22 அளவு

22 அளவு

"நான் உன்னை காதலிக்கிறேன்னா, உன்னை காதலிக்கிறேன்னு தான் அர்த்தம்"

"எப்போதிலிருந்து?" என்ற எதிர்பாராத கேள்வி எழுந்தது பூங்குழியிடமிருந்து

" உன்னை எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேனோ அப்போதிலிருந்து"

"நாப்பதிஎட்டு நாளுக்கு முன்னாடி இருந்தா?"

புன்னகைத்தான் மலரவன்.

"உனக்கு இருந்த படபடப்பு போயிடுச்சு போல இருக்கு" என்று லேசாய் அவளது மூக்கை தட்டி அவளை திசை திருப்பினான்.

அவனுக்கு பதில் கூறாமல் தன் பார்வையை வேறு எங்கோ திருப்பினாள் பூங்குழலி.

"நான் கிளம்புறேன். இப்போதிலிருந்து நம்ம கல்யாண வேலையில் நான் ரொம்ப பிசியா இருப்பேன். அதனால நம்ம கல்யாணம் வரைக்கும், நம்மளோட லண்டன் ப்ரோக்ராமை தள்ளி வைக்கலாம்னு இருக்கேன். நீயும் பிரேக் எடுத்துக்கோ. உனக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சுன்னா, எனக்கு தாராளமா கால் பண்ணு" கூறியபடி வாசலை நோக்கி நடந்தான்.

ஒன்றும் கூறாமல் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி.  அப்படி என்றால் அவன் இதற்குப் பிறகு இங்கு வரப்போவதில்லலையா? அவளை நோக்கி திரும்பிய மலரவன்,

"நம்ம கல்யாண விஷயமா நான் இங்க வருவேன்" என்றான் அவள் மனதை படித்து விட்டவன் போல.

சரி என்று மெல்ல தலையசைத்தாள் தன் முகத்தில் எந்த ஆச்சரிய குறியையும் காட்டிக் கொள்ளாமல். மலரவன் அங்கிருந்து சென்ற பின், பெருமூச்சுடன் அமர்ந்தாள் பூங்குழலி.

அவன் எதற்காக அங்கு வந்தான்? அந்த மந்திர வார்த்தைகளை அவளிடம் நேரில் கூற வந்தானோ? அவன் சாதாரணமாய் இருப்பதாய் தோன்றவில்லை. அவனிடம் தீவிரம் தெரிகிறது. அவனது நடவடிக்கை, அவன் கொண்டுள்ள காதல் சாதாரணமானது என்று கூறுவதாய் தெரியவில்லையே.  இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி ஒருவன் இவ்வளவு தீவிரமாய் மாற முடியும்? இவன் ஒரு புதிர். திருமணத்திற்கு பிறகு, அவள் அவனிடம் படாத பாடு பட போவது உறுதி.

*ஐ லவ் யூ* என்பதோ, அல்லது *நான் உன்னை காதலிக்கிறேன்* என்பதோ, எந்த மொழியில் இருந்தாலும் அது மந்திர வார்த்தைகள் தான். ஏன் தெரியுமா? அது சொன்னவரை மட்டுமல்ல, கேட்டவரையும் சேர்த்து பைத்தியம் அடிக்க செய்கிறது. இங்கேயும் அப்படித் தான் பூங்குழலிக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை தன்னிடம் உதிர்த்தவனை பற்றித் தான் அவள் சதா யோசித்துக் கொண்டிருக்கிறாள். அதை உதிர்க்கும் போது இருந்த அவனது முகபாவம் அவளுக்கு நடுக்கத்தை தந்தது. தயக்கமற்ற அவனது பார்வை, அவன் தனக்கான உரிமையை எடுத்துக் கொண்டு விட்டான் என்று பறை சாற்றியது. பூங்குழியின் மூளை வேலை செய்யவே இல்லை. எப்படி செய்யும்? அது தான் மலரவனிடம் கவிழ்ந்து கிடக்கிறதே! அவன் அவளை காதலிக்கிறானாம்...! படுபாவி, எவ்வளவு சாதாரணமாய், சுலபமாய், நேரடியாய், தயக்கமின்றி கூறிவிட்டு சென்று விட்டான்...!

காதல்! உண்மையிலேயே அவன் அவளை காதலிக்கிறானா? மகிழன் பலமுறை அவளிடம் பேச முயன்ற போதும் அந்த மந்திர வார்த்தைகளை அவன் ஒரு முறை கூட அவளிடம் உதிர்த்ததில்லை. அதை அவளிடம் கூறிய முதல் மனிதன் மலரவன் தான் என்றில்லை. அவள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதும், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதும் நிறைய பேர் அதை அவளிடம் கூறி இருக்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் யாருக்காகவும் அவள் எந்த வித்தியாசத்தையும் அவள் மனதில் உணர்ந்ததில்லை. அப்படி இருக்க, இப்பொழுது மட்டும் ஏன்? பதில் காண முயன்றாள் அவள். அது ஏனென்றால், மலரவன் அவளை கடந்து செல்லும் யாரோ ஒருவன் அல்ல... அவளுக்கு கணவனாக போகிறவன்.

மறுபுறம், மலரவன் ஆனந்த வெள்ளத்தில் நீராடிக் கொண்டிருந்தான். தன் மனதில் பூங்குழலிக்காக அவன் தேக்கி வைத்திருந்தது என்ன என்பதை அவளுக்கு தெரியப்படுத்தி விட்டான். அதை அவன் திருமணத்திற்கு முன்பே செய்து விட்டது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. திருமணத்திற்கு முன்பே அதை செய்ய வேண்டும் என்பது தான் அவனது விருப்பமும் கூட. ஒருவேளை இன்று அவன் அதை செய்யாமல் போயிருந்தால், அதற்கான சந்தர்ப்பத்தை தானே உருவாக்கவும் அவன் தயங்கி இருக்கப் போவதில்லை.

அன்பு இல்லம்

மகிழனின் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் மின்னல்கொடி, அவனை பற்றி மணிமாறன் கூறியதை கேட்டு. மின்னல்கொடியை விட அதிகம் அதிர்ச்சி அடைந்தது மலரவன் தான்.

"அவனுடைய ஒவ்வொரு செய்கையும் என்னை ரொம்ப காயப்படுத்துது. அவன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்னு என்னால புரிஞ்சுக்க முடியல" என்றார் மணிமாறன்.

வாயடைத்து அமர்ந்திருந்தார் மின்னல்கொடி. அவருக்கும் கூட மகிழனின் நடவடிக்கைக்கான காரணம் புரியவில்லை.

"ரிலாக்ஸ் பா..."

"இல்ல மலரா. என்னால ரிலாக்ஸா இருக்க முடியல. அவன் செய்யிற ஒவ்வொரு வேலையும் எனக்கு அவ்வளவு கோபத்தை கொடுக்குது. அவனை என் பிள்ளைன்னு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு" என்றார் இயலாமையுடன்.

மலரவனுக்கு குழப்பமாய் இருந்தது. அவனுக்கு தெரிந்தவரை, அலுவலகத்தில் கூட குடிக்கும் அளவிற்கு மகிழன் ஒன்றும் குடிகாரன் அல்ல. அவன்  குடிக்க கூடியவன் தான். ஆனால் அவனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும் போதும், வார இறுதி நாட்களிலும் மட்டும் நண்பர்களுடன் இணைந்து அவன் குடிப்பான் என்று மலரவனுக்கு தெரியும். மகிழனுக்கு என்ன ஆனது என்றே அவனுக்கு புரியவில்லை. ஒருவேளை பூங்குழலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மலரவனின் முடிவு, அவனது இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்குமோ? அப்படி இருந்தால், அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் அவனது கவலைக்கு காரணம் என்றால், அவன் தாராளமாய் கவலை படட்டும் என்று நினைத்தான் மலரவன்.

"சொசைட்டில நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. அந்த கௌரவத்தை சம்பாதிக்க, நானும் மலரவனும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம். அதை கெடுக்கிற மாதிரி மகிழன் ஏதாவது முட்டாள்தனம் பண்ணா, அதை நான் நிச்சயம் பொறுத்துக்க மாட்டேன். இன்னும் அஞ்சு நாள்ல மலரவனுக்கு கல்யாணம். அதுவரைக்கும் அவனை ஒழுங்கா இருக்க சொல்லு" என்றார் மணிமாறன்.

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறானவர்கள். எதிரெதிர் துருவங்களாக இருந்த போதிலும், அவர்கள் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் ஈர்த்ததே இல்லை. மகிழன் செய்த விஷயங்களை செய்ய எப்பொழுதும் மலரவன் விரும்பியதே இல்லை. மலரவன் செய்ததை செய்ய மகிழன் விரும்பிய போதிலும், அது அவனால் இயலவில்லை. ஏனென்றால் அது அவன் திறமைக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது.

இப்பொழுது அவர்கள் இருவரும் எதிர் திசைகளில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஒரு நல்ல பெண்ணை, பணத்திற்காக வேண்டாம் என்று கூறியதற்காக, மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்க காத்திருக்கிறான் மகிழன். அவன் ஆசைப்பட்டபடியே குவியலான பணம் அவன் முன்னாள் கொட்டப்பட இருக்கிறது. ஆனால் அது அவனுக்கு மன நிம்மதியை தரப் போவதில்லை. தான் செய்த தவறை எண்ணி, பெருமளவில் வருத்தப்பட போகிறான் மகிழன். தான் வாழ்க்கையில் இழந்தது என்ன என்பதை அவன் சீக்கிரம் உணர போகிறான். ஆனால்... அதனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கப் போகிறதா? நிச்சயம் இல்லை. சில தவறுகள் திருத்திக்கொள்ள இயலாதவை. ஒரு தவறை திருத்தி கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வாழ்க்கை பல முறை வழங்குவதில்லை. அதை விரைவிலேயே மகிழன் உணர்த்துக் கொள்வான்.

திருமண வேலைகள் துவங்கின. திருமண விஷயமாக நான் உன் வீட்டிற்கு வருவேன் என்று மலரவன் பூங்குழலியிடம் கூறிய போதிலும், அவன் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. அவளுக்கு அவன் ஃபோன் செய்யவும் இல்லை. திருமண வேலை, மற்றும் லண்டன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் அவன் மும்முரமாய் இருந்தான். பூங்குழலியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மலரவன் நினைத்தாலும் அவள் அமைதியாய் இருந்துவிடவில்லை. ஸ்டீவுடன் இணைந்து அவளும் லண்டன் நிகழ்ச்சிக்காக பணியாற்றிக் கொண்டு தான் இருந்தாள். அது மலரவனுக்கும் தெரியும் இல்லை.

......

பூங்குழலிக்கான திருமண உடையை தானே வடிவமைக்கிறேன் என்று மலரவன் கூறி இருந்ததால், அதற்கான அளவுகளை எடுக்க யாராவது வருவார்கள் என்று காத்திருந்தாள் பூங்குழலி. ஆனால் யாரும் வரவில்லை. திருமணத்திற்கு நாட்கள் குறைவாக இருக்கிறதே... எப்பொழுது அளவு எடுத்து, எப்பொழுது தைப்பார்களோ என்று கலவரம் அடைந்தாள் பூங்குழலி.

மறுநாள்

மலரவனின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் பூங்குழலியின் வீட்டிற்கு வந்து அவளுக்கான திருமண உடையை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு சென்றார்.  பூங்குழலியை அழைத்த சிவகாமி அதை அவரிடம் அவளிடம் காட்டினார்.

அது புடவை தான்... ஆனால், புடவை இல்லை. புடவை போல் வடிவமைக்கப்பட்ட ரெடிமேட் உடை. அப்படியே மாட்டிக்கொண்டு பின் செய்துவிட வேண்டியது தான். அந்த பட்டு புடவைக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த, கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடு மிகுந்த ரவிக்கையும் அதனுடன் இருந்தது. அதை பார்த்த போது, பூங்குழலின் மனதில் ஏதோ செய்தது. அந்த உடை மலரவனால் வடிவமைக்கப்பட்டது. அவளை காதலிக்க ஆரம்பித்த பின் அவன் வடிவமைத்த உடை அது. அதை வடிவமைக்கும் போது அவனது மனதில் எப்படிப்பட்ட எண்ணம் ஓடி இருக்கும்? அதை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தாள் பூங்குழலி. கட்டிலின் மீது அமர்ந்து அதை மென்மையாய் தடவினாள். அப்போது அவளது மனதில் ஓர் எண்ணம் உதித்தது.

அவளுடைய அளவை எடுக்காமல், இந்த உடை எப்படி தைக்கப்பட்டது? அவளது அளவுகளை எடுக்க யாருமே வரவில்லையே...! அதை உடனே அணிந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. கதவை சாத்திக்கொண்டு, அதை அணிந்து பார்த்த அவள், பேச்சிழந்து போனாள். அந்த உடை அவளுக்கு கணக்கசிதமாய் பொருந்தியது. தளர்வாகவும் இல்லை, இறுக்கமாகவும் இல்லை. அளவு எடுத்து தைத்தது போல் இருந்தது. இது எப்படி சாத்தியம்? தன் கைபேசியை எடுத்து மலரவனுக்கு ஃபோன் செய்தாள்.

ஸ்டீவிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சலை சரி பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன். பூங்குழலியின் பெயர் தன் கைபேசியில் ஒளிந்ததை பார்த்து அவன் இதழ்கள் புன்னகையை அணிந்து கொண்டன.

"சொல்லு பூங்குழலி"

"நீங்க கொடுத்து அனுப்பின டிரஸ் எனக்கு கிடைச்சிடுச்சு"

"அப்படியா?"

"ஆமாம் அது தைச்சி இருக்கு"

தன் புருவம் உயர்த்தினான் மலரவன்.

"தைச்சிருந்தா தானே அது டிரஸ்? இல்லனா வெறும் துணி தான்..."

"அது எனக்கு ரொம்ப பர்ஃபெக்ட்டா சூட் ஆகுது"

"ஓ... தட்ஸ் நைஸ்..."

"என்னோட அளவு உங்களுக்கு எப்படி கிடைச்சது?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் பூங்குழலி.

புன்னகைத்தான் மலரவன்.

"உன் அளவு எனக்கு கிடைக்கல..."

"அப்புறம் எப்படி அந்த டிரஸ் எனக்கு அவ்வளவு கரெக்டா இருக்கு?"

"கெஸ் பண்ணி தான் மெஷர் பண்ணேன்... உனக்கு அது சரியா இருக்கான்னு நானே கேட்கணும்னு நினைச்சேன்" என்றான் தன் சிரிப்பை கட்டுபடுத்துக் கொண்டு.

"உங்க கம்பெனியில எல்லா டிரஸையும் கெஸ் பண்ணியே தைச்சிடுவீங்களா?"

தன் உதடு கடித்து கண்ணை மூடி சிரித்த மலரவன்,

"எல்லா டிரஸையும் கெஸ் பண்ணி தச்சிட முடியாது" என்றான் தயக்கமில்லாமல்.

அவளது கன்னங்கள் சரசரவென சிவபேறின. அவன் கூறியதன் அர்த்தம் என்ன? அவனது பார்வையாலேயே அவளை அளவெடுத்து விட்டானா? அவளுக்கு மயிர்கூச்செரிந்தது.

"பூங்குழலி லைன்ல இருக்கியா?"

"ம்ம்ம்"

"என்கிட்ட ஏதோ கேட்டுக்கிட்டு இருந்தியே...?" என்றான்

"ஒன்...னும் இல்...ல" தடுமாறினாள்

"உன்னை தயார் பண்ணிக்கோ" அவன் குரல் குழைந்தது.

"எனக்கு... கொஞ்சம்... வேலை இருக்கு" என்றாள்.

"என்ன வேலை?"

"சமைக்கப் போறேன்"

"உனக்கு சமைக்க தெரியுமா?"

"ம்ம்ம்"

"பரவாயில்லையே... ஆனா அதுக்காக கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்கிறேன்னு சொல்லிட்டு,  என்னை *நம்ம* ரூம்ல தனியா விட்டுட்டு ஓடிட கூடாது" என்றான்.

"நான் சொன்னதை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் மெல்லிய குரலில்.

"நான் எதையும் மறக்கல. ஆனா, நீ இப்போ அதை ஏன் ஞாபகப்படுத்துற?" என்றான் லேசான சிரிப்போடு.

"எனக்கு டைம் வேணும்னு நான் கேட்டதை மறந்துட்டு, நீங்க என்கிட்ட சரசமாடிக்கிட்டு இருக்கீங்க... "

"நீ என்கிட்ட டைம் வேணும்னு கேட்டதை நான் ஒன்னும் இல்லைன்னு சொல்லலையே. ஆனா அதே நேரம், நான் இப்படி எல்லாம் உன்கிட்ட பேச கூடாதுன்னு நீ சொன்னதாகவும் எனக்கு ஞாபகம் இல்ல. எது உன்னை இவ்வளவு கலவரப்படுத்துது பூங்குழலி? நான் இப்படி எல்லாம் பேசினா, நீ கேட்ட மாதிரி அதிக டைம் எடுத்துக்க வேண்டிய அவசியம் இருக்காதுன்னு உனக்கு பயம் வந்துடுச்சா?" வெளிப்படையாகவே சரசமாடினான் மலரவன்.

வாயடைத்துப் போனாள் பூங்குழலி.

"ஹலோ மேடம், நான் பேசுறது காதுல விழுதா?"

"நீங்க இப்படி எல்லாம் பேசினா, நான் உங்க கிட்ட பேச மாட்டேன்"

"அப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்வ? அப்பவும் என்கிட்ட பேசாம இருப்பியா?"

"என்னை அம்மா கூப்பிடுறாங்க. நான் போறேன்"

"புளுகு மூட்டை" என்று சிரித்தான் மலரவன்.

அவசரமாய் அழைப்பை துண்டித்த பூங்குழலி, கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்து வெட்க புன்னகை பூத்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top