16 பூங்குழலியின் ஆற்றல்

16 பூங்குழலியின் ஆற்றல்

மலரவனைப் பற்றி எண்ணியபடியே இருந்தாள் பூங்குழலி. அவனது அணுகுமுறை, அவனது வார்த்தைகள், அவனது முயற்சி, இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு மறைமுகமான அர்த்தம் இருப்பதாக தோன்றியது அவளுக்கு.

அவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்ற மடிக்கணினியும், கோப்பும் அவளது கட்டிலில் மேல் இருந்தது. அவற்றைப் பார்த்தவுடன் தன் மனதில் எழுந்த எண்ணத்தை தட்டிவிட்டு, அவற்றின் மீது தன் கவனத்தை செலுத்தினாள். கிட்டத்தட்ட தொன்னூறு சதவீதத்திற்கான விஷயம் அவளுக்கு பிடிபட்டுவிட்டது. ஆனாலும் சில விஷயங்களில் அவளுக்கு சந்தேகம் இருந்தது. அவள் சுவர் கடிகாரத்தை பார்க்க, அது மணி 11:30 என்று காட்டியது.

இப்பொழுது மலரவன் உறங்கிக் கொண்டிருப்பான். ஆனால் லண்டனிலோ, இப்பொழுது மணி ஏழு தான். அதனால், ஸ்டீவுக்கு ஃபோன் செய்யும் முடிவுக்கு வந்தாள் அவள்.

தனது கைபேசியை எடுத்து ஸ்டீவுக்கு வீடியோ கால் மூலமாக அழைப்பு விடுத்தாள். அதை ஏற்றான் ஸ்டீவ்.

"ஹலோ மேடம், குட் ஈவினிங்"

"குட் ஈவினிங் ஸ்வீட். எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. உங்க கிட்ட கேட்கலாமா?"

"அஃப்கோர்ஸ் மேம்...  தாராளமா கேட்கலாம்"

பல்வேறு துறைகளில் தனக்கு எழுந்த பல்வேறு சந்தேகங்களை, அவனிடம் கேட்க துவங்கினாள் பூங்குழலி. அந்த நிறுவனத்தின் அமைப்பு, அவர்களுடைய ப்ரோக்ராம் ஸ்ட்ரக்சர், முந்தைய நிகழ்ச்சி, இப்படி பலதரப்பட்ட கேள்விகள்...

கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் ஆர்வத்துடனும் பதில் அளித்தான் ஸ்டீவ். பூங்குழலியின் கிரகிக்கும் ஆற்றலை கண்டு அவன் வியந்து போனான். அவள் இவ்வளவு ஆழமாக அனைத்தையும் தெரிந்து கொள்ள நினைப்பாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.  நுனிப்புல் மேயும் பழக்கம் இல்லாத பூங்குழலி, ஆழமாய் இறங்கி தூர்வாரிக் கொண்டிருந்தாள். அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும், ஸ்டீவை வியப்பில் ஆழ்த்தியது. மலரவனின் தேர்வு என்றால் சும்மாவா? என்று எண்ணிக்கொண்டான் அவன்.

மறுநாள் காலை

உணவு மேஜைக்கு வந்தான் மலரவன்.  அங்கு மணிமாறனும், மகிழனும் முறுகலான நெய் ரோஸ்ட்டை, காரசாரமான கெட்டி சட்னியுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். மலரவனுக்கும் இரண்டு கொண்டு வந்து வைத்தார் மின்னல்கொடி.

"தேங்க்யூ மா"

அதை சாப்பிட துவங்கிய மலரவன், ஏதோ யோசித்தபடி ஸ்டீவுக்கு ஃபோன் செய்தான். வரவிருக்கும் தங்களுடைய ப்ராஜெக்டுக்காக, ஸ்டீவ் எந்த அளவிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள, அவனுக்கு அந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

"சாப்பிட்டுட்டு அப்புறமா பேசலாம் இல்ல?" என்று வழக்கமான *அம்மா டயலாக்கை* உதிர்த்தார் மின்னல்கொடி.

*இதோ முடித்து விடுகிறேன்* என்பது போல் தலையசைத்துவிட்டு, ஸ்டீவ் அந்த அழைப்பை ஏற்க காத்திருந்தான் மலரவன். ஆனால் அந்த அழைப்பை ஸ்டீவ் ஏற்கவில்லை. குழப்பத்துடன் தன் கைபேசியை மேசையின் மீது வைத்துவிட்டு சாப்பிட துவங்கினான் மலரவன், ஏன் தன் அழைப்பை ஸ்டீவ் ஏற்கவில்லை என்று யோசித்தபடி. அடுத்த நிமிடம், அவனது கைபேசிக்கு அழைப்பு வந்தது. சந்தேகமின்றி அது ஸ்டீவின் அழைப்பு தான்.

அவன் தன் கைபேசியை எடுக்க முயல,

"அது ஸ்டீவோட கால் தானே? அப்படியே ஸ்பீக்கரை ஆன் பண்ணி, சாப்பிட்டுகிட்டே பேசு" என்ற மணிமாறன், அவரே ஸ்பீக்கரை ஆன் செய்தார்.

"குட் மார்னிங் மலழ்..." என்றான் ஸ்டீவ் உறக்கம் கலையாத குரலில்.

"நீ இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கியா?" என்றான் மலரவன், தன் கை கடிகாரத்தை பார்த்தபடி. அவனுக்கு தெரியும், ஸ்டீவ் அதிகாலை எழுந்து விடும் பழக்கம் உடையவன் என்று.

"நான் ரொம்ப லேட்டா தூங்கினேன். குழ்லி மேடம் நேத்து நைட் எனக்கு  ஃபோன் பண்ணி, நிறைய டவுட் கேட்டாங்க"

"பூங்குழலி உனக்கு ஃபோன் பண்ணாளா?"

"ஆமாம். விடியற்காலையில் தான் நான் தூங்கினேன்."

"அப்படியா?" என்று மென்மையாய் சிரித்தான் மலரவன், பூங்குழலி அவளது சந்தேகங்களை தன்னிடம் கேட்டு தெளிவு பெறாமல், ஸ்டீவிடம் கேட்டிருக்கிறாள் என்ற ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல்.

"அவங்களுக்கு இன்னும் கூட கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு. அதை இன்னைக்கு உங்ககிட்ட கேப்பாங்க. நீங்க தூங்கிக்கிட்டு இருப்பீங்கன்னு தான் அவங்க எனக்கு ஃபோன் பண்ணாங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சு இருக்காங்க" என்று அவன் கூற, மென்மையாய் புன்னகைத்தான் மலரவன்.

"அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் தான் ஏதாவது சந்தேகம் இருந்தா உன்கிட்ட கேட்க சொல்லி அவகிட்ட சொல்லி இருந்தேன். அவ உனக்கு ஃபோன் பண்ணதும் நல்லது தான். அவ என்கிட்ட மட்டும் ஃப்ரீயா இல்லாம, எல்லார்கிட்டயும் அப்படி இருந்தா நம்ம டீமுக்கு தானே நல்லது"

"உங்ககிட்ட சொல்லியே தீரணும், குழ்லி மேம் வேற லெவல்... அவங்களோட பொட்டன்ஷியலை பார்த்து நான் வாயடைச்சு போயிட்டேன். போன ப்ரோக்ராம்ல நம்ம ஸ்டேஜ்ல யூஸ் பண்ணியிருந்த லைட்ஸ் பத்தி அவங்க என்கிட்ட கேட்டதோட மட்டும் இல்லாம, இப்போ லேட்டஸ்ட்டா வந்திருக்கிற ஃபேஷன் லைட்சோட பெஸ்ட் கம்பெனியை  நம்ம அடுத்த ஷோவுக்கு சஜஸ்ட் பண்ணாங்க தெரியுமா?"

"நெஜமாவா?" வியந்தான் மலரவன்.

"லைட்டிங்கை பத்தியெல்லாம் கவனம் செலுத்தனும்னு அவசியமே இல்ல.  அப்படி இருந்தும் கூட, அவங்க இந்த அளவுக்கு இன்டெரெஸ்ட் எடுத்து இவ்வளவு டீப்பா யோசிக்கிறதை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு"

"அவளோட எல்லா ஐடியாசையும் எந்த தயக்கமும் இல்லாம நம்ம கிட்ட சொல்ல சொல்லி நான் தான் சொல்லி இருந்தேன். அதனால தான் அவ தனக்கு தோனிய ஐடியாவை சொல்லி இருக்கணும்"

"இருந்தா மட்டும் என்ன? நம்ம எக்ஸ்பீரியன்ஸ்ல நம்ம எவ்வளவு பேரை பார்த்திருக்கோம்? அவங்க கிட்ட என்ன வேலையை கொடுக்கிறோமோ, அதை மட்டும் செஞ்சிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க... இவங்க அப்படி இல்ல. எல்லாத்துக்கும் மேல அவங்க தான் மிஸஸ் மலரவனச்சே... அவங்க யார்கிட்ட வேணாலும் என்ன வேணாலும் சொல்லலாம்" என்று சிரித்தான் ஸ்டீவ். மலரவனும் புன்னகை புரிந்தான்.

அங்கிருந்த மற்ற மூவரும் திகைப்புடன் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். நடப்பதை எல்லாம் பார்க்கும் போது, பூங்குழலியை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முழுமூச்சாய் மலரவன் இறங்கி விட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது.

மகிழனின் நிலையோ சொல்லி மாளாது. பூங்குழலி மலரவனிடம் இந்த அளவுக்கா பேச துவங்கி விட்டாள்? அது வியாபாரம் சம்பந்தப்பட்ட பேச்சுக்களாய் இருந்த போதிலும் என்ன? மகிழனிடம் பேச அவள் எப்போதும் விருப்பம் காட்டியதே இல்லையே...! அவனுக்கு அவள் ஒருமுறை கூட ஃபோன் செய்ததும் இல்லை. அவன் ஃபோன் செய்தால், அதை ஏற்று பேசியதும் இல்லை. அவள் இவ்வளவு சகஜமாய் பேசும் அளவிற்கு மலரவன் அப்படி என்ன தான் செய்தான்?

"நீங்க அவங்களுக்கு கால் பண்ணி பேசுங்க" என்றான் ஸ்டீவ்.

"நான் அவளுக்கு அப்புறமா கால் பண்றேன், இப்போ அவ கொஞ்சம் தூங்கட்டும்" என்றான் மலரவன்.

"நீங்க அவங்களை நேர்ல மீட் பண்ணி அவங்க டவுட்ஸ் கிளியர் பண்ணா பெட்டரா இருக்கும்னு எனக்கு தோணுது. அது உங்க ரெண்டு பேருக்குமே ஈஸியா இருக்கும். அதோட மட்டும் இல்லாம, உங்க வருங்கால மனைவியை சந்திக்க உங்களுக்கு சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு. டோன்ட் மிஸ் இட்..." சிரித்தான் ஸ்டீவ்.

"ஷட் அப் மேன்" புன்னகைத்தான் மலரவன்.

"சீ யூ மலழ்... ஹவ் எ ரொமான்டிக் டே" அழைப்பை துண்டித்தான் ஸ்டீவ்.

தன்னை வேற்று கிரகத்திலிருந்து வந்த ஏலியனைப் போல் பார்த்துக் கொண்டிருந்த அந்த மூவர் மீதும் பார்வையை ஓட்டிய மலரவன், சாதாரணமாய் சாப்பிட துவங்கினான்.

"மலரா, உண்மையிலேயே பூங்குழலி வேலை செய்றதுல இவ்வளவு ஆர்வமா இருக்காளா?" என்றார் மணிமாறன்.

ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.

"ஆனா அவளுடைய ஆர்வத்தை நீ எப்படி தெரிஞ்சுகிட்ட?" என்றார் மின்னல்கொடி.

"என்கிட்ட அவ வேலை கேட்டது உங்களுக்கு தான் தெரியுமே...! நான் அவங்க வீட்டுக்கு போயிருந்தப்போ, மறுபடியும் அவ எனக்கு அதை ஞாபகப்படுத்தினா. அதை வச்சுத் தான், அவளுக்கு என்ன வேணும்னு புரிஞ்சுகிட்டேன்"

"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு"

அவர்கள் பேசியதை கேட்டபடி, மகிழன் தன் தட்டில் இருந்த சட்டினியில் படம் வரைந்து கொண்டிருப்பதை கண்டான் மலரவன். இளங்கலை பட்டத்தையே முடிக்காமல் இருக்கிறான் மகிழன். ஆனால் மலரவனோ, தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருக்கிறான். அவனால் முடியாதது என்று எதுவுமே இல்லை. பணம் சம்பாதிப்பது அவனை பொறுத்தவரை ஒரு விஷயமே இல்லை. அதைப் பற்றி எல்லாம் யோசிக்கும் அளவுக்கு கூட தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தான் மகிழன். அப்படி இருக்கும் போது, ஒரு பெண்ணை தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளவா அவனால் முடியாது? என்று எண்ணினான் மகிழன்.

அப்பொழுது மலரவனின் கைபேசி ஒரு குறுஞ்செய்தியை சுமந்து வந்து குரல் கொடுத்தது. அந்த குறுஞ்செய்தியை கண்ட அவனது இதழ்கள் புன்னகையால் விரிந்தன.

"அது பூங்குழலியோட மெசேஜ் தானே?" என்றார் மணிமாறன்.

ஆம் என்ற தலையசைத்தான் மலரவன்.

"அவ தூங்கி எழுந்துட்டா போல இருக்கு" என்றார் மின்னல் கொடி

ஆம் என்று தலையசைத்தபடி அந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தான்.

*நான் இப்போது உங்களுக்கு ஃபோன் செய்யலாமா?* என்று இருந்தது.

புன்னகைத்தபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான் மலரவன். அந்த அழைப்பு உடனடியாய் ஏற்கப்பட்டது.

"குட்மார்னிங் பூங்குழலி"

"குட் மார்னிங்"

"நீ எப்ப வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம். அதுக்கான பர்மிஷனை, மெசேஜ் போட்டு கேட்கணும்னு அவசியம் இல்ல" என்றான் வேண்டுமென்றே.

"ம்ம்ம்"

"குட்... என்ன விஷயம் சொல்லு"

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"நீ என்கிட்ட எது வேணாலும் பேசலாம். ஸ்டீவ் சொன்னான், ராத்திரி எல்லாம் அவனை தூங்க விடாம கேள்வி கேட்டியாம். உன் சந்தேகத்தை எல்லாம்  இன்னைக்கு ரிலாக்ஸா என்கிட்ட கேட்டிருக்கலாமே? எதுக்காக உன்னோட தூக்கத்தை கெடுத்துகிற? இது ஒன்னும் அவ்வளவு அவசர வேலை இல்லையே, பூங்குழலி?"

"நீங்க தானே சொன்னீங்க, அடுத்து வரப்போற ப்ரோக்ராம்ல நானும் ஒரு அங்கம்னு?"

"ஓ... அப்படின்னா நம்ம கம்பெனியோட அடுத்து வரப்போற ப்ரோக்ராம்க்காக நீ தயாராயிகிட்டு இருக்கியா? அதுவும் நல்ல விஷயம் தான். எனக்கு ஃபோன் பண்ண நீ தயங்க வேண்டியதில்லை சரியா?"

"சரி"

"எனக்கு ஹாஃப் அன் ஹவர் டைம் கொடு. நம்ம இந்த ப்ரோக்ராம் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்"

"சரி"

அழைப்பை துண்டித்த மலரவன், மின்னல்கொடியை ஏறிட்டான்.

"நான் சொன்னேன்ல? பாருங்க, அவ எவ்வளவு இன்ட்ரெஸ்ட்டா இருக்கான்னு..."

"அதனால தான் மலரா நீ ஒரு பெரிய ராஜாங்கத்தையே உருவாக்கி இருக்க. உனக்கு முன்னாடி இருக்கிறவாங்க எப்படிப்பட்ட திறமைசாலின்னு நீ ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சிடுற. அது தான் பிசினஸ்க்கு ரொம்ப தேவையானது" அவன் முதுகை தட்டிக் கொடுத்தார் மணிமாறன்.

"நீ இப்போ குழலி வீட்டுக்கு போறியா?" என்றார் மின்னல்கொடி.

"ஆமாம். ஏன் மா?"

"நாங்களும் அங்க வர போறோம். நம்ம ஜோசியரை போய் பார்த்து கல்யாணத்துக்கு தேதி குறிச்சுக்கிட்டு வருவோம். நாங்க வர்ற வரைக்கும் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு"

"நான் அங்க தான் மா இருப்பேன். பூங்குழலிக்கு எக்ஸ்பிளைன் பண்ண வேண்டியது நிறைய இருக்கு"

"நீ நம்ம சென்னை பிரான்சில் சேர்ந்து வேலை செய்ய போறதில்லையா?" என்றார் மின்னல்கொடி.

"அப்பா தான் இருக்காரே, அப்புறம் நான் எதுக்கு?" என்றான் மலரவன்.

அவனை ஏமாற்றத்துடன் ஏறிட்டான் மகிழன். *மகிழன் தான் இருக்கிறானே* என்று அவன் கூறவில்லை அல்லவா? அது அவனது நம்பிக்கையை அடியோடு துடைத்து போட்டது.

சாப்பிட்டுவிட்டு எழுந்து நின்ற மலரவன்,

"நான் உங்களை பூங்குழலி வீட்டுல பார்க்குறேன்" என்று கிளம்பி சென்றான்.

சிற்றுண்டிகை பாதியில் விட்டு அலுவலகம் சென்றான் மகிழன். மணிமாறனும் மின்னல்கொடியும் ஒருவரை ஒருவர் பொருளோடு பார்த்துக் கொண்டார்கள்.

"சீக்கிரம் கிளம்பு மின்னல், நம்ம தில்லை வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு நான் ஆபீஸ் போக வேண்டிய வேலை இருக்கு"

"நீங்க அவங்க வீட்ல இருந்து நேரா ஆஃபீஸ்க்கு போங்க. நான் நம்ம மல்லு கூட வீட்டுக்கு வந்துக்கிறேன்"

"நீ ஸ்டீவ் என்ன சொன்னான்னு கேக்கலையா? நிறைய சந்தேகம் கேட்டு அவனை ராத்திரி எல்லாம்   தூங்கவிடாம பண்ணிட்டாளாம்" என்று சிரித்தார் மணிமாறன்.

"ஆனா, அவ ஸ்டீவ் கிட்ட ஃப்ரியா இருந்த மாதிரி நம்ம மல்லு கிட்ட இருப்பான்னு எனக்கு தோணல"

"ஆனா நம்ம மல்லு அப்படி இருக்க மாட்டான்னு உன்னால சொல்ல முடியாது இல்ல?"

ஆம் என்ற தலையசைத்தார் மின்னல்கொடி.

"அவன் பூங்குழலியை விரும்புறான்னு  நினைக்கிறேன்" என்று மணிமாறன் கூற,

"நான், அவன் அவளை காதலிக்கிறான்னு நினைக்கிறேன்" என்றார் மின்னல்கொடி.

அவர்கள் முகத்தில் சந்தோஷப் புன்னகை மிளிர்ந்தது.

"சீக்கிரமா போய் ரெடியாகு. இன்னைக்கு கல்யாண தேதியை குறிச்சிடலாம்" என்று மணிமாறன் கூற,

"மகிழன் கல்யாணத்தை முடிவு பண்ணிட்டீங்களா?" என்ற குரல் கேட்டு அவர்கள் திரும்ப,

அங்கு குமரேசன் நின்று கொண்டிருப்பதை பார்த்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள்அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை. *இப்போது என்ன கூறுவது?* என்பது போல் மணிமாறனை பார்த்தார் மின்னல்கொடி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top