43 கொண்டாட்டம்

43 கொண்டாட்டம்

விடி அலுவலகம் பார்ட்டி கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட வேலையை பார்ட்டிக்கு முன்பு முடித்துவிட வேண்டும் என்று மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தான் முகுந்தன். அப்பொழுது, அவனது அறைக்கு வந்தாள் மீரா. அவளை பார்த்தவுடன், சிரித்தபடி தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து,

"சொல்லுங்க மேடம்" என்றான்.

"வாசு சொன்னாரு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து புது ப்ராஜெக்ட்டுக்காக வேலை செய்ய போறோமாமே"

ஆமாம் என்று தலையசைத்தான்.

"அந்த ப்ராஜெக்ட் பத்தின டீடெயில்ஸ் எனக்கு கொடுங்க" என்றாள்.

"முதல்ல நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு உட்காரு. அதுக்கு அப்புறமா பேசு" என்றான் உதட்டோர சிரிப்புடன்.

அவனுக்கு முன்னால் அமர்ந்த மீரா,

"இப்ப சொல்லுங்க" என்றாள்.

"ப்ராஜக்ட்டை சப்மிட் பண்ண இன்னும் பதினாஞ்சி நாள் இருக்கு. நான் தனியாவே நிறைய ப்ரொஜெக்ட்டை ஒரே வாரத்துல செஞ்சி முடிச்சிருக்கேன்"

"அப்படியா?"

"ஆமாம். அதனால நீ ரிலாக்ஸா இரு. நமக்கு நிறைய டைம் இருக்கு"

"உங்களால அதை தனியாவே செய்ய முடியும்னா, எதுக்காக வாசு நாம் இரண்டு பேரையும் சேர்ந்து அதை செய்ய சொன்னாரு? அதுவும் இவ்வளவு டைம் கொடுத்து...?"

"நம்ம ரெண்டு பேரும் க்ளோசா இருக்கணும்னு அவன் நினைக்கிறான் போல இருக்கு" என்றான் முகுந்தன் புன்னகையுடன்.

"இது ஆஃபீஸா? இல்ல லவ்வர்ஸ் பார்க்கா?" என்றாள் மீரா கலகல சிரிப்புடன்.

"அது நம்மளை பொறுத்த விஷயம்" என்று அவனும் சிரித்தான்.

"சரி, எனக்கு ப்ராஜெக்ட் பத்தி சொல்லுங்க"

"அது வின்டர் கலெக்ஷன் பத்தினது. நம்ம கம்பெனியோட பெஸ்ட் டிசைன்சை கலெக்ட் பண்ணணும். அது கஸ்டமர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரியும் இருக்கணும். அதை ப்ராஜெக்ட்ல ஆட் பண்ணனும்" 

"கஸ்டமர்க்கு அது பிடிக்குதா இல்லையான்னு நமக்கு எப்படி தெரியும்?"

"அது தான் டாஸ்க்... நம்ம சாம்பிள்ஸ் செலக்ட் பண்ணும் போது ரொம்ப ஜாக்கிரதையா செய்யணும். எது அதிகமா சேல் ஆயிருக்குன்னு பாத்து செஞ்சிட்டா போதும்"

"ஓ..."

"நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதே. மார்க்கெட்ல டிமாண்ட் அதிகமா இருக்குற டிசைன்சை நான் சூஸ் பண்ணி கொடுக்கிறேன்"

"சரி"

"நீ போய் பார்ட்டிக்கு ரெடியாகு"

தனது கைக்கடிகாரத்தை பார்த்த மீரா,

"ரெடியாகறதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல. அப்படியே போய் நிக்க வேண்டியது தான்" என்றாள்.

சரி என்று தலையசைத்தான் முகுந்தன். அவள் உள்ளூர புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

அனைவரையும் வேலையை முடித்துக் கொள்ளுமாறு பணித்தான் வாசுதேவன். அவன் கூறியதை செய்துவிட்டு, அனைவரும் போட்டோ ஷூட் நடைபெறும் பிரம்மாண்ட கூடத்தில் ஒன்று கூடினார்கள். வைஷ்ணவி, நந்தகோபாலுடன் அமர்ந்து கொண்டாள்.

மீராவுக்காக காத்திருந்தான் முகுந்தன். எதற்காக அவள் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறாள்? அவள் தான் உடையை கூட மாற்றப் போவதில்லையே! என்று எண்ணினான் முகுந்தன்.

வாசுதேவனும் வந்து விட்டான்.

"மீரா எங்க?" என்றான் வாசுதேவன்.

"நான் போய் பாக்குறேன்" என்று கிளம்பிய முகுந்தன், கதவின் கைப்பிடியில் கை வைத்த அதே நேரம்,

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் மீரா. வெளிர் நீல நிற டிசைனர் புடவையில் மின்னிய அவளை பார்த்த முகுந்தன், கண்களை இமைக்கவும் மறந்தான். எப்பொழுது அவள் புடவைக்கு மாறினாள்? எப்படி அவள் புடவையை வீட்டிலிருந்து எடுத்து வந்தாள்?

அவனது இதழ்கள் புன்னகையை சுமந்து வளைந்தன.

*நான் எப்படி இருக்கிறேன்?* என்று அவள் கண்களால் கேட்க, அவளுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் முணுமுணுத்தான்,

"பியூட்டிஃபுல்" என்று.

அவள் இதமாய் புன்னகைக்க,

"எப்போ நீ டிரஸ்சை சேஞ்ச் பண்ண? நீ புடவை எடுத்துக்கிட்டு வந்ததை நான் பார்க்கவே இல்லையே..." என்றான்

"நீங்க குளிச்சிக்கிட்டு இருந்த போது நான் எடுத்து வச்சேன்" என்றாள்.

"ஓ... அப்படின்னா எதுக்காக நான் இன்னைக்கு காலையில உன்கிட்ட இத பத்தி கேட்ட போது நீ எதுவுமே சொல்லல?"

"நம்ம கார்ல வரும் போது நீங்க கேட்டீங்க. அது, ஏதோ கடமைக்கு கேட்டதா எனக்கு தோணுச்சு"

"நீ ஏன் அப்படி நினைச்ச?"

"உங்களுக்கு நான் ஸாரி கட்டணும்னு விருப்பம் இருந்தா, அதை காலையிலேயே சொல்லி இருப்பீங்க இல்ல? அதனால தான்"

"காலையில, உங்க அம்மா, அப்பாவை ஏர்போர்ட்ல டிராப் பண்றதுக்காக நம்ம ரொம்ப சீக்கிரமே கிளம்பினோம். அந்த அவசரத்துல உன்கிட்ட அதை என்னால சொல்ல முடியல. அதுக்காக நான் உன்னை புடவை கட்டி பார்க்க விருப்பப்படலன்னு அர்த்தமில்ல"

"நீங்க என்கிட்ட எதுவும் சொல்லல. ஆனாலும் உங்க மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுகிட்டு, ஸாரியை எடுத்துக்கிட்டு வந்து உங்க ஆசையை நிறைவேத்திட்டேன்"

"இந்த புடவைல நீ ரொம்ப அழகா இருக்க"

"தேங்க்ஸ்" என்று சிரித்தாள்.

அப்பொழுது யாரோ இருமும் சத்தம் கேட்டது.  பக்கத்தில் நின்றிருந்த நந்தகோபால், அவர்களை பார்த்து கிண்டலாய் சிரித்துக் கொண்டிருந்தான். அனைவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததை அப்பொழுது தான் அவர்கள் கவனித்தார்கள். மேசையின் மீது சாய்ந்து நின்றபடி, தன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களைப் பார்த்து  சிரித்துக் கொண்டிருந்தான் வாசுதேவன். அது மீராவையும் முகுந்தனையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. அவளை புடவையில் பார்த்த அவன், எல்லாவற்றையும் மறந்து விட்டான். மீராவோ, அவனுக்கு பதில் கூறுவதில் முனைப்புடன் இருந்தாள்.

"எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க. நம்ம பார்ட்டியை ஆரம்பிக்கலாமா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் முகுந்தன்?" என்றான் நந்தகோபால்.

வெட்கத்துடன் தலை தாழ்த்தி நின்ற மீராவை பார்த்து சிரித்தபடி தலையசைத்தான் முகுந்தன்.

"மீராவை கூட்டிகிட்டு வா" என்றான் நந்தகோபால்.
 
தன் கையை அவளை நோக்கி நீட்டிய அவன், அதை பற்றிக்கொள்ளும்மாறு கண்ணசைத்தான். அவள் அவனது கையைப் பிடித்துக் கொள்ள, கேக் வைக்கப்பட்டிருந்த மேசையின் அருகே அவளை அழைத்துச் சென்றான்.

"ஒரு நிமிஷம் மீரா" என்றான் வாசுதேவன்.

முகுந்தனும் மீராவும் அவனை பார்த்தார்கள்.

"என்னோட ஒய்ஃப்க்கு நீங்க கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்க முடியுமா?" என்று அவள் முன் ஒரு கோரிக்கையை வைத்தான் அவன்.

"உங்க வைஃபா?" என்றாள் மீரா, திருமணமே ஆகாத வாசுதேவனுக்கு ஏது மனைவி என்று எண்ணி.

"ஆமாம்" என்றான் வாசுதேவன்.

"வாசுவோட அம்மா, அவனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்க" என்றான் முகுந்தன்.

"அது சரி, ஆனா நான் எதுக்கு உங்க வைஃபுக்கு ட்ரெய்னிங் கொடுக்கணும்?"

"கேட்கிற கேள்விக்கு பதில் கூட சொல்லாம இருந்த இந்த மனுஷனை நீங்க எப்படி மாத்தியிருக்கீங்க...! அவன் *சரளமா* பேச ஆரம்பிச்சிருக்கான் பா" என்றான் வாசுதேவன்.

"சரளமாவா?" என்று சிரித்தாள் மீரா.

"ஆமாம். உங்களுக்கு தெரியாது, இவன் மத்தவங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அட்வைஸ் எல்லாம் கொடுக்கிறான்" என்றான் வாசுதேவன்.

புன்னகையுடன் நின்ற முகுந்தனை, புருவம் உயர்த்திப் விசித்திரமாய் பார்த்தாள் மீரா.

"நீங்க அப்படி என்ன மேஜிக் பண்ணீங்க மீரா?"

"அதுக்கு நான் பதில் சொல்லட்டுமா?" என்று கேட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தான் முகுந்தன்.

"தாராளமா சொல்லு" என்றான் வாசுதேவன்.

"அவளோடது, போலி இல்லாத உண்மையான காதல். அப்படிப்பட்ட உண்மையான அன்புக்கு முன்னாடி எங்கேயும் போய் ஒளிஞ்சிக்க முடியல. ஆட்டோமேட்டிக்கா நான் காதல் வயப்பட்டேன்"

அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தார்கள். வாசுதேவனை விட அதிகம் ஆச்சரியப்பட்டது மீரா தான். தன்னைப் பற்றி பெருமையாய் எதையும் கூறாமல், அவளது தனித்தன்மையை அவன் அடிக்கோடிட்டு காட்டியது அவளுக்கு ஆச்சரியம் அளித்தது. அவனிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் எப்படிப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட மாற்றம், அவ்வளவு சுலபமாய் நிகழ்ந்து விடாது. அதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்.

"என்னோட காதல் உண்மையா இருந்ததால மட்டும் அவர் மாறிடல. அவரோட மாற்றத்திற்கு காரணம், அவரும் என் மேல உண்மையான அன்பு வச்சிருந்ததால தான்" என்றாள் மீரா.

மீண்டும் கரவொலி எழுந்தது.

"எனக்கு புரிஞ்சிடுச்சி" என்றான் வாசுதேவன்.

முகுந்தனும் மீராவும் அவனைப் பார்க்க,

"எந்த ஒரு உறவுக்கும் புரிதல் ரொம்ப அவசியம். ஈகோவை பின்னாடி தள்ளிட்டு, ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு வாழனும். அப்படித் தானே?" என்றான்.

ஆம் என்று இருவரும் தலையசைத்தார்கள்.

"நம்ம இப்போ பார்ட்டியை ஆரம்பிக்கலாமா?" என்றான்.

அவர்கள் சரி என்று கூறவும், ஒரு கத்தியை அவர்களிடம் கொடுத்து, கேக்கை வெட்டும்மாறு கேட்டுக் கொண்டான் வாசுதேவன். கத்தியை பெற்றுக்கொண்ட மீரா, முகுந்தனை பார்த்தாள். அவள் கையைப் பிடித்து, அவளுடன் சேர்ந்து அந்த கேக்கை வெட்டினான் முகுந்தன்.

அலுவலகத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு ஓர் அன்பளிப்பு அளிக்க, தான் மட்டும் தனியாக ஓர் அன்பளிப்பை கொடுத்தான் வாசுதேவன். அனைவரும் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இரவு உணவுடன் அந்த விழாவை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

வாசுதேவன் மட்டுமல்ல, அந்த அலுவலகத்தைச் சார்ந்த அனைவருமே திகைத்துப் போனார்கள், இடைவெளி விடாமல் மீராவிடம் பேசிக் கொண்டிருந்த  முகுந்தனை பார்த்து. பார்ட்டி முழுக்க அவர்கள் இருவரும் பேசி சிரித்த வண்ணம் இருந்தார்கள்.

அப்போது தன் கைபேசி அதிர்வதை உணர்ந்தான் வாசுதேவன். பார்ட்டியின் காரணமாக தனது கைபேசியை அவன் வைப்ரேஷனில் போட்டிருந்தான். கைபேசியை எடுத்த அவன், அது தாங்கி வந்த கோவர்தனின் குறுந்தகவலை வாசித்தான்.

*நான் அலுவலகத்தின் வெளியே காத்திருக்கிறேன்*

அதை பார்த்த வாசுதேவன் புன்னகை புரிந்தான்.

*இன்னும் அரை மணி நேரத்தில் நாங்கள் வெளியே வருவோம்* என்று அவனுக்கு மறு தகவல் அனுப்பினான்.

தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து, அவர்களுக்காக காத்திருந்தான் கோவர்தன்.

விழா முடிந்தது. ஒவ்வொருவராய் கிளம்ப துவங்கினார்கள். முகுந்தனும் மீராவும் வாசுதேவனுக்காக காத்திருந்தார்கள். தன் கையை அவனை நோக்கி நீட்டினான் முகுந்தன். அவனது கையை அழுத்தமாய் பற்றினான் வாசுதேவன்.

"எங்களுக்கு ரொம்ப பெரிய கௌரவம் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் வாசு. பார்ட்டி ரொம்ப நல்லா இருந்தது"

"நீ கூட எங்களுக்கு பார்ட்டி கொடுக்கலாம் பங்கு" என்றான் நந்தகோபால் கிண்டலாய்.

"அவன் சொல்றதும் சரி தான்" என்று சிரித்தான் வாசுதேவன்.

"அதுக்கென்ன, குடுத்துட்டா போச்சு" என்றான் முகுந்தன், மீராவை பார்த்தபடி.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் முகுந்தா" என்றான் வாசுதேவன்.

சரி என்று தலையசைத்தான் முகுந்தன். அவனை கேள்விக்குறியுடன் பார்த்தாள் மீரா.

"ஜாக்கிரதையா இருங்க. மீராவை தனியா எங்கேயும் அனுப்பாத"

"சரி, நான் பார்த்துக்கிறேன்" என்றான் முகுந்தன்.

"சரி கிளம்புங்க. லேட் ஆயிடுச்சு" என்றான் வாசுதேவன்.

மீராவுடன் கிளம்பினான் வாசுதேவன்.

"வாசு உங்ககிட்ட எதைப்பத்தி சொன்னாரு?" என்றாள் மீரா.

"நான் உனக்கு அப்புறம் சொல்றேன்" என்றான் முகுந்தன்.

"ம்ம்ம்ம்"

அவர்கள் வெளியே வருவதை பார்த்தான் கோவர்த்தன். வாசுதேவன் அனுப்பிய புகைப்படங்களை பார்த்து, அது அவர்கள் தான் என்பதை நிச்சயபடுத்திக் கொண்டான். அவர்களது கார் கிளம்பியது. சிறிது இடைவெளி விட்டு அவர்களை பின்தொடர்ந்தான் கோவர்த்தன், அவர்களுக்கு சந்தேகம் எழாத வண்ணம்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top