43 தொலைந்த இடைவெளி
43 தொலைந்த இடைவெளி
*நீ சொல்றது சரி தான். உனக்கு என்னை பத்தி தெரிஞ்சதை விட நான் ரொம்ப பலவீனமானவன். என்னோட கட்டுப்பாட்டை இழக்க செய்ய, நீ என் பக்கத்துல வரணும்னு கூட அவசியமில்ல. நீ ஒரு ஸ்மைல் பண்ணாலே போதும். அந்த உண்மையை ஒத்துக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, உன் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நான் உன்னை காதலிக்கிறேன்* என்ற அவனது வார்த்தைகளைக் கேட்டு மலைத்து நின்றாள் குஷி.
அவளது பிடிவாதத்தை மீறிய ஒரு புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது. தன் மனம் கவர்ந்தவர்களுக்காக தனது ஈகோவை எல்லாம் ஒதுக்கி வைக்கும் போது ஒரு ஆண் அழகாக தெரிகிறான்.
*அவன் அவ்வளவு பலவீனமானவனா இருந்தா, நான் அவன்கிட்ட நெருங்கி போன போது, எதுக்காக அவன் என்கிட்ட இருந்து விலகிப் போனான்? நான் அவன்கிட்ட போனா, அவன் உண்மையிலேயே தன்னுடைய கண்ட்ரோலை இழந்துடுவானா? என்னை அவன் அந்த அளவுக்கா காதலிக்கிறான்? அவனோட வார்த்தையை அவன் எந்த அளவுக்கு காப்பாத்துறான்னு பார்க்கலாம்* என்று எண்ணினாள் குஷி.
தான் கூறியது படியே, அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை அர்னவ். தன் சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாய் நடந்து கொண்டான். அது அவளுக்கு பிடித்திருந்தது என்று கூறுவதற்கில்லை.
தங்கள் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் குஷி. வழக்கம் போலவே அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் அர்னவ். அவன் அவளைப் பார்த்து சிரிக்கும் வரை, அவனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் அவளை பார்த்து புன்னகைத்தவுடன், தன் முகத்தை திருப்பிக் கொண்டாள், அது தனக்கு முக்கியமில்லை என்பது போல.
முகம் கை கால்களை கழுவிக்கொண்டு தரை தளம் சென்றான் அர்னவ். அவன் எங்கே செல்கிறான் என்பதை தெரிந்து கொள்ள, மெல்ல அவனை பின் தொடர்ந்தாள் குஷி. அவன் சமையலறைக்குள் நுழைவதை கண்ட அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளது யூகம் சரி தான். அவன் அவர்கள் இருவருக்கும் தேநீர் தயாரித்து கொண்டு வருவான்.
அவள் நினைத்ததுபடியே இரண்டு குவளை தேனீருடன் வந்தான் அர்னவ். அதில் ஒன்றை அவளிடம் நீட்டினான். அவனை பார்க்காமல் அதை அவள் பெற்றுக் கொண்டாள். அவளது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. இது அவர்களின் வாடிக்கையாகி போனது. அவன் தயாரிக்கும் தேனீருக்கு அவள் அடிமையாகி போனாள்.
தான் செய்து கொடுத்த சத்தியத்தை உயிர் போல் காத்தான் அர்னவ். ஆனால் அவளை தொந்தரவு செய்வதில்லை என்ற அவனது நிலைப்பாட்டில் குஷிக்கு உடன்பாடு இல்லை. அவனது நடவடிக்கைகள் அவளுக்கு சலிப்பை தந்தது. அதைப்பற்றி யோசித்தபடி படித்துக்கொண்டிருந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த அவள், புத்தகத்தை நெஞ்சில் வைத்த படி அப்படியே உறங்கிப் போனாள். அவளை தன் கைகளில் அள்ளி எடுத்த அவன், கட்டிலில் படுக்க வைத்தான். ஒரு போர்வையால் அவளை போர்த்தி விட்ட போது, அவள் தூக்கத்தில் அவனது சட்டையை பற்றி கொண்டாள். புன்னகையுடன் அவள் அருகில் படுத்துக் கொண்டான் அர்னவ். இன்னும் ஒரே ஒரு பரீட்சை தான் மீதம் இருக்கிறது. அது நாளையோடு முடிவு பெறுகிறது. யோசித்தபடி உறங்கிப் போனான். மெல்ல கண்களை திறந்த குஷி, அவனை கண்ணிமைக்காமல் ரசித்தாள்.
*எப்படி நிம்மதியா தூங்குது பாரு...! பெரிய சாமியார் மாதிரி செஞ்சு கொடுத்த சத்தியத்தை காப்பாத்திகிட்டு இருக்கு. சரியான போர். இரு இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் தான் இருக்கு. எனக்கு தெரியும், அதுக்கப்புறம் நீ எப்படியும் என் கிட்ட வருவ. நான் யாருன்னு அப்போ உனக்கு காட்டுறேன்"
லாவண்யா மற்றும் அர்ச்சனாவுடன் தான் வாங்கி வந்த புது நீல நிற புடவையை பற்றி யோசித்து புன்னகை புரிந்தாள். நீலம் அர்னவ்க்கு மிகவும் பிடித்த நிறம். அவன் மீது மந்திர பிரயோகம் செய்யும் திறன் படைத்தது. லாவண்யா மற்றும் நந்தாவின் திருமண வரவேற்ப்பின்போது, அவளை நீல நிற புடவையில் கண்ட நேரம், அவன் தன்னை மறந்து நின்றதை அவளால் எப்படி மறக்க இயலும்?
மறுநாள் காலை
குஷி நினைத்தது சரி தான். நீல நிறம் அவன் மீது மந்திர பிரயோகம் தான் செய்தது. அது அவனது மூச்சை சிறிது நேரம் நிறுத்தி, அவனது பார்வையை அவள் மீது ஊன்றச் செய்தது. அவனது கால்கள் நகரவும் மறுத்தன. அவனது நிலைகுத்திய பார்வையை உணர்ந்தாள் குஷி. உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட அவள், அவனை ஒரு முறையேனும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
தன் இரண்டு மருமகள்களையும் ஒரே நிறப் படவையில் பார்த்த ரத்னா, குதுகலமானார்.
"ரெண்டு பேரும் சூப்பரா இருக்கீங்க"
"இன்னைக்கு குரூப் போட்டோ எடுக்க போறாங்க மா. ப்ளூ கலர் ஸாரி தான் டிரஸ் கோட்"
"அப்படின்னா இன்னைக்கு நீங்க வர லேட் ஆகுமா?"
"இன்னைக்கு தான் எங்களுக்கு லாஸ்ட் எக்ஸாம். அர்ச்சனாவுக்கு ரூமை வெக்கேட் பண்ண ஹெல்ப் பண்ணிட்டு, கொஞ்சம் லேட்டா வருவோம்"
"சரி, லேட் ஆகும்னா, எனக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க"
"சரிங்க ஆன்ட்டி"
அவர்கள் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் அர்னவ். அவனுக்கு பிடித்த நீல நிற புடவை கட்டி, அவனை கொன்று கொண்டிருந்த அவனது மனைவி மீது அவனது பார்வை நிலை குத்தி நின்றது. அன்று அவர்களுடைய பரிட்சை முடிவடைவதால், அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அவன் செய்திருந்தான். இப்பொழுது அதை எப்படி செயல்படுத்துவது என்று அவனுக்கு புரியவில்லை. அதை செய்ய தன் அம்மாவின் உதவியை நாடுவது என்று முடிவு செய்தான்.
குஷி லாவண்யாவுடன் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள். பரிட்சையை எழுதி முடித்த பின், அர்ச்சனாவிற்கு கண்ணீருடன் விடையளித்தாள். அவளுக்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. வீட்டில் அவளுக்கு ஏதோ ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கும் என்று அவளுக்கு தெரியும்.
ரத்னா மஹால்
அர்னவ்வின் திட்டம் ரத்னாவிற்கு மகிழ்ச்சி அளித்தது. அதைப்பற்றி அவன் ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தான். அதை செய்ததற்காக தன் மகனை அவர் மனதார பாராட்டினார்.
"தட்ஸ் கிரேட் அரூ... இப்ப சொல்லு, என் மருமகளை ஹனிமூனுக்கு எங்க கூட்டிக்கிட்டு போக போற?"
அவரிடம் தங்கள் விமான டிக்கெட்டுகளை கொடுத்தான் அர்னவ். அந்த டிக்கெட்டுகள் போர்ட் பிளேயருக்கு எடுக்கப்பட்டிருந்ததை பார்த்த அவரது ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அங்கு தானே அவனும் குஷியும் பல வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டார்கள்...! இதமாய் புன்னகைத்தார்.
"மறுபடியும் அந்தமான் பீச்செல்லாம் உங்க சிரிப்பை கேட்க போகுதா?"
அவர் கூறியதை கற்பனையில் நிறுத்தி புன்னகை புரிந்தான் அர்னவ். அப்பொழுது குஷியும் லாவண்யாவும் வருவதை பார்த்து அவர்கள் இருவரும் துணுக்குற்றார்கள். அவள் அணிந்திருந்த நீல நிற புடவை மீண்டும் அவனை கனவுலோகத்திற்கு அழைத்துச் சென்றது. எப்படித்தான் இந்தப் பெண் புடவையில் இவ்வளவு அழகாய் இருக்கிறாளோ...! அவனால் தன் கண்களை அவள் மீது அகற்றவே முடியவில்லை. தன்னை மறந்து நின்றான். ரத்னாவின் கையில் இருந்த டிக்கெட்டை பார்த்த லாவண்யா,
"இது என்ன மா?" என்றாள்.
தன் புருவத்தை உயர்த்தி அர்னவ்வை பார்த்தார் ரத்னா. அவன் கொடுங்கள் என்பது போல் செய்கை செய்தான். அந்த டிக்கெட்டுகளை அவளிடம் கொடுத்தார் ரத்னா. அதைப் பார்த்த லாவண்யா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து, குஷியை அணைத்துக்கொண்டாள்.
"வாவ்! நீ அந்தமானுக்கு போக போற... இது ரொம்ப நல்ல பிளான்"
வியப்போடு அவனை ஏறிட்டாள் குஷி. அவளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தான் அவன். அவள் அது குறித்து எந்த வித பாவமும் காட்டாமல் இருந்ததை பார்த்து அவனது முகபாவம் மாறியது.
"குஷி ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. வேண்டிய பிரிப்பரேஷன்சை செஞ்சுக்கோ" என்றார் ரத்னா.
குஷி அவரைப் பார்த்து செயற்கையாய் புன்னகைக்க, அது அவன் தலைக்குள் அலாரம் அடித்தது. அவர்கள் இன்னும் தங்கள் பிரச்சனையை முடிக்கவே இல்லையே. அவள் என்ன நினைக்கிறாள் என்பதை பற்றி தெரியாமல் அவன் எப்படி இந்த திட்டத்தை வகுக்க முடியும்? அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்பு தேன்நிலவா? அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று அவன் நினைக்கவே இல்லையே...! தேன் நிலவிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவளை சமாதானப்படுத்தி விடலாம் என்று எண்ணுகிறானோ?
"நாங்க இன்னைக்கு கல்யாணத்துக்கு போறோம். அப்பாவுக்கும், ஷஷி அண்ணனுக்கும், ராவ் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அப்படிங்கறதால நாங்க நாளைக்கு காலைல தான் வருவோம்" என்றார் ரத்னா.
"மழை வர்ற மாதிரி இருக்கேம்மா..." என்றாள் லாவண்யா.
"ஆமாம். ஆனா போகாம இருக்க முடியாது. குஷிக்கு அவங்களை ரொம்ப நல்லா தெரியும்"
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"சரி மா, நீங்க போயிட்டு வாங்க. இன்னைக்கு வெதர் ரொம்ப சூப்பரா இருக்கு. எக்ஸாம் எல்லாம் முடிஞ்சாச்சு. அதனால நான் செம தூக்கம் தூங்க போறேன்" என்றாள் லாவண்யா.
"சாப்பிட்டுட்டு தூங்கு. எல்லாம் ரெடியா இருக்கு"
"எழுந்தா சாப்பிடுறேன் மா"
அவர்கள் கார் ஹாரன் சப்தத்தை கேட்டார்கள்.
"அப்பா வந்துட்டாருன்னு நினைக்கிறேன். நான் கிளம்புறேன். கரீமாவையும் கூட்டிக்கிட்டு போறோம். ஷஷி அண்ணன் நேரா அங்க வந்துடுறேன்னு சொல்லிட்டாரு"
"சரி மா" என்றான் அர்னவ்.
ரத்னா விரைந்து சென்றார். தன்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்த குஷியை பார்த்த அர்னவ், தன் புருவம் உயர்த்தினான்.
"இந்த தடவையும் என்னோட விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்க நீ நினைக்கல இல்ல? நீ பிளான் பண்ணா நான் உன் கூட வந்துடுவேன்னு நினைச்சியா?"
அவள் தங்கள் அறையை நோக்கி செல்வதை பார்த்த அவன், பெருமூச்சு விட்டு அவளை பின்தொடர்ந்தான். தனது பையை தங்கள் அறையில் வைத்துவிட்டு அவள் வெளியே செல்ல நினைத்தபோது, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான். அவன் கையை உதறிவிட்டு மாடிக்கு சென்றாள். அவள் மனநிலை சரியில்லாத போது அவள் அங்கு செல்வது தானே வழக்கம்...!
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவளுக்கு சற்று நேரம் அளித்தான் அவன். அவனுக்கு தெரியும், சிறிது நேரம் அவள் மாடியில் அமர்ந்து கடலை பார்த்துக் கொண்டிருந்தால் அவள் மனம் சாந்தமடையும். ஆனால் எதிர்பாராத விதமாய் தூரத் துவங்கியது. அதனால் அவனும் மாடிக்கு விரைந்தான். அங்கு அவள் மழையில் நனைந்து கொண்டிருப்பதை கண்ட அவன்,
"குஷி, வா போகலாம்" என்றான்.
அவள் அமைதி காத்தாள்.
"குஷி நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. உன்னை டாமினேட் பண்றதுக்காக இந்த ட்ரிப்பை நான் பிளான் பண்ணல. உன்னை சர்ப்ரைஸ் பண்ண தான் செஞ்சேன்"
அப்படியா? என்பது போல் அவள் அவனை பார்க்க,
"என்னை நம்பு, நான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த ட்ரிப்பை ப்ளான் பண்ணிட்டேன். அதை நான் உன்கிட்ட சொல்லல. ஏன்னா உனக்கு எக்ஸாம் முடியட்டும்னு காத்திருந்தேன்"
குஷி ஏதோ சொல்ல முயல அவளை தன் கையை காட்டி நிறுத்தினான்.
"ஆமாம், நான் உன்னை குறைச்சி தான் எடை போட்டுட்டேன். அதுக்காக ஐ அம் சாரி. நான் உன்னை விட்டுட்டு போகணும்னு நினைக்கல. உன்னை தவிர்க்கணும்னு எப்பவும் நான் நெனச்சதே இல்ல. நான் என் கட்டுப்பாட்டை இழந்துடுவேன்னு பயத்துல தான் அப்படி செஞ்சேன். உண்மையிலேயே நீ என் பக்கத்துல வந்தா, நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் தவிச்சேன். என்னோட கெட்ட ஆசைகளை என் மனசுல போட்டு பூட்டி வைக்க என்னால முடியல. எந்த அளவுக்கு நான் உன் கூட இருக்கணும்னு விருப்பப்பட்டேன்னு உனக்கு தெரியாது. ஆனா, அதை செஞ்சு உன்னை டைவர்ட் பண்ண வேண்டாம்னு நினைச்சேன். அதனால தான் தூரமா ஓடிப் போகணும்னு நினைச்சேன். நான் சொல்றது உண்மை. எனக்கு நீ தான் எல்லாமே... என்னோட சந்தோஷம் என்னோட கனவு, என்னோட பலம், முக்கியமா என்னோட பலவீனம்..."
அவனது மனம் திறந்த வார்த்தைகளை கேட்டு, பிரமிப்போடு அவனை பார்த்து நின்றாள். நடப்பதெல்லாம் உண்மை தானா என்று நம்ப, தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொள்ள எண்ணினாள். ஏற்கனவே மழையில் நனைந்திருந்த அவளது உடல், கிட்டத்தட்ட உறைந்து போனது.
"உனக்கு எல்லா விதத்திலும் துணையா இருக்கிற கௌரவத்தை எனக்கு நீ கொடுக்க மாட்டியா?"
தூறலால் நனைந்திருந்த அவனது முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்து நின்றாள்.
"நான் சொல்றதை எல்லாம் நம்ப உனக்கு கஷ்டமா தான் இருக்கும். இதுக்கு முன்னாடி என்னோட ஃபீலிங்ஸ்ஸை நான் உன்கிட்ட சொன்னதே இல்ல. அதை உன்கிட்ட சொல்லாம இருக்கறதுனால அதுக்கு எந்த மதிப்பும் இல்லன்னு நான் புரிஞ்சுகிட்டேன். ஏன்னா, அதுக்கு உரிமையானவை நீ தான். அதை உன்கிட்ட சொன்னா தானே அதுக்கு மதிப்பு?"
அவள் உணர்ச்சிவசப்படுவது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
"நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன், குஷி. ஐ அம் சாரி... ஃபார் எவ்ரிதிங்"
அவனது முகத்தை தன் கைகளால் ஏந்தி கொண்டாள். மழைத்துளிகளை மீறி அவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை அவனால் காண முடிந்தது.
"உன்னை மாதிரி திமிர் பிடிச்சவனை நான் பார்த்ததே இல்ல. உன் மனசுல இருக்கிறதை என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல? நான் புரிஞ்சிக்க மாட்டேனா? நான் என்ன அவ்வளவு புத்தி இல்லாதவளா?"
"ஐ அம் சாரி"
தன் கைகளை கட்டிக்கொண்டு முகத்தை உம் என்று வைத்துக் கொண்டு நின்றாள், அவன் மனதுக்கு நிம்மதியை தந்தது.
"நம்ம எல்லாத்தையும் விளாவரியா பேசலாம். இப்போ கீழ போகலாம். மழை அதிகமாயிகிட்டே இருக்கு"
"வரலைன்னா என்ன செய்வ?" என்றாள் தெனாவட்டாக.
அவளது கோபம் பறந்து போனதை அவன் உணர்ந்தான்.
"நீ வர மாட்டேன்னு சொன்னா, நான் விட்டுடுவேனா?"
"ஆங்... மறுபடியும் ஆரம்பிக்காத..."
"மறுபடியுமா? நான் எப்போ நிறுத்தினேன்?" உதட்டோர புன்னகைத் தவழ அவளை நெருங்கினான்.
"என்கிட்ட வராத" என்று அவனை பிடித்து தள்ளினாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தன் கையில் வாரி எடுத்து தரைதளம் நோக்கி நடந்தான். அவனது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டு, அவன் கையில் இருந்தபடியே காற்றில் நீச்சல் அடிக்க துவங்கினாள்.
"என்னை விடு..." என்று அவள் கத்தியதை அவன் கேட்பதாய் தெரியவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top