தீயாய் சுடும் என் நிலவு 34

அவளறியாமல் சென்ற தீரன் அவளை பற்றி நான்கு உணர்ந்து கொண்டான்.

"நான் நினைச்சது சரியா போச்சு. மிரு நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. உனக்கு நான் டைவோர்ஸ் கொடுத்தது ஒரு வகைல சரி தான்." என்று தனக்குள் பேசிக்கொண்டவன் அங்கிருந்து அவள் காணும் முன் வெளியேறினான்.

*******

"திஷா செல்லம். நீங்க நல்ல பொண்ணு தான?" என்று கெஞ்சி கொண்டிருந்தான் தீரன்.

"அம்மா வேணும்" என்று அழும் குழந்தையிடம் அவனின் பேச்சு எதுவும் எடுபடாமல் போனது.

"பட்டு இருங்க. நான் அம்மாவுக்கு போன் பண்ணி தரேன். நீங்க பேசுங்க" என்றான் தீரன்.

"ஹிம்" என்று தலையாட்டியது குழந்தை.

அவனிடம் இருந்த குழந்தையை வாங்கிய தீரனின் அன்னை, "மணி என்ன? இந்நேரத்துக்கு போன் பண்ணுவியா?" என்று முறைத்துவிட்டு குழந்தையை சமாதானபடுத்த முயன்றார்.

மூன்று வருடங்களாக தன்னிடம் பேசாமல் இருந்த அன்னை இன்று பேசியதை கண்டு உள்ளம் துள்ளி குதிக்க, பாட்டியையும் பேத்தியையும் மகிழ்ச்சியாய் பார்த்து கொண்டிருந்தான்.

தன் மகளை கூட்டி வந்த இரண்டாம் நாள் வீட்டின் முன் வந்து நின்ற அன்னையை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் தவித்த நிலையை இன்று நினைவு கூர்ந்தான்.

********

வாசலில் வந்து நின்ற அன்னையை அதிர்ச்சியாய் பார்த்தான் தீரன்.

அவன் எதுவும் பேசாமல் இருக்க, அதை பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் அவர் நேராக உள்ளே வந்தார்.

"நான் யாருக்காகவும் வரலை. என் பேத்தி வந்திருக்கான்னு சொன்னாங்க. நான் இருக்கும் போது எதுக்கு என் பேத்தி யாரும் இல்லாம தனியா இருக்கணும்? அதான் வந்தேன். இங்க வரதுக்கோ தங்குறதுக்கோ யாரோட அனுமதியும் எனக்கு தேவையில்லை." என்று பேத்தியை கொஞ்சி கொண்டிருந்தார்.

ஆம். அன்று முதல் அழும் பேத்தியை கதை சொல்லி சோறுட்டுவதும் பல வண்ண குழந்தை பேச்சால் திசை திருப்புவதும் என திஷாவை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார் அவனின் அன்னை.

அன்னையின் ஞாபகம் வராமல் அந்த பிஞ்சு மலரை கவனித்து கொண்டாலும் எல்லா நேரங்களிலும் இல்லை என்றாலும் ஒரு சில நேரங்களில் அன்னையின் அரவணைப்புக்கு ஏங்க தான் செய்தது குழந்தை.

ஒரு நாள் இரவு பிள்ளையை தூங்க வைத்துவிட்டு அவனிடம் வந்த அன்னை.

"இன்னும் எத்தனை நாளைக்கு குழந்தை உங்க ரெண்டு பேர் சண்டைல கஷ்டபடணும்?" என்றார் அமைதியாய்.

எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த தீரனிடம், "உனக்கு மட்டும் அம்மா வேணும். உன் பொண்ணுக்கு அம்மா வேணாமா? உன் பொண்டாட்டிகூட சேர்ந்து வாழ இதுவரைக்கும் என்ன செஞ்சுருக்க? சரி போகட்டும். இது வரைக்கும் என்ன முயற்சி பண்ணன்னு எனக்கு தெரியாது. ஆனா இனி நீங்க சேர்ந்து வாழறது எப்படின்னு கொஞ்சம் யோசிச்சு பொண்டாட்டிகூட சேர்ந்து வாழ்ற வழிய பாரு" என்றார் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து.

அன்னையிடம் ஒரு வார்தைகூட பேச முடியாமல் சரி என்று தலையாட்டினாலும் அது நடக்காது என்பது அவன் அறிந்தது தான்.

"எனக்கு மட்டும் அவக்கூட சேர்ந்து வாழ ஆசை இல்லையா என்ன? இந்த மூணு வருஷம் என்னை தவிக்க விட்டது பத்தாதுன்னு இப்பவும் அடம் பிடிக்கிறா?" என்று தனக்குள் முணுமுணுத்தான்.

அவர் காதில் அவை விழுந்ததும் திரும்பி முறைத்து, "அவ ஒண்ணும் ஏதோ பொழுது போக்குக்காக உன்கூட சண்டை போட்டுட்டு போகலை. என்னது? உன்னை அவ கஷ்டபடுத்தினாளா? உன் கஷ்டத்துக்கு முழு காரணம் நீ மட்டும் தான். வீணா அவமேல பழிய போட்றதை விட்ரு. மத்த பொண்ணுங்க மாதிரி அப்பா வீட்டுக்கு போய் கண்ண கசக்கிட்டு நிக்கலை. அதே நேரம் தைரியம் இல்லாம சாகவும் இல்ல. தைரியமா வாழக்கையோட போராடி தனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்கியிருக்கா. ஒரு பொண்ணு புருஷன் துணையும் பெத்தவங்க துணையும் இல்லாம இந்த சமுதாயத்துல வாழ்றதுக்கு எவ்ளோ போராடனும்னு எனக்கு தெரியும். அவ்ளோ லேசுல அவ கோவம் போகாது. ஏன்னா உன்னாலயே உன் குழந்தையை இழந்து இன்னும் உடல் சரியில்லாம இருக்கா... இருந்தும் யார்க்கிட்டயும் கையேந்தாம தன்மானத்தோட தனிச்சு நிக்குறா என் மருமக. அவளுக்கு திமிர் கொஞ்சம் இருக்க தான் செய்யும். அவளோட கோபத்தை எப்படியாவது குறைக்க என்ன செய்யலாம் யோசி" என்று உள்ளே சென்றுவிட்டார்.

தான் பார்த்து கொண்டிருந்த கோப்பை மூடிவைத்துவிட்டு இரு கரங்களையும் தலைக்கு பின் வைத்து மெத்தையில் சாய்ந்தான்.

'எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லாமலா போச்சு. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். ஆனா அவளுக்கு அப்பவும் மனம் இறங்கலையே? சரி உனக்கு என் மேல தான கோவம். என்னை தண்டிக்கிற. உன்னோட அன்பு எனக்கு தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட. ஆனா நம்ம பொண்ணு என்ன பண்ணா? அவ உன் அன்புக்காக ஒவ்வொரு நிமிஷமும் எவ்ளோ ஏங்குறா. அவளை போய் உன்னால எப்படி ஒதுக்க முடிஞ்சது? எதுவுமே தெரியாத பச்சை குழந்தையை தவிக்க விட்றதை என்னால பொருத்துக்க முடியாது. மிஸஸ்.மிருதி கொஞ்சம் பொருத்துக்கோ. இனி தான் நான் யாருனு பார்க்க போற' என்று தனக்குள் புன்னகைத்து தன் அம்மா கூறியதையே நினைத்து கொண்டிருந்தவனின் எண்ணங்களில் மேலும் ஆயிரம் சிந்தனைகள் சுழ்ன்றோடின.

பத்து நாள் கடந்திருக்க, காலையில் இருந்தே மிருதியின் மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் துடித்து கொண்டிருந்தது.

"ஸ்ரீஷா! நம்ம எதிர் வீட்டுக்கு யாரோ புதுசா வராங்க போல? யாரு? உனக்கு தெரியுமா?" என்றாள் மிருதி சமையலறையில் இருந்து.

"தெரியலையே கா" என்றாள் ஸ்ரீஷா.

"எதிர் வீடு அமுவோட ஃப்ரெண்ட் வீடு தானே? உன்கிட்ட எதுவும் சொல்லலையா அவன்?" என்றாள் மீண்டும் மிருதி.

"ஆமாக்கா. ஆனா, அவர் எதுவும் சொல்லலையே?" என்று அமுதனிடம் போனில் விசாரித்த பின், "அக்கா! அமு ஃப்ரெண்ட் வீடு சும்மா பூட்டிதானே இருக்குனு வீட்டை வாடகைக்கு விட்ருக்காங்களாம். ஒரு வேலை அவங்க தான் வராங்களோ என்னவோ?" என்றாள் ஸ்ரீஷா. .

"ஓஹ்! அப்படியா சரி மா. எனக்கு டைம் ஆகுது" என்று உள்ளே ரெடி ஆக சென்றாள்.

வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் உள்ளே இருந்து மிருதி எட்டி பார்க்க, சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்ரீஷா எழுந்து சென்றாள்.

"சொல்லுங்க" என்றாள் எதிரில் நின்ற கொரியர் மெனிடம்.

"மேடம்! மிஸ்டர்.தீரன் இருக்காரா? கூப்பிடுங்க சைன் போடணும்" என்று கையில் இருந்த பார்சலில் முகவரி சரி பார்த்தபடி கூற, தீரனின் பெயர் அடிபட்டதும் வேகமாய் வெளியே வந்தாள் மிருதி.

"ஆமா. அவர் எங்க மாமா தான். ஆனா அவர் இங்க இல்லை.." என்று ஸ்ரீஷா முடிக்கும் முன் எதிரில் இருந்து குரல் வந்தது.

"சார்! இங்க வாங்க. நான் தான் தீரன். அது 18, இது 18a" என்ற குரலில் எதிர்வீட்டை நோக்கினாள் ஸ்ரீஷா.

எல்லையில்லா மகிழ்வுடன், "மாமா! எப்போ வந்தீங்க? திஷா எங்க? என்ன நீங்க இங்க இருக்கீங்க?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போக, மெல்ல சிரித்து "ஒரு நிமிஷம் டா" என்று தனக்கு வந்த பார்சலை கையெழுத்திட்டு வாங்கியவன் திரும்பி, "மிட் நைட் ரெண்டு மணிக்குடா. நீ எப்டி இருக்க?" என்றான்.

"நல்லா இருக்கேன் மாமா. பாப்பா எங்க?" என்றாள் உற்சாகமாய்.

மறந்தும் விழிகளால் அருகில் நிற்பவளை தீண்டாமல் பேசியவனை காண மனதில் ஒரு வலி உண்டானது மிருதிக்கு. இருந்தும் மகளை காண ஏக்கம் ஊற்றெடுக்க அதை மேலும் வளர்க்கும் விதமாய் கேட்டது "அம்மா" என்ற குரல்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top