மன்னிச்சிருடா மகனே..

'மன்னிச்சுக்குடா மகனே,உன்னை என்னால படிக்கவைக்க முடியல'
இயக்குனர் பாண்டிராஜ்ன் உருக்கமான பேச்சு.

'மன்னிச்சுக்குடா மகனே, உன்னை என்னால படிக்கவைக்க முடியல'என்று கையெடுத்து கும்பிட்ட என் அப்பாவிடம், நான் படிக்கலைன்னாலும் இப்ப நல்ல நிலையில இருக்கேன் என்று பதினாறு வருடம் கழிச்சு சொல்லவந்த போது என் அப்பா அதை கேட்கும் மனநிலையில் இல்லை என்று கண்கலங்க சொன்னார் இயக்குனர் பாண்டிராஜ்.

12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு நுாறு சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற தன்னம்பிக்கை திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 'பசங்க' படத்தின் மூலம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குனர் பாண்டிராஜ்ம் ஒருவர்.

இந்த கல்வித்திருவிழா மேடையில் இவர் பேசியது பலரது மனதையும் உருக்கிவிட்டது.  

நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் இப்பவும் நான் என்னை சினிமாக்காரன் என்று சொல்லிக்கொள்வதைவிட விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமை அடைகிறேன். நான் சினிமாவிற்கு வந்தது கூட விருது வாங்கணும் என்பதற்காக அல்ல நிறைய சம்பாதித்து ஊர்ல நிறைய நிலம்வாங்கி விவசாயம் பண்ணவேண்டும் என்பதற்காகத்தான். அந்த அளவிற்கு விவசாயத்தை நான் நேசித்தேன் ஆனால் விவசாயத்தில் ஏற்பட்ட வறட்சி வாழ்க்கையிலும் நீடித்தது.பிளஸ் டூ படித்து முடித்து கல்லுாரியில் படித்து ஒரு ஆசிரியராக வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. புதுக்கோட்டை கல்லுாரியில் படிக்க அப்போது விண்ணப்பமே நாற்பது ரூபாய்தான்.

அந்த நாற்பது ரூபாயை என்னால் புரட்ட முடியல இதை எல்லாம் பார்த்த என் அப்பா மன்னிச்சுக்குடா மகனே என்னை உன்னால் படிக்கவைக்க முடியாதுடா என்று கண்கலங்க கையெடுத்து கும்பிட்டு சொன்னார்.நான் ஆசிரியராகும் ஆசை அன்றோடு முடிந்தது. அதன்பிறகு எனக்குள் இருந்த சினிமா ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். இந்த சூழ்நிலையில் என் அம்மா என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோசியரிடம் காண்பித்தார். அவர் பையனுக்கு இரும்பு வியாபாரத்தில் தான் விருத்தி இருக்கு என்று சொல்லிவிட்டார்.

அப்போது என் மாமா சைக்கிள் கடை வைத்திருந்தார் இதுதான் இரும்பு சம்பந்தபட்ட உத்தியோகம் ஓழுங்க மாமா கடையில் சேர்ந்து உருப்படுவதற்கான வழியை பாரு என்று என் அம்மா அனத்த ஆரம்பித்தார். சரி இனி நாம இங்கு இருந்த நம்மள ஒரேடியா அமுக்கிடுவாங்கன்னு நினைச்சு வீட்டு உண்டியல்ல இருந்த 650 ரூபாயை எடுத்துக்கிட்டு சென்னைக்கு கிளம்பிட்டேன். 'டே என்னடா பண்றே' என்று அப்பா அப்பப்பா கேட்பார், சினிமா கம்பெனியிலதான் இருக்கேன் என்று பதில் சொல்லிட்டு இருந்தேன் ஆனால் உண்மையில் நான் ஏவிஎம் ஸ்டூடியோவின் வாசலில் செக்யூரிட்டி வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஊர்ல இருந்து வந்த ஒரு ஆளு என்னை கேட் வாசல்ல பார்த்துட்டு அப்பாகிட்ட உன் மகன் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கிட்டு இருக்கான் என்று போட்டுக்கொடுத்துவிட்டார். அதன்பிற்கு அங்கே இருக்கக்கூடாது என்று முடிவு செய்து பாக்யா பத்திரிகை அலுவலகத்தில் ஆபிஸ் உதவியளரா வேலை பார்த்தேன்.

அங்கு இருந்து தொடர்புகள வளர்த்துக்கிட்டு உதவி இயக்குனரா மாறினேன். ஜெயிக்கணும்னு ஆளுக்கொரு கதையோட சுற்றிக்கிட்டு இருக்கும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான உதவி இயக்குனர்களில் ஒருவனாத்தான் நானும் சுற்றிக்கிட்டு இருந்தேன் அதில் இருந்து படிப்படியா முன்னேறி பசங்க படம் எடுத்து நானும் நாலு பேர் பாராட்டுற இயக்குனரா மாறியிருந்தப்பா 16 வருஷம் முடிஞ்சு போயிருந்துச்சு.
கையில காசு பணத்தோட உங்க மகன் சினிமாவில் ஜெயிச்சுட்டேம்பா என்று சொல்வதற்காக ஊருக்கு போயிருந்த போது அதிர்ச்சி காத்திருந்தது? என்னை யார் என்று கேட்குமளவிற்கு அப்பா மனநிலை பிறழ்ந்து இருந்தார். எவ்வளவு காசு பணம் செலவழித்தும் எவ்வித பிரயோசனமும் இல்லை அப்பா அப்படியேதான் கடைசிவரை இருந்தார்.

ஆனந்தம் மாதிரி ஒரு அமைப்பு அப்போது எனக்கு உதவியிருந்தால் நான் என் அப்பாவை அருகில் இருந்துகொண்டே பார்த்திருப்பேன், பாதுகாத்திருப்பேன், படித்திருப்பேன் ஆனால் உதவ யாருமே இல்லை. ஆகவே நாம் நம்மிடம் இருக்கும் காசு பணத்தைக் கொண்டு முடிந்தவரை கல்விக்கு உதவுவது என்று முடிவுசெய்தேன். நான் படித்த புதுக்கோட்டை அரசு பள்ளியின் மதிப்பையும் மாணவர்களின் தரத்தையும் உயர்த்த முடிவு செய்தேன்.

அதனடிப்படையில் இப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்கள் போல தரமான சீருடை, டை, ஷூ என்று வலம்வருகின்றனர். எனக்கு தேசிய விருது கிடைத்த போது கிடைத்த மகிழ்ச்சியைவிட அந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வேண்டிய நோட்டு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top