11 மலரவனின் நிலைப்பாடு

11 மலரவனின் நிலைப்பாடு 

அன்பு இல்லம்

தங்களை மதிக்காமல், மலரவன் அவனது அறைக்கு சென்று விட்ட பின், அன்பு இல்லத்திலிருந்து சென்று விடலாம் என்று முடிவெடுத்தார்கள் குமரேசன் குடும்பத்தினர். அதே நேரம், மணிமாறனும் மின்னல்கொடியும் உள்ளே நுழைய, அவர்களை கண்ட குமரேசன் குடும்பத்தினர், அங்கிருந்து செல்லும் முடிவை மாற்றிக் கொண்டார்கள். விதியே என்று அவர்களைப் பார்த்து சிரித்தார் மின்னல்கொடி. ஆனால் மணிமாறனோ, எரிச்சல் அடைந்தார். மகிழனால் அவர்கள் ஏற்கனவே பிரச்சனையில் இருக்கிறார்கள். பூங்குழலியும் மலரவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாள்.  போதா குறைக்கு, இவர்கள் வேறு அவர்களை எரிச்சலூட்ட வந்து விட்டார்கள்.

"எப்ப வந்த?" என்றார் மணிமாறன் விருப்பம் இல்லாமல்.

"அரை மணி நேரம் ஆச்சு" என்றார் குமரேசன்.

"ஓ... எங்களுக்காக தான் காத்திருக்கீங்களா?"

"ஆமாம்... ஆனா, உன் பிள்ளை எங்க காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்திட்டான்"

மணிமாறனும் மின்னல்கொடியும் திகைத்தார்கள்.

"எதுக்காக அவன் இப்படி இருக்கான், மாறா? அவன் பெரிய பிசினஸ்மேனா இருந்தா என்ன? அவனுக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாதா? எங்ககிட்ட அவன் எவ்வளவு ரூடா பேசினான் தெரியுமா? எங்க கிட்ட அவனுக்கு என்ன பிரச்சனை?"

"அவன்கிட்ட நீ எதை பத்தி பேசின?" இறுக்கமாக கேட்டார் மணிமாறன்.

"நான் வேற எதை பத்தி பேச போறேன்? கீர்த்திக்கு அவனை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்"

"உன்னை யார் அவன் கிட்ட பேச சொன்னது? நான் சொன்னேனா? நீயா தானே அவன் கிட்ட போய் பேசின? நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே, அவனுக்கு கீர்த்தியை பிடிக்கலைன்னு, அப்புறம் எதுக்காக நீ அவன் பின்னாடியே அலைஞ்சுகிட்டு இருக்க?" அவர் குரலை உயர்த்தி கடுப்பாய் கேக்க, குமரேசன் பின்வாங்கினார்.

மின்னல்கொடி கூட அதிர்ச்சி, அடைந்தார். அவருக்கு தெரியும், பூங்குழலி மலரவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டதால், மணிமாறன் ஏற்கனவே மன உளைச்சல் அடைந்திருக்கிறார் என்று.

"இல்ல, நான் சும்மா தான்..."

"நான் சொல்றத புரிஞ்சுக்கோ. மலரவனுக்கு கீர்த்தியை பிடிக்கல. நீ அவனை இம்சை பண்ணி, மறுபடியும் அவன் லண்டனுக்கு திரும்பி போற மாதிரி செஞ்சிடாத. நீ என்னோட ஃப்ரெண்ட். அதுக்காக தான் நான் நீ உன்னை பொறுத்துக்கிட்டு இருக்கேன். ஆனா அதுக்காக, நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பேன்னு அர்த்தம் இல்ல. புரிஞ்சுதா?"

"என்ன ஆச்சு, மாறா? எதுக்காக நீ இவ்வளவு டென்ஷனா இருக்க?" என்றார் குமரேசன் வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு.

"நான் இப்ப உன்கிட்ட பேசுற மூட்ல இல்ல. எக்ஸ்கியூஸ் மீ" மலரவனின் அறையை நோக்கி நடக்க துவங்கினார் மணிமாறன்.

அமைதியாய் அவரைப் பின் தொடர்ந்தார் மின்னல்கொடி. மணிமாறன் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக, அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை அவருக்கு.

தனது பெற்றோருக்காக காத்திருந்தான் மலரவன். அவர்கள் தனது அறைக்கு வந்ததை கவனித்த அவன், அவர்களது சோகமான முகத்தை வைத்தே, பூங்குழலியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டான்.

"பூங்குழலி மறுத்துட்டாளா?" என்றான்.

"அவள் மன உளைச்சலில் இருக்கா. அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவான்னு எனக்கு தோணல" என்றார் மணிமாறன் வேதனையுடன்.

"நீங்க அவளை கட்டாயப்படுத்தி ஒத்துக்க வச்சிருக்கணும்" என்று மலரவன் கூறியதை கேட்ட இருவரும் வினோதமாய் அவனை ஏறிட்டார்கள்.

யாருடைய சொந்த விஷயத்திலும் தலையிட கூடாது என எண்ணும் மலரவனா, அவளை கட்டாயப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறுவது?

"நீ என்ன சொன்ன???"

"அவ நிச்சயமா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா. அதுக்காக நம்ம அவளை விட்டு விட முடியாது இல்லையா?"

"நீ சொல்றது சரி தான். ஆனா அதுக்காக நம்ம எப்படி அவளை கட்டாயப்படுத்த முடியும்?"

"அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா தான். நம்ம தான் அவளை ஒத்துக்க வைக்கணும். அதை நான் பார்த்துக்கிறேன். நான் அவள் சொல்றதை கேட்கப் போறதில்ல"

"ஆனா மல்லு... "

"மா, இதை என்கிட்ட விடுங்க. அவளை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்"

"இதுக்கு என்ன அர்த்தம்? நீ அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்க போறியா?"

"அவ அப்சட்டா இருக்கா... கோவமா கூட இருக்கலாம். நம்ம மேல கோவமா இருக்க அவளுக்கு காரணம் இருக்குல்ல? அப்படின்னா அவ மறுக்கத்தானே செய்வா? நம்ம அவளை கட்டாயப்படுத்தாத வரைக்கும் அவ சம்மதிக்க மாட்டா"

மணிமாறனும், மின்னல்கொடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அவ மன அழுத்தத்தில் இருக்கான்னா, அவளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறதுல என்ன பிரயோஜனம் இருக்கு?"

"அவ சிவகாமி ஆன்ட்டிக்கு சப்போட்டா இருக்கணும்னு நினைக்கிறா. அதனால அவ யாரையும் கல்யாணம்  பண்ணிக்க மாட்டா. அவங்க அம்மா கூடவே இருக்கணும்னு தான் நினைப்பா. நான் அவ கிட்ட பேசுறேன்"

"நீ பேசுனா அவ ஒத்துக்குவான்னு நினைக்கிறியா?"

"ஒத்துக்குவா" என்றான் தீர்க்கமாய்.

"எதுக்காக குமரேசன் கிட்ட ரொம்ப ரூடா பேசினே?" என்றார் மின்னல்கொடி.

மலரவனின் முகபாவம் சட்டென்று மாறியது.

"நான் அவங்க கிட்ட வேற எப்படி பேசணும்னு நீங்க நினைக்கிறீங்க? நான் ஏற்கனவே சொல்லிட்டேன், எனக்கு அந்த பொண்ண சுத்தமா பிடிக்கல. என்னமோ பெரிய கிளியோபாட்ராவ பெத்து வச்ச மாதிரி, சும்மா சும்மா அவளைப் பத்தியே பேசி என்னை டார்ச்சர் பண்றாங்க" என்றான் எரிச்சலோடு.

"அவங்க கிட்ட கொஞ்சம் தன்மையா பேசி இருக்கலாம் இல்ல?"

"மா, அந்த மாதிரி அட்டைப் பூச்சிகளை எல்லாம் தன்மையா நடத்துற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல. உங்களுக்கு தெரியாதா என்னை பத்தி?"

"எனக்கு உன்னைப் பத்தி சரியா தெரியலன்னு தான் நினைக்கிறேன்" என்றார் உள் அர்த்தத்துடன்.

அவரை கூரிய பார்வை பார்த்தான் மலரவன்.

"அவனை கடுப்பேத்தாத. சும்மா இரு" என்ற மணிமாறன், அவரை அமைதியாய் இருக்குமாறு கண்களால் ஜாடை காட்டினார்.

அவர்கள் அவனது அறையை விட்டு சென்றார்கள்.

"பூங்குழலி கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னு நம்ம மலரவனும் அப்சட்டா தான் இருக்கான். அவன் பேச்சிலிருந்து அது நல்லா புரியுது. நமக்காக அவன் எல்லாத்தையும் சரி பண்ண நினைச்சான். ஆனா அவன் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல" என்றார் மணிமாறன், தங்கள் அறையை நோக்கி நடந்தவாறு.

இரவு

யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, கதவை திறந்தான் மலரவன். அங்கு மகிழன் புன்னகையோடு நின்றிருந்தான்.

"நான் உள்ள வரலாமா?" மலரவனின் அனுமதி வேண்டினான் அவன்.

அவனுக்கு உள்ளே நுழைய இடைவெளி அளித்து, ஒதுங்கி நின்றான் மலரவன். அவன் உள்ளே நுழைய, அவனைத் தொடர்ந்து மலரவனும் உள்ளே வந்தான். உள்ளே வந்த மகிழன் கட்டிலில் அமர்ந்து கொள்ள, அவன் அருகில் மலரவனும் அமர்ந்து கொண்டான்.

"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மலரா"

"கேட்டுகிட்டு தானே இருக்கேன்?"

"முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி நீ யோசிச்சியா?"

"நான் எப்பவுமே யோசிச்சு தான் முடிவு எடுப்பேன். ஆனா, இப்போ நீ எந்த முடிவை பத்தி பேசுற?"

"நீ பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்து இருக்கிறதா கேள்விப்பட்டேன்"

"ஆமாம்... அதுக்கு?"

"ரொம்ப குடும்ப பாங்கா இருக்காத மலரா"

"நீ என்ன சொல்ல வர?" புருவம் உயர்த்தினான் மலரவன்.

"அப்பா அம்மா வாக்கு கொடுத்துட்டாங்க அப்படிங்கிறதுக்காக, நீ பூங்குழலியை கல்யாணம் பண்ணி தான் தீரணும்னு அவசியமா?"

"அவசியம் தான்... என்னை பொறுத்த வரைக்கும், கொடுத்த வாக்கை காப்பாத்துறது தான் எல்லாத்தையும் விட முக்கியம்"

"ஆனா, அவ கிட்ட எதுவுமே இல்ல..."

"எனக்காக எல்லாத்தையும் கொடுக்க போற ஒரு பொண்ணு கிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கல. ஒரு பொண்ணால எவ்வளவு கொண்டு வர முடியுமோ, அதைவிட அதிகமாகவே என்னால என் பொண்டாட்டிக்கு சம்பாதிச்சு கொடுக்க முடியும். நான் உன்னை குத்தி காட்டுகிறேன்னு என்னை தப்பா நினைக்காத" என்று மலரவன் கூறிய போதிலும், அவன் தன்னை குத்தி தான் காட்டுகிறான் என்று புரிந்தே இருந்தது மகிழனுக்கு.

"நான் என்ன சொல்ல வரேன்னா..."

"நான் என்ன செய்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் புரிஞ்சு தான் செய்றேன்."

"ஆனா பூங்குழலி உன்னை கல்யாணம் பண்ணிக்க மறுத்துட்டாளாமே..."

"அதை பத்தி எல்லாம் நீ கவலைப்படாதே. இப்போ நீ கெளம்பு"

தலை குனிந்தபடிய அங்கிருந்து சென்றான் மகிழன்.

பூங்குழலி தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டதால், ஏற்கனவே அவன் வெறுப்பில் இருந்தான். அவள் மீது தவறு ஒன்றும் இல்லை தான். சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் அப்படித் தான் முடிவெடுப்பாள். மணிமாறனும் மின்னல்கொடியும் மனமுடைந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அவமானத்தை தேடி தந்தது பூங்குழலி அல்ல, மகிழன் தான். இந்த விஷயம் மொத்தமாய் அவன் கையில் இருந்து நழுவி செல்லும் முன், அவன் வேகமாய் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை சரிக்கட்டும் பொறுப்பு தனக்கு இருப்பதை உணர்ந்தான் மலரவன். இது அவனது குடும்பம். இந்த குடும்பத்தின் மூத்த மகன் அவன். தன் குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய கடமை, எல்லோரையும் விட அவனுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பதை அவன் உணர்ந்து இருந்தான்.

மறுநாள்

தில்லை இல்லம்.

வேலை வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா என்று நாளிதழ் ஒன்றில் தேடிக் கொண்டிருந்தாள் பூங்குழலி. அவளிடம் பேசும் படி வடிவுக்கரசிக்கு கண்களால் தவிப்புடன் ஜாடை காட்டினார் சிவகாமி. *நான் பார்த்துக் கொள்கிறேன்* என்பது போல் கண்சிமிட்டினார் வடிவுக்கரசி.

"என்ன பண்ணிக்கிட்டு இருக்க குழலி?"

"வேலை தேடிக்கிட்டு இருக்கேன், அத்தை"

"இது தேவையா?"

"என்ன இப்படி சொல்றீங்க?"

"நீ மலரவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா, இதுக்கு அவசியம் இருக்காது இல்ல?"

எதையோ குறித்துக் கொண்டிருந்த அவளது கரம் அப்படியே நின்றது.

"ஏன்? நான் எதுக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கணும்?"

"நீ என்னைக்கோ ஒரு நாள், யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க தானே போற? அந்த ஒருத்தன் மலரவனா இருந்தா, உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் இல்ல?"

"இல்ல. என் வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. நான் அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும், என்னை மகிழன் அவமானப்படுத்தினது தான் எனக்கு ஞாபகம் வந்துகிட்டே இருக்கும். அப்படி நடக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களா?"

"அப்படி நினைக்கிறதுக்கு பதிலா, நீ ரொம்ப குடுத்து வச்சவன்னு, நீ ஏன் மாத்தி யோசிக்க கூடாது?"

"நான் அப்படி என்ன அத்தை கொடுத்து வச்சிருக்கேன்?"

"மாறனும், மின்னலும் நீ அவங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்படுறாங்க. அவங்க வாக்கு கொடுத்ததுக்காக மட்டும் இல்ல... உன்னோட மதிப்பு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதனால தான், உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணை விடுறதுக்கு அவங்களுக்கு மனசு இல்ல.  அவங்க உன்னை பத்தி பெருமையா பேசினதை நானே கேட்டேன். அவங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப பெரிய மனசு"

"அவங்களுக்கு பெரிய மனசு தான். எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா என்னை பத்தி நீங்க யோசிச்சு பாத்தீங்களா?"

"நீ தான் மகிழணை விரும்பவே இல்லையாமே... நீ தான் அவனை தொடர்ந்து தவிர்த்துக்கிட்டே இருந்தியாமே...?"

அவரை ஆச்சரியமாய் ஏறிட்டாள் பூங்குழலி.

"அவங்க அதை பத்தியும் பேசினாங்க. நீ அவனை விரும்பலங்குறது அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அவங்கள பொறுத்த வரைக்கும், அவங்க உன்னை மருமகளா பாக்கல. ஒரு மகளா தான் பாக்குறாங்க"

"ஆமாம். எனக்கு மகிழனை பிடிக்கல. அப்பாவுக்காக தான் நான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன். மாறன் அங்கிளுக்கும், மின்னல் ஆன்டிக்கும் மருமகளா போகணும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா, நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நான் ஒன்னும் பொம்மை கிடையாது, ஒருத்தர் வேண்டாம்ன்னு சொன்னா, இன்னொருத்தர் வேணும்னு சொல்றதுக்கு... நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பல அத்தை, புரிஞ்சிக்கோங்க"

"ஆனா, மலரவன்... "

"இல்லம்மா... ஒத்தையா ரெட்டையா பிடிக்க நான் ஒன்னும் சாய்ஸ் இல்ல. தயவு செய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..." என்றவள் திடுக்கிட்டு நின்றாள், மலரவன் வாசற்படியில் நின்று, அவளை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top