6 நஞ்சான உணவு

6 நஞ்சான உணவு

முகுந்தனின் அறையில் இருந்த இன்டர்காம் அலறியது. அதை எடுத்து பதில் அளித்த அவன்,

"சொல்லு, வாசு" என்றான்.

"முகுந்தன், என்னோட பிஏவுக்கான இன்டர்வியூ நாளன்னைக்கு நடக்க இருக்கு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் அதை கண்டக்ட் பண்ண போறோம்"

"சரி வாசு"

"பி ரெடி"

"யா, ஷூயூர்"

அழைப்பை துண்டித்தான் முகுந்தன். அவனுக்கு தெரியும், அந்த நேர்முகத் தேர்வில் அவன் செய்யப் போவது ஏதும் இல்லை என்று. ஏனென்றால், அது வாசுதேவனின் உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு. அதனால் அனைத்து கேள்விகளையும் கேட்டு, தனக்கு தோதான உதவியாளரை நிச்சயம் வாசுதேவன் தான் தேர்ந்தெடுப்பான்.

நேரம் கடந்து செல்ல, தனக்குள் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தான் முகுந்தன். அவனது வயிறு கலங்குவது போல் இருந்தது. அவன் கடிகாரத்தை பார்க்க, மணி நான்கு என்றது. வாசுதேவனுக்கு  ஃபோன் செய்தான்.

"சொல்லு முகுந்தன்"

"வாசு, எனக்கு ரொம்ப அன் ஈஸியா இருக்கு நான் வீட்டுக்கு போகட்டுமா?"

"வீட்டுக்கு போக போறியா? உடம்புக்கு  என்ன பண்ணுது?"

"வயிறை கலக்குற மாதிரி இருக்கு, வாமிட் வர்ற மாதிரியும் இருக்கு"

"வீட்டுக்கு போய் என்ன செய்யப் போற? உன்னை கவனிச்சுக்க உன் வீட்ல யார் இருக்கா? ஹாஸ்பிடலுக்கு போ"

"ம்ம்ம்ம்"

தன் பையை எடுத்துக்கொண்டு  அறையை விட்டு வெளியே வந்த முகுந்தன், அலுவலகத்தை விட்டு வெளியேறினான். மணி நான்கே ஆனது என்பதால், அதிகமான போக்குவரத்து நெரிசல் இல்லை. அவனுக்கிருந்த உடல் நிலையில், கார் ஓட்டவே சிரமப்பட்டான். 'வீட்டிற்கு சென்று என்ன செய்யப் போகிறாய்?' என்று வாசுதேவன் கேட்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. முகுந்தனுக்கும் கூட அது பற்றி எந்த தெளிவும் இல்லை. ஆனால் அவனுக்கு வீட்டில் இருக்க வேண்டுமென்று தோன்றியது.

தனது குடியிருப்பை வந்தடைந்த அவன், லிஃப்டில் புகுந்தான். அவனுடைய கண்கள் இருட்டுவது போல் இருந்தது. தலை சுற்றியது. எப்படியோ சமாளித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அடுத்த நொடி, தன் கையில் இருந்த பையை  கீழே போட்டுவிட்டு, அவனும் கீழே சரிந்தான்.

சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த மீரா, அவன் தரையில் விழுந்து கிடந்த நிலையை பார்த்து பதறிப்போனாள். 

"என்னங்க.... என்னங்க உங்களுக்கு என்ன ஆச்சு?" ஓடிச் சென்று அவனது தோள்களை பற்றி உலுக்கினாள்.

அரை மயக்க நிலையில் இருந்தான் முகுந்தன். அவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அடுத்த நொடி, வரவேற்பறையிலேயே வாயிலெடுத்தான். அவனுக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை மீராவுக்கு. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. யாரிடமாவது உதவி பெற்றாக வேண்டும். அதற்கு முன் இந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். பரபரவென அந்த இடத்தை சுத்தப்படுத்த துவங்கினாள். அவளை அதை செய்யவிடாமல் தடுக்க முயன்றான் முகுந்தன். ஆனால் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை. அவள் அவனது அருகில் வந்த போது, அவள் கையை பற்றி நிறுத்திய அவன்,

"இதெல்லாம் நீ செய்ய வேண்டாம்" என்றான் எப்போது வேண்டுமானாலும் மயங்கிவிடும் நிலையில் இருந்த அவன்.

"நீங்க இதைப் பத்தி கவலைப்படாதீங்க. இந்த சூழ்நிலையை எனக்கு சாதகமா நான் பயன்படுத்திக்க நினைக்க மாட்டேன். என்னை நெனச்சு பயப்படாதீங்க" என்று அவன் கையை விடுவித்து, தன் பணியை தொடர்ந்தாள் மீரா.

ஃப்ளோர் கிளீனர் போட்டு வீட்டை துடைத்துவிட்டு, அவனிடம் வந்தாள். அவனது சட்டையை கழட்டி வைத்துவிட்டு அவனது முகத்தை துடைத்து விட்டாள். அவனது அறைக்கு செல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அதனால் அவனை அப்படியே உள் பனியனுடன் விட்டாள். அவனை சோபாவில் அமர வைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்று ஒரு போர்வையை கொண்டு வந்து அவனுக்கு போர்த்தி  விட்டாள், பனியனுடன் இருக்க அவன் சங்கடப்படலாம் என்று எண்ணி.

வீட்டை விட்டு வெளியே வந்த அவள், அவர்களுக்கு எதிரில் இருந்த வீட்டின் கதவை தட்டினாள். முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் கதவை திறந்து

"ஆப்கோ கியா சாஹியே?" என்றார்.

"நான் எதிர்த்த வீட்டில் இருக்கேன். என்னோட ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்ல. அவர் இப்ப தான் ஆபீஸ்ல இருந்து வந்தாரு. அவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. அவரால பேசக்கூட முடியல. பக்கத்துல ஹாஸ்பிடல் ஏதாவது இருக்கா?"

"நம்ம பில்டிங்கோட எயித்து ஃப்ளோர்ல ஒரு டாக்டர் இருக்காரு. சி4"

"தேங்க்யூ சோ மச்"

எட்டாவது மாடியை நோக்கி ஓடினாள் மீரா. C4 வீட்டின் கதவை தட்டினாள். தலை முழுதும் நரைத்துப் போயிருந்த வயதான பெண்மணி ஒருவர் கதவை திறந்து,

"எஸ்?" என்றார்.

"நான் மும்பைக்கு புதுசு? என்னோட ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்ல. நான் கொஞ்சம் டாக்டரை பார்க்கலாமா ஆன்ட்டி?"

"வேர் ஆர் யூ ஃப்ரம்? (எங்கிருந்து வரீங்க?)" என்றார் அந்த பெண்மணி ஆங்கிலத்தில்.

"செவன்த் ஃப்ளோர்"

"ஓ ப்ளீஸ் வெயிட்..."

உள்ளே பார்த்த அவர்,

"ஸ்ரீகாந்த்..." என்று அழைத்தார்.

உள்ளிருந்து ஒருவர் எட்டிப் பார்த்து,

"எஸ் மாம்?" என்றார்.

"இவங்க செவன்த் ஃப்ளோர்ல இருந்து வராங்க. அவங்க ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லையாம்"

"ஓ...  ஒன் மினிட்" உள்ளே சென்ற ஸ்ரீகாந்த், கையில் பையுடன் வந்தார்.

"உங்க ஹஸ்பண்டுக்கு என்ன ஆச்சு?" என்றார் நடந்தபடி.

"என்ன ஆச்சுன்னு தெரியல டாக்டர். ஆஃபீஸ்ல இருந்து வந்த உடனே கீழே விழுந்து வாமிட் பண்ணிட்டாரு"

"மதியம் என்ன சாப்பிட்டார்?"

"காலிஃப்ளவர் கறி"

"வேற ஏதாவது சாப்பிட்டாரா?"

"வேற எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டார் டாக்டர்" என்றாள் முகுந்தனின் குணநலனை வைத்து யுகம் செய்த மீரா.

மருத்துவருடன் தங்கள் வீட்டிற்கு வந்தாள் மீரா. கண்களை மூடி சோபாவில் படுத்திருந்தான் முகுந்தன். அவனை பரிசோதனை செய்த மருத்துவர்,

"ஃபுட் பாய்சன்" என்றார்.

திகைப்புடன் அவனை ஏறிட்டாள் மீரா. இன்று முகுந்தன் தானே அவனுக்கான உணவை சமைத்தான்...! பிறகு எப்படி அவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது? நல்ல வேலை அவன் சமைத்த உணவை அவள் சாப்பிடவில்லை.

"இப்போ என்ன செய்யணும் டாக்டர்?"

"இன்ஜெக்ஷன் போடுறேன். ராத்திரி டின்னர் ரொம்ப லைட்டா இருக்கட்டும். ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா பெட்டரா இருக்கும்"

பதில் கூறவில்லை மீரா... இதில் அவள் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால்.

சில மருந்துகளை சீட்டில் எழுதிக் கொடுத்தார் மருத்துவர்.

"நம்ம அப்பார்ட்மெண்டுக்கு ஆப்போசிட்ல ஒரு மெடிக்கல் ஷாப் இருக்கு. இந்த மருந்து அங்க கிடைக்கும்"

"ஓகே டாக்டர்"

"நான் காலையில வந்து பார்க்கிறேன்"

"தேங்க்யூ டாக்டர்"

அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் ஸ்ரீகாந்த். முகத்தை அலம்பி கொண்டு, மருந்து வாங்க சென்றாள் மீரா. அப்படியே சில பழங்களையும் வாங்கிக் கொண்டு வந்தாள். அவள் லிஃப்ட்டை விட்டு வெளியே வந்த போது, அவளது வீட்டின் எதிர் வீட்டில் இருந்த அந்த மனிதன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

"இப்ப உங்க ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு மேடம்?"

"நல்லா இருக்காரு சார்"

"அவருக்கு என்ன ஆச்சு?"

"ஃபுட் பாய்சன்"

"ஓ... நான் இதுக்கு முன்னாடி உங்களை பார்த்ததே இல்லையே..."

"நான் இங்க வந்து ரெண்டு நாள் தான் ஆகுது"

"ஓஹோ... என் பெயர் விஷ்ணு. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்ன கேட்கலாம்"

மென்மையாய் புன்னகைத்து விட்டு தன் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மீரா. மெல்ல தன் கண்களை திறந்து அவளை ஏறிட்டான் முகுந்தன். சமையல் அறைக்குச் சென்ற அவள், சாத்துக்குடி பழங்களை பிழிந்து அந்தப் பழரசத்தை கொண்டு வந்து முகுந்தனிடம் கொடுத்தாள்.

"இதை சாப்பிடுங்க"

கண்களை திறந்த முகுந்தன் எழுந்து அமர முயன்றான். அவன் மிகவும் பலவீனமாய் காணப்பட்ட நிலையிலும் அவனுக்கு உதவவில்லை மீரா. அவனிடம் அவள் நெருங்க முயல்வதாய் அவன் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று தான் அவள் அதை செய்யவில்லை. பிரயத்தனப்பட்டு அமர்ந்த முகுந்தன், சோபாவில் சாய்ந்து கொண்டான். அவள் கையில் இருந்த தம்ளரை வாங்கி, பழரசத்தை பருகினான்.

"ஃபிரிட்ஜில கொஞ்சம் ஆரஞ்ச் இருக்கு" என்றான் தயக்கத்துடன்.

"பார்த்தேன்" என்றாள் மீரா.

"இதை வாங்கிட்டு வந்ததுக்கு பதிலா, அதுல ஜூஸ் போட்டிருக்கலாமே?"

"நீங்க இப்போ ஆரஞ்சு சாப்பிட கூடாது"

அங்கிருந்து செல்ல முயன்ற அவள், அவனது கேள்வியை கேட்டு நின்றாள்.

"ஏன்?"

"ஏற்கனவே உங்க வயிறு இன்ஃபெக்ட் ஆகி இருக்கு. ஆரஞ்சுல விட்டமின் சி இருக்கிறதால அது அசிடிட்டி ஃபார்ம் பண்ணும், பசியை தூண்டும்... இந்த நேரத்துல நீங்க ஆரஞ்சு சாப்பிடறது நல்லது இல்ல. அதனால தான் சாத்துக்குடி வாங்கிகிட்டு வந்தேன்" அவள் அவனைப் பார்த்தபடி கூறினாள். அவன் அவளை பார்த்த போது, தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

"ம்ம்ம்ம்"

மீண்டும் சமையலறைக்கு சென்ற அவள், அவனுடைய இரவு உணவுக்காக அரிசி கஞ்சியும், துவரம் பருப்பு துவையலும் தயார் செய்தாள்.

மீண்டும் காலை நீட்டி சோபாவில் படுத்த முகுந்தன், கண்களை மூடிக்கொண்டான். 'உன்னை கவனித்துக் கொள்ள உன் வீட்டில் யார் இருக்கிறார்?' என்ற வாசுதேவனின் வார்த்தைகளை எப்படி அவனால் நினைவு கூறாமல் இருக்க முடியும்? தன்னை கவனித்துக் கொள்ள தன் வீட்டில் ஒருவர் இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தவன் தானே அவன்? இப்பொழுது கூட அவன் அவளை வேலைகளை செய்ய அனுமதிக்கிறான் என்றால், அது அவனுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அல்ல. அவனுக்கு வேறு வழியில்லை என்பதற்காக. வேண்டாம் என்று அவளை மறுக்கும் சக்தி கூட அவனுக்கு இல்லாமல் இருந்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு, கஞ்சியையும் துவையலையும் கொண்டு வந்து அந்த சோபாவிற்கு முன்னால் இருந்த டீப்பாயில் வைத்து விட்டு,

"என்னங்க..." என்றாள்.

"ம்ம்ம்?"

"இந்த கஞ்சியை குடிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோங்க"

"ம்ம்ம்ம்"

அப்பொழுது அவனது கைபேசி மணி அடித்தது. அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்து பார்த்தான். அது வாசுதேவனின் அழைப்பு. அந்த அழைப்பை ஏற்றான்.

"சொல்லு வாசு?"

"எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்"

"என்ன ஆச்சு உனக்கு?"

"ஃபுட் பாய்சன்"

"ஹாஸ்பிடலுக்கு போனியா?"

"டாக்டர் வீட்டுக்கு வந்தாரு"

"ஓஹோ... என்ன சொன்னாரு?"

"இன்ஜெக்ஷன் போட்டாரு"

"ஓகே. ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு. என்னோட ஃபோன் என் பக்கத்திலேயே தான் இருக்கும். சரியா?"

"சரி" அழைப்பை துண்டித்தான் முகுந்தன்.

இவன் மீது அக்கறையுடன் இருக்கும் நபர்கள் கூட இங்கு இருக்கிறார்களா என்று ஆச்சரியமாய் போனது மீராவுக்கு.

சமையலறைக்கு சென்ற மீரா, அவன் காலையில் சமைத்து வைத்துவிட்டு சென்ற காலிஃப்ளவர் குருமாவை ஒரு சிறிய கிண்ணத்திற்கு மாற்றினாள். அதில் ஏதோ வித்தியாசமாய் இருப்பது அவளுக்கு தென்பட்டது. அது என்னவென்று பார்த்தவள், அது பல்லி என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தாள். இது தான் முகுந்தனின் தற்போதைய நிலைமைக்கு காரணமா? அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் ஊற்றி இறுக்கமாய் கட்டி, குப்பை கூடையில் எறிந்தாள். நல்ல வேலை, முகுந்தன் சமைத்த உணவை அன்று அவள் சாப்பிடவில்லை. அவனது நிலைமைக்கு இது தான் காரணம் என்பதை அவள் அவனிடம் கூறவில்லை. அதனால் ஏற்படும் அருவருப்பு, அவனது நிலைமையை மோசமாக்கலாம்..!

அவனுக்கு மாத்திரை கொடுத்தபின், தன் அறைக்கு  சென்றாள் மீரா, அவன் தூங்கி விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு. கதவை சாத்திய மீரா அதை தாளிடாமல் விட்டாள். அவளுக்கு தெரியும், நிச்சயம் முகுந்தன் அவளுடைய அறைக்குள் நுழையப் போவதில்லை... எப்பொழுதும்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top