20 மலரவனின் காதல்

20 மலரவனின் காதல்

எம் எம் நிறுவனம்

மணிமாறனுடன், மித்திரனும், மகிழனும் ஒரு மீட்டிங்கில் இருந்தார்கள். அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்கள், டீலர்கள், மற்றும் ஏஜென்ட்கள் அங்கு கூடியிருந்த போதிலும், அது வியாபார நிமித்தமான கூட்டமாக படவில்லை. மலரவனின் திருமணத்திற்கு அனைவரையும் ஒவ்வொருவராக சென்று அழைக்க நேரமில்லாததால், அப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மணிமாறன்.

தான் ஏன் பூங்குழலியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அனைவருக்கும் பதிலளித்து வெறுத்துப் போனான் மகிழன். மறுபக்கம், மணிமாறனோ, ஏன் மலரவன் பூங்குழலியை திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆர்வத்துடன் அனைவருக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் கூறியது வெகு எளிமையான பதில். *அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது* என்பது தான்.

கூட்டம் முடிந்து அனைவரும் ஒவ்வொருவராக கலைய துவங்கினார்கள். தன் நண்பனுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி மித்திரனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அப்போது அங்கு வந்த மலரவனை பார்த்த அவனது முகம் மேலும் பூரித்து போனது. ஓடிச் சென்று அவனை ஆரத் தழுவிக் கொண்டான் மித்திரன்.

"கங்கிராஜுலேஷன்ஸ் மலரா... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு"

" தேங்க் யு டா"

"எதுக்காக, தி கிரேட் மலரவன் இங்க வந்திருக்கான்னு நான் கெஸ் பண்ணட்டுமா?"

ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் நின்றான் மலரவன்.

" உன் வருங்கால மனைவியோட வெட்டிங் டிரஸ்சை டிசைன் பண்ண தானே வந்திருக்க?"

"மித்திரன் கெஸ் பண்ணா தப்பாகுமா?" சிரித்தான் மலரவன்.

கான்பிரன்ஸ் அறையில் இருந்து வெளியே வந்த மக்கள், மலரவனை கண்டதும் அவனை சூழ்ந்து கொண்டார்கள். அந்த காட்சியைக் கண்ட மகிழன் திகைத்து நின்றான். மலரவனை அங்கு பார்த்த அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அங்கிருந்த அனைத்து கண்களும் அவனையே மொய்ப்பது போல் இருந்தது அவனுக்கு. மெல்ல பின்னோக்கி நகர்ந்த அவன், மீண்டும் கான்ஃபரன்ஸ் அறைக்கு சென்றுவிட்டான். அந்த கூட்டத்திற்கு வந்திருந்த சில டீலர்கள் அவனைப் பற்றியும் மலரவனை பற்றியும் பேசிக் கொண்டது அவன் காதில் விழுந்தது.

"மலரவன் இங்க காலடி எடுத்து வைச்ச பிறகு தான் எம் எம் கம்பெனி கலைக்கட்டுது" என்றான் ஒருவன்.

"ஆமாம், மலரவன் மலரவன் தான்... மகிழன் அவன் முன்னாடி நிக்க கூட முடியாது" என்றான் மற்றொருவன்.

"கடலையும் கால்வாயையும் ஒண்ணா வச்சு பேசாத. மலரவன் கடல் மாதிரி... அவன் ஒரு சாதனையாளன். அவனால முடியாதது எதுவுமே இல்ல. மனசு வச்சா அவன் எல்லாத்தையும் செஞ்சு காட்டுவான். இப்ப கூட பாரு, மகிழன் வேண்டாம்னு சொன்ன பொண்ண, தான் கல்யாணம் பண்ணி, மகிழன் தப்பானவன்னு நிரூபிச்சி காட்டி இருக்கான்"

"நீ சொல்றது சரி தான். மகிழனுக்கு என்ன தெரியும்? அவங்க அப்பா பின்னாடி சுத்துறத தவிர அவனுக்கு வேற எதுவும் தெரியாது"

"யாருக்கு தெரியும், இவன் அந்த பொண்ண வேண்டாம்னு சொன்னானோ... இல்ல, அந்த பொண்ணு இவனை வேண்டாம்னு சொன்னாளோ..." என்று சிரித்தார்கள் அவர்கள்.

மகிழனை அவமானம் பிடுங்கி தின்றது. அப்போது அவன் தோளை யாரோ தொட, திரும்பி பார்த்த அவன், அங்கு குமரேசன் நிற்பதை கண்டான்.

"நீ எதைப் பத்தியும் கவலைப்படாதே மகிழா. இவங்கெல்லாம் இப்படித் தான். அடுத்தவங்களோட மனசை உடைக்கிறதை பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டாங்க" என்றார்.

ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் மகிழன். மகிழனை தரம் குறைவாய் பேசிய அந்த மனிதர்களை பார்த்து குமரேசன் புன்னகைக்க, அவர்களும் பதிலுக்கு புன்னகைத்தார்கள்.

மித்திரனின் அறைக்கு வந்த மலரவன், மின்னஞ்சலில் அவனுக்கு ஒரு கோப்பை அனுப்பி வைத்தான்.

"உன் மெயில் எனக்கு வந்துடுச்சு" என்ற மித்திரன் அதை திறந்து பார்க்க, அதில் இருந்த வண்ணமயமான உடை வடிவமைப்பை பார்த்து வாயடைத்து நின்றான்.

"தனக்கு வரப்போற மனைவியை மயக்கம் போட்டு விழ வைக்கணும்னு யாரோ ரொம்ப தீவிரமா முயற்சி செய்ற மாதிரி தெரியுதே" என்றான் மித்திரன் மலரவனை பார்த்து.

சிரிக்காமல் இருக்க முயன்றான் மலரவன்.

"மலரா, இந்த டிசைனை, நம்ம கம்பெனியோட பிரைடல் கலெக்ஷன்ல நான் சேர்க்கப் போறேன்"

"நான் இதை பத்தி பூங்குழலி கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு உன்கிட்ட சொல்றேன்" என்றான் மலரவன்.

"இதெல்லாம் ரொம்ப ஓவர் மலரா..."

"ஏன்டா? இந்த டிசைன் அவளுக்கு சொந்தமானது. அதை யூஸ் பண்றதுக்கு முன்னாடி, அதோட ஓனர் கிட்ட பர்மிஷன் கேட்க மாட்டியா?"

"மலரா, நீயா உன் பொண்டாட்டி கிட்ட பர்மிஷன் வாங்குறதை பத்தி பேசுற? என்னால இதை நம்பவே முடியல"

"நம்பு"

"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?"

"கேளு"

"அவங்க கிட்டயாவது நீ ஏதாவது பேசுறியா?"

"நீ கேக்குறதுக்கு என்ன அர்த்தம்?"

"நீ தான் மத்தவங்க கிட்ட வாய் திறந்து பேசவே மாட்டியே! அதனால கேட்டேன்"

"அவ மத்தவங்க இல்ல. அந்த மத்தவங்க லிஸ்ட்ல அவ வரமாட்டா. அதை முதல்ல புரிஞ்சுக்கோ"

"அப்படின்னா அவங்க எந்த லிஸ்டில் வருவாங்க?"

"அவ மிஸஸ் மலரவன். என்னுடைய வைஃப்"

"ஓ... உன்னோட பர்சனல் இன்ட்ரஸ்ட் பத்தி யாரும் கேள்வி கேட்கக் கூடாது தான். ஆனாலும் நான் கேட்கிறேன். ஏன்னா, இன்னைக்கு நிறைய பேர் அதை பத்தி பேசிக்கிட்டாங்க"

"எதை பத்தி?"

"மகிழனுக்கு நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்னு போனதை பத்தியும், அதே பொண்ணை இப்போ நீ கல்யாணம் பண்ணிக்க போறதை பத்தியும்... "

"ம்ம்ம்"

"இதை நீ உன்னோட அப்பா அம்மாவுக்காகவும், அவங்க சந்தோஷத்துக்காகவும் தான் செய்றியா?"

"நீ என்ன வேணா நினைச்சுக்கோ" சிரித்தான் மலரவன்.

"மலரா, யாருக்கும் கிடைக்காத ரொம்ப பெரிய கௌரவம் எனக்கு கிடைச்சிருக்கு"

"என்ன அது?"

"உன்னோட ஒரே ஃபிரண்ட் அப்படிங்கிற கவுரவம்"

"யாருக்கும் கிடைக்காத கௌரவத்தை அடைஞ்ச நீ, மலரவனை புரிஞ்சிகிற கெப்பாசிட்டி இருக்கிறவன்னு நான் நினைக்கிறேன்"

"இருக்கு.  அதனால தான் உன்னை கேட்கிறேன். எனக்கு என்னவோ நீ உங்க அப்பா அம்மாவுக்காக பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தோணல"

"வேற என்ன தோணுது?"

"உனக்கு அவங்ளை பிடிச்சிருக்கா...? நீ அவங்களை காதலிக்கிறாயா?"

புன்னகைத்தான் மலரவன்.

"நான் என்ன வேணா நினைச்சுக்கலாம்னு சொன்னா, நீ உதை வாங்குவ"

மீண்டும் சிரித்தான் மலரவன்.

"பதில் சொல்லு மலரா"

அதே நேரம், மலரவனின் அலைபேசிக்கு அழைப்பு வர, மலரவனின் முகம் பிரகாசித்தது, அந்த அழைப்பு பூங்குழலியிடம் இருந்து வந்ததால்.

"இரு" என்றான் மித்திரன்.

"என்ன?"

"அந்த கால் பூங்குழலியுடையது தானே?"

ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.

"உன் ஃபோனை என்கிட்ட குடு"

"எதுக்கு?"

குடுன்னு சொல்றேன்"

"மாட்டேன்,"

"குடு மலரா"

" எதுக்கு? "

"நீ அவங்களை காதலிக்கிறேன்னு சொல்லப் போறேன்"

அவன் கையில் இருந்த அலைபேசியை பறித்த மித்திரன், அந்த அழைப்பை ஏற்றான்.

"ஹலோ..."

மறுபக்கம் அமைதி நிலவியது.

"ஹலோ பூங்குழலி..."

"யார் பேசுறீங்க?"

"மலரவன்"

"இல்ல... நீங்க மலரவன் இல்ல. அவரோட ஃபோன் உங்களுக்கு எப்படி கிடைச்சது? அவர் எங்க? அவருக்கு என்ன ஆச்சு? அவருக்கு ஒன்னும் இல்லையே? அவர் நல்லா இருக்காரு இல்ல?"

"ஹேய், ரிலாக்ஸ். மலரவன் நல்லா இருக்கான். அவனுக்கு ஒன்னும் ஆகல. நான் அவனோட ஃப்ரெண்ட் மித்ரன்" என்றான், அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த மலரவனை பார்த்து புன்னகைத்தபடி.

நிம்மதி பெருமூச்சு விட்டாள் பூங்குழலி.

"நான் அவன்கிட்ட இருந்து ஃபோனை பிடுங்கிட்டேன்"

"ஏன்?"

"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கத் தான்"

"என்ன கேட்கணும்?'

"அவன் உங்க கிட்ட ஏதாவது சொன்னானா?"

"எதைப் பத்தி?"

"அவன் உங்களை காதலிக்கிறானே, அதைப் பத்தி..."

"என்ன்னனது?"

"அவன் உங்களை காதலிக்கிறானோன்னு எனக்கு பெரிய சந்தேகம் இருக்கு"

அமைதியாய் இருந்தாள் பூங்குழலி.

"உங்களுக்கு தெரியுமா குழலி, அவன் எப்பவுமே கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சதே இல்ல. ஒரு வருஷமா லண்டன்ல ஒளிஞ்சுக்கிட்டு இருந்தான். ஆனா இப்ப என்னடான்னா, உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உடனே ஒத்துக்கிட்டான். உண்மையை சொல்லப் போனா, அவனே வலிய வந்து அவங்க அப்பா அம்மா கிட்ட உங்களை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டிருக்கான்.  அவன் ஏன் அப்படி செஞ்சான்னு நீங்கள் கேட்டீங்களா?"

"இல்ல... அது... அவங்க, அப்பா அம்மாவுக்காக..." திணறினாள் பூங்குழலி.

"வாய்ப்பே இல்ல பூங்குழலி. அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை அவனோட அப்பா அம்மா அவன் கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சின போதெல்லாம் அவன் ஒத்துக்கவே இல்ல. அதுவும் ஒரு தடவை ரெண்டு தடவை இல்ல, பல தடவை. அப்படி இருக்கும் போது, இப்ப மட்டும் ஏன் ஒத்துக்கிட்டான்னு நீங்களே அவனை கேளுங்க"

அவள் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மித்திரன் விரும்புகிறான்?

"இப்ப கூட பாருங்க, நான் பேசுறதை எல்லாம் எதிர்ல உக்காந்து கேட்டுகிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்கான்"

"அவரு....அங்கயா... இருக்காரு?"

"இதோ என் எதிர்ல தான் இருக்கான்"

சங்கடமாகி போனது பூங்குழலிக்கு. அவர்களது பேச்சை மலரவன் கேட்டுக் கொண்டிருக்கிறானா?

"நான் அவன்கிட்ட ஃபோனை கொடுக்கட்டுமா? இல்ல... "

அவன் கையில் இருந்த கைபேசியை பறித்த மலரவன்,

"ஹாய் பூங்குழலி" என்றான்.

அவனது குரலை திடீரென கேட்ட பூங்குழலி திகைத்தாள்.

"பூங்குழலி லைன்ல இருக்கியா?" என்று சிரித்தான் மலரவன்.

"நான் ப்ரோக்ராம் லைட்டிங் பத்தி பேச தான் ஃபோன் பண்ணேன்"

"எந்த ப்ரோக்ராம்? லண்டன் ப்ரோக்ராமா? இல்லனா நம்ம கல்யாண ப்ரோக்ராமா?" என்றான் கிண்டலாய்.

"லண்டன் ப்ரோக்ராம் பத்தி தான்"

"ஓ... சரி சொல்லு"

"நீங்க என்னை லைட்ஸை ஆர்டர் பண்ண சொல்லி இருந்தீங்க. நான் அதை செஞ்சேன். இப்ப தான் ஸ்டீவ் கால் பண்ணாரு, லைட்ஸ் எல்லாம் டெலிவரி கொடுத்துட்டாங்களாம்"

"அப்படியா? சரி."

"ஸ்டீவ் தான் உங்ககிட்ட சொல்ல சொன்னாரு. அதனால தான் கால் பண்ணேன்."

"சரி"

"நான் லைனை கட் பண்றேன்"

"சரி" சிரித்தான் மலரவன்.

அழைப்பை துண்டித்தாள் பூங்குழலி.

"நீ அவளை நல்லா கன்ஃப்யூஸ் பண்ணிட்ட" சிரித்தான் மலரவன்.

"நான் உண்மையை தானே சொன்னேன்?"

"வாயை மூடுடா"

"உன் நெஞ்சை தொட்டு சொல்லு, நீ அவங்களை காதலிக்கலையா?"

தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றான் மலரவன்.

"சீக்கிரமா அவளோட டிரெஸ்ஸை ரெடி பண்ணிடுங்க. நான் வரேன்" அங்கிருந்து நடந்தான் மலரவன்.

"நீ அவங்களை காதலிக்கிறேன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு" என்றான் மித்திரன்.

சிரித்தபடி மணிமாறனின் அறையை நோக்கி நடந்தான் மலரவன்.

"வா மலரா" என்றார் அவனைப் பார்த்த மணிமாறன்.

' அப்பா நான் டிரஸ் டிசைனை மித்ரன் கிட்ட கொடுத்துட்டேன். அவன் அதை பாத்துக்குவான்"

"சரி. நீ கிளம்புறியா?"

"ஆமாம்பா. கொஞ்சம் வேலை இருக்கு"

"சரி கிளம்பு"

முக்கியமான ஏதோ ஒன்றை யோசித்தபடி, அங்கிருந்து அகன்றான் மலரவன்.

........

அந்த நிறுவனத்தில் பணி புரியும் மகிழனின் நண்பனான ராகேஷ் மகிழனை அழைத்தான்.

"சொல்லு ராகேஷ்"

"என்னோட க்யூபிக்கலுக்கு வாயேன்"

"சரி வரேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு ராகேஷின் சிறிய அறையை நோக்கி நகர்ந்தான் மகிழன்.

"எதுக்காக என்ன கூப்பிட்ட?" என்றான் மகிழன்.

"உன்னோட நிலைமை எனக்கு புரியுது. உன்னை நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு"

ஒன்றும் கூறவில்லை மகிழன். ராகேஷின் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கொக்கோகோலா பாட்டிலை எடுத்து பருகினான் மகிழன். அவன் முகம் மாறியது.

"என்ன இது?" என்றான்.

"ஸ்பெஷல் டிரிங்க்"

"என்னடா சொல்ற?"

"பிராண்டி"

"பிராண்டியா? போச்சு... நான் தொலைஞ்சேன்... இதை ஏன் நீ என்கிட்ட முன்னாடியே சொல்லல?"

"நானா உன்கிட்ட கொடுத்தேன்? நீ தானடா கேட்காம எடுத்து குடிச்ச... நான் இதை ஆபீசுக்கு கொண்டு வரேன்னு தயவு செய்து யார்கிட்டயும் சொல்லிடாத. என்னோட சீட்டு கிழிஞ்சிடும்" கெஞ்சினான் ராகேஷ்.

"அறிவில்ல உனக்கு?ஆஃபீசுக்கு போய் யாராவது பிராண்டி கொண்டு வருவாங்களா?" கோபமாய் அங்கிருந்து நடந்தான் மகிழன்.

அவன் அறைக்கு வந்த போது, எதிரில் வந்த மணிமாறனுடன் மோதிக்கொண்டான்.

"ஐ அம் சாரிப்பா"

"நீ குடிச்சிருக்கியா?" தன் கண்களை சுருக்கினார் மணிமாறன்.

ஒன்றும் கூறாமல் அந்த இடம் விட்டு அகன்றான் மகிழன். கோபத்துடன் அவனை முறைத்துக் கொண்டு நின்றார் மணிமாறன். அந்த காட்சியை கண்ட ராகேஷ் குமரேசனுக்கு ஃபோன் செய்தான், அவரிடம் விஷயத்தை கூற.

இதற்கிடையில்,

தனது காரில் அமர்ந்து சீட் பெல்ட் டை மாட்டிக் கொண்ட மலரவன், பூங்குழலிக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை மூன்றாவது மணியில் ஏற்றாள் பூங்குழலி.

"ஹலோ... "

"மித்திரன் கிட்ட என்ன கேட்ட பூங்குழலி?"

மித்திரனிடம் அவள் என்ன கேட்டாள்? அவளிடம் கேட்டது எல்லாம் மித்திரன் தானே?

"இல்லையே... நான் அவர்கிட்ட ஒன்னும் கேட்கலையே..."

"எனக்கு என்ன ஆச்சுன்னு நீ கேக்கல?"

"நான் என்ன நெனச்சேன்னா..."

"எனக்கு ஏதோ ஆயிடுச்சின்னு நினைச்சியா?"

"ம்ம்ம்"

"பயந்துட்டியா?"

"இல்ல... நான் வந்து..."

"பயப்படாத. எனக்கு ஒன்னும் ஆகல"

"மித்திரன் சொன்னாரு"

"அவன் வேற என்ன சொன்னான்?"

"உண்மையா இருக்க முடியாத ஒரு விஷயத்தைப் பத்தி சொன்னாரு"

"அப்படியா? அப்படி என்ன சொன்னான்?"

மென்று விழுங்கிய பூங்குழலி,

"அவர் சொன்னாரு, நீங்க..."

"நான்?"

"நீங்க என்னை காதலிக்கிறீங்களாம்"

"அது உண்மையா இருக்க முடியாதா பூங்குழலி?"

பூங்குழலிக்கு வியர்த்துப் போனது. அவன் கூறியதன் அர்த்தம் என்ன?

"ஐ லவ் யூ பூங்குழலி" என்றான் மலரவன்.

பூங்குழலியின் விழிகள் பெரிதாயின. கையில் கைபேசியை பிடித்துக் கொண்டு சிலை என நின்றாள் அவள். இப்போது அவள் கேட்டது உண்மையா? அவள் காதில் விழுந்த வார்த்தைகள் உண்மையா? மலரவன் அவளை காதலிக்கிறானா? எப்போதிலிருந்து?

"பை" அழைப்பை துண்டித்தான் மலரவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top