25 திருமணம்
25 திருமணம்
மலரவனின் மனம் கலவரப்பட்டது. அவனுக்கு மகிழனின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாவிட்டாலும், தன் கண் முன்னாலேயே கண்டாலும், அவனால் ஏனோ நடந்தவற்றை நம்ப இயலவில்லை. *தீர விசாரிப்பதே மெய்* என்று நம்பியவன் அவன். ஆனால், அதற்கு குமரேசன் குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அவர்கள் மீது எந்த தவறும் இல்லாவிட்டால், அவர்கள் ஏன் இதை விசாரிக்க அனுமதிக்கவில்லை? அவர்களது நடவடிக்கை எதுவும் உண்மை போல் தோன்றவில்லையே...! கைபேசியை எடுத்து மித்திரனுக்கு அழைப்பு விடுத்தான். அந்த அழைப்பை ஏற்ற மித்திரன், மலரவன் எதுவும் கூறுவதற்கு முன்,
"இங்க என்ன நடக்குது மலரா? கண்ட கருமத்தை எல்லாம் நான் கேள்விப்படுறேனே..." என்றான் கவலையோடு.
"ஆமாம். அந்த கருமம் தான் இங்க நடந்தது" என்றான் தாழ்ந்த குரலில்.
"என்ன சொல்ற? அப்படின்னா அதெல்லாம் உண்மை தானா?"
"எனக்கு ஒன்னும் புரியல, மித்ரா"
"என்ன நடந்துச்சு?"
அங்கு நடந்தவற்றை அவனிடம் கூறினான் மலரவன். மித்திரன் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல், குழப்பமும் அடைந்தான்.
"நான் மகிழனோட ஃபிரண்டை பாக்கணும்" என்றான் மலரவன்.
"யாரு, ராகேஷையா?"
"ஆமாம். மகிழன் சொல்றது உண்மையா இல்லையான்னு அவனால தான் நமக்கு சொல்ல முடியும்"
"ஒருவேளை, மகிழன் அப்பாவியா இருந்தா நீ என்ன செய்வ?"
"நிச்சயம் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். குமரேசன் குடும்பத்தை போலீஸில் ஒப்படைப்பேன்" என்றான் கோபத்தோடு.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ராகேஷ் வெளியே போறதை நான் பார்த்தேன்"
"உன்கிட்ட அவன் ஃபோன் நம்பர் இருக்கா?"
"இருக்கு. அவன் நம்ம ஆஃபீஸ்ல தானே வேலை செய்கிறான்..."
"ஃபோன் பண்ணி, அவனை உடனே வர சொல்லு"
"சரி" என்று அழைப்பை துண்டித்த மித்திரன், ராக்கேஷுக்கு ஃபோன் செய்ய நினைக்க, அவன் மகிழனின் வேறொரு நண்பனான பாபுவுடன் உள்ளே நுழைவதை கண்டான். அவர்களை நோக்கி விரைந்த மித்திரன், ராகேஷின் கரத்தை பற்றி கொண்டு, அவனை மலரவனின் அறையை நோக்கி இழுத்துக்கொண்டு நடந்தான். பாபுவும் அவர்களை பின்தொடர்ந்தான்.
இதற்கிடையில்,
மகிழனுடன் அவனது அறைக்கு வந்த மின்னல்கொடி, அவனை தயாராகுமாறு பணித்தார்.
"அம்மா, ப்ளீஸ் நீங்களாவது என்னை நம்புங்கம்மா" என்று கெஞ்சினான்.
அடுத்த நொடி, அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டார் மின்னல்கொடி.
"இன்னும் ஒரு வார்த்தை பேசினா, உன்னை கொன்னுடுவேன். எவ்வளவு தைரியம் இருந்தா உங்க அண்ணன் கல்யாணத்துல நீ குடிச்சிருப்ப...!"
அவரது தலையைத் தொட்ட மகிழன்,
"உங்க மேல சத்தியமா நான் குடிக்கல மா" என்றான், அவரது கண்களை நேருக்கு நேர் சந்தித்தபடி.
மின்னல்கொடி திகைத்து நின்றார்.
"நீ அவ கிட்ட தப்பா நடந்ததா அவங்க சொல்றாங்க. சூழ்நிலை எல்லாமே உனக்கு பாதகமா இருக்கு..."
"சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு நீங்க உங்க பிள்ளையை நம்ப மாட்டீங்களா?"
"நான் உன்னை நம்புறேனா இல்லையாங்குறது இப்போ விஷயமா?"
"அம்மா என்னை உயிரோட விழுங்க காத்திருக்கிற இந்த பிரச்சினையில இருந்து என்னை எப்படியாவது காப்பாத்துங்க மா"
"ஏற்கனவே நீ சிங்கத்தோட வாயில தலையை கொடுத்துட்ட... இப்போ எங்களை என்ன செய்ய சொல்ற?"
கையாலாகாதவனாய் நின்றான் மகிழன்.
"நீ ரெடியாகு. நான் உங்க அப்பா கிட்ட பேசி பாக்குறேன்" என்று அங்கிருந்து நடந்தார் மின்னல்கொடி.
மணிமாறனை தேடிக்கொண்டு அவர்கள் அறைக்கு வந்து மின்னல்கொடி, அவர் அடிபட்ட சிங்கம் போல் இங்கும் அங்கும் உலவி கொண்டிருப்பதை பார்த்தார். ரத்தம் தோய்ந்த தன் கண்களால் மின்னல்கொடியை அவர் பார்க்க, மின்னல்கொடியின் வயிறு பயத்தில் கலங்கியது. தன்னை சமாளித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அவர்,
"ஏங்க, நான் சொல்றதை கேளுங்க. எனக்கு மகிழனை பத்தி நல்லா தெரியும். அவன் அவ்வளவு மோசமானவன் கிடையாது. அவன் இப்படி எல்லாம் நிச்சயம் செஞ்சிருக்க மாட்டாங்க" என்றார் கெஞ்சலாக.
"தன் பிள்ளைன்னு வந்துட்டா, இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு அம்மாவும் குருட்டுத்தனமா தான் யோசிப்பாங்க. கண்ணை மூடிக்கிட்டு அவனை சப்போர்ட் பண்ணுவாங்க. ஆனா, தயவு செய்து நீ அப்படிப்பட்ட அம்மாவா இருக்காத" என்றார் வேதனையோடு.
"நான் அவனை கண் மூடிதனமா நம்பல"
"நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன். அவன் ஆஃபீக்கு குடிச்சிட்டு வந்ததை நானே பார்த்தேன்"
"அதைப்பத்தி நம்ம அவன்கிட்ட அப்புறமா பேசலாம். இப்போதைக்கு இந்த கல்யாணம் நடக்கக்கூடாது. நமக்கு நல்லா தெரியும், கீர்த்தி நம்ம மலரவன் மேல ஆசைப்பட்டு, பைத்தியக்காரி மாதிரி அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான்னு. இப்போ நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு எதுவுமே சரியா படல. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, நம்ம எக்கச்சக்கமான பிரச்சனைகளை அனுபவிக்க வேண்டி வரும்னு எனக்கு தோணுது"
"ஒரு சாதாரணமான சந்தர்ப்பமா இருந்தா, நம்ம இதைப் பத்தியெல்லாம் உட்கார்ந்து ஆலோசிச்சி, நம்ம குடும்பத்துக்கு யார் மருமகளா வரணும்னு முடிவு செய்ய முடியும். ஆனா இப்ப நமக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படல. சூழ்நிலையை நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஒரு மோசமான பிள்ளையை பெத்ததுக்காக அதோட விளைவுகளை நம்ம அனுபவிக்க வேண்டியது நம்ம தலையெழுத்து"
"நீங்க நினைக்கிற அளவுக்கு அவன் மோசமானவன் இல்லைங்க"
"உன்னால நிரூபிக்க முடியுமா ?"
வாயடைத்து நின்றார் மின்னல்கொடி. அவரிடம் என்ன அத்தாட்சி இருக்கிறது?
"சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிரா இருக்கு. எல்லாம் நம்ம கையை விட்டுப் போயிடுச்சு. இந்த கல்யாணத்தை நிறுத்துற சந்தர்ப்பம் இருந்தா, நான் இதை நடக்க விடுவேன்னு நினைக்கிறாயா? நிச்சயமா இல்ல. முதல்ல அதை புரிஞ்சுக்கோ"
மின்னல்கொடியின் முகம் வாடிப்போனது. அவருக்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றும் புரியாமல் இல்லை. அது தானே அவரை பதற்றம் அடைய செய்திருந்தது.
மலரவனின் அறை
திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தான் பலரவன். அரை மணி நேரத்திற்கு முன்பு அவன் எவ்வளவு சந்தோஷமாக இருந்தான்...! குமரேசன் குடும்பத்தினர் அனைத்தையும் பாழாக்கி விட்டார்கள்.
அப்போது, மித்திரன், ராகேஷுடன் அங்கு வருவதை கண்ட மலரவனின் முகம், அனிச்சையாய் பிரகாசம் அடைந்தது. கிட்டத்தட்ட பிரச்சனை முடிந்து விட்டது போல குதுகலம் ஏற்பட்டது.
"நீ எங்க போயிருந்த?" என்றான் மலரவன்.
"எங்க ஃபிரண்டை கூப்பிட போயிருந்தேன். என்னை ஃபோன் பண்ணி கூப்பிட்டு, வெளியில் வந்து நிக்க சொன்னான். அதனால தான் அவனைக் கூப்பிட்டு வர போயிருந்தேன்" என்றான் ராகேஷ்.
"அவன் சொல்றது உண்மையா பாபு?" என்றான் மித்திரன்.
இவனை உனக்கு தெரியுமா என்பது போல் அவனை பார்த்தான் மலரவன்.
"அவனும் நம்ம கம்பெனியில் தான் வேலை செய்றான்" என்றான் மித்திரன் அவன் பார்வையை புரிந்து கொண்டு.
"எவ்வளவு நேரமா நீ அவனுக்காக காத்துக்கிட்டு இருந்த?" என்றான் மித்திரன் ராகேஷிடம்.
"இருபது நிமிஷமா காத்துகிட்டு இருந்தேன்"
"மகிழன் உன்னை அவன் ரூமில் இருந்து டிரெஸ்ஸை எடுத்துக்கிட்டு வர சொன்னானே... நீ எதுக்காக அதை செய்யாம வெளியில போன?" என்றான் மலரவன்.
"என்னது? என்னை டிரஸ் எடுத்துக்கிட்டு வர சொன்னானா? அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லலையே" என்றான் ராகேஷ்.
"நீ அவனை கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கல?"
"என்னது? குடிக்க வச்சனா? என்ன சொல்றீங்க? உங்க கல்யாணத்துல போய் நான் அப்படியெல்லாம் செய்வேனா?"
"மகிழன் தான் சொன்னான்"
"அவன் ஏன் இப்படி எல்லாம் செய்றான்னு எனக்கு தெரியல. நான் இவ்வளவு கீழ்த்தரமான வேலை எல்லாம் செய்யக் கூடியவனா? இதுக்காகத் தான் நான் கல்யாணத்துக்கு வர்றதை பத்தி ரொம்பவே யோசிச்சேன். ஏன்னா, இப்பவெல்லாம் மகிழன் இந்த மாதிரி வேலையை செய்ய தயங்குறதே இல்ல. அவன் ஆஃபீஸ்ல கூட குடிக்கிறான். ஆனா, தன் அண்ணனோட கல்யாணத்துல கூட அவன் குடிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அதோட நிக்காம, என் மேல பழியை போட்டிருக்கான்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என்றான் வேதனையுடன்.
மகிழன் அலுவலகத்தில் குடித்த விஷயம் மலரவனுக்கு தெரியும். அதை மணிமாறன் மலரவனிடம் கூறியிருந்தார். ஏதோ கை நழுவி செல்வது போல் இருந்தது மலரவனுக்கு.
"அவன் வேற என்னவெல்லாம் செஞ்சான்?" என்றான் மலரவன்.
ராகேஷ் தயங்கினான்.
"கேட்கிறான் இல்ல? சொல்லு" என்றான் மித்திரன்
"தயவு செய்து என்னை சங்கடத்துக்கு ஆளாகிடாதீங்க. நான் செய்யாத தப்பை செஞ்சதா, அவன் என் மேல பழி சொன்னான். ஆனா அதுக்காக, நானும் அதையே செய்யணும்னு அவசியம் இல்ல இல்லையா... அது உண்மையாவே இருந்தாலும் கூட நான் எப்படி என் ஃபிரண்டை பத்தி பேச முடியும்?"
"நீ சங்கடப்படுற அப்படிங்கறதுக்காக உண்மை மாறிடாது. எங்களுக்கு இப்ப உண்மை தெரிஞ்சாகணும்" என்றான் மலரவன்.
தன் பக்கத்தில் நின்றிருந்த பாபுவை பார்த்த அவன்,
"நீ கொஞ்சம் வெளியில இருக்கியா?" என்றான் ராகேஷ் கெஞ்சலாக.
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான் பாபு. ராகேஷ் மலரவனை நோக்கி திரும்ப, *சொல்* என்பது போல் சைகை செய்தான் மலரவன்.
"ஒரு நாள், சினிமா தியேட்டர்ல குடிச்சிட்டு ஒரு பொண்ணு கிட்ட தகாத முறையில் நடந்துக்க முயற்சி பண்ணான்" என்றான் தாழ்ந்த குறலில்.
மென்று விழுங்கினான் மலரவன்.
"நீங்க பூங்குழியை கல்யாணம் பண்ணிக்கிறது அவனுக்கு பிடிக்கல. நீங்க எப்போ அவங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னீங்களோ, அன்னைல இருந்து, பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்குறான். உண்மையை சொல்லப் போனா, நீங்க இந்தியாவில இருக்கிறதே அவனுக்கு பிடிக்கல"
மலரவனுக்கு தெரியும், அவன் பூங்குழலியை திருமணம் செய்து கொள்வதில் மகிழனுக்கு விருப்பம் இல்லை என்று. அதை அவனே நேரடியாய் வந்து அவனிடம் கூறினான் அல்லவா? என்ன செய்வதென்றே புரியவில்லை அவனுக்கு. அதேநேரம் அவனுக்கு கோபமாகவும் வந்தது. அவனை பொறுத்தவரை, ராகேஷுக்கு மகிழனை பற்றி பொய் கூற வேண்டிய அவசியம் இல்லையே...!
"தயவு செய்து இதையெல்லாம் நான் தான் உங்ககிட்ட சொன்னேன்னு மகிழனுக்கு தெரிய வேண்டாம்" என்று கெஞ்சினான்.
சரி என்று மலரவன் தலையசைக்க, அந்த அறையை விட்டு சென்றான் ராகேஷ்.
"நீ இவனைப் பத்தி என்ன நினைக்கிற?" என்றான் மலரவன்.
"அவன் மகிழனோட ஃபிரண்டு. ரெண்டு பேரும் ஒன்னா தான் சுத்திக்கிட்டு இருப்பாங்க. அது எல்லாருக்கும் தெரியும் தெரியும்" என்றான் மித்திரன்.
"ம்ம்ம்"
"இப்போ நீ என்ன செய்யப் போற மலரா?"
"நம்ம என்ன செய்ய முடியும்?ராகேஷை வச்சி, மகிழன் மேல தப்பு இல்லன்னு நிரூபிச்சிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அவன் நம்ம கிட்ட சொன்னதையே போலீஸ்ல சொன்னா மகிழனோட நிலைமை என்ன ஆகும்? இன்னும் எங்க குடும்ப கவுரவம் சந்தி சிரிச்சு போகும்" என்றான் வெறுப்புடன்.
அவன் கூறுவதில் இருந்த உண்மையை புரிந்து கொண்டான் மித்திரன்.
"ராகேஷ் பொய் சொல்றதுக்கு ஏதாவது சான்ஸ் இருக்கா? என்றான் மலரவன்.
"இப்போதைக்கு என்னால அதை சொல்ல முடியல. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்தா, நான் கண்டுபிடிச்சி சொல்லுவேன்"
"அதனால என்ன பிரயோஜனம் இருக்க போகுது?"
"விடு மலரா... உன்னால முடிஞ்ச அளவுக்கு நீ முயற்சி பண்ணி பார்த்துட்ட. இது உன் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷலான நாள். நீ அதை கவனி. நிறைய எதிர்பார்ப்புகளோட பூங்குழலி உன் வாழ்க்கைக்குள்ள வராங்க. அதைப் பத்தி யோசி"
ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
அதே நேரம், அந்த அறைக்கு வந்த மணிமாறன்,
"நீ ரெடி ஆயிட்டியா மலரா?" என்றார்.
ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
"இங்க நடந்ததை எல்லாம் நெனச்சு உன்னோட மூடை நீ கெடுத்துக்காத. பீ சியர்ஃபுல்... வா போகலாம்" என்றார்.
அவருடன் நடந்தான் மலரவன். அவர்களை பின்தொடர்ந்தான் மித்திரன். இரண்டு மேடைகள் தயாராய் இருந்ததை கண்ட மலரவன், முதல் மேடைக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அருளே இல்லாத முகத்துடன் மகிழன் வந்தான். பண்டிதர் கூறுவதை செய்ய துவங்கினான் மலரவன். மகிழனோ எதிலும் விருப்பம் இல்லாமல் இருந்தான்.
மணப்பெண்கள் அழைக்கப்பட்டார்கள். பூங்குழலி முன்னாள் வர, சற்று இடைவெளி விட்டு அவளை தொடர்ந்து வந்தாள் கீர்த்தி. தலை குனிந்த படி வந்த பூங்குழலி சற்றே தலை நிமிர, அங்கு இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்து குழப்பமடைந்தாள். அதில் ஒன்றில், மகிழன் அமர்ந்திருந்தது அவளை மேலும் குழப்பியது. அவள் முகத்தை சுருக்கி மலரவனை பார்க்க, அவன் தன் பக்கத்தில் வந்து அமருமாறு அவளுக்கு சைகை செய்தான். அவன் கூறியபடியே அவள் செய்ய, கீர்த்தி மகிழன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். மகிழன் அதைப் பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை.
பூங்குழலியால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவகாமியும், வடிவுக்கரசியும் அவளிடம் எதைப் பற்றியும் கூறவில்லை. அவளது திருமண நாளில், இந்த விஷயத்தை பற்றி கூறி அவளை கலக்கமடைய செய்ய வேண்டாம் என்று அவர்கள் அதை தவிர்த்தார்கள்.
அடுத்த சில நொடிகளில், திருமணம் என்ற பந்தம், அவர்களது வாழ்க்கையை மாற்றியது. ஆனால் அந்த மாற்றம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கப் போகிறது. அந்த நான்கு பேருமே, அவர்கள் எதிர்பாராத வாழ்க்கையை எதிர்கொள்ள இருக்கிறார்கள். ஆம், அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான வாழ்க்கை அவர்களுக்கு அமையப் போகிறது.
பூங்குழலி அந்த திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ள வெகுநாட்கள் எடுத்துக் கொள்வாள் என்று எண்ணியிருந்தான் மலரவன்.
அந்த திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ள தனக்கு வேண்டிய கால அவகாசத்தை மலரவன் வழங்குவான் என்று எதிர்பார்த்து இருந்தாள் பூங்குழலி.
தனது வாழ்நாளை வசதி வாய்ப்புகளுடன் அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தான் மகிழன்.
தன்னை நிராகரித்த மணிமாறன் குடும்பத்திற்கு பெரிய தலைவலியாய் மாற வேண்டும் என்றும், மகிழனை தன் காலடியில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் கீர்த்தி.
அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வியடைய போகிறது. அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கப் போவதில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top