இல்ல... இந்த மார்னிங் எனக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் குட்டா இருக்க போறது இல்ல"

"நீ என்ன சொல்ற?"

"தன்னோட வீட்ல 25 லட்சம் வச்சிருந்ததுக்காக ராகேஷை போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க"

'என்ன சொல்ற? உனக்கு எப்படி தெரியும்?"

"இப்போ தான் மித்திரன் ஃபோன் பண்ணி, மலரவன்கிட்ட விஷயத்தை சொன்னான்"

"ஆனா அவன் வீட்டுக்கு போலீஸ் எப்படி போனாங்க?"

"அவங்க நார்காடிக் டிபார்ட்மென்ட். ராகேஷ் ட்ரக்ஸ் யூஸ் பண்றதா யாரோ கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க போல இருக்கு"

"எனக்கு தெரிஞ்ச வரைக்கும், அவனுக்கு அப்படி எந்த ஒரு பழக்கமும் இல்லையே"

"அவன் யாருக்கும் தெரியாம அதை யூஸ் பண்ணி இருக்கலாம். இது ஒன்னும் வெட்ட வெளிச்சமா செய்யக்கூடிய விஷயம் இல்லையே"

"நீ சொல்றதும் சரி தான்"

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாட். ஒருவேளை ராகேஷ் நம்மளை பத்தி போலீஸ்ல சொல்லிட்டா என்ன செய்றது?"

பதில் கூறவில்லை குமரேசன். அவரும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார்.

"அவன் உண்மையை சொல்லிட்டா என்ன ஆகும்? ஏற்கனவே மகிழன் என் மேல கொலை காண்டுல இருக்கான். நேத்து ராத்திரி ஃபுல்லா என்னை அவனோட ரூம்குள்ளயே விடல"

"என்ன்னனது...???"

"ஆமாம் டாட். அவன் என் மேல அவ்வளவு கோவத்துல இருக்கான்.என்னை அவன் ரூம்மில் இருந்து வெளியில பிடிச்சி தள்ளி விட்டுட்டான்... ராத்திரி முழுக்க வெளியிலேயே நிக்க வச்சான்"

"அவனுக்கு எவ்வளவு தைரியம்..."

"அவனுக்கு தைரியம் இருக்கு... அவன் நம்ம நெனச்ச மாதிரி  இல்ல... அவனை நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்னு எனக்கு தோணல"

"நீ இப்போ என்ன செய்யப் போற?"

"எனக்கு தெரியல. ராகேஷ் மட்டும் உண்மையை சொல்லிட்டா, எனக்கு நரகம்னா என்னன்னு காட்டுவான் மகிழன்"

"ஒருவேளை நிலைமை மோசமா போச்சுன்னா, அங்கிருந்து கிளம்பி நீ நேரா நம்ம வீட்டுக்கு வந்துடு"

"இவங்களைப் பத்தி நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? இவங்க சும்மா விட்டுடுவாங்கன்னு நினைச்சீங்களா?  நம்மள பூண்டோட ஜெயிலுக்கு அனுப்புவாங்க.  எல்லார் முன்னாடியும் நம்ம அவங்களை அவமானப்படுத்தினதுக்காக நம்மளை சும்மா விட்டுடுவாங்களா? மகிழன் என் தோலை உரிச்சிடுவான்" என்றாள் பதற்றத்துடன்.

அவளது பதற்றம் குமரேசனையும் தொற்றிக் கொண்டது. அவருக்கும் மணிமாறன் குடும்பத்தை பற்றி நன்றாக தெரியும். அவர்களுடனான தொழில் தொடர்புகள் அறுந்து போவதை நினைத்து அவர் வருந்த வில்லை. ஆனால் புதிதாய் ஏற்பட்டிருக்கும் உறவு முறையின் பாதிப்பை பற்றி தான் அவர் பயம் கொண்டார். அது அவரது மகளின் வாழ்வை நிச்சயம் ஆபத்தில் கொண்டு சென்று நிறுத்தும். அவர்கள் அரங்கேற்றிய நாடகம் வெகு சீக்கிரம் வண்டவாளம் ஏறும் என்பதை அவர் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. அவருக்கு என்ன செய்வது என்பது புரியவில்லை. ஏனென்றால், அது போதை மருந்து தடுப்பு பிரிவின் கீழ் இருக்கும் வழக்கு. யாரும் ராகேஷ் நெருங்க கூட முடியாது. மகிழனை சுலபமாய் தன் வசப்படுத்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் குமரேசன். ஆனால் அவனோ, தன்மீது வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட திருமணத்தால் உக்கிரம் அடைந்து போயிருக்கிறான். குமரேசன் அதிகமாய் பயப்பட்டது, மகிழனை விட மலரவனை நினைத்து தான். சூழ்நிலை முழுக்க முழுக்க மகிழனுக்கு எதிராய் இருந்த சமயத்திலும் அவன் தன் தம்பியை நம்பினான். மேலும், மணிமாறனுக்கு மட்டும் உண்மை தெரிய வந்தால், அவர் குமரேசனை கொன்றே போட்டு விடுவார். தான் அனைத்து பக்கங்களிலிருந்தும் நெருப்பால் சூழப்பட்டது போல் உணர்ந்தார் குமரேசன்.

"டாட் ப்ளீஸ் ஏதாவது செய்யுங்க. ராகேஷ் மட்டும் உண்மையை சொல்லிட்டா, மகிழன் என்னை அடிச்சி தொங்கவிட்டுடுவான்"

"நான் பார்த்துக்கிறேன். நீ பயப்படாதே" என்றார் குமரேசன்.

"டாட் மகிழன் வரான். நான் காலை கட் பண்றேன்" என்று அவருடைய பதிலுக்காக காத்திருக்காமல் அழைப்பை துண்டித்தாள் கீர்த்தி.

குமரேசனை பயம் பிடுங்கி தின்றது. *நான் பார்த்துக் கொள்கிறேன்* என்று அவர் கீர்த்தியிடம் கூறினார். ஆனால் எப்படி என்று அவருக்கும் புரியவில்லை.

மகிழன் வருவதை பார்த்த கீர்த்தி, ஒரு தூணுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். மகிழனின் முன்னால் செல்லும் தைரியம் அவளுக்கு வரவில்லை. அவளுக்கு தெரியும், பூங்குழலியிடம் வாலாட்டியதற்காக அவன் அவள் மீது கோபமாய் இருக்கிறான் என்று. அதனால் அவனை விட்டு தள்ளி இருப்பது நல்லது என்று நினைத்தாள் அவள்.

இதற்கிடையில்,

பூங்குழலியை தன் அறைக்கு அழைத்து வந்த மின்னல்கொடி, அவளை கட்டில் மீது அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டார். பூங்குழலியின் கரத்தை மெல்ல பற்றிய அவர், பேச்சை தொடங்க தயங்கினார்.

"மன்னிச்சிடுங்க ஆன்ட்டி. நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்" என்றாள் அவர் எதுவும் கூறுவதற்கு முன்னால் தானாகவே முன் வந்த பூங்குழலி.

"இல்ல குழலி. மகிழன் சொன்னது கரெக்டு தான். நீ அவ்வளவு சுலபமா பொறுமை இழக்கிற பொண்ணு இல்ல. நீயே கையை உயர்த்தி இருக்கேன்னா, என்ன நடந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது"

"அவ என்ன சொன்னான்னு நீங்க தெரிஞ்சுக்க நினைக்கிறீங்களா?"

அமைதியாய் இருந்தார் மின்னல்கொடி.

"ஆம்பளைங்கள வளைக்கிற திறமை எனக்கு இருக்காம். அந்த வித்தையை நான் எங்க கத்துக்கிட்டேன்னு கேட்டா. ஏன்னா அந்த திறமை அவகிட்ட இல்லையாம். முதல்ல தம்பி என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டார். அவர் முடியாதுன்னு சொன்ன உடனே, அவரோட அண்ணன் தானாவே முன்வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாராம்..." பேச்சை நிறுத்திய பூங்குழலி அதிர்ச்சியே வடிவாய் அமர்ந்திருந்த மின்னல்கொடியை ஏறிட்டாள்.

"என்னை மன்னிச்சிடுமா"

"அவ செஞ்ச தப்புக்கு நீங்க ஏன் ஆன்ட்டி மன்னிப்பு கேக்குறீங்க? நீங்க இப்படி ஓரவஞ்சனை பண்றது எனக்கு பிடிக்கல" என்றாள் சிரிப்பை அடக்கியபடி.

"நான் ஓரவஞ்சனை செய்யல..." என்று அவசரமாய் மறுத்த மின்னல்கொடி, பூங்குழலி வாய்விட்டு சிரிக்கவும் நிம்மதி அடைந்தார்.

"உங்களைப் பொறுத்த வரைக்கும் நானும் கீர்த்தியும் ஒன்னு தான். நாங்க ரெண்டு பேருமே இந்த வீட்டு மருமகளுங்க. எனக்காகவோ கீர்த்திகாவோ நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா  இந்த விஷயத்துல நீங்க செய்யக்கூடியது எதுவும் இல்ல"

ஆம் என்று தலையசைத்தார் மின்னல்கொடி.

"உங்க பிள்ளைங்க சொன்னது சரி தான். இந்த விஷயத்தை நீங்க எங்ககிட்டயே விட்டுடுங்க. உங்களை தேவையில்லாம ஸ்டிரெஸ் பண்ணிக்காதீங்க"

"நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா நான் எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நேர்மாறானவங்க. அது தான் என்னுடைய கவலைக்கு காரணம். ஏன்னா, ஒருத்தர் மட்டும் பாதிக்கப்படுறதை என்னால பொறுத்துக்க முடியாது"

"நீங்க எங்களைப் பத்தி கவலைப்படாதீங்க ஆன்ட்டி. நானோ, கீர்த்தியோ ரெண்டு பேருமே அப்பாவிங்க கிடையாது" என்று சிரித்தாள் பூங்குழலி.

மின்னல்கொடியும் சிரித்தார்.

அப்போது அவர்கள்,

"நீங்க பூங்குழலி கூட இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கிறதை உங்க இன்னொரு மருமக பாத்தா, நீங்க அவளுக்கு ஓரவஞ்சனை செய்றீங்கன்னு நினைப்பா" என்றான் மலரவன்.

அவனைப் பார்த்த இருவரும், ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு வாய்விட்டு சிரித்தார்கள். இப்பொழுது தானே அவர்கள் ஓரவஞ்சனையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்...! அவர்கள் சிரிப்பதற்கான காரணம் தெரியாத மலரவன் முகத்தை சுருக்கினான்.

"நீங்க ஏன் சிரிக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லிட்டு சிரிக்கிறீங்களா?"

"நாங்க உங்களை பார்த்து ஒன்னும் சிரிக்கல" என்றாள் பூங்குழலி.

"அது எனக்கு தெரியும். என்னை பார்த்து சிரிக்கிற அளவுக்கு தைரியம் யாருக்கும் கிடையாது" என்றான் மலரவன்.

மின்னல்கொடியை ஏறிட்ட பூங்குழலி, 'அப்படியா?' என்பது போல் கண்களால் கேட்க, அவர் 'இல்லை' என்று தலையசைக்க இருவரும் மீண்டும் சிரித்தார்கள், மலரவனை கடுப்பேற்றி.

"மா, என்ன விஷயம்னு சொல்ல போறீங்களா இல்லையா?"

"நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? நீ ஏதாவது தப்பு பண்ணியா?"

"நான் என்ன தப்பு செஞ்சேன்? நான் ஒன்னும் செய்யலையே"

"அப்புறம் எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்க? உன்னை பத்தி குழலி ஏதாவது கம்ப்ளைன்ட் பண்ணி இருப்பான்னு பயமா இருக்கா?"

"நான் அப்படி நினைக்கல. அவ என்னை பத்தி எந்த கம்ப்ளைன்ட்டும் பண்ண மாட்டா... நான் தப்பே செஞ்சு இருந்தாலும். நான் சொல்றது சரி தானே புங்குழலி?"

அவனுக்கு பதில் கூறாமல்,

"நான் ஏதாவது ஸ்வீட் செய்யறேன் ஆன்ட்டி. அது தானே உங்க வீட்டு வழக்கம்?"

"ஸ்வீட் மட்டும் செய். மத்த சமையல் வேலையை காமேஸ்வரன் பாத்துக்குவான்"

சரி என்றுதலையசைத்த பூங்குழலி, சமையலறை நோக்கி சென்றாள்.

"எதுக்குமா சிரிச்சீங்க?" என்றான் மலரவன்.

அவருக்கும் பூங்குழலிக்கும் இடையில் நடந்த உரையாடலை பற்றி கூறினார் மின்னல்கொடி.

"கீர்த்தி செஞ்ச தப்புக்காக நான் மன்னிப்பு கேட்டேன்னு, நான் ஓரவஞ்சனையோட நடந்துகிறதா என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தா பூங்குழலி. அந்த நேரம் பார்த்து வந்த நீயும் அதையே சொன்ன. அதை நினைச்சு தான் சிரிச்சோம்"

"அவ்வளவு தானா?"

"நீ வேற என்ன நெனச்ச?"

"ஒன்னும் இல்ல" என்றபடி தன் அறைக்கு சென்றான் மலரவன்.

பச்சைப் பருப்பு பாயசம் செய்து முடித்தாள் பூங்குழலி. அதை தன் அறைக்கு கொண்டு வந்து மலரவனிடம் கிண்ணத்தை நீட்டினாள்.

"ஹேய்... பச்சைப் பருப்பு பாயசம்... எனக்கு இது ரொம்ப பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றான் சந்தோஷமாய்.

"ஓ... உங்களுக்கு பச்சைப் பருப்பு பாயாசம் பிடிக்குமா? எனக்கு தெரியாதே... நான் எல்லாரும் சாப்பிடுவாங்கன்னு செஞ்சேன்" என்றாள் முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல்.

மலரவனுக்கு ஏமாற்றமாய் போனது. அவள் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி, அந்த பாயசத்தை சாப்பிட துவங்கினான். அது மிகவும் பிரமாதமாய் இருந்தது. அதை அவள் அவனுக்காக செய்திருந்தால், இன்னுமும் கூட சிறப்பாய் இருந்திருக்கும் என்று நினைத்தான்.

"எதுக்காக அம்மா கூட சேர்ந்து சிரிச்சுக்கிட்டு இருந்த?" என்றான் பாயசத்தை சாப்பிட்டபடி.

"சும்மா தான்"

"காரணமே இல்லாம யாரும் சிரிக்க மாட்டாங்க..."

"எங்களுக்கும் காரணம் இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன்"

"என்ன காரணம்?"

"உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு அவசியமா?"

தன் புருவம் நெறித்தான் மலரவன். அவள் விளையாட்டுக்கு பேசுகிறாளா, அல்லது உண்மையிலேயே பேசுகிறாளா என்று அவனுக்கு புரியவில்லை.

"நீ என்கிட்ட எதையும் சொல்ல மாட்டியா?"

"நீங்க எதை தெரிஞ்சுக்கணுமோ அதை சொல்லுவேன்"

"நீங்க எதுக்காக சிரிச்சீங்கன்னு நான் தெரிஞ்சுக்க கூடாதா?"

"நாங்க உங்களை பார்த்து சிரிக்கலைன்னு சொல்லிட்டோமே"

"நான் எப்படி உங்க பேச்சை நம்புறது?"

ஒரு நொடி திகைத்த பூங்குழலி,

"சரி நம்பாதீங்க... விடுங்க" என்று தன் தோள்களை குலுக்கினாள்

"அப்படி எல்லாம் விட்டுட முடியாது"

"இப்போ உங்களுக்கு என்ன வேணும்?"

"காரணம் வேணும்"

பெருமூச்சுவிட்டு, அங்கு நடந்த உரையாடலை அவனிடம் கூறினாள் பூங்குழலி.

"நீங்களும் நான் சொன்னதையே சொன்னீங்க. அதனால சிரிச்சோம்"

"எனக்கு தெரியும்" என்றான் நமுட்டு சிரிப்புடன்.

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அம்மா சொன்னாங்க"

திடுக்கிட்ட பூங்குழலி,

"அப்புறம் எதுக்காக என்கிட்ட அவ்வளவு பிடிவாதமா கேட்டீங்க?" என்றாள் புரியாமல்.

"பிள்ளை கிட்ட உண்மையை சொல்லி, எங்க அம்மா அவங்களோட கடமையை முடிச்சாங்க. அதே மாதிரி, உன் புருஷன் கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது உன் கடமை. அதனால் தான்" என்றான்.

"ஓ...  உண்மையை சொல்றது கடமையா?"

"இல்லையா?"

"பாக்கலாம்... உங்களோட கடமையை நீங்க எந்த அளவுக்கு திறம்பட செய்கிறீங்கன்னு" அவள் அங்கிருந்து செல்ல முயல,

"பூங்குழலி..." என்று அவளை அழைத்தான். அவள் திரும்பி அவனை பார்த்து, 'என்ன?' என்பது போல் புருவம் உயர்த்த.

"நீ ரொம்ப அழகா இருக்க" என்றான் அவளை வாயடைக்க செய்து.

இப்பொழுது சம்பந்தமேயில்லாமல் அவன் ஏன் அப்படி கூறுகிறான் என்று விழித்தாள் பூங்குழலி.

"இது நான் சொல்ற முதல் உண்மை" என்றான் கள்ளச் சிரிப்புடன்.

இடவலமாய் தலையசைத்தபடி அங்கிருந்து ஓடிப் போனாள் பூங்குழலி.

அப்பொழுது மலரவனின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர, அந்த அழைப்பை ஏற்றான். அது பூங்குழலியின் அம்மா சிவகாமியிடம் இருந்து வந்தது.

"ஹலோ ஆன்ட்டி"

"ஹலோ, மாப்பிள்ளை... பாயசம் எப்படி இருந்தது?" என்றார் சிவகாமி.

"நான் பாயாசம் சாப்பிட்டேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் குழப்பத்துடன் மலரவன்.

"ஏன் தெரியாது? உங்க வீட்டுக்கு வந்த முதல் நாள் உங்களுக்கு சமைச்சி கொடுக்கணும்னு பூங்குழலி என்கிட்ட கத்துக்கிட்டாளே. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு அவளுக்கு தெரியும்"

"எனக்கு பச்சை பருப்பு பாயசம் பிடிக்கும்னு அவளுக்கு தெரியுமா?" என்றான் நம்ப முடியாமல்.

"ஓ தெரியுமே... ஒரு தடவை அவளோட அப்பா அதைப்பத்தி சொல்லி இருந்தார்"

ஆமாம்...! அவர்கள் குடும்பத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் தில்லைராஜன் அவளிடம் கூறியதாய் அவர்களது முதல் சந்திப்பிலேயே அவள் அவனிடம் கூறி இருந்தாள்.

"பாயசம் ரொம்ப டேஸ்டா இருந்து ஆன்ட்டி"

"நான் அதைப் பத்தி கேட்கத்தான் பூங்குழலிக்கு ஃபோன் பண்ணேன். அவளோட ஃபோன் நாட் ரீச்சபிலா இருக்கு. அதனால தான் உங்களுக்கு கால் பண்ணேன்"

"அவகிட்ட போனை கொடுக்கணுமா?"

"இல்ல பரவாயில்ல, நான் அவகிட்ட அப்புறம் பேசிக்கிறேன்"

"சரிங்க ஆன்ட்டி"  அழைப்பை துண்டித்தார் சிவகாமி.

மலரவன் புன்னகைத்தான். அப்படி என்றால் இன்று அவள் பச்சை பருப்பு பாயசம் செய்தது அவனுக்காக தான். ஆனால், அதை அவனுக்காக அவள் சமைக்கவில்லை என்று கூறினாள் இல்லையா...! வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். புன்னகைத்தான் மலரவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top