7 தேவதை

7 தேவதை

மறுநாள் காலை

சீக்கிரமே எழுந்த மீரா, சிற்றுண்டியையும் மதிய உணவையும் சமைத்து முடித்தாள். மருத்துவரின் அறிவுரையின்படி, அன்று முகுந்தன் வீட்டில் இருந்து ஓய்வெடுப்பானா  மாட்டானா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அன்று அவன் சமைக்க வேண்டாம் என்று மட்டும் அவள் நினைத்தாள். அவன் தூக்கம் கலைந்து எழுந்தால், சமைக்கத் துவங்கி விடுவான். அவளை அமைக்கவும் அனுமதிக்க மாட்டான். அவன் எழும் முன்பாகவே அந்த வேலையை முடித்து விடுவது என்று அவள் தீர்மானித்தாள். இன்று ஒரு நாளாவது அவன் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று எண்ணினாள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஏழு மணி வரை உறங்கிக் கொண்டிருந்தான் முகுந்தன். அவன் நன்றாக இருக்கிறானா இல்லையா என்று அவள் தெரிந்து கொள்ள விரும்பினாள். மெல்ல அவனிடம் வந்தவள், அவன் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டாள். மெதுவாய் அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தாள். அவனுக்கு காய்ச்சல் இல்லாததால், நிம்மதி அடைந்து, மீண்டும் சமையலறைக்கு சென்றாள். மெல்ல கண் திறந்த முகுந்தன், அவள் சமையல் அறைக்குள் சென்று மறைவதை கண்டான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. சமையலறையில் இருந்த மீரா ஓடிச் சென்று, மேஜிக் ஹோலின் மூலம் வந்திருப்பது யார் என்று தெரிந்து கொண்டு கதவை திறந்து, புன்னகை புரிந்தாள். மருத்துவர் ஸ்ரீகாந்த் உள்ளே நுழைந்தார்.

"குட் மார்னிங் டாக்டர்"

"குட் மார்னிங். உங்க ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு?"

"அவர் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்காரு டாக்டர்"

"நான் ட்யூட்டிக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன். போறதுக்கு முன்னாடி அவர் எப்படி இருக்காருன்னு செக் பண்ணிடலாம்னு வந்தேன்"

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்"

அப்பொழுது முகுந்தன் தூக்கம் கலைந்து எழுவதை அவர்கள் கண்டார்கள்.

"இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு?" என்றார் மருத்துவர்.

"பெட்டர் டாக்டர்" என்று அவன் கூற, அவனை பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர்.

"இன்னைக்கு ஒரு நாள் கம்ப்ளிட்டா ரெஸ்ட் எடுத்துக்கங்க. எல்லாம் சரியாயிடும்"

"இல்லங்க டாக்டர். இன்னைக்கு நான் நிச்சயம் ஆஃபீஸ் போகணும்"

"அப்படின்னா நீங்க ரெண்டு நாள் லீவு எடுக்க வேண்டி இருக்கும்" என்று புன்னகைத்தார் டாக்டர்.

அவரை, முகத்தில் எந்த பாவமும் இன்றி ஏறிட்டான் முகுந்தன்.

"உங்களுடைய கண்டிஷன் ரொம்ப வொர்ஸ்ட் ஆய்டும். அதனால, இன்னிக்கு ஒரு நாள் வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுங்க. இல்லன்னா நீங்க ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வரும்" என்ற மருத்துவர், மீராவை நோக்கி திரும்பி,

"அவருக்கு புரிய வைங்க" என்றார்.

மீரா சங்கடத்துடன் புன்னகைத்ததை முகுந்தன் கவனித்தான்.

"நான் எழுதிக் கொடுத்த மெடிசன்சை இன்னிக்கு ஒரு நாள் கண்டினியூ பண்ணுங்க. ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா, நாளைக்கு நல்லா ஆயிடுவார்"

சரி என்று தலையசைத்தாள் மீரா.

அங்கிருந்து சென்றார் மருத்துவர். கதவை சாத்தி தாளிட்டு விட்டு, உள்ளே சென்றாள் மீரா. இன்று ஒருநாள் அவனை வீட்டில் இருக்கும் படி அவள் கூறுவாள் என்று எதிர்பார்த்தான் முகுந்தன். ஆனால் அவள் ஒன்றும் கூறவில்லை.

சிறிது நேரம் கழித்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள் மீரா.

"பிரேக்ஃபாஸ்டும், லஞ்ச்சும் ரெடியா இருக்கு. அதை சாப்பிடுறதோ, எடுத்துக்கிறதோ உங்க விருப்பம். நான் உங்க மேல இருக்கிற அக்கறைல இதையெல்லாம் செய்றேன்னு நினைக்க வேண்டாம். நேத்து நீங்க சமைச்சீங்க, இன்னைக்கு நான் சமைக்கிறேன். அவ்வளவு தான்" என்றாள் தயக்கத்துடன்"

"சாப்பிடுறதுக்கும் எடுத்துக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?" என்ற கேள்வி முகுந்தனிடமிருந்து பிறந்தது.

"இன்னைக்கு வீட்ல இருக்க போறீங்கன்னா, சாப்பிடுங்க. ஆபீஸ்க்கு போறதா இருந்தா, எடுத்துக்கோங்க"

இறுக்கமாய் இருந்தான் முகுந்தன், அவனுக்கு புன்னகைக்க வேண்டும் என்று தோன்றிய பிறகும். நேற்று அவன் சமைத்தான் என்பதற்காக மட்டும் தான் இன்று அவள் சமைத்தாளா? அதில் அக்கறை எதுவும் இல்லையா? அக்கறை இல்லாமலா விடியற்காலையில் எழுந்து அனைத்தையும் சமைத்து முடித்தாள்? ஆனால் அவள் கூறிய வார்த்தைகளை அவன் ஏன் இந்த அளவிற்கு ஆராய்கிறான்?

கசகசப்பாக உணர்ந்ததால் குளிக்க வேண்டும் என்று தோன்றியது மீராவுக்கு. பூத்துவாலையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்கு செல்லலாம் என்று அவள் நினைத்தபோது, முகுந்தன் கூறிய வார்த்தை அவளை நிறுத்தியது.

"வாசு, இன்னைக்கு ஒரு நாள் நான் லீவு எடுத்துக்கட்டுமா?"

ஆச்சரியத்துடன் நின்று அவனை ஏறிட்டாள் மீரா. இன்று அவன் வீட்டில் இருக்கப் போகிறானா? வாசு என்பது யார்? யாருடன் அவன் பேசிக் கொண்டிருக்கிறான்?

மீராவை விட அதிகம் ஆச்சரியமடைந்தது வாசுதேவன் தான். இதுவரை அவன் எதற்காகவும் விடுப்பு எடுத்துக் கொண்டதே இல்லை. அவன் உடல்நிலை அவ்வளவு மோசமாகவா இருக்கிறது? என்று எண்ணினான் வாசுதேவன்.
 
"தாராளமா எடுத்துக்கோ முகுந்தன்"

"ஆனா, நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு இன்டர்வியூ கண்டக்ட் பண்ணனும்னு சொன்னியே"

முகுந்தன் ஒரு நேர்முகத் தேர்வை நடத்த இருக்கிறானா? அவனது நிறுவனத்தில் அவன் அவ்வளவு ஆற்றல் மிகுந்தவனா? என்று வியந்தாள் மீரா.

"இன்டர்வியூ நாளைக்கு தான். இன்னைக்கு இல்ல" என்றான் வாசுதேவன்.

"சரி, அப்படின்னா நாளைக்கு காலையில நான் சீக்கிரமே வந்து, கேண்டிடேட்ஸ் எல்லாரையும் அனுபவம் இருக்கிறவங்க, இல்லாதவங்கன்னு பிரிச்சு வச்சுடறேன். நம்ம அனுபவம் இருக்கிறவங்களுக்கு ஃபர்ஸ்ட் பிரிஃபரன்ஸ் கொடுக்கலாம்"

"இல்ல, முகுந்தன். நம்ம அனுபவம் இல்லாத ஃபிரஷர்ஸை  தான் சூஸ் பண்ண போறோம்"

"என்னது? அனுபவம் இல்லாத ஃபிரஷர்ஸை சூஸ் பண்ண போறியா? ஏன் வாசு?"

"அனுபவம் இருக்கிறவங்களுக்கு எங்க போனாலும் ஈசியா வேலை கிடைச்சிடும். அனுபவம் இல்லாதவங்க தானே வேலை கிடைக்க ரொம்ப கஷ்டப்படுறாங்க?"

"அதனால?"

"அவங்களுக்கு நம்ம வேலை கொடுப்போம். அவங்க நமக்காக கஷ்டப்பட்டு வேலை செய்வாங்க"

"ஆனா, அனுபவம் இல்லாதவங்களை ட்ரைன் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்"

"ஒரு காலத்துல நம்மளும் அனுபவம் இல்லாம வேலையை கத்துக்கிட்டவங்க தானே? புதுசா வர்றவங்களுக்கு வேலை கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு நமக்கு தெரியாதா?"

வாசுதேவனும் அவனுடைய அணுகுமுறையும்...! பெருமூச்சு விட்டான் முகுந்தன்.

"சரி. அப்படின்னா நம்ம அனுபவம் இல்லாதவங்களை தனியா பிரிச்சு அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்"

"நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதே முகுந்தன். நீ வீட்ல ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் ஜெகதீஷை இதையெல்லாம் பார்த்துக்க சொல்றேன்"

"சரி, சாயங்காலம் நான் கொஞ்சம் நார்மல் ஆனதுக்கு பிறகு, இன்டர்விற்காக  சில செட் ஆஃப் கொஸ்டின்ஸ் ப்ரீபர் பண்ணி வைக்கிறேன்"

"வேணாம் முகுந்தன். நீ அதெல்லாம் செய்ய வேண்டாம்"

"ஆனா ஏன்? நம்ம இன்டர்வியூ நடத்துறோமா இல்லையா?"

"நிச்சயமா நடத்துவோம். நம்ம ரெண்டு பேரும் தான் அதை செய்ய போறோம். ஒரே ஒரு சாதாரண கேள்வியே போதுமானது. அந்த ஒரு கேள்விக்கு, யார் வித்தியாசமாவும் தைரியமாவும் பதில் சொல்றாங்களோ, அவங்களுக்கு வேலை கொடுக்கலாம்"

"நீ என்ன பேசுற வாசு? நீ விடி டிசைன்ஸோட சிஇஓ. நம்ம கம்பெனிக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு. உன்னோட பிஏ வா வரப்போறவங்களை நீ எப்படி ஒரே ஒரு சாதாரண கேள்வி கேட்டு சூஸ் பண்ண முடியும்?"

மீராவுக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. விடி டிசைன்ஸின் சிஇஓ உடனா முகுந்தன் பேசிக் கொண்டிருக்கிறான்? அந்த கம்பெனியில் முகுந்தனின் இடம் என்ன? சிஇஓ வையே இவன் பெயர் சொல்லி அழைக்கிறானே...!

"ஆமாம் முகுந்தன், ஒவ்வொருத்தருக்கும் அணுகுமுறை வித்தியாசப்படும். அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும் அதைத் தான் நம்ம பாக்கணும்"

"ஆனா அனுபவமே இல்லாத ஒருத்தர், எப்படி தைரியமாவும் வித்தியாசமாவும் பதில் சொல்லுவாங்க? புதுசா வர்றவங்களுக்கு பதில் சொல்லவே பயமாயிருக்குமே"

"அது தான் இங்க விஷயம்"

"தைரியமா இருக்கக்கூடிய ஒருத்தர் கிட்ட, வித்தியாசமான ஐடியாவை நாம் எதிர்பார்க்க முடியாது, வாசு"

"ஒருவேளை யார்கிட்டயாவது அப்படி ஒரு ஐடியா இருந்தா? எல்லா சூழ்நிலையையும் வித்தியாசமாவும் புத்திசாலித்தனமாவும் கையாளக்கூடிய அந்த ஒரு நபர் தான் எனக்கு வேணும். அப்படிப்பட்ட ஒருத்தரை தான் நான் செலக்ட் பண்ண போறேன்"

அலுப்புடன் பெருமூச்சு விட்டான் முகுந்தன்.

"உனக்கு உடம்பு சரியில்ல. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு ரிலாக்ஸா வந்தா போதும். உனக்கு நான் லஞ்ச் அனுப்பி வைக்கட்டுமா?"

"இல்ல... எதுவும் வேண்டாம்"

"சரி சரி.... நீ தான் யார் எது கொடுத்தாலும் வாங்க மாட்டியே" தனது அதிருப்தியை காட்டிக் கொள்ளவில்லை வாசுதேவன்.

அமைதி காத்தான் முகுந்தன்.

"சரி ரெஸ்ட் எடுத்துக்கோ"

"சரி" என்று அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் சோபாவில் படுத்துக்கொண்டான் முகுந்தன்.

யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தாள் மீரா. அவளுக்கு தெரியும் நாளை அவள் நேர்முகத் தேர்விற்காக செல்லவிருக்கும் நிறுவனத்தின் பெயர் விடி டிசைன்ஸ் என்பது. முகுந்தன் பேசிக் கொண்டிருந்தது அந்த நேர்முகத் தேர்வு பற்றியா? அந்த நேர்முகத் தேர்வை நடத்த இருப்பதே இவன் தானா? அந்த நிறுவனத்தின் முதலாளி அனுபவம் இல்லாத புதியவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க நினைக்கிறார். அந்த புதியவர், துணிச்சலுடனும் வித்தியாசமான அணுகுமுறையுடனும்  இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் அனைவரிடமும் ஒரே கேள்வியை தான் கேட்கப் போகிறாரா? அந்த கேள்வி என்னவாக இருக்கும்? என்ன கேள்வியாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே... அவருக்கு தேவை வித்தியாசமான தைரியமான பதில் தான். இந்த ஒரு விஷயம் போதாதா அவளுக்கு? ஆம் என்ற தலையசைத்துவிட்டு, தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றாள் மீரா.

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவள், சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு வந்து, முகுந்தன் அமர்ந்திருந்த சோபாவின் முன்னாள் இருந்த டீப்பாயின் மீது வைத்தாள்.

"உங்களால நடக்க முடியும்னா, நீங்க உங்க ரூமுக்கு போங்க"

அவளை சமதள பார்வை பார்த்தான் முகுந்தன்.

"இந்த சோபாவுல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கீங்க. உடம்பு சூடாகும். அதுக்காக சொன்னேன்" என்றாள் தயக்கத்துடன்.

சரி என்ற தலையசைத்துவிட்டு அவள் கொடுத்த சிற்றுண்டியை உண்டான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை தன் அறையில் காத்திருந்தாள் மீரா. அவனது மாத்திரையுடன் வந்தவள், அதை தண்ணீருடன் அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கி விழுங்கினான் முகுந்தன்.

தனது இடுப்பு உயர கூந்தலை கொண்டையாக கட்டியிருந்தாள் மீரா. அந்த கொண்டை தளர்ந்து, அவிழ்ந்து விழுந்தது. நேராய் நிமிர்ந்து நின்று, அதை மீண்டும் தளர்வான கொண்டையாய் கட்டிக் கொண்டாள். அவளை பார்பதை தவிர்க்கவே முடியவில்லை அவனால். அப்பொழுது தான் அவன் கவனித்தான், அவளுக்கு நீண்ட அழகான கூந்தல் இருந்தது. நந்தகோபால் கூறிய வார்த்தைகள் அவனது காதுகளில் ரிங்காரம் இட்டன. எனக்கு வரப்போகும் மனைவி நீண்ட கூந்தலுடன் இருக்க வேண்டும், அவள் குண்டாகவும் இருக்கக் கூடாது, ஒல்லியாகவும் இருக்கக்கூடாது, அவள் என்னை மனதார கண்ணா பின்னாவென்று காதலிக்க வேண்டும், எனக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், அவள் என்னை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும், என்னை யாரிடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது, நான் செய்வது தவறாகவே இருந்தாலும், எனக்காக அவள் என் பக்கத்தில் நிற்க வேண்டும். இப்படிப்பட்ட அனைத்து தகுதிகளும் ஒன்றிணைந்த அவள், தேவதையாக தான் இருக்க முடியும் என்று வாசுதேவன் அதற்கு பதில் கூறினான்.

மனதளவில் அழகாய் இருக்கும் பெண், பார்ப்பதற்கு தேவதை போல் இருக்க மாட்டாள் என்றும், வெளித்தோற்றத்திற்கு அழகாய் இருக்கும் பெண், மனதளவில் நல்ல குணத்துடன் இருக்க மாட்டாள் என்றும் அவனது நண்பர்கள் கூறினார்கள்.

அவர்கள் கூறியபடி, தேவதைக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் மீராவிடம் இருக்கிறதே...! அவள் அவனை ஆழமாய் காதலிக்கிறாள். அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், அவர்களுக்குள் நல்லுறவு இல்லாவிட்டாலும், அவனை கவனித்துக்கொள்ள அவள் யோசிக்கவில்லை. மும்பைக்கு அவள் புதியவளாய் இருந்தபோதிலும், மருத்துவரை அழைத்து வந்து அவனுக்கு வைத்தியம் பார்த்தாள். அவனது நண்பர்கள் குறிப்பிட்ட அனைத்து தகுதிகளும் அவளிடம் இருக்கிறது அல்லவா...! ஆம் இருக்கிறது தான். முகுந்தனால் நம்ப முடியவில்லை, அவனது நண்பர்கள் குறிப்பிட்ட அந்த தேவதை, அவன் கண்ணுக்கு முன்னால், அவன் வீட்டில், அவனது மனைவியின் வடிவில் நின்று கொண்டிருக்கிறாள் என்று. அவன் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவள் அவனது மனைவி தானே...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top