48 ஆர்வம்
48 ஆர்வம்
முகுந்தனும் மீராவும், கேசவன், ஜானகியுடன் சிற்றுண்டி உண்டார்கள்.
"ரொம்ப நல்லா இருக்கு அத்தை" என்றாள் மீரா.
அவளை பொருள் புரிந்த பார்வை பார்த்தான் முகுந்தன். தன் நாக்கை கடித்து,
"நல்லா இருக்கு அம்மா" என்று சிரித்த மீராவை பார்த்து சினேகத்துடன் சிரித்தார் ஜானகி.
"மீரா, சீக்கிரம் சாப்பிடு. நம்ம ரெடி ஆகணும்" என்றான் முகுந்தன்.
"நீ அவளை எங்கடா கூட்டிக்கிட்டு போற?" என்றார் ஜானகி.
"சஸ்பென்ஸ்" என்று எழுந்து நின்றான் முகுந்தன்.
ஜானகி கேள்விக்குறியுடன் மீராவை பார்க்க, அவள் *எனக்கும் தெரியாது* என்பது போல் தலையசைத்தாள்.
"நீ இன்னைக்கு எங்கேயும் போக மாட்டேன்னு நெனச்சு நான் ஆபீசுக்கு லீவு போட்டுட்டேன்" என்றார் கேசவன்.
"ஒன்னும் பிரச்சனை இல்லப்பா. நாங்க சீக்கிரம் வந்துடுவோம்" என்றான் முகுந்தன்.
சரி என்று தலையசைத்தார் கேசவன்.
தன் அறைக்குச் சென்ற முகுந்தனை பின்தொடர்ந்தாள் மீரா.
"மீரா, ஏதாவது லைட்டான டிரஸ் போட்டுக்கோ" என்றான் முகுந்தன்.
சரி என்று தலையசைத்துவிட்டு, தன்னிடம் இருந்த வெளிர் நீல சுடிதாரை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றாள் மீரா.
வெளியே வந்த அவள், முகுந்தனை பார்த்து திகைத்து நின்றாள். அவனும் அவள் அணிந்திருந்த அதே நிற டிஷர்ட் அணிந்திருந்தான்.
தன்னையும், பிறகு முகுந்தனையும் பார்த்த அவள்,
"என்னங்க, இன்னைக்கு நிச்சயமா நமக்கு எக்கச்சக்க திருஷ்டி பட போகுது" என்றாள்.
"ஏன்?" என்றான் தன் பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு.
"நம்ம ரெண்டு பேரையும் பாருங்க... நம்ம ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்டிருக்கோம். அதனால..."
"அதனால?"
"எல்லாருடைய பார்வையும் நம்ம மேல தான் இருக்க போகுது..."
"அதனால...?"
"அதனால என்ன, எல்லாரும் நம்மளை கண்ணு வைக்க போறாங்க!
"இரு" என்று கூறி கண்ணாடியின் அருகில் இருந்த மை டப்பாவில் இருந்து மையை எடுத்து, அவளை நோக்கி கையை நீட்டிய பொழுது, பின்னோக்கி நகர்ந்தாள் மீரா.
"ஷ்ஷ்..." என்று அவள் கன்னத்தில் ஒரு பொட்டு வைத்தான்.
"இப்போ எந்த கண்ணும் ஒன்னும் பண்ணாது"
அதே மை டப்பாவில் இருந்து மையை எடுத்து அவன் கன்னத்தில் வைத்தாள் மீரா.
"ஓய்... என்ன செய்ற?"
"என்னைவிட அதிகமா உங்களுக்கு தான் இன்னைக்கு திருஷ்டி படப் போகுது. நம்ம ரெண்டு பேரையும் இப்படி பார்க்குறவங்க எத்தனை பேருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகுதோ, எத்தனை பேர் மயக்கம் போட்டு விழ போறாங்களோ தெரியல" என்றாள்.
சிரித்தபடி தன் கன்னத்தில் இருந்த மையை துடைத்தான் முகுந்தன்.
"வா போகலாம்..."
இருவரும் தங்கள் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களை, திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டு நின்றார் ஜானகி.
"மீரா நம்ம மேல கண்ணுபட ஆரம்பிச்சிடுச்சு" என்று சிரித்தான் முகுந்தன்.
தன் சிரிப்பை அடக்கி கொண்டாள் மீரா.
"டேய், என்னடா இது?" என்றார் கேசவன்.
"என்னப்பா?"
"நீங்க ரெண்டு பேரும் இப்படி மேட்சிங்கா இருக்கீங்க..."
"நாங்க தான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே மேட்ச் ஆயிட்டோமே" என்றான்.
"நான் உங்க டிரஸ்ஸை பத்தி சொன்னேன்"
"பார்க்க நாங்க நல்லா இல்ல?" என்றான்.
"சூப்பரா இருக்கீங்க"
"அப்புறம் என்ன?"
"ஒன்னும் இல்ல..." என்று பெருமூச்சு விட்டார் கேசவன்
ஜானகியை அங்கு காணவில்லை.
"அம்மா எங்க?" என்றான் அவன்.
இங்கும் அங்கும் பார்த்த கேசவன்,
"எங்க டா போனா? இவ்வளவு நேரம் இங்க தானே நின்னுகிட்டு இருந்தா?" என்றார்.
அப்பொழுது கையில் உப்பும் மிளகாயும் எடுத்துக்கொண்டு ஜானகி வருவதை பார்த்தார்கள்.
முகுந்தனையும் மீராவையும் நிற்க வைத்து, அந்த மிளகாயையும் உப்பையும் சுற்றி போட்ட அவர்,
"கடவுளே... என் கண்ணே பட்டுடும் போல இருக்கே..." என்றார் தவிப்புடன்
"உங்க கண்ணு எங்களை ஒன்னும் பண்ணாது மா" என்றாள் மீரா.
"அப்படி சொல்லாத... தாய் கண்ணு பேய் கண்ணுனு சொல்லுவாங்க" என்றார்.
"கரெக்டு தான்" என்று சிரித்தான் முகுந்தன். அவன் தலையில் ஒரு குட்டு வைத்த ஜானகி,
"வண்டியை மெதுவா ஓட்டிக்கிட்டு போ. ஜாக்கிரதை" என்றார்.
சரி என்று தலையசைத்து, மீராவுடன் அங்கிருந்து கிளம்பினான் முகுந்தன்.
பெருமூச்சு விட்டபடி சோபாவில் அமர்ந்தார் ஜானகி.
"என்ன ஆச்சு?" என்னால.
"இதையெல்லாம் நம்பவே முடியல"
"என்னாலையும் தான்" என்று சிரித்தார் கேசவன்
"மீரா கிட்ட நான் ஃபோன்ல பேசும்போதெல்லாம் அவ முகுந்தனை பத்தி ரொம்ப மிகைப்படுத்தி சொல்றான்னு நெனச்சேன். ஆனா இப்ப தான் தெரியுது, அவ சொன்னது எதுவும் பொய் இல்லைன்னு"
"எனக்கு நம்ம முகுந்தனை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு"
"பின்ன என்ன??? எனக்கு புதுசா பிறந்த மாதிரி இருக்கு" என்றார் ஜானகி.
"ஜனார்த்தனன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி இவங்க வந்திருக்கிற விஷயத்தை சொல்லுங்க" என்றார் ஜானகி.
சரி என்று தலையசைத்து விட்டு, தன் கைபேசியை எடுத்து ஜனார்த்தனனுக்கு ஃபோன் செய்தார் கேசவன். அந்த அழைப்பை ஏற்ற ஜனார்த்தனன்
"வணக்கம் சம்பந்தி" என்றார்.
"வணக்கம், நான் உங்களுக்கு ஒரு நல்ல நியூஸ் வச்சிருக்கேன்"
"என்ன நியூஸ்?"
"உங்க மகளும், மருமகனும் சென்னைக்கு வந்திருக்காங்க"
"நிஜமாவா சொல்றீங்க?" என்றார் குதூகலமாய்.
"ஆமாம், இப்ப தான் வந்தாங்க"
"ஆனா, இதைப் பத்தி மீரா என்கிட்ட எதுவுமே சொல்லலையே"
"அவளுக்கே தெரியாதே..."
"அப்படின்னா?"
"அவளுக்கும் கூட இது ஒரு சர்ப்ரைஸ் தான்"
"ஓ..." என்று அதிசயத்தார் ஜனார்த்தனன்.
"அவங்க ரெண்டு பேரும் வெளியில போயிருக்காங்க. வந்ததுக்கு பிறகு மீரா உங்களுக்கு ஃபோன் பண்ணுவான்னு நினைக்கிறேன். அவங்க நாளைக்கு உங்களை வந்து பார்க்கணும்னு பிளான் பண்ணி இருக்காங்க"
"ரொம்ப சந்தோஷம்" என்றார் ஜனார்த்தனன்.
"அதைப்பத்தி உங்க கிட்ட சொல்லத்தான் நான் ஃபோன் பண்ணேன்"
"ரொம்ப தேங்க்ஸ் கேசவன் சார்"
"யூ ஆர் வெல்கம்" என்று அழைப்பை துண்டித்தார் கேசவன்.
....
முகுந்தனின் இருசக்கர வாகனத்தில் அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மீரா, அவனை நோக்கி நெருக்கமாய் நகர்ந்து,
"என்னை எங்க கூட்டிகிட்டு போறீங்க?" என்றாள்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அதை நீயே தெரிஞ்சிக்குவ" என்றான் அவன்.
மீராவின் அப்பாவின் எலக்ட்ரிக் ஷாப் இருந்த திசையை நோக்கி அவர்கள் செல்வதை பார்த்து,
"நம்ம எங்க அப்பா கடைக்கு போறோமா?" என்றாள் மீரா.
"இல்ல"
"வேற எங்க போறீங்க?"
"உங்க அப்பா கடை இருக்கிற ஏரியாவுக்கு பக்கத்துல ஒரு கோவில் இருக்கு. அங்க தான் போறோம்"
"ஓ..."
கோவிலுக்கு முன்னால் வண்டியை நிறுத்திய முகுந்தன், மீராவை இறங்கும்படி சைகை செய்தான். பின்பு ஆற அமர வண்டியை விட்டு இறங்கினான் அவன். அவர்களை சில கண்கள் நோட்டமிடுவதை அவன் கவனித்தான்.
"உங்களுக்கு கோவிலுக்கு வர்ற பழக்கம் எல்லாம் கூட இருக்கா?" என்றாள் மீரா.
"இல்ல, நான் சின்ன பையனா இருந்த போது, எங்க அம்மா அடிக்கடி என்னை இங்க கூட்டிகிட்டு வருவாங்க. அதனால உன்னை இங்க கூட்டிகிட்டு வர நினைச்சேன்"
"ஓ..."
"அர்ச்சனை தட்டு எதுவும் வாங்கலையா?" என்றான் அவன் புன்னகையுடன், ஒரு குறிப்பிட்ட கடையை கவனித்தபடி. அங்கு இருந்த சிலருக்கு நேரம் கொடுக்க எண்ணினான் அவன்
அவன் நினைத்தபடியே தன் கைபேசியை எடுத்து அவர்கள் வேறு ஒருவருக்கு ஃபோன் செய்தார்கள். அது ஒரு ஹார்ட்வேர் கடை. அப்பாவும் பிள்ளையும் இணைந்து அந்த கடையை நடத்தினார்கள். அப்பா, ஜனார்த்தனனுக்கும், மகன், மனோகருக்கும், நண்பர்கள். முகுந்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, மனோகர் அந்தக் கடையில் இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறான். அவனது திருமண நாளன்று ஜனார்த்தனன் அந்த கடையின் முதலாளியான அப்பாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். ஜனார்த்தனனுக்கும் மனோகருக்கும் அந்த கடையிலிருந்து கைபேசி அழைப்புகள் பறந்தன.
அர்ச்சனை தட்டும் மாலையும் வாங்கிக் கொண்டாள் மீரா.
"வாங்கியாச்சா?" என்றான், தொடர்ந்து தவழ்ந்த புன்னகையுடன் முகுந்தன்.
வாங்கிவிட்டேன் என்பது போல் அவள் தலையசைக்க, இருவரும் கோவிலுக்குள் சென்றார்கள்.
செய்தி கேட்டு மனோகர் குதூகலமானான். முகுந்தன் எவ்வளவு சிடுமூஞ்சி என்று அவனது மாமனாரிடம் நிரூபித்து காட்ட அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது அல்லவா?
அதேநேரம், ஜனார்த்தனன் சந்தோஷம் அடைந்தார். தன் மகளை சந்திக்கும் சந்தர்ப்பம் மறுநாள் தான் கிடைக்கும் என்று அவர் நினைத்திருந்தார். அது அன்றே கைகூடி வந்தவுடன், அப்படியே கடையை விட்டுவிட்டு கோவிலை நோக்கி விரைந்தார்.
அந்த கோவில் மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. திருத்தமாகவும் களையாகவும் இருந்த அம்மன் சிலை, அவளது மனதை வெகுவாய் கவர்ந்தது. முகுந்தனிடம் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய மாற்றத்திற்காக அவள் கடவுளுக்கு மனதார நன்றி கூறினாள். அவள் சாமி கும்பிட்டு முடிக்கும் வரை, அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் அமைதியாய் நின்றான் முகுந்தன். கோவிலில் அனைவருக்கும் குங்குமம் வழங்கப்பட்டது. கண்களை மூடி நின்றிருந்த மீராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சைகை செய்த முகுந்தன், குங்குமத்தை தான் பெற்றுக் கொண்டான். அர்ச்சனை தட்டை அவனிடம் கொடுத்து விட்டு சென்றார் அர்ச்சகர்.
பிரார்த்தனையை முடித்துக் கொண்டு கண்களை திறந்த மீரா, குங்குமம் பெற அர்ச்சகரை தேடினாள். அவர் அங்கு காணப்படாமல் போகவே,
"குங்குமம் கொடுக்காமலே போய்ட்டாரு போல இருக்கு... சரி வாங்க போகலாம்" என்றாள்.
அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் முகுந்தன்.
*என்ன?* என்பது போல் அவனை பார்த்தாள் மீரா. தன் கையில் இருந்த குங்குமத்தை அவளிடம் காட்டிய அவன், அதிலிருந்து ஒரு துளி குங்குமம் எடுத்து, அதை அவள் நெற்றி வகிட்டில் வைத்து விட்டான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள் மீரா.
"கிளம்பலாமா?" என்றான் முகுந்தன்.
சரி என்று தலையசைத்தாள் மீரா.
நுழைவு வாயிலை நோக்கி திரும்பிய அவர்கள், ஜனார்த்தனன் அங்கு நின்று கொண்டு அவர்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். அவரை பார்த்ததும்,
"அப்பா..." என்று மகிழ்ச்சியோடு அவரை நோக்கி ஓடினாள் மீரா.
"எப்படி டா மா இருக்க?"
"நான் நல்லா இருக்கேன் பா. உங்க கூட அம்மா வரலையா?"
"இல்ல டா... நான் கோவிலுக்கு வரல. உன்னை பார்க்க தான் வந்தேன்"
"உங்களுக்கு எப்படி தெரியும்?"
"எனக்கு மாய மந்திரம் தெரியும்" என்று சிரித்தார் அவர்.
"ஹலோ மாமா எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"
"மீரா என் கூட இருக்கும் போது எனக்கு என்ன குறை?"
ஜனார்த்தனன் பளீர் என்று சிரித்தார்.
"நாங்களே உங்களை பாக்க நாளைக்கு வீட்டுக்கு வரலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்"
"தெரியும் மாப்பிள்ளை. உங்க அப்பா சொன்னாரு"
"ஓ... ஆனா நாங்க கோவிலுக்கு வந்த விஷயம் அவங்களுக்கே தெரியாதே... உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் தனக்கு ஒன்றும் தெரியாததை போல.
"நம்ம ஃபிரண்டு ஒருத்தர் சொன்னாரு. அவர் நீங்களும் மீராவும் கோவிலுக்கு வந்ததை பார்த்தார் போல இருக்கு"
"உங்க கண்ணுல படாம எதுவும் தப்ப முடியாது போல இருக்கே... உங்களுக்கு எல்லா இடத்திலும் ஆளுங்க இருக்காங்க போல இருக்கு..." என்று சிரித்தான் முகுந்தன்.
அவர்கள் கோவிலுக்கு வந்திருக்கும் விஷயத்தை தனக்கு கூறியது யார் என்று கூறாமல் சிரித்தார் ஜனார்த்தனன்.
"நீங்க இப்படி திடீர்னு வந்து நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றார் ஜனார்த்தனன்.
"அம்மாவையும் அப்பாவையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. கல்யாணத்துக்கு பிறகு நாங்க இங்க வரவே இல்ல. அதனால அவங்களை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சோம்"
"சரி, வாங்க. ஏதாவது சாப்பிடலாம். இங்க பக்கத்துல இருக்குற ஜூஸ் கடையில மாதுளம் பழம் ஜூஸ் ரொம்ப நல்லா இருக்கும்" என்றார்.
"பரவாயில்லப்பா, இருக்கட்டும்" என்றாள் மீரா.
"ஏன் மீரா? மாமா எவ்வளவு பாசமா சாப்பிட சொல்றாரு, வா போகலாம்" என்றான் முகுந்தன்.
சரி என்று புன்னகையுடன் தலையசைத்தாள் மீரா.
அருகில் இருந்த கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றார் ஜனார்த்தனன்.
எதிரில் இருந்த கடையில் அமர்ந்தபடி தங்களை மனோகரன் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான் முகுந்தன். சந்தேகம் இல்லாமல், அது நம்ப முடியாத பார்வையாக தான் இருந்தது. ஜனார்த்தனுடன் ஏதேதோ விஷயங்களைப் பற்றி சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தான் முகுந்தன்.
ஜனார்த்தனனின் கண்கள், எதிரில் இருந்த கடையை நோக்கி அவ்வப்போது சென்று வந்தது. அவருக்கும் தெரியும் மனோகரன் அவர்களை கவனித்துக் கொண்டிருப்பது.
"நீங்க சொன்னது ரொம்ப சரி மாமா. இந்த ஜூஸ் ரொம்ப நல்லா இருக்கு" என்றான் முகுந்தன்.
"ஆமாம் பா" என்றாள் மீரா.
"இப்போ நீங்க எங்க போக போறீங்க?" என்றார் ஜனார்த்தனன்.
"வீட்டுக்கு தான் மாமா. அப்பா இன்னைக்கு ஆஃபீசுக்கு லீவு எடுத்திருக்காரு. எங்களுக்காக காத்துகிட்டு இருப்பார். அதனால நாங்க இன்னைக்கு வேற எங்கேயும் போறதா இல்ல"
"சரி நல்லபடியா லீவை என்ஜாய் பண்ணுங்க."
ஜனார்த்தனன் பழரசத்திற்க்கான பணத்தை வழங்கும் முன், தானே முந்திக்கொண்டு பணம் கொடுத்தான் முகுந்தன்.
"ஏன் மாப்பிள்ளை நீங்க கொடுத்தீங்க?"
"நம்ம ரெண்டு பேர்ல யார் கொடுத்தா என்ன மாமா?"
சினேகமாய் புன்னகைத்தார் ஜனார்த்தனன்.
"நாளைக்கு வீட்டுக்கு வந்து உங்களை பார்க்குறோம்"
"நானும் வைதேகியும் நாளைக்கு உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்போம்"
"நிச்சயமா வறோம் மாமா"
தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்த முகுந்தன், தனது பைக்கை ஸ்டார்ட் செய்ய நினைத்த போது, அங்கு வந்த மனோகர்,
"ஹாய் முகுந்தா" என்றான்.
அவனைப் பார்த்த முகுந்தன்,
"யார் நீங்க?" என்றான் முகத்தை சுருக்கி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top