15 வித்யாசம்

15 வித்தியாசம்

அழைப்பு மணியின் ஓசை கேட்டு கதவை திறந்த சிவகாமி, அங்கு நின்றிருந்த  மலரவனை பார்த்து புன்னகை புரிந்தார்.

"ஹாய் ஆன்ட்டி... பூங்குழலி எங்க?" என்றான்.

"அவளோட ரூம்ல இருக்கா தம்பி. நீங்க போங்க"

"இல்ல ஆன்ட்டி, நான் அவளோட உட்பி ஹஸ்பண்டா இங்க வரல, அவளோட பாஸா வந்திருக்கேன்" என்றான் பொருள் பொதிந்த புன்னகையோடு.

"பாஸா?" என்று முகத்தை சுருக்கினார் சிவகாமி.

"ஆமாம்... அவ என் கம்பெனியில வேலை செய்யப் போறா"

அவசரமாய் குறிக்கிட்ட சிவகாமி,

"உங்க கம்பெனியிலயா? வேண்டாம் தம்பி. அது தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வரும்" என்றார், மகிழனும் அங்கு தான் வேலை செய்கிறான் என்பதால்.

"நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கவே இல்லையே ஆன்ட்டி...! அவ என்னோட லண்டன் ப்ரான்சுக்காக வேலை செய்யப் போறா"

"லண்டன் ப்ரான்சுக்காகவா? அப்படின்னா  குழலி லண்டனுக்கு போகப் போறாளா?"

"வேலை செய்றதுக்காக லண்டனுக்கு அவ போக போறதில்ல. ஆனா, ப்ரோக்ராமுக்காக போக வேண்டி இருக்கும்"

"லண்டனுக்கு போகாம, அவ லண்டன் ப்ரான்சுக்கு எப்படி வேலை செய்ய முடியும்?"

தன் கையில் இருந்த மடிக்கணினி பையை உயர்த்திக் காட்டி,

"இது மூலமா தான்" என்றான்.

அவனை ஆச்சரியமாய் ஏறிட்டார் சிவகாமி.

"நாங்க ஹாலிலேயே உட்கார்ந்து வேலை செய்கிறோம். நீங்க கொஞ்சம் பூங்குழலியை கூப்பிடுங்க" என்று வரவேற்பறையிலேயே வசதியாய் அமர்ந்து கொண்டான்.

சிவகாமி பூங்குழலியை அழைக்க, வெளியே வந்த அவள், மலரவனை பார்த்து திடுக்கிட்டாள். அவன் மடிக்கணினியை *கொடுத்து அனுப்புகிறேன்* என்று தானே கூறியிருந்தான்? அவளைப் பார்த்த மலரவன் புன்னகை புரிய, மென்மையாய் பதில் புன்னகை அளித்தாள் பூங்குழலி.

அவர்கள் வரவேற்பறையில் இருந்தாலும், அவர்களை எந்த குறுக்கீடும் செய்ய வேண்டாம் என்று எண்ணிக்கொண்டார் சிவகாமி. ஆனால், அப்பொழுது அங்கே வந்த வடிவுக்கரசி,

"சிவகாமி, டிவியை போடு, நல்ல உள்ளம் சீரியல் பாக்கலாம். நேத்து சரியான கட்டத்துல நிறுத்திட்டான். இன்னைக்கு என்ன ஆக போகுதோ தெரியல..." என்றவர், மலரவன் இருப்பதை பார்த்து புன்னகைத்தார்.

"அவங்க வேலை செய்யப் போறாங்களாம் கா" என்றார் சிவகாமி.

"அப்படியா?"

"ஒன்னும் பிரச்சனை இல்ல அத்தை. நாங்க பூங்குழலி ரூமுக்கு போறோம்"

"சரிங்க தம்பி. இன்னைக்கு ரொம்ப முக்கியமான எபிசோடு... அதனால தான்..." என்று இழுத்தார் வடிவுக்கரசி.

"சரி. நீங்க சீரியல் பாருங்க" என்று எழுந்து நின்றான் மலரவன்.

அவன் ஒரு பேயோ என்பது போல், தான் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ளாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி.

"என்ன்னன?" என்றான்.

ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து அவளும் எழுந்து நிற்க, அவளது அறையை நோக்கி நடந்தான் மலரவன். அவனைப் பின்தொடர்ந்தாள் பூங்குழலி. சிவகாமியும் வடிவுக்கரசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். டிவியை ஆன் செய்து, தனக்கு பிடித்த தொடரை பார்க்க துவங்கினார் வடிவுக்கரசி. சிவகாமியோ, மலரவனுக்கு காபி போட சமையலறை சென்றார்.

பூங்குழலியின் அறைக்கு வந்த மலரவன், இங்கும் அங்கும் பார்த்தான். அங்கு,  உட்காருவதற்கு கட்டிலைத் தவிர வேறு ஏதும் இல்லாததால், கட்டிலின் முனையில் பாந்தமாய் அமர்ந்து கொண்டான். போதுமான இடைவெளி விட்டு, பூங்குழலியும் அமர்ந்து கொண்டாள்.

"இது உன்னோட லேப்டாப். இதுல தேவையான எல்லா சாஃப்ட்வேரும் இன்ஸ்டால் பண்ணி இருக்கு. அப்புறமா செக் பண்ணி பாத்துக்கோ"

அவனிடமிருந்து அந்தப் பையைப் பெற்றுக் கொண்டாள் பூங்குழலி.

"அதுல சில சீடிசை வச்சிருக்கேன். அதை போட்டு பாத்துக்கிட்டா உனக்கு நம்ம கம்பெனியை பத்தி புரிஞ்சிடும். பெரும்பாலும் எந்த டவுட்சும் வராது"

சரி என்று தலையசைத்தாள்.

தனது கைபேசியை எடுத்து, தனது லண்டன் ப்ரான்ச் மேனேஜரான ஸ்டீவுக்கு வீடியோ கால் செய்தான் மலரவன். ஸ்டீவ் திரையில் தோன்றினான். தனது கைபேசியின் திரையில் பூங்குழலியும் தெரியும்படி பார்த்துக் கொண்டான் மலரவன்.

"ஹாய் மலழ்..." என்றான் ஸ்டீவ், ர் என்ற எழுத்தை ழ் என்று உச்சரித்து.

"ஹலோ ஸ்டீவ்,  இவங்க பூங்குழலி, என்னோட உட் பி ஒய்ஃப்" என்று எந்த தயக்கமும் இன்றி அவளை அறிமுகம் செய்து வைத்தான்.

"ஹலோ மேம், நைஸ் டு மீட் யு" என்ற ஸ்டீவுக்கு,

"ஹாய்..." என்றாள் பூங்குழலி.

"ஸ்டீவ், அவங்களுக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் உனக்கு கால் பண்ணுவாங்க. அவங்களுக்கு கோவாப்ரேட் பண்ணு" என்று ஆணையிட்டான்.

"அஃப்கோர்ஸ் மலழ், அவங்க தான் மிஸஸ் பாஸ் ஆச்சே..." என்று அவன் சிரிக்க, சங்கடத்தில் நெளிந்தாள் பூங்குழலி.

"நீங்க என்கிட்ட என்ன வேணா கேட்கலாம் மேம். நான் உங்களுக்கு சர்வீஸ் பண்ண காத்துகிட்டு இருக்கேன். பை தி வே, ரொம்ப ஹாண்ட்சமான, லவ்வபில் பர்சனை உங்க லைஃப் பார்ட்னரா அடைஞ்சதுக்கு கங்கிராஜுலேஷன்ஸ்"

சங்கடத்துடன் சிரித்த பூங்குழலியின் முகபாவத்தை கவனித்தபடி இருந்தான் மலரவன்.

"ப்ளீஸ், அவரை கொஞ்சம் பேச வையுங்க மேம். அவரு ரொம்ப கம்மியா பேசுறாரு" தன் வேண்டுதலை அவள் முன்வைத்தான் ஸ்டீவ். அது அவளை மேலும் சங்கடப்படுத்தியது. அவனா குறைவாய் பேசுபவன்? இது நம்பும் படியாகவா இருக்கிறது? எல்லோரும் அப்படித் தான் கூறுகிறார்கள். ஆனால், அவள் தான் அவன் குறைவாய் பேசி பார்த்ததே இல்லை.

"ஓகே ஸ்டீவ், நான் உனக்கு அப்புறம் கால் பண்றேன்" என்றான் மலரவன்.

"ஓகே மலழ். ஹவ் எ நைஸ் டே மேம்"

பூங்குழலி சரி என்ற தலையசைக்க, அழைப்பை துண்டித்தான் மலரவன்.

"என்கிட்ட கேட்க உனக்கு தயக்கமா இருந்தா, நீ தாராளமா ஸ்டீவ் கிட்ட கேட்டுக்கலாம். உண்மைய சொல்லப் போனா, என்கிட்ட சங்கடப்பட உனக்கு ஒன்னும் இல்ல" என்றான்.

அவன் வழங்கிய கோப்பை நோட்டமிட துவங்கினாள் பூங்குழலி. அதில் அவனது நிறுவனத்தின் அத்தனை விவரங்களும் இருந்தன.

"இப்படித் தான் நம்மளோட கம்பெனி ப்ரோக்ராம் இருக்கும். உனக்கு இன்னும் விவரமா தெரிஞ்சுக்கணும்னா நம்ம கம்பெனியோட அஃபிஷியல் சைட்ல பார்த்து தெரிஞ்சுக்கலாம்"

அவள் சரி என்று தலையசைத்துக் கொண்டாள்.

"ஏதாவது பிரச்சனையா? ஏன் என்னவோ மாதிரி இருக்க?"

அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,

"ஏதோ இருக்கிற மாதிரி எனக்கு தோணுதே... நீ கம்ஃபர்டபிலா இல்லையா?" என்றான்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"

"நம்ம கல்யாண பேச்சு தொடங்குறதுக்கு முன்னாடி, நீ என்கிட்ட ரொம்ப கம்ஃபர்ட்டபிளா பேசிக்கிட்டு இருந்ததா எனக்கு தோணுது. உங்க அப்பா இறந்த அன்னைக்கு கூட, நான் எப்போ ஊருக்கு வந்தேன்னு நீ என்கிட்ட விசாரிச்ச. ஆனா இப்போ, ரொம்ப வித்தியாசமா தோணுது"

"இது என்னோட கம்ஃபர்ட் பத்தின விஷயம் இல்ல. எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல"

"நீ எதை பத்தி பேசுற?"

"கல்யாணத்தைப் பத்தி தான். ஒரே நாள்ல கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ற அளவுக்கு போயிடுச்சு. நீங்க காலையில தான் வந்தீங்க. கல்யாணத்துக்கு என்னை சம்மதிக்க வச்சீங்க. அங்கிளும் ஆண்டியும் வந்து கல்யாண தேதி வரைக்கும் பேசி முடிச்சிட்டாங்க. எனக்கு ரொம்ப திகைப்பா இருக்கு"

"நீ தான் இதைவிட அதிர்ச்சியான சிச்சுவேஷனை ஏற்கனவே ஃபேஸ் பண்ணிட்டியே...! நீ எதிர்பாராத விதமா உங்க அப்பாவை இழந்திருக்க. அதைவிட இது ஒன்னும் உனக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்காதுன்னு நினைக்கிறேன்" என்றான் சிரித்தபடி.

அவள் ஆம் என்று ஒப்புக் கொண்டாள்.

"மகிழன் உன்னுடைய கடந்த காலம். அதைக் கடந்து போக விடு. இப்போ அவன் உன்னோட வாழ்க்கையில இல்ல. இருக்கவும் மாட்டான். அவனைப் பத்தி யோசிக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. மேக் யுவர்செல்ப் கம்ஃபர்டபிள்..."

சரி என்று தலையசைத்தாள்.

"வேற ஏதாவது சொல்லனுமா?"

"நீங்க என்கிட்ட டைம் எடுத்துக்கலாம்னு சொன்னீங்க" என்றாள் தயக்கத்துடன்.

"எதுக்கு?"

"எங்க அம்மாவும், உங்க அம்மா அப்பாவும் சீக்கிரமே கல்யாணத்தை முடிவு பண்ணிடுவாங்க போலிருக்கு"

"அதனால என்ன?" என்றான் தன் உதட்டில் புன்முறுவலை தவழ விட்டு.

"நான் உங்ககிட்ட டைம் வேணும்னு கேட்டேன்ல?"

"கல்யாணம் பண்ணிக்கறதுக்காகவா நீ டைம் கேட்ட? என்றான் புன்னகை மாறாமல்.

"இல்ல... நான் அதுக்கு கேக்கல" என்றாள் தொடர்ந்ததை முடிக்காமல் விட்டு.

"இந்த ரிலேஷன்ஷிப்பை அக்சப்ட் பண்ணிக்கிறதுக்காக டைம் கேட்ட.  அது தானே? நான் மறக்கல"

"அப்புறம் எதுக்காக கல்யானத்துக்கு அவசரப் படுறீங்க?"

"அதுக்காக தான் அவசரப்படுகிறேன்"

"நீங்க சொல்றது எனக்கு புரியல"

"நீ டைம் வேணும்னு கேட்ட. அதனால, கல்யாணத்துக்கு அப்புறம் டைம் எடுத்துக்கோ... அவ்வளவு தான்"

தன் முகத்தை சுருக்கினாள் பூங்குழலி.

"நான் கிளம்புறேன்" என்று எழுந்து நின்றான்.

"எனக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே..."

"நான் சொல்லிட்டேன்"

"ஆனா..."

"நீ எவ்வளவு டைம் எடுத்துக்க போறேன்னு எனக்கு தெரியாது. அதனால கல்யாணத்துக்கு முன்னாடி டைமை வேஸ்ட் பண்ண நான் விரும்பல. கல்யாணத்தை பண்ணிக்கிட்டு, உனக்கு எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்கோ. சிம்பிள் லாஜிக்..."

அவன் முகத்தில் ஊன்றி இருந்த தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள் பூங்குழலி.

"பை..." சிரித்தபடி அங்கு இருந்து நடந்தான் மலரவன்.

*திருமணத்திற்கு முன்பு நாளை வீணாக்க விரும்பவில்லை* என்று அவன் கூறியதன் அர்த்தம் என்ன? யோசித்தபடி கட்டிலில் அமர்ந்தாள் பூங்குழலி. அவளது இதயம் வேகமாய் துடிக்க துவங்கியது.

எம் எம் நிறுவனம்

கான்ஃபரன்சை முடித்துக் கொண்டு, மித்திரனுடன் வெளியே வந்தார் மணிமாறன்.

"சார், மலரவனுக்கு நம்ம கம்பெனியில ஜாயின் பண்ற எண்ணம் இல்லையா?" என்றான் மித்திரன்.

"என்ன கேள்வி இது, அவன் எப்பவுமே நம்ம கம்பெனியில் தானே இருக்கான்?"

"நான் இந்தியா ப்ரான்சை பத்தி கேட்கிறேன் சார்"

"சேர மாட்டான்னு தான் நினைக்கிறேன். ஏன்னா, அவன் தன்னோட வருங்கால மனைவியோட சேர்ந்து, லண்டன் ப்ரான்சிக்காக வேலை செய்ய முடிவு பண்ணி இருக்கான்"

"வருங்கால மனைவியா?" என்றான் மித்ரன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல அவனுக்கு பூங்குழியோட கல்யாணம் முடிஞ்சிடும்"

"அப்படியா? தட்ஸ் கிரேட் சார்" என்றான் மித்திரன் சந்தோஷமாய். அவனுக்கு தெரியும், மகிழன், பூங்குழலியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டது. அவனுடைய அந்த முடிவுக்கு மகிழன் மீது, மித்ரன் கூட வருத்தத்தில் தான் இருந்தான்.

அப்பொழுது அவர்கள்,

"பூங்குழலி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" என்ற மகிழனின் குரல் கேட்டு திரும்பினார்கள்.

"ஆமாம். மலரவன் அவளை சம்மதிக்க வச்சிட்டான்"

"ஆனா, எதுக்குப்பா விருப்பம் இல்லாத ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி
சம்மதிக்க வச்சி கல்யாணம் பண்ணிக்கணும்?"

"உன்னை கல்யாணம் பண்ணிக்க அவ தயாரா இல்லாதப்போ, நம்ம அவளை கட்டாயப்படுத்தினோமே, அப்படித் தான்" என்றார் கோபமாய்.

மென்று விழுங்கினான் மகிழன். மேலும் அவன் எதுவும் கேட்பதற்கு முன்,

"எப்ப சார் கல்யாணம்?" என்றான் மித்திரன், அவர்களது கவனத்தை திசை திருப்பி.

"சீக்கிரம் தேதி முடிவாயிடும்"

"லண்டன் ப்ரான்ச்சுக்கு ஒரு பெரிய ஈவன்ட் இருக்கு. அநேகமா அதை முடிச்சிட்டு தான் மலர் கல்யாணம் பண்ணிக்குவான்னு நினைக்கிறேன்" என்றான் மித்ரன்.

"நீ சொல்றது சரி தான். அந்த ஈவன்ட்டுக்கு அவன் பூங்குழலியையும் கூட்டிக்கிட்டு போவான்னு நினைக்கிறேன்"

"நல்ல ஐடியா சார்"

"ஆமாம். அவளுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் இல்ல? பாவம் அந்த பொண்ணு, எவ்வளவு பிரச்சனைகளை தான் அவளும் ஃபேஸ் பண்ணுவா?" மணிமாறன் என்னவோ மகிழனை பார்க்காமல் தான் அதை கூறினார். ஆனால் அவன் தலை குனிந்து கொண்டதை மித்திரன் கவனித்தான்.

"நான் வீட்டுக்கு வந்து மலரை பார்க்கிறேன் சார்"

"தாராளமா வா... உனக்கு தான் அவன் கிட்ட பேச டைமே கிடைக்கலையே"

ஆம் என்று தலையசைத்தான் மித்ரன். அவர்கள் தத்தம் அறைகளுக்கு சென்றார்கள், அங்கு நின்றிருந்த மகிழனை பற்றி கவலைப்படாமல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top