21காதலிக்கிறேன்

21 காதலிக்கிறேன்

மகிழனின் அறைக்குள் புயலென நுழைந்தார் மணிமாறன். தனது நாற்காலியை விட்டு எழுந்த மகிழன், தலை குனிந்து நின்றான். கதவை சாத்தி தாழிட்ட மணிமாறன்,

"ஆஃபீஸ் டைம்ல என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்க நீ? பொறுப்புங்கிறது உனக்கு இம்மி அளவுக்கும் இல்லையா?" பொறுமினார் அவர்.

ஒன்றும் பேசாமல் நின்றான் மகிழன். தன் நண்பனின் பெயரை அவரிடம் அவனால்கூற முடியாது. அப்படி கூறினால், அவனது சீட்டு கிழிந்து விடும். அவன் நடுத்தெருவுக்கு வந்துவிடுவான்.

"வாயை திறந்து பேசுடா முட்டாள்" கொதித்தார் மணிமாறன்.

வாய் திறக்கவில்லை மகிழன்.

"மலரவனுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. ஏற்கனவே உன்னால நம்ம கௌரவம் கெட்டுப் போய் கிடக்கு. தயவு செய்து எங்களை மத்தவங்க முன்னாடி தலைகுனிய வச்சுடாத. உன்னை குடிக்காதேன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் சொன்னாலும் நீ என் வார்த்தையை மதிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ ஆஃபீஸ்ல குடிச்சா, அதை என்னால பொறுத்துக்க முடியாது. ஜாக்கிரதை..." கோபத்துடன் அங்கிருந்து சென்றார் மணிமாறன்.

சத்தம் இன்றி, மெல்ல அவனது அறைக்குள் புகுந்தான் ராகேஷ் தோய்ந்த முகத்துடன்.

"என்னை மன்னிச்சிடு மகிழா... " என்றான்.

"நான் இன்னும் எதையெல்லாம் பொறுத்துக்கணுமோ" தெரியல என்றான் மகிழன் வெறுப்புடன்.

"என் பேரை சொல்லாமல் இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மகிழா"

"விடு, இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல. இப்பெல்லாம் எங்க அப்பா கிட்ட இருந்து இதைவிட மோசமான ரியாக்ஷனை தான் நான் பாக்குறேன்"

"பெத்தவங்கனாலே அப்படி தான். அவங்க நம்ம உணர்வுகளை புரிஞ்சிக்கவே மாட்டாங்க. ஆனா, நம்ம மட்டும் அவங்களை புரிஞ்சிக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க. இது எல்லாத்துக்கும் உங்க அண்ணன் தான் காரணம். நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன பொண்ணை அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? அவரு ரொம்ப நல்லவர்னு எல்லாரும் நினைக்கணுமா?" மகிழனின் மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெயை வார்க்க முயன்றான் ராகேஷ்.

"எங்க அம்மா அப்பாவுக்காக தான் அவன் பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கிறான். அவங்க சந்தோஷத்துக்காக அவன் என்ன வேணாலும் செய்வான்"

"நீ யாரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னியோ, அதே பொண்ணு உன் வீட்டுக்கு வரப் போறா. உன் அண்ணனுக்கு பொண்டாட்டியா அதே வீட்ல இருக்க போறா. நீ எப்படி அவளை தினம் தினம் ஃபேஸ் பண்ண போற? இதைப் பத்தி எல்லாம் உங்க அண்ணன் ஒரு தடவை கூட யோசிச்சு பார்க்கலையா?"

"அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல. பூங்குழலி எனக்கு அண்ணியாக போறாங்க. அதை தவிர அதைப் பத்தி யோசிக்க வேற எதுவும் இல்ல"

"கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு. எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண தயாராகு." அந்த இடத்தை விட்டு சென்றான் ராக்கேஷ்.

தனது நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினான் மகிழன்.

கோபத்துடன் அழைப்பை துண்டித்தார் குமரேசன். அது ராகேஷின் அழைப்பு தான். அவர் நினைத்தது போல், மகிழனை அவர் பக்கம் இழுப்பது அவ்வளவு சுலபமாய் தெரியவில்லை. மகிழனின் *தொட்டுக்கோ தொடைச்சிக்கோ* என்ற பேச்சு அவருக்கு ஏமாற்றத்தை தந்தது. மகிழினை அவர்களது வழிக்கு கொண்டுவர இன்னும் அதிக உழைப்பு தேவைப்படும் போல் தெரிந்தது. அதை பொறுமையாய் திருமணத்திற்கு பிறகு செய்து கொள்ளலாம். இப்பொழுது அவனை கீர்த்திக்கு திருமணம் செய்து வைப்பது தான் முக்கியம் என்று பட்டது அவருக்கு. அவர்களது திட்டத்தை செயல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. அதை ராகேஷின் உதவியோடு செய்து விட வேண்டியது தான். ராகேஷ் அதை நிச்சயம் செய்வான். அதை செய்து முடித்தால், அவனுக்கு இருபதைந்து லட்சம் கிடைக்குமே! பின் ஏன் அவன் செய்ய மாட்டான்?

.......

தவிப்புடன் தன் நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. மலரவனிடமிருந்து
*ஐ லவ் யூ* என்ற மந்திர வார்த்தைகளை கேட்ட பிறகு, அவள் பதற்றம் உச்சத்தை தொட்டது. உண்மையிலேயே அவன் அதை கூறி விட்டானே...! அவனுக்கு கொஞ்சம் கூட தயக்கம் என்பதே இல்லையா? அவனுக்குத் தான் ஏன் இவ்வளவு தைரியம்? ஆனால் அதைக் கூற தைரியம் மட்டும் இருந்தால் போதுமா? தைரியத்தை மீறிய ஒன்று அதற்கு தேவையாயிற்றே... காதல்...! காதல் இன்றி அவனால் அதை கூறியிருக்க முடியுமா? அப்படி என்றால், அவளை காதலிக்கிறேன் என்று அவன் கூறியது உண்மை தானா? அல்லது, அவள் தன்னை அடைத்துக் கொண்டிருக்கும் கூட்டில் இருந்து அவளை வெளியே கொண்டு வர அவன் கையாண்ட தந்திரமா? காதலைத் தவிர வேறு எதால் ஒரு மனிதனை மாற்றி விட முடியும்? இதன் பிறகு, அவளால் அதைத் தவிர வேறு எதைப் பற்றியாவது யோசிக்க முடியுமா? அவள் என்ன செய்யப் போகிறாள்?  வழக்கம் போல் அவன் இங்கே வந்தால், அவனை அவள் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்? இன்னும் திருமணத்திற்கு ஐந்து நாட்கள் தான் இருக்கிறது. அதனால் அவன் இதற்குப் பிறகு அங்கே வருவதற்கான வாய்ப்பில்லை. சற்று தூங்கினால் தேவலாம் என்று தோன்றியது அவளுக்கு. அந்த தூக்கம் அவளது பதற்றத்தை குறைக்க உதவும் மருந்தாக அமையும். கண்களை மூடி கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஆனால் அவ்வளவு சுலபமாய் அவளால் தூங்கி விட முடியவில்லை. மூடி இருந்த அவளது கண்களுக்குள், அவளைப் பார்த்து கிண்டலாய் சிரித்தான் மலரவன். திடுக்கிட்டு கண் விழித்த அவள்,

"இந்த மனுஷனை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேனோ தெரியலையே..." புலம்பினாள் அவள்.

போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டு மீண்டும் படுத்த அவள், மீண்டும் திடுக்கிட்டால் அழைப்பு மணியின் ஓசை கேட்டபோது. வந்திருப்பது மலரவனாக இருக்குமோ? அவளது நெஞ்செலும்பு உடைந்து விடும் அளவிற்கு அவளது இதயம் துடிக்க துவங்கியது. தலையணையை இறுக்கமாய் கட்டிக்கொண்டு, கண்களை அழுத்தமாய் மூடிக்கொண்டாள் பூங்குழலி.

சிவகாமி மற்றும் வடிவக்கரசியின் எதிர் செயலுக்காக காத்திருந்தாள். ஒருவேளை வந்திருப்பது மலரவனாக இருந்தால், அவர்கள் அவளை அழைப்பார்கள் அல்லவா? ஆனால் அவர்கள் அவளை அழைக்கவில்லை. ஆகவே எனவே நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவள் எண்ணியது சரி தான். அவன் அந்த மந்திர வார்த்தைகளை கூறிய பிறகு நிச்சயம் அங்கு வரமாட்டான், என்று தவறாக கணக்கு போட்டாள் மலரவனை பற்றி முழுமையாக அறியாத பூங்குழலி.

கட்டிலின் மீது எழுந்தமர்ந்து, தன்னை போர்த்தியிருந்த போர்வையை நீக்கி பெருமூச்சு விட்ட பூங்குழலி, கைகளை கட்டிக்கொண்டு, கட்டிலின் மீது சாய்ந்தபடி நின்றிருந்த மலரவனை கண்டு திக் பிரம்மை அடைந்தாள்.

தன் கண்களை அகல விரித்து மென்று விழுங்கினாள். அவளது மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள, அவளது முகபாவமே போதுமானதாக இருந்தது மலரவனுக்கு. தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி, அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள் அவள். அவள் முகத்தை பார்த்தபடி அவள் முன்னாள் அமர்ந்தான் மலரவன்.

"நான் உன்கிட்ட சொன்னதை நினைச்சி ரொம்ப டென்ஷனா இருந்தேன். உன்னை ரொம்ப பதட்டப்பட வச்சிட்டேனோன்னு நெனச்சேன். நீ என்னடான்னா, இங்க நிம்மதியா தூங்கிட்டு இருக்க" என்றான் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.

பூங்குழலிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தனது நடுக்கத்தை எப்படி கட்டுப்படுத்திக் கொள்வது என்பதும் புரியவில்லை. போர்வையின் நுனியில், முடிச்சிடுவதும், அவிழ்ப்பதுமாய் அமர்ந்திருந்தாள்.

"பூங்குழலி..." மெல்லிய குரலில் அவன் அவளை அழைக்க, முடிச்சிடுவதை நிறுத்திவிட்டு, மெல்ல தன் கண் இமைகளை அவனை நோக்கி உயர்த்தினாள். மறுபடியும் குனிந்து கொண்டாள்.

தனது அலைபேசியை எடுத்த மலரவன், மித்திரனுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை உடனே ஏற்றான் மித்திரன். அவன் எதுவும் கூறுவதற்கு முன்,

"என்னடா பண்ணி வச்சிருக்க நீ?  உன்னை ஒரு ஃபிரெண்டுனு சொல்லிக்காத" என்றான்.

"என்னாச்சு மலரா? ஏன் இப்படி எல்லாம் பேசுற?" என்றான் மித்திரன் பதற்றத்துடன். பாவம் அவன். மலரவன் எங்கிருக்கிறான் என்று அவனுக்கு என்ன தெரியும்?

"நீ என்ன செஞ்சு வச்சிருக்கேன்னு பாரு. பூங்குழலி என்கிட்ட பேச மாட்டேங்குறா. என்னை ஏறெடுத்து பார்க்க கூட மாட்டேங்கறா."

"நீ பூங்குழலி வீட்லயா இருக்க?" என்ற மித்திரன் நம்ப முடியாமல்.

"பின்ன? நான் பூங்குழலி வீட்ல இல்லனா, அவ என்ன செஞ்சுகிட்டு இருக்கான்னு எனக்கு எப்படி தெரியும்?"

"இங்கிருந்து நேரா அவங்க வீட்டுக்கு போயிட்டியா?"

"ஆமாம்"

"அவங்களை மீட் பண்ண எப்படா சான்ஸ் கிடைக்கும்னு காத்துகிட்டு இருந்த போல இருக்கு... "

"ஷட் அப்"

"சரி. ஆனா, அவங்க ஏன் உங்கிட்ட பேசாம இருக்காங்க? ஒரு வேலை நீ அவங்களை காதலிக்கலாம்னு தானே நான் சொன்னேன்?"

"எனக்கு எப்படி தெரியும்?"

"அவங்க கிட்ட ஃபோனை குடு"

கைபேசியை அவளிடம் நீட்டினான் மலரவன்.

"மித்திரன். உன் கிட்ட பேசணுமாம்"

அந்த கைபேசியை வாங்க தயங்கினாள் பூங்குழலி. அவளுக்கு மேலும் என்ன காத்திருக்கிறது என்று புரியவில்லை. அவளது கையைப் பிடித்து தன் கைபேசியை அவள் கையில் வைத்தான். அதை தயக்கத்துடன் தன் காதுக்கு கொடுத்தாள் பூங்குழலி.

"சொல்லுங்க"

"நீங்க ஏன் அவன்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க பூங்குழலி? பாருங்க, அவன் என்னை எப்படி திட்டுறான்னு. எனக்கு மனசுல என்ன தோணிச்சோ அதைத் தான் உங்ககிட்ட சொன்னேன். அவன் மனசுல என்ன இருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். அவன் உங்களை காதலிக்கிறானா இல்லையான்னு அவனை கேளுங்க"

அமைதியாய் இருந்தாள் பூங்குழலி.

"கேளுங்க பூங்குழலி"

"அவரு ஏற்கனவே கன்ஃபஸ் பண்ணிட்டாரு"

"என்ன்னனது? அது எப்போ நடந்தது?"

"ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி" மலரவனை பார்க்காமல் பதிலளித்தாள். அவனோ அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

"இவனை என்ன செஞ்சா தகும்? ஃபோனை அவன்கிட்ட குடுங்க... இல்ல, இல்ல, ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்க"

ஸ்பீக்கரை ஆன் செய்தாள் பூங்குழலி.

"இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல மலரா. கிடைச்ச சான்சை யூஸ் பண்ணி உன்னோட காதலை சொல்லிட்டு, என்கிட்ட சத்தம் போட்டுகிட்டு இருக்கியா?"

"கிடைச்ச சான்ஸை யூஸ் பண்ணிக்கிட்டேனா? எனக்கு தேவைப்பட்டா, இல்லாத சான்ஸை என்னால உருவாக்க முடியும்" என்ற அவனை, விழி விரித்து அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் பூங்குழலி.

அதைக் கேட்டு சிரித்தான் மித்திரன்.

"உனக்கு நான் தேங்க்ஸ் சொல்லியே தீரணும். லீட் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்" பூங்குழலியின் மீது இருந்த தன் கண்களை அகற்றாமல் புன்னகையுடன் கூறினான் மலரவன்.

"எப்போதும் உனது சேவையில் மித்திரன்.! நடத்து..." என்றான் மித்திரன்.

பூங்குழலிக்கு நன்றாகவே புரிந்து போனது. இந்த இருவரும் கிடைத்த சந்தர்ப்பத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று.

"நீ பூங்குழலிக்காக கொடுத்த டிசைனை, நான் நம்ம ஹெட் டிசைனருக்கு அனுப்பி வச்சிட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க"

"சரி, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன். பை" அழைப்பை துண்டித்து விட்டு பூங்குழியை பார்த்தான் மலரவன்.

குறையாத ஆச்சரியத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி, அவனுக்கு என்ன தான் வேண்டும் என்று தெரிந்து கொள்ள. அவன் அவளை நோக்கி கை நீட்ட, பின்வாங்கினாள் பூங்குழலி. அதைப் பற்றி கவலைப்படாமல் அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு,

"கவலைப்படாத. நான் என் காதலை சொல்லிட்டேன் அப்படிங்கறதுக்காக, எதுக்காகவும் அவசரப்பட மாட்டேன். நம்ம ஏற்கனவே பேசி இருந்த மாதிரி, நீ வேண்டிய டைம் எடுத்துக்கலாம்" என்று புன்னகை உதிர்த்தான்.

பூங்குழலியின் கண்கள் அவன் மீது நிலைத்து நின்றது. அவளது எதிர்பார்ப்புக்குள் அடங்காதவனாய் இருக்கிறான் அவன். தன் காதலை கூறிவிட்ட பிறகு, அவன் அங்கு வரமாட்டான் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவனோ, ஒன்றுமே நடக்காதது போல், சாவகாசமாய் வந்து அவளுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான்.

"தேவைப்பட்டா, ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் உன்னை அப்புறம் மீட் பண்றேன்"

கட்டிலை விட்டு எழுந்த அவன், அங்கிருந்து செல்ல முயல, பூங்குழலியின் கேள்வி அவனை தடுத்து நிறுத்தியது.

"நீங்க என்னை காதலிக்கிறேன்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம்?"

அவன் அவளை நோக்கி குனிய, அவள் பின்னால் சாய்ந்தாள்.

"நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு தான் அர்த்தம்"

அவனது கண்களை சில நொடிகள் வாசித்தவள்,

"எப்போதிலிருந்து?" என்றாள்.

"உன்னை எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேனோ, அப்போதிலிருந்து..." என்றான் சாதாரணமாய்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top