வைராக்கியத்திற்கு இன்னோரு பெயர் இளவரசி.


மகன்கள் அடுத்தடுத்த விபத்தில் இறந்துவிட்டனர்,மருமகள் பிரிந்துவிட்டார், மிஞ்சியிருந்த ஒரே வாரிசுப் பேரனுக்கு தாலசீமியா நோய்,இருபத்தைந்து லட்ச ரூபாய் இருந்தால் பேரன் பிழைப்பான் என்ற நிலையில் வீட்டு வேலை செய்யும் பாட்டி வைராக்கியத்துடன் பணத்தை புரட்டி பேரனைக்காப்பாற்றிய நெஞ்சை உருக்கும் கதை இது.பிழைப்பு தேடி பல வருடத்திற்கு முன் சென்னையில் தஞ்சம் புகுந்தவர்தான் இளவரசி.நான்கு வீடுகளில் வேலை செய்தும், எலக்ட்ரீசனான கணவர் கொடுக்கும் பணத்தை வைத்தும் குடும்பம் நடத்திவந்தார்.

இரண்டு பையன்கள் இருவருமே அடுத்தடுத்த விபத்துகளில் இறந்துபோனார்கள். மூத்தவர் திருமணமாகமாலே இறந்து போனார் இளையவர் திருமணமாகி இரண்டரை மாத குழந்தை இருக்கும் நிலையில் இறந்து போனார். மகனின் காரியத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் மருமகளைக் காணோம், இன்னமும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.  


இந்த நிலையில் தொட்டிலில் கிடந்த குடும்பத்தின் ஒரே வாரிசான பேரன் கோபிநாத்திற்கு உடம்புக்கு முடியவில்லை துாக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடினார் பாட்டி இளவரசி. அவர்கள் ஏதோதோ சொன்னார்கள் அவ்வளவாக படிக்காத இளவரசிக்கு எதுவும் புரியவில்லை.

என்னன்னவோ சோதனை செய்துவிட்டு உன் பேரனுக்கு தாலசீமியா நோய் வந்திருக்கு இந்த நோய் மரபணு சார்ந்த பிரச்னையால வரக்கூடியது,இந்த நோய் வந்தவங்களுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாது, இதனால மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ புது ரத்தம் ஏற்றிக்கொண்டே இருக்கணும், இரும்புச் சத்து கூடாமா பார்த்துக்கணும் சத்தான சாப்பாடு தரணும் கால் கை வீங்காமா, காய்ச்சல் தலைவலி வரமா பார்த்துக்கணும் என்றனர்.

கூடவே,ஸ்டெம் செல் தானமா கிடைச்சா இந்த நோயில் இருந்து குழந்தையை காப்பாற்றலாம், ஸ்டெம் செல் பாதிக்கப்பட்ட குழந்தையின் அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை மற்றும் பெற்றோரிடம் இருந்து தானமாக பெறலாம் ஆனால் உங்கள் பேரன் கோபிநாத்திற்கு அப்படி யாருமே இல்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் இவனது ரத்தத்தோடு மேட்ச்சாகக் கூடிய குருத்தணுவை ஒருவர் சுமந்து கொண்டு இருப்பார் அவரை தேடிக்கண்டுபிடித்து அவரது குருத்தணுவை தானமாக பெறும்வரை பேரனை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறினர்.

இந்த இடத்தில் மருத்துவராகவும், மனிதநேயம் மிகக்கொண்டவரும், இந்த சிகிச்சையில் நிபுணருமான டாக்டர் ரேவதி ராஜைப் பாராட்டியாக வேண்டும். இளவரசியின் நிலமை தெரிந்து கொண்டு எங்கெல்லாம் இலவசமாக ரத்தமும்,மருந்தும், சிகிச்சையும் கிடைக்குமோ அங்கெல்லாம் எழுதிக்கொடுத்து சிபாரிசு செய்து சிறுவன் கோபிநாத்திற்கு உதவினார்.

சிறுவன் கோபிநாத் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளியில்தான் படித்துவருகிறான் அந்த பள்ளியின் முதல்வர் முதல் உடன் படிக்கும் பிள்ளைகள் வரைக்கும் கோபிநாத்தின் பிரச்னை தெரிந்து புரிந்து அவன் மீது அளவற்ற பற்றும் பாசமும் காட்டினர்.ஒவ்வொரு மிஸ்சும் கோபிநாத்திற்கு அம்மாதான். லேசாக சோர்ந்தால் கூட உடனே பாட்டிக்கு போன் அடித்துவிடுவார்கள், எங்கு இருந்தாலும் இளவரசி ஒடிவந்து பேரனை அள்ளி ஆட்டோவில் துாக்கிக் கொண்டு போய் மருத்துவம் பார்த்து பழைய நிலைக்கு கொண்டுவந்து விடுவார், இது மாதத்திற்கு ஒரு முறையாவது நடந்துவிடும்.

இந்த நிலையில் டாக்டர் ரேவதி ராஜின் தீவிர முயற்சியின் காரணமாக ஜெர்மனியில் வசிக்கும் ஒரு கொடையாளரின் ஸ்டெம் செல் கோபிநாத்திற்கு பொருந்தி போனது, அது அதிர்ஷ்டம் என்றால் இந்த சிகிச்சைக்காகும் செலவு துரதிருஷ்டமானதாகும்.குருத்தணுவை கொண்டுவந்து (bone marrow transplant)சிகிச்சை செய்ய எப்படி பார்த்தாலும் இருபத்தைந்து லட்சரூபாய் செலவாகும் என்ற நிலை.

இருநுாறு ரூபாய் கொடுத்து இன்னும் நல்ல செருப்பு கூட வாங்கி அணிந்திராத இளவரசியம்மாவிற்கு இருபத்தைந்து லட்சரூபாய்க்கு எத்தனை சைபர் வரும் என்று கூட தெரியாத நிலை ஆனாலும் பேரனை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தெருத்தெருவாக வீடுவீடாக பணம் கேட்டு இரவு பகலாக அலைந்தார்.
கோபிநாத்தின் உடன் படிக்கும் இரண்டாம் வகுப்பு சிறுவர்கள் தங்களது தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்ட உடை மற்றும் பட்டாசு செலவுகளை தியாகம் செய்து அந்த பணத்தை கோபிநாத்தின் சிகிச்சை செலவிற்காக கொடுத்த நிகழ்வு மனித நேயமிக்க மனிதர்கள் அனைவரிடமும் ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது.

கோபிநாத்தின் உடன் படிக்கும் சிறுவர்களிடம் ஆரம்பித்த இந்த நன்கொடை பழக்கம் அவர்களது பெற்றோர்கள் நண்பர்கள் என்று பரவி பரவி ஒரு கட்டத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகமே நம்பமுடியாத நிலையில் சிகிச்சைக்கு தேவையான பணம் திரண்டது. ஒரு நல்ல நாளில் ஆபரேசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நான்கு மாத கண்காணிப்பு காலத்தின் முடிவில் கோபிநாத் தற்போது தாலசீமியா நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டான் என்று கடந்த 02/03/2017 ந்தேதி மருத்துவ சான்றிதழ் பெற்ற கையோடு வீட்டிற்கு வந்துவிட்டனர்.

கோபிநாத்தின் படிப்பிற்கு தொடர்ந்து உதவிவரும் 'உதவும் உள்ளங்கள்' அமைப்பு மகாதேவன் இந்த தகவலை சொல்லவே நேரடியாக கோபிநாத் குடியிருக்கும் வளசரவாக்கம் ஸ்ரீராம்நகர் மகாதேவன் குடியிருப்புக்கு போயிருந்தேன். பேரனை காப்பாற்றிவிட்ட ஆனந்தத்தில் இளவரசி காணப்பட்டார்.மருந்தின் வீரியம் காரணமாக தலைமுடி எல்லாம் கொட்டிப் போயிருந்தாலும் ஏழு வயது சிறுவன் கோபிநாத்திற்கு முகமெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி.அரை இட்லி சாப்பிடவே முடியாமல் இருந்தது போய் இப்போது நன்றாக சாப்பிடுகிறான். ஆயா.. ஆயா.. என்று பாட்டியை சுற்றி சுற்றி வந்து கட்டிக்கொண்டு முத்த மழை பொழிகிறான். பக்கத்தில் இருந்து உடம்பு முடியாத தாத்தா கன்னையா இதை ஆனந்த கண்ணீரோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

பேரன் பிழைக்க வேண்டும் என்பதற்காக பல ஊர்களில் வேண்டிக்கொண்டுள்ளார் இளவரசி. ஒரு ஊரில் போய் மண் சோறு சாப்பிடவேண்டும் ஒரு ஊரில் போய் தீச்சட்டி எடுக்க வேண்டும் இன்னோரு ஊரில் போய் பூக்குழி இறங்கவேண்டும் என்ற அவர் பட்டியல் நீள்கிறது ஆனாலும் வாழும் கடவுளாக அவர் வார்த்தைக்கு வார்த்தை பாராட்டுவது டாக்டர் ரேவதிராஜைத்தான்.

இன்னும் சில நாள் பேரனுக்கு விலை உயர்ந்த மருந்து மாத்திரைகள் கொடுக்கவேண்டும், சத்தான உணவு பானங்கள் கொடுக்கவேண்டும், மாதம் ஒரு முறை போய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் இன்னமும் கொஞ்சம் பணம் தேவைதான் ஆனால் மக்கள் நிறைய உதவிவிட்டார்கள் ஆகவே நானாக போய் யாரிடமும் கேட்பது இல்லை ஆனால் கடவுள் யார் மூலமாகவாவது என் பேரன் கோபிநாத்திற்கு வேண்டியதை கொடுத்துவிடுகிறார், இதோ இன்றைக்கு என் பேரனை பார்க்க வந்த நீங்க இவ்வளவு வாங்கிட்டு வந்து உதவலையா? இதே போல நாளைக்கு யார் மூலமாகவாவது ஏதாவது கிடைக்கும் என்ற நம்புகிறார் வைராக்கியத்தின் மறுஉருவான இளவரசி யார் கண்டது அது நீங்களாககூட இருக்கலாம்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top