50 மன்னிப்பு


50 மன்னிப்பு

கோவிலுக்கு எதிரில் இருந்த கடையைச் சேர்ந்த, மனோகரின் நண்பன் அவனை காண வந்திருந்தான். அவன் பெயர் கோகுலன்.

"என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?" என்றான்.

"முகுந்தன் இவ்வளவு நல்ல மாதிரியா மாறிட்டான்னு என்னால நம்ப முடியல" என்றான் மனோகர்.

"நீ என்ன நினைக்கிற?"

"அவன் நல்லவனா மாறிட்ட மாதிரி நடிக்கிறான்னு எனக்கு தோணுது. எந்த ஒரு மனுஷனும் இந்த அளவுக்கு எல்லாம் மாற முடியாது. அதுவும் நிச்சயமா முகுந்தனால முடியவே முடியாது. எனக்கு அவனுடைய இயல்பு நல்லாவே தெரியும். அவன் யார்கிட்டயும் பேசினது கூட கிடையாது. அவனுக்கு ஃப்ரெண்ட்னு சொல்லிக்க கூட யாருமே கிடையாது. அப்படிப்பட்டவன், எப்படி அவன் பொண்டாட்டிகிட்ட மட்டும் இவ்வளவு  சகஜமா இருக்க முடியும்?"

"அவங்க நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கு... அதனால தான் அவன் மாறிட்டான்"

"அவ நல்லவ அப்படிங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா முகுந்தன் நல்லவனா அப்படிங்கறது தான் என்னோட கேள்வியே...! நம்ம கூட அவன் ஸ்கூல்ல படிச்ச நாளிலிருந்து அவனை நமக்கு தெரியுமே. டீச்சர் கேக்கற கேள்விக்கு மட்டும் தானே அவன் பதில் சொல்லுவான்...! யார்கிட்ட இருந்தும் நோட்டு புக்கு கூட வாங்க மாட்டான். ஆனா இன்னைக்கு, கவுண்டர் அடிச்சு சிரிக்கிறான். அது எப்படி உண்மையா இருக்க முடியும்?"

"எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். அவன் மாறிட்டான். அவ்வளவு தான், விடு.."

"அது எப்படி என்னால விட முடியும்? நான் மீராவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். நீ அவளை பார்த்தல்ல? எவ்வளவு அழகா இருக்கா பாரு. முகுந்தன் மாதிரி ஒருத்தனுக்கு அப்படிப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்க தகுதியே கிடையாது"

"ஆனா அவங்களுக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சு"

"அதனால என்ன? இப்ப தான் யார் வேணும்னாலும் சகஜமா டைவர்ஸ் பண்றாங்களே"

"ஒருத்தருக்கு மத்தவரை பிடிக்கலன்னா தான் டைவர்ஸ் பண்ணுவாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் எந்த பிரச்சனையும் இல்லாம  ஒத்துமையா தானே இருக்காங்க?"

"அவங்களுக்குள்ள பிரச்சனையை ஏற்படுத்திட்டா போகுது..."

"ஏன் அப்படி செய்ய நினைக்கிற?"

"ஏன்னா, மீராவை நான் விரும்புறேன்"

"அவங்க வேற ஒருத்தரோட மனைவி"

"அவளை முதல்ல விரும்பினது நான் தான். முகுந்தனோட அம்மா அவளை நல்லா பிரைன் வாஷ் பண்ணி, அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க"

"முகுந்தன் தான் மாறிட்டானே...! மீராவுக்காக அவன் எல்லாத்தையும் விட்டுட்டு மாறி இருக்கான்னா, அவனும் அவங்களை விரும்புறான்னு தானே அர்த்தம்? நீ ஏதாவது செய்யப் போக, அது அவனை கோபப்படுத்த போகுது"

"நீ சொல்றதும் சரி தான். நான் நேரடியா எதுவும் செய்யப் போறது இல்ல. அவனை எப்படி விழ வைக்கணும்னு எனக்கு தெரியும்"

"எனக்கு என்னமோ இதெல்லாம் சரின்னு படல"

"நான் ஜெயிச்சு காட்டினதுக்கு பிறகு நீயே என்னை பாராட்டுவ பாரு"

கோகுலனுக்கு புரிந்து போனது. தான் கூறுவதை மனோகர் கேட்கப் போவதில்லை என்று. அதேநேரம், அந்த விஷயத்தில் தான் தலையிடக்கூடாது என்று அவன் முடிவுக்கு வந்தான். ஏனென்றால் அவனது அப்பாவுக்கு தெரிந்தால், அவனது தோலை உரித்து விடுவார். அதனால் இந்த விஷயத்தில் இருந்து விலகி இருப்பது என்று முடிவுக்கு வந்தான்.

"நீ இப்ப என்ன செய்யப் போற?" என்றான் கோகுல்

"உனக்கு பார்கவி ஞாபகம் இருக்கா?"

"யார் பார்கவி?"

"நம்ம ஸ்கூல்ல படிச்ச போது முகுந்தனை ரொம்ப சின்சியரா லவ் பண்ணாளே..."

"ஓ... இப்போ செயின்ட் சேவியர் ஸ்கூல்ல டீச்சரா வேலை செய்றாளே அவளா?"

"அவளே தான். அவள் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கா"

"அதனால?"

"முகுந்தனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அவனோட நடவடிக்கை மொத்தமாக மாறிடுச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சா, என்ன செய்வா?"

பதில் கூறாமல் யோசனையில் ஆழ்ந்தான் கோகுலன்.

"அவளுக்கு நிச்சயம் பொறாமையும், கோபமும் வரும்"

"அவளோட கோபம் முகுந்தனை என்ன செய்யும்?"

"என்ன செய்யும்னு நான் உனக்கு காட்றேன்"

தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றான் மனோகர். கோகுலன் பதட்டமானான். பார்கவியை வைத்து, மனோகர் என்ன செய்யப் போகிறான் என்று அவனுக்கு புரியவில்லை.

......

முகுந்தனும், மீராவும், கேசவன் மற்றும் ஜானகியுடன் பேசியபடி மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"உனக்கு மும்பை பிடிச்சிருக்கா மா?" என்றார் கேசவன்

"ஆமாம், பா. ரொம்ப பிடிச்சிருக்கு சென்னைக்கும் மும்பைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும், நல்லா இருக்கு,

"ஆஃபீஸ் வேலையெல்லாம் உனக்கு சரிப்பட்டு வருதாம்மா?" என்றார்.

"அதெல்லாம் அட்ஜஸ்ட் ஆயிடுச்சு பா"

"நம்ம முகுந்தன் மாதிரி இல்லாம,  உனக்கு ஆபீஸ்ல நெறைய ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்று அவன் வம்புக்கு வந்தார் ஜானகி.

"ஆமாம் மா எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க"

"ஆமா ஆமா, அவங்க இவளுக்காக உயிரைக் கூட கொடுப்பாங்க" என்றான் முகுந்தன் கிண்டலாய்.

"நிச்சயமா கொடுப்பாங்க. என்ன ஒரு பிரச்சனைனா, அவங்க உயிரை எடுக்கிறதே இவரா தான் இருப்பாரு" என்று கூறி சிரித்தாள் மீரா.

அவளைப் பார்த்து முறைத்தான் முகுந்தன்.

"அதுக்கு என்ன அர்த்தம்?" என்றார் ஜானகி

"என்னோட ஃபிரெண்ட்ஸ் இவர் முன்னாடி என்கிட்ட பேசவே பயப்படுவாங்க" என்றாள் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு மீரா.

"ஏன் முகுந்தா?"

"மா, உங்களுக்கு அவங்களைப் பத்தி தெரியாது. இவகிட்ட அப்படி வழிவானுங்க"

"அவங்க எப்படி இருந்தா நமக்கு என்ன? நான் ஒழுங்காக தானே இருக்கேன்? அதைப்பத்தி தானே நீங்க கவலைப்படணும்?" என்றாள் மீரா.

"அவ சொல்றது சரி தானே? அவ சரியா இருக்கும் போது, நீ மத்தவங்களை பத்தி ஏன் கவலைப்படுற?"

"மா, அப்பா கிட்ட யாராவது வழிஞ்சு பேசினா உங்களுக்கு கோபம் வராதா?"

"அவர் வழிஞ்சு பேசாத வரைக்கும் எனக்கு கோபம் வராது"

"போங்க, நீங்க எப்ப பாத்தாலும் உங்க மருமகளை தான் சப்போர்ட் பண்ணுவீங்க... அப்பா, நீங்க சொல்லுங்க"

"நீ மீராவை நம்புற இல்ல?"

"என்னை விட அதிகமா நான் அவளை நம்புறேன்"

"அப்புறம் என்ன பிரச்சனை இருக்கு?"

"நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஒரு பொண்ணு தப்பானவளா இருந்தா மட்டும் தான் ஆம்பளைங்க அவளை தப்பான நோக்கத்தோட நெருங்குவாங்கன்னு நினைக்கிறீங்களா? ஒரு பொண்ணு சிரிச்சு பேசினாலே அவளை தப்பா நினைக்கிற நிறைய ஆம்பளைங்களை நான் பார்த்திருக்கேன்" என்று மீராவின் பக்கம் திரும்பிய அவன்,

"உன்கிட்ட அவராஜித் தப்பா நடந்துக்க பார்த்தானே, அதுல உன்னோட தப்பு என்ன இருந்தது?"

"ஆமாம், அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? அப்படிப்பட்ட மோசமானவங்க கிட்ட நம்ம ஒன்னும் செய்ய முடியாது தான். ஆனா, யார் கிட்ட பேசணும்னு, பேச கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"நீ என்னோட ஒய்ஃப்ன்னு நம்ம ஆஃபீஸ்ல தெரியுறதுக்கு முன்னாடி, நம்ம ஆஃபீஸ்ல இருந்த சில பேர் உன்னை கல்யாணத்துக்காக ப்ரொபோஸ் பண்ண நினைச்சாங்க தெரியுமா உனக்கு?" என்றான் முகுந்தன் சீரியஸாக.

அதைக் கேட்டு ஜானகி வாய்விட்டு சிரிக்க, அவரைப் பார்த்து முறைத்தான் முகுந்தன்.

"ஆமா, அவங்க கேட்டாங்க தான்... ஆனா, நான் கல்யாணம் ஆனவள்னு அவங்க கிட்ட சொல்லிட்டேனே..."

"நெஜமா அப்படி நடந்துதா?" என்றார் கேசவன்.

ஆம் என்று தலையசைத்தாள் மீரா.

"அவங்க கிட்ட நீ வேற என்ன சொன்ன?"

"அவ என்ன சொல்லி இருப்பாள்னு நான் சொல்லட்டுமா?" என்றார் ஜானகி

ஆச்சரியத்துடன் கேசவன் தன் புருவம் உயர்த்த, அவரை புருவம் நெறித்து பார்த்தான் முகுந்தன்.

"நான் என்ன சொல்லி இருப்பேன்னு நீங்க சொல்லுங்க அம்மா" என்றாள் மீரா.

"என் புருஷனை நான் ரொம்ப காதலிக்கிறேன். என் வாழ்க்கையே அவர் தான்... அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல... " என்றார் கனவில் மிதப்பவர் போல.

மீரா கலகலவென சிரிக்க, அவரை பெருமையுடன் பார்த்தான் முகுந்தன்.

"நீ இப்போ எதுக்கு அவனை ஓட்டிக்கிட்டு இருக்க? அவன் தானே மீராவுக்கு அவங்க கம்பெனியில வேலை வாங்கி தந்தான்?" என்றார் கேசவன்.

மீராவும், ஜானகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, வெடித்து சிரித்தார்கள்.

"எதுக்காக ரெண்டு பேரும் இப்படி சிரிக்கிறீங்க?" என்றார் கேசவன் ஒன்றும் புரியாமல்.

"வேலைக்கு அப்ளை பண்ணது மீரா தான். அந்த வேலை கிடைச்சதுக்கும் முழுக்க முழுக்க மீரா தான் காரணம். அவ அந்த கம்பெனிக்கு இன்டர்வியூக்கு வர போரறா அப்படிங்கற விஷயமே முகுந்தனுக்கு தெரியாது" என்றார் ஜானகி.

"நெஜமாவா?" என்றார் கேசவன்.

ஆம் என்று தலையசைத்தாள் மீரா

"பரவாயில்லையே நீ... (முகுந்தனை சுட்டிக்காட்டியபடி) உனக்கு யாரோட உதவியும் தேவையில்லன்னு நீ நிரூபிச்சிட்ட" என்றார் கிண்டலாய்.

"அப்பா, அபராஜித் அவகிட்ட தப்பா நடந்துக்கும் போது அவனை வெளுத்து வாங்கினது நான் தான். எப்படி இருந்தாலும் அவளுக்கு என்னோட ஹெல்ப் தேவை தான்" என்றான் முகுந்தன்.

தன் உதட்டை மடித்து ஆம் என்று அவசரமாய் தலையசைத்தாள் மீரா.

"அவ மட்டும் கராத்தே கத்துக்கிட்டா, அவளுக்கு  உன்னோட உதவி தேவை இல்ல" என்றார் ஜானகி.

"அப்படியா மீரா?" என்றான் முகுந்தன்

அவள் இல்லை என்று தலையசைக்க,

"இதுக்கு என்ன அர்த்தம்?" என்றான் அவன்

"எனக்கு தேவை உங்க உதவி இல்ல... நீங்க தான்" என்றாள்.

தன் அம்மாவை பார்த்து பெருமையாய் புன்னகை புரிந்தான் முகுந்தன்.  அவர் தன் தலையை இடவலமாய் அசைத்து பெருமூச்சு விட்டார்.

"அம்மா, எதுக்காக எப்ப பாத்தாலும் என்னை இரிடேட் பண்ணிட்டு இருக்கீங்க?"

"மத்தவங்களை இரிடேட் பண்ணும் போது எப்படி இருக்கும்னு நீ தெரிஞ்சுக்கணும்னு தான் அப்படி செய்றேன்"

"ஏன் அப்படி செய்றீங்க?"

"இருபத்தி எட்டு வருஷம் நீ எங்களை அப்படி தானே படுத்தி வச்சுக்கிட்டு இருந்த? எங்களுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்?"

ஆம் என்று தலையசைத்த முகுந்தன்,

"ஐ அம் சாரி மா" என்றான்

அது ஜானகியை நெகிழச் செய்தது.

"நான் சும்மா விளையாட்டுக்கு..." என்றார் அவர்

அவர் கையைப் பிடித்த முகுந்தன்,

"நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. உங்களோட உணர்வுகளை மதிக்க நான் தவறிட்டேன். ஆனா அதையெல்லாம் நான் தெரிஞ்சே செய்யல மா. நான் ஏன் அப்படி இருந்தேன்னு எனக்கே புரியல"

அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு போனார் கேசவன். ஜானகியோ பேசவே திணறினார்.

"விடுடா, நீ தான் இப்போ மாறிட்டியே.. எதார்த்தத்தையும் புரிஞ்சுகிட்ட... அதுவே போதும்" என்றார் கேசவன்.

கலங்கிய கண்களுடன் ஆம் என்று தலையசைத்தார் ஜானகி. அவர்கள் மூவரையும் புன்னகையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீரா.

செயின்ட் சேவியர் பள்ளி

ஆசிரியர்களின் ஓய்வறையில் விடைத்தாள்களை திருத்திக் கொண்டு இருந்தாள் பார்கவி. அப்போது அவளிடம் வந்த ஒரு உதவியாளர்,

"பார்கவி மேடம்" என்று அவளை அழைத்தார்.

தன் தலையை உயர்த்தி அவரை ஏறிட்ட பார்க்கவி,

"சொல்லுங்க" என்றாள்.

"யாரோ மனோகராம்... அவர் உங்களை பார்க்க வந்திருக்காரு"

"மனோகரா?" என்று முகத்தை சுருக்கினாள் அவள்

"ஆமாம் மேடம், அவர் உங்க கூட ஒரே ஸ்கூல்ல படிச்சவராம். உங்ககிட்ட ஏதோ அலுமினி ஃபங்க்ஷன் பத்தி பேசணுமாம்"

பார்கவி தன் கை கடிகாரத்தை பார்த்தாள். அடுத்த வகுப்புக்கு செல்ல அவளுக்கு பதிணைந்து நிமிடம் நேரம் இருந்தது. அதனால் மனோகரை சந்திப்பது என்று முடிவு செய்து அவனை பார்க்க சென்றாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top