34 கூறியதன் காரணம்
34 கூறியதன் காரணம்
ஆண்டு விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனது குடும்பத்தாருடன் வீட்டிற்கு வந்தாள் குஷி. அர்னவ் வீட்டில் இருக்கவில்லை. தூக்கம் வராமல் அவனுக்காக காத்திருந்தாள், அவள் மிகுந்த சோர்வுடன் இருந்த போதிலும்...! உன்னை காதலிக்கிறேன் என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளை தூங்க விடவில்லை.
அவன் அவளை காதலிப்பது அவளுக்கு தெரியும். அதை அவனிடமிருந்து வாக்குமூலமாக பெற வேண்டும் என்பது தான் அவளது விருப்பமாகவும் இருந்தது. ஆனால் அவன் அதை செய்த போது, ஏராளமான கேள்விகளில் அவள் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
அவன் அவளை காதலிக்கிறான் என்றால், அதை ஏன் அவன் முன்பே கூறவில்லை? எது அவனை தடுத்து நிறுத்தியது? அவளே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்து என்று கூறிய பிறகும் அதை நடத்தியே தீருவேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தான். அப்படி இருக்கும்போது, அவனது காதலை கூறாமல் அவன் பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? இதைப் பற்றி எல்லாம் அவள் யோசித்தபடி இருந்தாள். இதையெல்லாம் உடனடியாக அவனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் அவன் வீட்டில் இல்லை. நள்ளிரவு வரை அவன் வீடு திரும்பவில்லை. அவள் எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
மறுநாள் காலை
வெகு தாமதமாய் உறங்கியதால், காலையில் கண் விழிக்கவும் தாமதமானது குஷிக்கு. கட்டிலின் வலது புறம் உறங்கிக் கொண்டிருந்த அர்னவ்விடம் அவளது கண்கள் அனிச்சையாய் சென்றன. புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் உன்னை காதலிக்கிறேன் என்ற அவனது வார்த்தைகள், அவளது தலைக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவள் கடிகாரத்தை பார்க்க, அது மணி 7:15 என்றது. அவசரமாய் குளியலறை சென்று, குளித்து முடித்து அவள் சமையலறைக்கு சென்றபோது, கிட்டத்தட்ட காலை உணவை சமைத்து முடித்திருந்தார் ரத்னா.
"சாரி ஆன்ட்டி, நான் ரொம்ப லேட்..."
"நீ டயர்டா இருப்பேன்னு எனக்கு தெரியும். அதனால தான் உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணல"
"இன்னும் லாவண்யாவும் எழுந்துக்கலயா?"
"இன்னும் இல்ல"
"இன்னைக்கு எங்க காலேஜ் லீவு"
"தெரியும்... என்கிட்ட நீங்க சொன்னீங்க..." என்றபடி அவளைப் பார்த்தவர்,
"ராத்திரி அரு எப்போ வீட்டுக்கு வந்தான்?" என்றார்.
"எனக்கு தெரியல ஆன்ட்டி. 12 மணி வரைக்கும் அவர் வீட்டுக்கு வரல"
"அவன் ஏதாவது சாப்பிட்டானா?"
"அவர் வர்றதுக்கு முன்னாடியே நான் தூங்கிட்டேன், ஆன்ட்டி. அதனால என்னால எதுவும் கேட்க முடியல"
"சரி, காஃபியோட கொஞ்சம் பிஸ்கட்டும் எடுத்துக்கிட்டு போ"
"சரிங்க, ஆன்ட்டி"
அர்னவ்க்கு காஃபியை கலந்து கொண்ட அவள் மனதில் ஏராளமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்ததால், பிஸ்கட்டை எடுக்க மறந்து தன் அறைக்குச் சென்றாள்.
அவள் அறைக்கு வந்தபோது அர்னவ் குளியல் அறையில் இருந்தான். காப்பியை ட்ரெஸ்ஸிங் டேபிளின் மீது வைத்தாள் குஷி. தனது தோளில் இருந்த துண்டால் தன் ஈரத் தலையை துவட்டியபடி குளியலறையை விட்டு வெளியே வந்தான் அர்னவ். குஷி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் அவளை பார்க்கவில்லை. அந்த அறையில் யாருமே இல்லை என்பது போல, அலமாரியில் தனது உடையை தேடினான்.
"ராத்திரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்த?"
"விடிய காலைல தான் வீட்டுக்கு வந்தேன்"
"ராத்திரி எல்லாம் எங்க இருந்த?"
"பீச்ல..."
"எதுக்கு?"
"ரொம்ப நாள் கழிச்சி சக்தியை மீட் பண்ணேன்..."
"ஏதாவது சாப்பிட்டியா?"
"சக்தியோட சாப்பிட்டேன்"
"அங்க காபி வச்சிருக்கேன். உனக்கு பிஸ்கட்ஸ் வேணும்னா கொண்டு வரேன்"
"நோ தேங்க்ஸ்"
அவர்கள் வெகு சாதாரணமாகத் தான் பேசிக் கொண்டார்கள்... ஆனால் சம்பிரதாயமாய்...! அவள் மனதில் இருந்த கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் காப்பியை குடித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். காப்பியை குடித்து முடித்து, காலி குவளையை மேசை மீது வைத்தான் அவன். அவள் தன் கேள்வியை துவங்கலாம் என்று நினைத்தபோது,
ரத்னாவின் கத்தலை கேட்டு நிறுத்தினாள்.
"அரு......." தன் கையில் இருந்த பிஸ்கட் தட்டை நழுவ விட்டார்.
குஷி சமையலறையிலேயே மறந்துவிட்டு வந்த பிஸ்கட்டை கொடுக்க வந்தார் அவர்.
அவரது கத்தலை கேட்டு இருவரும் திடுக்கிட்டார்கள். அதிர்ச்சியோடு தங்கள் அறையின் வாசலில் நின்றிருந்த ரத்னாவை ஏறிட்டார்கள். அவரை நோக்கி விரைந்து வந்த அர்னவ்,
"என்ன ஆச்சு, மா?" என்றான்.
அவனை திரும்பச் செய்து, அவனது கீழ் முதுகில் இருந்த தீக்காயத்தை நடுங்கும் கைகளோடு தொட்டார் அவர். அந்த தீக்காயத்தை இரண்டு, மூன்று முறை குஷி பார்த்திருந்த போதும், அது பற்றி அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் எதற்காக அதற்கு ரத்னா இப்படி ரியாக்ட் செய்கிறார் என்று தான் அவளுக்கு புரியவில்லை. இதைப்பற்றி அவருக்கு தெரியாதா?
"என்னடா இது? இது எப்போ, எப்படி வந்துச்சு? இதைப்பத்தி எனக்கு எப்படி தெரியாம போச்சு? இதை பத்தி ஏன் என்கிட்ட நீ எதுவுமே சொல்லல?"
இதற்கிடையில், அவரது கத்தலை கேட்டு அங்கு ஓடி வந்த அரவிந்தனும், நந்தாவும், ரத்னாவுக்கு பதில் கூற, அர்னவ் தினறி கொண்டிருப்பதை பார்த்தார்கள்.
"அம்மா, ரிலாக்ஸ், நாங்க இதை வேணும்னு உங்ககிட்ட மறைக்கல" என்றான் நந்தா.
"நாங்க மறைக்கலன்னா என்ன அர்த்தம்? இதைப்பத்தி உனக்கும் தெரியுமா?" என்றார் குழப்பத்தோடு.
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா, ஒரு நாள் அரு ஆஃபீஸ்லயிருந்து ரொம்ப சீக்கிரம் வந்துட்டான். அன்னைக்கு அவனோட ஆஃபீஸ்ல ஒரு பையர் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அதுல, அவங்க கம்பெனியோட செக்யூரிட்டி மாட்டிகிட்டாரு. அவரை காப்பாத்த போனபோது தான் இவனுக்கு இந்த நெருப்பு காயம் பட்டது"
"ஆனா, எதுக்கு இதைப் பத்தி என்கிட்ட நீங்க எதுவுமே சொல்லல?"
"ஏற்கனவே லோ பிபி வந்து நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தீங்க. மேல மேல உங்களை ஸ்ட்ரெஸ் பண்ண வேண்டாம்னு தான் அவன் உங்ககிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டான். உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க உங்க உடம்பை பத்தி கவலைப்படாம, அவன் கூட இருந்து அவனை கவனிக்க ஆரம்பிச்சிடுவீங்க. அதனால தான் நாங்க சொல்லல"
"அதனால தான் அன்னைக்கு நீ ஆஃபீசுக்கு லீவு போட்டுட்டு வந்தியா நந்து?" என்றார் கவலையோடு.
"ஆமாம்மா, அவன் கூட வேலை செய்யற ஒருத்தர் ஃபோன் பண்ணி என்கிட்ட விஷயத்தை சொன்னாரு. நான் அருவுக்கு ஃபோன் பண்ணும் போது, அப்பாவும் ஆஃபிஸ் கிளம்பி போயிட்டாருன்னு எனக்கு தெரிய வந்தது. அதனால, நான் லீவ் போட்டுட்டு வீட்டுக்கு வந்து அவன் கூட இருந்தேன்"
"தீக்காயம் பட்டதால தான் அன்னைக்கு நீ வேற ஒரு புது ஷர்ட் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தியா?"
ஆமாம் என்று தலையசைத்த அர்னவ்வின் கண்கள் தானாக அதிர்ச்சியுடன் நின்றிருந்த குஷியின் மீது சென்றது. அவளை தன் இரு சக்கர வாகனத்தில் இடைவெளி விட்டு அமரச் சொல்லி அவன் கூறியதற்கு இதுதான் காரணமா?
"அன்னைக்கு தானே இவன் உன்னை காலேஜ்ல கொண்டு போய் விட்டான்? அப்படின்னா இந்த விஷயம் உனக்கும் தெரியுமா?" என்றார் அரவிந்தன்.
"இல்ல அங்கிள்... அதை பத்தி எனக்கு தெரியாது" என்றாள் குற்ற உணர்ச்சி மேலோங்க, கட்டுப்பாட்டின்றி கண்ணீரை சிந்திய கண்களோடு.
"அட, நீ எதுக்காக மா இப்போ அழற? அந்த காயம் தான் நல்லா ஆறிடுச்சே..." என்றார் அரவிந்தன்.
ஒன்றும் கூறாமல் அவள் அழுதபடி அர்னவ்வை ஏறிட்டாள். அழாதே என்பது போல் தன் தலையை இடவலமாய் அசைத்தான் அவன்.
"அவளை சமாதானப்படுத்து" என்றார் அரவிந்தன்.
அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றார் ரத்னா.
அலமாரிக்குச் சென்று தன் உடையை எடுத்து அணிந்து கொண்டான் அர்னவ். அவனுக்கு முன்னாள் வந்து நின்ற குஷி,
"இதுக்காகத்தான் அன்னைக்கு உன் பைக்ல என்னை தள்ளி உட்கார சொன்னியா?" என்றாள்.
அவன் ஆம் என்று தலையசைத்தான்.
"நீ அதை தெளிவா சொல்லி இருக்கலாம் இல்ல?"
"நான் முழுசா சொல்லி முடிக்கிறதுக்குள்ள நீ என்னை திட்ட ஆரம்பிச்சிட்ட"
"அதுக்கு அப்புறம் கூட இதை பத்தி என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லையா? இந்த உண்மை எனக்கு தெரியணும்னு நீ நினைக்கலையா? இதைப்பத்தி எனக்கு தெரிய வரும் போது நான் வருத்தப்படுவேன்னு உனக்கு தோணலையா? என்னோட ஃபீலிங்ஸுக்கு உன் மனசுல வேல்யூ இல்லையா? இதை தப்பா புரிஞ்சுக்கிட்டதால நான் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன்னு உனக்கு தெரியுமா?"
அமைதியாய் அவளை பார்த்துக் கொண்டிருந்த அவன், அதே அமைதியுடன்,
"நான் உன்கிட்ட சொல்றதுக்கு முயற்சி பண்ணல? உன் வீட்டுக்கு வந்து நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கல? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி கூட நான் உன்கிட்ட பேச முயற்சி பண்ணேன். நான் பேசுறதை கேட்காம போறதுக்காக ஒருநாள் நீ நிச்சயம் வருத்தப்படுவேன்னு நான் உன்னை எச்சரிக்கை செஞ்சேன். நீ என்னை பேச விட்டியா? என்னால எவ்வளவு முடியுமோ, நான் அவ்வளவு முயற்சியும் செஞ்சுகிட்டு தான் இருந்தேன். ஆனா, நீ தான் நான் சொல்றதை கேட்க தயாரா இல்ல"
"உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு கூட தானே சொன்னேன்? ஆனா நீ அப்படி செய்ய விடல தானே? அதே மாதிரியே, என்னை கட்டாயப்படுத்தி இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?" என்றாள் தொண்டை அடைக்க.
அவன் அவளை நோக்கி முன்னேற அவள் பின்னோக்கி நகர்ந்தாள்.
"நான் உன்னை கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணேன். ஏன்னா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்ததுன்னு எனக்கு தெரியும். உன்னை கட்டாயப்படுத்தி நான் சொல்றதை கேட்க வச்சிருக்க என்னால முடியும் தான். ஆனா, நான் ஏன் அதை செய்யணும்? நான் பேசுறத கேட்கவே தயாரா இல்லாத ஒரு பொண்ணு கிட்ட நான் எதுக்காக உண்மையை சொல்லணும்? என்னை பத்தி மகா மட்டமா நினைச்சுகிட்டு இருக்கிற ஒரு பொண்ணுக்கு நான் ஏன் என்னை புரிய வைக்கணும்?"
குஷி உறைந்து நின்றாள்.
"என்னை பத்தி நீ எப்படி அவ்வளவு கீழ்த்தரமா நினைப்ப? என்ன சொன்ன, நீ எவன் கூட வேணும்னாலும் ஒட்டிக்கிற பொண்ணுன்னு நான் நினைக்கிறேன்னு சொன்னல்ல? எப்படி நீ அப்படியெல்லாம் நினைச்ச? என்னைப் பத்தி உன்னால எப்படி அப்படி நினைக்க முடிஞ்சது? உன்னை பத்தி என் மனசுல நான் எவ்வளவு உயர்வா நெனச்சுக்கிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுமா?"
பின்னால் நகர்ந்து சென்ற அவளை, சுவர் தடுக்க, அப்படியே நின்றாள்.
"நம்ம சின்ன வயசுல பேசிகிட்டு இருந்த மாதிரி நீ என்கிட்ட ஃப்ரீக்குவண்டா பேசறது இல்ல. அதனால நான் நெனச்சேன்..."
"நீ என்கிட்ட பேசறதை நான் எப்பவாவது தடுத்து நிறுத்தினேனா? நீ என் பக்கத்துல வந்து விளையாடும்போது நான் வெறுப்பை காட்டினேனா? நீ என்னை தொந்தரவு செய்றேன்னு நான் எரிச்சல் ஆனேனா?"
இல்லை என்று தலையசைத்த அவள்,
"ஆனா, நீ என்கிட்ட சாரி சொன்ன... அதனால நீ தப்பு செஞ்சிருப்பேன்னு நான் நெனச்சேன்"
"நான் தப்பே செய்யாம தான் உன்கிட்ட சாரி கேட்டேன். ஏன்னா, உன்னை விட என்னோட கௌரவம் ஒன்னும் எனக்கு பெரிசில்ல..."
திகைத்து நின்ற குஷியின் கண்களிலிருந்து மேலும் கண்ணீர் பெருகியது.
"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, நீ என்னை அர்னவ்னு கூப்பிடுவ? என்னை தப்பா புரிஞ்சுகிட்டது நீதான். அது என்னோட பிரச்சனை இல்ல. இப்பவும் நான் செய்யாத தப்புக்காக நீ என்கிட்ட சண்டை தான் போட்டுக்கிட்டு இருக்க. நான் என்ன சொல்ல வரேன்னு ஒரு தடவை கேட்டிருந்தா என்ன குடி முழுகி போயிடும்? அவ்வளவு என்ன கோவம் உனக்கு? அந்த அளவுக்கு கூடவா நான் ஒர்த் இல்லாமல் போயிட்டேன்?"
எந்த கேள்விக்கும் பதில் இல்லாத நிலையில், கண்ணீரை மட்டும் தான் அவளால் பதிலாய் அளிக்க முடிந்தது.
"எனக்கு இதயமே இல்லையான்னு கேட்டல்ல? ஆமாம் எனக்கு இதயமே இல்ல தான்... ரெண்டு குதிரைவால் கொண்டை போட்டுக்கிட்டு அழகா இருந்த ஒரு குட்டி பொண்ணு கிட்ட நான் என்னுடைய இதயத்தை இழந்துட்டேன்... துரதிஷ்டவசமா, அவளோட இதயத்தை எனக்கு கொடுக்க அவ மறுத்துட்டா. அதனால தான் நான் இதயம் இல்லாதவனா ஆயிட்டேன். இந்த உலகத்துக்கே கோபக்காரனா இருந்த முட்டாள் ஒருத்தன், உன்னை பார்க்கும் போது மட்டும் எதுக்காக ஸ்மைல் பண்றான்னு ஒரு சாதாரண விஷயத்தை கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா?" என்றபடி மென்று விழுங்கினான் அவன்.
"இல்ல அல்லவ்..."
"இப்போ மட்டும் என்னை ஏன் அல்லவ்னு கூப்பிடுற? அர்னவ்னே கூப்பிடு உனக்கு தான் ரெண்டுத்துக்கும் வித்தியாசமே இல்லையே...!" என்றபடி தனது உடைகளை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்ல தயாராக சென்றான் அர்னவ், அவளை கடும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விட்டு.
இந்த விஷயத்திற்கு, இப்படி ஒரு மறுபக்கம் இருக்கும் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல், தவறான முடிவுக்கு வந்து, அவன் மீது கோபம் கொண்ட அவள், இப்போது என்ன செய்யப் போகிறாள்?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top