38 உண்மை நிலை
38 உண்மை நிலை
முகுந்தன் கூறியதை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள் மீரா.
"குழந்தை பெத்துக்கலாமா?" என்ற நம்ப முடியாத கேள்வியைக் கேட்டான் அவன்.
தன் விழி விரித்து அவனை பார்த்தாள் மீரா. அவள் முகத்தைப் பார்த்து புன்னகைத்த அவன்,
"உன் உடம்பு சிலுத்திடுச்சு பாரு" என்று அவள் மேற்கையை லேசாய் தடவினான்.
அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாத மீரா, திருதிருவென விழித்தாள். குழந்தை பெற்றுக் கொள்வதா? உண்மையாகவா?
"உன்னோட பேரன்ஸும் என்னோட பேரண்ட்ஸும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க"
"நீங்க? நீங்க சந்தோஷப்பட மாட்டீங்களா?"
"நிச்சயமா சந்தோஷப்படுவேன். குழந்தை கருவில் எப்படி உருவாகுது அப்படின்னு ஒரு ஆர்டிக்கல் படிச்சேன். உலகத்திலேயே ரொம்ப அதிசயமான விஷயம் அது. இயற்கை தான் இந்த உலகத்தில பெஸ்ட் படைப்பாளி. அதை நான் ஆரம்பத்துல புரிஞ்சுக்காம விட்டுட்டேன். கோடிக்கணக்கான விந்து அணுக்களை ஜெயிச்சி, ஒரே ஒரு அணு மட்டும் ஜெயிச்சி, கருவா உருவாகுமாம். மனுஷனுடைய போராட்டம் நம்ம பிறக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பம் ஆகிடுது, இல்ல?"
அந்த மெல்லிய வெளிச்சத்தில், அவன் முகத்தில் தோன்றி மறைந்த அதிசய குறியை அழகாய் ரசித்துக் கொண்டிருந்தாள் மீரா.
"பேரண்ட்ஸோட டிஎன்ஏ தான் குழந்தையோட கேரக்டரை முடிவு பண்ணுமாம். அப்படின்னா, என்னோட குழந்தை, என்னை மாதிரியே தான் இருப்பான். ஆனா அவன் என்னை மாதிரி தனிமையை விரும்ப மாட்டான். ஏன்னு சொல்லு பாக்கலாம்?"
அவனுக்கு பதில் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.
"ஏன்னா என் மகனோட அம்மா நீ..."
"இதுக்கு என்ன அர்த்தம்? உங்களை தனியா இருக்க விட்டதுக்காக அத்தையை குறை சொல்றீங்களா?"
"அவங்க நல்லவங்க... அளவுக்கு மீறி நல்லவங்க... அது தான் அவங்க பிரச்சனையே. நான் தனியா இருக்க விரும்புறேன்னு தெரிஞ்ச போது, அவங்க என்னை நாலு சாத்து சாத்தி இருக்கணும்" என்று சிரித்தான்.
"அப்படின்னா, நான் உங்களை, அதாவது உங்க பிள்ளைதனியா இருக்க விரும்பினா, அடிச்சு உதைக்கணும்னு சொல்றீங்களா?" என்றாள் கிண்டலாய்.
"கண்டிப்பா செய்யணும். நீ என் பிள்ளையோட அம்மாவாச்சே...! அது இருக்கட்டும், நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே... நம்ம குழந்தை பெத்துக்கலாமா?"
"எனக்கு தூக்கம் வருது" என்று கண்களை மூடிக்கொண்டாள் மீரா.
"நீ இந்த சின்ன வெளிச்சத்துல ரொம்ப செக்ஸியா இருக்க" என்று அவள் மூக்கை லேசாய் தட்டினான்.
*நீங்களும் தான்* என்று கூறவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
"சரி தூங்கு" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.
மறுநாள் காலை
முகுந்தனும் மீராவும் எழுவதற்கு முன்பே, முக்கால்வாசி சமையலை முடித்து விட்டிருந்தார் வைதேகி. அவர்கள் அறையை விட்டு வெளியே வந்த போது, அவர்களுக்கு காப்பி கொடுத்தார். காலை சிற்றுண்டி மேசையின் மீது தயாராய் இருந்தது.
"அம்மா, நீங்க எதுக்கு இதெல்லாம் செஞ்சீங்க? நான் செஞ்சிருப்பேன்ல?" என்றாள் மீரா.
"ஏன் செய்யக்கூடாது? நீங்க ஆஃபீஸ் போறீங்க. அதனால தான், நீங்க எழுந்துக்கறதுக்கு முன்னாடி இதையெல்லாம் முடிச்சு வைக்கலாம்னு நெனச்சேன்"
"நீங்க தானே அத்தை எப்ப பாத்தாலும் உங்க வீட்டிலயும் சமைக்கிறீங்க? உங்க பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கும் போது நீங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம் இல்ல?" என்றான் முகுந்தன்.
"அப்படின்னா, மீரா எப்போ ரிலாக்ஸா இருப்பா?" என்றார் வைதேகி.
"நாங்க உங்க வீட்டுக்கு வரும் போது அவ ரிலாக்ஸா இருப்பா"
"நீங்க எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க?" என்றார் ஆர்வமாய்.
"நாங்க அத பத்தி தான் பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். நேத்து ராத்திரி கூட பேசிக்கிட்டு இருந்தோம்"
*அது எப்போது நடந்தது?* என்பது போல் அவனை திரும்பிப் பார்த்தாள் மீரா.
"ரொம்ப சந்தோஷம்" என்றார் வைதேகி.
"அம்மா, நான் இன்னைக்கு லீவ் போட்டுட்டு, வீட்ல இருக்கட்டுமா?" என்றாள் மீரா.
"வேணாம் மீரா, நீ ஆஃபீஸ்க்கு போ. நானும் அம்மாவும் சாயங்காலம் மெரைன் டிரைவ்க்கு வறோம். நீங்களும் அங்க வந்துருங்க. அம்மா மெரைன் டிரைவ் பார்க்கணும்னு ஆசைப்படுறா" என்றார் ஜனார்த்தனன்.
"மாமா, இங்க மும்பையில, *மும்பை தர்ஷன்* அப்படின்னு ஒரு ஸ்கீம் இருக்கு. அது ஒரு நாள் டூர் போற மாதிரி. மும்பையோட ஒட்டுமொத்த டூரிஸ்ட் அட்ராக்ஷனையும் அந்த டூர்ல கவர் பண்ணிடுவாங்க. நான் அதுக்கு டிக்கெட் புக் பண்ணட்டுமா?" என்றான் முகுந்தன்.
"நீங்களும் எங்க கூட வருவீங்களா?" என்றார் ஜனார்த்தனன்.
"நிச்சயமா வருவோம். மீராவும் இன்னும் மும்பைல எந்த இடத்தையும் சுத்தி பார்க்கல"
"அப்படினா சரி. ஒரே நாளில் எல்லாத்தையும் பாக்குறதுன்னா, இது நல்ல ஐடியாவா தெரியுது" என்றார் ஜனார்த்தனன்.
"சரி வர்ற ஞாயிற்றுக்கிழமை நான் டிக்கெட் புக் பண்றேன். நம்ம ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம்" என்றான்.
சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.
"நான் அன்னைக்கு ஏதாவது சமைச்சு எடுத்துக்கவா?" என்றார் வைதேகி.
"வேண்டாம் அத்தை, மும்பையில நிறைய ஸ்பெஷல் ஃபுட் ஐட்டம்ஸ் கிடைக்கும். நீங்க அதை எல்லாம் சாப்பிட்டு பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்" என்றான்.
சரி என்று தலையசைத்தார் வைதேகி.
"சாயங்காலம் மெரைன் டிரைவுக்கு வரும் போது டாக்ஸில வந்துடுங்க. நாங்க அங்க வந்து உங்க கூட சேர்ந்துக்கிறோம்" என்றான் முகுந்தன்
"சரி" என்றார் ஜனார்த்தனன்.
தன் அறைக்கு சென்றான் முகுந்தன்.
"மாப்பிள்ளை ரொம்ப நல்லவரா இருக்கார் இல்ல?" என்றார் வைதேகி சந்தோஷமாய்.
"அதுல என்ன சந்தேகம்?" என்றார் ஜனார்த்தனன்.
அதை கேட்ட மீரா உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள். நல்லவேளை, அவளது பெற்றோர்கள் பத்து நாளைக்கு முன்பு மும்பைக்கு வர வேண்டும் என்று எண்ணவில்லை.
அவர்கள் அலுவலகத்திற்கு தயாரானார்கள். மதிய உணவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து இருவரும் ஒன்றாய் கிளம்பினார்கள். வரும் வழியெல்லாம் மீரா எதையோ தீவிரமாய் யோசித்தபடி இருந்தாள்.
"உங்க அம்மா அப்பாவை இம்ப்ரஸ் பண்ண நான் ட்ரை பண்றேன்னு நினைக்கிறியா?" என்றான் முகுந்தன்.
இல்லை என்று தலையசைத்தாள் மீரா.
"ஏன் அப்படி நினைக்கல? நான் அவங்களை சரியா இம்ப்ரஸ் பண்ணலையோ?" என்றான் சிரிப்புடன்
"நீங்க அவங்களை இம்ப்ரஸ் பண்ணி என்ன சாதிக்க போறீங்க?" என்றாள்
"இது என்ன கேள்வி? அவங்க என்னை சப்போர்ட் பண்ணுவாங்க... என் பக்கம் நிப்பாங்க... அவங்க உன் இஷ்டத்துக்கு நடந்துக்கவோ, எனக்கு எதிரா எந்த முடிவையும் எடுக்கவோ விட மாட்டாங்க"
"அப்படின்னா இதையெல்லாம் உங்களுக்காக தான் நீங்க செய்றீங்களா?"
"அப்படித்தான் இருக்கட்டுமே, மீரா. நான் எப்படி இருந்தேன்னு உனக்கு நல்லா தெரியும். எனக்கு பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னும், மத்தவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாது. ஏன்னா, நான் தனியாவே இருந்து பழகினவன். இப்போ தான் நான் ஒரு பரிணாம வளர்ச்சிக்குள்ளேயே நுழைஞ்சி இருக்கேன். உங்க அளவுக்கு யோசிக்கவும், செயல்படவும், என்னை இம்ப்ரூவ் பண்ணிக்கவும் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கு. எந்த ஒரு விஷயத்தோட விளைவையும் நான் சந்திக்காத வரைக்கும், நான் செய்யறது சரியா, தப்பான்னு கூட எனக்கு தெரியாது. அதனால, தயவுசெஞ்சி என்னை தப்பா நினைச்சுக்காத. நான் தப்பு செஞ்சா,நீ தாராளமா என்கிட்ட சொல்லலாம். என்னுடைய வைஃபா, என் மேல உனக்கும் பொறுப்பு இருக்கு"
அவன் கூறியதை கேட்டு புன்னகைத்தாள் மீரா. அவனது வெளிப்படையான பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"செக்ஸ் விஷயத்துல உங்களோட அணுகுமுறை தப்புன்னு நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?"
"தப்புன்னா, எந்த விதத்தில் தப்புன்னு சொல்ற? ஒருவேளை அது தப்பா இருந்தா, எது சரி? நான் எப்படி அணுகணும்?"
"அது ரெண்டு பேரோட முழு சம்மதத்தோட நடக்கணும். ஆனா, எனக்கு அது பிடிச்சிருக்கா, இல்லையான்னு நீங்க கவலைப்படவே இல்ல"
"அது தான் உன்னோட பாய்ன்ட்னா, நமக்குள்ள நடந்தது மீச்சுவல் தான். ஏன்னா, அதை நீ தடுக்கல... என்னோட அணுகுமுறையை நீ ஏத்துக்கிட்ட"
"எனக்கு அதுல சம்மதம் இல்லைன்னு நிரூபிக்க நான் என்ன செய்யணும்? நான் உங்களை தடுத்து நிறுத்தினாலோ, உங்களை எதிர்த்தாலோ, நான் சொன்னது சரின்னு ஒத்துக்குவீங்களா?"
"பொய் சொல்லாத மீரா... எனக்கு தெரியும், உனக்கு என்னையும் பிடிக்கும், என்னோட அணுகுமுறையும் பிடிக்கும்"
"அப்படியா? அது உங்களுக்கு எப்படி தெரியும்?"
"என் மனசுல இருந்த அதே ஆழத்தை நான் உன்கிட்டயும் பார்த்தேன்"
"லவ் மேக்கிங்னு வரும் போது, அந்த நேரத்துல, எல்லாரும் அதே மாதிரி தான் இருப்பாங்க"
"இதை நான் ஒத்துக்க மாட்டேன்"
"ஏன்?"
"ஒவ்வொருத்தருக்கும் உணர்ச்சிகள் மாறுபடும். அப்படித்தான், எனக்கான உன்னோட உணர்ச்சிகள். நீ என் மேல வச்சிருக்கற காதலோட தீவிரத்தை நான் பலமுறை உணர்ந்து இருக்கேன். அதனால, நீ ஏதாவது சொல்லி மேக்கப் பண்ண பாக்காத"
பெருமூச்சு விட்டாள் மீரா.
அவர்கள் அலுவலகம் வந்தடைந்தார்கள். முகுந்தன் அவளிடம் ஏதோ சொல்ல முயன்ற போது, தன் கையை காட்டி அவனைத் தடுத்தாள்.
"நான் நந்தகுமார் கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லாதீங்க" என்று கூறிவிட்டு காரை விட்டு கீழே இறங்கி நடந்தாள்.
தனது காரை பார்க்கிங் லாட்டுக்கு எடுத்துச் சென்றான் முகுந்தன்.
வைஷ்ணவியின் நாற்காலி காலியாய் இருந்தது. அங்கு வந்த நந்தகுமாரை பார்த்து புன்னகைத்தாள் மீரா.
"இன்னும் வைஷு வரலையா?"
"இல்ல மீரா, இப்ப தான் அவ எனக்கு கால் பண்ணா. அவ டிராபிக்ல மாட்டிக்கிட்டு இருக்காளாம்"
"ஓ அப்படியா...? சரி, கொஞ்சம் என் கேபினுக்கு வரீங்களா?" என்றாள் மீரா
"ஓ வரேனே" என்று அவளை பின்தொடர்ந்தான் நந்தகுமார்.
முகுந்தன் வரட்டும் என்று காத்திருந்தாள் மீரா. அவன் வருவதை பார்த்தாள் அவள். அவன் கோபமாக இருந்தான். அவன் அப்படித்தானே இருப்பான்? அவன் அவள் அறையின் பக்கத்தில் வந்த போது,
"நீங்க எப்போ வைஷ்ணவியைப் பத்தி உங்க ஃபேமிலிகிட்ட சொல்லப் போறீங்க?" என்றாள் மீரா நந்தகுமாரிடம்.
அதைக் கேட்ட முகுந்தன் அப்படியே நின்றான். வைஷ்ணவியை பற்றி எதற்காக நந்தகுமார் அவனது குடும்பத்தாரிடம் கூற வேண்டும்?
"நான் ஏற்கனவே அவளைப் பத்தி வீட்ல பேசிட்டேன், மீரா"
"அப்படியா? ரொம்ப நல்ல விஷயம். அப்படின்னா சீக்கிரமாவே அவளை உங்க அம்மா கிட்ட கூட்டிக்கிட்டு போங்க"
"நான் அவளுடைய ஃபோட்டோவை அம்மாகிட்ட காட்டினேன்"
"அவங்களுக்கு அவளை பிடிச்சிருந்ததா?"
"ரொம்ப பிடிச்சிருந்தது"
"எந்த போட்டோவை காட்டினீங்க?"
"ஸ்ரேயாவோட எங்கேஜ்மென்ட்ல உங்க கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தோம்ல? அதை தான் காட்டினேன்"
"ஓ அந்த ஃபோட்டோவா?"
"ஆமாம், அந்த போட்டோல வைஷ்ணவி செர்ரி ரெட் சாரில ரொம்ப அழகா இருந்தா. ஒரே கலர் சாரீல நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருந்தீங்க"
"ஆமாம், வைஷ்ணவி தான் என்னை அந்த கலர் சாரி கட்ட சொன்னா"
"தேங்க்யூ சோ மச் மீரா. உங்களால தான் வைஷ்ணவி என்னை காதலிக்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சது. இல்லன்னா அவ என்கிட்ட சொல்லியே இருக்க மாட்டா" என்று சிரித்தான்.
"அவ ரொம்ப நல்ல பொண்ணு. உங்களை ரொம்ப காதலிக்கிறா. அதனால தான் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டீங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவளை எப்பவும் தனியா இருக்குறதா மட்டும் உணர விடாதீங்க. முக்கியமா, நீங்க அவ கூட இருக்கும் போது"
"நிச்சயமா மாட்டேன் மீரா. நான் அவளை நல்லா பாத்துக்குவேன்"
"தேங்க்யூ, நான் விதேஷ் கிட்ட பேசி உங்களுக்கு ஒரு வீடு பார்க்க சொல்லிட்டேன். சீக்கிரமாவே அவர் உங்களுக்கு வீடு தேடி கொடுத்துடுவாரு. அதனால, வீடு கிடைச்ச உடனே, அங்க ஷிஃப்ட் ஆக ரெடி ஆயிடுங்க"
"ரொம்ப தேங்க்ஸ் மீரா, அந்த வீடு எனக்குன்னு தெரிஞ்சா, விதேஷ் ரொம்ப அப்செட் ஆயிடுவான். ஆனா பரவாயில்ல, நான் அவனை சமாளிச்சிக்கிறேன்"
"ஆமாம், நம்ம மனசுல யார் மேலையும் காழ்ப்புணர்ச்சியோட இருக்கக் கூடாது. அது நமக்கு நல்லதில்ல"
"நீங்க சொல்றதும் சரி தான். அவன் எனக்கு வீடு தேடி கொடுத்த பிறகு, அதுக்காக நான் அவன்கிட்ட தேங்க்ஸ் சொல்லி எங்க பிரச்சனையை முடிச்சிடுறேன்"
"குட்" என்று சிரித்தாள் மீரா. விதேஷிடம் பேசிவிட வேண்டும் என்று நந்தகுமார் எடுத்த முடிவு அவளுக்கு சந்தோஷத்தை தந்தது.
அதே நேரம் முகுந்தனுக்கு உண்மை புலப்பட்டு விட்டது. அது தெரிந்து வருத்தப்பட்டான் முகுந்தன்.
வேண்டுமென்றே தான் மீரா அதை அவனுக்கு தெளிவுபடுத்தினாள். அவனை சரி செய்ய வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது என்று அவன் தானே கூறினான்? அதை செய்ய வேண்டுமென்றால், முதலில் முகுந்தனுக்கு தான் செய்த தவறு என்னவென்று தெரிய வேண்டும். இப்பொழுது அது தான் நிகழ்ந்திருக்கிறது.
மீரா ஜெகதீஷின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் சென்றதோ, ஸ்ரேயாவின் நிச்சயதார்த்தத்திற்கு.
அவள் விதேஷிடம் நந்தகுமாருக்காக வீடு பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டாள். ஆனால் அதை அவள் தனக்காக செய்ததாய் தவறாய் நினைத்துக் கொண்டு, தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிப்பதற்காக அவளை கட்டாயப்படுத்தினான்.
ஒருவேளை, அதற்காகத்தான் அவள் அவனை தடுக்கவில்லையோ? ஏற்கனவே அவளை தவறாய் நினைத்துக் கொண்டிருக்கும் அவன், மேலும் அவளை தவறாய் நினைத்து விடுவான் என்று எண்ணிவிட்டாளோ? அவன் அவளை தவறாய் புரிந்து கொண்டதால் தான் அவள் அவனை தடுக்காமல் அமைதியாய் இருந்தாளோ? முகுந்தனின் மனம் நிம்மதி இழந்தது. அவனுக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை. தான் செய்த தவறுக்காக அவன் எந்த அளவிற்கு வருத்தப்படுகிறான் என்பதை உடனடியாய் மீராவுக்கு தெரியப்படுத்த எண்ணினான் அவன். அதனால் மீராவுக்கு ஃபோன் செய்தான். அவள் அந்த அழைப்பை ஏற்றாள்.
"மீரா என்னோட ரூமுக்கு வா" என்று கூறிவிட்டு உடனடியாய் அழைப்பை துண்டித்தான், அவளுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல்.
அவனது அறைக்கு வந்த மீரா கதவை தட்டினாள். அவன் மேஜையின் மீது சாய்ந்தபடி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவள் அவனது அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி, அவளை அணைத்துக் கொண்டு,
"ஐ அம் சாரி மீரா... ஐ அம் ரியலி சாரி" என்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top