19 பொல்லாத கூட்டம்
19 பொல்லாத கூட்டம்
இதற்கிடையில்...
கோபத்தில் பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து கொண்டிருந்தாள் கீர்த்தி. அவளது பெற்றோர் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள்.
"மலரவன் எப்படி இந்த மாதிரி செய்யலாம்? என்னை விட்டுட்டு அவன் எப்படி பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கலாம்? என்னைப் பத்தியும் என்னோட காதலைப் பத்தியும் அவனால எப்படி நினைக்காம இருக்க முடியுது?" ஒரு அழகிய பூ ஜாடியை போட்டு உடைத்தாள் அவள். அந்த ஜாடி சுக்கு நூறாய் உடைந்து சிதறியது. அதிலிருந்து ஒரு துண்டு, அவள் காலை பதம் பார்த்தது. குமரேசன் ஓடிச்சென்று மேலும் அவள் காயப்படாமல் தடுக்க முயன்றார்.
"போதும் நிறுத்து கீர்த்தி. இப்படி எல்லாம் செய்யறதுனால எதுவும் மாறி போக போறதில்ல. மலரவன் நம்ம நினைச்ச மாதிரி இல்ல. அவனுக்குன்னு ஒரு பாலிசி, அவனுக்குன்னு ஒரு விருப்பம், அவனுக்குன்னு ஒரு லைஃப் ஸ்டைல்னு அவன் வாழ்ந்துகிட்டு இருக்கான். அதை யாராலும் மாத்த முடியாது. அந்த ரசனை கெட்டவனை மறந்துடு. அது தான் உனக்கு நல்லது. உன்னோட மதிப்பு தெரிஞ்ச ஒருத்தன் உனக்கு புருஷனா வருவான்..."
"முடிச்சிட்டீங்களா? பேச வேண்டியதை பேசி முடிச்சிட்டீங்களா? நீங்களா என்னை மலரவனை மறக்க சொல்றீங்க? என்னால எப்படி முடியும்? அவன் செஞ்சதை நான் மறந்துடுவேனா? அவனை மறக்க முடியுமா என்னால? நிச்சயம் முடியாது"
"ஆனா, உன் வாழ்க்கை..."
அவர் பேச்சின் ஊடே புகுந்து,
"வாழ்க்கையாம் வாழ்க்கை, மண்ணாங்கட்டி... எனக்கு பிடிச்சது எனக்கு கிடைக்கலன்னா, அப்புறம் அந்த வாழ்க்கையில ரசிச்சு வாழ என்ன இருக்கு? அவன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்... என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வேற ஒருத்தியை தேர்ந்தெடுத்துட்டான்..."
"கீர்த்தி, நான் சொல்றதை கேளு. உனக்கு எந்த மதிப்பும் கொடுக்காத ஒருத்தனுக்காக எதுக்காக நீ உன் வாழ்க்கையை வீணாக்கிக்கணும்? அவன் என்னமோ சந்தோஷமா தான் இருக்கான்...அப்புறம் நீ எதுக்காக இப்படி இருக்க?"
"அவன் சந்தோஷமா இருக்க மாட்டான். நான் அவனை சந்தோஷமா இருக்க விட மாட்டேன்"
"கீர்த்தி..."
"டாடி, இன்னும் ஒரு வார்த்தை நீங்க பேசினா, நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன்" மிரட்டினாள் அவள்.
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"
"ஆமாம், எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. என் மனசுக்கு நிம்மதியே இல்ல. என்னை வேண்டாம்னு சொன்னவங்க கதறி அழறதை பார்க்கிற வரைக்கும் என் மனசுக்கு நிம்மதி இருக்காது"
"உன்னால அதை செய்ய முடியாது. மலரவன் அப்படி செய்ய விட மாட்டான். அவனுடைய குடும்பத்துக்கு எதிரா வர்ற எல்லா பிரச்சனையையும் அவன் தகர்த்தெறிவான்" எச்சரித்தார் குமரேசன்.
"ஏதாவது தந்திரம் பண்ணி நான் அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாதா?"
"தந்திரமா? என்ன தந்திரம்?"
"அவனை வலை வீசி பிடிக்க ஏதாவது பிளான் பண்ணா என்ன? அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்னு நம்ம எல்லாரையும் நம்ப வைக்க முடியாதா? அப்படி சொன்னா, அவனை நான் கல்யாணம் பண்ணிக்க முடியும் தானே?" என்று கூறிய போது அவளது கண்களில் மின்னல் வெட்டியது.
"அந்த தந்திரத்துக்கு எல்லாம் மசியிரவன் அவன் இல்ல. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம, உன்னை எட்டி உதைச்சு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பான். இல்லைனா, யாருக்கும் தெரியாம, யாரும் கண்டுபிடிக்க முடியாத, உலகத்தோட ஏதாவது ஒரு மூலைக்கு பறந்து போயிடுவான். அதுக்குப் பிறகு வாழ்க்கை எல்லாம் நீ அழுதுகிட்டு உட்கார வேண்டியது தான்"
யோசித்தபடி அவள் கட்டிலில் அமர, அவளது காயத்திற்கு மருந்திட்டார் அவளது அம்மா.
"டாடி, நான் மகிழனை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள் கீர்த்தி.
அவளது காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்த சுஜாதாவின் கரங்கள், அதைக் கேட்டு அப்படியே நின்றது.
"என்ன சொல்ற நீ? அவன் எதுக்கும் பயன்படாதவன்"
"அவனை நம்ம பயன்படுத்திக்கலாம்"
"அவனுக்கு எதுவுமே தெரியாது"
"அது தான் எனக்கு வேணும்"
"ஒரு உதவாக்கரையா இருந்துகிட்டு, அவன் பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னான், என்னமோ அவன் அப்பன் கிட்ட இருக்கிறது எல்லாம் அவனுக்கு சொந்தம் அப்படிங்கற மாதிரி..."
"அப்படின்னா, அவனை வச்சு சுலபமா அவங்களுக்குள்ள விரிசலை ஏற்படுத்த என்னால முடியும்"
"அவன் மலரவனை மாதிரி இல்ல. அவனுக்கு நேர் எதிரானவன்"
"அப்படின்னா அவன் என்னை வேண்டாம்னு சொல்ல மாட்டான். அவன் வாழ்க்கையைவிட்டு என்னை விரட்டி அடிக்க மாட்டான். என்னை விட்டுட்டு உலகத்தோட எந்த மூலைக்கும் பறந்து போக மாட்டான்"
"ஆனா, நம்ம அவனை கல்யாணம் பண்ணி குடுங்கன்னு எப்படி அவங்க அப்பா அம்மா கிட்ட கேட்க முடியும்? இவ்வளவு நாள் நம்ம மலரவனுக்கு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தோம். அப்படி இருக்கும் போது, திடீர்னு எப்படி மகிழனுக்கு மாற முடியும்? அவங்க நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க"
"நம்ம ஏன் அவங்க கிட்ட கேட்கணும்? அவங்க யாரு நம்மளை வேண்டாம்னு சொல்ல?" என்றார் சுஜாதா.
"மகிழனே கூட இதுக்கு ஒத்துக்க மாட்டான்"
"அவன் ஒத்துக்க வேண்டிய அவசியம் இல்ல. நம்ம கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்கிறதை தவிர வேற வழியில்லாம அவன் நிப்பான். கீர்த்தியை அவங்க மருமகளா ஏத்துக்கறதை தவிர வேறு வழியில்லாமல் அவனோட அப்பா அம்மாவும் நிப்பாங்க"
"ஆனா எப்படி?"
"என்கிட்ட ஒரு பிளான் இருக்கு. நம்மளை அவமானப்படுத்தினதுக்காக அவங்க நிச்சயம் வருத்தப்படணும். எல்லார் முன்னாடியும் அவங்க தலை குனிஞ்சு நிக்கணும்" என்றார் சுஜாதா.
பெருமூச்சு விட்டார் குமரேசன்.
"நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ண போறீங்களா இல்லையா?" என்றாள் கீர்த்தி.
செய்கிறேன் என்பது போல் தலையசைத்தார் குமரேசன்.
"அப்புறம் என்ன? நீ அவங்க வீட்டுக்கு மருமகளா போற...! அது என்னோட பொறுப்பு" என்றார் சுஜாதா.
........
நாற்பத்தி எட்டு நாள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில், லண்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கான வேலைகளை கவனித்ததோடு மட்டும் அல்லாமல்,
பூங்குழலியிடம் தனது ஊடலாட்டத்தை மலரவன் நிறுத்தவில்லை. பூங்குழியும் அவனுக்கு பிடி கொடுக்காமல் விடாப்பிடியாய் நின்றாள்.
மறுபக்கம், மகிழனை வளைத்து போட, வேண்டிய வேலைகளை கீர்த்தி குடும்பத்தினர் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாருக்காகவும் காத்திருக்காத காலம், தன் வேலையை செவ்வனே செய்து, நாற்பத்தி எட்டு நாட்களை கடந்து சென்றது.
இன்னும் திருமணத்திற்கு ஒரே வாரம்...
பூங்குழலியின் இல்லம் வந்த மலரவன், கட்டிலின் மீது அமர்ந்து, வலைதளத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். மடிக்கணினியின் திரையிலிருந்து தன் கண்களை அகற்றிய அவன், தன் தலையை அழுத்தினான். அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பூங்குழலி, அதை கவனித்த போதும் ஒன்றும் பேசாமல் அமைதி காத்தாள். அவனிடம் என்ன கேட்பது என்று அவளுக்கு புரியவில்லை.
"எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கிடைக்குமா?" என்றான்.
சரி என்று தலையசைத்துவிட்டு, கட்டிலை விட்டு எழுந்த பூங்குழலியின் கரத்தை அவன் பற்ற, திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் பூங்குழலி.
"உன் புருஷன் தலைவலியில அவஸ்தை படுறான்னு தெரிஞ்சா, அவன் மேல கொஞ்சமாவது அக்கறை காட்டு" என்றான்.
"இல்ல, நான் என்ன நெனச்சேன்னா..."
"என்ன நெனச்ச?"
"ஐ அம் சாரி. நான் காபி கொண்டு வரேன்"
அவன் அவளது கையை விடுவிக்க, சமையலறைக்கு வந்த பூங்குழலி பாலை சூடேற்றினாள். அதை பார்த்த சிவகாமி,
"பூங்குழலி உனக்கு காபி வேணுமா? இரு நான் போட்டு தரேன்" என்றார்.
"இல்லமா. காபி எனக்கு இல்ல"
"ஓஹோ, மலர் தம்பி கேட்டாரா? சரி நான் போட்டுத் தரேன்"
"வேண்டாம் மா. நான் போடுறேன்"
சரி என்ற சிரித்தபடி தலையசைத்த சிவகாமி, பின்னால் நகர்ந்து கொண்டார். காபி கலந்து கொண்டு வந்த பூங்குழலி, அதை மலரவனிடம் கொடுத்தாள். அதை பருகிய மலரவனுக்கு புரிந்து போனது, அது சிவகாமி கலந்த காப்பி இல்லை என்று.
"இந்த காபி நான் வழக்கமா குடிக்கிற மாதிரி இல்லையே... ஆன்ட்டி போடலையா?" என்றான் முகத்தை சுருக்கி.
"இல்ல, இந்த காபியை அம்மா போடல"
"அப்படின்னா அத்தை போட்டு கொடுத்தாங்களா?"
"இல்ல. நான் தான் போட்டேன்"
"ஓ, உனக்கு காபியெல்லாம் கூட போட தெரியுமா?"
"ம்ம்ம்"
"ஆன்ட்டி எங்க போனாங்க? அவங்க வீட்ல இல்லையா?"
"வீட்ல தான் இருக்காங்க"
"இதை என்னால நம்ப முடியல"
"ஏன்?"
"அவங்க வீட்ல இருந்திருந்தா, காபி எனக்குன்னு தெரிஞ்சதுக்கு பிறகு, உன்னை போட விட்டிருக்க மாட்டாங்க. அவங்க போடுற காபி எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு அவங்களுக்கு தெரியும்"
"அவங்க கிச்சன்ல கொஞ்சம் வேலையா இருந்தாங்க. அதனால நான் போட்டுக் கொண்டு வந்தேன்"
"ஓஹோ..."
"அது வழக்கமா நீங்க குடிக்கிற மாதிரி இல்லனாலும், அதை பழக்கப்படுத்திக்கோங்க"
"அதுக்கு என்ன அர்த்தம்?"
"தினம் தினம் உங்களுக்கு உங்க மாமியார் காபி போட்டு கொடுக்க முடியாது. அதை நான் தான் செய்யப் போறேன்..."
"நீ எனக்கு தினம் தினம் காப்பி போட்டு கொடுக்கணும்னு தான் எனக்கும் ஆசை. அதை ஊர்ஜிதப் படுத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" சிரித்தபடி அந்த காப்பியை பருகினான்.
அவன் கூறியதற்கு எந்த பாவமும் காட்டவில்லை பூங்குழலி. இப்பொழுதெல்லாம் அவன் மிக அதிகமாகப் பேசுகிறான் என்று எண்ணினாள்.
"பூங்குழலி, நீ எதுக்காக என் கூட லண்டனுக்கு வரணும்னு நான் விரும்புறேன்னு என்னை கேட்க மாட்டியா?"
"நான் உங்களை கேட்கல?"
"கேட்ட... ஆனா, அதை தெரிஞ்சுக்க நீ எந்த ஆர்வமும் காட்டலையே..."
"சரியான நேரம் வரும் போது நான் அதை தெரிஞ்சுக்கிறேன்"
"ஏன் எதிலயும் ஒரு ஆர்வமே இல்லாம இருக்க, பூங்குழலி?"
"இங்க பாருங்க, எனக்கு ஆர்வம் இல்லன்னு இல்ல..."
"அப்படின்னா உனக்கு ஆர்வம் இருக்கா?"
"என்னை பேசி முடிக்க விடுங்க"
"சரி பேசி முடி"
"கல்யாணம் வரைக்கும், என்னை ஆர்வம் இல்லாம இருக்க விடுங்க"
"ஓ... அப்படின்னா கல்யாணம் முடியற வரைக்கும் ஆர்வம் இல்லாத மாதிரி நடிக்கப் போறேன்னு சொல்லு..."
"கொஞ்சம் சும்மா இருக்க முடியுமா?"
"சரி சொல்லு"
"இந்த உறவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிற வரைக்கும், நான் அதைப் பத்தி பெருசா எதுவும் யோசிக்க விரும்பல"
"நமக்கு அடுத்த வாரம் கல்யாணம். இன்னும் ஆறு நாள் தான் இருக்கு. நம்ம கல்யாணம் நடக்கும்னு இன்னுமா உனக்கு நம்பிக்கை வரல?"
"நான் அப்படி சொல்லல"
"வேற எப்படி சொல்ற? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"
"நம்ம இந்த நம்பிக்கை பத்தி எல்லாம் பேசாம இருந்தா நல்லது"
"ஏன் உனக்கு என் மேல நம்பிக்கை வரல?"
"உங்களுக்கு அது புரியாது"
"என்ன உன்னோட லாஜிக்? கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதுக்கப்புறம் என்னால உன்னை ஏமாத்த முடியாதா? கல்யாண ரெஜிஸ்ட்ரேஷனை என்ன நம்ம கல்வெட்டுலையா செதுக்க போறோம்? ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதுறதையே மாத்தி எழுதிட்டு போய்கிட்டே இருக்காங்க... ஏன் நீ இவ்வளவு இன்செக்யூர்டா இருக்கேன்னு எனக்கு தெரியல"
"நான் இன்செக்யூர்டா இல்ல"
"அப்புறம் என்ன?"
"மறுபடி எந்த ஏமாற்றத்தையும் சந்திக்க நான் தயாரா இல்ல. அவ்வளவு தான்"
"சரி... இந்த ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்க உனக்கு டைம் வேணும்னு கேட்ட. அதுவரைக்கும் நீ இப்படியே இருந்துக்கோ. ஆனா, நீ எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கேன்னு நானும் பாக்குறேன்" என்று குறுநகை உதிர்தான் மலரவன்.
*எவ்வளவு நாளைக்கு நீ இப்படியே இருக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்* என்று அவன் கூறியதற்கு என்ன அர்த்தம்? அது சவால் போல் அல்லவா ஒலிக்கிறது? அவன் மனதில் என்ன தான் இருக்கிறது? இப்பொழுதெல்லாம் அவன் மிக அதிகமாகி பேசுகிறான். அவனை எது இப்படி மாற்றியது என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவன் ஒரு விளங்காத விடை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top