கொஞ்சம் அப்பாக்களும்,நிறைய அம்மாக்களும்.


அலமேலு வறுமைக்கு பிறந்தவர். வயதிற்கு வந்த உடனேயே எழுபது வயதானவருக்கு இரண்டாம்தரமாக வாக்கப்பட்டவர். திருமணமான ஒரு வருடத்திலேயே கணவனை இழந்தவர். இதுதான் வாழ்க்கை என்பது தெரிந்து கொள்ளுவதற்கு முன்பாகவே விதவைக்கோலம் பூண்டவர்.

ஒரு இளம் பெண்ணை வாழ்க்கையை கிட்டத்தட்ட சூறையாடிய நிலையில் எழுபது வயதில் இறந்து போன கணவனை குறைசொல்லாத உலகம், மாறாக கணவனை முழுங்கியவள் என்று அலமேலுவின் மீது வார்த்தைகளால் நெருப்பை வாரிக்கொட்டியது.  



மறுமணம் என்பதே கெட்டவார்த்தையாக கருதிய காலமது என்பதால் மிஞ்சிய வாழ்நாளைக் கழிக்க உறவுகளின் வீடுகளில் சம்பளம் வாங்காத வேலைக்காரியாக உழைத்துத் தேய்ந்தார்.

உழைத்து உழைத்து களைத்துப் போனவருக்கு வயது எழுபதைத் தாண்டிய நிலையில் கண்ணில் காட்ராக்ட் எனும் புரை ஏற்பட்டு பார்வையில் திரை விழுந்தது. இத்தனை நாள் உழைத்த பாட்டியாயிற்றே என்ற நன்றி சிறிதும் இல்லாமல் பார்வையற்ற பாட்டியை சுமையாக நினைத்தவர்கள் வீதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

எதிரில் நிற்பது மரமா? மனிதனா? காசு கேட்பதா? சாப்பாடு கேட்பதா? என திக்கற்ற நிலையில் இருந்த அலுமேலுவை நல்ல மனிதர் ஒருவர் ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்தார். சென்னை அம்பத்துார் கள்ளிகுப்பம் பகுதியில் இயங்கிவரும் ஆனந்தம் முதியோர் இல்லம் முழுக்க முழுக்க உறவுகளும், வருமானமும் இல்லாத முதியோர்களை ஆதரித்து பாதுகாத்துவரும் இல்லமாகும்.  




இதன் நிர்வாக அறங்காவலர் பாகீரதி, பாங்க் ஒன்றில் முதியோர் பென்ஷன் வழங்கும் பிரிவில் வேலை பார்க்கும் போது அவர்கள் படும் சிரமத்தை பார்த்து ரொம்பவே மனம் பாதிப்பு அடைந்தவர். இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தவிப்பு காரணமாக விஆர்எஸ் வாங்கிக்கொண்டு ஒரு சிறு வீட்டில் ஆனந்தம் முதியோர் இல்லத்தை கடந்த 2003ம் ஆண்டு துவக்கினார். நல்லவர்கள் நன்கொடையாளர்கள் உதவியால் இப்போது பதினைந்து கிரவுண்டில் 24000 சதுர அடி கட்டிடத்தில் 73 பெண்கள் 28 ஆண்களுடன் சிறப்பாக இயங்கிவருகிறது.

மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட இவ்வளவு வசதி இருக்குமா என்று சந்தேகப்படும் அளவிற்கு இங்குள்ள முதியோர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக செய்துதரப்பட்டு உள்ளது.
அறுநுாறு சதுரஅடி அறையில் எட்டு பேர் விசாலமாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர். முதியோர்களின் தேவை என்னவாக இருக்கும் என்று தேடிப்பிடித்து அதை இங்கு அமைத்துள்ளனர். நுாலகம், டி.வி.அறை, பூஜைக்கூடம், உணவுக்கூடம் என்று அமர்க்களப்படுகிறது. தரமான உணவு உடை இவற்றுடன் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் இங்கு பஞ்சமேயில்லை.

இங்குள்ள முதியோர்களுக்கு சிகிச்சை தருவதற்காக துவங்கப்பட்ட இலவச மருத்துவஉதவி மையமானது அந்த பகுதி கிராம மக்களுக்கும் பயன்படட்டும் என்ற நோக்கோடு சகலவசதிகளுடன் விரிவு படுத்தப்பட்டுள்ளது, தினம் நுாறு நோயாளிகளுக்கு குறைவின்றி பயன்பெற்றுவருகின்றனர். தங்கியுள்ளவர்கள் அனைவரும் 60 வயது முதல் 90 வயது வரை உள்ள தாத்தா பாட்டிகள் என்றாலும் இங்கு இருப்பவர்கள் யாரும் அவர்களை தாத்தா பாட்டி என அழைப்பதில்லை அனைவருக்குமே அம்மா, அப்பாக்கள்தான்.

இந்த அம்மா அப்பாக்களில் நல்ல ஆசிரியர்களும் இருந்ததன் காரணமாக அந்த பகுதி ஏழை மாணவ மாணவியருக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கும் சென்டர் ஆரம்பிக்கப்பட்டு இப்போது அதுவும் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 150ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இப்போது மீண்டும் அலமேலு பாட்டியிடம் வருவோம்.

ஆனந்தம் இல்லத்தில் சேர்த்துவிடப்பட்ட அலமேலு பாட்டியை மருத்துவ பரிசோதனை குறிப்பாக கண்பரிசோதனை செய்த போது காட்ராக்ட் அறுவை செய்தால் பார்வை திரும்பிவிடும் என்றனர், உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, எல்லாம் நல்லபடியாக முடிந்து 'இப்போது கண்கட்டை திறக்கப்போகிறோம் நீங்க முதல்ல எந்த சாமிய பார்க்க விரும்புறீங்க' என்று கேட்ட போது 'சாமிய அப்புறம் பார்த்துக்கிறேன் முதல்ல பாகீரதியைத்தான் பார்க்கணும்' என்று சொல்லி பார்த்தவர். பார்வை பழையபடி திரும்பி பத்தாண்டாகிவிட்ட நிலையில் இப்போது ஆனந்தத்தில் அளவில்லாத ஆனந்தத்தோடு வலம் வருகிறார்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top