24 சூழ்நிலை கைதி

24 சூழ்நிலை கைதி

அந்த அறைக்குள் நுழைந்த குமரேசனும், சுஜாதாவும், மகிழன் கீர்த்தியின் மேல் விழுந்து கிடப்பதை கண்டார்கள்.

"கீர்ர்ர்த்தி..."  சுஜாதா அரற்றினார்.

மகிழனை பிடித்து தள்ளிய கீர்த்தி, அவள் உடலை சுற்றி இருந்த துண்டை கெட்டியாய் பற்றிக் கொண்டாள், அது தளர்ந்து விட்டிருந்ததால்.

"அம்ம்ம்ம்மா...." அவள் அழத் தொடங்கினாள்.

கட்டிலின் மீது இருந்த ஒரு போர்வையை எடுத்து தன்னை முழுவதுமாய் போர்த்திக்கொண்டு, சுஜாதாவை நோக்கி ஓடிச் சென்ற அவள், அவரது தோளில் சாய்ந்து கொண்டு ஓவென்று அழுதாள்.

"என்ன நடந்தது கீர்த்தி?" என்றார் சுஜாதா மகிழினை பார்த்தபடி.

"அவன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான். அவன் குடிச்சிருக்கான்" என்று அழுகையை தொடர்ந்தாள்.

கீழே ஒரு மது பாட்டில் உருண்டு கொண்டிருந்ததை பார்த்த அவர்கள், தங்கள் பார்வையை மகிழனின் பக்கம் அருவருப்புடன் திருப்பினார்கள்.

"இல்ல அங்கிள். அவ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கா. நான் எதுவும் செய்யல" நிலைமையை சமாளிக்க முயன்றான் மகிழன்.

"பொய் சொல்றதை நிறுத்து, நீ செஞ்சதை நாங்க தான் பார்த்தோமே, நீ தானே அவ மேல விழுந்து கிடந்த? இல்லன்னு சொல்லுவியா நீ?" சீறினார் குமரேசன்.

"இல்ல அங்கிள். அவ தான் என் மேல விழுந்தா" என்று உண்மையை கூறினான் மகிழன்.

"எவ்வளவு தைரியம் இருந்தா, நீ என் பொண்ணு மேல பழி சுமத்துவ?" உறுமினார் குமரேசன்.

"இல்ல அங்கிள். நான் அவ மேல பழி போடல. அவ கால் தடுக்கி தான் என் மேல விழுந்தா"

சத்தம் கேட்டு,வெளியே நடைபாதையில் நின்று கொண்டிருந்த அனைவரும் அந்த அறையின் முன் கூட துவங்கினார்கள். உள்ளே நடப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள எட்டிப் பார்த்தார்கள். அதில் மின்னல்கொடியின் அத்தை மகளும் ஒருவர். சூழ்நிலையை புரிந்து கொண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

"குடிகாரப் பாவி, எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் மகளை தொடுவ?" சிறிதும் தயக்கமின்றி அவனை சாடினார் குமரேசன்.

"இல்ல அங்கிள். என்னை நம்புங்க. சத்தியமா நான் குடிக்கல" அனைத்து கண்களும் தன் மீது குவிந்திருந்ததை பார்த்த மகிழன், கூனி குறுகினான்.

"உன் மேல சாராயம் நெடி வீசுது. ஆனா நீ குடிக்கலைன்னு சொல்ற. எங்களைப் பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? எங்க நெத்தியில முட்டாள்னு எழுதி ஒட்டி இருக்கா?" சுஜாதா தன் பங்குக்கு பொறுமினார்.

"தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க, ஆன்ட்டி. அவ என்னை தப்பா புரிஞ்சுகிட்டா. நான் சொன்னதை கேட்டா, நீங்க என்னை நம்புவீங்க"

மின்னல்கொடியின் அத்தை மகள்,  மின்னல்கொடியை தேடி ஓடினார் விஷயத்தை அவரிடம் கூற. மேடைக்கு அருகே திருமண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார் மின்னல்கொடி. மகிழ்ச்சியே உருவாய் அவர் அருகில் நின்றிருந்தார் மணிமாறன். அவர்களிடம் ஓடிச் சென்ற அந்த பெண்மணி, தான் பார்த்தவற்றை அவர்களிடம் கூறினார். அவர்களது முகபாவம் பேய் அறைந்தது போல் மாறியது. காலதாமதம் செய்யாமல், அவர்கள் விருந்தினர் அறையை நோக்கி ஓடினார்கள்.

அவர்கள், அப்படி பதறியடித்து தலை தெறிக்க ஓடுவதை பார்த்த மலரவன் குழப்பம் அடைந்தான். அவர்களது அந்த முக மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, அவனும் அவர்களை பின்தொடர்ந்து சென்றான்.

விருந்தினர் அறையின் வாசலில் வந்து நின்றார்கள் மின்னல்கொடியும், மணிமாறனும். போர்வையை தன் மீது சுற்றிக்கொண்டு, தன் அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதபடி நின்றிருந்த கீர்த்தியின் தலை, கலைந்து அலங்கோலமாய் காட்சியளித்தது.

அந்த கேவலமான சூழ்நிலையில் தன் பெற்றோரைக் கண்ட மகிழன், வெட்கி தலை குனிந்தான். தான் கண்ட காட்சியை வைத்தே விஷயம் என்ன என்பதை புரிந்து கொண்டு விட்டான் மலரவன்.

"வாங்க மின்னல்கொடி, பாருங்க, உங்க பையன் என்ன செஞ்சிருக்கான்னு... என் மகளோட வாழ்க்கையையே அவன் கெடுத்துட்டான்" என்றார் சுஜாதா தன் தலையில் அடித்துக் கொண்டு.

தன் பார்வையால் மகிழன் மீது நெருப்பைக் காக்கினார் மணிமாறன்.

" உங்க குடும்பம் ரொம்ப கௌரவமானதுன்னு நினைச்சோம். எங்க பொண்ணு இங்க பாதுகாப்பா இருப்பான்னு தப்பு கணக்கு போட்டோம். இவனை மாதிரி ஒரு கேவலமான பிறவியை நாங்க பார்த்ததே இல்ல" என்று மகிழனை பார்த்து முறைத்தார் சுஜாதா.

"அம்மா என்னை நம்புங்கம்மா. சத்தியமா நான் எதுவுமே செய்யல. அவ என்னை தப்பா புரிஞ்சுகிட்டா" என்றான் மகிழன்.

"போதும் பொய் சொல்றத நிறுத்து. அவன் குடிச்சிருக்கான். அங்க பாருங்க..." என்று கீழே உருண்டு கிடந்த பாட்டிலை அவர்களிடம் காட்டினார் குமரேசன்.

"நான் குடிக்கல மா. சத்தியமா நான் குடிக்கல"

"இந்த ரூம்ல நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?" என்றார் சுஜாதா.

"என் ஃபிரண்டு கூட கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன்"

"இது உன்னோட வீடு. உனக்குன்னு அவ்வளவு பெரிய ரூம் இருக்கு. அப்படி இருக்கும் போது இந்த ரூமுக்கு நீ எதுக்காக வந்த? நீ உன் ஃபிரண்டை கூட்டிகிட்டு உன்னோடு ரூமுக்கு போயிருக்கலாமே...! இங்க வர வேண்டிய அவசியம் உனக்கு என்ன வந்தது?" என்று அவனை மடக்கி பிடித்தார் சுஜாதா.

அந்தக் கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை. ஆம் அவன் அந்த அறைக்கு வந்திருக்கக் கூடாது. அவன் ராகேஷ் கூறியதை கேட்டிருக்கக் கூடாது.

"அது சரி, உங்க பொண்ணு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? உங்க வீட்ல குளிக்கறதுக்கு பாத்ரூம்மே இல்லைன்னு, இங்க வந்து குளிச்சாளா?" என்றார் மின்னல்கொடியின் அத்தை மகள்.

"நீங்க கேக்குறதுக்கு என்னங்க அர்த்தம்? என் பொண்ணு இதை எல்லாம் வேணும்னு செய்றான்னு சொல்றீங்களா? அவ கட்டி இருந்த புடவையில, ஜூஸ் கொட்டிக்கிச்சு. அதுக்காகத் தான் இங்க குளிக்க வந்தா. நானும் என் வீட்டுக்காரரும், எதிரில் இருக்கிற கடையில ஒரு புது புடவை வாங்கிட்டு வர போயிருந்தோம். ( தன் கையில் இருந்த பையை உயர்த்தி காட்டினார்) அவ இங்க பாதுகாப்பா இருப்பானு நினைச்சோம். ஆனா நாங்க போயிட்டு வர்றதுக்குள்ள, இந்த பாவி அவ வாழ்க்கையையே கெடுத்துட்டான்" என்றார் சுஜாதா.

"அம்மா ப்ளீஸ், அவங்க சொல்றதை நம்பாதீங்க அம்மா. அவங்க ஏன் இதையெல்லாம் செய்றாங்கன்னு எனக்கு தெரியல. எனக்கு ஏதோ தப்பா படுதும்மா"

"உன் நாக்கை அடக்கிப் பேசு மகிழா. என் மகளோட நிலைமையை பாரு. நாங்க எதுக்காக உன் மேல பழி சுமத்த போறோம்?" கத்தினார் குமரேசன்.

அவனை நோக்கி சென்ற மின்னல்கொடி தன் முகத்தை சுருக்கினார். அவன் மீது சாராயவாடை வீசியது. கீர்த்தியின் பக்கம் திரும்பிய அவர்,

"என்ன மா நடந்துச்சு?" என்றார்

"நான் குளிச்சிட்டு பாத்ரூம்ல இருந்து வெளியில வந்தேன். அப்போ இவன் சாராய பாட்டிலோட இங்க உட்க்கார்ந்திருந்தான். அவன பாத்து நான் ரொம்ப பயந்துட்டேன். அவன் என்னை பிடிச்சு இழுத்து, என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்" என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் கீர்த்தி.

"பொய்... சுத்த பொய்... அவ பொய் சொல்றா. அவ தான் என் மேல விழுந்தா" அவள் கூறியதை அவசரமாய் மறுத்தான் மகிழன்.

"வாய மூடு மகிழா... என் பொண்ணை பத்தி ஏதாவது சொன்ன..." என்று தன் கையை உயர்த்தியபடி அவனை நோக்கி நடந்தார் குமரேசன்.

மகிழனை அடிக்க ஓங்கிய அவரது கரம், தடுத்து நிறுத்தப்பட்டது. தன் கையைப் பிடித்துக் கொண்டு நின்ற மலரவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் குமரேசன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை.

"என் தம்பி மேல கை வைக்கிற வேலை வச்சுக்கிட்டீங்க, நடக்கிறதே வேற..." என்றான் மலரவன் தன் பல்லை கடித்த படி.

"அவன் என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்திருக்கான். நாங்க அமைதியா இருக்கணும்னு சொல்றியா நீ?" என்றார் வேதனையுடன்.

"என் தம்பியை பத்தி எனக்கு தெரியும். அவனோட அண்ணன் கல்யாணத்துல குடிக்கிற அளவுக்கு அவன் பொறுப்பில்லாதவன் இல்ல" தன் தம்பிக்காக நின்றான் மலரவன் அது மகிழனை நெகிழச் செய்தது.

"மலரா, நீயாவது என்னை நம்பு. நான் சத்தியமா எதுவுமே செய்யல" என்றான் மகிழன்.

"உன்னை மாதிரி ஒரு பொய்யனை நான் பார்த்ததே இல்ல.  உன் மேலே எவ்வளவு சாராயம் ரெடி வீசுது.. அப்படி இருந்தும் குடிக்கலைன்னு சொல்றியா நீ?" என்றார் கோபமாய் குமரேசன்.

"என் ஃபிரண்டு என்னை குடிக்க சொன்னான். நான் குடிக்க மாட்டேன்னு சொன்னேன். அவன் என்னை வற்புறுத்தி குடிக்க வைக்க முயற்சி பண்ணும் போது அது என் மேல ஊத்திக்கிச்சு. அதனால தான் என் மேல இந்த வாசனை வருது" என்று நடந்ததை விளக்ககினான் மகிழன்.

"அப்படினா உன் ஃபிரண்ட் எங்க?" என்றார் சுஜாதா.

"அவன் எனக்கு வேற டிரஸ்ஸ எடுத்துக்கிட்டு வர என்னோட ரூமுக்கு போயிருக்கான்" என்றான் மகிழன்.

"அவன் உன்னோட ரூமுக்கு போயிருந்தா, இந்த நேரம் திரும்பி வந்து இருக்கணுமே? ஏன் இன்னும் வரல? உன்னோட ரூம் என்ன இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்துலயா இருக்கு?" என்றார் குமரேசன்.

"நான் போய் பாத்துட்டு வரேன்" என்றான் மகிழன்.

"தேவை இல்ல. உன்னோட ஃபிரண்டு வந்து, இந்த விஷயத்துல எதுவும் ஆகப் போறது இல்ல. அவன் உன் பக்கம் தானே பேசுவான்? நாங்க எப்படி அவனை நம்புறது?" என்றார் சுஜாதா.

"அப்படின்னா, போலீஸ் வந்து இதை விசாரிக்கட்டும்" என்றான் மலரவன், மகிழணை கவனித்த படி.

மகிழனின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. ஆனால், குமரேசன் முகமோ பேய் அறைந்தது போல் ஆனது.

"மலரா, இப்ப நீ என்ன செய்ய நினைக்கிற?" என்றார் மணிமாறன் குழப்பத்துடன்.

"உண்மையிலேயே பொய் சொல்றது யாருன்னு நமக்கு தெரியனும்னா, போலீஸ் இங்க வரணும். உண்மை தெரியாத வரைக்கும் இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வராது. அதுமட்டுமில்ல..." என்று அவன் மேலே ஏதோ கூற முயன்ற போது,

"என்னை சாக விடுங்க. நான் வாழவே விரும்பல. எதுக்காக நான் இப்படி ஒரு கலங்கத்தை சுமந்துகிட்டு வாழணும்? இந்த மாதிரி கலங்கத்தோட நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதை விட, நான் செத்துப் போறேன்" என்று அழுதாள் கீர்த்தி.

திகைப்புடன் புருவம் உயர்த்தினான் மலரவன். காவல் நிலையத்திற்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதால், உயிரை விட்டுவிடக் கூடிய பெண்ணா கீர்த்தி?

"நீ செத்ததுக்கு பிறகு நாங்க மட்டும் உயிரோட இருந்து என்னடி செய்யப் போறோம்? எல்லாரும் சேர்ந்து ஒண்ணா சாகலாம். நீங்க சந்தோஷமா இருங்க மின்னல்" மறைமுகமாய் சபித்தார் சுஜாதா.

"இப்ப நாங்க என்ன செய்யணும்னு சொல்றீங்க? மகிழன் உங்க பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டான்னு
சொல்றீங்க. அதே நேரம், நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவும் தயாரா இல்லைன்னா, நாங்க வேற என்ன தான் செய்றது?" என்றான் மலராவன்.

"நீங்க சொல்லுங்க மின்னல், நாங்க இப்ப என்ன செய்யணும்? இப்படி நடந்ததுக்கு பிறகு நாங்க தலை நிமிர்ந்து ரோட்ல நடக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா? இதைப் பத்தி கேள்வி கேட்கிறவங்களுக்கு நாங்க என்ன பதில் சொல்றது? என்னோட பொண்ணுக்கு முதல்ல இருந்த மரியாதை இனிமேலும் இருக்குமா? அவளை யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என் மகளோட இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க. நீங்க அவளோட அம்மாவா இருந்தா,  என்ன செய்வீங்க?" என்றார் சுஜாதா.

இயலாமையுடன் மணிமாறனை ஏறிட்டார் மின்னல்கொடி.

"இந்த விஷயத்தை நாங்க உங்ககிட்டயே விட்டுடுறோம். நீங்க என்ன செய்ய சொல்றீங்களோ அதை செய்ய நாங்க தயாராக இருக்கோம்" என்றார் மணிமாறன்.

"எங்க பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கிறது தான் எங்களுடைய ஒரே ஆசை. அவளுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கணும். அது தான் எங்களுக்கு வேணும்"

விஷயம் வேறு பக்கம் திசை திரும்புவதை உணர்ந்த மலரவன், புருவத்தை நெறித்தான்.

"எதுக்காக தலையை சுத்தி மூக்கை தொடுறீங்க? நேரடியா விஷயத்துக்கு வாங்க" என்றார் சுஜாதா.

"கீர்த்தியை இந்த முகூர்த்ததில மகிழனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுங்க" என்றார் குமரேசன்.

அதைக் கேட்ட மணிமாறன் குடும்பத்தினர் அதிர்ந்தார்கள். மகிழனை கீர்த்திக்கு திருமணம் முடிப்பதா?

"முடியாது. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று கத்தினான் மகிழன்.

அவனது காலரை எட்டிப் பிடித்த மணிமாறன்,

"வாயை மூடு" என்றார்.

"அப்பா, தயவு செய்து என்னை நம்புங்கப்பா. என்னோட ஃபிரண்டை கேட்டு பாருங்க. அவன் இங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுவான்"

"அதனால எந்த பிரயோஜனமும் இல்ல. சூழ்நிலை உனக்கு எதிராக இருக்கு. அதை முதல்ல புரிஞ்சிக்கோ"

"இல்லப்பா. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றான் உறுதியாய்.

"நீ பண்ணிக்கிட்டு தான் ஆகணும். உனக்கு வேற வழி இல்ல. உன்னோட சம்மதத்தை இங்கே யாரும் கேட்கல. உண்மையிலேயே நீ என்னை மதிக்கிறதா இருந்தா, என்னுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு நட"

கையாலாகாதவனாய் தன் கண்களை மூடினான் மகிழன்.

"போய் ரெடியாகு" என்ற மணிமாறனின் வார்த்தைகள் கட்டளையாய் ஒலித்தது.

மின்னல்கொடியை நோக்கி திரும்பிய மணிமாறன்,

"அவனை அவனுடைய ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ" என்றார்.

மகிழனின் கரத்தைப் பற்றிய மின்னல்கொடி, அவனது அறைக்கு அவனை அழைத்துச் சென்றார்.

"நீங்களும் ரெடியாகுங்க" என்று குமரேசனிடம் கூறிவிட்டு, அந்த இடம் விட்டு அகன்றார் மணிமாறன்.

மலரவனும் அங்கிருந்து சென்றான். கதவை சாத்தி தாளிட்டுக் கொண்ட குமரேசன் குடும்பம், எள்ளி நகையாடியது.

"ஒரு வழியா நம்ம திட்டத்துல ஜெயிச்சிட்டோம்" என்றார் சுஜாதா.

"மகிழன் ரொம்ப கோவமா இருக்கான். அவன் என்ன செய்யப் போறான்னு தெரியல" என்றார் குமரேசன்.

"அவனை நான் சமாளிச்சுக்கிறேன்" என்றாள் கீர்த்தி அதீத நம்பிக்கையுடன்.

"சீக்கிரமா ரெடி ஆகு. நமக்கு நேரமில்ல" என்றார் சுஜாதா.

தன் அம்மா வாங்கிக் கொண்டு வந்த புது புடவையை அணிந்து கொண்டு தயாரானாள் கீர்த்தி.

மணிமாறனின் இல்லம் கிசுகிசுகளால் நிரம்பி வழிந்தது. விஷயம் காட்டுத் போல் பரவியது. மகிழனுக்கும் கீர்த்திக்கும் மற்றும் ஒரு மேடை தயாரானது.

மலரவனுக்கு ஏதோ மனதை உறுத்தியது. அனைத்தும் நாடகம் போல் தெரிந்தது. அவனுக்கு குமரேசன் குடும்பத்தினரை பற்றி நன்றாகவே தெரியும். இருந்த போதும், அவனால் எந்த புள்ளியையும் இணைக்க முடியாமல் தவித்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top