இறுதி பகுதி
இறுதி பகுதி
தேன் நிலவிலிருந்து வந்த பிறகு, லாவண்யாவையும் நந்தாவையும் கிண்டல் செய்வதில் மிகவும் தீவிரமாய் இருந்தாள் குஷி. அவர்கள் அவளை கண்டாலே ஓடி ஒளிந்தர்கள்.
லாவண்யாவிற்கு பழச்சாறு தயாரித்துக் கொண்டிருந்தார் ரத்னா. அவரை அமரச் சொல்லிவிட்டு, அதை தான் செய்ய தொடங்கினாள் குஷி. திடீரென்று தலை சுற்றுவது போல் இருக்க, தன் கையில் இருந்த பழங்களை போட்டுவிட்டு, அப்படியேகீழே சரிந்தாள்.
ரத்னாவின் கூக்குரலை கேட்டு சமையலறைக்கு ஓடி வந்தான் அர்னவ். குஷி மயங்கி கிடப்பதைக் கண்டு அவன், அவளை தூக்கிச் சென்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் படுக்க வைத்தான். அதற்குள் அரவிந்தன் டாக்டரை ஃபோன் செய்து அழைத்தார்.
அவளை பரிசோதித்த மருத்துவர், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை கூறினார். அது வேறொன்றுமில்லை, குஷி கருவுற்றிருந்தாள்.
அர்னவ்வும் குஷியும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்த பிறகும், அது எப்படி நிகழ்ந்தது என்று அவர்களுக்கு புரியவில்லை.
"இது கடவுள் கொடுத்த வரம்னு நான் சொன்னப்போ நீங்க நம்பல. பாத்தீங்களா, இப்போ என்ன ஆச்சுன்னு?" கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவர்களை காலை வாறினான் நந்தா.
தன் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டாள் குஷி.
"இதெல்லாம் எல்லாருக்கும் நடக்கிறது தான். பரவாயில்ல விடு" என்றாள் லாவண்யா.
"இதுக்காக வருத்தப்பட கூடாது. நீ இந்த நேரத்தை ரொம்ப சந்தோஷமா என்ஜாய் பண்ணணும். உன்னோட எண்ணங்களை தான் உன்னோட குழந்தை உள்வாங்கும். அதனால, இதை விரும்பி ஏத்துக்கிட்டு, சந்தோஷமா அனுபவி" என்றார் ரத்னா.
அப்போது கரிமா தன் கைகளை விரித்தபடி உள்ளே ஓடி வந்தார். சோபாவை விட்டு எழுந்து நின்றாள் குஷி. ஆனால் அவர் குஷியை விடுத்து ரத்னாவை அணைத்துக் கொள்ள, அனைவரும் கொல் என்று சிரித்தார்கள்
"எவ்வளவு கிரேட்டான நியூஸ், ரத்னா...! உன் ரெண்டு பிள்ளைகளும் அப்பாவாக போறாங்க!" என்றார் கரிமா.
"அவங்க ரெண்டு பேருமே ஹார்ட் ஒர்க்கர்ஸ்" என்று அவர் கிண்டலாய் கூற, வாய்விட்டு சிரித்தார் கரிமா
குஷி தன்னை முறைத்துக் கொண்டு நிற்பதை பார்த்த கரிமா,
"எதுக்காக நின்னுகிட்டு இருக்க?" என்றார்.
"நீங்க என் அம்மானு சொல்லாதீங்க" என்றாள்.
"சரி, உன் பிள்ளையோட பாட்டின்னு சொல்றேன்"
"இதெல்லாம் ரொம்ப டூ மச்"
"அவங்க சும்மா விளையாடுறாங்க. இதை எல்லாம் உன் மனசுல ஏத்திக்காத. இதெல்லாம் பேபியை பாதிக்கும்" என்றான் அர்னவ்.
சரி என்று தலையசைத்த குஷி,
"இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு நம்ம போட்ட பிளான் பிளாப் ஆயிடுச்சு" என்றாள்.
"நமக்கு இது தான்னு எழுதி வெச்சிருக்கு. அதனால அதை நினைச்சு சந்தோஷப்படு. அட்லீஸ்ட் நம்ம ஹனிமூனுக்காவது போயிட்டு வந்தோம். பாவம் நந்தாவும் லாவண்யாவும் அதை கூட என்ஜாய் பண்ணல"
"நீ சொல்றதும் சரி தான். தேங்க் காட்..." என்றாள் குஷி.
"உனக்கு என்ன சாப்பிடணும்னு தோணுது?" என்று அவன் கேட்க,
"ஐஸ்கிரீம்" என்றாள் ஆர்வமாய்.
"சரி, வா போகலாம்"
"இரு, லாவண்யாவையும் கூட்டிக்கிட்டு போகலாம்"
"சரி கூப்பிடு..."
"லாவண்யா, நாங்க ஐஸ்கிரீம் சாப்பிட போறோம். நீயும் எங்க கூட வா. ஐஸ் கிரீம் சாப்பிட்டு வரலாம்x என்றாள்.
"என்னது ஐஸ்கிரீம் சாப்பிட போறியா? நம்ம ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடக்கூடாது, பேபி. அது பேபியை அஃபெக்ட் பண்ணும்" என்றாள் லாவண்யா.
குஷி ரத்னாவை பார்க்க, அவர் ஆம் என்று தலையசைத்தார். குஷியின் முகம் வாடிப்போனது.
"நீ உன் நாக்கை கட்டி வைக்கணும். நீ நினைச்சதை எல்லாம் சாப்பிட முடியாது. உன் மாமியார் சொல்றத கேட்டு நடந்துக்கோ" என்றார் கரிமா.
குஷிக்காக வருத்தப்பட்ட அர்னவ்,
"கவலைப்படாத, ஐஸ்கிரீம் எங்கே போயிட போகுது? கொஞ்ச நாள் தானே...! அப்புறம் சாப்பிடலாம்" என்றான்.
குஷி சரி என்று தலையசைத்தாள்.
...........
ரத்னாவிற்கு உட்காரக் கூட நேரமில்லாமல் போனது. அவரது இரண்டு மருமகள்களையும் கவனித்துக் கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. தான் மட்டும் ஓடியதோடு மட்டுமல்லாமல், வீட்டில் இருந்த மற்றவரையும் அவர் ஓட வைத்துக் கொண்டிருந்தார். அவர் தங்கள் மீது காட்டிய அக்கறை, குஷியையும் லாவண்யாவையும் நெகிழச் செய்தது.
தான் கருவுற்று இருப்பதை முதலில் நிச்சயம் செய்தது லாவண்யா தான் என்றாலும், கொடுக்கப்பட்ட தேதியில் அவளுக்கு பிரசவம் நிகழவில்லை. அவளுக்கு நாள் தள்ளிக் கொண்டே சென்றது. ஆனால் தனக்கு வழங்கப்பட்ட தேதிக்கு பதினைந்து நாட்கள் முன்னதாகவே குஷிக்கு குழந்தை பிறந்து விட்டது... லாவண்யாவிற்கு ஒரு நாள் முன்னதாக...!
ரத்னாவும் கரிமாவும் மருத்துவமனையில் குஷியுடனும் லாவண்யாவுடனும் இருந்தார்கள். இருவருக்குமே ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் இருவரும் பார்க்க இரட்டையர் போல் இருந்தார்கள். கருகருவென்ற முடி, திருத்தமான புருவங்கள், குண்டு முகம், நல்ல நிறத்துடனும் இருந்த அவர்கள், அர்னவ்வை போலவும் இல்லை, நந்தாவை போலவும் இல்லை. பத்து நாட்களுக்கு பிறகு, அவர்களின் முகங்களில் தெரிந்தது ரத்னாவின் சாயல்.
அவரை கையிலையே பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவரது மருமகள்கள், அவரை மானசீகமாய் ஏதோ ஒரு விதத்தில் பெருமையோடு நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை, அம்மாவின் எண்ணத்தை உள்வாங்கும் என்பது தான் நிதர்சனம் ஆயிற்றே. ஆனால், அவரது மருமகள்கள் இவ்வளவு தூரம் அவரை நேசிப்பார்கள் என்று அவருக்கு தெரியாது.
மாமியாரும் மருமகள்களும், அம்மா, பெண் போலவும், நண்பர்கள் போலவும் இருக்க முடியாத என்ன? ஒருவேளை அப்படி மட்டும் இருந்து விட்டால், அதைவிட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் வேறு என்ன இருந்து விடப்போகிறது? பெரும்பாலான குடும்பங்களின் தலையாய பிரச்சனையே மாமியார் மருமகள் பிரச்சனை தானே!
குஷியும் லாவண்யாவும் பிள்ளைகளுக்கு பெயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ரத்னாவிடமே ஒப்படைத்தார்கள். அவர் தேர்ந்தெடுத்த பெயர், அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.
"குஷியோட குழந்தை பேரு குஷா, லாவண்யாவோட குழந்தை பேரு லவா" என்றார் ரத்னா
"பாருடா, ராமாயணத்துல வர்ற லவன், குசன் பெயரை செலக்ட் பண்ணி இருக்கா உங்க அம்மா...! அது நம்ம மருமகளுங்க பேரோட ஒத்தும் போகுது... என்ன ஒரு ஒற்றுமை!" என்றார் அரவிந்தன்.
"அப்படின்னா ராமாயணத்தில வர்ற லவன், குசன் மாதிரி, இவங்களும் அப்பாவை விட அம்மா கிட்ட தான் க்ளோசா இருப்பாங்க போல இருக்கே" என்றாள் லாவண்யா.
குஷியும் லாவண்யாவும் ஹை ஃபை தட்டி கொண்டார்கள்.
"வாய்ப்பே இல்ல. நானும் அருவும் பெஸ்ட் பாதர் இருப்போம்" ஆமாம் தானே, அரு?" என்றான் நந்தா.
"அதுல என்ன சந்தேகம்?" என்றான் அர்னவ்.
"கடவுள் புண்ணியத்துல, என் பேர பிள்ளைங்க ரெண்டு பேரும், எந்த பிரச்சனையும் இல்லாம, சண்டை போடாம கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்கணும்" என்றார் ரத்னா.
"அவங்க அப்படி தான் ஆன்ட்டி இருப்பாங்க. ஏன்னா, அவங்க உங்ககிட்ட தானே இருக்க போறாங்க...? அப்படி இருக்கும் போது, அவங்க மனசுல எப்படி ஆன்ட்டி கெட்ட எண்ணம் வரும்?" என்றாள் குஷி.
அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ரத்னா,
"நான் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறவ. எதுக்காகவும் உணர்ச்சிவச கூடாதுன்னு நினைப்பேன். ஆனா, என் மருமகளுங்க என்னை ரொம்பவே உணர்ச்சிவசப்பட வைக்கிறாங்க" என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
குஷியும் லாவண்யாவும் அவரை புன்னகையுடன் அணைத்துக் கொண்டார்கள். அங்கு வந்த கரிமா அந்த காட்சியை கண்டு, சமையலறைக்கு விரைந்து சென்று, உப்பும் மிளகாய் கொண்டு வந்து, அவர்களுக்கு கண் பட்டுவிடாமல் இருக்க அவர்களுக்கு சுற்றி போட்டார்.
முடிந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top