தேவை கொஞ்சம் அக்கறை,கொஞ்சம் காற்று,கொஞ்சம் தண்ணீர்

அந்த சிறு மரம் காய் தருமா?

தெரியாது.

சுவைக்கக்கூடிய கனி தருமா?

தெரியாது.

அவ்வளவு ஏன் நிழலாவது தருமா?

தெரியாது.

  

மரத்தின் பெயர் கூட தெரியாது தெரிந்ததெல்லாம் அது ஒரு மரம் என்பது மட்டுமே.அன்றாடம் நடைப்பயிற்சிக்கு போகும் போதும், மானசீகமாக ஒரு வணக்கம் சொல்லும் போதும் பதிலுக்கு பாராபட்சமில்லாமல் தலை எனும் இலை அசைத்து பதிலுக்கு ஒரு வணக்கம் செலுத்தும் அன்பு மரம்.அது மட்டும்தான் தெரியும்.

அந்த மரத்தை சுற்றித்தான் ஆணும்,பெண்ணும்,சிறுவர்களுமாக நின்று கொண்டு இருந்தனர்.

காரணம்

சென்னையை புரட்டி போட்ட வர்தா புயலால் பாதிக்கப்பட்டு குற்றுயிரும் குழையுயிருமாக அந்த சிறுமரம் சாய்ந்து கிடந்தது.பாதி வேர்கள் மண்ணிலும் மீதி வேர்கள் மண்ணிற்கு வெளியிலும் நீட்டிக்கொண்டு இருந்தது.

இரண்டு நாளான போதும் இன்னும் நான் மடியவில்லை என்பதற்கு அடையாளமாக மரத்தின் நுனியில் புதிய இலைகள் துளிர்விட்டுக்கொண்டு இருந்தது தண்டுகளில் பச்சையம் மாறாமல் இருந்தது.

எப்படியும் இந்த மரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு சுற்றி நின்றவர்கள் தங்களது அனைத்து உடற்பயிற்சிகளையும் நிறுத்திவிட்டு விழுந்துவிட்ட மரத்தை அழுங்காமல் பச்சைப்பிள்ளையை தூக்குவது போல தூக்கி நிறுத்தினர்.

கூடுலாக பள்ளம் தோண்டப்பட்டது தேவையான இயற்கை உரங்கள் போடப்பட்டது ஒடிந்த கிளைகளில் சாணம் பூசி கயிறு கொண்டு கட்டப்பட்டது மீண்டும் விழுந்து விடாமல் இருக்க முட்டுகம்பு கொடுத்து நிறுத்தப்பட்டது கூடுதல் மண் போடப்பட்டு அதிக இறுக்கம் கொடுக்கப்பட்டது.

சாரலையும் தாறலையும் பொருட்படுத்தாமல் இந்த வேலையை செய்து முடித்து, சேறு நிறைந்த கைகளால் நெற்றி முடியை தள்ளிவிட்டு நிமிர்ந்த சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அந்த மரம் நன்றி சொல்லி தலையாட்டியது.

நாளை அந்த மரத்தை பார்க்கவேண்டும் எப்படியும் பிழைத்துக்கொள்ளும்

காரணம்

நீராக ஊற்றியிருப்பது கள்ளம்கபடமில்லாத சிறுவர் சிறுமியரின் வேர்வையல்லவா!

இதே போல சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் நான்கு வீடுகளுக்கு நடுவில் பச்சை மரங்களை குவித்துவைத்திருக்கின்றனர்.

மாநகராட்சியோ அல்லது பேரிடர் குழுவோ யாரோ வ்நது அள்ளிச்செல்லட்டும் என்று.இன்னும் நேரமிருக்கிறது இப்போதும் வாய்ப்பிருக்கிறது அந்த மரக்குவியலை கொஞ்சம் விலக்கிபாருங்கள்.எத்தனையோ பேருக்கு எவ்வித பிரதிபலனும் பாராமல் ஆக்சிஜன் கொடுத்த மரங்கள் தாங்கள் உயிர்வாழ உங்கள் சிறு உதவி கேட்டு மன்றாடிக்கொண்டு இருக்கலாம்.

நம்பிக்கையுடன் அந்த மரங்களை பழைய குழிகளில் நட்டுப்பாருங்கள் நீங்கள் குப்பையாக நினைத்தது மரமாக வரும் வளரும் காரணம் அதற்கு தெரியும் நாம் வெறும மரமன்று மனித குலத்தின் வரமென்று.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top