44 பொறாமை

44 பொறாமை

தனது வீடு இருக்கும் பரேலை நோக்கி காரை செலுத்தினான் முகுந்தன்.

"உனக்கு கார் ஓட்ட தெரியுமா?" என்றான் அவன்.

இல்லை என்று தலையசைத்த மீரா,

"கத்துக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா எனக்கு சான்ஸ் கிடைக்கல" என்றாள்.

"கத்து கொடுத்தா கத்துக்குவியா?"

"நிச்சயமா... ஒரு நல்ல டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்து விடுறீங்களா?" என்று அவனது அனுமதியை கோறினாள் வேண்டுமென்றே.

அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் முகுந்தன்.

"டிரைவிங் ஸ்கூலா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"நான் உனக்கு சொல்லிக் கொடுக்க மாட்டேனா?" என்றான்.

உள்ளூர சிரித்துக்கொண்ட அவள்,

"சொல்லிக் கொடுப்பீங்களா?" என்றாள்.

இது என்ன கேள்வி? என்பது போல முகத்தை சுருக்கி, அவளை விசித்திரமாய் நோக்கினான் அவன்.

"டிரைவிங் ஸ்கூல் ட்ரெயினருக்கு சிம்பிள் மெத்தட்ஸ் தெரியும். புதுசா கத்துக்குறவங்களுக்கு, அது ஈசியா இருக்கும்"

அவள் உண்மையிலேயே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று முனைப்பு காட்டியது அவனுக்கு அதிர்ச்சியை தந்தது.

"ஆனா முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட கத்துக்க உனக்கு சங்கடமா இருக்கும் இல்ல?"

"நம்ம என்னங்க செய்ய முடியும்? கார் ஓட்டணும்னு நினைக்கிறவங்களுக்கு அது ஒன்னு தானே வழி?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

"உனக்கு வேணும்னா நான் சொல்லித் தரேன்" என்றான் அவன்.

தன் மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

"நீங்க ஒரு ட்ரைனர் சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஈஸியா சொல்லிக் கொடுப்பீங்களா?" என்றாள்.

"நான் இந்த சண்டே உனக்கு சொல்லித் தரேன். உன்னால என்கிட்ட ஈசியா கத்துக்க முடியலன்னு தோணுச்சுன்னா, அதுக்கப்புறம் வேணும்னா டிரைவிங் ஸ்கூலுக்கு போறது பத்தி யோசிக்கலாம். ஆனா நிச்சயமா நான் சொல்லிக் கொடுக்கிறது உனக்கு பிடிக்கும்" என்றான் நம்பிக்கையுடன்.

சரி என்று தலையசைத்தாள். அவளுக்குத்தான் தெரியுமே, தனது கணவன் அவளை வேறு ஒருவரிடம் எதையும் கற்றுக் கொள்ள விடமாட்டான் என்று.  தன் மனைவியின் பக்கத்தில் வேறு ஒருவர் உட்கார அனுமதித்து விடுவானா முகுந்தன்?

அவள் நினைத்தது சரி தான். அவளுக்கு எப்படி சுலபமாய் கார் ஓட்ட கற்றுக் கொடுப்பது என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கினான் முகுந்தன். அவன் கார் ஓட்ட கற்றுக் கொண்ட போது, அவனுக்கு சொல்லிக் கொடுத்த எளிய வழிவகைகளை மனதில் இருத்திக் கொண்டான். தன்னைத் தவிர வேறு யாரும் தன் மனைவியிடம் *பெயர்* வாங்கி விடக்கூடாது என்பதில் அவன் தீவிரமாய் இருந்தான். இப்போதிலிருந்து, அவள் வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்கும் அனைத்து சந்தோஷங்களுக்கும் தான் ஒருவன் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது அவன் முடிவான முடிவு.

வரும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் கிளவுட் நைன் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே அவளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவனது அம்மாவின் பெயர் அவன் கைபேசியில் ஒளிர்ந்தது. தனது கைபேசியை மீராவிடம் காட்டினான். தன் மாமியாரின் பெயரை பார்த்து புன்னகைத்தாள் மீரா. அவனது கைபேசி, அவன் காரின் ப்ளூடூத்துடன் ஏற்கனவே தொடர்புபடுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக அந்த அழைப்பை ஏற்றான் முகுந்தன், மீராவும் அவன் அம்மாவிடம் பேசட்டும் என்று.

"ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க?" என்றான் சாதாரணமாய்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்,

"டேய், உன் மாமனார் மாமியாரை நீ என்னடா செஞ்ச?" என்றார் ஜானகி.

முகத்தை சுருக்கி மீராவை பார்த்தபடி,

"ஏன்? நான் என்ன செஞ்சேன்?"  என்றான்.

"அவங்க நீ ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க டா" என்றார் நம்ப முடியாமல்.

அதைக் கேட்டு சிரித்தாள் மீரா.

"நீ அவங்க கிட்ட நல்லா பேசினேன்னு சொன்னாங்க... நீ *பேசுனியா*? நெஜமாவா? என்னால இதை நம்பவே முடியல" என்றார் கிண்டலாய்.

புன்னகை புரிந்தான் முகுந்தன்.

"நீ எப்படிடா உன்னை அவங்களை நம்ப வச்ச?"

"அம்மா, போதும் நிறுத்துறீங்களா?"

"இல்லடா, நிஜமா தான் சொல்றேன். அவங்க எதுக்காக மும்பை வந்தாங்கன்னு உனக்கு தெரியுமா?"

"எதுக்கு?" என்றான் மீராவை பார்த்தபடி.

"உன்னைப்பத்தி யாரோ அவங்க கிட்ட சொல்லி இருக்காங்க"

"என்னை பத்தியா?" என்று கண்களை சுருக்கினான் அவன்.

"ஆமாம், நீ எவ்வளவு நல்லவன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு"

புருவம் உயர்த்தி, தன் நாக்கால் கோரை பல்லை தொட்டான் அவன்.

"நீ எப்படி நடந்துக்குறேன்னு செக் பண்ணத்தான் அவங்க மும்பைக்கே வந்தாங்க. நீ மட்டும் ஏடாகூடமா ஏதாவது செஞ்சா, மீராவை கையோட சென்னைக்கு கூட்டிக்கிட்டு வரணும்னு முடிவோட தான் இருந்தாங்க"

அதிர்ச்சியுடன் மீராவை ஏறிட்ட முகுந்தன்,

"நீங்க என்ன சொல்றீங்க?" என்றான்

"ஆமாம், நீ யார்கிட்டயும் அவ்வளவு ஈஸியா பேசிட மாட்ட, கலந்து பழக மாட்ட, யார்கிட்டயும் நேரத்தை செலவு பண்ண மாட்ட, அப்படின்னு உன்னை பத்தி எல்லாத்தையும் அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க"

"அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"

"உனக்கு உன் கூட படிச்ச மனோகரை ஞாபகம் இருக்கா?"

"இல்ல, எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல"

"ஆனா அவனுக்கு உன்னை நல்லா ஞாபகம் இருக்கு. உன்னை பத்தி எதையும் அவன் மறக்கல"

"சரி, அவனுக்கும் என் மாமனாருக்கு விஷயம் தெரிஞ்சதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அவன் மீராவை எங்கையோ பார்த்திருக்கான். அவளை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு போல இருக்கு. அவன் லைஃப்ல செட்டில் ஆனதுக்கு பிறகு, அவங்க அப்பாகிட்ட வந்து அவளை பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கான். அவன் இப்போ நல்ல சம்பளத்தோட நல்ல வேலை கிடைச்சு செட்டில் ஆயிட்டான் போல இருக்கு. அவளுக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரியாம, உன் மாமனாரை பார்த்து, மீராவை தனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு கேட்டிருக்கான்"

அதிர்ச்சியுடன் அவன் மீராவை பார்த்தான். அவள் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள்.

"அப்போ தான், மீராவோட அப்பா, அவளுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லி இருக்காரு. மீராவோட புருஷன் வேற யாருமில்ல, நீ தான்னு அவன் தெரிஞ்சுகிட்டான். உன்னை பத்தி எல்லாத்தையும் ஒன்னு விடாம உன் மாமனார் கிட்ட ஒப்பிச்சிட்டான். உன்னோட இயல்பு தெரிஞ்சி, அவரு ரொம்ப கவலைப்பட்டிருக்காரு. தன் ஒரே மகளோட வாழ்க்கை சந்தோஷமா அமையலங்குற உண்மையை அவரால் தாங்கிக்க முடியல, அதனால..."

"அதனால?"

"அதனால, அவளை மும்பையில இருந்து கூட்டிக்கிட்டு வந்து, வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சி தான் அவர் மும்பைக்கே வந்தாரு"

"என்னது? அவர் மீராவுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்காக இங்க வந்தாரா?  அதை பத்தி உங்களுக்கு தெரிஞ்சு ஏன் என்கிட்ட நீங்க சொல்லல?"

"எனக்கு எப்படி தெரியும்? அவங்க என்கிட்ட இதைப்பத்தி எதுவுமே சொல்லல. நீ எப்படி தான் அவங்க மும்பைக்கு வந்த போது அவங்களை சமாளிச்சு அனுப்பினேன்னு எனக்கு புரியவே இல்ல. நீ ஏதோ எமோஷனல் டிராமா பண்ணி தானே அவங்களை உன்னை நம்ப வச்ச?"

அவன் பதில் கூறும் முன்,

"ஆமாம் அத்தை, நீங்க சொல்றது சரி. அவர் எங்க அம்மா அப்பா கிட்ட எவ்வளவு நல்ல மாதிரி நடந்துக்கிட்டார் தெரியுமா? அவங்க கிட்ட ரொம்ப மரியாதையவும், பாசமாவும் பேசினாரு"

"எனக்கு மரியாதையும் பாசமும் கிடையாதா?" என்றான் காட்டமாக.

"எனக்கு எப்படி தெரியும்? நீங்க என்கிட்ட முன்ன பின்ன அப்படி நடந்து இருக்கீங்களா என்ன?" என்றாள் மீரா.

"எனக்கு கூட அதை பத்தி எல்லாம் தெரியாது பா" என்றார் ஜானகி.

"சரி, போதும் நிறுத்துங்க. அவங்க கடைசியா என்ன தான் சொன்னாங்க?" என்றான் முகுந்தன்.

"மும்பையில அவங்க பார்த்த விஷயங்களை அவங்களால நம்பவே முடியலன்னு சொன்னாங்க"

"அப்படின்னா அவங்க இவரை நம்பலயா அத்தை?"

"நான் அப்படித்தான் நினைக்கிறேன்"

"ஓ..."

"இது எல்லாம் அந்த மனோகரால தான். நான் சென்னைக்கு வரும் போது, அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன்" என்றான் கோபமாய்.

"அவன் மேல என்னடா தப்பு இருக்கு? அவன் உண்மையை தானே சொன்னான்? நீ அப்படித் தானே இருந்த?"

"நான் அப்படி இருந்தா, அதுக்கு இப்போ என்ன? அதை எல்லாம் கொண்டு போய் என் மாமனார் கிட்ட அப்படியே ஒப்பிக்கணும்னு என்ன அவசியம் இருக்கு?"

"அவனுக்கு மீராவை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அந்த ஏமாற்றத்துல தான் அவன் எல்லா உண்மையும் சொல்லி இருக்கணும்"

"உங்களுக்கு புரியலையா? அவன் என்னையும் மீராவையும் பிரிக்கணும்னு நினைக்கிறான். அப்ப தானே அவளை அவன் கல்யாணம் பண்ணிக்க முடியும்?"

"தான் விரும்புன பொண்ணை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும்னு அவன் நினைக்கிறான். அவளையும் சந்தோஷமா வச்சுக்கணும்னு விருப்பப்படுறான் போல இருக்கு"

"அவன் சரியான பொறாமைக்காரன்"

"அவனா?" என்றார் ஜானகி.

"பின்ன என்ன, நானா?"

"இல்லையே... நீ ஏன் பொறாமைப்பட போற? ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு அவனை ஞாபகம் இல்லைன்னு சொன்னியே"

"இப்போ எனக்கு ஞாபகம் வந்துடுச்சு"

"மீராவோட அம்மா அப்பா அவ சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறாங்க"

"அவ என் கூட சந்தோஷமா தான் இருக்கா"

"நீ என்ன நினைக்கிற மீரா?" என்றார் ஜானகி.

"நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு, இல்லாத கதையை எல்லாம் சொல்லி, எங்க அம்மா அப்பாவை, நான் சந்தோஷமா இருக்கிறதா நம்ப வச்சேன்"

"அப்படியா?"

"ஆமாம். அவங்க என்கிட்ட நிறைய தடவை கேட்டாங்க. ஆனா நான் அவங்க கிட்ட உண்மையை சொல்லவே இல்ல"

"ஐயோ பாவம், அவங்க எதுக்காக அங்க வந்திருக்காங்கன்னு உண்மை தெரியாம பொய் சொல்லிட்ட. இல்லன்னா நீ அங்கயிருந்து எஸ்கேப் ஆயிருப்ப இல்ல?"

ஓர கண்ணால் முகுந்தனை பார்த்தாள் மீரா.

"எஸ்கேப்பா?" என்றான் கோவமாய்.

அமைதியாய் இருந்தாள் மீரா.

"இல்லாத பொல்லாத கதை எல்லாம் சொன்னேன்னு சொன்னா என்ன அர்த்தம்? நீ என் கூட சந்தோஷமா இல்லையா?"

"அவங்க என்கிட்ட கேட்டப்போ நான் உங்க கூட சந்தோஷமா இல்லையே... இன்னைக்கு தானே உங்க கூட சந்தோஷமா இருக்கவே நான் ஆரம்பிச்சிருக்கேன்...!"

அவளை கூரிய பார்வை பார்த்தான் முகுந்தன்.

"முகுந்தா கொஞ்ச நாளைக்கு நீ சென்னைக்கு வராத. மனோகர் சொன்னது சரின்னு நிரூபிக்க, அவனுக்கு சான்ஸ் குடுத்துடாத. சரியா? மீரா, நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன். எப்படி இருந்தாலும் இன்னைக்கு நீ தனியா தானே இருக்க போற...? உங்க அப்பா அம்மா தான் ஊருக்கு போய்ட்டாங்களே..."

"நான் அந்த ரூமை பூட்டி, சாவியை பால்கனியிலிருந்து வெளியில தூக்கி வீசி அடிக்க போறேன்" என்றான் முகுந்தன்.

"அதுக்கு என்ன அர்த்தம் முகுந்தா? நீ உன்னோட ரூமை மீரா கூட ஷேர் பண்ணிக்க போறியா?"

"நாங்க ஆல்ரெடி ஷேர் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். இனிமேலும் அப்படித்தான் இருப்போம்"

"ஓஓஓஓ..."

"நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தான் முகுந்தன்.

அவர்கள் கிளவுட் நைன் அப்பார்ட்மெண்ட்டை வந்து அடைந்தார்கள். அவர்கள் பாதுகாப்பாய் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின், அங்கிருந்து சென்றான் கோவர்தன்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த உடன் மீராவின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து,

"நீ என்ன சொன்ன?" என்றான்.

"நான் உங்க கூட இன்னைக்கு தான் சந்தோஷமாக இருக்கிறதா சொன்னேன்" என்றாள்

"நீ என்கிட்ட இருந்து தப்பிச்சு போகணும்னு நினைக்கிறியா?"

அவள் இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.

"அப்படியெல்லாம் கனவுல கூட நினைக்காத. அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. நான் அப்படி நடக்க விட மாட்டேன்" என்றான்.

உள்ளூர சிரித்துக் கொண்டாள் மீரா. கோபக்கார முகுந்தனை விட, பொறாமைக்கார முகுந்தன் அவளுக்கு அழகாய் தெரிந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top