'ஒரு மணி நேர' போலீஸ் அதிகாரி ஸ்டீவன் மேத்யூ.


  சென்னை அசோக்நகர் காவல் நிலையத்திற்கு எத்தனையோ அதிகாரிகள், விஐபிக்கள் வந்திருக்கின்றனர் ஆனால் அப்போதெல்லாம் இல்லாத பரபரப்பும் சந்தோஷமும் இப்போது வரப்போகும் அதிகாரிக்காக அனைவரது முகத்திலும் தவழ்ந்தது.

இத்தனைக்கும் வரப்போகும் அந்த அதிகாரி இந்த காவல் நிலையத்தில் ஒரு நாள் இல்லையில்லை ஒரு மணிநேரம்தான் அதிகாரியாகவே இருக்கப்போகிறார், ஆனாலும் தடபுடல் வரவேற்பு வழங்க காவல் நிலையம் தயராக இருந்தது.

யார் அந்த ஒரு மணி நேர அதிகாரி

சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜூவ் தாமஸ்,இவரது மகன் ஸ்டீவன் மேத்யூ(19)மூளை வளர்ச்சி குறைந்தவர்.இவர்கள் கத்தார் நாட்டில் இருக்கும் போது பிரதமர் மோடி அங்கு வந்திருந்தார்.பிரதமருக்கு இந்திய துாதரகம் சார்பில் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் நடன வரவேற்பு வழங்கப்பட்டது.  



நாட்டியம் முடிந்ததும் பிரதமர் அந்த குழந்தைகளிடம் பிரியமாக பேசி அவர்களது பெயர் விருப்பம் எல்லாம் கேட்டார் அப்போது ஸ்டீவன் மேத்யூ எனக்கு ஒரு நாள் போலீஸ் அதிகாரியாகனும் என்று மழலை மாறாத தன்மையுடன் கூறியிருக்கிறார்.

இப்படி இவர்களுக்குள் நடந்த உரையாடலை குறிப்பிட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தாமஸ் மெயில் அனுப்பினார்.நீங்கள் சென்னை வந்ததும் வந்து சந்தியுங்கள் என்று தாமஸ்க்கு பதில் மெயில் வந்தது.

அதன்படி சென்னை வந்து தன்னை சந்தித்த தாமஸை வரவேற்று உபசரித்த ஆணையர் அசோக்நகர் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மேத்யூ
அதிகாரியாக இருக்க ஏற்பாடு செய்தார். போலீஸ் உடைக்கான அளவு எடுக்கப்பட்டு இரண்டு நாள் முன்னதாகவே வீட்டிற்கு கொண்டுபோய் கொடுத்தனர்.

இரண்டு நட்சத்திரம் கொண்ட சப்-இன்ஸ்பெக்டருக்கான போலீஸ் உடையை போட்ட உடனேயே மேத்யூ முகத்தில் அப்படி ஒரு பிரகாசம், வீட்டிற்குள் தனி கம்பீரத்துடன் வீறு நடை போட்டவர் தான் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கப்போகும் நாளுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது. 

பெற்றோர் துணையுடன் காவல் நிலையத்திற்கு வந்திறங்கிய மேத்யூவை மலர்க்கொத்து கொடுத்து இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் வரவேற்றார் பின் நிலையத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்த அனைவரும் அன்பொழுக கைகொடுத்து வரவேற்றனர், பாராபட்சமில்லாமல் அனைவருக்கும் மேத்யூ சல்யூட் செய்தார்.

அவருக்கான இருக்கையில் அமரவைக்கப்பட்டதும் நிலையத்தில் உள்ள வாக்கி டாக்கிகளை ஆராய்ந்துவிட்டு சிறிது நேரம் காவல் நிலையத்தை சுற்றிப்பார்த்தார் பின் ரோந்து வாகனத்தில் ஏறி ரோந்து பயணம் மேற்கொண்டார், வாகனத்தில் இருந்த மைக் மூலம் பேசினார்.

இப்படி ஒரு மணி நேர அதிகாரியாக வலம் வந்த மேத்யூவின் மனமும் பணிநேரமும் நிறைவடைந்த போது மேத்யூவுடன் அனைவரும் சேர்ந்து குரூப் படம் எடுத்துக்கொண்டனர்.

மேத்யூவின் தந்தை தாமஸ் கூறுகையில் எனது மகனின் நிறைவேற்ற முடியாத நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ளது இந்த உற்சாகத்திலேயே இன்னும் பல வருடங்கள் எங்களுடன் மேத்யூ உலா வருவான், அவனை ஆனந்தப்படுத்திய தமிழக காவல்துறைக்கு மிகவும் நன்றி என்று கூறிய போது அவரது கண்களிலும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கண்களிலும் அப்படியொரு ஆனந்த கண்ணீர்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top