41 அவன் மனதில் இருப்பது என்ன?

41 அவன் மனதில் இருப்பது என்ன?

ஷஷியை ஏமாற்றத்துடன் பார்த்தாள் குஷி. அவளது கலங்கிய கண்களை பார்த்து அவர் வருந்தினார்.

"ஏம்பா? நான் இங்க இருந்தா என்ன?"

"நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. இது விளையாட்டு இல்ல. அப்படியே இது விளையாட்டா இருந்தாலும், அதை உன் வீட்ல, உன் புருஷனோட, யாருக்கும் தெரியாம விளையாடு"

"ஆமாம் குஷி. உன் மாமனார் மாமியார் என்ன நினைப்பாங்க?" என்றார் கரிமா.

"அவங்க எனக்கு தான் சப்போர்ட் பண்றாங்க"

"அது அவங்களோட பெருந்தன்மை. அவங்க நீ செய்யற எதையும் எதிர்க்கல அப்படிங்கிறதுக்காக, அவங்க பையன் படற கஷ்டத்தை எல்லாம் சந்தோஷமா ஏத்துக்குறாங்கன்னு அர்த்தமில்ல" என்றார்  ஷஷி.

குஷி திகைத்து நின்றாள்.

"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? எந்த அம்மா தான் தன் பையன் படுற வேதனையை பொறுத்துக்கிட்டு போவாங்க? ரத்னா உன்னை எதுவும் சொல்றதில்ல. ஏன்னா, அவங்க தன்னோட மருமகள்களை ரொம்ப நேசிக்கிறாங்க. நீ அதை மிஸ் யூஸ் பண்ற. ஆனா, என்னால அரவிந்தை வருத்தப்பட வைக்க முடியாது. உன்னோட பிடிவாதத்தால எங்களை சங்கடத்துக்கு ஆளாகாத. நீ உன் வீட்டுக்கு அர்னவ்காக போகலன்னாலும், உன்னை தன் மகளா நினைக்கிற உன் மாமனார் மாமியாருக்காகவாவது போ"

அவருக்கு குற்ற உணர்ச்சி இருந்ததை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

"நீ இங்க வந்திருக்கவே கூடாது. அதுக்கு பதிலா உன்னோட பிரச்சனையை பேசி தீத்திருக்கணும். புருஷன் பொண்டாட்டி பிரச்சினை நாலு சுவத்துக்குள்ள இருக்குறது தான் எல்லாருக்கும் மரியாதை. இத்தனை நாளா நான் உங்க பிரச்சனையில தலையிடாம இருந்தேன். ஆனா இப்போ, அர்னவ் நீ அங்க வரணும்னு விரும்புறது தெரிஞ்ச பிறகும் என்னால அப்படி இருக்க முடியாது."

"ஆனா அவன் தானே என்னை இங்க அனுப்பணும்னு ஆசைப்பட்டான்...?"

"அதனால தான் நான் உன்னை திருப்பி அனுப்பாம இருந்தேன். ஆனா, தான் செஞ்சது தப்புன்னு அவன் உணர ஆரம்பிச்ச பிறகு நான் அமைதியா இருக்க முடியாது"

"எப்பவும் நான் அவன் சொல்றதை தான் கேட்கணுமா? நான் எந்த முடிவையும் எடுக்கக் கூடாதா?"

"நான் அப்படி சொல்லலையே. அது உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற பிரச்சினை. உனக்கு உன் புருஷனோட சண்டை போடணும்னு தோணுச்சுன்னா, அதை அவன் கூட இருந்து செய். அவன்கிட்ட இருந்து பிரிஞ்சி இருக்கணும்னு என்ன அவசியம் இருக்கு? காலம் முழுக்க இங்கேயே இருந்துடுவியா? திரும்பி போக மாட்டியா?"

வாயடைத்து நின்றாள் குஷி.

"நீ உன்னோட முடிவுல தீர்க்கமா இருக்கும் போது, எதுக்காக அங்க போறதுக்கு பயப்படுற? உன்னோட பிடிவாதத்தை, அவன் கூட இருந்துகிட்டே காட்ட முடியுமே... உன்னால முடியாதா என்ன?" என்ற அவரது பேச்சில் நையாண்டி தெரிந்தது.

"ஏ...ன் முடியாது? என்...னால முடியும்" என்றாள் அவள் தடுமாற்றத்துடன்.

"அப்படின்னா உன் வீட்டுக்கு திரும்பி போ. நீ உங்க பிரச்சனையை வெளியிலே இழுத்துகிட்டு வந்துட்ட. அதனால இந்த பிரச்சனையை தீர்க்க உன்னோட மாமனார் மாமியாரோட ஹெல்பை வாங்கிக்கோ. அவங்களாவது கொஞ்சம் நிம்மதியாவாங்க. அவங்களை தயவு செய்து டிசப்பாய்ண்ட் பண்ணாத. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்"

குஷியும் வருத்தப்பட்டாள், அர்னவ்காக அல்ல, தன் மாமனார் மாமியாருக்காக. தன் பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையிலான நட்புக்கு தன்னால் பங்கம் விளைய வேண்டாம் என்று எண்ணினாள் அவள்.

"இங்கேயே இருக்கணும்னு ஏதாவது பைத்தியக்காரதனமான திட்டமெல்லாம் போடாத. அப்படி நீ ஏதாவது செஞ்சா, நான் அர்னவ்வை இங்க வர வச்சிடுவேன்" என்று அவர் புன்னகைக்க, கரிமா சிரித்தார்.

மென்று விழுங்கினாள் குஷி. புரிதல் உள்ள பெற்றோரை பெற்றிருப்பது என்பது, எல்லா நேரத்திலும் நமக்கு சாதகமாய் அமைந்து விடுவதில்லை என்று எண்ணினாள் அவள்.

இது அவளுக்கு ஓர் உண்மையான சவாலாய் அமையப்போகிறது. ஷஷி என்னவோ அனைத்தையும் சுலபமாய் கூறிவிட்டார். ஆனால் அவற்றை செயலாற்ற போவது என்னவோ அவள் தானே! அர்னவ்வுடன் இருந்தபடி, அவள் தன் பிடிவாதத்தை காட்டிக்கொண்டே தனது பரீட்சையையும் முடிக்க வேண்டும்...! கிழிந்தது போ...! என்று எண்ணிக் கொண்டாள்.

ரத்னா மஹால் 

ஜன்னலின் அருகே நின்று, வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்னவ். அங்கு வந்த ரத்னா, அவன் அறைக்குள் நுழைந்தார். அவர் ஏன் அங்கு வருகிறார் என்று அவனுக்கு தெரியும். அவனது தோளில் கை வைத்த அவர்,

"அரு..." என்றார்.

"மா, என்னோட முடிவை மாத்துறதுக்காக நீங்க இங்க வந்திருந்தா, ஐயம் ரியலி சாரி. அது என்னால முடியாது"

"நான் உன் முடிவை மாத்துறதுக்காக வந்திருக்கேன்னு யார் சொன்னது? உண்மைய சொல்லணும்னா, நீ இந்த முடிவை ரொம்ப நாளைக்கு முன்னாடியே எடுப்பேன்னு நான் எதிர்பாத்தேன். நீ தான் ரொம்ப லேட்"

"ஆனா, நீங்க குஷிக்கு தானே சப்போர்ட் பண்ணிங்க?"

"நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணேன் அப்படிங்கிறதுக்காக, உனக்கு எதிரா இருந்தேன்னு அர்த்தம் இல்ல. மாமியாரா இருக்குறது தான் இந்த உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான விஷயம்... கத்தி மேல நடக்கிற மாதிரி. லேசா அழுத்தம் கொடுத்தாலும் காயப்படுத்திடும். குஷி உன் மேல அதிருப்தியில  இருக்கும் போது, நான் உன் பக்கம் நிக்க முடியாது.  நான் உன்னை எச்சரிக்கை செஞ்சேன். ஆனா நீ அவளை குறச்சி எடை போட்டுட்ட. அவ உன் மேல கோவமா இருக்கும் போது நானும் உனக்கு சப்போர்ட் பண்ணா, அவளுக்கு வருத்தம் தான் ஏற்படும். அதனால தான் இதைப்பத்தி நான் எதுவும் பேசாம இருந்தேன். ஆனா இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷம், என் மகன் மருமகன் திரும்பி வரப்போறா. ஆனா நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நீ கூப்பிட்ட அப்படிங்குறதுக்காக அவ இங்க வரல. ஷஷி அண்ணன் தான் அவளை இங்கு அனுப்பி வைக்கிறார். அதனால நீ கவனமா இருக்கணும்"

"எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணணும்"

"என்ன செய்யணும்?"

"இவ்வளவு நாள் நீங்க எங்க பிரச்சனையில தலையிடாம இருந்தீங்க. இதுக்கப்புறமும் அப்படியே இருந்துடுங்க"

"அப்படின்னா, என் கண் முன்னாடி நடக்கிற எதையும் நான் பார்க்க கூடாதுன்னு சொல்றியா?" என்றார் கிண்டலாய்.

"இல்ல இல்ல, நீங்க தாராளமா பாருங்க. ஆனா பாக்காத மாதிரி இருந்துடுங்க"

"அதைத்தான் ரொம்ப காலமா செஞ்சுகிட்டு இருக்கேனே..."

அதைக் கேட்டு சிரித்த அவன்,

"சாரி மா, நீங்க என் மேல கோவமா இருக்கீங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்"

"நான் உன் மேல கோவமா தான் இருந்தேன். அவகிட்ட பேசாம எந்த ஒரு முடிவையும் எடுக்காத. பாரு, அது உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு..."

அவர் கூறியதை ஒப்புக்கொண்டு தலையசைத்தான்.

"நேரம் ஆகுது. படுத்து தூங்கு (என்று சற்று நிறுத்திய அவர்) நாளைக்கு என் மருமக வரப்போறான்னு தெரிஞ்சி, இன்னைக்கு நீ தூங்குறது கஷ்டம் தான்"

அவன் புன்னகைக்க,

"அவ இங்க வந்தா அவளை டிஸ்டர்ப் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காத... அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்" என்று சிரித்த அவர்,

"ஏன்னா, நீ டிஸ்டர்ப் பண்ணலனா அவ அப்செட் ஆயிடுவா. அவ ஒரு பைத்தியக்காரி" என்று சிரித்தபடி அங்கிருந்து சென்றார்.

அது அவனை யோசனையில் ஆழ்த்தியது. அவர் கூறுவது சரி தான். அவன் அவளை தொல்லை செய்தால், அவளுக்கு கோபம் வரும். ஆனால் அவன் தொல்லை செய்யாமல் விட்டால், அதிகமாய் கோபம் வரும். கூடவே, *உனக்கு என்னிடம் பேச வேண்டும் என்று விருப்பமில்லை* என்று அவன் மீது பழி போடுவாள். அவன் என்ன தான் செய்வது? என்று யோசித்த அவன், அவள் வரட்டும். வந்த பிறகு அவள் நடந்து கொள்வதற்கு ஏற்றார் போல் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினான்.

மறுநாள் காலை

குளித்து முடித்து, குளியலறையில் இருந்து வெளியே வந்த அர்னவ்,  குஷியின் பை தங்கள் அறையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றான். அவர்கள் அறையில் அவள் இல்லாததால், தரைதளத்திற்கு விரைந்தான். தண்ணீர் சொட்டும் உடலுடன் இடுப்பில் துண்டோடு வந்து நின்ற அவனை வியப்போடு பார்த்தார் ரத்னா.

"குஷி வந்தாளா?"

ஆம் என்று தலையசைத்தார்.

"அவ எங்க?"

"அவளும் லாவன்யாவும் காலேஜுக்கு போயிட்டாங்க"

"அவ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலயா?"

"உன் ரூம்ல பேகை வச்சிட்டு வந்து சாப்பிட்டா"

அவனுக்கு ஏமாற்றமாய் போனது, அவனை வெறுப்பேற்றவே, வேண்டுமென்று தான் இப்படி எல்லாம் செய்கிறாள் என்று நினைத்தான்.

"போய் தலையை துவட்டு. அவ சாயங்காலம் இங்க தான் வருவா"

அலுவலகம் செல்ல தயாராக, தன் அறைக்கு திரும்பி சென்றான் அவன்.

கல்லூரி

குஷி திரும்பி வந்ததால் மிகவும் சந்தோஷமாய் இருந்தாள் லாவண்யா. அதைப்பற்றி அவள் ஏற்கனவே அர்ச்சனாவிடம் கைபேசி மூலம் தெரிவித்து விட்டிருந்த போதிலும், மீண்டும் அதை அவளிடம் கூறினாள். தங்கள் தோழியை கொஞ்சமாவது வெறுப்பேற்றி பார்க்கவில்லை என்றால், பிறகு அவர்கள் என்ன ஒரு நல்ல தோழிகள்?

"அர்ச்சனா, நேத்து என்ன நடந்ததுன்னு தெரியுமா?"

"என்ன நடந்தது?" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

"நம்ம பேசின மாதிரியே அண்ணன் இவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டாரு"

"அப்படியா? ஆனா அவரை தண்டிச்சே தீர்வேன்னு யாரோ ரொம்ப தீர்க்கமா இருந்தாங்களே... அப்பறம் அந்த அதிசயம் எப்படி நடந்தது?"

"அர்னவ் அண்ணன் அவங்க வீட்டுக்கு போய், குஷியோட அப்பாவே அவளை அவர் கூட போக சொல்ற மாதிரி செஞ்சிட்டாரு"

"இதை அவ அவங்க வீட்டுக்கு போன அடுத்த நாளே செஞ்சிருக்கணும்"

"சரியா சொன்ன... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்"

அமைதியாய் இருந்தாள் குஷி. அவளால் ஒன்றும் கூற முடியவில்லை. அவன் என்ன செய்யப் போகிறான் என்று அவளுக்கு எந்த ஒரு தெளிவும் இல்லை. அவன் நடந்து கொள்வதை வைத்து அவளும் அதற்கு ஏற்றார் போல் நடப்பது என்று முடிவு எடுத்தாள். ஆனால் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் மட்டும் அவள் தீர்க்கமாய் இருந்தாள். ஆனால், அவன் தன்னை கட்டாயப்படுத்துவானோ என்ற  பயம் அவளுக்கு இருந்தது.

மாலை

கல்லூரிவிட்டு லாவண்யாவுடன்  வீட்டிற்கு வந்தாள் குஷி. தனது இரண்டு மருமகள் களையும் ஒன்றாய் பார்த்த ரத்னா மகிழ்ந்தார். உணர்ச்சிவசப்பட்டு அவர் அவர்களை அணைத்துக்கொள்ள அவர்களும் உணர்ச்சிவசப்பட்டார்கள்.

"போய் ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க. நான் ஸ்னாக்ஸ் பண்ணி வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு அப்புறமா படிக்கலாம்"

அவர்கள் இருவரும் தத்தம் அறைகளுக்கு சென்றார்கள். தன் அறைக்குள் வெகு நாட்களுக்குப் பிறகு நுழைந்த குஷி, மீண்டும் உணர்ச்சி வசப்பட்டாள். கட்டிலின் மீது அமர்ந்து, தலையணையை வருடி கொடுத்தாள்.

படிப்பதற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக்கொண்டு விருந்தினர் அறைக்கு சென்றாள். சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்த பிறகு, அவளும் லாவண்யாவும் விருந்தினர் அறையில் அமர்ந்து படிக்க துவங்கினார்கள்.

தன் இதய ராணியை தேடியபடி அர்னவ் உள்ளே நுழைந்ததை பார்த்த ரத்னா, அவள் விருந்தினர் அறையில் இருப்பதை, கண்களால் அவனுக்கு உணர்த்தினார். அந்த அறையின் கதவு சாத்தப்பட்டிருந்ததால், பெருமூச்சு விட்டான் அவன்.

"காபி வேணுமா?"

"நிச்சயமா..."

அவர் சமையல் அறைக்கு செல்ல, அவரை பின்தொடர்ந்து சென்றான்.

"அவ ஏதாவது சாப்பிட்டாளா?"

"சாப்பிட்டா. உனக்கு வேணுமா?"

"இல்ல, நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்"

தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து மீண்டும் வரவேற்பு அறையில் வந்து அமர்ந்து, தொலைக்காட்சி செய்திகளை பார்க்க துவங்கினான். ஆனால் அவனது கண்கள், சாத்தப்பட்ட  வரவேற்பறையின் கதவின் மீது இருந்தது.

இரவு உணவிற்காக அனைவரையும் அழைத்தார் ரத்னா. அனைவரும் கூடினார்கள். குஷிக்காக தனது பக்கத்து இருக்கையை இழுத்தான் அவன். எந்த சீனும் போடாமல் அதில் அமர்ந்து கொண்டாள் அவள்.

"வெல்கம் பேக், குஷி" என்றார் அரவிந்தன்.

"நான் இங்க வந்துகிட்டு தானே அங்கிள் இருந்தேன்!"

"வந்துகிட்டு இருந்த... ஆனா இங்கேயே இருக்கலையே..."

அமைதியானாள் குஷி. அவர் குரலில் இருந்த வருத்தத்தை அவள் உணர்ந்தாள். அவர்களைப் பற்றி ஷஷி கூறியது அவள் நினைவுக்கு வந்தது.

அவளிடம் புதினா சட்டினியை கொடுத்தான் அர்னவ். அவள் அதை மறுக்கவில்லை. அது அவனுக்கு வியப்பளித்தது. சாப்பிட்டு முடித்த பிறகு அவள் மீண்டும் விருந்தினர் அணிக்கு செல்ல நினைத்தபோது அவன் குரல் கேட்டு நின்றாள்.

"நீ நம்ம ரூம்லயே படிக்கலாம்"

"நாங்க கம்பைன் ஸ்டடி பண்ணிக்கிட்டு இருக்கோம். முடிச்சுட்டு வரேன்"

அவன் சரி என்று தலையசைத்தான்.

அவள் விருந்தினர் அறைக்கு செல்ல, அவளை பின்தொடர்ந்தாள் லாவண்யா. லாவண்யாவின் முகத்தில் இருந்த விருப்பமின்மையை கவனித்தான் அவன். அவன் தன் அறைக்கு சென்றாலும் அங்கு இருந்தபடி வரவேற்பறையை கவனித்துக் கொண்டே இருந்தான். அதன் விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. இறுதியில் அவன் உறங்கிப் போனான்.

மறுநாள் காலை லாவண்யா நந்தாவின் அறையில் இருந்து வெளியே வருவதை கண்டான் அவன் அப்படி என்றால் அவள் அவர்களது அறையில் தான் தூங்கினாளா? நள்ளிரவில் அவள் தங்கள் அறைக்கு சென்றிருக்க வேண்டும். அப்படி என்றால் குஷி ஏன் வரவில்லை. அவனது பெற்றோர்களின் முன்னிலையில் அவள் வெகு சாதாரணமாய் நடந்து கொண்டாள் என்பதற்காக அவள் சாதாரணமாய் இருக்கிறாள் என்று அர்த்தம் இல்லை. அவள் தன்னிடம் அவ்வளவு சுலபமாய் வரப்போவதில்லை என்று அவனுக்கு புரிந்தது. இந்த வழியை பின்பற்றிக் கொண்டிருந்தால் அது நடக்காது என்றும் புரிந்து போனது.

மாலை

வழக்கம் போல் குஷியும் லாவன்யாவும் விருந்தினர் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். ரத்னாவும்  அவர்களுடன் அமர்ந்து பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருந்தார். அவர் அங்கு இருந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில், அலுவலகத்திலிருந்து அர்னவ் வந்து விடுவான். அவன் தன் மனைவியை காண வேண்டும் என்று விரும்புவான். ஆனால் குஷி விருந்தினர் அறையை விட்டு வெளியே வர மாட்டாள்.

அவர் எதிர்பார்த்தபடியே, இங்கும் அங்கும் பார்த்தவாறு வந்தான் அர்னவ். வரவேற்பறையில் யாரும் இல்லாததால்,

"மா..." என்று அழைத்தான்.

தன் கணவனின் குரல் கேட்டு பதற்றமடைந்த குஷியை பார்த்தார் ரத்னா.

"நான் கெஸ்ட் ரூம்ல இருக்கேன்" என்றார் அங்கு இருந்தபடியே.

அவர் ஏன் அங்கு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்வதில் அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. விருந்தினர் அறையை நோக்கி விரைந்தான். அங்கு லாவண்யாவுடன் படித்துக் கொண்டிருந்தாள் குஷி. அவளை பார்த்தவுடன் அவன் முகம் பிரகாசம் அடைந்தது.

"ஹாய்..." என்றான்.

ரத்னா தன்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அவளுக்கு தெரியும் என்பதால், அவருக்கு ஏமாற்றம் அளிக்க விருப்பம் இல்லாமல், அவனை பார்த்து புன்னகைத்தாள்.

ரத்னாவின் பக்கத்தில் வந்து அமர்ந்த அவன்,

"எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா?" என்றான்.

"போய் முகத்தை கழுவிக்கிட்டு வா. நான் கொண்டு வரேன்"

"இல்லம்மா எனக்கு தலை ரொம்ப வலிக்குது.நான் காபி குடிச்சிட்டு அப்புறம் முகம் கழுவிக்கிறேன்"

"சரி இரு. உங்களுக்கு காபி வேணுமா?" என்றார்

குஷி வேண்டாம் என்று தலையசைக்க,

"இப்போ நந்து வந்துருவாரு. அவர் கூட சேர்ந்து நான் குடிக்கிறேன்" என்றாள் லாவன்யா.

ரத்னா அங்கிருந்து சென்றார். எதிர்பார்த்தபடியே அவன் அவரை பின்தொடர்ந்து செல்லவில்லை. அவன் அங்கேயே காத்திருந்தான்.

மிகவும் நல்ல அம்மா என்பதால், ரத்னாவும் அந்த காப்பியை பொறுமையாய் நேரம் எடுத்து  போட்டு கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.

அப்பொழுது வேலையிலிருந்து வந்த நந்தா, அங்கிருந்த அர்னவ்வை பார்த்து வியப்படைந்தான். அவன் அங்கு ஏன் இருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் ஒன்றும் மடையன் அல்ல.

"மா, என்ன எக்ஸாமுக்காக நீங்க இவங்க கூட படிச்சுக்கிட்டு இருக்கீங்க?" என்றான் கிண்டலாய்.

தன் கையில் இருந்த புத்தகத்தின் அட்டை படத்தை அவனிடம் காட்டினார்.

"இந்த புக்கை நீங்க எத்தனை தடவை தான் படிப்பீங்க?" என்றான் அவன்.

"எப்பெல்லாம் எனக்கு சான்ஸ் கிடைக்குதோ அப்ல்லாம் படிப்பேன். இந்த மாதிரி ஒரு புக்கை நீ எங்க தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஞாபகம் வச்சுக்கோ"

"அதுவும் சரி தான். என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? ரொம்ப பசிக்குது"

"போளி..."

"வாவ்... என்னோட ஃபேவரைட்... சீக்கிரம் வந்து எனக்கு குடுங்க"

"குஷி, நான் இப்ப வரேன்" என்று அவனுடன் சென்றாள் லாவண்யா.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பிறகு, அவள் முன்னாள் வந்து அமர்ந்த அர்னவ்,

"நேத்து ராத்திரி, ஏன் நீ நம்ம ரூமுக்கு வரல?" என்றான்.

"நான் இங்க வரணும்னு நீ விருப்பப்பட்ட... நான் இங்க வந்துட்டேன். அவ்வளவு தான்"

"நீ நம்ம ரூம்ல, என் பக்கத்துல இருக்கணும்னு தான் நான் விருப்பப்பட்டேன்"

அவள் பதில் கூறவில்லை.

"நீ வர மாட்டியா?"

அவள் அமைதி காத்தாள். ஆனால் அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை அவளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது.

"எனக்கு பதில் கூட சொல்ல மாட்டியா?"

தன் கண்களை அகற்றாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். சிரித்தபடி அவன் அங்கிருந்து செல்ல, அது அவளை குழப்பியது. அவன் கோபம் கொண்டு, அவளுடன் விவாதத்தில் ஈடுபடுவான் என்று அவள் எண்ணினாள். அமைதியாய் இருக்கும் அவன் மிகவும் ஆபத்தானவன். யாராலும் கணிக்க முடியாதவன். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top