42 பலவீனமானவன்

42 பலவீனமானவன்

இரவு உணவை சாப்பிட்டு முடித்து, கை கழுவச் சென்றாள் லாவண்யா. அவளைப் பின்தொடர்ந்து சென்ற அர்னவ், அவளிடம் ஏதோ முணுமுணுத்தான். அதைக் கேட்டு சிரித்த அவள், சரி என்று தலையசைத்துவிட்டு குஷியுடன் விருந்தினர் அறைக்கு சென்றாள். கட்டிலின் மீது அமர்ந்தபடி தீவிரமாய் படித்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு, புத்தகத்தை அணைத்தவாறு அவள் அமர்ந்தபடி உறங்குவதை கண்டாள் குஷி. அந்தப் புத்தகத்தை அவளிடம் இருந்து எடுத்து மேசையின் மீது வைத்தாள். கதவை தாழிட்ட பின், விளக்கை அணைத்துவிட்டு அவளும் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்.

மெல்ல கண் விழித்த லாவண்யா, குஷி ஆழ்ந்து உறங்குவதை கண்டாள். சத்தம் செய்யாமல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அவள், அங்கு அர்னவ் காத்திருப்பதை பார்த்தாள்.

"அவ தூங்கிட்டாளா?"

"தூங்கிட்டா..."

"தேங்க்யூ"

"எனி டைம் அண்ணா..." என்றபடி தங்கள் அறைக்கு சென்றாள்  லாவண்யா.

தன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த விருந்தினர் அறைக்கு வந்த அவன், அவளை ஒரு பூச்செண்டை போல் தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றான். அவளை வழக்கம்போல் இடது பக்கம் கிடத்திவிட்டு, வலது பக்கம் படுத்துக் கொண்டான். இந்த நேரத்திற்காக அவன் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியது ஆகிவிட்டது. கண் விழித்த பிறகு அவள் என்ன செய்யப் போகிறாளோ...! ஒன்று அது வேடிக்கையாய் இருக்கும், இல்லாவிட்டால் விபரீதமாய் இருக்கும். எது எப்படி இருந்தாலும் அதை கையாண்டு தான் தீர வேண்டும். இப்போதைக்கு, அவள் அவன் பக்கத்தில், அவன் கட்டிலில் படுத்திருக்கிறாள். அது போதுமானது. இந்த நொடியை ரசிப்போம் என்றபடி அவளை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான் அர்னவ்.

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண்விழித்த குஷி, அவள் தங்கள் அறையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அர்னவ் அவளை அணைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. அவனைப் பிடித்து தள்ளி, சண்டையிட வேண்டும் என்று தான் அவளும் நினைத்தாள். ஆனால் அவனது முகம், அவளை பேச விடாமல், அவளது தொண்டையை வறண்டு போக  செய்தது. அவனிடம் ஏன் தான் அவள் இப்படி பலவீனம் அடைகிறாளோ...! அவன் முகத்தை பார்த்தபடி, தன் இடையின் மீது இருந்த அவனது கையை மெல்ல அகற்றினாள். ஆனால் அவன் முகத்தில் இருந்து அவளது கண்களை அகற்ற முடியாததால், கட்டிலை விட்டும் அகலும் எண்ணம் அவளுக்கு ஏற்படவில்லை.

"பைத்தியக்காரி... க்ரிப்பை விட்டுடாத..." என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

அர்னவ்வின் இதழ்கள் புன்னகையுடன் வளைவதை கண்ட அவளது கண்கள் பெரிதாயின. அவள் கட்டிலை விட்டு இறங்க நினைத்தபோது, அவள் இடையை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்.

"நீ உன் புருஷனை பாக்குறத யாரும் கேள்வி கேட்க போறதில்ல"

"உன்னை பார்க்கிற அளவுக்கு எதுவும் இல்ல"

"அப்படியா?" என்ற படி அவன் சிரித்தான்.

"நான் எப்படி இங்க வந்தேன்?" என்றாள் அவனது அணைப்பில் இருந்தவாறு.

அவளுக்கு பதில் அளிக்காமல், உனக்கு தெரியாதா? என்பது போல் அவன் புன்னகைத்தான்.

"எதுக்காக என்னை இங்க கொண்டு வந்த?"

அதற்கும் அவன் புன்னகையை பதிலாக தந்தான்.

"ஸ்டாப் ஸ்மைலிங்...!"

தன் உதட்டை மடித்து, சிரிக்காமல் இருக்க முயன்றான்.

"என்னை விடு"

அவன் முடியாது என்று தலையசைத்தான்.

"என் பொறுமையை சோதிக்காத. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது"

"உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செஞ்சுக்கோ. நான் இங்க தானே இருக்கேன்...?"

அவனைப் பிடித்து தள்ள முயன்றாள். ஆனால் அவனது விரலைக் கூட அவளால் அசைக்க முடியவில்லை. பெருமூச்சு விட்ட அவள்,

"என்னை விடு, ப்ளீஸ்" என்றாள்.

அது அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது அவள் தன்னுடன் சண்டை இடுவாள் என்று அவன் நினைத்தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அவன் கட்டிலை விட்டு கீழே இறங்கினான். தனது உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள் குஷி. அவள் குளியலை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது, ஏற்கனவே குளித்து முடித்துவிட்டிருந்த அவன், இரண்டு குவளை தேநீருடன் அவளுக்காக காத்திருந்தான்.

அவன் எப்போது எங்கே குளித்தான்? என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. அவனையும் அவனது தேனீரையும் நிராகரித்துவிட்டு, அவள் கீழே செல்ல கதவை திறக்க முயன்றாள். ஆனால் அவளால் கதவை திறக்க முடியவில்லை. அது பூட்டப்பட்டிருந்தது. அவள் அவனைத் திருப்பிப் பார்க்க, அவளிடம் ஒரு தேநீர் குவளையை நீட்டினான். 

"நான் ஆன்ட்டியோட சேர்ந்து குடிப்பேன்" என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

"நீ ரூமை விட்டு வெளியே  போகணும்னா, என் கூட சேர்ந்து டீ குடிக்கணும்"

"எதுக்காக என்னை கட்டாயப்படுத்துற?"

"நான் சொன்னதை நீ செஞ்சிட்டா, நான் ஏன் உன்னை கட்டாயப்படுத்த போறேன்?"

"நான் ஏன் நீ சொல்றதை கேட்கணும்?"

"இந்த ரூமை விட்டு வெளியில போகத்தான்..."

அவள் இயலாமையுடன் கண்களை மூடினாள்.

"எதுக்காக தேவையில்லாம சீன் கிரியேட் பண்ற? உன்னை டீ தானே குடிக்க சொல்றேன்... கவலைப்படாத, நான் இதுல எதையும் கலக்கல"

அவனிடமிருந்து அந்த குவளையை அவள் பெற்றுக் கொள்ள, அது அவனை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

அவளுக்கு என்ன வேண்டும் என்பதே அவனுக்கு புரியவில்லை. அதை சுவைத்தவுடன் அவளுக்கு புரிந்து போனது அந்த தேனீரை தயாரித்தது அவன் தான் என்று. நாற்காலியில் அமைந்து அமர்ந்துகொண்டு, அதை சுவைத்து பருகினாள். அது மிகவும் ருசியாய் இருந்தது.

"நீ நம்ம ரூம்லயே படிச்சா, நான் உனக்கு தினமும் டீ போட்டு தறேன்"

"நோ தேங்க்ஸ்..."

"சரி" என்று தோள்களை குலுக்கியபடி புன்னகைத்தான்.

தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அந்த தேனீரை குடித்து முடித்த பிறகு, அவனிடம் சாவியை கேட்கும் நோக்கில், தன் கையை அவனை நோக்கி நீட்டினாள். அவளது கையை பற்றி அவன் முத்தமிட நினைத்தபோது தன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்.

"சாவியை கொடு..."

"ஓ... நான் வேற என்னமோ நெனச்சேன்" என்று சிரித்தான்.

தனது பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து அதை சிரித்தபடி அவளிடம் கொடுத்தான். தரை தளம் வந்த அவளை பார்த்து, கிண்டலாய் சிரித்தாள் லாவண்யா. அவளை விருந்தினர் அறைக்கு இழுத்துச் சென்றாள் குஷி.

"எதுக்காக நேத்து ராத்திரி நீ உன் ரூமுக்கு போன?"

"நந்து கூப்பிட்டான்... அதனால போனேன்" என்றாள் வெட்கத்துடன்.

"இப்படி செய்யாத லாவண்யா"

"ஒய்... நீ என்ன நெனச்சுக்கிட்டு இருக்க? ஆங்? நம்ம கிட்டத்தட்ட எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டோம். இதுக்கு அப்புறம் என்னை டார்ச்சர் பண்ற வேலை வச்சுக்காத. இதுவரைக்கும் நம்ம படிச்சதை வச்சே நான் எதிர்பார்த்ததை விட அதிகமான மார்க் எனக்கு வந்துடும். அதனால என்னை வச்சு விளையாட நினைக்காத. இன்னைக்கு நான் கெஸ்ட் ரூமுக்கு வருவேன்னு எதிர்பார்க்காத.  ஓகே?"

"இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு எக்ஸாம் ஆரம்பிக்குது"

"எனக்கும் அது தெரியும். என்னால, என்னோட ஸ்டடிஸயும் என் புருஷனையும் பேலன்ஸ் பண்ண முடியும்... உன்னை மாதிரி இல்ல..."

"என்னை மாதிரி இல்லனா என்ன அர்த்தம்?"

"பின்ன என்ன? உன்னோட இன்ட்ரஸ்ட், ஒன்னு அண்ணன் மேல தான் இருக்கு, இல்லைனா படிப்பு மேல இருக்கு...! உன்னோட கவனம் அண்ணன் மேல இருந்தா, படிப்பை சுத்தமா மறந்து அவர் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க. அதுவே உன் இன்ட்ரஸ்ட் படிப்பில இருந்தா, அவரை சுத்தமா இக்னோர் பண்ணிடுற... உன்னால இரண்டுக்கும் சமமான கவனம் கொடுக்க முடியாதா?"

அமைதியாய் நின்றாள் குஷி. ஏனென்றால் லாவண்யா கூறுவதில் தவறு ஏதுமில்லை.

"சரி விடு. இன்னும் கொஞ்ச நாள் நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நெனச்சேன்"

அவளது முகவை கட்டையை அழகாய் பிடித்துக் கொண்டு,

"நீ செய்யறது உனக்கே அநியாயமா தெரியலையா? நீ உன் புருஷன் கிட்ட இருந்து தள்ளி இருக்கணும் அப்படிங்கிறதுக்காக, என்னை என் புருஷன்கிட்ட இருந்து ஏன் பிரிக்க நினைக்கிற? எங்களைப் பார்த்தா உனக்கு பாவமா இல்லையா?" தேம்புவது போல் பாசாங்கு செய்தாள்.

"நீ ஒன்னும் உன் புருஷன்கிட்ட இருந்து விலகி இருக்க வேண்டாம். அங்கிளும் ஆன்டியும் தூங்குற வரைக்கும் என் கூட இருந்துட்டு, அதுக்கப்புறம் உன்னோட ரூமுக்கு போ"

"நேத்து தூக்கி கிட்டு போன மாதிரி, அண்ணன் இன்னைக்கும் செஞ்சா என்ன செய்வ?"

"அவனால இன்னிக்கு அப்படி செய்ய முடியாது. நீ இங்கிருந்து போனதுக்கு பிறகு நான் ரூமை பூட்டிக்குவேன்" என்றாள் கோபமாக.

தற்செயலாய் கதவை பார்த்து திகைத்த அவள், கோபத்தில் பல்லை கடித்து நின்றாள்.  அவளது முகத்தைப் பார்த்து லாவண்யா குழப்பமடைந்தாள். அவளது திகைப்புக்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவள் கண்கள் இருந்த திசையை நோக்கி திரும்பினாள். அவளால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த அறையின் கதவில் இருந்த அத்தனை தாழ்ப்பாள்களும் நீக்கப்பட்டு இருந்தன.

"இப்போ நீ இந்த ரூமை எப்படி பூட்டிக்குவ? அதுல தான் தாழ்ப்பாளே இல்லையே"

"இதை யாரு செஞ்சிருப்பான்னு எனக்கு தெரியும்"

"எனக்கும் தெரியும்" என்று சிரித்தாள் லாவண்யா.

கோபத்துடன் தன் அறைக்கு சென்றாள். அர்னவ் அலுவலகத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.

"இதையெல்லாம் செய்யறது மூலமா நீ என்ன நிரூபிக்க நினைக்கிற?"

"நீ எதை பத்தி பேசுற?" என்றான் முகத்தை சுருக்கி.

"அப்பாவி மாதிரி நடிக்காத, அர்னவ்"

"நான் பார்க்க அப்பாவி மாதிரி இருக்கேனா? நெஜமாவா?" என்றான் கிண்டலாய்.

"வாயை மூடு. எதுக்காக கெஸ்ட் ரூமோட லாக்கை ரிமூவ் பண்ண?"

"உனக்கு பதில் தெரியாத கேள்வி ஏதாவது இருந்தா கேளு"

"உன்னோட எண்ணம் எதுவும் பலிக்காது"

"சரி... ஆனா என்னுடைய எண்ணம் என்ன?" என்றான் தனக்கு ஒன்றும் தெரியாததை போல.

"நீ என்ன செய்ய முயற்சி பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்"

"நான் என்ன செய்யவும் முயற்சி பண்ணல"

"பொய் சொல்லாத. எனக்கு நல்லா தெரியும். நீ என் பக்கத்துல வந்தா நான் என் கண்ட்ரோலை இழந்துடுவேன்... நீ என்னை தொட்டா என்னால ஒன்னும் செய்ய முடியாது... நான் திணறிப் போயிடுவேன்..."

அவன் தன்னை நோக்கி முன்னேறி வருவதை பார்த்து மேலும் பேசாமல் நின்றாள். அங்கிருந்து செல்லலாம் என்று அவள் திரும்பிய போது, விரைந்து கதவை சாத்தி, அவளை செல்ல விடாமல் தடுத்தான்.

"நீ சொன்னது உண்மையா? நான் உன் பக்கத்துல வந்தா நீ உன் கண்ட்ரோலை இழந்திடுவியா? என்னோட தாக்கம் அவ்வளவு பவர்ஃபுல்லானதா?"

ஏன் தான் அவள் அவனுக்கு முன்னால் வந்து நின்றால் இப்படி குழம்பி உளறி கொட்டுகிறாளோ...! தன்னைத்தானே வைது கொண்டாள்.

"இல்ல... அப்படி எல்லாம் நினைக்காதேன்னு சொல்ல வந்தேன். நீ நினைக்கிறதை விட நான் ரொம்ப ஸ்ட்ராங்"

"அப்படின்னா எதுக்காக என்கிட்ட இருந்து விலகி போற? நீ ரொம்ப ஸ்ட்ராங்கானவன்னா, என் கூட இரு"

தனது பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.

"சரி... உன்னோட எக்ஸாம் முடியற வரைக்கும் நான் எந்த சேட்டையும் செய்ய மாட்டேன்"

"அப்படின்னா, எக்ஸாம் முடிஞ்ச பிறகு செய்வியா?"

"நம்ம அதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம். இப்போ விஷயத்துக்கு வா. உன் எக்ஸாம் முடிகிற வரைக்கும் நான் எந்த சேட்டையும் செய்ய மாட்டேன். நீ என்னை நம்பலாம்"

அவள் அமைதியாய் இருந்தாள்.

"ஆனா நீ ஏதாவது சேட்டை செஞ்சு கெஸ்ட் ரூமுக்கு போக நினைச்சா, நான் என்னோட சத்தியத்தை காப்பாத்த மாட்டேன்" தன் புருவம் உயர்த்தி சிரித்தான். அவனது வெளிப்படையான பேச்சின் விபரீதம் எப்படி இருக்கும் என்று தெரிந்ததால், அவள் மென்று விழுங்கினாள்.

"ஒருவேளை, நீ என்னை டிஸ்டர்ப் பண்ணா..."

"நீ ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுவ... எனக்கு தெரியும்" என்று கண்ணடித்தான்.

"உன்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? நீ என்ன ரொமான்டிக் ஹீரோவா? நீ பார்க்க ஹேண்ட்ஸமா இருந்தா, நான் விழுந்திடுவேனா?"

புன்னகைத்தபடி தன் கைகளை கட்டிக் கொண்டான். தன் மீது அவளுக்கு எரிச்சலாய் வந்தது. ஏன் தான் கோபம் வரும் போதெல்லாம் அவள் தன் மனதில் இருப்பதை கொட்டி விடுகிறாளோ...! அவளால் அவனது எகத்தாள புன்னகையை சகிக்க முடியவில்லை.

"நான் பெட்டு கட்டுவேன். என்னை விட நீ தான் ரொம்ப ரொம்ப பலவீனமானவன். நான் உன் பக்கத்துல வந்தா உன்னால நிக்கவே முடியாது" என்ற அவள், அவனது முகம் மாற்றத்தை கவனித்தாள்.

அவனது முகம் திடமாய் மாறியது.

"ஆமாம் நீ சொல்றது சரி தான். உனக்கு என்னை பத்தி தெரிஞ்சதை விட நான் ரொம்ப பலவீனமானவன். என்னோட கட்டுப்பாட்டை இழக்கச் செய்ய நீ என் பக்கத்துல வரணும்னு கூட அவசியமில்ல. நீ ஒரு ஸ்மைல் பண்ணாலே போதும். அந்த உண்மையை ஒத்துக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, உன் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நான் உன்னை காதலிக்கிறேன்"

குஷி மலைத்து நின்றாள். அவள் எதற்காக அவனிடம் சவால் விட்டால் என்று அவளுக்கே புரியவில்லை. அவனிடம் பேசாமல் இருந்த அவளுக்கு, அந்த சந்தர்ப்பம் கிடைத்த போது தன்னை மீறி உளறி கொட்டத்தான் செய்கிறாள். அவனிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனால் அது அவளுக்கு அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை. ஏனென்றால் அவள் அவன் மீது கொண்டுள்ள காதல் நிபந்தனைகள் அற்றது.

கதவை திறந்து கொண்டு அங்கிருந்து சென்றான் அர்னவ், பேசும் சக்தியை இழந்து நின்ற அவளை தனியே விட்டு...!

தொடரும்... 




Bạn đang đọc truyện trên: AzTruyen.Top