31 முதல் உரையாடல்

31 முதல் உரையாடல்

"உங்க வேலை முடிஞ்சிடுச்சுன்னா, நான் என்னோட ரூமுக்கு போகலாமா?"

அவள் கூறியதை கேட்டு திகைத்த முகுந்தன், கோபத்தில் பல்லை கடித்தான். அவர்களுக்குள் தாம்பத்தியம் நிகழ்ந்து விட்டால், தன்னை விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றாது என்று அவன் நினைத்தான். ஆனால், அவள் கூறிய வார்த்தைகள், அவன் சிறிதும் எதிர்பாராதது.

"இல்ல... நான் இன்னும் முடிக்கல... முடிக்கவும் மாட்டேன்... உன் கூட இருக்கிறது போதும்னு நான் எப்பவுமே நினைக்க மாட்டேன். நீ என் கூட தான் இருக்க போற, உன் வாழ்க்கை முழுக்க. புரிஞ்சுதா உனக்கு?" என்றான் கோபமாய்.

ஒன்றும் கூறாமல் கண்களை மூடினாள் மீரா.

"மீரா..." என்றான்.

அவள் மென்று விழுங்கினாள்.

"நான் உண்மையிலேயே அதையெல்லாம் உணர்ந்து தான் சொல்றேன்" என்று அவள் முகத்தை அங்குலம் அங்குலமாய் முத்தத்தால் நிரப்பினான்.

"நீ எனக்கு வேணும், மீரா"

"ஆனா, நீங்க என்னை வேண்டாம்னு சொன்னீங்க... இல்ல?" என்றாள் வேதனையுடன்.

"அப்போ சொன்னேன்... இப்போ நீ எனக்கு வேணும்" என்று மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? நான் என்ன பொம்மையா? எனக்கு உணர்ச்சிகள் இல்லையா? எனக்குன்னு தன்மானம் இல்லையா?"

"அதுக்காகத் தான் மும்பையில  இருக்காதேன்னு சொன்னேன்"

"நான் மும்பையில இருந்தா இப்போ என்ன? அதனால என்ன பெருசா மாறிப்போச்சு?"

"மாறித்தான் போச்சு... எனக்குள்ள... உனக்குள்ள... எல்லாம் மாறிப்போச்சு. எனக்கு தெரியும் நீ என்னை காதலிக்கிறேன்னு... அதுவும், யாரும் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு...! அதனால் தான் நான் உன்னை தொட்ட போது நீ என்னை தடுக்கல. அதனால தான் என்னோட செயலை நீ ஏத்துக்கிட்ட. உன்னை என்கிட்ட கொடுத்த" என்றான் அவளது கன்னத்தை தொட்டவாரு.

"நான் உங்களை தொட விட்டேன். ஏன்னா, உங்க பிடியிலிருந்து என்னால வெளியில வர முடியல. நீங்க தொட்டதை நான் ஏத்துக்கிட்டேன், ஏன்னா எனக்கு வேற வழி இருக்கல.  எல்லாத்துக்கும் மேல, நீங்க என்னை தொட்ட போது நான் பலவீனமானேன். ஏன்னா, எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு" என்று உண்மையை கூறினாள். 

"உன்னோட உணர்ச்சிகளுக்கு சொந்தக்காரன் நான் தான். அதை நீ மறுக்கவே முடியாது. என்னுடைய இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, அதே உணர்ச்சி உனக்கு நிச்சயம் ஏற்பட்டு இருக்காது. அது தான் எனக்கும் மத்தவங்களுக்கும் இருக்கிற வித்தியாசம்" என்றான் பெருமையுடன்.

"இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க?" என்று அவன் கண்களில் பதிலை தேடினாள் .

"நம்ம புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்"

தனது சந்தோஷத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள் மீரா.

"மீரா என்னை பாரு" என்றான் அமைதியாய். அவள் பார்க்கவில்லை. அவள் முகத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பினான்.

"நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? உடலுறவால நம்ம ரெண்டு பேரும் ஒன்னாயிட முடியும்னு நினைக்கிறீர்களா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

"நீ என்னை காதலிக்கலையா?" என்ற அவன் குரல் கடுமையாய் ஒலித்தது.

"நம்ம கல்யாணத்துக்கு முன்னாலேயே நான் உங்களை காதலிச்சேன். ஆனா அது உங்ககிட்ட எந்த மாற்றத்தையும் நிகழ்த்தல. நீங்க தனியா இருக்கணும்னு நினைச்சீங்க. என்னை மும்பையை விட்டு போயிட சொன்னீங்க. என்னோட வாழ்க்கையை என் இஷ்டத்துக்கு வாழ சொன்னிங்க. என்னை விவாகரத்து பண்ணவும் நீங்க தயாரா இருந்தீங்க. இப்ப மட்டும் உங்களுக்கு திடீர்னு என்ன ஆயிடுச்சு? எதுக்காக இப்போ மட்டும் என் கூட இருக்கணும்னு நினைக்கிறீங்க? நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறதாலயா?"

"இல்ல, நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது. அப்படி நடக்க நான் விடமாட்டேன்" என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.

"ஏன் நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது?"

"ஏன்னா, நீ என்னோட வைஃப்"

"அதை நீங்க மாத்தி ரொம்ப நாள் ஆச்சு"

"ஆனா நீ இன்னமும் நான் கட்டின தாலியை கழுத்துல போட்டுக்கிட்டு தான் இருக்க" என்று அவன் கூறியவுடன் திகைப்படைந்தாள் மீரா.

"நான் அதை பார்த்துட்டேன். நான் அதை பார்த்ததை கூட நீ  கவனிக்கல" நமுட்டு புன்னகை பூத்தான்.

"நான் உங்க வைஃப்ன்னு நீங்க தானே யார்கிட்டயும் சொல்லிக்க விரும்பல?"

"அதை சொன்னது நான் இல்ல. நீ தான் எனக்கு எழுதின லெட்டர்ல அப்படி எழுதி இருந்த"

"என்னை நீங்க தான் அப்படி எழுத தூண்டுனீங்க"

"இப்பவும் நான் உன்னை என் கூட வாழ சொல்லி தூண்டுறேன்"

"எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்"

"இதுல யோசிக்க என்ன இருக்கு? நம்ம எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டோம். அதுக்கு மேல இன்னும் என்ன நடக்கணும்?"

மீரா அமைதியாய் இருந்தாள்

"உனக்கு வேற எந்த சாய்ஸும் இல்ல. நீ என் கூட தான் இருக்கணும். அவ்வளவு தான்" என்றான் விடாப்பிடியாக.

அவனை பார்த்து முகம் சுருக்கினாள் மீரா.

"என்னை ஏத்துக்கோ"

அவள் உதட்டுடன் தன் உதட்டை ஒற்றி எடுத்தபடி இருந்தான். தன் கண்களை மூடினாள் மீரா. மீண்டும் அவள் இதழ்களை பற்றி ஆழமாய் முத்தமிட்டான். அவள் அவனை தடுக்கவில்லை. அது அவனை பித்து பிடிக்க செய்தது. அவள் ஏன் இப்படி இருக்கிறாள்? அவளது மனதில் என்ன தான் இருக்கிறது? அவளது இடது கன்னத்தை பற்றி வலது கன்னத்தில் முத்தமிட்டான்.

"நீ ஏன் இப்படி இருக்க? ஏன் இப்படி எல்லாம் செய்ற?" என்றான் மெல்லிய குரலில்.

அதற்கு மீராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவன் எந்த அர்த்தத்தில் கேட்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

தன் கண்களை மூடி அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பிக்கொண்டாள். அவளை அப்படி செய்யவிடாமல், தன்னை நோக்கி இழுத்து, தன் பக்கம் திருப்பி அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் முகம் புதைத்த மீரா, புன்னகையுடன் கண்களை மூடி, நிம்மதியாய் உறங்கிப் போனாள், அவள் காத்திருந்த அந்த கணத்தை ரசித்தபடி.

ஆனால், முகுந்தன் உறங்கவில்லை. அவன் மீராவை முத்தமிட்டபடி இருந்தான். அவனுக்கு எப்போதிலிருந்து அவள் மீது இப்படி பைத்தியம் பிடித்தது என்று அவனுக்கே தெரியவில்லை. பித்து பிடித்தவன் போல் நடந்து கொண்டான். ஆரம்பத்தில் அவளை அவன் சட்டை கூட செய்யாமல் தவிர்த்தான். அவள் எவ்வளவு அழகானவள் என்பதை கூட அவன் கவனிக்கவில்லை. அவள் அவனது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த பின், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும், அவளைப் பற்றி புகழ்வதை கேட்டான். அவன் உணர தவறிய அவளது அழகையும், திறமையையும், குணத்தையும் அனைவரும் மெச்சினார்கள். ஆண்கள் அவளை பார்த்து ஏங்கினார்கள்... அவளது ஒரு பார்வைக்காக தவம் கிடந்தார்கள். அது அவனை தவிப்புக்கு உள்ளாக்கியது. அவனுக்கே தெரியாமல், அவனது இதயம் அவளை நோக்கி சாயத் துவங்கியது. *தன்னுடையது தனக்கு மட்டுமே சொந்தம்* என்ற குணம் கொண்ட அவனால், அவள் மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதை சகிக்க முடியவில்லை. பழகுவதையே சகிக்க முடியாதவன், அவள் வேறொருவரை திருமணம் செய்வதை சகித்துக் கொள்வானா? மீரா வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள் தான். ஆனால் அதில் தான் அவனுக்கு தெளிவு இல்லையே...!

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண்விழித்தாள் மீரா. ஏற்கனவே விழித்து விட்டிருந்த முகுந்தன், அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் உறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மீரா தான் போர்த்தி இருந்த போர்வையுடன் எழுந்து அமர்ந்தாள். கள்ள புன்னகை பூத்த முகுந்தன்,

"நீ பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்ல. நம்ம தான் எல்லாத்தையும் முடிச்சிட்டோமே. எனக்கு மட்டும் சொந்தமான உன்னை, நானும் முழுசா பாத்துட்டேன்" என்றான்.

சங்கடத்துடன் தலை தாழ்ந்தாள் மீரா.

"நான் ஆஃபீஸுக்கு கிளம்பனும்" என்றாள் அவனை பார்க்காமல்.

தனது பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்து விட்டான்.

"ஆபீசுக்கு கிளம்பறதுக்காக மட்டும் தான் நீ இப்போ தங்கி இருக்கிற ரூமுக்கு நான் உன்னை போக விடுறேன்" என்றான், அதை *உன்னுடைய அறை* என்று குறிப்பிடாமல்.

போர்வையை சுற்றியபடி தன் அறையை நோக்கி நடந்தாள் மீரா. அவனை அவள் கடந்த போது, அவளது மேற்கையை பற்றி நிறுத்திய அவன், அவளை கட்டி அணைத்து, அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

"என்கிட்ட வந்துடு மீரா" அவளது காதில் கிசுகிசுத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"நந்தகோபால் கிட்ட இருந்து விலகி இரு" என்றான் எச்சரிக்கும் குரலில்.

அவனை நோக்கி புருவம் உயர்த்தினாள் மீரா. அப்படி என்றால், முகுந்தன் பேசியதெல்லாம் நந்தகோபாலை பற்றி தானா? ஐயோ என்றானது அவளுக்கு.

அவனது கையை எடுத்துவிட்டு, அங்கிருந்து ஓடிப் போனாள் மீரா. தன் அறைக்கு வந்த அவள், கதவை சாத்திக்கொண்டு, கதவில் சாய்ந்த படி தரையில் அமர்ந்தாள்.

உதட்டை கடித்து புன்னகையை தடுக்க முடிந்த அவளால், அவளது வெட்கத்தை தடுக்க முடியவில்லை. முதல் நாள் நடந்தவற்றை நினைத்துப் பார்த்த பொழுது அவளது உடல் நடுங்கியது. அவளுக்கு மயிர் கூச்செறிந்தது. முகுந்தன் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அவளது உடலில் இருந்தன. எழுந்து நின்ற அவள், தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். ஏனோ அவள் அன்று மிகவும் அழகாய் தெரிந்தாள். அதற்கு காரணம், அவள் முகத்தில் மிளிர்ந்த வெட்கம். புன்னகையுடன் குளியலறைக்கு சென்ற அவள், வேண்டிய நேரம் எடுத்துக்கொண்டு குளித்து முடித்தாள்.

அலுவலகம் செல்ல தயாரானாள் மீரா. எதையோ யோசித்த அவள், முதன் முறையாய் தனது அறையை வெளி பக்கமாய் பூட்டினாள். அவளது அனுமதியின்றி அவளது பொருட்களை முகுந்தன் தன் அறைக்கு மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்க விடுவதில் அவளுக்கு விருப்பமில்லை. அப்போது சமையல் அறையில் இருந்து வெளியே வந்த முகுந்தன் அவளது மதிய உணவு பையை அவளிடம் நீட்டினான். அவனை ஆச்சரியமாய் ஏறிட்டாள் மீரா.

"இதை வாங்கிக்கோ..."

அவள் அதை மறுக்க முற்பட்ட போது,

"வாங்கிக்கோன்னு சொன்னேன்" என்று உத்தரவிட்டான்.

"எனக்கு ஆர்டர் பண்றதை நிறுத்துங்க. என்னுடைய பர்சனல் ஸ்பேஸ்குள்ள வரமாட்டேன்னு சொன்னதை மறந்துட்டீங்களா?" என்றாள் வேண்டுமென்றே.

"அதையெல்லாம் நான் நேத்து ராத்திரியே உடச்சி எறிஞ்சிட்டனே ஞாபகம் இல்லையா?" என்றான் அவளது கன்னங்களை சிவக்கச் செய்து.

அவள் கையில் உணவு பையை கொடுத்த அவன்,

"இரு, நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போகலாம்" என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காக காத்தீராமல், தன் பையை எடுத்து வர தன் அறைக்கு சென்றான்.

சற்று யோசித்த மீரா, அவனுக்காக காத்திராமல் அங்கிருந்து ஓடிப் போனாள்.
வெளியே வந்த முகுந்தன், மீராவை அங்கு காணாமல் எரிச்சல் அடைந்தான். கதவை சாத்தி பூட்டிக்கொண்டு, என்ன செய்வது என்று யோசித்தபடி லிஃப்டில் ஏறினான். தரை தளம் வந்த அவன் மீரா ஒரு ஆட்டோவில் ஏறுவதை கண்டான். கோபமாய் காரை நோக்கி நடந்தான்.

அவனுடன் காரில் செல்வதை தவிர்த்தாள் மீரா. ஏனென்றால், தனது மகிழ்ச்சி ததும்பும் முகத்தை முகுந்தனிடமிருந்து மறைக்க முடியும் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை.

தொடரும்...




Bạn đang đọc truyện trên: AzTruyen.Top