39 பின் விளைவு

39 பின் விளைவு

விருந்தினர் அறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டாள் குஷி. இந்த முறை அர்னவ்க்கு உதவ ரத்னா தயாராக இல்லை. ஆனால் லாவண்யா முயன்றாள். ஆனால் அவள் அதில் தோற்றாள். அவள் பேச்சைக் கேட்க குஷி தயாராக இல்லை. அவள் வருவாள் என்று எதிர்பார்த்து, வரவேற்பு அறையிலேயே காத்திருந்தான்  அர்னவ். மெல்ல மெல்ல அவன் தன் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினான், அவள் இரவு உணவு சாப்பிட கூட வெளியே வராத போது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வது ஒன்றும் அவனுக்கு பெரிய காரியம் அல்ல. ஆனால் அவன் அப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன், தன் அம்மாவை கடந்து செல்ல வேண்டும். பிரச்சனையை மேலும் சிக்கலாக்க அவன் விரும்பவில்லை. இந்தப் பிரச்சனைக்கு பிறகு, m யாருக்குமே சாப்பிட தோன்றவில்லை. குஷி பசியுடன் இருப்பதை ரத்னாவால் பொறுக்க முடியவில்லை. ஒரு தட்டில் உணவை எடுத்துச் சென்று கதவை தட்டினார்.

"குஷி கதவை திற..."

பதில் இல்லை...

"உண்மையிலேயே உனக்கு என் மேல மரியாதை இருந்தா, கதவைத் திற. நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன். வேற யாரும் உள்ள வரமாட்டாங்க" என்றார் அங்கு அமர்ந்திருந்த அர்னவ்வை பார்த்தவாறு.

கதவை திறந்த குஷி, மீண்டும் சென்று கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்தார் ரத்னா. வீங்கி சிவந்திருந்த குஷியின் கண்களை பார்த்து அவள் மனம் வேதனைப்பட்டது. அவர் குஷியின் தோளை தொட, அவள் அவரது இடையை சுற்றி வளைத்துக் கொண்டு, வெடித்து அழுதாள். அவளது தலையை ஆதரவாய் தடவி கொடுத்து விட்டு, அவள் பக்கத்தில் அமர்ந்தார் அவர். 

"என் மேல கோவமா இருக்கியா?"

அவருக்கு பதில் கூறாமல் அமைதி காத்தாள் குஷி.

"அப்படின்னா, நீ என் மேல கோவமா இருக்க..."

அதற்கும் அவள் பதில் கூறவில்லை.

"ஐ அம் சாரி" என்றார்.

"என் மேலயும் தப்பு இருக்கு. எல்லாத்துக்கும் ரொம்ப ஓவரா ரியாக் பண்றது... எல்லாத்தையும் ரொம்ப ஓவரா யோசிக்கிறது... எல்லாத்துக்கும் மேல, எனக்கு பிடிச்சவங்களும் என்னை மாதிரியே இருப்பாங்கன்னு முட்டாள்தனமா நினைக்கிறது..."

"ஐ அம் சாரி. நாங்க உன்னை ஹர்ட் பண்ணிட்டோம். ஆனா யாருமே அதை வேணும்னு செய்யல. எங்களுக்கு உன் மேல அக்கறை இருக்கு. சில சமயங்கள்ல, எப்ப வேணும்னாலும் அனுபவிக்கிற சந்தர்ப்பம் இருக்கக்கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக நம்ம வாழ்க்கையோட குறிக்கோளை நம்ம இழந்துடுவோம். அர்னவ் உன்னோட புருஷன். உன்னை அவனும் மனசார காதலிக்கிறான். ஆனாலும் உன்னை விட்டு பிரிஞ்சு போக அவன் நினைச்சதுக்கு காரணம், நீ உன்னுடைய மரியாதையை இழந்திடக் கூடாதுன்னு தான். உன்னோட கல்யாண வாழ்க்கையை, உன் பரிட்சையை நல்லபடியா முடிச்சதுக்கு பிறகு நீ சந்தோஷமா வாழ முடியும். ஆனா பரிட்சையில ஃபெயில் ஆயிட்டா, அதுக்கப்புறம் நம்மால எதுவுமே செய்ய முடியாது, வருத்தப்படுறதை தவிர... உண்மையா இல்லையா சொல்லு "

"உண்மை தான். ஆனா அதுக்காக எங்க வாழ்க்கையோட எல்லா முடிவையும் என்கிட்ட கேட்காம, அவனாவே எடுக்கிறது எந்த விதத்துல நியாயம்? நான் என்ன குழந்தையா? என்னால புரிஞ்சுக்க முடியாதா? அவன் என்கிட்ட இருந்து விலகி விலகி போறதை பார்த்து எனக்குள்ளே ஒரு பயம் ஏற்பட்டுச்சு. அதனால தான் என்னோட லிமிட்டை நான் க்ராஸ் பண்ணிட்டேன்" அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

"அவன் எடுத்த முடிவு சரின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா நிச்சயம் அவன் உன்னை தவிர்க்கல. அவனை மன்னிச்சிடுன்னு நான் சொல்ல மாட்டேன். அது உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற தனிப்பட்ட விஷயம். அவனை எப்படி நீ டீல் பண்ணணும்னு நினைக்கிறியோ, அப்படி டீல் பண்றதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு "

"அவனுக்கு தண்டனை கொடுக்கவோ மன்னிக்கவோ நான் யாரு?"

"சரி, நீ மன்னிக்க வேண்டாம். அவன் கஷ்டப்பட்டு அதை அடையட்டும்..."

"அவன் கோயம்புத்தூர் போறானா?" என்றாள் தயக்கத்துடன்.

"இல்ல. அவன் போக மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு" என்றார் அவளது கையை அன்பாய் அழுத்தியபடி.

"ம்ம்ம்"

"நீ என் மேல கூட கோவமா இருக்கியா?"

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

"அப்படின்னா, இதை சாப்பிடு"

ஒரு வாய் சோறை அவளை நோக்கி அவர் நீட்டினார். அவரிடமிருந்து அந்த தட்டை பெற்று, ஒரு பிடி சோறு எடுத்து அதை ரத்னாவை நோக்கி நீட்டினாள். அவர் அவளைத் திகைப்புடன்  பார்க்க,

"நீங்களும் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்" என்றாள்.

புன்னகையுடன் அவள் கொடுத்த உணவை சாப்பிட்டார் ரத்னா.

"நீங்க எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க. நான் எது செஞ்சாலும் நீங்க என் மேல கோபப்படக்கூடாது"

"நான் கோபப்பட மாட்டேன். ஆனா நீ அவன் செஞ்ச மாதிரி எதுவும் முட்டாள் தனமா செய்ய மாட்டேன்னு நம்புறேன்"

"இல்ல ஆன்ட்டி... நான் ஒத்துக்கிறேன், நான் எல்லா விஷயத்துலயும் அவசரமான முடிவை தான் எடுத்திருக்கேன். ஆனா இந்த தடவை நிச்சயம் அப்படி நடக்காது"

அவள் உறுதியுடன் கூறியது ரத்னாவிற்கு கலக்கத்தை தந்தது. அவள் என்ன செய்யப் போகிறாளோ என்று எண்ணியபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அவரிடம் வந்த அர்னவ்,

"அவ சாப்பிட்டாளா மா?" என்றான்.

"நான் அவளை சாப்பிட வச்சேன்" என்றார்.

"அவ நல்லா இருக்கா இல்ல?"

"அவ நல்லா இருப்பான்னு நினைக்கிறியா?"

அவன் அமைதியானான். அந்த இடம் விட்டு சென்ற அவர்,

"எல்லாரும் சாப்பிட வாங்க" என்றார்.

அனைவரும் வந்து அமர்ந்தார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு தத்தம் அறைகளுக்கு சென்றார்கள். ஆனால், அர்னவ் மட்டும் குஷியை காண்பதற்காக  வரவேற்பறையிலேயே இருந்துவிட்டான். நள்ளிரவு வரை காத்திருந்த அவன், எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனுக்கு விழிப்பு வந்த போது, விருந்தினர் அறையின்  கதவு திறந்திருந்தது. குஷியை காண்பதற்காக ஓடி சென்றான். ஆனால் அவள் அங்கு இல்லை. அங்கிருந்து தன் அறைக்கு விரைந்தான். அவனது அறையும் காலியாய் இருந்தது. அவள் எங்கு சென்றாள்? ஒருவேளை அவள் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாளோ?

அங்கு இருக்கிறாளா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக அங்கும் சென்றான். இயலாமையுடன் அவனைப் பார்த்த கரிமா, *ஆமாம்* என்று தலையசைத்தார்.

"அவ ரூம்ல தான் இருக்கா. ரொம்ப அப்செட்டா இருக்கா. நீ இப்போ அவகிட்ட பேசாம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்"

"நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன், ஆன்ட்டி"

"இல்ல அர்னவ், அவ கோபம் கொஞ்சம் குறையட்டும். கோபமா இருக்கும் போது பேசினா, பிரச்சனை இன்னும் மோசமா தான் ஆகும்" என்றார் ஷஷி.

அவர் கூறுவது சரி என்பதால், கவலையுடன் வீடு திரும்பினான் அர்னவ். அவளது கோபம் கொஞ்சம் தனியட்டும். அவளிடம் மாலையில் பேசிக்கொள்ளலாம் என்று எண்ணினான் அவன். ஆனால் அவன் மாலை வீடு திரும்பிய போது, குஷியின் அலமாரி காலியாய் கிடந்தது. அவளது பொருட்கள் அங்கு ஏதுமில்லை. அது அவனுக்கு கோபத்தை தந்தது. அதே கோபத்துடன் அவளது வீட்டை நோக்கி சென்றான். அவன் செல்வதை பார்த்த ரத்னா அவனை தடுக்கவில்லை. அவர்கள் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.

நேராக குஷியின் அறைக்கு வந்த அவன், அவள் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஒன்றும் கூறாமல் அப்படியே நின்றான். தன் தலையை உயர்த்தி அவன் நிற்பதை பார்த்த அவள், முகத்தில் எந்த மாற்றமும் இன்றி, மீண்டும் தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க துவங்கினாள். 

அவளுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான் அர்னவ்.

"குஷி, இதெல்லாம் என்ன?"

அவனை அவள் நிமிர்ந்து பார்க்கவுமில்லை, பதில் கூறவும் இல்லை"

"குஷி, ஐ அம் சாரி..."

அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"நீ படிக்கணும்னு தான்..."

"எனக்கு தெரியும். நான் இப்போ அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கேன்...?" என்று தன் கையில் இருந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினாள்.

"வீட்டுக்கு வா..."

"நிச்சயமா வரேன். என்னோட எக்ஸாம் எல்லாம் முடியட்டும்"

"நீ வீட்டுக்கு வந்தா, உனக்கு நான் ஸ்டடிஸ்ல ஹெல்ப் பண்றேன்"

"என் காலேஜ்ல ரொம்ப நல்ல ப்ரொஃபஸர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு எப்படி ஈஸியா டீச் பண்ணணும்னு தெரியும். என்னோட டவுட்டை எல்லாம் அவங்ககிட்ட கிளியர் பண்ணிக்கிறேன்"

கண்களை மூடி மென்று விழுங்கிய அவன்,

"ஐ அம் ரியலி சாரி" என்றான்.

"அதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல. என்னோட லிமிட் என்னன்னு நான் புரிஞ்சி நடந்திருக்கணும்"

"நீ நினைக்கிறது தப்பு..."

"சரியும், தப்பும், ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடும். உன்னோட பார்வையில நான் தப்பா இருந்திருக்கேன். அது என்னோட பிரச்சனை இல்ல"

"உன் மேல எந்த தப்பும் இல்ல"

"ரொம்ப தேங்க்ஸ். இப்போ என்னை படிக்க விடு"

"என்னை இங்கிருந்து போக சொல்றியா?" என்றான் கவலையாக.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் போகலன்னா என்ன செய்வ?"

"அது உன் இஷ்டம்"

"நான் உனக்கு எல்லாத்தையும் தெளிவுபடுத்துறேன்"

"அதை நீ முன்னாடியே செஞ்சிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்"

"இப்போ செய்யறதுனால என்ன குறைஞ்சிட போகுது?"

"நான் தான் எல்லாத்தையும் ஏற்கனவே தெளிவா புரிஞ்சுகிட்டேனே..."

"இல்ல... நீ என் மேல கோவமா இருக்க"

"டு பி ஹானஸ்ட்! ஆமாம்...!"

"குஷி, தயவுசெய்து புரிஞ்சுக்க முயற்சி பண்ணு"

"நான் நல்லா புரிஞ்சுகிட்டேன், அர்னவ். சுலபமா கிடைக்கிற எதையும் மக்கள் மதிக்க மாட்டாங்க அப்படிங்கிற உண்மையை மறந்து, நான் என் இன்ட்ரஸ்ட்டை உன் மேல காட்டியிருக்கக் கூடாது. புருஷன் பொண்டாட்டி உறவாவே இருந்தாலும், அதுக்கும் ஒரு எல்லை இருக்குன்னு நான் உணர்ந்திருக்கணும். (அவள் தொண்டையை அடைத்தது) என் வாழ்க்கையில திடீர்னு ஏற்பட்ட மாற்றத்தால என்னோட கவனம் சிதறுனது உண்மை தான். ஆனா என்னோட கரியரை பத்தி கவலைப்படாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்? நான் எப்படி படிப்பேன்னு எப்பவாவது நீ என்கிட்ட கேட்டிருக்கியா? நான் எப்பவும் புக்கும் கையுமா இருக்குறவ கிடையாது. எக்ஸாமுக்கு பத்து நாளுக்கு முன்னாடி படிச்சாலே எனக்கு நல்ல மார்க் வந்துடும். எத்தனையோ தடவை முதல் நாள் ரிவைஸ் பண்ணி எக்ஸாம் எழுதி இருக்கேன். உன்னை மாதிரி நல்ல பையனால அதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாது. எல்லாரும் நம்மளை மாதிரி இருக்க மாட்டாங்க, நம்மளை மாதிரியே மத்தவங்களும் ஃபீல் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு நீ புரிய வச்சுட்ட"

"உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல" என்றான் குற்ற உணர்வுடன்.

"அதை ஒரு மாசம் கழிச்சு நீ செய்யலாம். இப்போ இங்கிருந்து போ'

அதன் பிறகு, அவள் அவனை பார்க்கவே இல்லை. தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க துவங்கி விட்டாள். அவளது கவனம் முழுவதும் அந்த பாடத்திலேயே இருந்தது. அது அவனை வியப்படைய செய்தது. அவனது இருப்பு அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றால், அவள் ஏன் தன் வீட்டிற்கு வரக்கூடாது என்று எண்ணினான் அவன்.  ஆனால் அவள் மிகவும் பிடிவாதமாக காணப்பட்டாள். அது அவனுக்கு உறுத்தலை தந்தது. அரைமனதாய் அங்கிருந்து கிளம்பினான். பின்விளைவை பற்றி யோசிக்காமல் அவன் மிகவும் தவறான முடிவை எடுத்து விட்டான். அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமாய் இருக்கப் போவதில்லை என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் சில நாட்களில், அவள் சகஜமாய் மாறி விடுவாய் என்று அவன் நம்பினான். எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்ற வல்ல மருந்து, காலம் ஒன்று தானே...!

ஆனால், அவனது எண்ணத்தை பொய்யாக்கினாள் குஷி. அவளை சந்தித்து விட்டு வந்த பிறகு, ஒரு வாரத்திற்கு அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை. திருத்தம்... தன்னை பார்க்கும் வாய்ப்பை அவள் அவனுக்கு வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் அவள் கல்லூரிக்கு சென்றாள். பக்கத்து வீடு தான் என்றாலும், அவன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினாள் குஷி. லாவண்யாவிடம் கூட பேசுவதை குறைத்துக் கொண்டாள் அவள், தான் கல்லூரிக்கு செல்லும் நேரத்தை ரகசியமாய் வைத்துக் கொள்ள. அவளது நடவடிக்கைள் அர்னவ்க்கு பயத்தை அளித்தது. அவன் அஞ்சலிக்கு ஃபோன் செய்தான் அந்த அழைப்பை அவள் ஏற்றாள்.

"ஹாய், திடீர்னு என்ன என் ஞாபகம்?"

"குஷி எப்படி இருக்கா?" என்றான்.

"இதுக்காகத்தான் நீ ஃபோன் பண்ணி இருப்பேன்னு நான் நெனச்சேன். ஒரு நல்ல புருஷனா உன் வைஃப் எப்படி படிக்கிறான்னு தெரிஞ்சுக்க நினைக்கிற..."

"ஆமாம், அவ எப்படி படிக்கிறா?"

"என்னை அவளுக்கு கிரேட் கொடுக்க சொன்னா, நான் அவளுக்கு ஏ பிளஸ் பிளஸ் பிளஸ் கொடுப்பேன்... ஆனா அதுக்கு பர்மிஷன் இல்ல" என்று சிரித்தாள்.

"நெஜமாவா?" மென்று விழுங்கினான் அவன்.

"ஆமாம், இன்னைக்கு எழுத சொன்னா கூட, அவளோட எக்ஸாம்சை அவ எழுதிடுவா. கிட்டத்தட்ட எல்லா போர்ஷனையும் முடிச்சிட்டா. அவளைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம். அவளோட ப்ராஜெக்ட் ஒர்க்குலயும் அவதான் ஃபர்ஸ்ட் மார்க்"

"நிஜமாவா? அவளோட ப்ராஜெக்ட் என்ன?" என்றான் அதிர்ச்சியுடன்.

"என்ன இப்படி கேக்குற? நீ தான் அவளோட ப்ராஜெக்ட்ல அவளுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பேன்னு நான் நெனச்சேனே... உண்மையாவே உனக்கு அதை பத்தி தெரியாதா?" என்றாள் நம்பிக்கை இல்லாமல்.

"இல்ல. நான் போன வாரம் ஃபுல்லா ரொம்ப பிசியா இருந்துட்டேன். என்னால அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியல"

"அப்படின்னா, அவ ராஜாவுக்கு ஏத்த ராணி தான்..."

"அஃப்கோர்ஸ்..."

"சரி, எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு. நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்"

"சரி" அழைப்பை துண்டித்தான்.

அவனது கவலை அதிகரித்தது. அவள் தனது ப்ராஜெக்ட்டுக்கு அவனது உதவியை நாடுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவனுக்கு தெரியாமலேயே அவள் அதை செய்து முடித்துவிட்டாள். இன்று கூட அவளது பரிட்சையை அவளால் எழுத முடியும் என்று அஞ்சலி கூறியது அவனுக்கு திகைப்பை அளித்தது. ஒரே வாரத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை காண்பிப்பது என்பது சாத்தியமா? பரீட்சைக்கு சில நாட்களுக்கு முன்பு தான் படிப்பேன் என்று அவள் கூறியது உண்மையாக இருக்குமோ? அவன் அவளை குறைத்து மதிப்பிட்டு விட்டானோ? ஆனால் எப்பொழுதும் அவள் தோய்வாகவே காணப்பட்டாளே...! எவ்வளவு அழகான வாழ்க்கையை அவனே சிக்கலாக்கி கொண்டானே...!

அவன் இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாய் கையாண்டிருக்க வேண்டும். அவனை மிக ஆழமாய் காதலிக்கும் அவள், அவர்களுக்கிடையில் இருந்த மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து வெளிவந்த பிறகு, தன் காதலை வெளி காட்ட வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? அர்னவ்வுடன் ஒரு வாழ்க்கை என்பது தானே அவளது கனவு...! அவளது வாழ்க்கையில் அவளுக்கு எதிர்பார்ப்புகள் இருக்காதா...? அதுவும், அவள் விரும்பிய அவனுடன்...?

அவளிடம் கலந்து ஆலோசிக்காமல், கோவை செல்லும் முடிவை புத்திசாலி போல் அவன் எடுத்திருக்கக் கூடாது. புரிந்து கொள்ளவே கடினமான பல இயந்திரங்களை, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வயப்படுத்த தெரிந்த அவன், தன் மனைவியின் இதயத்தை வயப்படுத்த தவறித் தான் விட்டான்...!

தொடரும்...




Bạn đang đọc truyện trên: AzTruyen.Top