23 பிரச்சனையில் மகிழன்

23 பிரச்சனையில் மகிழன்

அடுத்த மூன்று நாள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றது. பந்தக்கால் நட்டாகிவிட்டது. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் வைக்க வேண்டிய நலங்கு வைபவம் முடிந்து, கிளம்பிச் சென்றார் மின்னல்கொடி.

தன் முகத்தை கழுவிக்கொள்ள தன் அறைக்கு வந்தாள் பூங்குழலி. அவள் குளியலறைக்கு செல்லும் முன், அவளது கைபேசி ஒலித்தது. அதை எடுத்து, அந்த அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என்று பார்த்தாள். அது மாப்பிள்ளையின் அழைப்பு. சிரித்தபடி ஏதோ யோசித்த அவள், அந்த அழைப்பை ஏற்கவில்லை. மணி அடிப்பது ஓய்ந்தது. அவள் எதிர்பார்த்தபடியே மீண்டும் அது ஒலிக்கத் துவங்கியது. இந்த முறை அவள் அந்த அழைப்பை ஏற்றாள். அவள் ஏதும் கூறும் முன்,

"நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்னா இல்லையான்னு செக் பண்றியா பூங்குழலி?" என்றான் மலரவன், அவளை பேச்சிழக்க செய்து.

"நலங்கு முடிஞ்சு நான் இப்ப தான் ரூமுக்குள்ள வரேன்" பொய் கூறினாள் அவள்.

"ஓ முடிஞ்சிருச்சா?" என்றான்.

"ம்ம்ம்"

"எனக்கு இந்த சடங்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

"ஓ..."

"எனக்கு நலங்கு வெச்ச மிச்ச சந்தனத்தை தான் எங்க அம்மா உனக்கு நலங்க வைக்க கொண்டு வந்தாங்க தெரியுமா?" என்றான்.

அவள் கரம், அனிச்சையாய் அவளது கன்னத்தை தொட்டது.

"கேட்கவே செம ரொமான்டிக்கா இருக்கு இல்ல" என்றான் குரலில் குழைவை காட்டி.

அவன் அதை எந்த அர்த்தத்தில் கூறுகிறான் என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது.

"உன் கன்னத்துல பூசின சந்தனம், என்னை தொட்டுட்டு வந்திருக்கு, பூங்குழலி" என்றான்.

பூங்குழலியின் ரத்தம் கொதிப்பது போல் இருந்தது. ஏன் இப்படி எல்லாம் பேசி அவளது மூச்சை அவன் நிறுத்துகிறான்...!

"தயவு செய்து இப்படி எல்லாம் பேசுறதை நிறுத்துறீங்களா, மலர்?" என்றாள் மென்மையாய்.

தன் உதடுகளை அழுத்தி சிரிப்பை அழுத்தினான்.

"எதுக்காக எனக்கு கால் பண்ணீங்க?"

மலரவன் ஒன்றும் பேசவில்லை.

"ஏன் அமைதியா இருக்கீங்க? நான் காலை கட் பண்ணிடவா?" என்றாள்.

"இந்த மாதிரி எல்லாம் பேச வேண்டாம்னு சொன்ன... நான் வேற என்ன பேசுறது, நான் ஃபோன் பண்ணது இதைப் பத்தி பேசத்தான்னு இருக்கும் போது?" அவன் குரல் சிரித்ததை உணர்ந்தாள் பூங்குழலி.

"நான் காலை கட் பண்றேன்" என்றாள் பூங்குழலி.

அவன் ஒன்றும் கூறாமல் அவள் அழைப்பை துண்டிக்கட்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவள் அழைப்பை துண்டிக்கவில்லை.

"நீ காலை கட் பண்ணலையா பூங்குழலி?" என்றான் வேண்டுமென்றே.

"பேசிக்கிட்டு இருக்கும் போது காலை கட் பண்ணிட்டு போறது நாகரிகம் இல்ல" என்று அவள் தயங்கியபடி கூற, புன்னகை புரிந்தான் மலரவன்.

"நல்ல நாகரீகம்..." என்றான்.

"சரி, நான் காலை கட் பண்ணிடவா?" என்றாள்

"சரி, நம்ம சாயங்காலம் எங்க வீட்ல மீட் பண்ணலாம்"

"பை"

"பை" அவன் அழைப்பை துண்டிக்க போக, மலர் என்று அவனை அழைத்தாள்.

மீண்டும் கைபேசியை காதுக்கு கொடுத்து,

"சொல்லு பூங்குழலி என்றான்.

"உங்க மனசுல என்ன இருக்கு?" என்றாள் குழப்பத்தோடு.

அது அவன் இதழில் புன்னகையை வரவழைத்தது.

"நீங்க ஏன் இப்படி எல்லாம் என்கிட்ட பேச ஆரம்பிச்சு இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. உங்க மனசுல என்ன தான் இருக்கு?"

"உனக்கு தெரியாதா?"

"தெரியாது"

"அதை நானே சொல்லனும்னு நினைக்கிறியா?" என்ற பொழுது அவன் குரலில் கிண்டல் தெறித்தது.

பெருமூச்சு விட்ட அவள்,

"எனக்கு தெரிஞ்ச வரைக்கும்  நீங்க அதிகம் பேசாதவர். ஆனா என்கிட்ட நிறைய பேசுறீங்க. இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு புரியல. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு"

"அதனால தான் உன்கிட்ட நான் நிறைய பேச ஆரம்பிச்சிருக்கேன். ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ. நமக்கு கல்யாணம் ஆகப்போகுது. நீ சங்கடப்பட அதுல எதுவுமே இல்ல. இப்படித் தான் நம்மளோட லைஃப் இருக்கும். நான் இப்படித் தான் உன்கிட்ட இருப்பேன்... இருக்கணும். நீ சொன்னது சரி தான். நான் யார்கிட்டயும் அதிகம் பேசாதவன். ஆனா, நீ என்னோட வைஃப். உன்கிட்ட அப்படி இருக்க நான் விரும்பல. எல்லா மனுஷனுக்கும், ஊர், உலகத்துக்கு தெரியாத இன்னொரு முகம் இருக்கும். அது அவனோட மனைவிக்கு மட்டும் தான் தெரியும்னு சொல்லுவாங்க. என்னோட அந்த இரண்டாவது முகம் என் மனைவி விரும்பற விதத்தில் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். மனைவிக்கு உண்மையானவனாய் இருக்கணும்னு நினைக்கிற எல்லாரும் அப்படித் தான் இருப்பாங்க. என் பொண்டாட்டி கிட்ட கூட நான் நல்லா பேசலனா, வேற யார்கிட்ட பேச முடியும் பூங்குழலி?"

சில நொடி நிறுத்திய அவன்,

"இன்னைக்கு, நீ சங்கடப்படக் கூடாது அப்படிங்கறதுக்காக என்னை இப்படி எல்லாம் பேச வேண்டாம்னு சொல்ற. எத்தனை நாளைக்கு நான் இப்படி இருக்கணும்னு நீ ஆசைப்படுறேன்னு பாக்கலாம். ஃபியூச்சர்ல, நான் வீட்ல தங்குறது இல்ல, டைம் ஸ்பென்ட் பண்றது இல்ல, உன்கிட்ட எதையும் ஷேர் பண்றது இல்லன்னு நீ குறை சொல்லாம இருக்கியான்னு பார்க்கலாம்" எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவன் பட்டியலிட்டான்.

அது பூங்குழலியை திகைக்க செய்தது. அவன் தங்களது எதிர்காலத்தை பற்றி இவ்வளவு ஆழமாகவா யோசித்துக் கொண்டிருக்கிறான்?

"இதுக்காக தான் ஐ லவ் யூ அப்படிங்கிற மேஜிக்கல் வேர்ட்ஸ்ஸை என்கிட்ட நீங்க சொன்னீங்களா?"

"அந்த மேஜிக்கல் வேர்ட்ஸ், உன் மனசுல ஏதாவது மேஜிக்கை ஏற்படுத்தியிருக்கா?" என்று பதில் கேள்வி கேட்டான், அவள் கேட்டதற்கு பதில் அளிக்காமல்.

"என்னோட கேள்விக்கு இது பதில் இல்ல" என்றாள்.

"இல்ல... நான் அதை உன்கிட்ட சொன்னது, நீ அடைப்பட்டு கிடக்கிற கூட்டுக்குள்ள இருந்து உன்னை வெளியில் கொண்டு வர்றதுக்காக மட்டுமல்ல. ரியலி, ஐ லவ் யூ, பூங்குழலி"

பூங்குழலி புன்னகைத்தாள்.

"போய் உன் முகத்தை கழுவிக்கோ பூங்குழலி. அந்த சந்தனத்தை உன் முகத்தில் ரொம்ப நேரம் இருக்க விடாத" எச்சரித்தான் அவன்.

"ஏன்?"

"நான் அதுல மந்திர பொடியை கலந்திருக்கேன்" என்றான் ரகசியமாய்.

"ஓ அப்படியா?" என்றாள் எகத்தாளமாய்.

"நீ நம்பலையா? சரி, நீ மட்டும் அதை வாஷ் பண்ணலைனா, நான் உன் பக்கத்துல வந்து, உன் கன்னத்தோட என் கன்னத்தை உரசுற மாதிரி உனக்கு மனசுல தோணும் பாரு" அவனது குரல் கிரீச்சிட்டது.

அவளது உடல் குப் என்று வியர்த்தது, அவன் கூறிய காட்சி அவளது மணக்கண்ணில் விரிந்த போது.

"நான் அதுல மேஜிக் பவுடரை கலந்து இருக்கேன் இப்ப நம்புறியா?" என்றான்.

உடனடியாய் அந்த அழைப்பை துண்டித்தாள் பூங்குழலி, நாகரிகத்தை மறந்து. தன் கைபேசியை பார்த்து புன்னகைத்தான் மலரவன். அவனுக்கு தெரியும், அவள் அந்த காட்சியை கற்பனை செய்திருப்பாள் என்று.

மலரவனும் பூங்குழலியும் புதிய உறவுமுறைக்குள் அடியெடுத்து வைக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள், ஏராளமான எதிர்பார்ப்புகளுடன்.

அன்று மாலை, சிவகாமியுடனும் வடிவுகரசியுடனும் அன்பு இல்லம் வந்து சேர்ந்தாள் பூங்குழலி. ஆலம் சுற்றி அவளை வரவேற்றார் மின்னல்கொடி. வழக்கமான சம்பிரதாயத்திற்காக தாம்பூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது. அவர்களுக்கென்று பிரத்தியேகமாக தரைதளத்திலேயே சகல வசதிகளுடன் கூடிய ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தார் மின்னல்கொடி.

மறுப்புறம், குமரேசன் குடும்பத்தினர் அவர்களுடைய இலக்கை எட்டிப் பிடிக்க முனைப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள்... மகிழன்.

மகிழன் தன்னால் ஆன மட்டும் திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான், தனது பெற்றோரிடமும் அண்ணனிடமும் நன்மதிப்பை பெறுவதற்காக. அவனுக்கு வேறு வழியில்லை. என்ன இருந்தாலும் அவர்கள் அவனது குடும்பத்தினர் இல்லையா...! அவர்களது தயவு இல்லாமல் அவனால் வாழ்ந்து விட முடியாது.  அதை அவன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான். ஆனால், அவன் கற்பனை செய்து பார்க்காத ஒன்று நடக்க இருப்பது அவனுக்கு தெரியாது.

மறுநாள் காலை

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. விடியற்காலையிலேயே எழுந்து, ராகேஷுடன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான் மகிழன். அவனிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு அப்பாடா என்று அமர்ந்தான்.

"எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, மகிழா" என்றான் ராகேஷ்.

"எனக்கும் தான் டயர்டா இருக்கு. ராத்திரி ரொம்ப லேட்டா படுது காலையில சீக்கிரம் எழுந்தேன்ல..."

"அதான் உன்கிட்ட கொடுத்த வேலை எல்லாம் செஞ்சு முடிச்சிட்டியே. வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்"

"முகூர்த்தத்துக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. நான் எப்படி ரெஸ்ட் எடுக்க முடியும்?" என்றான் மகிழன்.

"நீ கல்யாணத்துல கலந்துக்க போறியா?"

"ஆமாம், அதுல என்ன சந்தேகம்?"

பெருமூச்சு விட்டான் ராகேஷ்.

"நீ ரொம்ப நல்லவன் மகிழா. ஆனா உங்க குடும்பத்தில் இருக்கிற யாரும் அதை புரிஞ்சுக்கல" என்று வழக்கம் போல் தன் வேலையை ஆரம்பித்தான் ராகேஷ்.

"அதை விடு" பிடி கொடுக்காமல் நழுவினான் மகிழன்.

"சரி, இப்போதைக்கு உனக்கு எந்த வேலையும் இங்க இல்ல. வா நம்ம கெஸ்ட் ரூமுக்கு போகலாம்"

"கெஸ்ட் ரூமுக்கா? நான் வரல"

"இப்போ அங்க யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் ஹால்ல கல்யாணத்துக்காக கூடி இருக்காங்க. உன்னை யாராவது தேடி வந்தா, அவங்க உன்னோட ரூம்ல தான் போய் தேடுவாங்க. அதனால கெஸ்ட் ரூம்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வரலாம் வா"

"நான் வரல ராகேஷ். நீ போ"

"அட, வந்துடலாம் வா"

மகிழனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் ராகேஷ். அவனுடன் சென்றான் மகிழன். ஏனென்றால், அவனுக்கும் கூட சற்று நேரம் அமர்ந்தால் தேவலாம் என்று தோன்றியது. ராகேஷ் கூறியபடி அந்த அறையில் யாரும் இல்லை. தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலை வெளியே எடுத்த ராகேஷ், அதை ஒரு மடக்கு குடித்தான்.

"என்ன அது?" என்றான் மகிழன்.

"காக்டைல்... செமையா இருக்கு"

"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? நடக்கிறது என் அண்ணனோட கல்யாணம். இங்க வந்து குடிச்சிகிட்டு இருக்க... உனக்கு அறிவில்லையா?"

"அட, இப்ப யார் குடிக்க போறது? சும்மா ஒரு ஸிப் எடுத்தேன். நீயும் வேணும்னா டேஸ்ட் பண்ணி பாரு. வாழ்நாள்ல இதோட ருசியை நீ மறக்கவே மாட்ட. இதை என்னோட கசின் யூகேயில் இருந்து கொண்டு வந்தான்"

"எனக்கு வேணாம்" என்று முகம் சுளித்தான் மகிழன்.

"ஏன்டா வேண்டாம்னு சொல்ற?"

"ஏற்கனவே எங்க அப்பா, என்னை ஒரு அனிமல்  மாதிரி பார்க்கிறாரு. நான் எங்க அண்ணன் கல்யாணத்துல குடிச்சேன்னு தெரிஞ்சா, என்னை கொன்னே போட்டுடுவாரு"

"இப்ப யாரு உன்னை குடிக்க சொன்னது? சும்மா எப்படி இருக்குன்னு டேஸ்ட் தானே பண்ண சொல்றேன்? சும்மா ஒரு வாய் குடி"

"வேணாம் ராகேஷ்"

அவன் கூறியதை பொருட்படுத்தாமல், வலுக்கட்டாயமாய் அவன் வாயில் அதை ஊற்ற முயன்றான் ராகேஷ். அப்பொழுது மகிழன் அணிந்திருந்த உடையில் அந்த மது கொட்டியது.

"என்ன முட்டாள்தனம் செஞ்சிருக்க நீ?" என்று கத்தினான் மகிழன்.

"சாரி மச்சான். தெரியாம நடந்துடுச்சு. டிரஸ்சை மாத்திக்கோ" என்றான் வருத்தத்துடன்.

அங்கிருந்து செல்ல மகிழன் முனைப்பு காட்டிய போது, அந்த அறைக்கு வெளியே பலர் நின்று கொண்டிருந்தார்கள். சட்டென்று உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாளியிட்டு கொண்டான்.

"என்ன ஆச்சு?"

"என்னால இப்போ வெளியே போக முடியாது. என்னோட பண்ருட்டி பெரியப்பா வெளியில நிக்கிறாரு. என் மேல சாராய நெடி அடிக்கிறதை பார்த்தா, நான் குடிச்சிருக்கேன்னு அவர் நினைப்பாரு" என்றான் வெறுப்புடன்.

"சரி, நீ இங்கேயே இரு. நான் உன்னோட ரூமுக்கு போய் உனக்கு வேற டிரஸ் கொண்டு வறேன்"

"சரி. என்னோட கப்போர்ட் திறந்து தான் இருக்கு. சீக்கிரமாக கொண்டு வா"

தன் கையில் இருந்த பாட்டிலை மகிழனின் கையில் திணித்துவிட்டு, அங்கிருந்து சென்றான் ராகேஷ். அந்த பாட்டிலுடன் கட்டிலில் அமர்ந்தான் மகிழன்.

அப்போது, குளியல் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. குளித்து முடித்துவிட்டு, ஒரு துண்டை உடலில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள் கீர்த்தி. அந்த இடத்தில் கீர்த்தியை எதிர்பார்க்காத மகிழன் திக்பிரம்மை அடைந்தான்.

"நீ இங்க என்ன பண்ற?" என்றாள் அதிர்ச்சியுடன்.

"ப்ளீஸ் சத்தம் போடாத. நான் இங்கிருந்து போயிடுறேன்" என்றான் மகிழன்.

"நீ எதுக்காக இங்க வந்தேன்னு கேட்டேன்" என்றபடி தன் மூக்கின் மீது கை வைத்த அவள்,

"நீ குடிச்சிருக்கியா?" என்றாள் மேலும் முகத்தில் அதிர்ச்சி காட்டி.

"இல்ல நான் குடிக்கல. இந்த ட்ரிங்க்ஸ் என் மேல கொட்டிக்கிச்சு"

"நீ பொய் சொல்ற. எதுக்காக இங்க வந்திருக்க? உன் மனசுல என்ன இருக்கு?"

கட்டிலின் மீது இருந்த தனது கைபேசியை எடுக்க அவள் முயன்ற போது, கீழே விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்பில் அவள் கால் தடுக்கி, அவள் மகிழன் மீது விழுந்தாள். அவனை தன் மீது இழுத்து கொண்டு, கட்டிலின் மீது விழுந்து,

"என்னை விடு... என்னை விடு..." என்று கத்த துவங்கினாள்.

சரியாய் அதே நேரம் அந்த அறைக்குள் நுழைந்த குமரேசனும், சுஜாதாவும் அந்த காட்சியை கண்டார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top