14 திருமண தேதி
14 திருமண தேதி
தில்லை இல்லம்
தன்னை மறந்து எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியின் கரத்தை தொட்டார் வடிவுக்கரசி.
"என்ன யோசிச்சுகிட்டு இருக்க சிவகாமி?"
"நான் வேற என்னக்கா யோசிக்க போறேன்? குழலியோட கல்யாணத்தைப் பத்தி தான்"
"அவளை தான் மலரவன் தம்பி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரே..."
"இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணுமேன்னு தான் கா என்னோட கவலை எல்லாம்"
"ஏன் உனக்கு இந்த கவலை?"
"மகிழன் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால, ஏற்கனவே அவ ரொம்ப உடைஞ்சு போயிருந்தா. இந்த கல்யாணத்துக்கும் ஏதாவது தடங்கள் வந்துடுமோன்னு எனக்கு பயமாயிருக்கு. மலரவன் சாதாரண ஆள் இல்ல. உங்க தம்பி அவரைப் பத்தி பேசாத நாளில்ல. அவ்வளவு பெரிய ஆளு நம்மளை மாதிரி ஒன்னும் இல்லாத வீட்ல பொண்ணு எடுக்கறது தெரிஞ்சா, யாரும் சும்மா இருக்க மாட்டாங்க அக்கா. அவரை தன் மகளுக்கு வளச்சி போட நிறைய பணக்காரங்க காத்துகிட்டு இருக்காங்க. யாராவது ஒன்னு கிடைக்க ஒன்னை பேசி, இந்த கல்யாணத்தை கலைச்சிடுவாங்களோன்னு எனக்கு பயமாயிருக்கு. அப்படி நடந்தா, இந்த ஜென்மத்துக்கு குழலி கல்யாணமே பண்ணிக்க மாட்டா"
"நீ சொல்றதும் சரி தான். குதிரை மாதிரி ஒரு பொண்ணு, மலரவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்ததை நான் கூட கவனிச்சேன். அந்தப் பொண்ணோட அப்பாவும், மாறணும் ஃபிரண்டுங்க போல தெரியுது..." என்றார் ரகசியமாய்.
"பார்த்தீங்களா... நான் சொன்னேன்ல?" பரிதவித்தார் சிவகாமி.
ஆம் என்று தலையசைத்தார் வடிவக்கரசி.
"இந்த கல்யாணத்தை சீக்கிரமே நடத்திட்டா என்னக்கா?"
யோசனையுடன் அவரை ஏறிட்டார் வடிவுக்கரசி.
"வருஷம் திரும்புறதுக்கு முன்னாடி, கல்யாணம் பண்றது நம்ம குடும்பத்துல வழக்கம் இருக்கு. கெட்டது நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கணும்னு அப்படி செய்வாங்க"
"பின்ன என்ன கா? நம்ம இன்னும் கொஞ்சம் சீக்கிரம் அதை செஞ்சுட்டா என்ன?"
"உன்னோட கவலை எனக்கு புரியுது சிவகாமி. ஆனா முறைன்னு ஒன்னு இருக்குல்ல?"
"என்னக்கா பெரிய முறை? எல்லாம் மனுஷங்க ஏற்படுத்தினது தானே? இதுவே, முன்கூட்டியே நம்ம கல்யாண தேதியை முடிவு பண்ணி இருந்தா, கல்யாணத்தை நடத்தி தானே இருப்போம்?"
"நம்ம ஒன்னு செய்யலாம். ஜோசியரை பார்த்து, தில்லை இறந்த நேரத்தை சொல்லி, அதுக்கு என்ன செய்யறதுன்னு கேட்டு, அவர் என்ன செய்ய சொல்றாரோ அப்படி செய்யலாம்"
"அப்படின்னா வாங்கக்கா போயிட்டு வரலாம்"
"இப்போ ராகு காலம், எமகண்டம் ஏதாவது இருக்கான்னு பாத்துட்டு கிளம்பலாம்"
நாட்காட்டியை பார்த்த சிவகாமி,
"இப்போ ஒன்னும் இல்லக்கா இது நல்ல நேரம் தான்" என்றார்.
"சரி வா, அப்படின்னா போயிட்டு வந்துடலாம்"
இருவரும் ஜோசியர் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
......
அதேநேரம் , மணிமாறனும் மின்னல்கொடியும் அவர்களது ஜோசியரை காண புறப்பட்டு சென்றார்கள். அவர்கள் ஜோசியரை சந்தித்து விட்டு, நேராக தில்லை இல்லம் செல்ல தீர்மானித்தார்கள்.
"நம்ம சிவகாமியை பார்த்து விஷயத்தை சொல்லிட்டு அப்புறமா வீட்டுக்கு போகலாம்"
"எனக்கும் அது தான் சரின்னு தோணுது" என்றபடி காரை யூ டர்ன் எடுத்தார் மணிமாறன்.
"நல்ல காலம், ஒரு வருஷம் வரைக்கும் காத்திருந்து தான் ஆகணும்னு ஜோசியர் சொல்லல"
ஆமாம் என்று தலையசைத்தார் மின்னல்கொடி.
"எனக்கு இந்த கல்யாணத்தை தள்ளி போடுறதுல சுத்தமா உடன்பாடே கிடையாது. ஏன்னா, நம்ம எந்த அளவுக்கு காலதாமதம் செய்றோமோ, அந்த அளவுக்கு, அது சிவகாமியோட நிம்மதியை கெடுக்கும்" -மின்னல்கொடி.
"அது மட்டும் இல்ல, குமரேசன் வேற ஓயாம மலரவனை தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கான். ஏதாவது எக்கு தப்பா பூங்குழலி காதுல விழுந்ததுன்னா, அதை அவ எப்படி எடுத்துக்குவாளோ தெரியல"
"நீங்க சொல்றது சரி தான். ஜோசியர் சொன்னதை நம்ம அவங்க கிட்ட சொல்லி பாப்போம். அதுக்கு மேல முடிவை சிவகாமி கிட்ட விட்டுடலாம்."
"எப்படியோ மலரவன் பூங்குழலியை சம்மதிக்க வச்சிட்டான். என் மனசோட பெரிய பாரம் குறைஞ்சிடுச்சு"
"நான் கூட இதை எதிர்பார்க்கவே இல்ல"
"நம்ம கம்பெனியை அவன் எப்படி இவ்வளவு சக்சஸ்ஃபுல்லா நடத்துறான்னு நான் பலமுறை அவனோட திறமையை நினைச்சு மலைச்சிப் போய்யிருக்கேன். யாரோட துணையும் இல்லாம, யாரோட வழிகாட்டுதலும் இல்லாம, அவன் வாழ்க்கையில ஜெயிச்சிருக்கான். இப்போ தான் நான் அதை நேரில் பார்க்கிறேன். பிரச்சனைகளை கையாளறதுக்கு, தனக்குன்னு ஒரு ஸ்டைல் வச்சிருக்கான்" என்றார் மணிமாறன் பெருமையாய்.
"நான் கூட, அவன் நம்ம பிரச்சனையை சொந்த பிரச்சனையா எடுத்துக்கிட்டு, பூங்குழியை கல்யாணம் பண்ணிக்க முன் வருவான்னு எதிர்பார்க்கவே இல்ல"
"கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன்... குமரேசன் பெயரை கேட்டாலே எரிச்சல் அடஞ்சவன்... பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்க தம்மதிச்சதோட மட்டுமில்லாம, அவளையும் சம்மதிக்க வச்சிட்டான் பாரேன்...!"
ஆமாம் என்று ஆமோதித்தார் மின்னல்கொடி.
"நம்ம மேல அவன் இவ்வளவு மரியாதை வச்சிருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல"
"நம்ம மேல அவனுக்கு மரியாதை இருக்கு அப்படிங்கிறதை நான் ஒத்துக்கிறேன். ஆனா அவன் குழலியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதுக்கு அது மட்டுமே காரணம் இல்ல"
"அப்படின்னா?"
"அப்பாவை இழந்த பொண்ணுன்னு குழலி மேல அவனுக்கு ரொம்ப பரிதாப உணர்ச்சி இருக்கு..."
"உண்மை தான். இதைத் தான் மகிழன் செஞ்சிருக்கணும். தில்லை இறந்த உடனே அவன் பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்க அவசரம் காட்டுவான்னு நான் நினைச்சேன்"
"இதுக்கு பிறகு நம்ம அவனைப் பத்தி பேசக்கூடாது. குழலியை மலரவன் கல்யாணம் பண்ணிக்க போறான். அப்படின்னா குழலி, மகிழனுக்கு அண்ணி. பழசை பத்தி பேச இனி எதுவும் இல்ல"
ஆம் என்று தலையசைத்தார் மணிமாறன் அப்பொழுது அவரது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அது மகிழனிடமிருந்து வந்தது.
"சொல்லு" என்றார்.
"எங்க இருக்கீங்க பா?"
"நான் ஆஃபீஸுக்கு வந்ததுக்கு அப்புறம் சொல்றேன்"
"இப்ப சொன்னா என்னப்பா?"
"ஏன்னா, இது உனக்கு தேவையில்லாத விஷயம்"
"ஏம்பா பேச்சில இவ்வளவு கசப்பை காட்டுறீங்க?"
"காரணம் உனக்கே நல்லா தெரியும். நம்ம மத்தவங்களுக்கு என்ன கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும்"
"எதுக்குப்பா இவ்வளவு எமோஷனல் ஆக்குறீங்க? மலர் குழலியை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கான். ஆனா அவ தானே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா?"
"நீ அதை பத்தி ஒன்னும் கவலைப்பட தேவையில்ல. எல்லாத்தையும் மலரவன் பாத்துக்குவான்"
"அவன் தேவையில்லாம நேரத்தை வீணாக்குறான். அவனுக்கு அப்பாவா இருந்துகிட்டு நீங்க தானே அவனுக்கு புரிய வைக்கணும்?"
"நான் ஏற்கனவே சொன்னேன் இது உனக்கு தேவையில்லாத விஷயம். குழலியோட முடிவை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டியதில்ல"
"சரி. நீங்க எப்ப வருவீங்க? நமக்கு கான்ஃபரன்ஸ் இருக்கு. அதுக்காக தான் கால் பண்ணேன்"
"நான் மித்திரனுக்கு ஃபோன் பண்ணி கான்ஃபரன்ஸ் தள்ளி வைக்க சொல்றேன்"
"ஆனா எதுக்குப்பா?"
"நானும் மின்னலும் தில்லை வீட்டுக்கு போறோம்"
"அவங்க வீட்டுக்கு எதுக்கு போறீங்க?"
"அவங்களைப் பத்தி உன் கிட்ட பேச நான் விரும்பல" என்று அழைப்பை துண்டித்தார் மணிமாறன், மகிழனை வெறுப்பில் ஆழ்த்தி.
"எதுக்காக அவங்க தில்லை அங்கிள் வீட்டுக்கு போறாங்க? மீட்டிங்கை தள்ளி வச்சிட்டு போற அளவுக்கு அப்படி என்ன அவசரம்? ஏதாவது முக்கியமான விஷயமா இருக்குமோ?" என்று தனக்குள் முணுமுணுத்தான் மகிழன்.
தில்லை இல்லம்
மலரவனின் நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை சேகரிப்பதில் அலுப்பே தட்டவில்லைபூங்குழலிக்கு. மலரவன் அனுப்பும் சீடியில் இன்னும் பல விவரங்கள் இருக்கும் என்று அவள் ஆவலாய் எதிர்பார்த்து இருந்தாள்.
ஜோசியரிடம் சென்று விட்டு வந்த சிவகாமியும், வடிவுக்கரசியும் அவள் மடிக்கணினியுடன் அமர்ந்திருப்பதை பார்த்து புன்னகைத்தார்கள். சமையல் அறைக்குச் சென்று அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பூங்குழலி, தங்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். தனது வருங்கால மாமனாரும் மாமியாரும் வருவதை பார்த்து அவள் திகைத்து நின்றாள். எப்படி நடந்து கொள்வது என்று அவளுக்கு புரியவில்லை. அவள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதை மலரவன் அவர்களிடம் கூறி இருப்பான். அதைப் பற்றி பேச தான் இவர்கள் வருகிறார்களோ? அதுவும் இவ்வளவு சீக்கிரம்?
"அம்மா, மாறன் அங்கிளும் மின்னல் ஆன்ட்டியும் வராங்க" என்றாள்.
அவர்களை புன்னகையுடன் வரவேற்ற சிவகாமி,
"நானே உங்களை பாக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்" என்றார்.
"நீ நெனச்ச, நாங்க வந்துட்டோம்" என்றார் மின்னல்கொடி.
"நாங்க கல்யாணத்தைப் பத்தி ஜோசியர் கிட்ட பேசிட்டு வறோம்" என்றார் மணிமாறன்.
நம்ப முடியாமல் அவர்களை ஏறிட்டாள் பூங்குழலி. ஜோசியரை பார்த்து விட்டு வருவதா? கிட்டத்தட்ட அவளது மனநிலையில் தான் சிவகாமியும் வடிவுக்கரசியும்கூட இருந்தார்கள். அவர்களும் இதை எதிர்பார்க்கவில்லை.
"குழலி கல்யாணத்துக்கு சமாதிச்சிட்டான்னு மலர் வந்து சொன்னான். அதனால் தான் கல்யாணத்தை எப்போ வச்சுக்கிட்டா பரவாயில்லைன்னு ஜோசியர் கிட்ட கேட்க போனோம்"
"அவர் என்ன சொன்னாரு?" என்றார் வடிவுக்கரசி தயக்கத்துடன்.
"ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை வச்சுக்கிட்டா நல்லதுன்னு சொன்னாரு. அப்போ, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்ட சந்தோஷத்துல அந்த ஆன்மா சாந்தியடையுமாம்"
நிம்மதி பெருமூச்சு விட்டார் சிவகாமி.
"நாங்க கூட ஜோசியரை போய் பார்த்துட்டு தான் வறோம்" என்று சிவகாமி கூறியது மேலும் பூங்குழலியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கோவிலுக்கு போகிறேன் என்றல்லவா சொல்லிவிட்டு சென்றார்கள்?
"அப்படியா? என்ன சொன்னாரு?"
"நாங்க அவர் இறந்த நேரத்தை வச்சி பார்க்க சொன்னோம். அவரோட ஆத்மா நிம்மதி இல்லாம இருக்கிறதா ஜோசியர் சொன்னாரு. குழலிக்கு கல்யாணம் ஆனா தான், அவரோட ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்குமாம்"
"பின்ன, ஒரு அப்பாவுக்கு தன் மகளோட சந்தோஷத்தை விட வேற எது நிம்மதியை தந்திடப் போகுது?" என்றார் மணிமாறன்.
"நாப்பத்தி எட்டு நாளைக்கு வீட்ல சாந்தி தீபம் ஏத்தி வைக்க சொன்னாரு. அது அணையாம எரிஞ்சுகிட்டே இருக்கணுமாம். அதுக்குப் பிறகு, கோவில்ல போய், நைட் தங்கிட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னாரு. வர்ற வழியிலேயே நானும் அக்காவும் விளக்கு வாங்கிட்டு வந்தோம்"
"அப்படின்னா கிட்டத்தட்ட மூணாவது மாசம் கணக்கு வந்துடுது... அப்படியே செஞ்சிடலாம்"என்றார் மின்னல்கொடி.
பூங்குழலிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று அவள் மலரவனிடம் கேட்டிருந்தாள். ஆனால் அவளது திருமண வேலைகளோ, ராக்கெட் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
"அப்படின்னா, நாப்பத்தி எட்டு நாள் கழிச்சு வர்ற முகூர்த்தத்துல கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றார் மணிமாறன்.
"நம்ம ஜோசியர் கிட்ட ரெண்டு மூணு தேதி குறிச்சி வாங்கிக்கலாம். மலரவனுக்கு எந்த தேதி வசதியா இருக்குமோ அந்த தேதியில் கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்றார் மின்னல் கொடி.
"அதை நம்ம ஃபோன்லயே கூட செஞ்சுக்கலாம்"என்றார் மணிமாறன்.
தன் கைபேசியை வெளியே எடுத்து, ஜோசியரிடம் விவரத்தை கூறி, சில தேதிகளை குறித்து வாங்கிக் கொண்டார் மணிமாறன். பூங்குழலிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. இந்த அதிரடி வேகத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.
"நாங்க கிளம்பறோம் சிவகாமி. என் மருமகளை நல்லா பாத்துக்கோங்க" என்று சிரித்தார் மின்னல்கொடி.
அவர்களிடம் ஆசிப் பெறுமாறு பூங்குழலிக்கு சைகை காட்டினார் சிவகாமி. அவர்களது காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றாள் பூங்குழலி.
"உங்க அப்பா இருக்கும் போது நீ எவ்வளவு சந்தோஷமா இருந்தியோ, அதே சந்தோஷத்தை உன் முகத்தில் பார்க்க நாங்க ஆசைப்படுறோம் மா" அவள் தலையை அன்பாய் தொட்டார் மணிமாறன்.
கஷ்டப்பட்டு புன்னகைத்தாள் பூங்குழலி.
மணிமாறனும் மின்னல்கொடியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். நம்ப முடியாமல் நின்றிருந்தாள் பூங்குழலி. அவளது திருமண தேதி விரைவிலேயே முடிவு செய்யப்பட இருக்கிறது. இன்னும் ஓரிரு நாளிலோ, அல்லது இன்றே கூட...
"நம்ம குழலி கல்யாணம் முடிவாய்டுச்சுன்னு" என்னால நம்ப முடியல என்றார் வடிவுக்கரசி.
"என்னால கூட நம்ப முடியல அக்கா. ஜோசியர் சொன்னதை அவங்க கிட்ட சொன்னா, அவங்க எப்படி எடுத்துக்குவாங்களோன்னு நான் பயந்துகிட்டு இருந்தேன்"
"அவங்களே போய் ஜோசியரை பார்த்தது கூட ஒரு விதத்தில் நல்லதா போச்சு. அவங்களுக்கும் நம்ம தில்லை மேல ரொம்ப அக்கறை இருக்கு" என்றார் வடிவுக்கரசி.
அமைதியாய் தன் அறைக்கு சென்றாள் பூங்குழலி. ஆனால் அவளது மனம் அமைதியாக இல்லை. இதைப் பற்றி மலரவனிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள். அவளுக்கு மடிக்கணினியை கொடுத்து அனுப்புகிறேன் என்று கூறினான் அல்லவா? அதை கொடுத்து அனுப்பிய பின், நிச்சயம் அவளுக்கு அவன் ஃபோன் செய்வான். அப்பொழுது இதைப் பற்றி பேசுவது என்று தீர்மானித்தாள்.
அன்பு இல்லம்
மலரவனின் அறைக்கு வந்த அவனது பெற்றோர் கதவை தட்டினார்கள். கதவை திறந்த மலரவன்,
"ஜோசியர் என்ன சொன்னாரு?" என்றான்.
"தில்லையோட முதல் திவசத்துக்கு முன்னாடி கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னாரு"
"ஒரு வருஷத்துக்கு முன்னாடினா எப்போ?"
"நீ எப்போ வச்சுக்கலாம்னு நினைக்கிற?"
"அடுத்த மாசம் வச்சுக்கலாமா?"
"என்னது அடுத்த மாசமா?" என்றார்கள் இருவரும்.
"உங்களுக்கே தெரியுமில்ல, லண்டன்ல ஒரு பெரிய ஷோவுக்கான ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு. அந்த ஷோவுக்கு நான் போகலாம்னு இருக்கேன்"
"சரி, நீ போ"
"குழலியையும் என்கூட கூட்டிக்கிட்டு போக நினைக்கிறேன். இப்போ அவளும் எங்க மேனேஜ்மென்ட் டீம்ல இருக்காளே"
"என்னது? குழலி உங்க மேனேஜ்மென்ட் டீம்ல இருக்காளா? இது எப்ப நடந்தது?"
"அவ என்கிட்ட வேலை வேணும்னு கேட்டா இல்ல? அதனால அவளை லண்டன் ப்ரான்சில் வேலைக்கு சேர்க்கலாம்னு இருக்கேன்"
அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். குழலி மலரவனுடன் லண்டன் ப்ரான்சில் வேலை செய்யப் போகிறாளா?
"சரி அதனால என்ன?"
"அப்பா அவளுக்கு ஒரு சேஞ்ச் வேணும். அவங்க அம்மா அத்தையோட வீட்ல உக்காந்துகிட்டு இருக்கிற வரைக்கும் அது அவளுக்கு கிடைக்காது"
"மலர் சொல்றது எனக்கு சரின்னு படுது" என்ற மின்னல்கொடி, சிவகாமி கூறிய விவரங்களை மலரவனிடம் கூறினார்.
"அப்படின்னா, நம்ம ஜோசியர் கிட்ட லண்டன் ஷோவுக்கு தகுந்த மாதிரி தேதியை ஃபிக்ஸ் பண்ண சொல்லலாம்" என்றார் மாறன்.
"குழலி எப்போ நம்ம கம்பெனில ஜாயின் பண்ண போறா?"
"இன்னைல இருந்து"
"அவளுக்கு அது தெரியுமா?"
சில நொடி அமைதியானான் மலரவன். என்ன கூறுவது? குழலி, அவளுக்கு வேலை கொடுத்தது பற்றி எதுவும் கூறவில்லை போலிருக்கிறது. அவள் தன்னிடம் பணியாற்றப் போகிறாள் என்று சொன்னதற்கே அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஏற்கனவே அவள் வேலை செய்ய துவங்கிவிட்டாள் என்று கூறினால், என்ன நினைப்பார்களோ.
"அவளுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஸ்டீவ் கிட்ட சொல்லப் போறேன்"
"சரி. செய்... நான் ஆபீஸ் கிளம்புறேன் எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு" அங்கிருந்து அகன்றார் மாறன்.
நிம்மதி பெருமூச்சு விட்டான் மலரவன். அவன் எடுக்கும் முடிவுகளை அவ்வப்போது அவர்களிடம் கூறி விடுவது சிறந்தது என்று எண்ணினான் மலரவன். அவனுக்கு பொய் உரைப்பது கடினமாய் இருந்தது.
மாலை
மலரவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள் பூங்குழலி. அவன் அனுப்புகிறேன் என்று கூறிய மடிக்கணினிக்காக அவள் காத்திருந்தாள். அதை அவன் யாரிடம் கொடுத்து அனுப்பப் போகிறானோ, என்று எண்ணினாள். ஆனால் அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அதை அவளிடம் கொடுக்க மலரவனே நேரில் வந்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top