70 முகுந்தனின் திட்டம்
70 முகுந்தனின் திட்டம்
கதவை சாத்தி தாளிட்ட முகுந்தன், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான். அவனுக்கு பக்கத்தில் அமர்ந்த மீரா, அவன் தோளை தொட்டு,
"ஏன் இப்படி இருக்கீங்க?" என்றாள்.
*உனக்கு தெரியாதா?* என்பது போல் அவளை பார்த்தான் முகுந்தன்.
"கொஞ்ச நாள் அவங்க இங்க இருக்கட்டும். அதுக்கப்புறம் நம்ம பேசி அவங்களை அனுப்பி வைக்கலாம்"
பதில் கூறாமல் அமைதியாய் படுத்துக் கொண்டான் அவன்.
"நீங்க எப்படித்தான் நம்ம பிள்ளையை வளர்த்து ஆளாக்க போறீங்கன்னு தெரியல. அவன் கிட்ட கூட இப்படித்தான் சண்டை போட போறீங்களா?" என்றாள்.
அவளுக்கு பதில் கூறாமல், அவளை அணைத்துக் கொண்டான், ஆனால் எச்சரிக்கையாக...!
"அப்செட்டா இருக்காதீங்க"
"நான் ஒன்னும் அப்செட்டா இல்ல. ஆனா என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்"
"என்ன செய்யப் போறீங்க?"
"பொறுத்திருந்து பாரு"
"அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் செய்யாதீங்க"
"ட்ரை பண்றேன்"
அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியவில்லை அவளுக்கு. அதைப் பற்றி யோசித்தபடி, அவனை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனாள் மீரா.
மறுநாள் காலை
சீக்கிரம் எழுந்த முகுந்தன், முகம், கை, கால் கழுவிக்கொண்டு சமையலறைக்கு சென்றான். வரவேற்பறையில் இருந்த சோபாவில், கேசவனும், ஜனார்தனனும் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டான். அவனுக்கும் மீராவுக்கும் காப்பி கலந்து எடுத்துக்கொண்டு, சமையலறையை விட்டு அவன் வெளியே வந்த போது, விருந்தினர் அறையில் இருந்து வெளியே வந்தார் வைதேகி.
"என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல மாப்பிள்ள?" என்றார்.
"பரவாயில்ல அத்தை, இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே... அது உங்களுக்கும் தெரியும் தானே?" புன்னகையுடன் அங்கிருந்து நடந்தான் முகுந்தன்.
காலை சிற்றுண்டியும், மதிய உணவையும் அவர்களுக்காக சமைத்தார் வைதேகி. அலுவலகம் செல்ல தயாராகி வந்து அவர்கள் சிற்றுண்டியை உண்டார்கள்.
"இன்னைக்கு சாயங்காலம் எங்க ஆஃபீஸ்ல ஒரு பார்ட்டி இருக்கு. நாங்க நைட்டு சாப்பாட்டுக்கு வர மாட்டோம். நீங்க எங்களுக்காக காத்திருக்காதிங்க" என்றான் முகுந்தன்.
அதைக் கேட்டு சாப்பிடுவதை நிறுத்திய மீரா, அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
"என்ன பார்ட்டி?" என்றார் கேசவன்.
"எங்க கம்பெனி, ரொம்ப பெரிய டீல் ஒன்னை முடிச்சிருக்காங்க. அதுக்காக பார்ட்டி"
"அப்படியா?"
"ஆமாம்" என்று சாப்பிட்டுவிட்டு எழுந்தான் முகுந்தன்.
"மீரா, மதியான சாப்பாட்டை மறக்காம கரெக்டா சாப்பிடு" என்றார் வைதேகி.
"நீங்க கவலைப்படாதீங்க அத்தை. நான் தான் இருக்கேனே, நான் அவளை சாப்பிட வைக்கிறேன்" என்றான் முகுந்தன்.
அவர்கள் வீட்டை விட்டு கிளம்பினார்கள். முகுந்தன் காரை ஸ்டார்ட் செய்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.
"ஏன் அப்படி பாக்குற?" என்றான்.
"எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நம்ம ஆஃபீஸ்ல எந்த பார்ட்டியும் நடக்கப்போறதில்ல" என்றாள் அவள்.
"அதனால் இப்ப என்ன?"
"நீங்க செய்ய நினைச்சது இது தானா?"
"நீ தானே நான் அவங்கள காய படுத்த கூடாதுன்னு சொன்ன? அப்புறம் நான் வேற என்ன தான் செய்றது?"
முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு நேராக அமர்ந்து கொண்டாள் மீரா.
"நான் அவங்க கிட்ட இவ்வளவு தன்மையா நடந்துக்குறதுக்காக நீ சந்தோஷம் தான் படணும்"
"அப்படின்னா, சாயங்காலம் நம்ம என்ன பண்ணப் போறோம்?"
"நம்ம பார்ட்டி கொண்டாடலாம்"
"என்ன பார்ட்டி?"
"என்னை அப்பாவா ஆக்குனதுக்காக உனக்கு நான் பார்ட்டி கொடுக்க போறேன்"
"அப்படியா? அப்படின்னா நாளைக்கு என்ன செய்வீங்க?" என்றாள்.
"உன்னை நான் அம்மாவா ஆக்கினத்துக்காக நீ எனக்கு பார்ட்டி கொடு" என்றான் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
"நீங்க செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல" என்றாள்.
"கவலைப்படாத, அவங்க சென்னைக்கு போனதுக்கு பிறகு, நான் இப்படி எல்லாம் செய்ய மாட்டேன்"
"அவங்க கிட்ட நான் பேசுறேன்" என்றாள் மீரா.
"வேண்டாம். அப்படி செய்யாத"
"ஏன்?"
"உங்க அம்மா அப்பா நீ சொல்றத கேப்பாங்க. ஆனா, எங்க அப்பா அம்மா... முக்கியமா, எங்க அம்மா யாரு என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. மத்த எல்லாரையும் ஊருக்கு அனுப்பிட்டு, அவங்க மட்டும் இங்க இருப்பாங்க. நீயும், அவங்க தனியா இருக்காங்களேன்னு அவங்க கூட போய் உட்கார்ந்துகிட்டு என்னை கடுப்பேத்துவ"
"அவங்க புரிஞ்சுக்குவாங்க"
"மாட்டாங்க. உன் மனசை மாத்த தான் முயற்சி பண்ணுவாங்க"
பெருமூச்சு விட்டாள் மீரா.
அலுவலகம் வந்த அவர்கள், வழக்கமான வேலைகளை செய்ய துவங்கினார்கள். இருவரும் இணைந்து மதிய உணவை உண்டார்கள். அனைத்தும் சாதாரணமாகத் தான் இருந்தது, மாலை வரை...!
மீராவை தன் அறைக்கு அழைத்த வாசுதேவன், தங்களது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான கோப்பை அவளிடம் கேட்டான். அதை எடுத்துக்கொண்டு அவனது அறைக்கு சென்றாள் மீரா. அந்த ப்ராஜெக்ட் குறித்து அவரிடம் விவாதிக்க துவங்கினான் வாசுதேவன்.
"இந்த ப்ராஜெக்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க மீரா? இதை யார் செஞ்சா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறீங்க?"
"இதை யார் வேணும்னாலும் செய்யலாம், வாசு"
"அப்படியா நினைக்கிறீங்க?"
"ஆமாம், இது நம்முடைய போன பிராஜெக்ட் மாதிரி ஒன்னும் கஷ்டமானது இல்ல. ஒரு வாரத்திலேயே இதை ஈசியா முடிச்சிட முடியும்"
"அப்படின்னா இதை நீங்களே செஞ்சிடுறீங்களா? இந்த ப்ராஜெக்ட் ஓட பொறுப்பை நீங்க ஏத்துக்க முடியுமா?"
சிறிது நேரம் யோசித்த மீரா, சரி என்று தலையசைத்தாள். அந்த ப்ராஜெக்ட் குறித்து தனது யோசனைகளை அவளுடன் பகிர்ந்து கொண்டான் வாசுதேவன். மீராவும் அதில் முழு ஈடுபாடு காட்டினாள்.
மணி ஆறானது. அனைவரும் வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். முகுந்தன் தனது வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தான். மீராவின் அறையில் அவள் இல்லாததை பார்த்தான்.
"யாரை தேடுற, பங்கு?" என்றான் நந்தா.
"நான் யாரை தேடுவேன்?"
"ஓ... நீ என்னை தான் தேடிக்கிட்டு இருக்கியா?" என்றான் கிண்டலாய்.
அவனைப் பார்த்து முறைத்து விட்டு, வாசுதேவனின் அறைக்கு சென்றான் முகுந்தன். அவன் கதவை தட்ட,
"உள்ளவா முகுந்தா" என்றான் வாசுதேவன்.
உள்ளே நுழைந்த முகுந்தன்,
"வந்திருக்கிறது நான் தான்னு உனக்கு எப்படி தெரியும் வாசு?" என்றான்.
"இது என்ன பெரிய ராக்கெட் சயின்ஸா? உன்னோட ஒய்ஃப் என் காபின்ல வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. அப்படின்னா வந்திருக்கிறது நீயா தானே இருக்கணும்?" என்று சிரித்தான்.
"என்ன விஷயம், வாசு? ஆஃபீஸ் டைம் முடிஞ்சதுக்கு பிறகு மீராவை எங்கேஜ் பண்ணிக்கிட்டு இருக்க?"
அதே நேரம் அவர்களது அறைக்குள் நுழைந்த நந்தாவும், ஜெகதீஷும், ஜரிகை காகிதங்களை உள்ளடக்கிய செலிப்ரேஷன் பிளாஸ்டரை வெடித்து, அவர்கள் மீது வண்ணமயமான ஜரிகை காகித துனுக்குகள் விழும்படி செய்தார்கள். முகுந்தன் ஒன்றும் புரியாமல் நிற்க, மீரா அந்த காகிதங்களை சிரித்தபடி தன் கையில் பிடித்தாள். அப்பொழுது ஒரு கேக்குடன் அந்த அறைக்குள் நுழைந்தாள் வைஷ்ணவி. அதில் 'கங்கிராஜுலேஷன்ஸ், கோயிங் டு பி பேரன்ட்ஸ்' என்று எழுதி இருந்தது. (பெற்றோராக இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்) மீராவிடம் ஒரு கத்தியை நீட்டிய வைஷ்ணவி, அதை வெட்டுமாறு அவளுக்கு சைகை செய்தாள்.
"சீக்கிரமா கேக்கை வெட்டுங்க மீரா. எனக்கு பசிக்குது" என்றான் நந்தா.
முகுந்தனை நோக்கி கத்தியை நீட்டினாள் மீரா. அவள் கையை பற்றி கொண்டு அந்த கேக்கை வெட்டினான் முகுந்தன். அதிலிருந்து ஒரு சிறு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான். முகுந்தனுக்கு ஊட்டி விட்ட பிறகு மீரா அதை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தாள்.
முகுந்தனிடம் வந்த நந்தா,
"பங்கு உனக்கு *இந்த மாதிரி* விஷயம் எல்லாம் கூட தெரியுமா?" என்றான் ரகசியமாக. அவனை பார்த்து முறைத்தான் முகுந்தன்.
"அதுக்கு கேட்கல ப்பா, நீ தான் எப்பவும் தனியாவே இருந்து பழகியவன் ஆச்சே...! நீ தான் யார்கிட்டயும் பேசக்கூட விரும்ப மாட்டியே...! அப்புறம் இந்த நாலேட்ஜ் உனக்கு எப்படி வந்தது?"
தன் புருவத்தை உயர்த்தி, அபாயகரமான பார்வை பார்த்தான் முகுந்தன்.
"இல்ல, இல்ல, இது ரொம்ப கஷ்டமான மேட்டர் ஆச்சேன்னு கேட்டேன்"
"பார்த்து... நீ இப்படி எல்லாம் பேசுறத வைஷ்ணவி கேட்டா, கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு போயிடப் போறா" என்றான் முகுந்தன்.
"மாட்டா... நான் ஏற்கனவே அதையெல்லாம் நிறைய புக்கெல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்"
"ஓ..."
"நீ எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொல்லேன்"
"நான் ஏன் உன்கிட்ட சொல்லணும்?"
"நானும், உன்னோட வழியில, உன்னை ஃபாலோ பண்ணி வருவேன் இல்ல?" என்று பல்லை காட்டினான் நந்தா.
"ஒன்னும் தேவையில்ல. நீ உன் வழியில் போ"
"முகுந்தன், நம்ம எல்லாரும் இன்னைக்கு ஒரு பார்ட்டி கொண்டாடலாம்" என்றான் வாசுதேவன்.
மீராவும் முகுந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"யார் நமக்கு பார்ட்டி கொடுக்க போறது?" என்றான் நந்தா.
"நான் தான் கொடுக்கப் போறேன்" என்றான் வாசுதேவன்.
"இல்ல, இல்ல, இன்னைக்கு நான் கொடுக்கிறேன் பார்ட்டி" என்றான் முகுந்தன்.
"பரவாயில்லை விடு முகுந்தா. நான் பார்த்துக்கிறேன்" என்றான் வாசுதேவன்.
"பரவாயில்ல விடு, வாசு. அவன் இந்த பார்ட்டி அவனுடையதா இருக்கணும்னு நினைக்கிறான். ஏன்னா, குழந்தையும் அவனோடது தானே?" என்றான் நந்தா.
"எங்களுக்கு பார்ட்டி கொடுக்கணும்னா இன்னொரு நாள் குடு. ஆனா இன்னைக்கு, நான் தான் பார்ட்டி கொடுப்பேன். எல்லாரும் ஓபராய் ஹோட்டலுக்கு போக போறோம். அவ்வளவு தான்" என்றான் வாசுதேவன் கண்டிப்பாக.
"சீக்கிரம் முடிவு பண்ணி, யாராவது ஒருத்தர் சோறு போடுங்கப்பா" என்றான் நந்தா.
"வாங்க போகலாம்"
"பங்கு, நீ ஒன்னும் கவலைப்படாத. அபராஜித்தை ஜெயில்ல போட்டதுக்காக நீ எங்களுக்கு ஒரு பார்ட்டி கொடு"
"அப்படியா?" என்றாள் வைஷ்ணவி.
"ஆமாம் வைஷு, நேத்து நம்ம பங்கும், மீராவும் சேர்ந்து எவ்வளவு பெரிய அதிரடி ஆட்டம் ஆடி இருக்காங்கன்னு உனக்கு தெரியாது" என்றான் நந்தா.
மீராவை நம்ப முடியாமல் பார்த்தாள் வைஷ்ணவி.
"ராதா அவளோட நிஜமுகத்தை நேத்து காட்டிட்டா. அவ வேற யாரும் இல்ல, அபராஜித்தோட கீப்பாம்" என்றான் நந்தா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் வைஷ்ணவி. ஆமாம் என்று தலையசைத்தாள் மீரா.
"ஹோட்டலுக்கு போயி, சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு, நமக்கு நிறைய டைம் இருக்கும் போது இந்த கதை எல்லாம் பேசலாம். இப்போ வாங்க கிளம்பலாம்" என்றான் வாசுதேவன்.
அவர்கள் ஓபராய் ஹோட்டலை நோக்கி சென்றார்கள். அவர்களுக்காக எட்டு இருக்கைகள் கொண்ட பெரிய மேசையை ஆர்டர் செய்திருந்தான் வாசுதேவன். அதை அவர்கள் ஆக்கிரமித்தார்கள்.
"நம்ம ஆறு பேர் தானே இருக்கோம்? எதுக்காக எய்ட் சீட்டர் புக் பண்ண வாசு? என்றான் ஜெகதீஷ்.
"இன்னும் ஒருத்தர் நம்ம கூட ஜாயின் பண்ணிக்க போறார்" என்றான்.
"யாரு?" என்றான் ஜெகதீஷ்.
"இதோ வந்துட்டான்" என்றான் வாசுதேவன்.
தங்களை நோக்கி ஒருவன் வருவதை அவர்கள் பார்த்தார்கள். அவன் யார் என்று தெரிந்துகொண்ட முகுந்தனும், மீராவும் அவனை பார்த்து புன்னகை புரிந்தார்கள். மற்றவருக்கு அவன் யார் என்று தெரியவில்லை. அவனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் வாசுதேவன்,
"இவர் பெயர் கோவர்தன்...!"
"ஹாய் ஹாய்" அனைவரும் அவனை வரவேற்றார்கள்.
"அபராஜித் பத்தி கோவர்தன் உங்க எல்லாருக்கும் சொல்லுவான்" என்றான் வாசுதேவன்.
"ஒரு நிமிஷம். அதுக்கு முன்னாடி சாப்பாடு ஆர்டர் பண்ணிடலாம். அதுக்கப்புறம் சொல்லலாம்" என்றான் நந்தா.
உணவை ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் அபராஜித் மற்றும் ராதாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது,
"ஹலோ வாசுதேவன்" என்று யாரோ கூறுவதை கேட்டார்கள்.
அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்ப, ஒரு அழகிய பெண் அவர்களை நோக்கி வந்து, கைகுலுக்கலுக்காக வாசுதேவனை நோக்கி தன் கையை நீட்டினாள். தன் இருக்கையை விட்டு எழுந்த வாசுதேவன், அவளுடன் கைக்குலுக்கினான்.
"ஹலோ மிஸ் சவிதா திரிவேதி..."
"உங்களை மறுபடியும் சந்திக்கிறதுல ரொம்ப சந்தோஷம்" என்றாள் சவிதா.
"நீங்க எங்க இங்க? ஏதாவது அபிஷியல் கேதரிங்கா?"
"இல்ல நாங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ்" என்றான்.
அவர்களை பார்த்த சவிதா,
"எனக்கு இவங்கள்ல ஒருத்தரை மட்டும்தான் தெரியும். நான் நேத்து உங்களோட பார்த்தேன்" என்று முகுந்தனை பார்த்தபடி கூறினாள்.
"ஆமாம், அவங்க மீரா, முகுந்தனோட வைஃப்" என்றான்
"நைஸ் டு மீட் யு, மீரா. உங்க ஹஸ்பண்டுக்கும் வாசுதேவனுக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன். என்னை ஒரு பொறுக்கி கிட்ட இருந்து காப்பாத்தினதுக்காக"
அழகாய் புன்னகைத்தாள் மீரா.
"அப்படிப்பட்ட ஒருத்தன்கிட்ட இருந்து ஒரு நல்ல பொண்ணை காப்பாத்த வேண்டியது எங்க கடமை" என்றான் வாசுதேவன்.
"தேங்க்ஸ்"
"நீங்க இங்க என்ன செய்றீங்க?"
"நான் ஒரு ஃபிரண்டை மீட் பண்ண வந்தேன். அவ கடைசி நேரத்துல ஏதோ வேலை வந்துடுச்சுன்னு இந்த பாட்டியை கேன்சல் பண்ணிட்டா"
"அப்படின்னா நீங்க எங்களோட ஜாயின் பண்ணிக்கோங்களேன்"
சில நொடி யோசித்த சவிதா,
"சரி" என்றாள்.
அவளுக்காக மீதமிருந்த ஒரு இருக்கையை இழுத்து அவளை அமரச் செய்தான் வாசுதேவன். அதில் அமர்ந்து புன்னகை புரிந்தாள் சவிதா.
"பங்கு, இந்த சேனல் ரொம்ப ஃபாஸ்டா டியூன் ஆகுற மாதிரி தெரியல?" என்றான் நந்தா.
"வாயை மூடு. அவங்க மும்பையில ரொம்ப பெரிய பிசினஸ் உமன். நீ ஒரு குரங்குன்னு அவங்களுக்கு தெரிய வச்சிடாத" என்றான் முகுந்தன்.
"நம்ம வாசுவோட முகத்தை பாரு... சும்மா தகதகன்னு ஜொலிக்குது"
வாசுதேவனின் முகத்தை பார்த்த முகுந்தன், தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
தனது வியாபாரம் பற்றி வாசதேவனிடம் வெகு சகஜமாய் பேசிக் கொண்டிருந்தாள் சவிதா.
"நீங்க ரொம்ப ஃப்ரெண்ட்லி சிஓனு நான் கேள்விப்பட்டிருக்கேன். அப்போ நான் அதை நம்பல. ஆனா இப்போ நேர்ல பார்க்கும் போது என்னால நம்பாம இருக்க முடியல" என்றாள் சவிதா.
"இவங்க ரெண்டு பேரும் என்னோட காலேஜ்மேட். முகுந்தன் என்னோட மேனேஜர். வைஷ்ணவி நந்தாவோட ஃபியான்சி. எல்லாரும் என்னோட ஃபேமிலி மாதிரி தான்" என்றான் வாசுதேவன்.
"கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. நானும் என் எம்ப்ளாயீஸ் கிட்ட இதே மாதிரி நடந்துக்கலாம்னு தோணுது"
"அப்படி செஞ்சீங்கன்னா, முதல்ல இருந்ததை விட எல்லாரும் உங்களை அதிகமாக மதிப்பாங்க" என்றான் வாசுதேவன்.
"உங்களோட சஜஷன்க்கும், டின்னருக்கும் ரொம்ப தேங்க்ஸ். நான் கிளம்புறேன்" என்று எழுந்து நின்றாள்.
மரியாதை நிமித்தமாய் வாசுதேவனும் எழுந்து நின்றான். சவிதா அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின், மீண்டும் அமர்ந்தான் வாசுதேவன்.
"அவங்க ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறாங்க" என்றாள் மீரா.
ஆமாம் என்று தலையசைத்தான் வாசுதேவன்.
"அவங்க நிச்சயதார்த்தம் நின்னதை பத்தி அவங்க வருத்தப்படுற மாதிரி தெரியல"
"அவங்க கல்யாணம் பண்ணிக்க இருந்தது ஒரு பொறுக்கியா இருந்தா, அவங்க ஏன் வருத்தப்பட போறாங்க?" என்றான் முகுந்தன்.
"அப்புறம் அபராஜித் பத்தி அவங்க ஒரு வார்த்தை கூட பேசல கவனிச்சியா?" என்றான் நந்தா.
"ஆமாம், அவன்கிட்ட இருந்து விலகினதுல, அவங்க ரொம்ப நிம்மதியா இருக்க மாதிரி தோணுது" என்றாள் வைஷ்ணவி.
"நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம் அவனைப் பத்தி தெரிஞ்சிருந்தா, அவங்க ரொம்ப உடஞ்சு போயிருக்கலாம்" என்றான் முகுந்தன்.
"அவங்களும் ஒரு பொண்ணு தானே?" என்றாள் மீரா.
"ஆமாம், எல்லா பொண்ணுக்கும் பீலிங்க்ஸும் எமோஷன்சும் ஒன்னு தான்" என்றாள் வைஷ்ணவி
"அவங்களுக்கு நம்ம வாசு கூட இருக்கிறது ரொம்ப பிடிசிருக்குன்னு நினைக்கிறேன்" என்றான் நந்தா.
அதைக் கேட்டு திட்டுக்கிட்டான் வாசுதேவன்.
"ஏதாவது உளறி கொட்டாத. நாங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணோம். அதனால எனக்கு நன்றி சொல்றதுக்காக என்கிட்ட பேசினாங்க"
"அவங்களுக்கு முகுந்தன் கூட தான் ஹெல்ப் பண்ணான். ஆனா அவங்க உங்கிட்ட மட்டும் தானே பேசுனாங்க?"
"அவங்க ரெண்டு பேரும் பாஸ் ஆச்சே" என்றான் முகுந்தன்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இல்லாத கதை எல்லாம் கட்டி விடாதீங்க" என்றான் வாசுதேவன்.
அனைவரும் சிரித்துக் கொண்டார்கள்.
தனது கைபேசியை எடுத்து அனைவருடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து தனது ஸ்டேட்டஸில் வைத்தாள் மீரா.
"இதெல்லாம் அவசியமா?" என்றான் முகுந்தன்.
"ஆமாம். அப்ப தான் எங்க அம்மாவும் அப்பாவும், நம்ம உண்மையிலேயே பார்ட்டிக்கு தான் வந்தோம்னு தெரிஞ்சுக்குவாங்க"
"அப்படின்னா நாளைக்கு என்ன செய்வ?"
"அதைப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்"
அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தங்கள் இல்லம் நோக்கி சென்றார்கள் முகுந்தனும் மீராவும். தனது ஸ்டேட்டஸ்ஸை பார்த்தவர்களின் பட்டியலில், அவளது அம்மாவின் பெயர் இருந்ததை பார்த்து புன்னகைத்துக் கொண்டாள் மீரா.
அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள். தங்கள் பெற்றோருடன் வழக்கமான உரையாடலுக்குப் பின், தனது அரைக்கு வந்தாள் மீரா. குளித்து முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தாள். அனைவரும் சீரியல் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவளும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.
"உங்க பார்ட்டி எப்படி இருந்தது?" என்றார் ஜானகி.
"ரொம்ப நல்லா இருந்தது"
குளித்து முடித்துவிட்டு முகுந்தனும் வந்து அவர்களுடன் அமர்ந்தான்.
"நீயும் ஏதாவது சாப்பிடு" என்றார் கேசவன்.
"வேண்டாம் பா. எனக்கு வயிறு ஃபுல்லா இருக்கு"
அவனை சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா, அவன் ஏதாவது கூறி விடுவானோ என்ற பதற்றத்துடன்.
"எங்க ஆபீஸ்ல நாளைக்கு ஒரு செமினார் இருக்கு" என்றான் அவன்.
"அப்படின்னா நாளைக்கும் நீ லேட்டா வருவியா...?" என்றார் கேசவன்
"ஆமாம்பா. ஆடிட்டிங் வருது. நாங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு பிஸியா தான் இருப்போம். உங்களுக்கு மும்பையை சுத்தி பார்க்கணும்னு தோணுச்சுன்னா, நான் அரேஞ்ச் பண்றேன். நீங்க வீட்ல இருந்து உங்களுக்கு போர் அடிக்கும் இல்ல?" என்றான்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"இந்த டைம்ல மீராவுக்கு ரெஸ்ட் வேணும்னு உனக்கு தோணலையா?" என்றார் கேசவன்.
"அவளை நான் பார்த்துக்கிறேன் பா. நாங்க ரெண்டு பேரும் ஒரே டீம் தான். அவளை நான் எந்த வேலையும் செய்ய விடாம அவளோட வேலையையும் நானே சேர்த்து செஞ்சிடுவேன்"
"மீராவுக்கு ஹெல்ப் பண்ண, நம்ம இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். முகுந்தனே அவளுக்கு தேவையான எல்லா ஹெல்ப்பும் செஞ்சுடுவார் போல இருக்கு" என்றார் ஜனார்த்தனன்.
"ஆரம்பத்துல இருந்து நான் அதை தானே மாமா சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க தான் நான் சொன்னதை கேட்கவே இல்ல" என்றான் அவன்
"சரி, அப்படின்னா நாங்க நாளைக்கு கிளம்பறோம்" என்றார் அவர்.
"உங்களுக்கு டிக்கெட்டுக்கு நான் ஏற்பாடு பண்ணட்டுமா?" என்றான் தனது மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முகுந்தன்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நாங்களே அரேஞ்ச் பண்ணிடுவோம்" என்றார் கேசவன்.
"உங்களால முடியலன்னா என்கிட்ட சொல்லுங்க. நான் அரேஞ் பண்றேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான் முகுந்தன் உள்ளுக்குள் துள்ளி குதித்த படி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top