மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு.
விதவிதமான விரைவு கார்கள், சொகுசுபஸ்கள், குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும், நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, அழகாபுரி, காமணம்பட்டி, ஆலந்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்தான் குலதெய்வம்.
பெரும்பாலனோர் விவசாயிகள், இவர்கள் அனைவரும் தங்களது நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைபொருளில் இருந்து ஒரு பங்கை ரொக்கமாகவோ,தானியமாகவோ வருடத்திற்கு ஒரு முறை ரங்கநாதருக்கு என்று எடுத்து வைத்துவிடுவர். இப்படியே ஐந்து வருடங்களானதும் தங்களது கிராமத்தில் இருந்து மாட்டு வண்டியில் குடும்பத்தோடு கிளம்பி ரங்கநாதரை தரிசிக்கவந்துவிடுவர்.எப்போது கிளம்பலாம் என்பதை
வடசேரி மேல்புரம் கருப்பசாமி கோவில் கவுலியை கேட்டு பயணத்தேதி முடிவு செய்யப்படுகிறது. பயணத்தேதி அன்று அலங்காரம் செய்யப்பட்ட தம்பட்டம் மாடு(கோவில் மாடு) முன் செல்ல அதை தொடர்ந்து, கூண்டு கட்டிய மாட்டு வண்டிகளில் யாத்திரை கிளம்புகிறது.
ரங்கநாருக்கு தொட்டில் கட்டி வருவது மிகவும் பிடித்த விசயம் என்பதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வேண்டிக் கொண்ட பின் பிறந்த குழந்தைகளை, மாட்டு வண்டியில் தொட்டில் கட்டி அழைத்து வருகின்றனர்.இன்றைய சூழலில் எல்லோர் குடும்பத்திலும் மாட்டு வண்டி இல்லை என்பதால் இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்து வருகின்றனர். பல காலமாக நடந்துவரும் இந்த பராம்பரிய பழக்கப்படி கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு சுமார் 22 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு வந்து இங்கு ஒரு தோப்பில் வந்து தங்கியுள்ளனர்.
மொத்தம் 32 டயர் பொருத்திய மாட்டு வண்டிகளில் ஆண், பெண், பெரியவர்கள், குழந்தைகள் என சுமார் 600 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். விவசாயம் செழிக்க வேண்டும் வம்சம் தளைக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு விரதமிருந்து ரங்கநாதரை தரிசித்தனர். பின்னர் ஐந்து வருட சேமிப்பை வைத்து வடை, பாயசத்துடன் அன்னதானம் செய்தனர். இன்று இரவு புறப்பட்டு விடிவதற்குள் ஊர் போய் சேர்ந்துவிடுவர்.
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த பிரார்த்னை பயணம் எங்களுக்கு புதிய சக்தியையும், நம்பிக்கையையும். ஒற்றுமையையும் தந்து வருகிறது. வரக்கூடிய சந்ததியினரும் வாழையடி வாழையாக இந்த பாரம்பரிய வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும் என்று ஒரு சேர கூறினர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top