1 லண்டனில் மலரவன்

1 லண்டனில் மலரவன்

தங்கள் *எம்எம்* ஃபேஷன்  நிறுவனத்தின் விரிவாக்க பணியின் பொருட்டு, கடந்த ஒரு வருடமாய் லண்டனில் வசித்து வருகிறான் மலரவன்.

இருபத்தி எட்டு வயதே நிரம்பிய மலரவன், மணிமாறன், மின்னல்கொடி தம்பதியினரின் மூத்த மகனாவான். அவனுக்கு இருபத்தி எட்டு வயது ஆகிவிட்டாலும் அவனை திருமணம் செய்து கொள் என்று அவன் பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு தெரியும் அது நேர விரயம் என்று.

ஒரு தீ விபத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த தனது நிறுவனத்தை திடப்படுத்தும் பணியில், முழு நேரத்தையும் மலரவன் செலவிட்டு கொண்டிருக்கிறான். எம்எம் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்திருந்த அனைத்து பொருளும் தீயில் எரிந்து சாம்பலானது. ஒரே இரவில் அனைத்தும் தலைகீழாய் மாறி, எம்எம் நிறுவனம் சந்திக்கு வந்தது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துவிட்டு அப்போது தான் தாயகம் திரும்பியிருந்த மலரவன், தன் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பொறுப்பை தன் தோளில் வாங்கிக் கொண்டான். அவனுடைய முழு நேர உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், அவர்களை விட்டு பிரிந்து சென்ற விநியோகஸ்தர்களும், பங்குதாரர்களும் மீண்டும் அவர்களது நிறுவனத்தை தேடி வந்தார்கள்.

வியாபார உலகில், இது அவனுடைய வெற்றிகரமான ஐந்தாவது வருடம். தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை, இந்தியாவோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் மலரவன். தன் வெற்றிப் பயணத்தில், தன்னுடன் பயணித்த தன் நண்பன் மித்திரனை, தன் தந்தைக்கு உறுதுணையாக இந்தியாவில் விட்டு விட்டு, லண்டனில் தன் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறான் மலரவன்.

அவன் இந்தியாவிற்கு திரும்பி வர நாட்டமின்றி இருந்ததால், மணிமாறனும், மின்னல் கொடியும் வெறுத்துப் போனார்கள். தங்கள் நிறுவனத்தின் கிளையின் துவக்க பணிக்காக தான் அவன் லண்டனுக்கு சென்றான். சிறிது நாட்களில் அவன் இந்தியாவுக்கு திரும்பி விடுவான் என்று அவனது பெற்றோர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அவன் இன்னும் அங்கு தான் இருந்து கொண்டிருக்கிறான்.

அவனது பெற்றோர்கள், அவர்களது இளைய மகனான மகிழனின் திருமண தேதியை நிச்சயம் செய்ய, மலரவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகிழன் மலரவனை விட ஒரு வயது சிறியவன். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவர்களது பெற்றோரின் விருப்பம். ஆனால் மலரவன் அதற்கு செவி சாய்ப்பதாகவே இல்லை. தனக்கு திருமணம் வேண்டாம் என்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறிவிட்டான் அவன். அதனால் இளையவனின் திருமணத்தை முடிப்பது என்ற முடிவுக்கு அவனது பெற்றோர்கள் வந்து விட்டார்கள்.

மணிமாறனின் உற்ற நண்பனான தில்லைராஜனின் மகள் பூங்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்பினான் மகிழன். தான் இந்தியாவுக்கு வர சம்மதம் தெரிவித்தால் மட்டும் தான் தன் தம்பியின் திருமண தேதியை நிச்சயம் செய்வார்கள் என்று நன்றாகவே மலரவனுக்கு தெரியும். இருந்தும், அவனால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்கு காரணம், குறைந்தது ஒரு வாரமாவது அவன் இந்தியாவில் தங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது தான். அது நிச்சயம் அவனால் முடியாது.

மணி மின்னல் இல்லம்

தங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்த, தன் நண்பனும், தன் நிறுவனத்தின்  விநியோகிஸ்தருமான குமரேசனையும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்றார் மணிமாறன். குமரேசனின் மனைவி சுஜாதா, மின்னல்கொடியை பார்த்து ஸ்னேகமாய் புன்னகைத்தார். அவர்களது மகள் கீர்த்தி, ஓடிச் சென்று மின்னல்கொடியை கட்டிக்கொண்டாள்.

"எப்படி இருக்கடா கண்ணா?"

"நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி" என்று குழைந்தாள் கீர்த்தி.

"மகிழன் கல்யாணத்தை நீங்க ஃபிக்ஸ் பண்ணாத கேள்விப்பட்டேனே" என்றார்
குமரேசன்.

"இன்னும் ஃபிக்ஸ் பண்ணல. தில்லைராஜன் கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினேன் அவ்வளவு தான்"

"எப்ப கல்யாணம் பண்ண போற?"

"அதை மலரவன் தான் சொல்லணும்"

மலரவனின் பெயரை கேட்டவுடன், கீர்த்தியின் முகம் மீனைக் கண்ட பூனை முகம் போல் மாறியது.

"மலரவன் வரானா?" என்றார் குமரேசன்.

"இல்ல. அவனுக்கு டைம் கிடைக்கல"

"ஏன் இப்படி அவன் தட்டி கழிச்சு கிட்டே இருக்கான்?" என்றார் சுஜாதா.

"அவன் தட்டியெல்லாம் கழிக்கல. அவன் ரொம்ப பிசியா இருக்கான்" என்றார் மின்னல்கொடி.

"மலரவன் தானே மூத்த பிள்ளை? அவனை விட்டுட்டு நீங்க எப்படி சின்னவனுக்கு கல்யாணம் பண்றீங்க?" என்றார் சுஜாதா.

"அவன் தான் கல்யாணத்துல விருப்பமே இல்லாம இருக்கானே..." என்றார் மணிமாறன்.

"என்ன காரணம்?"

"அவன் பிசினஸ் எஸ்டாபிளிஷ்மென்ட்ல பிஸியா இருக்கான்"

"எங்க கீர்த்தி மாதிரி அழகான பெண்ணை அவன் கிட்ட காட்டுங்க. அவன் ஃப்ளாட் ஆயிடுவான்" என்று கூறிவிட்டு சிரித்தார் ஏதோ அது மிகப்பெரிய நகைச்சுவை என்பது போல.

"அவன் லண்டன்ல பொண்ணுங்களையே பார்க்கலன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? எங்க லண்டன் பிரான்ச்லேயே எவ்வளவோ அழகான இண்டியன் கேர்ள்ஸ் வேலை செய்றாங்க" அவர்களது வாயை அடைத்தார் மணிமாறன்.

"இருக்கலாம். ஆனா, அவங்க எல்லாம் நம்மளோட கல்சருக்கு சரிப்பட்டு வருவாங்களா?" என்றார் சுஜாதா.

"நான் உன்கிட்ட நேரடியாவே கேட்கிறேன், மணி. நான் கீர்த்தியை மலரவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விரும்புறேன். நீ என்ன சொல்ற?" என்றார் குமரேசன்.

மணிமாறனும் மின்னல்கொடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"இந்த விஷயத்துல நாங்க எதுவும் சொல்றதுக்கு இல்ல. ஏன்னா, இது மலரவன் சம்பந்தப்பட்ட விஷயம்" என்றார் மணிமாறன்.

"நீ அதைப் பத்தி கவலைப்படாத. அவன்கிட்டயிருந்து சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு" என்றார் குமரேசன்.

"எங்க கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு யார் தான் சொல்லுவா?" என்று பெருமை பேசினார் சுஜாதா.

மணிமாறனும், மின்னல்கொடியும் பதற்றமானார்கள். தன் தலையை இடவலமாய் அசைத்தார் மின்னல்கொடி.

"இல்ல குமரா, உனக்கு மலரவனை பத்தி தெரியாது..."

"கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்க மலரவன் தயாரா இருந்தா, அதுல உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?" என்றார் குமரேசன், அவரது பேச்சை வெட்டி.

"இல்ல... நிச்சயமா இல்ல..."

"அப்படின்னா அதை என்கிட்ட விடு"

சரி என்று அரைமனதாய் தலையசைத்தார் மணிமாறன். மின்னல்கொடியோ மனதிற்குள் அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டார். மலரவன் அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். குமரேசன் குடும்பத்தார் மட்டுமல்ல, மணிமாறன் குடும்பத்தோடு தொடர்புடைய யாருக்குமே மலரவனை பற்றி அதிகம்  தெரியாது.

மலரவன் யாரிடமும் அதிகம் நெருங்கி பழகாதவன். வளமான குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், படிப்பை லேசாய் எடுத்துக் கொண்டதில்லை. பெரும்பான்மையான நேரத்தை அவன் படிப்பதற்கு தான் செலவிட்டான். அவனது அம்மா தான் அவனது உற்ற தோழி... அவருக்கு அடுத்த இடத்தில், அவனது அப்பா. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தான், அவனுக்கு வாழ்நாள் நண்பனாய் மித்திரன் கிடைத்தான். அவ்வளவு தான் அவனது உலகம். ஆனால் அவனுக்கென்று இருந்தவர்களிடம் அவன் உயிராய் இருந்தான். அவனது தம்பி மகிழன், மலரவனின் ரகம் அல்ல. மலரவனிடம் இருந்த ஒரு குணம் கூட மகிழனிடம் இல்லை. இளங்கலை பட்டத்தில் இன்னும் கூட நான்கு பாடத்தில் அரியர் வைத்திருந்தான் அவன்.

லண்டன்

தனது அறையில் அமர்ந்து ஒரு முக்கியமான கோப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன். அப்பொழுது அவனது கைபேசி ஒலிக்க, பரிச்சையம் இல்லாத இந்திய எண் ஒளிர்ந்ததை பார்த்து, தனது நிறுவனத்தை சார்ந்த யாரிடமிருந்தோ தான் அந்த அழைப்பு வரவேண்டும் என்று எண்ணி அதை ஏற்றான்.

மலரில் கூட தீப்பொறி வைக்க முடியும் என்பது, அவன் தன் பெயரை

"மலரவன்..." என்று கம்பீரமாய் உச்சரித்த போது புரிந்தது.

"ஐ அம் கீர்த்தி ஸ்பீக்கிங்" என்றாள் கவர்ச்சிகரமான புன்னகையுடன், ஏதோ மலரவன் அவளை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போல.

"ஹூ ஆர் யூ?" என்ற அவனது கேள்வி அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதை அவள் அவமானமாய் உணர்ந்தாள். அவன், *ஹவ் ஆர் யூ?* என்று கேட்பான் என்றல்லவா அவள் எண்ணியிருந்தாள்? அப்படி என்றால், அவனது பெற்றோர், அவனிடம் அவர்களது திருமண விஷயம் பற்றி கூறவில்லையா?

"ஹலோ, ஹூ இஸ் ஸ்பீக்கிங்?" என்றான் மலரவன்.

"நான் உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் குமரேசனோட டாட்டர்"

"எதுக்கு எனக்கு கால் பண்ண?" என்ற அவனது குரலில் விருப்பமின்மை எதிரொலித்தது.

"உங்ககிட்ட பேச தான். அப்போ தானே நம்ம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்...?"

மலரவனுக்கு ஏதோ தவறாய் உறைக்க,  நிமிர்ந்து அமர்ந்தான். அவளது பேச்சு, அவனுக்கு விருப்பமில்லாத திசைக்கு  அழைத்துச் செல்வதை அவன் உணர்ந்தான்.

"நம்ம ஏன் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும்?"

"நம்மளோட வாழ்க்கை சந்தோஷமா இருக்க வேண்டாமா?"

"தலையை சுத்தி மூக்கை தொடர வேலை எல்லாம் வேண்டாம்... உன்னோட ஸ்டுப்பிடிட்டியை எல்லாம் என்டர்டைன் பண்ண எனக்கு நேரமில்ல"

மென்று விழுங்கினாள் கீர்த்தி.

"ஸ்டுப்பிடிட்டியா? நம்மளோட பேரண்ட்ஸ் நம்ம கல்யாணம் பண்ணிக்கனும்னு விருப்ப படுறாங்க"

"வா....ட்ட்ட்ட்?" அதிர்ந்தான் மலரவன்.

"ஆமாம் மலர். உங்க அம்மா அப்பா, உங்களை நினைச்சு எவ்வளவு வருத்தப்படறாங்கன்னு தெரியுமா? உங்களால தான் அவங்களால மகிழனோட கல்யாணத்தை கூட ஃபிக்ஸ் பண்ண முடியல. பாவம் அவங்க" என்றாள் சோகமாய்.

"என்னோட அம்மா அப்பாவை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. என்ன செய்யணும், எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும். என்னோட விஷயத்துல உன் மூக்கை நுழைக்கிறதை நிறுத்து" அவன் பேச்சில் கோபம் தெறித்து சிதறியது.

"இல்ல, மலர், அங்கிளும் ஆன்ட்டியும் நான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு..."

"ஷ....ட் அ....ப்" அவளது பேச்சைக் கேட்கும் பொறுமையின்றி அழைப்பை துண்டித்தான் மலரவன்.

அவனுக்கு மறுபடியும் ஃபோன் செய்தாள் கீர்த்தி. ஆனால் அவனது எண் எங்கேஜ்டாய் இருந்தது. அவளுக்கு எப்படி தொடர்பு கிடைக்கும்? அவன் தான் தனது அம்மாவுக்கு ஃபோன் செய்து கொண்டு இருந்தானே...!

மலரவனின் எண் தன் கைபேசியில் ஒளிர்ந்ததை பார்த்த மின்னல்கொடியின் முகம் பிரகாசித்தது. சந்தோஷமாய் அதை கையில் எடுத்து, அழைப்பை ஏற்க போனவர், சற்றே நின்றார். அவர் புத்தியில் ஏதோ உறைத்தது. ஒருவேளை குமரேசன் அவனுடன் பேசியிருப்பாரோ? ஏவுகணையை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டு அடைப்பை ஏற்றார்.

"எப்படி இருக்க மல்லு?"

"எனக்கு தெரியாம எப்படி நீங்க என்னோட கல்யாணத்தை பேசி முடிப்பீங்க?" அவனது பேச்சில் பொறி பறந்தது.

"இல்ல. நாங்க அப்படி எதுவும் செய்யல. உன்னை பத்தி எங்களுக்கு தெரியாதா? உன்கிட்ட கேக்காம நாங்க எப்படி உன் கல்யாணத்தை முடிவு செய்வோம்?"

"அப்புறம் எதுக்கு அந்த முட்டாள் பொண்ணு எனக்கு ஃபோன் பண்ணி என்னை இர்ரிடேட் பண்றா?"

பொண்ணா? இது என்ன வம்பு?

"நீ யாரை சொல்ற மல்லு?"

"மிஸ் குமரேசன்"

கீர்த்தி, மலரவனுக்கு ஃபோன் செய்தாளா? என்ன செய்து தொலைத்து விட்டாள் இந்த பெண்?

"குமரேசன் அங்கிள் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு விருப்பப்படறதா நேத்து தான் எங்க கிட்ட சொன்னாரு. அதனால தான் அவ உனக்கு போன் பண்ணாளோ என்னவோ..."

"மா, தயவு செய்து என்னை டார்ச்சர் பண்றதை நிறுத்துங்க... எல்லாத்தையும் நிறுத்துங்க... நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். தயவு செஞ்சி என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. எனக்கு கீர்த்தி பார்த்தி யாரையும் பிடிக்கல..."

"சரி மல்லு, கூல் டவுன்..."

"இதுக்கப்புறம் எனக்கு எந்த ஃபோன் கால்சும் வரக்கூடாது. நான் யாரையும் மரியாதை குறைவா பேசக்கூடாதுன்னு நீங்க நினைச்சா, யாரும் என்னை அப்ரோச் பண்ணாம பாத்துக்கோங்க"

"சரி மல்லு. நீ கோபப்படாதே... ரிலாக்ஸ்..."

"சரி, நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்..." அழைப்பை துண்டிக்க நினைத்தவனால் அதை செய்ய முடியவில்லை.

"ஐ அம் சாரி மா... உங்களால என்னை புரிஞ்சுக்க முடியுது இல்ல?" என்றான்.

"எனக்கு தெரியும் டா கண்ணா. நீ என்னை ஹர்ட் பண்ண மாட்ட. ஆனா, நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறன்னு தான் எனக்கு புரியல"

"மா, கல்யாணத்தை விட உருப்படியான விஷயம் இந்த உலகத்துல நிறைய இருக்கு... *நீங்க* அதுல ஒன்னு..."

இதைக் கேட்ட பிறகு எந்த அம்மாவால் தான் புன்னகைக்காமல் இருந்து விட முடியும்? மின்னல்கொடியும் மின்னல் வெட்டியது போல் புன்னகைத்தார். அவருக்கும் மலரவனுக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது, கடந்த சில வருடங்களாக மலரவன் அவருடன் இல்லை என்ற போதிலும்.

"லவ் யூ மா..."

"லவ் யூ ட்டூ மல்லு..."

"ஐ நோ" என்றான்.

"டேக் கேர்..."

"யா..."

அழைப்பை துண்டித்தான் மலரவன்.

அவர்களது உரையாடலை புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த மணிமாறனை நோக்கி, தன் கட்டைவிரலை கீழ்ப்பக்கமாய் கவிழ்த்து கட்டினார் மின்னல்கொடி. பெருமூச்சு விட்டார் மணிமாறன். மலரவனை எண்ணி அவர்களுக்கு கவலையாய் இருந்தது. அவன் மட்டும் திருமணத்திற்கு சரி என்று கூறிவிட்டால், இரண்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top