49 மூக்குடைப்பு
49 மூக்குடைப்பு
"யார் நீங்க?" என்றான் முகுந்தன் மனோகரை பார்த்து.
"நான் சொல்லல அங்கிள்? பாருங்க, இவனுக்கு என்னை ஞாபகம் கூட இல்ல. ஏன்னா, எங்க ஸ்கூல்ல இவன் யார்கிட்டயுமே பேச மாட்டான்" என்றான் மனோகர் ஜனார்த்தனிடம்.
"ஆமா, நான் ஸ்கூல்ல (என்பதை அழுத்தி) படிச்சப்போ நான் யார்கிட்டயும் பேசமாட்டேன். ஏன்னா, எங்க கிளாஸ்ல இருந்த பசங்க யாருமே நல்லவங்க இல்ல" என்று அவனுக்கு பதிலடி கொடுத்தான் முகுந்தன்
"நான் மனோகர். நம்ம ரெண்டு பேரும் லெவன்த், டுவேல்த் ஒரே செக்ஷன்ல படிச்சோம்" என்றான் மனோகர்.
அதைக் கேட்ட மீரா திடுக்கிட்டாள். முகுந்தன் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த மனோகர் இவன் தானா? முகுந்தனுக்கு உண்மையிலேயே இவனை அடையாளம் தெரியவில்லையா, அல்லது பாசாங்கு செய்கிறானா?
"ஓ நீயா...? நம்ம கிளாஸ் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து செருப்படி வாங்குனியே... அவனா நீ?" என்றான் சாதாரணமாய் முகுந்தன்.
மனோகருக்கு தூக்கி வாரி போட்டது. அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் ஜனார்த்தனன்.
"இல்ல, இல்ல, அந்த மனோகர் நான் இல்ல" என்று தன் தவறை மூடி மறைக்க முயன்றான் மனோகர்.
"அட, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நம்ம கிளாஸ்ல இருந்தது ஒரே ஒரு மனோகர் தானே? உங்க அப்பா, பால் பொருள் டீலர் பத்மநாபன் தானே?" என்றான்.
மனோகர் அவனுக்கு பதிலளிக்கும் முன், ஜனார்தனன் கூறினார்,
"ஆமாம் இவங்க அப்பா பத்மநாபன் தான்"
"மாமா, எங்க ஸ்கூல் ஆனுவல் டே ப்ரோகிராம் நடந்த போது இவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?" என்று சிரித்தான் முகுந்தன்.
மனோகரன் அச்சத்தில் மென்று விழுங்கினான்.
"என்ன செஞ்சாரு?" என்றார் ஜனார்த்தனன்.
"என்ன முகுந்தன், நம்ம பழைய கதை எல்லாம் பேசணும்னு இப்போ என்ன அவசியம்?" என்று அவன் எதையும் மேற்கொண்டு கூறி விடாமல் தடுக்க முயன்றான் மனோகரன்.
"நீ என் முன்னாடி வந்து நிக்கும் போது என்னால எப்படி பழசை எல்லாம் நினைக்காம இருக்க முடியும்? எங்க ஸ்கூல் கேர்ள்ஸ் டிரெஸ்ஸிங் ரூம்ல எட்டிப் பார்த்ததுக்காக, இவனை பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து அடிச்சு மொத்தி எடுத்துடிச்சிங்க"என்று சிரித்தான் முகுந்தன்.
மனோகரை அருவருப்புடன் ஏறிட்டார் ஜனார்த்தனன். ஜனார்த்தனன் முன்பாகவும், மீராவின் முன்பாகவும் தன்னைப் பற்றிய உண்மையை முகுந்தன் கூறி விட்டதை அவமானமாய் உணர்ந்தான் மனோகரன். ஜனார்த்தனன் அவனை கேவலமாய் பார்த்த பார்வை, அவனுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
மீரா அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
"மனோகரை பத்தி பேசணும்னா நிறைய விஷயம் இருக்கு. நான் நாளைக்கு வீட்டுக்கு வரும் போது எல்லாத்தையும் சொல்றேன்" என்றான் முகுந்தன் தனது சிரிப்புக்கு இடையில்.
மனோகரின் தடுமாற்றம் நிறைந்த முகபாவத்தை கவனிக்க தவறவில்லை மீரா. இந்த மனோகருக்கு தான் எவ்வளவு தைரியம்! இவன் பெண்களுக்கு பின்னால் திரிந்து கொண்டு இருந்துவிட்டு, அவன் என்னவோ மிகவும் நல்லவன் என்பது போல, முகுந்தனை அவளது அப்பாவின் கண்களில் மோசமானவனாக சித்தரிக்க முயன்றிருக்கிறான். அவனை பார்க்க வேண்டும் என்று முகுந்தன் நினைத்தது கூட நல்லது தான். இனி அவன் எப்பொழுது முகுந்தனின் வழியில் குறுக்கிட நினைக்க மாட்டான். முகுந்தன் தான் கண்ணுக்கு தெரியாத பல அறைகளை அவன் கன்னத்தில் விழ செய்து விட்டானே...! என்று எண்ணினாள் மீரா
"நல்ல காலம் பா, என் வீட்டுக்காரருக்கு இந்த மாதிரி மோசமான ஃப்ரண்ட் எல்லாம் இல்லாம இருந்தது நல்லதா போச்சு. அவர் யார்கிட்டயும் பேசாம இருந்ததே நல்லது தான். அவர் மட்டும் இவங்க கிட்ட எல்லாம் பேசி இருந்தா, இவரையும் இவங்க கெடுத்து குட்டிச்சுவராக்கி இருப்பாங்க" என்றாள் பொய்யான பயத்தோடு
"இல்ல மீரா, நான் இவங்க கூட சேர்ந்து பழகி இருந்தாலும் கூட, நான் கெட்டுப் போயிருக்க மாட்டேன். ஒரு மனுஷனுடைய இயல்பை யாராலும் மாத்திட முடியாது இல்ல? அவன் யார் கூட ஃபிரண்டா இருந்தாலும் அவன் அவனா தான் இருப்பான்" என்றான் முகுந்தன் மனோகரை பார்த்தவாறு.
"ஆனா, நீங்க தான் என்கூட சேந்த பிறகு நிறைய மாறிட்டீங்களே" என்றாள் மீரா பெருமையுடன்.
"என் பொண்டாட்டி இவ்வளவு ஸ்வீட் அண்ட் க்யூட்டா இருந்தா நான் ஏன் மாற மாட்டேன்?" என்றான் குழைவாக.
என்னடா கருமம் இது? என்பது போல் மனோகர் நின்றிருக்க, தன் மகளையும் மருமகனையும் ரசித்தபடி இருந்தார் ஜனார்த்தனன்.
"நான் என்ன சொல்லி சாமி கும்பிட்டேன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மீரா கோவிலை குறிப்பிட்டபடி.
"என்ன சொல்லி சாமி கும்பிட்ட?"
"நான் கடவுள் கிட்ட எதுவுமே கேட்கல. நன்றி மட்டும் தான் சொன்னேன். உங்களை என் வாழ்க்கையில அனுப்புனதுக்காக" என்று சிரித்தாள் மீரா.
"அப்படினா எதிர்காலத்துல நீ கடவுளுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டி இருக்குமே" என்றான் முகுந்தன் கிண்டலாய்.
"நான் அதை சந்தோஷமா செய்வேன்" என்றாள் மீரா.
ஜனார்த்தனன் அவர்களை பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த மனோகரின் வயிறு பற்றி எரிந்தது. அவன் நினைத்தது வேறு. அங்கு நடந்து கொண்டிருந்தது வேறு.
"அக்சுவலா, அதெல்லாம் நடந்தது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி. அப்போ நான் ரொம்ப சின்ன பையனா இருந்தேன். இப்போ நான் நிறைய மாறிட்டேன். காலம் எல்லாத்தையும் மாத்தும் இல்லையா அங்கிள்?" என்றான் மனோகர் பைத்தியக்காரன் போல பல்லை இளித்துக் கொண்டு.
"நீங்க சொல்றது சரி தான் மனோகர். காலம் எல்லாரையும் மாத்தும். அதே மாதிரி தான், அது என் மாப்பிள்ளையையும் மாத்தி இருக்கு" என்றார் பெருமை பொங்க.
என்ன கூறுவது என்றே புரியாமல் விழித்தான் மனோகர்.
"நான் கிளம்புறேன் மாப்பிள்ளை. நாளைக்கு பாக்கலாம்" என்றார் ஜனார்த்தனன்.
"சரிங்க மாமா. நாளைக்கு பாக்கலாம்"
ஜனார்தனன் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, தனது இருசக்கர வாகனத்தை கிளப்பிக் கொண்டு மீராவுடன் கிளம்பினான் முகுந்தன்.
கண்களில் கோபப்பொறி பறக்க நின்றிருந்தான் மனோகர். தான் செய்த பொறுக்கித்தனத்தை எல்லாம் முகுந்தன் மறக்காமல் நினைவில் கொண்டிருப்பான் என்பதை அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. இனி தான் கூறும் எதுவும் ஜனார்த்தனனிடம் எடுபடாது என்பது அவனுக்கு புரிந்து போனது.
சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் தனது வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் முகுந்தன். அவனது மகிழ்ச்சிக்கு காரணம், மனோகரை மூக்குடைப்பு செய்தது மட்டும் அல்ல. அவன் அதை செய்யும் போது, மீரா அவனுக்கு உறுதுணையாக இருந்தாள் என்பது தான் அவனது பேரின்பத்திற்கு காரணம். கிட்டத்தட்ட இந்த விஷயத்தை இப்படித்தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவன் எண்ணியிருந்தான். மனோகரை பற்றி அவன் மட்டுமே பேசிக்கொண்டு இருந்திருந்தால், அது மிகைப்படுத்துதல் போன்று இருந்திருக்கும். அவனுக்கும் மீராவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மனப்பொருத்தம் எப்படிப்பட்டது என்று மனோகர் மட்டும் அல்லாமல் ஜனார்த்தனன் கூட புரிந்து கொண்டிருப்பார். அவனது பேச்சுக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தது, மீரா அதை எடுத்துப் பேசியது தான். அது தான் ஜனார்தனுக்கு திருப்தியும், மனோகருக்கு அதிர்ச்சியும் அளித்தது.
அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மீரா, தன் முகவாய்கட்டை அவன் தோளின் மீது வைத்து அவன் இடையை சுற்றி வளைத்துக் கொண்டாள். ரியர் வியூ கண்ணாடியின் வழியாக அவளை பார்த்து புன்னகை புரிந்தான் முகுந்தன். அவனது புன்னகையே எடுத்துக் கூறியது, அவன் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தான் என்று.
......
அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி தொடரை பார்த்தபடி வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார் கேசவன். அது, முதல் நாள் ஒளிபரப்பப்பட்ட ஒரு மெகா தொடரின் மறுஒளிபரப்பு.
"ஜானு, இங்க சீக்கிரம் வா. இவ என்ன பண்றான்னு பாரு" என்றார் அவர்.
சமையலறையில் இருந்து வெளியே ஓடிவந்த ஜானகி,
"நான் சொல்லல? பாருங்க இவள் எவ்வளவு மோசமானவள்னு" என்றார் அவர்.
"நீ சொன்னது சரி தான். அவள் இவ்வளவு மோசமானவளா இருபான்னு நான் நினைக்கவே இல்ல"
"அப்பா, எப்போதிலிருந்து நீங்க டிவி சீரியல் பார்க்க ஆரம்பிச்சீங்க?" என்றான் முகுந்தன் சிரித்தபடி.
"நாங்க வேற என்ன பண்றது? எங்களை மாதிரி தனியாக இருக்கிற வயசானவங்களுக்கு இது தான் டைம் பாஸ்" என்றார் ஜானகி.
"ஆமா, வயசாயிடுச்சுன்னு ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தியே என்னை சீரியல் பார்க்க வெச்சிட்டா உங்க அம்மா" என்றார் கேசவன்
"என்னங்க, இவங்க சொல்றத எல்லாம் பார்த்தா, நம்மளும் வயசான காலத்துல டிவி சீரியல் தான் பார்த்துக்கிட்டு இருப்போம் போல இருக்கே" என்றாள் மீரா.
"நிச்சயமா இல்ல. நம்ம சீரியல் எல்லாம் பார்க்க மாட்டோம். ரொம்ப பிஸியா இருப்போம்" என்றான் முகுந்தன்
மூவரும் அவனை விசித்திரமாய் பார்த்தார்கள்.
"உனக்கு வயசாகும் போது நீ சீரியல் பார்க்க மாட்டியா?" என்றார் கேசவன்.
மாட்டேன் என்று தலையசைத்தான் முகுந்தன்.
"வயசான காலத்துல எப்படி நேரத்தை கடத்தணும்னு நம்ம பிள்ளை நிறைய பிளான் பண்ணி வச்சிருக்கான் போல இருக்கு" என்றார் ஜானகி.
ஆமாம் என்று தலையசைத்தான் முகுந்தன்.
"டேய், அப்படி ஏதாவது ஐடியா இருந்தா எங்க கிட்டயும் சொல்லு. நானும் இந்த சீரியலை எல்லாம் ஒழிச்சு கட்டுவேன் இல்ல?" என்றார் கேசவன்.
"நானும் மீராவும் ஒருத்தர் கூட மற்றொருவர் டைம்ஸ் ஸ்பென்ட் பண்ணுவோம். எல்லாத்துக்கும் மேல, எங்க பேர பிள்ளைங்கள பாத்துக்க ஆரம்பிச்சிட்டா, அதுக்கு அப்புறம் சீரியல் பார்க்கவெல்லாம் எங்கிருந்து எங்களுக்கு டைம் இருக்க போகுது? அவங்க எங்களை ஃபுல் டே பிஸியா வச்சிருக்க மாட்டாங்களா?"
"முழு நாளும் அவங்க கூடவா நீ இருப்ப?"
"ஆமாம்... அவங்களை தனியா மட்டும் இருக்க விடவே மாட்டேன்" என்றான் சீரியஸாய்
"ஓஹோ..."
"தனியா இருக்கிறது எவ்வளவு பெரிய கெட்ட பழக்கம் தெரியுமா? என் பிள்ளைகளை தனியாக இருக்க விடாம, அவங்களுக்கு அப்படி ஒரு எண்ணமே வராம, ஒரு நல்ல அப்பாவா நான் நடந்துக்குவேன்" என்றான் கேசவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி.
அதைக் கேட்டு கேசவன் அதிர்ச்சி அடைந்தார். ஜானகி அவனை ஒரு அடி போட்டார். மீராவோ கலகலவென சிரித்தாள்.
"ஜானகி, இந்த பையன், அவன் செஞ்ச வேலைக்கு எல்லாம் நம்மளை குறை சொல்லுவான் போலிருக்கு"
"பின்ன என்ன? நல்லது கெட்டதை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது பெத்தவங்க கடமை தானே? நான் தனியா இருக்க ஆசைப்பட்டா, என்னை அப்படியே இருக்க விட்டுடுவீங்களா நீங்க? பாருங்க, என் பொண்டாட்டி என்னை எப்படி மாத்தி நல்லபடியா வச்சிருக்கா...!" என்றான் சிரிப்பை அடக்கியபடி.
வெங்காய தட்டை கீழே வைத்துவிட்டு எழுந்த கேசவன்,
"ஜானகி, நம்ம பொருளை எல்லாம் மூட்டை கட்டு. நம்ம உடனே மும்பைக்கு கிளம்பறோம்... இவன் நம்மளை தாத்தா பாட்டி ஆக்கப் போறான். நம்ம பேரப்பிள்ளைங்களோட நம்ம டைமை ஸ்பென்ட் பண்ண போறோம். புரிஞ்சிதா உனக்கு?" என்றார்
"அப்பா, நீங்க தாராளமா மும்பைக்கு வாங்க. ஆனா இப்போ இல்ல"
"அப்புறம் வேற எப்போ?"
"எங்களுக்கு பிள்ளைங்க பிறந்ததுக்கு பிறகு"
"அது எப்போ நடக்கும்?"
"நான் என் வைஃபோட கொஞ்சம் ஜாலியா என்ஜாய் பண்ணதுக்கு பிறகு..."
"ஓஹோ..." என்றார் கிண்டலாய் தன் தலையை அசைத்தபடி கேசவன்.
மகிழ்ச்சியில் திளைத்தார் ஜானகி. இதெல்லாம் அவர் வாழ்வில் நடக்கிறது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு வாழ்வுக்காக தான் அவர் ஏங்கி தவித்தார். முழுமை அடைந்த தன் குடும்பத்தின் சந்தோஷம் எப்பொழுதும் காக்கப்பட வேண்டும் என்று கடவுளை மனமாற வேண்டினார். அவருக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top