13 செயல் வல்லமை

13 செயல் வல்லமை

தில்லையின் வீட்டிலிருந்து கிளம்பிய மலரவன் மணிமாறனுக்கு ஃபோன் செய்தான். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.

"எங்க பா இருக்கீங்க?"

"ஆஃபீஸ்ல இருக்கேன்"

"கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?"

"இப்பவா?"

"ஆமாம்,  கொஞ்ச நேரம் வந்துட்டு போங்களேன்"

"ஏதாவது முக்கியமான விஷயமா?"

"பூங்குழலி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா"

"அப்படியா?"

"ஆமாம்"

"இதை நீ எப்படி டா சாதிச்ச?"

"நீங்க வீட்டுக்கு வாங்க. அதை பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"நான் இதோ கிளம்பிட்டேன்" அழைப்பை துண்டித்தார்.

அவர் அவசரமாய் வெளியே செல்வதை பார்த்த மகிழன்,

"எங்கப்பா இவ்வளவு அவசரமா ஓடுறீங்க?"

"வீட்டுக்கு"

"எதுக்குப்பா?"

"மலரவன் வர சொன்னான்"

"ஏதாவது பிரச்சனையா?"

"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" அவனிடம் எதுவும் கூறாமல் அலுவலகத்தை விட்டு கிளம்பினார் மணிமாறன்.

அன்பு இல்லம்

மலரவன் வந்து சேர்வதற்கு முன்பாகவே, மணிமாறன் வந்து சேர்ந்து விட்டார். மின்னல்கொடியை தேடியபடி வீட்டிற்குள் நுழைந்தார். சமையலறையில் இருந்து தண்டபாணி வெளியே வருவதை கண்ட அவர்,

"மின்னல் எங்க?" என்றார்.

"அம்மா அவங்க ரூம்ல இருக்காங்க ஐயா" என்றார் தண்டபாணி.

"சரி"

நாலு தாவலில் மாடிப்படிகளை கடந்து தங்கள் அறையை அடைந்தார் மணிமாறன். அவர் அப்படி ஓடி வருவதை பார்த்த மின்னல்கொடி  குழப்பத்தில் முகம் சுருக்கினார். இது, அவர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய நேரம் ஆயிற்றே...? அவர் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

"நீங்க ஆஃபீஸ்க்கு போகலையா?"

"ஆஃபீஸ்ல இருந்து தான் வரேன்"

"ஆனா ஏன்?"

"மலரவன் வர சொன்னான்"

"மலரவனா?"

"ஆமாம்"

"எதுக்கு?"

"அதை நான் உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியல"

"நீங்க என்ன சொல்றிங்க?"

"கொஞ்ச நேரம் பொறுத்துக்கோயேன். மலரவன் வந்துகிட்டு இருக்கான். அவன் வந்து உன்கிட்ட சொல்லுவான்"

"என்ன சொல்ல போறான்?"

அவர் பதில் கூறும் முன்,

"அம்மா கேக்குறாங்கல, சொல்லுங்கப்பா" என்றான் மலரவன், அவர்கள் அறைக்குள் நுழைந்தவாறு.

"நான் சொல்லட்டுமா?"

சொல்லுங்கள் என்பது போல் தலையசைத்தான்.

"பூங்குழலி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளாம்."  என்றார் மணிமாறன் சந்தோஷமாய்.

எந்த சலனமும் இல்லாமல் இருந்த மலரவனின் முகத்தை, ஆச்சரியத்துடன் நோக்கிய மின்னல்கொடி,

"நெஜமாவா மலரவா?" என்றார் ஆர்வத்துடன்.

ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.

"இப்ப சொல்லு, நீ எப்படி அவளை சம்மதிக்க வச்ச?" என்றார் மணிமாறன்.

"பெரிய பிரச்சனை எதுவும் இல்லப்பா. அவ தினம் தினம் மகிழனை இங்க ஃபேஸ் பண்ணனுமேன்னு தான் தயங்கியிருக்கா. அது நான் எதிர்பார்த்தது தான்"

"உண்மை தான்..."

"அவளே அதை உன்கிட்ட சொன்னாளா?" என்றார் மின்னல்கொடி.

"இல்ல, அவ சொல்லல. நானாவே தெரிஞ்சுகிட்டேன்"

"நீ என்ன சொல்லி அவளை சம்மதிக்க வச்ச?"

"எல்லா பிரச்சினையையும் நீங்க பார்த்துக்குவீங்கன்னு சொன்னேன்" என்றான் அவர்களது முகங்களை கவனித்தபடி.

"ஆனா, அவ எதுக்காக மகிழனை பத்தி கவலை படணும்? அவன் தான் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்காக வருத்தப்படவே இல்லையே" என்றார் மின்னல்கொடி.

"இந்த காரணத்துக்காகத் தான் அவ உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னாளா?" என்றார் மணிமாறன்.

"ஆமாம் பா. அவ ரொம்ப சங்கடமா ஃபீல் பண்றா"

பெருமூச்சு விட்ட மின்னல்கொடி,

"வேற என்ன சொன்னா?" என்றார்.

"சிவகாமி ஆன்ட்டியும், அவங்க அத்தையும் சேர்ந்து அவளை சம்மதிக்க வச்சாங்க"

அவனை சந்தேகத்துடன் ஏறிட்ட மின்னல்கொடி

"நீ எதுவுமே செய்யலையா?" என்றார்

"என் பங்குக்கு நானும் ட்ரை பண்ணேன்"

"கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் மின்னல்?" என்றார் மணிமாறன்.

"அப்பா, தில்லை அங்கிள் இறந்ததைப் பத்தி ஐயர் கிட்ட பேசி முடிவு பண்ணுங்க"

"ஆமா இல்ல...?"

"மூணு மாசமாவது நம்ம காத்திருந்து தான் ஆகணும்" என்றார் மின்னல்கொடி.

"ஒருவேளை, அதுக்குள்ள குழலி மனசை மாத்திக்கிட்டா என்ன செய்றது?" என்றார் மணிமாறன்.

"இல்ல, அப்படி செய்ய மாட்டா" என்றார் மின்னல்கொடி.

"எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்ற?"

"அவ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டதால, அவளோட மனசை மாத்திக்க, சிவகாமியும் வடிவுக்கரசியும் நிச்சயமா விட மாட்டாங்க"

"அவ இஷ்டத்துக்கு மனசை மாத்திக்க முடியாது" என்று முணுமுணுத்தான் மலரவன்.

"நீ இப்போ ஏதாவது சொன்னியா?" என்றார் மின்னல்கொடி.

அமைதியாய் நின்றான் மலரவன்

"நம்ம ஐயர் கிட்ட நான் இதைப் பத்தி பேசுறேன்"

"அப்படின்னா கிளம்பு, போய் பேசிட்டு வந்துடலாம்" என்றார் மணிமாறன்.

"உங்களுக்கு வேலை இருந்தா, நீங்க ஆஃபீசுக்கு  போங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்."

"இல்ல, நம்ம ஐயரை பாத்துட்டு, அதுக்கு பிறகு நான் ஆஃபீஸ் போயிக்கிறேன்."

அவர்கள் கிளம்பிச் செல்ல, தன் அறைக்கு வந்தான் மலரவன். தன் நிறுவனத்தின் லண்டன் கிளை மேலாளருக்கு ஃபோன் செய்தான்.

"ஹலோ, மலர், குட் மார்னிங்"

"குட் மார்னிங் ஸ்டீவ்"

"உங்க இமெயில் கிடைச்சது. நீங்க கேட்ட டீடெயில்ஸை நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன்"

"தட்ஸ் கிரேட் "

"எனிதிங் எல்ஸ்?"

"ஏதாவது தேவைனா ஃபோன் பண்றேன்"

"ஷ்யூர்... ஹேவ் எ நைஸ் டே "

"சீயூ"

அழைப்பை துண்டித்து விட்டு பூங்குழலிக்கு ஃபோன் செய்தான் மலரவன். மூன்றாவது மணியில் அழைப்பை ஏற்றாள் பூங்குழலி.

"ஹலோ யார் பேசுறீங்க?"

"மலரவன்"

மறுபுறத்தில் அமைதி நிலவியது.

"லைன்ல இருக்கியா, பூங்குழலி?"

"ஆங்...  சொல்லுங்க"

"இது தான் என்னோட நம்பர். சேவ் பண்ணிக்கோ. எனக்கு உன்னோட இமெயில் ஐடியை அனுப்பி வை"

"என்னோட இமெயில் ஐடி எதுக்கு?"

"வேலை வேணுமுன்னு கேட்டல்ல?"

"ஆமாம், அதுக்கு?"

"வேலை கொடுக்கத் தான்"

"என்ன வேலை?"

"அதைப் பத்தி அப்புறம் சொல்றேன். முதல்ல உன்னோட இமெயில் ஐடியை சொல்லு"

அவள் கூற, அவன் குறித்துக் கொண்டான்.

"ஓகே"

"இப்போ வேலையை பத்தி சொல்லுங்க"

"நீ என்னோட லண்டன் ப்ரான்சுக்காக வேலை செய்யப் போற. என்னோட லண்டன் ப்ரான்ச் மேனேஜர் ஸ்டீவோட ஃபோன் நம்பரையும், இமெயில் ஐடியையும் நான் உனக்கு அனுப்பி வைக்கிறேன். நீ செய்ற வேலையை ஸ்டீவுக்கோ இல்ல எனக்கோ அனுப்பி வைக்கலாம். நீ செய்ற வேலையில உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை கேளு"

"நான் என்ன வேலை செய்யப் போறேன்?"

"நீ எங்க மேனேஜ்மென்ட் டீம்ல இருக்க போற. எங்க டீம் வேலை செய்ற விதத்தை முதல்ல நல்லா கவனிச்சுக்கோ. அதுக்கப்புறம் நீயும் எங்க டீம்ல ஜாயின் பண்ணிக்கலாம்.
உன்னோட ஐடியாஸ் எதையும் நீ தைரியமா சொல்லலாம். எந்த டிபார்ட்மெண்ட்டா இருந்தாலும் பரவாயில்ல. உன்னோட சேலரி, ஆயிரம் பவுண்ட்ஸ். உன்னோட வேலையை பொறுத்து உனக்கு இன்கிரிமெண்ட்  கிடைக்கும். நான் உனக்கு சில ஃபைல்ஸையும் லேப்டாப்பும் கொடுத்து அனுப்புறேன். கம்ப்யூட்டரை யூஸ் பண்றதை பெரும்பாலும் அவாய்ட் பண்ணு. ரிட்டன் காப்பியா இருக்கிறது பெஸ்ட். எங்க டீம் அதை டேட்டா பேஸ் ஃபைல்ஸா கன்வெர்ட் பண்ணிக்குவாங்க."

வாயடைத்துப் போனாள் பூங்குழலி. மலரவன் அவளது வீட்டில் இருந்து கிளம்பிச் சென்று ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு விஷயத்தை அவன் திட்டமிட்டு விட்டானா? ஆச்சரியமடைந்தாள்.

"நீ என்னை ஏதாவது கேட்கணுமா?"

இதற்கு மேல் அவனிடம் கேட்க என்ன இருக்கிறது என்று எண்ணினாள் பூங்குழலி.

"உங்க கம்பெனியை பத்தி நான் தெரிஞ்சுக்க விரும்புறேன்"

"லேப்டாப் கூட சேத்து, சில சீடிசையும் நான் அனுப்புறேன். அதை பார்க்கும் போது, நம்ம கம்பெனியை பத்தி உன்னால முழுசா தெரிஞ்சுக்க முடியும்"

"என்கிட்ட ஒரு லேப்டாப் இருக்கு. நீங்க எனக்காக ஒன்னை அனுப்ப வேண்டாம்"

"இது நம்ம கம்பெனியோட ப்ரொஸிஜர். கம்பெனி வேலைக்காக மட்டும் அந்த லேப்டாப்பை யூஸ் பண்ணிக்கோ. உன்னுடைய லேப்டாப்பை பர்சனல் யூஸ்க்கு வச்சுக்கோ"

"இது என்ன மாதிரியான வேலை?"

"வொர்க் ஃப்ரம் ஹோம்... இப்போ நான் செஞ்சுகிட்டு இருக்கிற மாதிரி"

"நீங்க இப்படித் தான் வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்களா?"

"ஆமாம். இந்தியாவுல உட்கார்ந்துகிட்டு லண்டன்ல இருக்குற கம்பெனியை நான் வேற எப்படி நடத்த முடியும்? நம்க்கு சீக்கிரமே ஒரு ஃபேஷன் ஷோ இருக்கு. அதுக்கு தேவையான அத்தனை அரேஞ்மெண்ட்சையும் நான் எங்கிருந்து தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்"

"அந்த ஷோவுக்கு நீங்க லண்டன் போகப் போறது இல்லையா?"

"அதைப்பத்தி நான் இன்னும் யோசிக்கல. ஏன்? நீயும் என் கூட வரப் போறியா?"

"இல்ல. நான் அந்த அர்த்தத்துல சொல்லல..."

"நீ அந்த அர்த்தத்திலயும் சொல்லலாம். நீயும் இப்போ எங்க கம்பெனியோட ஒரு அங்கம்"

"ஆனா, நான் இன்னும் உங்க கம்பெனியில சேரவே இல்லையே?"

"யார் சொன்னது? என்னோட மேனேஜர், இந்த நேரம் உனக்கு ஜாயினிங் ஆர்டரை அனுப்பி இருப்பார். செக் பண்ணி பாரு"

"என்ன்னனது? எக்ஸ்க்யூஸ் மீ..."

அழைப்பை துண்டித்து விட்டு, தனக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். ஆம், அவளுக்கு எம்எம் டிசைன்ஸ்சிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நம்ப முடியாமல் அவசரத்துடன் அதை படித்தாள். அது அவள் வேலையில் சேர்ந்து விட்டதற்கான அதிகாரப்பூர்வ பணி நியமன ஆணை. அவள் எதிர்பார்த்ததை விடவே மலரவன் மிகவும் வேகமாய் இருக்கிறான். அவனது செயல் வல்லமை அவளுக்கு ஆச்சரியத்தையும் ஒருவித படபடப்பையும் தந்தது.

மறுபடியும் அவளுக்கு மலரவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

"உனக்கு ஜாயினிங் ஆர்டர் வந்துடுச்சா?" 

"ஆமாம்"

"அந்த ஐடிக்கு ஒரு ரிப்ளை அனுப்பு. இது ஒரு ஃபார்மாலிட்டிக்காக தான்"

"சரி"

"ஆல் தி பெஸ்ட்"

"தேங்க்யூ சோ மச்"

"மை பிளஷர்" புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான் மலரவன்.

மெல்ல கட்டிலின் மீது அமர்ந்தாள் பூங்குழலி. இப்பொழுது அவள், எம்எம் டிசைன்ஸ், லண்டன் ப்ரான்ச்சின் ஊழியர். அது அவளுக்கு பதற்றத்தை தந்தது. அந்த நிறுவனத்தைப் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவளது மாத ஊதியமோ இந்திய மதிப்பில் ஒரு லட்சத்திற்கும் மேல். அவளுக்கு தெரியும், அது அவளது திறமைக்கு கிடைத்த வேலையல்ல. அந்த நிறுவனத்தின் உரிமையாளனான மலரவனுடன் அவளுக்கு ஏற்பட இருக்கும் உறவின் மூலம் கிடைத்தது. தனக்கு கிடைத்த வேலைக்கு தன்னை தகுதியானவளாக மாற்றிக் கொள்ள விழைந்தாள் பூங்குழலி.

அவளது மடிக்கணினியை எடுத்து, எம்எம் நிறுவனத்தின் லண்டன் கிளையை பற்றி ஆராய துவங்கினாள். அந்த நிறுவனம் மான்செஸ்டர் நகரத்தில் நடத்திய, முந்தைய, ஃபேஷன் ஷோவை பார்த்து மலைத்துப் போனாள். அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக கவனமாய் பார்த்துக் கொண்டு வந்தாள். ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை பார்த்த போது, மவுசை இயக்கிக் கொண்டிருந்த அவளது கரம் அப்படியே நின்றது. அந்த புகைப்படத்தில் இருந்தது மலரவன். அந்த நிகழ்ச்சிக்கான அறிமுக உரையை அவன் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த நிகழ்ச்சியில் அவன் என்ன பேசி இருப்பான்? அவன் அனுப்பும் சீடியில் அவனது பேச்சு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று எண்ணிய அவள், அவன் அவற்றை அனுப்பட்டும் என்று காத்திருந்தாள். அவனது நிறுவனத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அவனைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முழு முயற்சி மேற்கொண்டாள் அவள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top