5 நினைவுகள்

5 நினைவுகள்

கதவை தட்டாமல் அர்னவின் அறைக்குள் நுழைந்தாள் குஷி. ஒன்றும் கூறாமல் சிலை போல் நின்றான் அர்னவ். எந்த தயக்கமும் இன்றி அவனது அறையை கண்களால் அலசினாள் அவள்.

"நீ உன் ரூமை இவ்வளவு கிளீனா மெயின்டேன் பண்றேன்னு என்னால நம்பவே முடியல. நீ எப்போ இவ்வளவு நல்ல பையனா மாறின? இது உனக்கு சுத்தமா சூட்டாகவே இல்ல" என்று அவன் மூக்கை தன் ஆட்காட்டி விரலால் அவள் தட்ட, தன் முகத்தை பின்னோக்கி இழுத்தான் அர்னவ்.

"என்ன்னன? நான் ஒன்னும் உன்னை கடிச்சி சாப்பிட்டுட மாட்டேன்... (என்று சற்று நிறுத்தி) கடிச்சு சாப்பிட மாட்டேன்னு சொல்ல முடியாது..." என்றாள்.

அவனது விழிகள் பெரிதானத்தை பார்த்து, அவள் கலகலவென சிரித்தாள்.

"டேமிட்... என்னோட கிளாஸ் பசங்க என்னை டின்டின்னு கூப்பிட்டதுக்காக அவங்களை மிரட்டி பயப்பட வச்சியே, அதே மாதிரி தான் நீ இன்னமும் இருப்பேன்னு நான் நெனச்சேன்" என்று வாய்விட்டு சிரித்தாள்.

தன் சிரிப்பை அடக்க அரும்பாடுபட்டான் அர்னவ். அதையெல்லாம் எப்படி அவனால் மறந்து விட முடியும்?

அப்போது குஷியை ரத்னா அழைத்தது அவர்கள் காதில் விழுந்தது. அங்கிருந்து சிரித்தபடி சென்றாள் அவள்.

அவளது வகுப்பிற்கு சென்று, அவள் வகுப்பில் படிக்கும் மாணவர்களை மிரட்டிய அந்த நாளை எண்ணியபடி, சிரித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான் அர்னவ்.

அன்று...

போர்ட் பிளேயர்

அழுது கொண்டிருந்த குஷியை ரத்னாவும், கரிமாவும் சமாதானப்படுத்த முயன்று கொண்டு இருந்தார்கள்.

"இந்த அல்லவ்வால தான் எல்லாரும் என்னை டின்டின்னு கூப்பிட்டு கிண்டல் பண்றாங்க. இவன் தான் எல்லார் முன்னாடியும் அந்த பேர் சொல்லி என்னை கூப்பிட்டான். இப்போ எல்லாரும் என்னை அப்படியே கூப்பிடுறாங்க" என்றாள் அவள் கோபமாய்.

"அரு, அவ சின்ன பொண்ணு. எதுக்காக ஸ்கூல்ல அவளை இந்த மாதிரி பேர் வச்சி  கூப்பிடுற?" என்றார் ரத்னா.

"உன்னை யாரு அந்த மாதிரி கூப்பிட ஆரம்பிச்சது?" என்றான் அர்னவ்.

"ரோஹித்..."

"யார் அவன்?"

"போ... எல்லாம் உன்னால தான். நான் உன்கிட்ட பேசமாட்டேன்..." அங்கிருந்து ஓடிப் போனாள் குஷி.

அடுத்த நாள், பூனை குட்டி போல் இருக்கும் குட்டி பயல்களை மிரட்ட, தன்னுடன் படிக்கும் மாணவ படையுடன் அவள் வகுப்பிற்கு சென்றான் அர்னவ்.

"ரோஹித் யாரு?" என்றான் மிடுக்காக.

குஷியின் வகுப்பு மாணவர்கள் அவர்களை பார்த்து நடுங்கத் தொடங்கினார்கள். ரோஹித் யார் என்று யாரும் கூறவில்லை. அர்னவ் குஷியை பார்க்க, அவள் ரோஹித்தை நோக்கி தன் ஆட்காட்டி விரலை நீட்டினாள்.

"நீ தான் குஷியை டின்டின்னு கூப்பிட்டியா?"

"நீங்க அந்த பேர் சொல்லி அவளை கூப்பிட்டப்போ, அவ சிரிச்சா அண்ணா. அதனால தான் கூப்பிட்டேன்" என்றான் கிட்டத்தட்ட அழுது விடும் நிலையில் இருந்த ரோஹித்.

"நானும் நீயும் ஒண்ணா? நான் அவளை என்ன பேர் சொல்லி வேணும்னாலும் கூப்பிடுவேன். அதுக்காக நீயும் அதையே செய்யலாம்னு அர்த்தமில்ல. புரிஞ்சுதா?"

சரி என்று தலையசைத்தான் ரோஹித்.

"யாராவது குஷியை கிண்டல் பண்ணாலோ, அவகிட்ட வம்பு பண்ணாலோ, எல்லாரையும் காலி பண்ணிடுவேன்...  ஜாக்கிரதை" என்று அனைவரையும் மிரட்டிவிட்டு, தன்னை ஒரு ஹீரோயின் ரேஞ்சுக்கு பெருமையுடன் நினைத்துக் கொண்டிருந்த குஷியிடம் சென்ற அர்னவ்,

"இப்போ உனக்கு சந்தோஷமா?" என்றான்.

வழக்கம் போல் அவன் கழுத்தை சுற்றி வளைத்து அவனுக்கு முத்தமிட்டாள் குஷி.

அந்த சம்பவத்திற்கு பிறகு குஷியை டின்டின் என்று அழைக்க யாருக்கும் தைரியம் வரவில்லை தான். ஆனால், அர்னவ்க்கு அவனது நண்பர்கள், கிஸ்ஸி ஆஃப் டின்டின் என்று ஒரு புதிய பெயரை சூட்டிவிட்டார்கள். இப்பொழுதும் கூட, முகநூலில் அவனுடன் தொடர்பில் இருக்கும் நேவி பள்ளி நண்பர்கள், அவனை கிண்டலாய் அந்த பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.

அந்த மாஃபியா சம்பவத்தை நினைத்து புன்னகைத்துக் கொண்டான் அர்னவ். மறக்கவே முடியாத இனிமையான நாட்கள் அவை. அவளுக்கு இன்னும் கூட அவையெல்லாம் ஞாபகம் இருக்கிறது என்றால், அவர்களது திருமண பேச்சும் அவளுக்கு நினைவில் இருக்குமா? இப்பொழுது அவன் எதற்காக அதைப் பற்றி யோசிக்கிறான்? அவனிடம் பதில் இல்லை.

................

குஷியின் குடும்பம் சென்னையில் குடியேறினார்கள். ஷஷி தெற்கு கடற்படை அலுவலகத்தில் சேர்ந்தார். அரவிந்தன் குடும்பத்தின் அருகிலேயே வந்துவிட்டது குறித்து அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

குஷியின் கல்லூரி சேர்க்கையும் முடிவடைந்தது. கல்லூரியில் சேர்ந்தது மட்டும் அல்லாது, தனது வகுப்பில் இரண்டு தோழிகளையும் பெற்றாள் குஷி. அவர்கள், லாவண்யா மற்றும் அர்ச்சனா. அவளைப் போலவே அவர்களும் கூலாக இருந்தார்கள். அவர்களை குஷிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கு இருந்த ஒரே பிரச்சனை போக்குவரத்து தான். அவளுக்கு இருசக்கர வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்கு எப்பொழுதும் அவளது தந்தை உடன்பட்டதே இல்லை.

அவளை கல்லூரியில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பும் முன், லாவண்யாவை பார்த்து புன்னகை புரிந்தான் நந்து கிஷோர். அதை கவனித்தாள் குஷி.

"உனக்கு நந்துவை தெரியுமா?" என்றாள் லாவண்யாவிடம்.

"நான் பிஎஸ்சி படிக்கும்போது, என்னோட காலேஜ்ல அவர் சீனியர்"

"அப்படின்னா நீ பிஎஸ்சி இந்த காலேஜ்ல படிக்கலையா?"

"இல்ல, நான் எஸ்டிஎம் காலேஜ்ல படிச்சேன். நந்து கிஷோர் உன்னோட சைல்டுஹுட் ஃப்ரண்ட் தானே?"

"இல்ல இல்ல, நந்து என்னோட ஃப்ரெண்ட் இல்ல. அவனோட அண்ணன் தான் எனக்கு சைல்டுஹுட்  ஃப்ரெண்ட். அல்லவ்... ஐ மீன் அர்னவ்"

"அவர் இந்த காலேஜோட ஓல்டு ஸ்டுடென்ட்னு கேள்விப்பட்டேன்"

"ஆமாம்... நீ எங்கிருந்து வர?"

"நானும் அர்ச்சனாவும் காலேஜ் ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கோம்"

"ஃபேமிலியை விட்டு பிரிஞ்சி இருக்கிறது கஷ்டமா இருக்கும் இல்ல?" என்றாள் கவலையுடன் குஷி.

"எனக்கு அம்மா, அப்பா கிடையாது. என் மாமாவோட பொறுப்புல தான் இருக்கேன்"

"ஐ அம் சாரி, லாவன்யா..."

"பரவாயில்லை விடு. இதுக்காக எல்லாம் வருத்தப்படாதே, வா கிளாசுக்கு போகலாம்"

அவளை அழைத்துக் கொண்டு வகுப்பிற்கு சென்றாள் லாவண்யா.

ரத்னா மஹால்

கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய குஷி, ரத்தின மஹாலுக்கு வந்தாள். வரவேற்பறையில் அமர்ந்து, காபி குடித்துக் கொண்டிருந்தான் அர்னவ். அவளைப் பார்த்து சம்பிரதாயமாய் புன்னகைத்தான் அவன். அவனிடம் ஓடிச் சென்ற குஷி, அவன் கையில் இருந்த காபி குவளையை பிடுங்கினாள், அவனை திகைக்க செய்து. அவள் அந்த காப்பியை குடிக்க முயன்ற போது,

"அதுல சக்கரை ரொம்ப கம்மியா இருக்கும்" என்றான் அவன்.

அதை குடித்த குஷி,

"எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே..."  என்று அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.

அவன் முகம் போன போக்கை பார்த்து சில்லறையை சிதறவிட்டது போல் சிரித்தாள் அவள். அந்த குவளையை அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, சமையலறையில் இருந்து வெளியே வந்த ரத்னாவிடம் சென்று, அவரை அணைத்துக் கொண்டாள்.

அவள் குடித்துவிட்டு கொடுத்துச் சென்ற காப்பியை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அர்னவ். அதை குடிப்பதா வேண்டாமா என்ற பட்டிமன்றம் அவன் மனதிற்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த காப்பியை வீணாக்க அவனுக்கு மனம் வரவில்லை. அதே நேரம், அதை குடிக்காமல் விட்டால் அவள் என்ன நினைப்பாளோ...! இறுதியாய் அதை குடித்தான்.

"நான் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன் ஆன்ட்டி. நந்துவை என்கூட அனுப்புனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். ஓகே?"

"அம்மா, அதை நான் தான் சொல்லணும்" என்றான் அங்கிருந்த நந்து கிஷோர்.

"நமக்குள்ள இதெல்லாம் பெரிய விஷயமா?" என்று அவனை நோக்கி தன் கையை உயர்த்தினாள் குஷி,

அவளுடன் ஹைஃபை தட்டிக் கொண்டு,

"நிச்சயமா இல்ல... நான் அழகான பொண்ணுங்க கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்க மாட்டேன்" என்றான் அவன்.

"நீ ரொம்ப ஜாலியா பேசுற நந்து. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள் குஷி.

"ஐ அம் ஹானர்டு" என்று அவள் முன் தலை தாழ்த்தினான் நந்து கிஷோர்.

எதற்காக அவன் அவளிடம் இப்படி வழிந்து கொண்டே இருக்கிறான் என்று எரிச்சல் அடைந்தான் அர்னவ்.

"ஆன்ட்டி, எனக்கு ரெண்டு சூப்பர் கூல் ஃபிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. அதோட மட்டுமில்ல, இரண்டு ப்ரோஃபஸர்ஸ் இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும், ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்காங்க"

"ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா?"

"ஆமாம், ஷியாம் சாரும், அஞ்சலி மேடமும்"

அவர்கள் பெயரை கேட்டு நிமிர்ந்து அமர்ந்த அர்னவ், ரத்னாவை ஏறிட்டான்.

"ஷியாம் சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்றார் ரத்னா.

"ஓ எஸ்... அஞ்சலி மேடம் தான் அவரோட ஒய்ஃப். அவங்க ரெண்டு பேரும் ஸ்டுடென்ட்ஸ்கிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. அந்த மாதிரி ப்ரொஃபசர்ஸ் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம்"

தனக்குள் எழுந்த மன உலைவை விழுங்க கடினப்பட்டான் அர்னவ். அவன் ஏதோ நினைவுகளில் தொலைந்து விட்டது நன்றாகவே புரிந்தது. ஏக்க பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றார் ரத்னா, அனைவருக்கும் காப்பி கொண்டு வர.

"இந்தா குஷி, காபி எடுத்துக்கோ" என்றார் அவர்.

அதை சாப்பிட்ட குஷி, ஃபிளாட் ஆனாள் என்று தான் கூற வேண்டும்.

"வாவ்... என்ன காபி ஆன்ட்டி...! எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும்...( அந்த காபியின் மணத்தை உள் இழுத்த அவள்) உனக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன் அல்லவ். சக்கரை கம்மியாக குடிக்கிறேன்னு நீ உலகத்தோட பெஸ்ட் டேஸ்டை மிஸ் பண்ற. சக்கரை இருக்கிற காபிக்கும் இல்லாத காபிக்கும் எவ்வளவு வித்தியாசம்...!" என்றாள் கவலையோடு.

"அம்மா பிரிப்பர் பண்றது, ஸ்பெஷல் டிகிரி காபி" என்றான் நந்து கிஷோர்.

"செம டேஸ்டா இருக்கு. நீங்க எல்லாத்தையும் இவ்வளவு சூப்பரா சமைச்சா, நான் எங்க வீட்டுக்கு போகாம இங்கேயே இருந்துடுவேன்" என்றாள் குஷி.

"யூ ஆர் மோஸ்ட் வெல்கம்" என்றார் ரத்னா.

"இட்ஸ் அவர் பிளஷர்" என்றான் நந்து கிஷோர்.

அர்னவை பார்த்த குஷி,

"நீங்க என்ன சார் சொல்றீங்க?இப்பவாவது உங்க வாயை திறந்து பேசுங்க. பேசினா அப்படி ஒன்னும் உன் வாயில இருக்குற முத்து கீழே விழுந்துடாது" என்றாள் தன் பல்லை கடித்துக் கொண்டு.

"இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நீயாச்சு உன் ஆன்ட்டி ஆச்சு..."

"நான் நீ என்ன நினைக்கிறன்னு கேட்டேன்"

"அது உன்னோட விருப்பம்"

"நான் உன்னை கேட்டேன்னு சொன்னேன்"

"உனக்கு விருப்பம் இருந்தா நீ இங்க தங்கலாம்"

ரத்னாவை பார்த்த குஷி,

"இன்னொரு தடவை அவன் *என்னோட விருப்பம்* னு சொன்னான், இதுக்கப்புறம் நான் இங்க வரவே மாட்டேன்" என்றாள் கோபமாய்.

"குஷி, நீ அவனை தப்பா எடுத்துக்காத எனக்காக நீ இங்க வரமாட்டியா?" என்றார்.

"நானும் உனக்காக இங்க இருக்கேன் இல்ல...?" என்றான் நந்து கிஷோர்.

*நீ?* என்பது போல் அவள் அர்னவை பார்க்க, அவன் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டான். எழுந்து நின்று தரையை தன் காலால் உதைத்து விட்டு,

"நான் போறேன்" என்று அவனைப் பார்த்து முறைத்தபடி அங்கிருந்து சென்றாள் அவள்.

ரத்னாவும் நந்துகிஷோரூம் ஒருவரை ஒருவர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

தன் அறைக்கு வந்த குஷி, தன் கட்டிலில் அமர்ந்தாள். அர்னவின் விசித்திரமான அணுகுமுறை அவளை கலவரத்தில் அழுத்தியது. அவனிடம் அவள் எதிர்பார்த்தது இதுவல்ல. அவன் இந்த அளவிற்கு மாறிவிட்டான் என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. கல்லூரியில் பயின்ற காலத்தில் எவ்வளவு இனிமையாக அவளிடம் பேசுவதை வழக்கமாய் வைத்திருந்தான்...! அவன் இளங்கலை பட்டம் படித்து முடிக்கும் தருவாயில் அவளிடம் பேசுவதை நிறுத்தியவன், அமெரிக்கா சென்ற பிறகு சுத்தமாய் தன் தொடர்பை அறுத்துக் கொண்டான். அது பற்றி அவள் பலமுறை அரவிந்தனிடமும் ரத்னாவிடமும் கேட்டபோது கூட அவர்கள், ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி பேச்சை மாற்றினார்கள். அவனுக்கு என்ன தான் நிகழ்ந்தது? அல்லது அவன் வாழ்க்கையை மொத்தமாய் புரட்டிப் போடும் விதத்தில் என்ன நடந்தது? எப்படி இருந்த போதும், ஒரு மனிதன் இந்த அளவிற்க்கா மாறிவிட முடியும்? அவளது அம்மா அப்பாவிடம் அவன் சகஜமாகத் தானே பேசுகிறான்? அப்படி இருக்கும் பொழுது, அவளிடம் மட்டும் ஏன் பேசுவதை தவிர்க்கிறான்? ஏதோ இருக்கிறது. அதை எப்படி தெரிந்து கொள்வது? ரத்தினவோ நந்து கிஷோரோ அவள் கேட்டால் கூறுவார்களா?

தன் இதயத்தில் அழுத்தத்தை உணர்ந்தாள் குஷி. இந்தியாவின் பலதரப்பட்ட நகரங்களில் அவள் வசித்திருக்கிறாள். பலதரப்பட்ட மனிதர்களுடன் கலந்து பழகி இருக்கிறாள். அவர்களில் பலர் இன்னும் கூட அவளுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். இது தான் முதல் முறை, அவளை ஒருவன் தவிர்ப்பது. அந்த ஒருவன் தான் அவளுடைய ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ஃபிரென்ட். அவன் அவளை தவிர்ப்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை. ஏனென்றால், அர்னவ் மட்டும் தான் அவளுடன் ஐந்தாண்டுகளுக்கு ஒரே இடத்தில் ஒன்றாய் இருந்து, அவளுடன் ஆழமான நட்பை பகிர்ந்து கொண்டவன். அவர்கள் பிரிந்த பிறகும் கூட அவளுடன் தொடர்பில் இருந்தவன்.

ஏராளமான எதிர்பார்ப்புகளை தேக்கி, அவள் அவனைக் காண வந்திருந்தாள். அவளை சந்தித்த பிறகு அவன் பழையபடி அவளிடம் பழகுவான் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாள். அவன் இப்பொழுது இருப்பதை பார்க்கும் போது அவன் உண்மையிலேயே அவளுடன் அப்படியெல்லாம் அட்டகாசம் செய்த அதே அர்னவ் தானா என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது.

அவளது மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த புகைப்பட ஆல்பம் அவள் கண்ணில் பட்டது. அதை எடுத்து அதன் பக்கங்களை திருப்ப துவங்கினாள்... பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

அன்று...

ஹேவ்லாக் தீவு, அந்தமான்...

அரவிந்தனுக்கும் ஷஷிக்கும் ஒரே நேரத்தில் விடுமுறை கிடைத்தது. அப்படி கிடைப்பது அரிது என்பதால், குடும்பத்துடன் இணைந்து, போர்ட் பிளேயரில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஹேவ்லாக் தீவுக்கு செல்லலாம் என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.

அந்தமான் தீவுகள், இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடம் மட்டும் அல்ல. எழில் கொஞ்சும் விசித்திரமான பல கடற்கரைகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம். சுத்தமாய் அலைகளே இல்லாமல் ஏரி போல் காட்சியளிக்கும் கடற்கரையை கண்டு களித்துவிட்டு நாம் நடக்க துவங்கினால், வெறும் இரண்டே கிலோமீட்டர் தூரத்தில், நான்கு அடிகளுக்கு அலைகள் எழும் கடற்கரையை அங்கு காண முடியும். அப்படிப்பட்ட இயற்கையின் அதிசயம் தான் அந்தமான்...!

அப்படிப்பட்ட பெரிய அலைகளைக் கொண்ட தீவு தான் ஹேவ்லாக். ஆனால், அவை சீற்றமில்லாத அலைகள். கடலில் இறங்கி நின்றால், நம்மை சீற்றமில்லாத பெரிய அலைகள் இதமாய் தடவிச் செல்லும். அலைகள் நம்மை இழுத்துச் சென்று விடுமோ என்ற பயம் இல்லாமல், பிள்ளைகள் அந்த அலைகளில் குதித்து ஆடுவதை நாம் அங்கு காணலாம். அதனால் தான், அந்தமானின் மிக முக்கியமான டூரிஸ்ட் அட்ராக்ஷனாக விளங்குகிறது ஹேவ்லாக்.

அந்த தீவுக்கு அவர்கள் ஒரு விசை படகில் பயணம் மேற்கொண்டார்கள். அந்த பயணத்தை குஷி வெகுவாய் ரசித்தாள். ஏனென்றால், வழி நெடுக நிறைய டால்ஃபின்கள் துள்ளி குதித்த வண்ணம் இருந்தது. அது பார்ப்பவர் மனதை கொள்ளை கொண்டது. அப்படி என்றால், சின்ன பெண்ணான குஷியை பற்றி கேட்கவா வேண்டும்? அவளும் சந்தோஷத்தில் அந்த டால்ஃபின்களை போலவே துள்ளி குதித்தாள்.

ஆனால் கடலில் விளையாடலாம் என்று அவளை அர்னவ் அழைத்த போது, மிகப் பெரிதாய் எழுந்த அலைகளை பார்த்து அவள் திகில் அடைந்தாள். அந்த அலையில் அவள் நிச்சயம் மூழ்கிப் போவாள் என்று பயந்தாள்.

"டின்டின் வா போலாம்"

"நான் வரமாட்டேன்...  அலையெல்லாம் ரொம்ப பெருசா இருக்கு"

"நான் தான் இருக்கேன் இல்ல?"

"இல்ல, நான் வரல"

அவள் முடியாது என்று கூறிய பிறகும், அவளை தூக்கிக் கொண்டு கடலை நோக்கி நடந்தான் அவன். அலைகளைப் பார்த்து பயந்த குஷி, அவன் கழுத்தை இறுக்கமாய் கட்டிக்கொண்டு, தொண்டை கிழிய கத்த துவங்கினாள். ஆனால் சில நிமிடங்களிலேயே அவள் அந்த அலைகளில் அவனுடன் சேர்ந்து ஆட்டம் போட துவங்கி விட்டாள். அவளை ஒரு நிமிடம் கூட கீழே இறக்கி விடவே இல்லை அர்னவ். அவள் பயந்துவிட்டால், அது அவர்களுடைய மொத்த சுற்றுலாவையும் பாழாக்கி விடும் என்று அவனுக்கு தெரியும்.

அதன் பிறகு அவர்களை கடலை விட்டு வெளியே கொண்டு வருவதற்குள் அவர்களது பெற்றோர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. அவர்கள் வரமாட்டேன் என்று கடலிலேயே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த கடற்கரை, அவர்களது சிரிப்பொலியால் நிரம்பியது.

அந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்த குஷி, தனது கைபேசியை எடுத்து அர்னவுக்கு ஃபோன் செய்தாள். தன் கைபேசியில் ஒளிர்ந்த புதிய எண்ணை பார்த்து முகம் சுருக்கினான் அர்னவ். கடைசி மணியில் அந்த அழைப்பை ஏற்று,

"யார் பேசுறது?" என்றான்.

பேசாமல் அமைதியாய் இருந்தாள் குஷி. அவளுடைய கைபேசி எண் கூட அவனிடம் இல்லை என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காததால், யாரோ ஒரு பெண் தான் அவனுக்கு ஃபோன் செய்கிறாள் என்று அவன் தவறாய் நினைத்தான். அவன் அப்படி நினைத்தது தவறல்ல. ஏனென்றால் அப்படிப்பட்ட அழைப்புகள் அவனுக்கு வருவது சகஜமாய் இருந்தது. அதனால் வழக்கம் போல், தனக்கு ஃபோன் செய்த அந்த நபரை  திட்டி தீர்த்துவிட தயாரானான் அர்னவ்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top