42 அபாயம்

42 அபாயம்

மறுநாள் காலை

ஜனார்த்தனனும் வைதேகியும் சென்னைக்கு செல்ல தயாரானார்கள். முகுந்தனும் மீராவும் அவர்களை வழி அனுப்ப விமான நிலையம் சென்றார்கள்.

"எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை" என்றார் ஜனார்த்தனன்.

"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. மீரா என்னோட வைஃப்" என்றான் மீராவை பார்த்தபடி.

"உங்க வரவுக்காக நாங்க காத்திருப்போம்" என்றார் வைதேகி.

அவருக்கு பதில் கூறாமல் முகுந்தனை ஏறிட்டாள் மீரா.

"நாங்க சீக்கிரமே சென்னைக்கு வருவோம், அத்தை" என்றான் முகுந்தன்.

"எங்க பொண்ணை சந்தோசமா வைச்சிருக்குறதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி" என்றார் வைதேகி மீராவின் முதுகை தட்டிக் கொடுத்தபடி.

அமைதியாய் நின்றான் முகுந்தன்.

"அம்மா, நான் என் மாமியாரை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றாள் மீரா.

"நிச்சயமா சொல்றேன்" என்றார் அவர்.

அப்பொழுது அவர்களது விமானத்தின் இறுதி அழைப்பு கேட்டது.

"நாங்க கிளம்பறோம்" என்றார் ஜனார்தனன்.

தன் மகளை கட்டி அணைத்து விடை கொடுத்தார் வைதேகி. அவர்கள் விமான நிலையத்தின் உள்ளே சென்றார்கள்.  அவர்கள் தங்கள் கண்களில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்ற முகுந்தனும் மீராவும், தங்கள் காரை நோக்கி நடந்தார்கள்.

"நம்ம ஆபீஸ்ல இன்னைக்கு பார்ட்டி இருக்கு" என்றான் முகுந்தன்.

"ஆமாம், நான் அதை மறக்கல" என்றாள் மீரா.

"ஆனா, இன்னைக்கு நீ ரொம்ப சிம்பிளான டிரஸ் போட்டுருக்கியே. இன்னைக்கு பார்ட்டிக்கு நீ புடவை கட்ட போறது இல்லையா?"

"நான் புடவை கட்டணும்னு நினைக்கிறீங்களா?" என்றாள்.

"இல்ல, நான் உன்னை எதுக்காகவும் கட்டாயப்படுத்த விரும்பல. ஆனா, புடவை கட்டுனா நீ ரொம்ப அழகா இருப்ப. உன்னை புடவை கட்டி பார்க்க எனக்கும் பிடிக்கும்" என்றான்.

"நீங்க தான் நான் புடவை கட்டின அன்னைக்கு திட்டினீங்களே... அதனால தான் அதுக்கப்புறம் நான் புடவையே கட்றது இல்ல"

"அன்னைக்கு நீ பஸ்ல போன. அதனால நான் சத்தம் போட்டேன். ஆனா, இப்ப தான் நீ என்கூட கார்ல வரியே... இனிமே புடவை கட்டுறதுல என்ன பிரச்சனை இருக்கப் போகுது?"

"இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"நீ புடவை கட்டணும்னு பிரிய பட்டா தினமும் கட்டிக்கலாம். ஆனா, அது உனக்கு கம்ஃபர்ட்டபிளா இல்லன்னா நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்"

ஒன்றும் கூறாமல், சரி என்று தலையசைத்தாள் மீரா. அது அவனுக்கு ஏமாற்றத்தை தந்தது. *எனக்கு புடவை கம்ஃபர்டபுளா தான் இருக்கு* என்று அவள் கூறுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். அவள் ஒன்றும் கூறாமல் போகவே, அமைதியாய் காரை கிளப்பினான்.

"எதுக்காக உங்க அம்மா அப்பா இவ்வளவு அவசரமா கிளம்பி போறாங்க?"

"அவங்க மாப்பிள்ளை, அவங்க பொண்ணை எப்படி நடத்துறார்னு பார்க்க வந்தாங்க. அதை பார்த்துட்டதால, கிளம்பி போறாங்க"

"நிஜமாவே அவங்க அதுக்காக தான் மும்பைக்கு வந்தாங்களா?" என்றான் முகுந்தன்.

"ஆமாம், உங்களை ஜெயில்ல போடணும்னு முடிவோட தான் அவங்க வந்தாங்க. நான் தான் அவங்களை தடுத்து நிறுத்தினேன்" என்றாள் கிண்டலாய்.

"அப்படியா?  எப்படி அவங்களை தடுத்து நிறுத்தின?" என்றான் சாதாரணமாய்.

"ரொம்ப பாடுபட்டு தான் அவங்களை தடுத்து நிறுத்த முடிஞ்சது"

"நீ அவ்வளவு பாடெல்லாம் பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்ல. சிம்பிளா விஷயத்தை அவங்க கிட்ட சொல்ல வேண்டியது தானே?"

"சிம்பிளாவா? என்ன சொல்லணும்?"

"உண்மையை சொல்ல வேண்டியது தானே?"

"என்ன உண்மை?"

"நீ ஏற்கனவே உன்னோட மனசுங்கற ஜெயில்ல என்னை போட்டுட்டேன்னு சொல்லி இருக்கலாம் இல்ல?"

புன்னகையுடன் காரை செலுத்திக் கொண்டிருந்த அவனை, திடுக்கிட்டு பார்த்த மீரா,

"நீங்க எப்போதிலிருந்து இப்படி எல்லாம் பேச கத்துக்கிட்டீங்க?" என்றாள்.

"சத்தியமா, எனக்கே தெரியல" என்று சிரித்தான்.

அவனது சிரிப்பில் மெய்மறந்தாள் மீரா. சிரிப்பதை நிறுத்திய அவன்,

"என்ன பாக்குற?" என்றான்.

அவள் ஒன்றும் கூறாமல் நேராய் அமர்ந்து கொண்டாள்.

"என்னை ரொம்ப ரசிக்காத. அப்புறம் வண்டியை அப்படியே வீட்டுக்கு திருப்பிடுவேன்" என்றான் கிண்டலாய்.

தன் புருவங்களை உயர்த்தி அவனை அதிசயமாய் பார்த்தாள் மீரா. அதற்கு பிறகு, அவள் ஒன்றும் பேசவில்லை. ஆனால் வழிமுழுக்க புன்னகையுடன் கடந்தாள்.

அவர்கள் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள். காரை பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான் முகுந்தன். காரை விட்டு இறங்க, கதவை திறக்க முயன்றாள் மீரா. ஆனால் அவளால் முடியவில்லை. கார், சென்டர் லாக் செய்யப்பட்டிருந்தது. அவள் கேள்விக்குறியுடன் முகுந்தனை பார்த்து,

"திறந்து விடுங்க" என்றாள்.

அவன் சரி என்று தலையசைத்தான். அவள் சிறிதும் எதிர்பார்க்காத வண்ணம், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, பிறகு சென்டர்லாக்கை திறந்தான்.

அவன் கதவை திறந்து கொண்டு கீழே இறங்க முயல, அவன் கரத்தை பற்றினாள் மீரா. அவன் அவளது கரத்தையும், பின் அவள் முகத்தையும் ஏறிட்டான். அவன் அணிந்திருந்த டையை பற்றி தன்னை நோக்கி இழுத்த அவள், அவனது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி காரை விட்டு கீழே இறங்கினார்கள்.

அவர்கள் அலுவலகத்தில் நுழைந்த போது, வாசுதேவன் யாருடனோ தொலைபேசியில் காரசாரமாய் பேசிக் கொண்டிருந்ததை கண்ணாடி கதவின் வழியாக கவனித்தான் முகுந்தன். அவன் பேசிக் கொண்டிருந்தான் என்று கூறுவதற்கு இல்லை. சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் என்று கூறினால் தகும். அவன் அப்படி பேசும் அளவிற்கு என்ன ஆனது? அவன் எப்பொழுதும், எதற்காகவும் கலவரப்படக்கூடிய ஆள் இல்லையே...!  அவன் எப்பொழுதும் தன் பொறுமையை கை விடாதவன் ஆயிற்றே...! என்று எண்ணினான் முகுந்தன்.

விஷயத்தைத் தெரிந்து கொள்ள அவனது அறையை நோக்கி நடந்தான் முகுந்தன். அவன் தன் அறையை நோக்கி வருவதை கண்ட வாசுதேவன், அந்த அழைப்பை அவசரமாய் துண்டித்தான். அது முகுந்தனின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவன் ஏன் அப்படி கலவரப்பட்டான் என்று புரியவில்லை முகுந்தனுக்கு. முகுந்தனை பார்த்தவுடன் வாசுதேவன் சாதாரணமாய் சிரித்தான், தனது கலக்கத்தை திரையிட்டு மறைத்து.

"ஏதாவது பிரச்சனையா வாசு?" என்றான் முகுந்தன்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ஜஸ்ட் ஒரு பர்சனல் இஷ்ஷு" என்றான்

"ஓ..."

"நீங்க பார்ட்டிக்கு ரெடியா?" என்று பேச்சை மாற்றினான் வாசுதேவன்

"ரெடி"

"உன்னோட மாமனார் மாமியார் எப்ப வருவாங்க? அவங்களுக்கு நம்ம லொகேஷனை ஷேர் பண்ணிடு"

"இல்ல வாசு, அவங்க வரல. அவங்க சென்னைக்கு கிளம்பி போயிட்டாங்க"

"ஆனா ஏன்? அவங்க இங்க தான் இருக்க போறாங்கன்னு சொன்ன?"

"ஆமாம், அவங்க இங்க வந்து ரெண்டு நாள் கூட ஆகல. ஆனா அவசரமா கிளம்பி போயிட்டாங்க"

"ஏதாவது பிரச்சனையா?"

"அவங்க எதுவும் சொல்லல"

"நீ எதுவும் கேட்கலையா?"

"கேட்டேன். ஆனா அவங்க எதுவும் சொல்லல. நாங்க சென்னைக்கு வறோம்னு சொல்லி இருக்கேன்"

"இது ரொம்ப நல்ல ஐடியா. ஒரு பிரேக் எடுத்து, உங்க ரெண்டு ஃபேமிலியோடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வாங்க. அது உங்க ரிலேஷன்ஷிப்பை இன்னும் ஸ்ட்ராங் ஆகும்"

"இந்த ப்ராஜெக்ட்டை முடிச்சுட்டு, எங்க *பாஸ்* பர்மிஷன் கொடுத்தா, போயிட்டு வறோம்" என்றான் முகுந்தன்.

அதைக் கேட்டு சிரித்தான் வாசுதேவன்.

"தாராளமா போயிட்டு வா. கடந்த அஞ்சு வருஷத்துல நீ லீவே எடுக்கல. அதை இப்போ யூஸ் பண்ணிக்கோ" என்றான்.

சரி என்று தலையசைத்தான் முகுந்தன்

"நீங்க உடனே போகணும்னு விருப்பப்பட்டாலும், இந்த ப்ராஜெக்ட்டுக்கு நான் வேற யாரையாவது அசைன் பண்றேன்"

"ரொம்ப சாதாரணமா இருக்காத வாசு. அப்புறம், நீ எங்க பாஸ் அப்படிங்கிறதை நாங்க மறந்துடுவோம்" என்று புன்னகைத்தான் முகுந்தன்.

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த வாசுதேவன்,

"பரவாயில்லையே... உன்கிட்ட நிறைய இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதே. நீ ஜோக் எல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்ட..." என்றான்.

"நான் நம்ம அடுத்த ப்ராஜெக்ட்டை ஆரம்பிச்சிடவா?" என்றான்.

"நீயும் மீராவும் சேர்ந்து இந்த ப்ராஜெக்டை டீல் பண்ணுங்க"

"நானும் மீராவுமா?"

"ஆமாம் உங்களுடைய பார்ட்னர்ஷிப் தான் ரொம்ப சூப்பரா ஒர்க் ஆகுதே" என்று சிரித்தான் வாசுதேவன்.

ஆம் என்று புன்னகைத்தான் முகுந்தன்.

"முகுந்தன், அபராஜித்தோட அப்பா நம்ம மேல கோவமா இருக்காருன்னு தெரியுது"

"உன்கிட்ட ஃபோன்ல பேசுனது அவர் தானா?" என்றான் முகுந்தன்.

"இல்ல. அது அவர் இல்ல. என்னுடைய சோர்ஸ் மூலமா எனக்கு விஷயம் தெரிஞ்சது"

"அவர் ஒரு உதவாக்கரை அப்பாவா இருக்கணும். அவரோட பிள்ளை ஒரு பொறுக்கி. ஆனா அவரு நம்ம மேல கோவப்படுறாரா?"

"அந்த ஆளு அப்படி தான்"

"அவரோட கோபத்தால நம்ம கம்பெனிக்கு எந்த பிரச்சனையும் வராதே?"

"நிச்சயமா இல்ல. அவர் நம்மளோட டீலர் தானே... ஆனா நீயும் மீராவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க"

"மீரா மேல மட்டும் அவனுங்க கையை வச்சா, அது தான் அவனுங்களுக்கு இந்த உலகத்துல கடைசி நாளா இருக்கும்" என்றான் முகுந்தன் கோபத்துடன்.

அது தனக்குத் தெரியும் என்பது போல் தலையசைத்தான் வாசுதேவன்.

"வாசு, நான் உன்கிட்ட கடைசியா கேட்கிறேன். உண்மைய சொல்லு, நீ பேசிகிட்டு இருந்தது யாரோட கால்?"

பெருமூச்சு விட்ட வாசுதேவன்,

"அது எங்க அம்மாவுடைய கால். எனக்கு கல்யாணம் பண்ணி வச்சே தீரணும்னு அவங்க பிடிவாதமா இருக்காங்க. ஏதோ ஒரு பொண்ணை பார்த்து வச்சிருக்காங்களாம். அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை படுத்தறாங்க"

"அப்படின்னா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?" என்று சிரித்தான் முகுந்தன்.

"இல்ல முகுந்தா, என்னுடைய வேலையில நான் கவனம் செலுத்த முடியாம போயிடும்னு நினைக்கிறேன். என் கம்பெனியை மேனேஜ் பண்ண எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்"

"அப்படி எல்லாம் நினைக்காத, வாசு. கல்யாணம் ஒருத்தனோட வளர்ச்சிக்கு நிச்சயமா தடைக்கல்லா இருக்கவே முடியாது. சரியான ஆளை தேர்ந்தெடுக்குறது தான் முக்கியம். அவங்க நம்மளுடைய பாதி சுமையை குறைச்சிடுவாங்க. சில விஷயங்களை எல்லாம் தள்ளிப் போட்டு நேரத்தை வீணாக்கக்கூடாது. அதுல கல்யாணமும் ஒன்னு" என்றான் முகுந்தன்.

தன் முன்னாள் நின்று பேசிக் கொண்டிருப்பது முகுந்தன் தானா என்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

"முகுந்தா, கொஞ்சம் என்னைக் கிள்ளு" என்று தன் கையை அவனிடம் நீட்டினான்

அதற்கு மென்மையாய் சிரித்தான் முகுந்தன்.

"கடவுள் உங்க ரெண்டு பேரையும் எப்பவும் சந்தோஷமா வைக்கட்டும்" என்று மனதார வாழ்த்தினான் வாசுதேவன்.

"தேங்க்ஸ்" என்று அவன் அறையை விட்டு புன்னகையுடன் வெளியேறினான் முகுந்தன்.

அவன் செல்வதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன். எப்படி மாறிவிட்டான் முகுந்தன்...! எவ்வளவு இறுக்கமாக இருந்தவன் அவன்...! எவ்வளவு அழகாய் அவனது வாழ்க்கை மாறிவிட்டது...! மீராவுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று எண்ணிய அவனது முகம் மாறியது. அவர்களுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்று அவன் மனம் பதைபதைத்தது . தனது கைபேசியை எடுத்த அவன், யாருக்கோ ஃபோன் செய்தான். அவனது அழைப்பு ஏற்கப்பட்டது.

"சொல்லுங்க வாசு சார்"

"கோவர்தன், எனக்கு உன்னோட உதவி வேணும்... இருபத்தி நாலு மணி நேரமும்"

"என்ன செய்யணும்னு சொல்லுங்க சார்" என்றான் கோவர்தன்.

"என்னோட ஃப்ரெண்ட்ஸை நீ பாதுகாக்கணும். அவங்களுக்கு ரொம்ப பெரிய ஆபத்து இருக்கு. அவங்களுக்கு எதுவும் நடந்துட கூடாது. நீ அவங்களை ஃபாலோ பண்ற விஷயம் அவங்களுக்கு தெரிய கூடாதுங்கறது ரொம்ப முக்கியம்"

"ஏன் சார்? விஷயத்தை சொல்லிட்டா அவங்களும் ஜாக்கிரதையா இருப்பாங்க இல்ல?"

"ஆனா அவங்க நிம்மதி போய்டுமே..."

"ஆனா..."

"நான் சொல்றதை கேளு. விஷயம் எந்த அளவுக்கு சீரியஸ் ஆனதுன்னு எனக்கு தெரியும். யாராவது அவங்களை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு. இல்ல, மீராவை முகுந்தன்கிட்ட இருந்து பறிக்கவும் முயற்சிக்கலாம்"

"ஓ..."

"நீ அவங்களை நிழல் போல பின் தொடர்ந்து பாதுகாக்கணும்"

"உங்களுக்கு இந்த அளவுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும் போது, நம்ம எதுக்காக காத்திருக்கணும்? ஆளை முடிச்சுட்டு போயிட்டே இருக்கலாமே"

"அவங்க இந்த சொசைட்டில ரொம்ப பெரிய புள்ளிங்க. நம்மால அவங்களை அவ்வளவு ஈசியா தொட முடியாது. எனக்கு மட்டும் ஆதாரம் கிடைச்சா, அவங்களை ஓட விட்டு அடிப்பேன்"

"விஷயத்தை என்கிட்ட விடுங்க சார். அவங்க போட்டோவை அனுப்புங்க"

"சரி"

அழைப்பை துண்டித்து விட்டு, முகுந்தன், மீராவின் புகைப்படங்களை கோவர்தனுக்கு அனுப்பி வைத்தான் வாசுதேவன்.

இப்பொழுது தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை பார்க்க ஆரம்பித்து இருக்கும் முகுந்தனின் சந்தோஷத்தை கெடுக்க வாசுதேவன் விரும்பவில்லை.  அதனால் தான் இந்த விஷயத்தை பற்றி அவனிடம் கூறுவதை தவிர்த்தான் அவன். புத்தி கெட்ட ஒரு அப்பன், பிள்ளைக்காக அவர்கள் ஏன் தங்களது சந்தோஷத்தை இழக்க வேண்டும்? அவர்களை காக்க அவன் தான் இருக்கிறானே...! பார்க்கலாம், அபராஜித்தும் அவனது மூளை கெட்ட அப்பனும் எப்படி அவர்களது திட்டத்தில் ஜெயிக்கிறார்கள் என்று! தனக்குத்தானே சவால் விட்டுக் கொண்டான் வாசுதேவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top