9 அவன் மாறி விட்டான்...!
9 அவன் மாறி விட்டான்...!
சாப்பிட்டு முடித்த பின், குஷிக்கு ஃபோன் செய்து அவளை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் அரவிந்தன். அவர் ஏன் தன்னை அழைக்கிறார் என்று அவளுக்கு தெரியும். அவளது சமையல் திறமையை புகழ்வதற்காக தான் அழைக்கிறார். அவற்றை பெரும் மனநிலையில் அவள் இல்லை. அவள் யாருக்காக அதை விரும்பி சமைத்துக் கொடுத்தாளோ, அவனே அதை தொடாத போது யார் புகழ்ந்து என்ன பயன்? ஆனால் அதே நேரம், அரவிந்தன் அழைத்த பின் அங்கு போகாமல் இருக்கவும் அவளால் முடியாது.
அங்கு சென்ற அவளது முகம், அங்கு அர்னவ் இருந்ததை பார்த்து பொலிவு பெற்றது. தன் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த திக்குமுக்காடி போனாள் குஷி. அவள் சமைத்த உணவு சேர வேண்டியவன் கைக்கு சென்று சேர்ந்து விட்டதை விட வேறு என்ன வேண்டும்? அவளையே பார்த்து சிரித்தபடி நின்றிருந்த ரத்னாவை பார்த்து,
"என்கிட்ட பொய் சொன்னீங்களா?" என்றாள்.
ஆம் என்று சிரித்தபடி தலையசைத்தார் அவர்.
"நீங்க ரொம்ப டூ மச்"
"நீங்க ரெண்டு பேரும் எதைப் பத்தி பேசுறீங்க?" என்றார் அரவிந்தன்.
"அரு டின்னருக்கு வெளியில போயிருக்கான்னு சொல்லி நான் அவளை வெறுப்பேத்தினேன்"
முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, ஆம் என்று தலையசைத்தாள் குஷி. அதை அறிந்த அர்னவ்வின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. குஷியை பார்த்து புன்னகை புரிந்து, அவளுக்கு சந்தோஷம் அளித்தான்.
"நீ ரொம்ப சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்ட, ரத்னா" என்று சிரித்தார் அரவிந்தன்.
"முக்கியமா என் கிட்ட..." என்றாள் குஷி.
"நீ இவ்வளவு நல்லா சமைப்பேன்னு எங்களுக்கு தெரியாது..." என்றார் அரவிந்தன்.
"குஷி, நீ கலக்கிட்ட... இது வேற லெவல்" என்றான் நந்து.
"ரொம்ப நல்லா இருக்கு" என்றான் அர்னவ்.
குஷியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவள் சமைத்த உணவை சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், அவளை புகழவும் செய்து விட்டான் அர்னவ். அவளுக்கு வேண்டியதெல்லாம் அது தான். அன்று இரவு, வெகு நேரம் தூங்காமல் பைத்தியக்காரியை போல் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.
மறுநாள்
அலுவலகம் செல்ல தயாரான நிலையில் தரைதளம் வந்த அர்னவ், உணவு மேசையில் அரவிந்தன் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தான்
"அப்பா, அம்மா எங்க பா? அவங்க நல்லா இருக்காங்கல்ல?" என்றான்
"இல்ல அரு... அவளுக்கு லோ பிபி"
"மறுபடியுமா?" என்று அதிர்ச்சியோடு கேட்டபடி அவரது அறையை நோக்கி ஓடிச் சென்றான்
"அம்மா, உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?"
"என்னை சுத்தி இருக்கிற எல்லாமே சுத்துற மாதிரி இருக்கு" என்று அரை மயக்க நிலையில் சிரித்தார்
"நீங்க ஏம்மா உங்களை கவனிச்சுக்கவே மாட்டேங்கிறீங்க? சாப்பாட்டுல ரொம்ப குப்பை கம்மி பண்ணாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க"
"நான் தினமும் ஊறுகாய் சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கேன். அப்படி இருந்தாலும் எனக்கு பிபி ஏன் லோவாகுதுன்னு தெரியல"
"நான் இன்னைக்கு வீட்ல இருக்கட்டுமா?"
"வேண்டாம், அரு. நான் ஏற்கனவே ஆஃபீஸ்ல பர்மிஷன் வாங்கிட்டேன். நீ கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்" என்றார் அரவிந்தன்.
"சரி" என்று தலையசைத்த அர்னவ், அலுவலகம் கிளம்பிச் சென்றான்
இரண்டு மணி நேரம் கழித்து
அரவிந்தனின் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவர் உடனடியாய் கிளம்பி வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்படி அவர் ரத்னாவை தனியாய் விட்டு விட்டு செல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் நுழைந்தான் அர்னவ்.
"அரு, நீ என்ன வீட்டுக்கு வந்துட்ட?"
"இன்னைக்கு ஆஃபீஸ்ல இருந்து முடிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லப்பா. அதனால கிளம்பி வந்துட்டேன். என் வேலையை வீட்ல இருந்தே செய்யப் போறேன்"
"நீ இப்ப வீட்ல தானே இருப்ப?"
"ஆமாம் பா"
"எதுக்காக என்னவோ போல இருக்க?" என்று கேட்ட அரவிந்தன், எதையோ யோசித்து,
"நீ ஒன்னும் கவலைப்படாம இரு. அம்மாவுக்கு ஒன்னும் இல்ல. அவ மாத்திரை போட்டுக்கிட்டு படுத்திருக்கா. அவளுக்கு சீக்கிரமே சரியாயிடும். சரியா?" என்றார்.
அவன் சரி என்று தலையசைத்தான்.
"அது சரி... இன்னைக்கு காலையில ஆஃபீசுக்கு போகும் போது, நீ வேற கலர் ஷர்ட் தானே போட்டிருந்த? இப்போ வேற சட்டை போட்டுக்கிட்டு வர?"
அவருக்கு பதில் கூற அவன் நினைத்தபோது,
"அங்கிள்..." என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் திரும்பினார்கள். அங்கு குஷி நின்றிருந்தாள்.
அர்னவ் வீட்டில் இருந்ததை பார்த்து வியப்படைந்த அவள்,
"அல்லவ், நீ என்ன இங்க இருக்க? ஆன்ட்டி எப்படி இருக்காங்க?" என்றாள்.
"அவங்க ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க"
"ஓ... அம்மா, எல்லாருக்கும் சேத்து சமையல் செஞ்சுகிட்டு இருக்காங்க. அவங்க வந்து ஆன்ட்டி கூட இருப்பாங்க" என்றாள் குஷி.
"நீ காலேஜுக்கு போகலையா?" என்றார் அரவிந்தன்.
"போனேன் அங்கிள். முக்கியமா எடுக்க வேண்டிய ஒரு ரெக்கார்டு நோட்டை எடுக்க மறந்துட்டேன். அதை இன்னைக்கு நான் சப்மிட் பண்ணியாகணும். அதனால அதை எடுத்துட்டு போகலான்னு வந்தேன். நீங்க வீட்ல இருக்கிறதா அம்மா சொன்னாங்க. என்னை கொஞ்சம் காலேஜ்ல விட முடியுமா அங்கிள்? ரொம்ப லேட் ஆகுது. ப்ளீஸ்" என்றாள்.
"சாரி பேபி... நான் உடனடியா ஆஃபீசுக்கு போக வேண்டியிருக்கு. (என்று அர்னவ் பக்கம் திரும்பிய அவர்) நீ அவளை கூட்டிகிட்டு போய் காலேஜ்ல விட்டுடு, அரு. கரிமா இங்க ரத்னா கூட இருக்கப் போறா இல்லையா, நம்ம அவளை பத்தி கவலைப்பட வேண்டாம்" என்றார்.
அர்னவ் குஷியை பார்க்க, அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
"தட்ஸ் கிரேட்... வா போலாம்" என்றாள் அவள்.
சரி என்று தலையசைத்த அவன், அவளோடு வெளியே வந்தான். அவன் தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் வரை காத்திருந்த அவள், உட்கார நினைத்தபோது, அர்னவ் கூறியதை கேட்டு நின்றாள்.
"குஷி, கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டு தள்ளி உட்காரு..."
அது அவளுக்கு அதிர்ச்சி அளித்தது. அவன் கூற வந்ததை முழுதாய் கூறி முடிக்கும் முன்,
"என்னது? நீ என்ன சொன்ன?" அவளது கண்கள் கலங்கின.
"நான் சொல்ல வந்தது..."
"போதும் நிறுத்து. நானும் இங்க வந்ததிலிருந்து பாத்துகிட்டு தான் இருக்கேன். நீ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? ஆங்? பாக்குறவங்க கூட எல்லாம் ஒட்டிக்கிட்டு திரியிற சீப்பான பொண்ணுன்னு நினைச்சியா? என்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்கேன்னு ஆரம்பத்திலேயே எனக்கு தெரிஞ்சது நல்லதா போச்சு..."
"குஷி, ப்ளீஸ் நான் சொல்றதை கேளு..."
"போதும், நீ ஒன்னும் என்னை ட்ராப் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. நானே போறேன்" கண்களை துடைத்தபடி அவள் அங்கிருந்து ஓடிப் போனாள், பின்னால் இருந்து அவன் கொடுத்த குரலுக்கு மதிப்பளிக்காமல்...
"குஷி, நில்லு... கு....ஷி...."
லாவண்யாவும் அர்ச்சனாவும் அழுது வெளுத்துப் போயிருந்த அவளது முகத்தை பார்த்து கலவரம் அடைந்தார்கள். அவர்களுக்கு முன்னால் அவள் அழவில்லை என்றாலும், அவள் அழாமல் இல்லை. ரெக்கார்டு நோட்டை உரிய பேராசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு அவள் கல்லூரியை விட்டு கிளம்பி சென்றது மேலும் அவளது தோழிகளை குழப்பியது.
குஷி வீட்டுக்கு வருவதை பார்த்த கரிமா,
"என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட என்றார்.
"ரெக்கார்டு சப்மிஷன் தவிர வேற எந்த கிளாஸ்ஸும் நடக்கல. எனக்கு முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. அதனால நான் கிளம்பி வந்துட்டேன்" என்று பொய் கூறினாள்.
"ஏதாவது சாப்பிடுறியா?"
"இப்ப வேண்டாம்"
தன் அறைக்கு சென்றாள் குஷி. அவளை சந்தேக கண்ணோடு பார்த்தார் கரிமா. என்ன ஆயிற்று அவளுக்கு? கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தனது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பெண்ணாற்றே அவள்...! ஆனால் இன்று அதற்கு நேர் எதிராக அல்லவா கூறுகிறாள்...! தன் தோழிகளுடன் அவள் சண்டையிட்டு விட்டாளோ? என்று எண்ணினார் கரிமா. அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அழுதபடி இருந்தாள் குஷி, அழுவது அவளுக்கு பிடிக்காத ஒன்று என்ற போதும்...! அவளால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அது அவளுக்கு எரிச்சலை தந்தது.
எப்படி அவளால் அழாமல் இருக்க முடியும்? அவள் எதிர்பாராத ஒன்றை அல்லவா கூறிவிட்டான் அர்னவ்! எப்படி அவ்வாறு கூறலாம்? அவளைப் பற்றி அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?
எழுந்து அமர்ந்த குஷி, தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு,
"அழறதை நிறுத்து முட்டாள்... எதுக்காக இப்படி அழுதுகிட்டு இருக்க? உன்னை பத்தி கொஞ்சம் கூட கவலையே படாத ஒருத்தனுக்காக எதுக்காக நீ அழணும்? நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ, அவன் உன்னோட பழைய அல்லவ் கிடையாது. அவன் மாறிட்டான்... தலைகீழா மாறிட்டான். உண்மையை ஏத்துக்கோ...! உன் கையில எதுவும் இல்ல. தலைக்கு மேலே வெள்ளம் போயிடுச்சு. உன்னால எதுவும் செய்ய முடியாது. அவனை விடு... விட்டுடு...!" என்று மீண்டும் கட்டிலில் விழுந்து தலையணையை குத்தியபடி அழுதாள்.
தவறான புரிதல் என்பது மிகவும் மோசமான விஷயம். அது நாம் மனதுக்கு பிடித்தவருடன் கழித்த இனிமையான அனைத்து நிகழ்வுகளையும் மறக்க செய்து விடுகிறது...!
அது தான் இப்பொழுது குஷியின் விஷயத்திலும் நடக்கிறது. அர்னவ் விஷயத்தில் அவளுக்கு இருந்த அதிருப்தி, அவளை பொறுமையாய் வழியில் சிந்திக்கவிடவில்லை.
தன்னை தவறாக நினைத்துக் கொண்டு, அழுதபடி சென்ற குஷியை நினைத்தபடி இருந்தான் அர்னவ். அவன் கூறியதை அவள் இந்த விதத்தில் எடுத்துக் கொள்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இதில் அவனுடைய தவறு என்ன இருக்கிறது? அவன் கூற வந்ததை, முழுதாய் கூறக் கூட அவள் அவனுக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. அவளது அழுகையை அவன் எண்ணி மனம் வருந்தினான்.
அவன் கடுமையாய் நடந்து கொண்டதற்காக சில பெண்கள் அவன் முன் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். அவர்களது கண்ணீர் இதுவரை அவனை ஏதும் செய்ததில்லை. ஆனால் குஷியின் கண்ணீர் அவனை அடித்து போட்டது. அவள் குஷி ஆயிற்றே...! அவள் அவனைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாளோ...! அவனைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருப்பாள் ...! அவளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று எண்ணினான் அவன்... ஆனால் இப்பொழுது, அவள் அவனிடமிருந்து விலகி விடுவாளோ என்று அஞ்சினான்...!
முதல் நாள் தான் அவளிடம் பழையபடி பழகலாம் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அனைத்தும் தலைகீழாய் மாறிவிட்டது, அவன் முடிக்காமல் விட்ட ஒரே ஒரு வாக்கியத்தின் மூலமாக. சொல்ல வந்ததை சொல்லி முடிக்கும் முன் அவனை தவறாக அர்த்தம் செய்து கொண்டாள் குஷி.
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. அதை இப்பொழுது அனுபவத்தால் உணர்ந்தான் அர்னவ்.
நாம் சிறிதும் எதிர்பார்க்காத விதத்தில் வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்பட்டு விடுகிறது...! கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் புரட்டிப் போட்டு விடுகிறது...! அப்படிப்பட்ட மாற்றத்தில் இருந்து யாராலும் தக்க முடிவதில்லை...!
இரண்டு நாட்களுக்குப் பிறகு
அவர்கள் வீட்டிற்கு குஷி வரவே இல்லை என்பது அர்னவை வெகுவாய் கலவரப்படுத்தியது. எது எப்படி இருந்த போதும், அவள் அங்கு வருவதை நிறுத்தமாட்டாள் என்று எண்ணியிருந்தான் அவன். துரதிஷ்ட வசமாய் அவன் கூறியதை அவள் தன் மனதில் ஆழமாய் பதிய வைத்துக் கொண்டு விட்டிருக்கிறாள். அரவிந்தனும் ரத்னாவும் கூட குழப்பம் அடைந்தார்கள்.
இரவு உணவின் போது,
"ரத்னா, ஏன் குஷி நம்ம வீட்டுக்கு வரதே இல்ல? அவளை நான் ரெண்டு நாளா பார்க்கவே இல்லையே... நான் ஆஃபீசுக்கு போனதுக்கு அப்புறம் வந்தாளா?"
"நானும் அதைப்பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். மூணு நாளா அவ ஒரு தடவ கூட இங்க வரவே இல்ல"
"திடீர்னு அவளுக்கு என்ன ஆச்சு?"
"ஆமாம் பா, அவ இந்த மாதிரி இருந்ததே இல்ல" என்றான் நந்தா.
அர்னவ் உறுத்தலாய் உணர்ந்தான். அவனால் தான் அவள் அங்கு வருவதை தவிர்க்கிறாள் என்று அவனுக்கு தெரியும்.
"அவளுக்கு ஸ்கூட்டர் வேணும்னு அடம் பிடிச்சதா ஷஷி சொன்னான். நான் அவளை கூப்பிடுறேன். பேசிப் பார்க்கலாம்"
தன் கைபேசியை எடுத்து அவளுக்கு ஃபோன் செய்தார் அரவிந்தன்.
"ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்க" என்றார் ரத்னா.
சரி என்ற தலையசைத்துவிட்டு, ஸ்பீக்கரை ஆன் செய்தார் அரவிந்தன். இரண்டாவது மணியில் அந்த அழைப்பை ஏற்றாள் குஷி.
"ஹலோ அங்கிள், எப்படி இருக்கீங்க?"
"நல்லா இல்ல"
"என்ன ஆச்சு அங்கிள்? உடம்பு சரி இல்லையா?"
"உன்னை பார்க்காம நான் எப்படி நல்லா இருப்பேன்? எதுக்காக நீ இங்க வர்றதே இல்ல? யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்களா?" என்ற அவரை பதற்றத்துடன் ஏறிட்டான் அர்னவ்.
"நான் என்னோட ப்ராஜெக்ட் வேலைல பிஸியா இருக்கேன். ஃபைனல் எக்ஸாம் நெருங்கிக்கிட்டிருக்கு. அதனால் தான் நான் அங்க வரல" என்றாள் தயக்கத்துடன்.
"எக்ஸாமா? அடக்கடவுளே! நீங்க இங்க வந்து ஒரு வருஷம் ஆக போகுதா?"
"நான் ரெண்டு மாசம் லேட்டா தான் அங்கிள் காலேஜ்ல சேர்ந்தேன்... நாங்க இங்க வந்து எட்டு மாசம் ஆகுது"
"ஆமாம் இல்ல...? மறந்தே போயிட்டேன்"
"ஆன்ட்டி எங்க இருக்காங்க?"
"நீ என்கிட்ட பேசாத. பக்கத்து வீட்ல இருந்துகிட்டு, அங்கிள் ஃபோன் பண்ணதுக்கு அப்புறம் தான் என் உனக்கு ஞாபகம் வந்ததா? இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல. நாளைக்கு நீ இங்க வர..." என்றார் ரத்னா.
"சாரி ஆன்ட்டி... என்னால நாளைக்கு கூட அங்க வர முடியுமான்னு எனக்கு தெரியல. நிறைய வேலை இருக்கு. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள் குஷி.
ஒருவரை ஒருவர் கவலையோடு பார்த்துக் கொண்டார்கள்.
"இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்றார் ரத்னா.
"அவளை யாராவது ஏதாவது சொன்னீங்களா? இல்ல, உண்மையிலேயே அவ பிசியா தான் இருக்காளா? ரெண்டு நாள் போகட்டும் பாக்கலாம்" என்றார் அரவிந்தன்.
அர்னவ்வின் மனம் அவனை நிம்மதியாய் இருக்க விடவில்லை. அவள் அங்கு வராமல் இருந்ததற்கு காரணமாய் இருந்து கொண்டு அவனால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? அவனால் தான் அவள் மனம் உடைந்து போயிருக்கிறாள். அது அவன் வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் அது பேச்சாகாது அல்லவா? அவன் கூறிய வாசகம் இவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு வந்து விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனால் தான் இன்று அவனது பெற்றோர் கூட வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் குஷியை தங்கள் சொந்த மகள் போல் நேசிக்கிறார்கள். அவள் வருத்தப்படுவதை அவர்கள் பொறுக்க மாட்டார்கள். அவளது வருத்தத்திற்கு காரணம் என்ன என்பது தெரிந்தாலும் அவர்கள் பொறுக்க மாட்டார்கள். அவன் அதை வேண்டும் என்று செய்யவில்லை. அப்படி நடந்தது அவனது கெட்ட நேரம். எது எப்படி இருந்தாலும், அவன் அவளிடம் மன்னிப்பு கோர தயாரானான்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top