40 கண்ணாமூச்சி
40 கண்ணாமூச்சி
குஷியை பார்க்காமல் இருக்கும் இம்சையை தாங்க முடியவில்லை அர்னவ்வால். எப்படி ஒருத்தி இவ்வளவு பிடிவாதமாய் இருக்க முடியும்? அவள் ஒவ்வொரு நாளும் அவன் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தாள், ஆனால் அவன் இல்லாத போது...! அனைவருடனும் பேசிக்கொண்டு தான் இருந்தாள், அவன் ஒருவனை தவிர. அவன் வீட்டில் சாப்பிட கூட செய்தாள். ஆனால் அவன் ஒரு முறை கூட அவளை பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட இருப்பது நாளாய் இது தான் நிலை. இனிமேல் தன்னால் பொறுக்க முடியாது என்று உணர்ந்த அவன், அவளது கல்லூரிக்கு சென்று, அவளை பார்க்க, வெளியே காத்திருந்தான். அவளுடைய தோழி அர்ச்சனா, கல்லூரியில் இருந்து வெளியே வருவதை கண்டான். அவனைப் பார்த்த அவள் புன்னகைத்தாள்.
"அண்ணா நீங்களா? எப்படி இருக்கீங்க?" என்றாள்.
"நான் நல்லா இருக்கேன். குஷி எங்க?"
"அவ முன்னாடியே போயிட்டாளே"
"ஆனா, நான் இங்கேயே தானே காத்துகிட்டு இருக்கேன்?"
"அவ ஒரு பீரியடுக்கு முன்னாடியே போயிட்டா"
"எதனால?"
"ஏன்னா, லாஸ்ட் பீரியட் லீஷியர். அதனால, வீட்டுக்கு போய் படிக்க போறேன்னு கிளம்பி போயிட்டா"
"ஓ... தேங்க்யூ" என்று தன் இருசக்கர வாகனத்தை உதைத்து, அதை கிளப்பிக் கொண்டு சென்றான்.
அர்ச்சனா, நகத்தை கடித்த படி ஒரு குறிப்பிட்ட மரத்தை பார்த்தாள். அங்கு குஷியும் லாவண்யாவும் மறைந்து நின்று கொண்டிருந்தார்கள்.
"எதுக்காக நீ இப்படி எல்லாம் செய்ற குஷி?" என்றாள் அர்ச்சனா.
"அவன் இதை தான் வேணும்னு நினைச்சான்..."
"ஆனாலும் நீ அவரை ரொம்ப தான் தண்டிக்கிற" என்றாள் லாவண்யா அலுப்புடன்.
"அவன் கோயம்புத்தூருக்கு போயிருந்தா, நானும் இப்படித் தானே தண்டனையை அனுபவிச்சிருப்பேன்?"
"உன்னோட நல்லதுக்காக தான் அவர் அதை செய்யணும்னு நினைச்சாரு"
"நானும் என்னோட நல்லதுக்காக தான் இதையெல்லாம் செய்றேன். நான் மட்டும் அவனை பேச விட்டா, அவன் ஈசியா என் மனசை மாத்திடுவான். அப்படி நடக்கிறதை நான் விரும்பல"
"பாவம் அந்த அண்ணன்"
"நான் மட்டும் பாவம் இல்லையா? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா, ஒரு மாசத்துக்கு என்னை விட்டுவிட்டு போகணும்னு முடிவு எடுத்திருப்பான்? நான் எப்படி ஃபீல் பண்ணி இருப்பேன்னு அவனுக்கும் தெரியட்டும்"
"நீ மட்டும் எதுக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு அவரை பார்த்துக்கிட்டு இருக்க?" என்றாள் லாவண்யா.
"ஏன்னா, தண்டனையை அனுபவிக்க நான் எந்த தப்பும் செய்யலையே... அவன் தானே தப்பு செஞ்சான்? அதனால தான் அவனை தண்டிக்கிறேன்"
"ஒருவேளை அவர் உன்னை கட்டாயப்படுத்தி நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டா என்ன செய்வ?" என்றாள் லாவன்யா.
"யாரு? அவனா? (என்று கிண்டலாய் சிரித்த அவள்) அவனை மாதிரி ரொம்ப நல்ல பையனுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது, கண்ணா..." என்றாள் கிண்டலாய்.
"சரி போதும், சண்டை போடுறதை நிறுத்துங்க. நம்ம கடைசி எக்ஸாம் அன்னைக்கு குரூப் ஃபோட்டோ எடுக்க போறாங்க. எல்லாரும் ப்ளூ கலர் ஸாரி கட்டணும் அதை மறந்துடாதீங்க"
"ஞாபகம் இருக்கு" என்றாள் குஷி.
"நான் ஒரு புடவை வாங்கணும். என்கிட்ட ப்ளூ கலர் ஸாரி இல்ல" என்றாள் அர்ச்சனா.
"என்கிட்டயும் இல்ல. நானும் வாங்கணும்" என்றாள் லாவன்யா.
"அப்படின்னா எல்லாரும் ஷாப்பிங் போய் வாங்கலாம்" என்றாள் குஷி.
"எங்க ரிசப்ஷனுக்கு எடுத்த ஸாரி தான் உன்கிட்ட இருக்கே..."
"அதனால என்ன? புதுசா ஒன்னு வாங்கறதுல என்ன தப்பு?"
"புரியுது, புரியுது அண்ணனுக்கு ப்ளூ கலர் பிடிக்கும். அதனால நீ எத்தனை எடுத்தாலும் வீணாகாது"
"நான் ஒன்னும் அவனுக்காக வாங்கல"
"ஆங்... நமக்கு தெரியாது?" என்றாள் அர்ச்சனாவை பார்த்து...
"தெரியும் தெரியும்..." என்றாள் அர்ச்சனா கிண்டலாய். அவர்கள் இருவரும் ஹைஃபை தட்டிக் கொண்டார்கள்.
"எல்லாம் ஓகே தான். ஆனா ஸாரி கட்டணும்னு நினைச்சா தான் கடுப்பா இருக்கு" என்றாள் லாவண்யா.
"நீங்க ரெண்டு பேரும் ரொம்ப குடுத்து வச்சவங்க. உங்க விருப்பத்துக்கு என்ன டிரஸ் வேணும்னாலும் போட்டுக்க சொல்ற ரொம்ப நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்க. என் அக்கா, வெயில் காலமா இருந்தாலும் புடவை தான் கட்டணும்னு அவங்க மாமியார் சொல்லுவாங்க தெரியுமா?" என்றாள் அர்ச்சனா.
"அப்படியா? நல்ல காலம் எங்களுக்கு அப்படி ஒரு மாமியார் கிடைக்கல..." என்றாள் குஷி.
"மாமியார் மட்டுமல்ல, உங்களுக்கு கிடைச்ச புருஷன்ங்களும் ரொம்ப நல்லவங்க. அர்னவ் அண்ணனோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, உன்னை அவன் வீட்டுக்கு தரதரதரன்னு இழுத்துகிட்டு போயிருப்பான். அந்த மாதிரி முரட்டுத்தனமான புருஷனை கொடுக்காம இருந்ததுக்கும் சேர்த்து கடவுளுக்கு நன்றி சொல்லு" என்றாள் அர்ச்சனா.
குஷி அமைதியாய் இருந்தாள்.
"அர்ச்சனா சொல்றது சரி தான் குஷி. எப்போ அர்னவ் அண்ணன் தன்னோட பொறுமையை இழக்கப் போறாருன்னு தெரியல. நேத்து அவர் இல்லாதப்போ நீ வீட்டுக்கு வந்துட்டு போனேன்னு பெருஞ்சப்போ, அவர் ரொம்ப அப்செட் ஆயிட்டாரு"
"அவனுக்கு எப்படி தெரிஞ்சது?"
"அம்மா தான் அவர் முன்னாடி அதைப் பத்தி பேசினாங்க"
"ரத்னா ஆன்டியா?" என்று பெருமூச்சு விட்ட அவள்,
"என்ன நடந்துச்சுன்னு சொல்லு" என்றாள்.
முதல் நாள் மாலை...
நந்தாவுக்கு கேசரி கொண்டு வந்து கொடுத்தார் ரத்னா. அதே நேரம் வீட்டினுள் நுழைந்தான் அர்னவ்.
"அரு, வந்து கேசரி சாப்பிடு"
"நான் முகம் கை கால் கழுவிட்டு வரேன் மா" தன் அறையை நோக்கி சென்றான் அவன்.
"மா, கேசரி செம டேஸ்டா இருக்கு" என்றான் நந்தா.
"குஷியும் அதே தான் சொன்னா" என்றார் அவர்.
அதை கேட்டு நின்ற அர்னவ், படி இறங்கி அவசரமாய் ஓடி வந்தான்.
"குஷி இங்க வந்தாளா?"
தன் தோள்களை அனாயாசமாய் குலுக்கிய ரத்னா,
"ஹான்... ஸ்வீட்டும் ஸ்னாக்ஸும் செய்யும் போது நான் எப்படி அவளை கூப்பிடாம இருப்பேன்?
"அப்படின்னா, அவ இங்க அடிக்கடி வராளா?"
"தினமும் தான் வரா" என்றான் நந்தா.
"நீயும் அவளை பாத்தியா?"
"ஆமாம். தினமும் தான் பாக்குறேன். அது என்ன பெரிய விஷயம்?"
அவன் மனம் இருந்த நிலையை உணராமல் பேசினார்கள் அவர்கள்.
"ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்க போறீங்க?" என்றான் அர்னவ்.
"வழக்கம் போல உனக்கு இட்லி தான் செய்யப் போறேன்"
"புதினா சட்னியும் செஞ்சுட்டு அவளை கூப்பிடுங்க"
"அய்யய்யோ, அவ படிக்கும் போது நான் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்"
"சரி, நீங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நீங்க அதை செஞ்சு கொடுங்க. நான் கொண்டு போய் கொடுத்துட்டு வரேன்"
"அவ ரூமுக்கு போய் கதவை சாத்திட்டா, யாருக்காகவும் கதவை திறக்க மாட்டா"
அவரை கோபமாய் முறைதான் அர்னவ்.
"என்னை நம்பு, அரு. நேத்து நான் ரவா இட்லி எடுத்துக்கிட்டு அவங்க வீட்டுக்கு போனப்ப, கரிமா தான் சொன்னா"
ஒன்றும் கூறாமல் தன் அறைக்குச் சென்ற அவன், கேசரியை சாப்பிட கீழ்தளம் வரவில்லை.
என்று முதல் நாள் நடந்தவற்றை கூறி முடித்தாள்.
இன்று...
"நெஜமாவா? அட கடவுளே! ஒருவேளை அவரு குஷி வீட்டுக்கு போய், அவ இன்னும் வீட்டுக்கு வரல, காலேஜ்ல தான் இருக்கான்னு தெரிஞ்சுட்டா, நான் மாட்டிக்குவேனே!" என்றாள் அர்ச்சனா.
"நிச்சயமா நீ மாட்டிக்குவ" என்றாள் லாவன்யா.
"அய்யய்யோ..."
"நீ கவலைப் படாத. அவன் எங்க வீட்டுக்கு போக மாட்டான்"
ஆனால் குஷி நினைத்தது தவறு. அவன் நேராக குஷியின் வீட்டுக்கு தான் சென்றான், அவளை எப்படியும் பார்த்தே தீர வேண்டும் என்ற நோக்குடன். அவனை வரவேற்றார் கரிமா.
"மாமனார் மாமியாரை பார்க்க, பொண்டாட்டி இருக்கணும்னு அவசியம் இல்லன்னு இப்பவாவது எங்க மாப்பிள்ளைக்கு புரிஞ்சதே"
"அப்படின்னா குஷி இன்னும் காலேஜ்ல இருந்து வரலையா?"
"இன்னும் வரலையே... அவ எப்பவும் வழக்கமா நாலரை மணிக்கு தானே வருவா? உங்க காலேஜ் டைமிங் தெரியாத மாதிரி கேக்குறியே..."
"ஆனா அவ காலேஜ்ல இல்லையே... அவ லாஸ்ட் பீரியடுக்கு முன்னாடியே கிளம்பி போயிட்டதா அர்ச்சனா சொன்னாளே"
"அப்படியா? இருங்க கேக்கலாம்" என்று தன் கைபேசியை எடுத்து குஷிக்கு ஃபோன் செய்தார் கரிமா.
அந்த அழைப்பை ஏற்ற அவள்,
"சொல்லுங்க மாம்" என்றாள்.
"நீ எங்க இருக்க?"
"வேற எங்க இருப்பேன்? காலேஜ்ல தான் இருக்கேன்"
"ஆனா நீ காலேஜில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துட்டதா அர்னவ்கிட்ட அர்ச்சனா சொன்னாளாமே..."
குஷி திகைத்தாள். சில நொடி யோசித்த அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு,
"ஆமாம், அர்ச்சனாகிட்ட நான் கிளம்புறதா சொன்னேன். ஆனா எங்க ப்ரொஃபசர் ஃப்ரீயா இருக்கிறது தெரிஞ்சது. அதனால என்னோட டவுட்டை கிளியர் பண்ணிட்டு வந்துடலாம்னு அவரை பார்க்க போயிட்டேன்"
"வீட்டுக்கு வர லேட் ஆகுமா?"
"அப்படித்தான் நினைக்கிறேன்"
"சரி" என்று அழைப்பை துண்டித்தார் கரிமா.
"அவ இன்னும் காலேஜ்ல தான் இருக்கா"
"ஆனா..."
"அவ காலேஜ்ல இருந்து கிளம்பத்தான் இருந்தாளாம். ஆனா ப்ரொபசர் ஃப்ரீயா இருக்கிறது தெரிஞ்சு, டவுட் கேட்க போயிட்டாளாம்"
"சரிங்க ஆன்ட்டி. நான் கிளம்புறேன்"
வீட்டுக்கு வந்த அவன், குளியலறைக்குச் சென்று, வேண்டிய நேரம் எடுத்துக்கொண்டு ஷவரின் கீழே நின்றான். அவன் குளித்துக் கொண்டு மட்டும்தான் இருந்தான் என்று நம்மால் கூற முடியாது. அவன் தன் மனைவியை எப்படி மடக்கி பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான் என்று கூறலாம். அவன் அமைதியாய் இருந்தான். அதனால் அவன் மனதில் சலனம் இல்லை என்று நாம் கூற முடியாது. அஞ்சலி கூறியதுபடி, குஷி ஏற்கனவே படிக்க வேண்டிய அனைத்தையும் படித்து முடித்து விட்டாள். அப்படி என்றால், இப்பொழுது அவளை அவன் டிஸ்டர்ப் செய்வதால் அவளுடைய படிப்புக்கு எந்த பங்கமும் நேராது.
எவ்வளவு தைரியம் இருந்தா, அவள் அவனை தவிர்த்து கொண்டு வருவாள்...! அவன் செய்தது தவறு தான். அதனால் என்ன? அது அவளது நல்லதுக்காக தானே அவன் செய்தான்? அதற்காக அவள் அவனுடன் இவ்வளவு கடுமையாய் விளையாட வேண்டுமா? இப்பொழுது அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம்.
அவன் வருவதை கண்ட ரத்னா,
"அரு, வா, வந்து காபி சாப்பிடு" என்றார்.
"நான் என் மாமியார் வீட்டில் சாப்பிட்டுக்கிறேன்"
"ஏன்?" என்றார் ஆச்சரியமாய்.
"உங்க மருமகளை மாதிரி, என் மாமியார் வீட்ல சாப்பிடவும் பிடிக்கவும் எனக்கும் உரிமை இருக்கு" என்றபடி அங்கிருந்து சென்றான்.
தன் மகனுக்கு திடீரென்று என்ன ஆனது என்று புரியாத ரத்னா புருவம் உயர்த்தினார்.
புத்துணர்ச்சியுடன் மீண்டும் தன் வீட்டிற்கு வந்தவனை பார்த்த கரிமா, புன்னகை புரிந்தார்.
"ஆன்ட்டி எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கிடைக்குமா?" என்றான்.
"நிச்சயமா" என்றார் அவர் ஆச்சரியத்துடன்.
அவருக்கு தெரியும், அவன் தன் வீட்டில் இருந்து தான் வருகிறான் என்று. அங்கு ரத்னா இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவன் உண்மையிலேயே காஃபியை குடிக்கத்தான் அங்கு வந்தானா? சில நிமிடங்களில் ஆவி பறக்கும் ஸ்ட்ராங்கானா காப்பி அவன் கைக்கு வந்தது. பொறுமையாய் வேண்டிய நேரம் எடுத்து அதை சுவைத்து பருகினான். கடைசி வாய் காப்பியை அவன் குடித்து முடித்து குவளையை மேசையின் மீது வைக்கவும், குஷி வீட்டினுள் நுழையவும் நேரம் சரியாய் இருந்தது. புன்னகைத்தபடி உள்ளே நுழைந்த அவளது புன்னகை, அவன் அங்கு காப்பி குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து மாயமானது. அவனது கூரிய பார்வை அவளை ஏதோ செய்தது. அதுமட்டுமின்றி அவன் உதிர்த்த அடுத்த வார்த்தைகள் அவளை மட்டுமல்ல, கரிமாவையும் கூட வியக்கச் செய்தது.
"ஹாய் பொண்டாட்டி..."
அதற்கு எப்படி ரியாக் செய்வது என்று குஷிக்கு தெரியவில்லை. ஆனால் கரிமாவின் கண்கள் பெரிதாயின.
"மாம், நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்" என்று அவசரமாய் தன் அறையை நோக்கி சென்றாள்.
அவளை பின்தொடர்ந்து சென்ற அர்னவ்வை பார்த்து சிலை என நின்றார் கரிமா.
குஷி கதவை சாத்தி தாழிடும் முன், அந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.
"என்ன போக்கிரித்தனம் இது?"
"நான் இன்னும் என் போக்கிரித்தனத்தை ஆரம்பிக்கவே இல்லயே..."
"நான் உன்னை வார்ன் பண்றேன்"
"தாராளமா பண்ணிக்கோ"
"மரியாதையா வீட்டுக்கு போ" என்றாள், எங்கோ பார்த்தபடி.
"இது தான் உன் பாஷையில வார்னிங்கா?" அவளை நோக்கி அவன் நகர, அவள் பின்னால் நகர்ந்தாள்.
"நான் படிக்கணும்"
"என்ன படிக்கணும்? நீ தானே சொன்ன, உனக்கு படிக்கிறதுக்கு கொஞ்ச நாளே போதும்னு... அப்படி பார்க்க போனா, இந்த நேரம் நீ உன்னோட போர்ஷன் எல்லாத்தையும் படிச்சு முடிச்சு இருக்கணுமே"
"இல்ல நான் இன்னும் படிக்கல" என்றாள் தடுமாற்றத்துடன்.
பின்னால் இருந்த அலமாரியில் அவள் மோதி நிற்க, தன் கைகளை இரண்டு பக்கமும் வைத்து அவளை அசைவிடாமல் தடுத்தான்.
"நீ இன்னும் படிச்சு முடிக்கலன்னு என் கண்ணை பார்த்து சொல்லு..."
"இப்போ நான் படிச்சி முடிச்சிட்டா தான் என்ன?"
"அப்படின்னா உன்னோட டைமை உன் புருஷனுக்கும் கொஞ்சம் கொடுக்கலாமே... ஏன்னா, நீ ரொம்ப அதிகமாவே அவன் கூட கண்ணாமூச்சி விளையாடிட்ட"
"நான் எதுவும் விளையாடல"
"அப்படியா?" என்ற படி அவள் கூந்தலை ஒதுக்கி விட்டான்.
"உனக்கு இப்போ என்ன வேணும்?"
"எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா?"
"தெரியாது"
"உன்னோட திங்ஸை எல்லாம் எடுத்துக்கிட்டு என் கூட வா"
"வரமாட்டேன்"
"அப்படின்னா நான் உன்னை இங்கிருந்து தூக்கிகிட்டு போனா, என்னை குற்றம் சொல்லாதே"
"நீ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க?"
"என்னை பத்தி நீ ( என்பதை அழுத்தி) என்ன நினைச்சுகிட்டு இருக்க? ஆங்?" என்ற அவனது குரல் சீரியஸ் ஆனது.
"நான் தப்பு பண்ணினேன். ஒத்துக்கிறேன். அதுக்காக நீ உன்னை பார்க்க கூட விடாம என்னோட ஃபீலிங்ஸோட இவ்வளவு தூரம் விளையாடிக்கிட்டு இருக்க..?"
"நீ பிளான் பண்ண மாதிரி கோயம்புத்தூர் போயிருந்தா, என்ன பண்ணி இருப்ப? நீ அங்க என்னை பார்க்காம தானே இருந்திருப்ப?"
"ஆனா பக்கத்திலேயே இருந்துகிட்டு பார்க்காம இருக்குறதுக்கு வித்தியாசம் இருக்கு"
"அதனால?"
"வீட்டுக்கு வா"
குஷி அமைதி காத்தாள்.
"குஷி என் பொறுமையை சோதிக்காத. நான் உன்னை ரொம்ப மதிக்கிறேன். வீட்டுக்கு வந்துடு"
"ஏன்? நான் எதுக்காக நீ எடுக்கிற எல்லா முடிவையும் ஏத்துக்கணும்? நான் உன் பொண்டாட்டி அப்படிங்கறதாலயா?"
"என்னுடைய எண்ணம் அதுவா இருந்திருந்தா, நீ இங்க வந்த அடுத்த நாளே உன்னை இங்கிருந்து இழுத்துகிட்டு போயிருப்பேன். இப்போ எதுக்காக நான் உன்னை கூப்பிடுகிறேன்னு உனக்கு தெரியும்"
"எது எப்படி இருந்தாலும் நான் உன் கூட வர மாட்டேன்"
அப்போது அவர்கள்,
"அவ வருவா" என்று ஷஷி கூறுவதை கேட்டு பின்னால் திரும்பினார்கள். அவர் கரிமாவுடன் நின்று இருந்தார்
"குஷி அர்னவ் கூட கிளம்பி போ" என்றார் அவர்.
"ஆனா நான் முக்கியமான வேலையை முடிக்க வேண்டி இருக்கு"
"உனக்கு நான் ஹெல்ப் பண்றேன்" என்றான் அர்னவ்.
"ஒன்னும் தேவை இல்ல" என்றாள் அவள் வெடுக்கென்று.
"நான் சொல்றதை நீ கேக்க மாட்டியா?" என்றார் ஷஷி.
பெருமூச்சு விட்ட அவள்,
"சரி, ஆனா இன்னைக்கு இல்ல. நாளைக்கு போறேன். ப்ளீஸ்..." என்றாள்.
அவளை இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அர்னவ்வை பார்த்த ஷஷி,
"அவளுக்கு ஒரு நாள் டைம் கொடுங்க. நாளைக்கு சாயங்காலம் அத உங்க வீட்ல இருப்பா"
தலையசைத்த அவன், அங்கிருந்து செல்லும் முன் திரும்பி ஒரு முறை அவளை பார்த்து விட்டு சென்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top