47 சென்னையில்...

47 சென்னையில்...

தான் காண்பது கனவில்லை என்பதை நம்பவே முடியவில்லை ஜானகியால். அவரது மகன், அவரது மருமகளுடன் அவர் கண் முன்னால் நின்று கொண்டிருந்த போதும், அவரால் நம்ப முடியவில்லை. போதாது என்று, அவன் மீராவின் தோள்களை உரிமையோடு சுற்றி வளைத்துக் கொண்டு வேறு நின்றிருந்தான். மீராவுடன் அவரை கடந்து, வீட்டிற்குள் நுழைந்தான் முகுந்தன்.

மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனது அப்பா கேசவன், அவர்களை பார்த்ததும், தூக்கிய ஒற்றை காலை கீழே வைக்காமல் அப்படியே நின்றார்.

"டேய் முகுந்தா..." என்று தன்னை மறந்து கத்தினார்.

தனது பையை கீழே வைத்துவிட்டு,

"ஹாய் பா" என்றான்.

ஒருவேளை தான் கண்டு கொண்டிருப்பது கனவாக இருந்தால், அந்த கனவின் தூக்கத்திலிருந்து தான் எழுந்து விடும் முன், தன் மகனை நெருங்கி விட வேண்டும் என்ற வேகத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தார் கேசவன். அவன் அருகில் வந்ததும், உணர்ச்சி பெருக்குடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

"முகுந்தா..." என்ற ஒற்றை வார்த்தையை தவிர வேறு எதுவும் அவர் வாயை விட்டு வெளியேறவில்லை

"எப்படி இருக்கீங்க பா?" என்றான் முகுந்தன் புன்னகையுடன்.

அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் தலையை மட்டும் ஆட்டினார் கேசவன்.

"ஜானு..." என்றார் அவர் தன்னை மறந்து.

தன் மகனையும் மருமகளையும் பார்த்துக்கொண்டு சிலை போல் நின்றிருந்த ஜானகி, அவர்களை நோக்கி வந்தார். அவரை பார்த்து புன்னகைத்தான் முகுந்தன். தன் கையை விரித்த அவர், முகுந்தனை விட்டுவிட்டு, தன் மருமகளை அணைத்துக் கொண்ட அவரை கண்களை சுருக்கி பார்த்தான் முகுந்தன்.

"தேங்க்யூ சோ மச், மீரா" என்று முகுந்தனை பார்த்த அவர்,

"உன்னோட மாற்றத்துக்கு இவ காரணம் இல்லன்னு சொல்லுவியா நீ?" என்றார்

இல்லை என்று தலைசைத்த முகுந்தன்,

"நான் எப்போ அப்படி சொன்னேன்? என்னோட சேஞ்சஸ்க்கு அவ தான் காரணம்" என்று ஒப்புக்கொண்டான்.

"ஜானு, தயவு செய்து என்னை பிடிச்சுக்கோ. எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்கு" என்றார் கேசவன்.

அதைக் கேட்டு சிரித்த முகுந்தன்,

"அப்பா, உங்களுக்கு வயசு ஆகுதுல்ல, அப்புறம் ஏன் இங்கேயும் அங்கேயும் தேவையில்லாம சுத்திக்கிட்டு இருக்கீங்க?" என்றான்

அவனை அணைத்துக் கொண்ட கேசவன்,

"அடேங்கப்பா என்ன ஒரு மாற்றம்!" என்றார்.

"எப்படி இருக்கீங்க பா?"

"இப்போ நான் பத்து வயசு கம்மியான மாதிரி ஃபீல் பண்றேன்..."

சிரித்தபடி தன் நெற்றியை தேய்த்தான் முகுந்தன்.

"என்ன ஒரு இன்ப அதிர்ச்சி...! எந்த புயல் உன்னை மும்பையில் இருந்து சென்னைக்கு இழுத்துகிட்டு வந்தது?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா. உங்களையெல்லாம் பார்க்கணும்னு தோணுச்சு"

"ஜானு, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் உன் பிள்ளை கிட்ட இருந்து கேட்பேன்னு நீ என்னைக்காவது நெனச்சு பாத்திருக்கியா?"

"சத்தியமா இல்ல" இடவலமாய் தலையசைத்தார் ஜானகி.

அவர்கள் பேச்சை கேட்டபடி புன்னகையுடன் நின்றிருந்தாள் மீரா

"நெஜமா தான் மா சொல்றோம். இவன் எங்களை பாக்கணும்னு நினைப்பான்னு நாங்க நினைச்சதில்ல" என்றார் கேசவன்.

"அப்பா, கொஞ்சம் பிரேக் எடுங்க. விட்டா, என்னை பத்தி சொல்லிக்கிட்டே இருப்பீங்க. உண்மையை சொல்லப்போனா, நீங்க யாரும் என்னை பத்தி அவகிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. எல்லாரையும் விட என்னைப் பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும்" என்றான்.

"இதுக்காக தான் டா உன்னை நாங்க கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சோம். பாரு, உனக்கு எப்படிப்பட்ட பொண்டாட்டி கிடைச்சிருக்கா..." என்றார் ஜானகி.

தன் உதடுகளை அழுத்தி ஆம் என்று தலையசைத்தான் முகுந்தன்.

"மீரா, நீங்க ரெண்டு பேரும் காலையில ரொம்ப சீக்கிரம் எழுந்திருப்பீங்க.  போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க" என்றார்.

"பரவாயில்ல அத்தை. நாங்க ஃப்ளைட்ல கொஞ்ச நேரம் தூங்கினோம்"

"ஆமாம், நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் தோள் மேல ஒருத்தர் சாஞ்சி தூங்கினோம்" என்றான் முகுந்தன்.

மீரா சங்கடத்துடன் நெளிந்தாள்

"டேய், நீ உன் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கேன்னு நாங்க ஒத்துக்கிறோம். அதுக்காக உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு நீ ஒன்னும் விவரிச்சி சொல்ல வேண்டாம்"

"அப்பா, எதை சொல்லணும், எதை சொல்லக் கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"அப்படியா? தெரியுமா?" என்றார் அவர் கிண்டலாய்.

ஆமாம் என்று தலையசைத்தான் முகுந்தன்.

"உங்க ப்ரோக்ராம் என்ன?"

"இன்னைக்கு என்னோட ஓல்ட் ஃபிரண்டை பாக்க போறேன். நாளைக்கு என் மாமியார் வீட்டுக்கு போக போறோம்"

"ஃபிரண்டா? உனக்கு ஏதுடா ஃபிரண்டு?" முகம் சுருக்கினார் கேசவன்.

"எனக்கு ஒரு ஃபிரண்ட் இருந்தான்னு எனக்கே சமீபத்தில் தான் தெரிய வந்துச்சு"

ஜானகி கேள்விக்குறியுடன் மீராவை பார்க்க, அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"நீ மனோகரை பத்தியா பேசுற?" என்றார்.

"அவனே தான் மா"

"ஏன்டா?"

"என்னைப் பத்தி பேச அவனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாம்னு தான்"

"அதுக்கு என்ன அவசியம்?"

"எப்படி அவசியம் இல்லாம போகும்? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் மாமனார் கிட்ட என்னை பத்தி சொல்லி இருப்பான்?"

"அதனால என்ன? அவர் தான் அதை பெருசா எடுத்துக்கலையே..."

"பெருசா எடுத்துக்கலையா? என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிக்கிட்டு போறதுக்கு அவர் மும்பைக்கு வந்திருக்காரு. அது பெருசா எடுத்துக்க வேண்டிய விஷயம் இல்லையா?"

"ஆனா, மீரா தான் அந்த விஷயத்தை ஒன்னும் இல்லாம செஞ்சிட்டாளே..."

"இருக்கலாம். ஆனா, இதுக்கப்புறம் அவன் என் மாமனார் மனசை மாத்த முயற்சி பண்ணவே கூடாது"

"நீ ஏன் அவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற?"

"ஏன்னா, இது என் பொண்டாட்டி சம்பந்தப்பட்ட விஷயம். நான் எப்படி சும்மா இருக்க முடியும்? இந்த விஷயத்தை முடிச்சிட்டு தான் நான் திரும்பி மும்பைக்கு போவேன்"

மீராவை கவலையுடன் ஏறிட்டார் ஜானகி. *நான் பார்த்துக் கொள்கிறேன்* என்பது போல் தன் கண்களை மெல்ல இமைத்தாள் மீரா.

"நீங்க ரெண்டு பேரும் போய் ஃபிரஷ் ஆகுங்க. நான் பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்றேன்" என்றார் ஜானகி.

சரி என்று தலை அசைத்து விட்டு, தன் பையை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றான். மீரா அவனைப் பின்தொடர்ந்து செல்ல முயன்ற போது, அவளை தடுத்தார் ஜானகி.

"நிஜமாவே அவன் இந்த விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்கானா?"

ஆம் என்று தலையசைத்த மீரா,

"நான் பாத்துக்குறேன் அத்தை நீங்க கவலைப்படாதீங்க" என்று அவனுக்கு பின்னால் ஓடினாள்.

தங்கள் திருமணத்தின் போது பார்த்தது போலவே முகுந்தனின் அறை மிக நேர்த்தியாய் இருந்தது.

"அத்தை எப்பவும் உங்க ரூமை அழகா மெயிண்டைன் பண்ணிக்கிட்டு இருக்காங்க போல இருக்கு" என்றாள் மீரா.

ஆம் என்று தலையசைத்தான் முகுந்தன்.

தங்கள் பைகளை கீழே வைத்துவிட்டு, அவளை தன்னை நோக்கி. இழுத்தான் முகுந்தன். அவனை மருண்ட பார்வை பார்த்தாள் மீரா.

"நம்ம என் ரூமில் இருக்கோம்..." என்றான்.

"நம்ம மும்பையில கூட உங்க ரூம்ல தானே இருந்தோம்..."

"இந்த ரூமுக்கு என்னோட வாழ்க்கையில ரொம்ப பெரிய முக்கியத்துவம் இருக்கு. நான் இங்க தான் வளர்ந்தேன்"

"உங்க தனிமையோட தானே?" என்றாள் கிண்டலாய்

"ஆமாம்... ஆனா, அந்த தனிமையை அடிச்சு நொறுக்குற அளவுக்கு எனக்கு ஒரு ஆள் கிடைச்சிட்டாளே..."

"எதுக்காக மனோகரை பார்த்தே தீரணும்னு இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க? "

"அவனை யார் போய் பார்க்க போறது?"

"நீங்க அவரை பார்க்கப் போறது இல்லையா?"

இல்லை என்று தலையசைத்தான்.

"ஆனா, நீங்க அப்படித்தானே சொன்னீங்க?"

"நான் அவனை பாக்கணும்னு சொன்னேன். ஆனா, நான் போய் அவனை பார்க்கப் போறது இல்ல"

"ஏன் இப்படி என்னை குழப்பறீங்க?" என்றாள்.

"அவனை நம்ம பார்க்கும் போது நீ விஷயத்தை தானாவே புரிஞ்சுக்குவ"

"ஆனா..."

"ஒரு மூணாவது மனுஷனை பத்தி பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ணாதே" என்று அவளை நோக்கி குனிந்தான்.

"நீங்க என்ன செய்றீங்க?" என்றாள் அதிர்ச்சியுடன்.

"இந்த ரூமை பத்தி நான் என்ன சொன்னேன்? இது ரொம்ப ஸ்பெஷலான இடம். நம்ம இங்க முதல் தடவை வந்திருக்கோம். நீ இதை இன்னும் ஸ்பெஷல் ஆக்கணும்னு நினைக்கலையா?"

"இந்த ரூமை நம்ம ராத்திரி கூட ஸ்பெஷல் ஆக்கலாம்..."

"அஃப்கோர்ஸ், அப்பவும் தான்... ஆனா, அது வேற..."

"அத்தை வந்துடப் போறாங்க"

"அவங்க வரமாட்டாங்க. நான் வர வேண்டாம்னு சொல்லி இருக்கேன்"

"எப்ப சொன்னீங்க?" என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க வாய்விட்டு சிரித்தான் முகுந்தன்.

"புலுகு மூட்டை" என்று அவன் தோளை தட்டினாள் மீரா.

"நான் சொல்லல தான்... ஆனாலும் அவங்க வர மாட்டாங்க. அவங்க நம்மளை டிஸ்டர்ப் பண்ணா, நான் மறுபடி இங்க வர மாட்டேன்"

மீண்டும் அவனை ஒரு அடி போட்டாள்.

"போய் கிளம்புங்க. நமக்காக மாமாவும் அத்தையும் வெயிட் பண்றாங்க... அவங்களை ரொம்ப நேரம் வெயிட் பண்ண விடக்கூடாது"

"அவங்க ஏற்கனவே அதிர்ச்சியில இருக்காங்க. நீ அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் குடுத்து ஐசியூல சேர்க்க போறியா?"

"அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் எல்லாம் வராது.  நம்மளை பார்த்த கொஞ்ச நேரத்துல, அவங்க சமாளிச்சுக்கிட்டாங்க"

அப்பொழுது, அவர்களது அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, தன் கைகளை கட்டிக்கொண்டு சிரித்தாள் மீரா.
முகுந்தன் கதவை திறக்க, அவர்களுக்கு காபி எடுத்துக்கொண்டு உள்ளேன் நுழைந்தார் ஜானகி.

"இந்தா மீரா" என்று அவளிடம் ஒரு குவளையை நீட்டினார்

"ரொம்ப தேங்க்ஸ் அத்தை. எனக்கு காபி குடிக்கணும் போல இருந்தது" என்றாள் முகுந்தனை பார்த்தவாறு.

"எனக்கு தெரியும். அதனால தான் கொண்டு வந்தேன்" என்ற அவர்,

"முகுந்தா, உனக்கு வேண்டாமா?" என்றார்.

அவன் எதுவும் கூறுவதற்கு முன்,

"ஆமா அத்தை, அவருக்கும் வேணும்னு தான் சொன்னாரு" என்று மற்றொரு குவளையை அவரிடம் இருந்து பெற்று, அவனிடம் நீட்டினாள் மீரா.

புன்னகையுடன் அதை பெற்றுக் கொண்டான் முகுந்தன். அவனுக்கு தெரியும் மீரா ஏன் அவசரப்படுகிறாள் என்று. அவன் ஜானகியை ஏதாவது கூறிவிடுவானோ என்று அவளுக்கு பயம்.

"காபி சூப்பரா இருக்கு மா" என்றான் அதை ஒரு மடக்கு குடித்துவிட்டு.

மீரா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஆமா, அத்தை ரொம்ப நல்லா இருக்கு" என்றாள்

"மீரா, நீ ஏன் அவங்களை அம்மானு கூப்பிடக்கூடாது?" என்று முகுந்தன் கேட்க, மாமியாரும், மருமகளும் திருதிருவென விழித்தார்கள்

"எங்க அம்மாவுக்கு என்னை விட அதிகமா உன்னைத் தான் பிடிக்கும். நீயும், உங்க அம்மாவை மாதிரியே எங்க அம்மாவையும் நினைக்கிற. அதனால நீ அவங்களை அம்மான்னு கூப்பிடலாமே?"

"அவங்களுக்கு என்னை பிடிக்கும் தான். ஒத்துக்குறேன். ஆனா, உங்களைவிட அதிகமாக ஒண்ணும் இல்ல" என்றாள் மீரா

ஒன்றும் கூறாமல் சிரித்தபடி காப்பியை பருகினான் முகுந்தன்.

"நம்ம ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு தான் அவங்க என்னை சப்போர்ட் பண்ணாங்க. அதனால தான் நம்ம இப்ப சந்தோஷமா இருக்கோம்" என்றாள் மீரா.

ஆமாம் என்று தலையசைத்தார் ஜானகி

"இதைத்தான் நான் சொன்னேன். பார்த்தீங்களா, அவ உங்களை எவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்கான்னு...!" என்றான் முகுந்தன்.

"மீரா, உன் புருஷன் நீ என்னை அம்மானு கூப்பிடனும்னு ஆசைப்படுறான். அவனுக்கு ஏன் குறை வைக்கிற? அப்படியே கூப்பிடேன்" என்றார் ஜானகி சிரித்தபடி.

"சரிங்க மா" என்றாள் மீரா புன்னகையுடன்.

அவளைக் கட்டி அணைத்து, உச்சி முகர்ந்தார் ஜானகி.

கடைசி வாய் காப்பியை பருகியபடி புன்னகையுடன் அவர்களை ரசித்தான் முகுந்தன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top