துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம்


ஒட்டுமொத்த பார்வையையும் இன்றைக்கு தமிழக இளைஞர்கள் மீதுதான். எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மீசைக்கவிஞன் பாரதி பாடியது போல ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரே குரலில் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களும் எழுச்சி கொண்டு நிற்பதை பார்த்து மிரண்டு போயிருக்கிறது அதிகாரவட்டம்.

சென்னை கடற்கரை இரண்டாவது முறையாக சுனாமி எனும் பேரலையை சந்தித்தது, இந்த சுனாமிக்கு காரணம் மாணவர்கள்தான்.ஒரே ஒரு விஷயம் இந்த சுனாமி அழிக்க வரவில்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜல்லிக்கட்டை மீட்க வந்ததாகும்.

போலீசாரை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு மாணவர்களே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடிதண்ணீர்,உணவு போன்றவைகளை வாங்கிவந்து கொடுத்தனர்.விடிய விடிய குளிரில் வாடியபடி போராடிய இளைஞர்களுக்கு புத்தம் புது போர்வைகளை கொண்டுவந்து கொடுத்தனர்.எவ்வளவு உணவு வேண்டும் எங்கு கொண்டுவந்து கொடுக்கவேண்டும் சொல்லுங்கள் காத்திருக்கிறோம் என சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தகவல் கொடுத்தவண்ணம் இருந்தனர்.  


பத்து இளைஞர்கள் கூடினாலே அடுத்து என்ன நடக்குமோ என பதறிப்போகும் இன்றைய சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடிய போதும் ஒரு பிரச்னை இல்லை. ஒரு வம்பு தும்பு இல்லை. மாணவர்களுக்கு இணையாக பல ஆயிரக்கணக்கான மாணவியரும் கூடினர். இரவாகிவிட்டது பாதுகாப்பு தேவை நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொன்னபோதும் வீட்டைவிட நீங்கள்தரும் பாதுகாப்பு மேலானது என்று சொல்லி இருந்த இடத்தைவிட்டு உணவிற்கும் தண்ணீருக்கும் கூட அசையாமல் இருந்த மாணவியர்கள் பங்கு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிக பலமானது.

எங்களுக்கு யாருடைய தலைமையும் வேண்டியது இல்லை எங்களை யாரும் வழிநடத்தவும் வேண்டியது இல்லை உங்களை நம்பி வீணானது போதும் இனி எங்கள் வழியை நாங்களே பார்த்துக் கொள்வோம் எங்கள் ஜல்லிக்கட்டை நாங்கள் மீட்டு எடுப்போம் எங்கள் கலாச்சாரத்தை விட்டுத்தர மாட்டோம் எங்கள் பண்பாட்டை கூறுபோட அனுமதிக்கமாட்டோம் எங்கள் குரலும் ஒன்றுதான் எங்கள் குமுறுலும் ஓன்றுதான், என்று சொன்னது மட்டுமில்லை பெரிய பெரிய அரசியல்கட்சி தலைவர்கள் வந்தபோதும் அப்படியே போய்விடுங்கள் உங்கள் சாயத்தை பூசி எங்களை கரியாக்கிவிடாதீர்கள் என்று கும்பிடுபோட்டு அனுப்பிவைத்தார்கள்.  



இன்னோரு மாணவர் பேசும் போது எங்களுக்கு தலைவர் இல்லை என்று நினைக்காதீர்கள் இதோ எங்கள் எதிரே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் முண்டாசு தலையுடன் கைகட்டி நிற்கிறாரே வீரத்துறவி அவரே எங்கள் தலைவர் அவர் எங்களுக்கு வேண்டிய அளவு தைரியத்தை தன்னம்பிக்கையை தந்துள்ளார் அந்த தன்னம்பிக்கையோடு எங்கள் போராட்டத்தில் வெல்வோம் ஜல்லிக்கட்டை மீட்டெடுப்போம் என்றார்.

எந்த ஒரு போராட்டமும் நேரம் ஆக ஆக நசிந்துபோகும் நலிந்துபோகும் நமுத்துப்போகும் ஆனால் இளைஞர்களின் இந்த போராட்டம் நாளுக்கு நாள் மணிக்கு மணி வலுத்துக்கொண்டே போகிறது என்றால் காரணம் ஒன்றே ஒன்றுதான் அது கொண்ட கொள்கையில் லட்சியத்தில் வைத்துள்ள உறுதிதான்.

சென்னை முதல் கன்னியாகுமரிவரை சொல்லிவைத்தது போல மக்கள் வியக்குமளவிற்கும் அரசியல்வாதிகள் மிரளவைக்கும் அளவிற்கும் கிளர்ந்து எழுந்த இந்த இளைஞர் கூட்டம் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக., விவசாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நாட்டில் இன்றும் என்றும் சுபிட்சமே.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top