சூரியன் தன் வேலையை முடித்துவிட்டு மேகங்களுக்கு நடுவே மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்க, மக்களும் அவரவர் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.கார்த்தியும் தன் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.கால்கள் வீட்டை நோக்கி நடக்க அவன் கண்ணும் கவனமும் தன் கையில் இருந்த மொபைலில் இருந்தது.குனிந்தே வந்தவன் யாரையோ இடித்துவிட மொபைல் கீழே விழுந்தது. "அய்யோ..."என்று பதறி எடுத்து ஸ்கிராச்சாயிடுச்சா என்று பார்த்தவன் பின், யார் இடித்தது என்று ஸ்லோ மோசனில் திரும்பி பார்க்க அங்கு ஒரு பாட்டி தான் இவன் இடித்ததில் தள்ளாடி நின்றார்.
(நடு ரோட்லையா நின்னா போஸ்கொடுப்பாங்க..ஓரமா நிக்கிறதில்ல..) என்று முதலில் மனதிற்குள் கடுப்படித்தவன் பின் நகர முடியாமல் அந்த பாட்டி சோர்ந்து நிற்பதை பார்த்ததும் அவன் மனதில் குற்றவுணர்ச்சி படர்ந்தது. 'நாமா தான் ரோட்ட பார்த்து நடந்திருக்கனும்..'என எண்ணினான்.
அவரருகில் சென்று, "ஸாரி பாட்டி பாக்கம வந்துடேன்..தண்ணி வேணுமா.."என கேட்க
"கொஞ்சம் குடுப்பா..நல்லாயிருப்ப.." என்றார்.
உடனே அருகில் இருந்த டீக்கடையிலிருந்து வாங்கி வந்து தந்தான்.குடித்துவிட்டு நன்றி சொல்லி அந்த பாட்டி நடக்க அவரது முடியாத நிலையை கண்டு கார்த்திக்கு பரிதாபமாக இருந்தது.
"பாட்டி வீடு எங்கே என்று சொல்லுங்க..நானும் கூட வருகிறேன்.."என்று கார்த்தி கூற அவனை அவர் நிமிர்ந்து பார்த்தார்.
"ஏன் அப்படி பார்கிறீங்க..நான் திருடன்லாம் இல்லை.."
"ச்சேசே அப்படிலாம் இல்லப்பா..உன்னை பார்த்தாலே தெரிகிறது.."
"நல்லபுள்ளனா...?"என்று சிரித்து கொண்டே கேட்க "இல்ல நீ அதுக்கெல்லாம் லாய்கில்லையென்று.."என கூறி அவர் நடந்தார்.
"வயசானாலும் நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..."என்று முகத்தை சுளித்து கொண்டு திரும்பினான்.ஆனால் அவனுக்கு ஒருமாதிரி உருத்தளாக இருக்க மீண்டும் பாட்டி பக்கமே திரும்பி நடந்தான்.
"ஓய் பாட்டி நில்லு.." என்று அவன் கூறி அவருடன் நடந்தான்.
(எல்லாம் ஓய் செல்ஃபீ என்று பொண்ணு பிண்ணாடி போவானுங்க..நீ என்னான பாட்டி பின்னாடி போறியே வெக்கமா இல்ல) என்று அவன் மூலை காரித்துப்பியதை கண்டு கொள்ளாது நடந்தான்.
"முடியவில்லையென்றால் ஆட்டோ வைத்தாவது போக வேண்டியதுதானே... அப்படி எங்கே போயிட்டு வரீங்க..."என்று கார்த்தி கேட்க, ஒரு பெருமூச்சுடன்
" மாத்திரை தீர்ந்து இரண்டு நாட்களாகிவிட்டது..
எப்பொழுதும் வாங்கி தரும் எதிர்த்த கடை பையன் ஊருக்கு போயிருக்கான்..அதான் நானே கடைக்கு சென்று வாங்கி வந்தேன்.போகும் போது ஆட்டோவில் தான் சென்றேன்.இந்த தெரு பக்கமெல்லாம் வந்து ரொம்ப நாளாச்சே என்று நடந்துவந்தேன்..ம்ஹீம் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது..."என்று பதிலளித்தார்.
"சரி துணைக்கு யாரையாவது அழைத்து வரலாம்ல..உங்களுக்கு பிள்ளைங்க இல்லையா..?"
"ஏன் இல்லை..இரண்டு மகன்..இரண்டு மகள்...அவர்களுக்கு இரண்டு இரண்டு பசங்க..பேரன் பேத்தி என்று பெரிய குடும்பம்.."என்று பாட்டி சொல்ல, "அடடேய்ப்பா..அப்புறம் என்ன..?யாரையாச்சும் துணைக்கு அழைத்து வரவேண்டியது தானே.."என கேட்டான்.
"யாரும் எனக்கூட இல்லப்பா..அவங்கவங்க குடும்பத்தோடு இருக்காங்க..நான் இங்கு தனியாக தான் இருகேன்.."என்றார் சோகம் தொனிந்த குரலில்...
"நடக்கவே கஷ்ட படுறீங்க..எப்படி தனியா இருப்பீர்கள் என்று சிந்திக்ககூட மாட்டாங்களா..!? மானசாட்சியற்றவர்கள்.."என்று சற்று கார்த்தி கோபமாக கேட்டான்.
"அவங்க மேல தப்பில்லை..தவறு செய்தது நான் தான்.."என்று வேதனையோடு சொல்ல
"சும்மா உங்க புள்ளைங்கள குறை சொல்றேன் என்று அவர்களுக்கு பரிந்து பேசாதீங்க.."என்றான்.
"இல்ல..நான் உண்மையை தான் சொல்றேன்..என் திமிரு அகங்காரத்தின் பலன் தான் நான் இப்போது இப்படி இருக்க காரணம்.."
"என்ன சொல்றீங்க.."என்று குழப்பமாக கார்த்தி கேட்க சற்று நேரம் மௌனமாக நடந்தவர் பின் தானாக பேசினார்.
"அப்போலாம் நான் என்றால் என் வீட்டில் எல்லாருக்கும் பயம்..நான் சொல்வதை தான் அனைவரும் கேட்டாக வேண்டும்..என்னை மீறி எதையும் செய்ய மாட்டார்கள்..எல்லாரையும் எனக்கு கட்டுபட்டு நடக்கும் படி வைத்திருந்தேன்.யார் பேச்சை மதிக்காமல் எவ்ளோ திமிரு.. அதையெல்லாம் இப்போ நினைத்தால் எனக்கே பயமாக இருக்கிறது..என் புருஷன் தான் சொல்லிட்டே இருப்பார் 'இப்படி இருக்காதே மதி..இதனால் பாதிக்க படபோவது நீதான்..பசங்களுக்கு உன்மேல வெறுப்பை ஏற்படுத்தாதே..' என்று படித்து படித்து சொன்னார்.அவர் பேச்சை கேட்டிருந்தால் இப்போது நான் இந்த கதிக்கு அளாகியிருக்க மாட்டேன்.."என்றவரின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது..கார்த்தி எதுவும் பேசாமல் அவர் பேசுவதை மௌனமாய் கேட்டு கொண்டே நடந்தான்.
"புள்ளைங்க நாலு பேருக்கும் கல்யாணமும்ப ண்ணிணோம்..மருமகளுங்கள சொல்லவே வேணாம். நின்றால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம் என்று படாத பாடல்லவோ படுத்தி வைத்தேன்..நான் அப்படி இருந்ததால் என் புருஷன் இருந்தவரை எனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை..ஆனால் அந்த மனுஷம் என்ன விட்டுடு சாமிட்ட போயிட்டார்..அப்போதான் என் மூத்த மகன் தலை தூக்க ஆரம்பித்தான்.நான் சொல்வதை எதிர்த்து கொண்டு அவன் நினைத்ததை செய்ய துவங்கினான்.சிறு சிறு விஷயத்தில் தொடங்கி சொத்து பிரிப்பத்தில் வந்து நின்றது.தன் பாகத்தை பிரித்து தரும்படி சண்டை போட்டான்.அப்போது நடந்த வாக்குவாத்தில் எ-என்னையை அடிக்க கை ஓங்கி விட்டான்.சத்தியமா சொல்றேன் தம்பி நான் எவ்ளோதான் திமிரா இருந்தாலும் என் மூத்த மகன் மேல் அதிக நம்பிக்கையும் பாசமும் இருந்தது.ஆனால் அன்று அவன் என்னை பேசிய பேச்சு சுக்கு நூறாய் உடைத்தது.. எல்லா சொத்திலும் தன் பாகத்தை பிரித்து கொண்டு போயிவிட்டான்....நான் எப்போ சாவேன் வீட்டின் பங்கு எப்போ கிடைக்கும் என காத்திருகிறான்."
"என் பொண்ணுங்க அப்பா இருந்தப்பயாவது அடிக்கடி வந்தாலுங்க..ஆனால் அவர் இறந்த பின் இந்த வீட்டு பக்கம் தலையே வைப்பத்தில்லை.அந்த அளவுக்கு என் மேல் வெறுப்பு..ஆனால் என் கடைசி மகனிற்கு நான் என்ன செய்தாலும் பாசமாக தான் இருந்தான்.இந்த பாவி அவனை புரிந்து கொள்ளாமல் அவனும் மூத்தவன் போல் ஏதோ காரியமாக தான் நடிக்கிறான் என்று நினைத்து அவன் எது செய்தாலும் சந்தேகாத்துடனே பார்த்து கரித்து கொட்டி அவனும் என்னைவிட்டு போக நானே காரணமாகி விட்டேன்.வெளியூரில் வேலை கிடைத்துவிட்டது என கூறி அவன் குடும்பத்தோடு போய்விட்டான்.பெற்ற கடனுக்காக மாதம் மாதம் பணம் அணுப்புவான்.அனால் என்னை பார்ப்பதை பேசுவதை அவனும் தவிர்த்துவிட்டான்.
இப்போழுது என்னைவிட்டு பிரியேன் என்று இருப்பது பீப்பி(Bp)யும் சுகரும் தான்.."என்று கூறி விரக்தியில் சிரித்தார்.
"வேலைகாரி காலையில் வந்து வீட்டு வேலைகளை பார்த்துவிட்டு ஒரு வேளைக்கு சமைத்து வைத்துவிட்டு போயிடுவாள்.அதன் பின் நாள் முழுதும் தனிமையும் என் கசப்பான நினைவுகளும் தான்..
நாட்கள் ஆக ஆக உடம்பு இன்னும் மோசமாக போகிறது..பாத்ரூம் போக கூட மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகிறேன்.
அந்த தனிமை,
வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைத்தது.இருந்தும் என்ன பயன் வாழ வேண்டிய காலத்தில் அதை வீணாகிவிட்டேனே...பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லை ஏன் தவித்த வாய்க்கு தண்ணீர் தர கூட நாதியில்லை...தனிமையில் நினைத்து இரசிக்க இனிமையான அணுப்பவமும் இல்லை..கடந்த காலத்தை நினைக்க நினைக்க என் மேல எனக்கு வெறுப்பு தான் அதிகரிக்கிறது.
நான் செய்த ஒவ்வொன்றுக்கும் இப்பொழுது வருந்துகிறேன்.எல்லாரிடம்
மன்னிப்பு கேட்டும் யாரும் என் பேச்சை கேட்க கூட விரும்பவில்லை. நான் ஏன் இன்னும் உயிருடன் இருகேன் என்றும் தெரியவில்லை.."என்று கூறியவர் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் மனசுவிட்டு அழுதார்.கார்த்தி திகைத்து நின்றான்.ஆருதல் சொல்ல நாயெழவில்லை..எல்லா உணர்ச்சிகளுக்கும் மேல் இப்பொழுது பாட்டியின் நிலையை கண்டு பரிதாமாக இருந்தது.
"இதோ..இந்த வீடு தான் ப்பா.."என்று கண்ணை துடைத்து கொண்டு அவர்களுக்கு முன்னிருந்த வீட்டை சுட்டி காட்டினார்.
"ஒரு உதவி பண்றியாப்பா..."
"ம்ம் சொல்லுங்க பாட்டி.."
"கால் ரொம்ப வலிக்குது..நான் இங்க உட்காரேன்..செத்த வீட்ட திறக்குறியா..."என்று அவர் கேட்டதும் சரி என்று சாவியை வாங்கி திறந்தான்.அவரை கைத்தாங்களாக பிடித்து வீட்டில் சேரில் அமர வைத்தவன் ஃபேன் ஸ்விட்ச் எதுவென பார்த்து போட்டு விட்டான்.
"வீட்டுக்கு வந்த புள்ளைக்கு சாப்பிட கூட எதுவும் தரமுடில..ஒரு நிமிஷம் இரு.."என்று தன் பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்ட,
"இதலாம் வேண்டாம் பாட்டி..நான் கிளம்புறேன்.."என்று கிளம்ப
"வாங்கிகோப்பா..ரொம்ப நாள் கழித்து இவ்ளோ பேசியிருகேன்..ஏதோ நீ கேட்கவும் எல்லாத்தையும் சொல்லனும் போல இருந்தது..உன் பாட்டி கொடுத்தா வாங்கிக்க மாட்டியா.."என்றதும் வேறு வழியின்றி வாங்கி கொண்டான்.அவரிடம் விடை பெற்று வாசல்வரை சென்றவன் ஏதோ நினைத்தவனாய் திரும்பி பார்க்க வாங்கிவந்த மாத்திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தவர் "உன்னால் எப்படி என் வலியை போக்க முடியும்.."என்று விரக்தியில் வீசி ஏக்கத்துடனும் விட்டத்தை பார்த்தார்.அதுவரை கலங்கி இருந்த கார்த்தியின் கண்கள் கண்ணீர் வழிந்தது..
தான் செய்த தவறுகளை உணர்த்த போது காலம் அவர் கையில் இல்லை..இப்போது அவர் என்ன செய்தாலும் கடந்த காலம் மீண்டும் வரப்போவதில்லை.மற்றவர்களிடம் அவர் சம்பாத்தித்த வெறுப்பும் மறைய போவதில்லை.
வாழ்க்கை... இறைவன் நமக்கு கொடுத்த வரம் தான்.அதை இழந்தால் மீண்டும் பெறவும் முடியாது..அடுத்து என்ன நடக்கும் என அறியவும் முடியாது.
நமது என்று நாம் சொல்லி கொள்ளும் உயிர் கூட நம்மைவிட்டு எப்பொழுது பிரியும் என்று தெரியாத நிலையில் எதற்கு இந்த அகங்காரம்,ஆணவம் எல்லாம்.....?
*******************
A/N:
Hi friends.,..நீங்க பாட்டிய பற்றி என்ன நினைக்குறீங்க...கதையை பற்றிய உங்கள் கருத்தை Comment பண்ணுங்க :)
உங்கள் பாட்டியைப் பற்றி கதைகள் இருந்தால், பகிருங்கள் எங்களுடன் comment'ல்.
(16/12/16)
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top