35 காத்திருந்த சங்கமம்
35 காத்திருந்த சங்கமம்
குஷியை குற்ற உணர்ச்சி கொன்றது. அந்த குற்ற உணர்ச்சியுடன் அர்னவ்வை எதிர்கொள்ள அவளால் இயலவில்லை. அவளால் எப்படி முடியும்? அவனது கேள்விகளுக்கு அவளிடம் பதில் இருக்கிறதா? அனைத்தும் இப்படி தலைகீழாய் மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லையே. சமையலறையை விட்டு வெளியே வராமல் அங்கேயே ஒளிந்து கொண்டிருந்தாள்.
அலுவலகம் செல்ல தயாராகி, உணவு மேசைக்கு வந்தான் அர்னவ். அங்கு அவன் குஷியை காணவில்லை அவள் எங்கு சென்றாள்? தோசை மற்றும் சட்டினியுடன் வந்த ரத்னா, அதை அவனுக்கு பரிமாறினார்.
"இன்னொன்னு வேணுமா?"
"இல்லம்மா, எனக்கு போதும்"
"குஷி, அவனுக்கு போதுமாம். தோசை சுடுறதை நிறுத்திடு" என்றார் சமையலறையை பார்த்தபடி ரத்னா.
அப்படி என்றால் அவள் சமையலறையில் தான் இருக்கிறாள்.
"மா, எனக்கு ஒன்னு வேணும்" என்றான் நந்தா.
ரத்னா குஷியிடம் அதை கூறுவதற்கு முன், குஷியே பதில் கூறினாள்.
"சுடுறேன் ஆன்ட்டி"
"மா, அவங்களுக்கு லேட் ஆகலையா?" என்றான் அர்னவ்.
"அவங்களுக்கு இன்னைக்கு காலேஜ் லீவு. நேத்து ஆனுவல் டே நடந்தது இல்லையா, அதனால இன்னிக்கு லீவு கொடுத்திருக்காங்க" என்றான் நந்தா.
"ஆமாம், இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் ஃப்ரீ" என்றார்.
"மா, இன்னைக்கு சாயங்காலம் நானும் லாவண்யாவும் சினிமாவுக்கு போறோம்" என்றான் நந்தா.
"போயிட்டு வாங்க. நான் குஷியை எங்க கூட கூட்டிகிட்டு போறேன்"
"நாங்களா? எங்க போறீங்க?" என்றான் அர்னவ்.
"மெய்த்தி இருக்காரு இல்ல, பெங்காலி காரர்... அவர் வீட்ல இன்னைக்கு ஒரு பார்ட்டி. நானு, அப்பா, ஷஷி அண்ணன், கரிமா, எல்லாரும் போறோம். நாங்க குஷியையும் கூட்டிக்கிட்டு போறோம். அவ வீட்ல தனியா இருந்து என்ன செய்யப் போறா?தான் நீ வீட்டுக்கு தினமும் லேட்டா வரியே..."
ஆம் என்று தலையசைத்தான் அர்னவ். குஷிக்கு மன மாற்றம் தேவை. அவள் பார்ட்டிக்கு சென்றால் நல்லது தான். அவள் வெளியே வருவாளா என்று எதிர்பார்த்து, சமையலறையையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,
"எனக்கு ஒரு காபி கிடைக்குமா மா?" என்றான், அதை குஷி கொண்டு வருவாள் என்று எதிர்பார்த்து.
"நந்து, உனக்கு வேணுமா?"
"நிச்சயமா வேணும்" என்றான் அவன்.
காப்பி போட ரத்னாவே சமையலறைக்கு சென்று, அவனுக்கு ஏமாற்றம் அளித்தார்.
"ஆன்ட்டி, நீங்க போங்க. நான் காபி போட்டு தரேன்" என்றாள் குஷி.
"நெஜமா தான் சொல்றியா?"
"ஆமாம் ஆன்ட்டி. நான் தோசை சுட்டு முடிச்சிட்டேன்"
"அப்படின்னா சரி"
ரத்னா வெளியே வருவதை பார்த்த அர்னவ், திருப்தி அடைந்தான். அவனுடைய காப்பியை குஷி கொண்டு வருவாள் இல்லையா!
அப்பொழுது குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் உணவு மேசைக்கு வந்தாள் லாவண்யா.
"குட் மார்னிங், அம்மா"
"குட் மார்னிங்"
"குஷி எங்க?"
"காபி போடுறா"
குஷியை பார்க்க சமையலறைக்கு சென்றாள் லாவண்யா.
"குட் மார்னிங் டா..."
"குட் மார்னிங்" என்றாள் குஷி.
"உனக்கு கால் வலி எப்படி இருக்கு? எனக்கு கால் வலி பின்னுது"
"எனக்கும் தான்... இந்தா காபியை கொண்டு போய், ரெண்டு பேருக்கும் கொடு. நான் உனக்கு தோசை சுடுறேன்"
"நீ என் செல்லம்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, காபியுடன் வெளியே வந்தாள் லாவண்யா.
லாவண்யா காபி கொண்டு வருவதை பார்த்த அர்னவ் வருத்தமானான். அவன் அலுவலகம் கிளம்பிச் செல்லும் வரை குஷி வெளியில் வரவே இல்லை. அரை மனதோடு அலுவலகம் கிளம்பிச் சென்றான் அர்னவ். இப்பொழுது அவளை சங்கடப்படுத்த அவன் விரும்பவில்லை. மாலை அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன்.
அலுவலகம் வந்த அவனது மனம் வேளையில் ஈடுபடவே இல்லை. நாள் முழுக்க குஷியை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். அவன் அதிகப்படியாய் நடந்து கொண்டானோ என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. அவன் என்ன நினைக்கிறான் என்று கூறாவிட்டால், அவன் மனம் என்ன என்று அவளுக்கு எப்படி தெரியும்? அவள் உடைந்து போயிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். மாலை பார்ட்டிக்கு சென்று வந்தால், அவள் மனம் சற்று மாறும் என்று நம்பினான் அவன்.
மாலை
ரத்னாவிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றான் அர்னவ். பார்ட்டிக்கு கிளம்புகிறோம் என்று கூறத்தான் அவர் அழைத்தார் என்று எண்ணினான் அவன். ஆனால் அவனுக்கு வியப்பளிக்கும் வகையில்,
"அரு, நாங்க கிளம்பறோம். நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வர பாரு..." என்றார்.
"சீக்கிரமா எதுக்கு மா?"
"குஷி வீட்ல தனியா இருக்கா. அவ பார்ட்டிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா"
"அவ வர மாட்டேன்னு சொன்னா நீங்க ஏன் அவளை விட்டீங்க?"
"அவளுக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம். அவளுக்கு எங்க கூட வர விருப்பம் இல்லைனா நாங்க என்ன செய்றது?" என்று சற்று நிறுத்தி,
"நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா?" என்றார்.
அர்னவ் திகைப்படைந்தான். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவன் அம்மாவின் கண்ணில் இருந்து எதுவும் தப்ப முடியாது. அவர் இந்த கேள்வி கேட்டதற்கு, குஷியின் வாடிய முகம் காரணமாக இருக்கும்.
"நாங்க சந்தோஷமா தான் மா இருக்கோம்"
"அப்புறம் ஏன் குஷி டல்லா இருக்கா?"
"அவ டயர்டா இருக்க மா"
"இருக்கலாம். அதனால தான் நான் அவளை எதுவும் கேட்கல. சீக்கிரம் வீட்டுக்கு வர ட்ரை பண்ணு
"சரிமா நான் வீட்டுக்கு சீக்கிரம் போறேன்"
"உங்களுக்கு டின்னர் நான் ரெடி பண்ணிட்டேன். அவளை டிஸ்டர்ப் பண்ணாத"
"நான் பார்த்துக்கிறேன் மா"
அதன் பிறகு அலுவலகத்தில் தாமதிக்க அவனுக்கு என்ன காரணமும் இல்லை. உடனடியாக அங்கிருந்து கிளம்பினான்.
வரும் வழி முழுக்க அவளைப் பற்றியே யோசித்தபடி இருந்தான் அர்னவ். பாவம் அவள், அவனால் தான் அவள் வருத்தத்துடன் இருக்கிறாள். அதனால் தான் அவள் பார்ட்டிக்கு செல்ல விருப்பம் காட்டாமல் இருந்திருக்க வேண்டும். அவளை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று அவன் எதுவும் செய்யவில்லை. அவள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவள் அவனை தவறாக புரிந்து கொண்டு, உண்மை காரணம் தெரியாமல் அவன் மீது கோபமாக இருந்தாள். அன்று உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தால், அவள் நிச்சயம் வருத்தப்படுவாள் என்று அவனுக்கு தெரியும். வருத்தப்படுவதோடு மட்டுமல்ல அவள் அழுவாள், குற்ற உணர்ச்சிக்கு ஆளாவாள், தன் மீதே கோபம் கொள்வாள். அதனால் தான் அவளிடம் எதையும் கூற வேண்டாம் என்று அவன் எண்ணியிருந்தான்.
எது எப்படி இருந்தாலும் திருமணம் நிச்சயமான பிறகு, அவனால் அவளிடம் இருந்து விலகி இருக்க முடியவில்லை. அவளது அருகாமை அவனுக்கு ஒரு வித ஆனந்தத்தை தந்தது. அது, சீண்டிப் பார்த்து விளையாடச் செய்தது. அப்படி நடந்து கொண்டால், அவள் எப்பொழுதும் அவனையே நினைத்தபடி இருப்பாள் என்று அவன் எண்ணினான். அது அவனுக்கு ஒரு சுகத்தை தந்தது. அதனால் தனது உரிமையை அவளிடம் வெளிப்படுத்த தொடங்கினான்.
அவள் தன் படிப்பை முடிக்க அவளுக்கு அவகாசம் வேண்டும் என்று உணர்ந்த போது, தனது சேட்டைகளை அவன் நிறுத்திக் கொண்டான். அதனால் அவளிடமிருந்து விலகி இருப்பதென்று முடிவெடுத்தான். ஆனால் விதி அனைத்தையும் சீக்கிரமாகவே முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.
ரத்னா மஹால்
அர்னவ்விடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக தன்னை நொந்து கொண்டாள் குஷி. அவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. ஆனால் அவை பதில் கூறியே தீர வேண்டிய கேள்விகள். எப்படி அவள் இவ்வளவு முட்டாள்தனமாய் இருந்தாள்? அவனது பக்கத்தை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு முறை கூட ஏன் அவளுக்கு தோன்றவே இல்லை?
ஆம் அவன் அவளிடம் பேச முயன்றான். ஆனால் அவன் பேசுவதை கேட்க அவள் பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். அப்படி என்ன விம்பு அவளுக்கு? அவள் தன்னிடம் நெருங்குவதை அவன் எப்பொழுதும் தடுக்கவே இல்லையே... அவள் மீது அவன் வெறுப்படையவும் இல்லை, அவளை வெறுக்கவும் இல்லை. சற்று தள்ளி உட்கார் என்று அவன் கூறியதை அவள் தான் தவறாக புரிந்து கொண்டாள். என்ன ஒரு மூடத்தனம்...! ஏன் தான் அவள் இப்படி பைத்தியக்காரியை போல் நடந்து கொண்டாளோ!
*நான் தப்பே செய்யலனாலும் உன்கிட்ட சாரி கேட்டேன். ஏன்னா, உன்னை விட எனக்கு என்னுடைய கௌரவம் பெருசில்ல* என்றானே...!
*ஒருவருடைய மனதில் இருப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களது நடவடிக்கையை கவனி* என்ற அவனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை நினைத்து பார்த்தாள்.
அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவள் கவனித்தாள் தான்... ஆனாலும் அவனது மனதில் இருப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள தவறினாள். அதனால் தான் அவனைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவள் மனதில் எழவில்லை. அவன் கூறுவதை ஒரு முறை கேட்டிருந்தால் தான் என்ன?
அனைத்திற்கும் அவள் தான் காரணம் என்று அவள் மீது அவளுக்கு கோபம் வந்தது. எவ்வளவு முட்டாள்தனமாய் தன்னுடைய சந்தோஷத்தை தானே கெடுத்துக் கொண்டாள்! அவனைப் திட்டியபடி எத்தனை நாள் உறங்காமல் தவித்திருப்பாள்? இப்பொழுது அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்? அவன் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் எவ்வளவு பரிதாபமாய் அவன் முன்னால் நின்றாள்! அவளால் என்ன பதில் கூற முடியும்? ஏதேனும் கூறத்தான் முடியுமா?
வீட்டுக்கு வந்த அர்னவ், கதவு உள்புறமாய் தாளிடப்பட்டிருப்பதை பார்த்து, தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்தான். குஷி வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. வரவேற்பு அறையில் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவள் தங்கள் அறையில் இருப்பாள் என்று எதிர்பார்த்து தங்கள் அறைக்கு வந்த அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, அவர்கள் அறையை காலியாய் பார்த்து. அப்பொழுது மொட்டை மாடியின் கதவு திறந்திருப்பதை கண்டான். நிம்மதி பெருமூச்சு விட்டு மாடிக்குச் சென்றான்.
கடலுக்குள் மெல்ல மூழ்கிக் கொண்டிருந்த, ரத்த சிவப்பாய் காட்சியளித்த சூரியனை பார்த்தபடி சலவைக் கல் மேடையில் அமர்ந்திருந்தாள். அதுவே வேறு ஒரு தருணமாக இருந்திருந்தால், அந்த காட்சியை அவள் வெகுவாய் ரசித்திருப்பாள். புயல் அடித்துக் கொண்டிருந்த அவளது மனம், அதை ரசிக்க விரும்பவில்லை. கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள். கண்ணீர் வரைந்த கோடுகள் அவள் முகம் எங்கும் பரவி கிடந்தது.
கடல் எப்பொழுதுமே நம் மனதின் அடி ஆழத்தை பிரதிபலிக்கிறது. நாம் மகிழ்ச்சியோடு இருந்தால் அதுவும் மகிழ்ச்சியோடு காணப்படுகிறது. நமக்கு கோபம் வந்தால், அது சீற்றத்துடன் இருப்பதாக தோன்றுகிறது. இப்பொழுது குஷி வருத்தத்தோடு இருந்ததால், அது சோகமாய் காட்சியளித்தது. அழுதபடி அதை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அர்னவ் வந்ததை அவள் மனம் உணர்ந்தது. ஆனாலும் அவனை அவள் பார்க்கவே இல்லை. தன் கண்களை கடலில் இருந்து எடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவன், அவள் பக்கத்தில் அமர்ந்தான். தனது கைக்குட்டையை எடுத்து அதை அவளிடம் நீட்டினான். தன் முகத்தை திருப்பி அவனை அமைதியாய் ஏறிட்டாள். *இதைப் பெற்றுக் கொள்* என்பது போல் அவன் தலையசைத்தான் அவள் அதை மறுக்கவில்லை. அதை அவனிடமிருந்து பெற்று தன் முகத்தை துடைத்துக் கொண்டாள்.
அடுத்ததாக அவளை நோக்கி ஒரு பார் சாக்லேட்டை நீட்டினான். அதை பார்த்த அவளின் கண்கள் மீண்டும் அருவி என பொழிய துவங்கியது. தன் உதடு கடித்து அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள். அவள் கையைப் பிடித்து அந்த சாக்லேட்டை அவள் கையில் வைத்த அவன்,
"ப்ளீஸ் அழாதே. உன்னை கஷ்டப்படுத்தணும்ன்னு நான் எதுவும் செய்யல"
"நீ என்னை கஷ்டப்படுத்திட்டேன்னு நான் அழல. உன்னை தப்பா நினைச்சுக்கிட்டு நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு நினைச்சு அழறேன்"
"நீ என்னை கஷ்டப் படுத்தல. உண்மையை சொல்லனும்னா, எனக்கு என்ன வேணும்னு நீ தான் என்னை உணர வச்ச. நீ என்கிட்ட இருந்து விலகிப் போக ஆரம்பிச்சதுக்கு பிறகு தான் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள்னு எனக்கு புரிஞ்சது. நீ என்னை அவாய்ட் பண்றதை பார்த்து நான் ரொம்பவே தவிச்சுப் போயிட்டேன். சில சமயங்களில் நல்லதை அடைய சில கெட்டதை தாண்டித்தான் வர வேண்டி இருக்கு. இப்போ பாரு, என்ன நடந்துச்சுன்னு... நீ எனக்குன்னும் நான் உனக்குன்னும் ஆயிட்டோம் இல்லையா!"
"ஆனா, நான் மட்டும் உன்னை புரிஞ்சுகிட்டு இருந்தா, நீ இவ்வளவு கஷ்டத்தை கடந்து வந்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே!"
"இருக்கலாம்... ஆனா, நமக்கு கல்யாணம் ஆகப்போகுதுங்குற சந்தோஷத்துல நமக்கு நடந்த சண்டையை நான் மறந்தே போயிட்டேன். அத பத்தி நெனச்சுக்கிட்டு இருக்காத. அதை நம்ம மாத்த முடியாது. போனது போனது தானே?"
அவன் மென்மையாய் புன்னகைக்க, அவள் ஆம் என்று தலையசைப்படி தன் கண்ணீரைத் துடைத்தாள்.
"இப்போ நீ பெட்டர் பண்ணுவேண்னு நினைக்கிறேன்"
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"நீ ஸ்மைல் பண்ற வரைக்கும் நான் அதை நம்ப மாட்டேன்" என்று அவன் கூற, மெல்லிய சிரிப்பொலி அவள் தொண்டையில் இருந்து வெளியேறியது.
"நான் கீழ போறேன். நீ எப்போ பெட்டர் பீல் பண்றியோ, அப்ப நீ கீழ வா"
மேலும் அங்கு காத்திராமல் அந்த இடத்தை விட்டு சென்றான் அர்னவ். அவன் அங்கிருந்து செல்வதை கண்ட அவள், மனதில் ஒரு வலியை உணர்ந்தாள். அவள் பேச வேண்டியதை பேசி முடிக்கும் முன் அவன் எப்படி அங்கிருந்து செல்லலாம்? அவனைப் பின்தொடர்ந்து ஓடி வந்தாள்.
"அல்லலலவ்..."
நின்று அவனை நோக்கி திரும்பினான் அர்னவ். அவனை நோக்கி ஓடிய அவள், அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள். புன்னகையுடன் மெல்ல அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான் அர்னவ்.
அவன் அவளது அணைப்பிலிருந்து வெளியே வர எண்ணிய போது, மேலும் தன் பிடியை இறுக்கி அவனுக்கு ஆச்சரியம் அளித்தாள். அவள் எவ்வளவு நேரம் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாளோ இருக்க விட்டான் அவன்.
"குஷி... குஷி என்னை பாரு..." என்றான் மெல்லிய குரலில்.
"மாட்டேன்... நீ போயிடுவே"
"போக மாட்டேன்" என்றான் புன்னகையுடன்
அவனை நிமிர்ந்து பார்த்த அவள்,
"உனக்கு என் மேல கோபம் இல்லையா?" என்றாள்.
"இல்ல. உன் மேல எனக்கு எப்படி கோபம் வரும்?"
"நெஜமாவே உனக்கு என் மேல கோபம் இல்லையா?"
அவன் இல்லை என்று தலையசைத்தான்.
"நீ பொய் சொல்ற"
"சரி எப்படி ப்ரூவ் பண்ணனும்?"
"ரூமை விட்டு வெளியில வராம பத்து நாள் ஹனிமூன்... ஒரு மணி நேரம் விடாத முத்தம்..." என்று தலை குனிந்த படி கூறிய அவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து,
"அட்லீஸ்ட் ஆப் அன் ஹவர்...? டென் மினிட்ஸ்????" என்று அவன் அன்று கூறியதை திரும்ப கூறினாள்.
"கு...ஷி..." தடுமாறினான் அவன்
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் தினறினான். அவனுக்கு பேச்சே வரவில்லை. அவனது காலரைப் பற்றிக் கொண்டு, கண்களை மூடி நின்று, அவள் மீது அவனுக்கு கோபம் இல்லை என்று நிரூபிக்க காத்திருந்த அவளது செய்கை அவன் வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பரக்கச் செய்தது.
அவள் படித்து முடிக்கும் வரை, அவர்களது உறவு முறையில் முன்னேறிச் செல்ல வேண்டாம் என்று அவன் நினைத்தான். அதோடு மட்டும் அல்லாமல், அவர்கள் குடும்ப வாழ்க்கையை துவங்கி விட்டால் அதற்குப் பிறகு விலகி இருப்பது கடினம் என்று எண்ணினான். ஆனால் இப்பொழுது, அவள் அவனுக்கு சவால் விடுகிறாள். அவன் மறுத்தால், அவள் வருத்தம் அடைவாள். அவன் ஏற்றால், அவள் மேலும் எதிர்பார்ப்பாள்... இப்பொழுது அவன் என்ன செய்வது?
ஆனால் இப்பொழுது யோசிக்க ஒன்றும் இல்லை. அவனும் சராசரி மனிதன் தானே? அவனும் எவ்வளவு தான் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும்? அவன் கட்டி வைத்திருந்த ஆசை என்னும் சாத்தான் சங்கிலியை அவிழ்த்துக் கொண்டது. அடுத்த நொடி அவர்களது இதழ்கள் சந்தித்தன. அவள் அவனது கழுத்தை வளைத்துக் கொள்ள, அவன் அவளது இடையை வளைத்துக் கொண்டான். கவிதையாய் துவங்கிய முத்தம், உணர்ச்சி குவியலாய் தொடர்ந்தது.
நொடிகள், நிமிடங்களாயின... ஒன்று... இரண்டு... மூன்று...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top