46 இன்ப அதிர்ச்சி
46 இன்ப அதிர்ச்சி
மறுநாள் காலை
குளித்து முடித்து குளியலறையை விட்டு வெளியே வந்தான் முகுந்தன். மீரா இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவளை எழுப்பி விடவில்லை முகுந்தன். அவள் பக்கத்தில் அமர்ந்து,
"மீரா எழுந்திரு" என்றான் ரகசியமாய்.
அவளிடம் எந்த அசைவும் தெரியவில்லை. அவள் காதில் முத்தமிட்டு,
"மீரா, எழுந்திரு..." என்றான்.
அவள் லேசாய் அசைய,
"இப்படி நீ தூங்கிகிட்டு இருந்தா, நம்ம ஃப்லைட்டை மிஸ் பண்ணிடுவோம்" என்று அவள் கன்னத்தை தட்டினான்
"என்னது, ஃபிலைட்டை மிஸ் பண்ணுவோமா?" என்று அவள் கண்களை மெல்ல திறந்தாள்.
"ஆமாம் சீக்கிரமா கிளம்பு. நம்ம சென்னைக்கு போறோம்" என்றான் சகஜமாய்.
"என்ன்னனது?" என்று மீரா எழுந்து அமர, அவளது தூக்கம் பறந்து போனது.
"ஆமாம் சீக்கிரம் கிளம்பு" என்ற அவன், அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு குளியலறை நோக்கி நடந்தான். நடப்பதெல்லாம் கனவு போல் தோன்ற, அவனையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை குளியலறையில் இறக்கிவிட்டு,
"சீக்கிரம் ஆகட்டும்" என்று அவன் வெளியே செல்ல முயல, அவன் இடுப்பில் கட்டி இருந்த துண்டை பற்றினாள் மீரா.
துண்டை பிடித்திருந்த அவள் கரத்தையும், அவள் முகத்தையும் பார்த்தான் முகுந்தன்.
"உண்மையிலேயே நம்ம சென்னைக்கு போறோமா?" என்றாள் நம்ப முடியாமல்.
"ஆமாம்"
"நிஜமாதான் சொல்றீங்களா?"
"ஆமாம்"
"ஏன் திடீர்னு?"
"நம்ம அம்மா அப்பாவை பாக்கணும்னு தோணுச்சு. அதனால பிளான் பண்ணேன்"
"பிளான் பண்ணிங்களா? எப்ப ப்ளான் பண்ணிங்க?"
"நேத்து தான்"
"ஏன் என்கிட்ட சொன்ன சொல்லல?"
"நான் தான் சொன்னேனே"
"ஆனா..." என்று அவள் ஏதோ சொல்ல முயல, அவளை தடுத்து நிறுத்திய அவன்,
"நம்ம சென்னைக்கு போற வழியில பேசிக்கலாம். இப்போ பேசுறத நிறுத்திட்டு ரெடியாகு" என்றான்
"அப்படின்னா நம்ம ஆஃபீஸ் என்ன ஆகும்...? நம்ம ப்ராஜெக்ட் என்ன ஆகும்?"
"அதையெல்லாம் வாசு பாத்துக்குவான்"
"நம்ம லீவ் அப்ளிகேஷனை சப்மிட் பண்ண வேண்டாமா?"
"நான் அதை நேத்தே பண்ணிட்டேன். வாசு நம்ம லீவை சேங்ஷனும் பண்ணிட்டான்"
"ஆனா என்னோட கையெழுத்து இல்லாம அதை எப்படி செஞ்சீங்க?"
"நான் அதை உன்கிட்ட இருந்து நேத்து வாங்கிட்டேன்"
"அது எப்ப நடந்தது? இதைப் பத்தி வாசு என்கிட்ட எதுவுமே பேசலையே?"
"நான் அவன் கிட்ட பேசிட்டேன்.
நம்மளை அவன் தான் இப்போ ஏர்போர்ட்ல டிராப் பண்ண போறான். போய் குளிச்சிட்டு வா. அவன் வந்துடுவான்" என்று குளியலறையின் கதவை சாத்தினான்.
மீண்டும் கதவை திறந்த மீரா,
"நம்ம டிரஸ் எதையுமே எடுத்து வைக்கலயே" என்றாள்.
கட்டிலுக்கு அடியில் இருந்த இரண்டு பைகளை எடுத்து அவளிடம் காட்டினான். இரண்டு பைகள் எதற்காக இன்று எண்ணிய மீரா,
"நம்ம சென்னையில எத்தனை நாள் தங்க போறோம்?" என்றாள்.
"ஒரு வாரம்"
"அப்புறம் எதுக்கு ரெண்டு பேக்? அதை ஒரே பையிலையே அடக்கிடலாமே...?"
"ஒரே பேக் எடுத்துக்கிட்டு போனா, அதோட வெயிட் வெயிட் கூடும். அதை நம்ம ஹேண்ட் லகேஜ்ல எடுத்துக்கிட்டு போக முடியாது. அதை நம்ம வாங்குறதுக்காக ஏர்போர்ட்ல வெயிட் பண்ண வேண்டி வரும. நிறைய டைம் வேஸ்ட் ஆகும். அதுவே இரண்டு பேக்கை எடுத்துக்கிட்டு போனா, ஹேண்ட் லக்கேஜ்ல நம்ம ஆளுக்கு ஒன்னா எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாங்குறதுக்காக நம்ம வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது"
"ஓ..."
"எல்லாத்தையும் பயங்கரமா பிளான் பண்ணிட்டீங்க போல இருக்கு..."
ஆம் என்று தலையசைத்தான்.
"ரொம்ப ஸ்மார்ட் தான்" என்றாள் அவள்.
அதற்கு லேசாய் புன்னகைத்தான் முகுந்தன். கதவை சாத்திவிட்டு குளிக்க சென்ற மீரா, முடிந்த அளவிற்கு துரிதமாய் தயாரானாள்
முகுந்தன் கூறியது போலவே அங்கு வந்து சேர்ந்தான் வாசுதேவன். வாசுதேவனை எதற்காக தங்களை விமான நிலையத்தில் விட வரச் சொன்னான் முகுந்தன் என்று அவளுக்கு புரியவில்லை. ஏனென்றால் அவர்கள் இருக்கும் இடம் எல்லா வசதிகளும் அமைந்தது. அங்கிருந்து நிறைய டாக்ஸி கிடைக்கும்.
ஆனால் வாசுதேவன் தான் வலிய வந்து அவர்களை விமான நிலையத்தில் விடுவதாக கூறினான் என்று அவளுக்கு தெரியாது. வாசுதேவன் அதை செய்ய காரணம், அவன் கோவர்தனை அவர்களுடன் சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தது தான்...! அவர்களுக்கு தெரியாமல் தான். அபராஜித் விஷயத்தில் அவன் அசட்டையாக இருக்க விரும்பவில்லை. அதனால் தனது நண்பர்களை பாதுகாக்க எண்ணினான் அவன்
அவர்கள் மும்பை சாண்டா குரூஸ் விமான நிலையம் வந்து அடைந்தார்கள்.
"தேங்க்ஸ் வாசு" என்று அவனுடன் கைகுலுக்கினான் முகுந்தன்.
"வெல்கம். என்ஜாய் தி ட்ரிப்" என்றான்.
அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, இருவரும் விமான நிலையத்தின் உள்ளே சென்றார்கள். அவர்களை கோவர்தன் பின்தொடர்ந்து செல்வதை கண்ட வாசு நிம்மதியுடன் அங்கிருந்து சென்றான்.
இருவரும் தங்கள் விமானத்தில் சென்று அமர்ந்தார்கள். தன் இருக்கையில் சாய்ந்து மீராவின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான் முகுந்தன். சென்னைக்கு செல்லும் விமானத்தில், தான் முகுந்தனுடன் அமர்ந்திருக்கிறோம் என்பதை மீராவால் நம்பவே முடியவில்லை. அவசரமாய் கிளம்பிய நேரத்தில், இதைப் பற்றி எல்லாம் அவளுக்கு ஏதும் நினைக்க தோன்றவில்லை. அல்லது, எதைப் பற்றியும் யோசிக்க அவளுக்கு நேரம் வழங்கப்படவில்லை என்றும் கூறலாம்.
அவர்கள் விமானத்தில் பயணம் செல்வது அது முதல் தடவை அல்ல. திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து மும்பைக்கு சென்றார்கள். இந்த இரண்டு பயணங்களுக்கும் இடையில் தான் எவ்வளவு வித்தியாசம்! என்று எண்ணி மென்மையாய் புன்னகைத்தாள் மீரா. மும்பைக்கு வந்த போது, தங்கள் உறவு முறையை பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லாமல் இருந்தாள் அவள். ஆனால் இப்பொழுது அவர்களது உறவு முறையை குறித்து, *கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யும் அளவிற்கு* அவளுக்கு உறுதி இருந்தது. அவர்களது உறவைப் பற்றி மட்டுமல்ல, ஒருவருக்கு மற்றவரை பற்றி தெளிவும் அவர்களுக்கு இருந்தது. முதல் முறை மும்பைக்கு முகுந்தனுடன் சென்றபோது, தங்களது அடுத்த பயணத்தில் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்கள் என்று அவள் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
மனோகர் விஷயத்தை முகுந்தன் இவ்வளவு தீவிரமாய் எடுத்துக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அவன் முனைப்புடன் இருக்கிறான். அதனால் தான் அவளை சென்னைக்கு அழைத்துச் செல்கிறான் என்றும் அவளுக்கு தெரியும். அவர்கள் எடுத்துக் கொண்டிருந்த புதிய ப்ராஜெக்டிலருந்து அவர்களை எப்படி முகுந்தன் விடுவிக்கச் செய்தான் என்று அவளுக்கு புரியவில்லை. அவர்களை விமான நிலையத்தில் விட வந்த வாசுதேவனின் முகத்தில் எந்த அதிருத்தியும் காணப்படவில்லை. அவர்களை விடுமுறையில் அனுப்புவதில் அவன் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது அவளுக்கு தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. எது எப்படி இருந்தாலும், நடப்பது எல்லாம் நன்மைக்கு தான். முகுந்தனை பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியவர்கள், இனி தங்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள். இனி அவனைப் பற்றி பேச துணியவும் மாட்டார்கள் என்று எண்ணினாள் மீரா.
அப்போது அவள் தோளை தட்டினான் முகுந்தன். மீரா அவனை பார்க்க, *என்ன?* என்பது போல் தான் புருவம் உயர்த்தினான். அவள் ஏதும் சொல்லாமல் புன்னகை புரிந்தாள்.
"கொஞ்ச நேரம் தூங்கு" என்றான்.
சரி என்று தலையசைத்த மீரா, தனது இருக்கையில் சாய்ந்து கொண்டாள். அவளை தன்னை நோக்கி இழுத்த அவன், அவளை தனது தோளில் சாய்த்து கொண்டு, அவனும் தன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான்.
கண்களை மூடி சிரித்தாள் மீரா. அவர்களை திடீரென்று கண்முன்னால் பார்க்கும் அவளது மாமனார் மாமியாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்கள் இருவரும் இவ்வளவு விரைவாய் சென்னை வருவார்கள் என்பதை அவர்கள் துளியும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க தான் முகுந்தன் இதை திட்டமிட்டு இருக்க வேண்டும். அதனால் தான், அவன் அதை அவளிடம் கூட சொல்லாமல் ரகசியமாய் வைத்திருந்திருக்கிறான். அவள் தன் மாமியாரிடம் உளறி விடுவாள் என்று அவன் நினைத்திருக்கலாம். ஆர்வத்தில் அவள் அப்படி செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு,
அவர்களது விமானம் சென்னையில் தரை இறங்கப் போவதாய் அறிவிப்பு செய்யப்பட்டது. விமான பணிப்பெண்கள், அனைத்து பயணிகளையும், தங்களை தங்கள் சீட் பெல்ட்டுடன் பிணைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். கண் விழித்த முகுந்தன், மீராவின் கன்னத்தை தட்டி
"மீரா எழுந்திரு" என்றான்.
"ம்ம்..?"
"நம்ம லேண்ட் பண்ண போறோம். சீட் பெல்ட்டை போடு" என்றான்.
அவள் தூக்க கலக்கத்துடன் தனது இருக்கையில் சாய்ந்து கொள்ள, அவளது பெல்ட்டை அவனே போட்டு விட்டான்.
சென்னை
அவர்களது விமானம் தரை இறங்கியது. மீரா அதீத ஆவலுடன் இருக்க, முகுந்தனோ சாதாரணமாய் இருந்தது அவளுக்கு ஆச்சரியம் அளித்தது. தங்கள் பைகளை எடுக்க காத்திருந்து நேரத்தை வீணடிக்காமல், தங்கள் பைகளுடன் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள், முகுந்தன் கூறியது போலவே.
"நல்ல காலம், நம்ம ரெண்டு பேக் எடுத்துக்கிட்டு வந்தோம். இல்லன்னா நம்ம அதுக்காக வெளியில காத்திருக்க வேண்டி இருந்திருக்கும். உங்க ஐடியா சூப்பர்..." என்றாள் மீரா.
சிரித்தபடி அவளுடன் நடந்தான் முகுந்தன். அவர்களை சத்தமில்லாமல் பின் தொடர்ந்தான் கோவர்தன், வேண்டிய இடைவெளி விட்டு, அவர்கள் கண்களில் படாமல்.
ஒரு டாக்ஸியை பிடித்துக் கொண்டு அவர்கள் சிங்கப்பெருமாள் கோவிலை நோக்கி பயணித்தார்கள்.
......
காபி போடுவதற்காக பாலை சூடேற்றிக் கொண்டிருந்தார் ஜானகி. அழைப்பு மணியின் ஓசை கேட்டதும், அவரது தலை அனிச்சையாய் வெளிப்பக்கம் திரும்பியது. அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு கதவை திறக்க விரைந்தார். கதவை திறந்த அவரது கண்கள், ஆச்சரியத்தில் விரிந்தன. அவருக்கு முன்னால் நின்றிருந்தவர்களை பார்த்து.
முகுந்தனும் மீராவும் அமைதியாய் அவரது முகபாவத்தை படித்துக் கொண்டிருந்தார்கள். எதையோ யோசித்த ஜானகி, தன் கண்களை சுருக்கினார். மெல்ல தன் கையை நீட்டி முகுந்தனின் தோளை தொட்டார். அவரது தொடு உணர்ச்சி, முகுந்தன் அங்கு இருப்பதை நிச்சயப்படுத்தியது. தான் காண்பது கனவல்ல என்ற முடிவுக்கு வந்த அவர், தன் கையால் வாயை மூடி விழி விரித்தார்.
"முகுந்தா உண்மையிலேயே நீ தானடா?" என்றார் மீராவையும் அவனையும் மாறி மாறி பார்த்தபடி.
ஆம் என்று தலையசைத்த அவன், மீராவின் தோள்களை சுற்றி வளைத்து மேலும் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top