33 நான் உன்னை காதலிக்கிறேன்

33 நான் உன்னை காதலிக்கிறேன்

மறுநாள்

குஷியின் கல்லூரியில் ஆண்டு விழா தேதி முடிவானது. குஷி மற்றும் அர்ச்சனாவுடன் இணைந்து ஆண்டுவிழாவில் நடனம் ஆட வேண்டும் என்று விரும்பினாள் லாவண்யா. ஆரம்பத்தில் அதற்கு குஷி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ரத்னாவின் உதவியோடு அவளை சம்மதிக்க வைத்துவிட்டாள் லாவண்யா. நடனம் ஆடுவதில் விருப்பம் உள்ளவள் என்பதால், அந்த நடன அசைவுகளை கற்றுக்கொள்ள குஷிக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. அர்னவ்வின் மாறுபட்ட நடவடிக்கையால் அவளது மனம் கலவரப்பட்டிருந்தது. அவளது மனதை திசை திருப்ப, அவளும் கூட இப்படி ஏதாவது செய்தால் நல்லது என்று தான் எண்ணினாள்.

அர்னவ் தினமும் வீட்டுக்கு தாமதமாய் வர துவங்கினான். அவளை கிண்டல் செய்வதை அறவே தவிர்த்துவிட்டு, அவளை தொல்லை செய்வதை மொத்தமாய் மூட்டை கட்டி வைத்து விட்டான். அது அவளது மனதை ரொம்பவே தொல்லை செய்தது. அவன் பழையபடி மாறிவிட்டானோ என்ற பயம் அவளது மனதை அரித்தது. அவன் தான் அவளது வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனை, அவன் அவளிடம் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி. இரண்டுமே அவளை வெவ்வேறு விதத்தில் பாதிக்கத்தான் செய்தது.

அவனது திடீர் மாற்றத்திற்கான காரணம் புரியாமல் தவித்தாள் குஷி. அவனிடம் அது பற்றி கேட்கவும் தயக்கமாய் இருந்தது. ஏனென்றால் அவளுக்கு தெரியும், அவன் நிச்சயம் அதற்கு உகந்த பதில் அளிக்கப் போவதில்லை என்று. அவன் எவ்வளவு காலத்திற்குத் தான் இப்படி இருக்கிறான் என்று பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டாள். எப்படியும் ஒரு நாள் அவன் மனம் திறந்து தானே ஆக வேண்டும்!

வழக்கம்போல் வீட்டிற்கு தாமதமாய் வந்த அர்னவ், குளித்துவிட்டு வந்தான். அப்பொழுது, தனது பேனாவை ஒரு வெள்ளை தாளில் இப்படியும் அப்படியும் எரிச்சலுடன் ஓட்டிக் கொண்டிருந்தாள் குஷி. அவளுக்கு ஏதோ ஒன்று பிடிப்படவில்லை என்று எண்ணினான் அவன்.

"என்ன ஆச்சு குஷி?" என்றான்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

"உனக்கு ஏதாவது வேணுமா?" என்றான்.

வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"உனக்கு சப்ஜெக்ட்ல ஏதாவது டவுட் இருந்தா நான் வேணா கிளியர் பண்றேன்"

அது நிச்சயம் அவளுக்கு வியப்பளித்தது. தன்னுடைய சந்தேகத்தை தீர்க்க அவன் தயாராக இருக்கிறானே. வேண்டாம் என்று கூற அவளுக்கு மனம் இல்லை. சரி என்று தலையசைத்தாள். அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து,

"சொல்லு, என்ன டவுட்?" என்றான்.

அவள் ஏற்கனவே நன்றாய் படித்துவிட்ட ஒரு பாடப்பகுதியை அவனிடம் கொடுத்தாள். அதை ஒரு முறை படித்துப் பார்த்தான் அவன். அவளோ கண்ணிமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அவளுக்கு விளக்கத் துவங்கினான். அவளது பார்வை தன் மீது நிலைத்திருந்ததை அவன் உணர்ந்தான். தான் கற்றுக் கொடுத்ததிலிருந்து இடையிடையில் கேள்வி கேட்டு, அவள் தன்னை கவனிக்கிறாளா இல்லையா என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவள் பதில் அளித்தாள். ஆனால் சில பதிலை பெற, அவன் அவளது தோளை பிடித்து உலுக்க வேண்டி இருந்தது... அவள் தான் அவனுக்குள் தொலைந்து போயிருந்தாளே...!

கற்பித்தல் என்பது ஒரு கலை! அந்த கலையை அனைவராலும் கற்றுவிட முடிவதில்லை. அது ஒரு வரம்! அர்னவ் அந்த வரத்தை பெற்றிருந்தான். அவள் ஏற்கனவே அதை படித்துவிட்ட போதிலும், மறுபடியும் அதை அவனிடமிருந்து கேட்க அவளுக்கு சலிக்கவில்லை. அவன் எளிமையாய் அதை கற்பித்த விதம் அவளை வெகுவாய் கவர்ந்தது.

"புரிஞ்சிடுச்சா?"

அவள் ஆம் என்று தலையசைத்தாள். அவன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் மேலும் ஒரு பாடப்பகுதியை விளக்கும்படி அவனிடம் கேட்க, அவன் மறுக்கவில்லை. அவன் கற்பித்த விதத்தை அவள் ரசித்தாள். அதற்காக, கற்பித்தவனின் அருகாமையை அவள் ரசிக்கவில்லை என்று கூற முடியாது. அதை அவள் வெளிப்படையாய் செய்தாள் என்பது தான் வியப்பு. அவளது கண்கள் அவனது முகத்தை அங்குலம் அங்குலமாய் தின்றன. அவனது நெற்றியில் விழுந்த ஒரு சிறிய குழல் கற்றை, அவனை அவளது கண்களில் மேலும் அழகாய் காட்டியது. அந்த அழகில் அவள் உருகினாள். அர்னவ்க்கு நன்றாக தெரியும், அவளது கவனம் பாடத்தின் மீது இல்லை என்று. ஆனால் அவன் கேட்ட கேள்விக்கு அவள் பதில் அளித்த போது, அவன் வாயடைத்துப் போனான். உள்ளூர நகைத்துக் கொண்டாள் குஷி.

தன் மனதில் ஏற்பட்டிருந்த அந்த புத்தம் புதிய உணர்வை எண்ணி அவளுக்கு வியப்பாய் இருந்தது. அர்னவ் அவளை ஓயாமல் தொந்தரவு செய்து, கிண்டலும் கேலியுமாய் இருந்தபோது அது அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவன் அவளிடமிருந்து விலகி இருந்தபோது, அவனுடன் நெருங்கி இருக்க, அவளே காரணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். அப்படி என்றால்,  அவன் குறும்பு செய்தபோது, அவள் வெறுப்பைக் காட்டியது நடிப்பா?

சிறிது நேரத்திற்கு பிறகு, அவளுக்கு தூக்கம் வந்தது. அதை அவன் புரிந்து கொண்டு,

"தூக்கம் வருதா?" என்றான்.

அவள் ஆம் என்று தலையசைக்க,

"சரி, படுத்துக்கோ. ஒருவேளை காலையில படிக்கும்போது ஏதாவது டவுட் இருந்தா, என்னை எழுப்பு. நான் ஹெல்ப் பண்றேன்" என்று எழுந்து நின்றான்.

"அர்னவ்..."

"ம்ம்ம்?"

"தேங்க்யூ..."

"மென்ஷன் நாட்..." என்றான் புன்னகையுடன்.

விளக்கை அணைத்துவிட்டு வழக்கம் போல் வலது புறம் படுத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முற்பட்டான். ஆனால் குஷிக்கு தூக்கம் பிடிக்கவில்லை.

மூன்று நாட்களுக்குப் பிறகு

அஞ்சலியிடமிருந்து வந்த அழைப்பை பதற்றத்துடன் ஏற்றான் அர்னவ். மறுபடியும் குஷிக்கு ஏதாவது பிரச்சனையா?

"ஹாய், அர்னவ்..."

"குஷிக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?" என்றான் அதே பதற்றத்துடன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நம்ம காலேஜ் ஆனுவல் டே ஃபங்ஷனுக்கு உன்னை இன்வைட் பண்ண தான் ஃபோன் பண்ணேன். குஷியோட டான்ஸ் ப்ரோக்ராம் வேற இருக்கு. அதனால நீ நிச்சயமா வருவேன்னு எனக்கு தெரியும். வருவ தானே?"

அவள் கூறிய விஷயம் அவனுக்கு திகைப்பை தந்தது. ஏனென்றால் அதைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அதை அவன் அஞ்சலியிடம் காட்டிக்கொள்ளவில்லை.

"கண்டிப்பா வருவேன். இல்லன்னா, அவகிட்ட எனக்கு உதை விழுமே..." என்று சிரித்தான்.

"அதானே... டைமுக்கு வந்துடு" என்று அழைப்பை துண்டித்தாள்.

முதல் நாள் இரவு, குஷி தன் கால்களை பிடித்து விட்டபடி அமர்ந்திருந்தது அவன் நினைவுக்கு வந்தது. அதற்கு இது தான் காரணமா? நடன ஒத்திகையால் தான் அவளுக்கு கால் வலி ஏற்பட்டிருக்க வேண்டும். இதைப் பற்றி அவனது அம்மா கூட அவனிடம் ஒன்றும் கூறவில்லையே... குஷி அவனிடம் கூறி இருப்பாள் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆண்டு விழா அன்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

ஆண்டு விழா

தங்கள் கல்லூரியில் அர்னவ்வை பார்த்த அஞ்சலி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அவனை வரவேற்று, ஷியாமை நோக்கி இழுத்துச் சென்றாள். அர்னவ்வை மகிழ்ச்சி பொங்க அணைத்துக் கொண்டான் ஷியாம்.

"உன்னை மறுபடியும் இங்க பாக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"உங்களை பாக்குறதுல எனக்கும் சந்தோஷம், மாமா"

"சீக்கிரம் வாங்க. அடுத்த புரோகிராம் குஷியோடது தான்" என்றாள் அஞ்சலி.

சரி என்று தலையசைத்து விட்டு, மேடையின் அருகே வந்தான். அங்கு ஏற்கனவே அவனது மற்றும் குஷியின் பெற்றோர், நந்தாவுடன் இருந்தார்கள்.

லாவண்யா மற்றும் அர்ச்சனாவுடன் மேடையில் தோன்றினாள் குஷி. சினேகிதியே படத்தில் வரும் *ராதை மனது* பாடலுக்கு அவர்கள் மூவரும் ஆடினார்கள். குஷியின் நடனத்தில், அர்னவ் தன்னை தொலைத்தான் என்று கூறத் தேவையில்லை. அவர்கள் ஆடி முடித்ததும் கரவொலி விண்ணை பிளந்தது. அப்பொழுது அங்கு நின்றிருந்த தனது குடும்பத்தாருடன் இருந்த அர்னவ்வை பார்த்த குஷி, வியப்படைந்து இருப்பாள் தானே...! தனது வியப்பை காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் வந்தாள்.

புன்னகைத்தபடி அவளது செய்கையை அவன் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தான் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் அவளோ, அவனை கவனிக்கவில்லை என்பது போல் பாசாங்கு செய்தாள். எல்லோரும் அவளது ஆட்டத்தை புகழ்ந்தார்கள். நந்தாவுடன் ஹைஃபை தட்டிக்கொண்ட அவள், அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவளை தன்னை நோக்கி இழுத்தான் அர்னவ். அவள் தன்னை சுதாகரித்துக் கொள்ளும் முன், அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்து, அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான். அந்த இடத்தில் அதை எதிர்பார்க்காத குஷியின் மனதில், அந்த அணைப்பு, ஒரு குட்டி பூகம்பத்தை ஏற்படுத்தியது.

"ரொம்ப நல்லா இருந்தது..." என்று எல்லோரும் கேட்கும்படி கூறிவிட்டு,

"என்னை பார்க்காத மாதிரி நீ நடிச்ச நடிப்பு..." என்று அவள் காதில் ரகசியமாய் கூறினான்.

அவனிடம் இருந்து விலகி, புன்னகையுடன் நின்றிருந்த அவனது முகத்தை ஏறிட்டாள். இப்போதெல்லாம் அவனது முகம் ஏன் அவளுக்கு மயக்கத்தை தருகிறது என்று தான் அவளுக்கு புரியவில்லை. அங்கிருந்து செல்லலாம் என்று அவள் நினைத்தபோது, அவள் கையை அவன் பற்றினான். அவளது நடனம் எவ்வளவு நன்றாக இருந்தது என்று கூற நினைத்தான். அப்போது அவனது கவனத்தை ஈர்த்த ஒன்று, அவனது முக பாவத்தை பேயை போல் மாற்றியது. கோபத்தில் அவன் தன் பல்லை கடித்தான். அது அவளுக்கு குழப்பத்தை தந்தது. எரிமலை குழம்பை கக்கி கொண்டிருந்த அவனது பார்வை இருந்த திசையை நோக்கி திரும்பினாள். அங்கு ஒரு பெண் மென்று விழுங்கியபடி நின்றிருந்தாள். அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விட வேண்டும் என்று எண்ணினான் அவன். ஏனென்றால் அனைவரின் முன்னிலையிலும் பிரச்சனை ஏற்படுவதை அவன் விரும்பவில்லை. ஆனால் அதே பெண் அவனது பெயர் கூறி அழைத்ததை கேட்டு நின்றான். அவளுக்குத்தான் எவ்வளவு தைரியம்!

"எப்படி இருக்க அர்னவ்?" என்றாள்... தயக்கத்துடன் தான்...!

"இன்னும் நான் கொலைகாரனா மாறல. ஆனா இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க இருந்தா, அது நிச்சயம் நடக்கும்" என்றான் குத்தி கிழிக்கும் பார்வையுடன்.

ஷியாமும் அஞ்சலியும் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள்.

"நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க சரிதா? எதுக்காக நீ அவன்கிட்ட பேசுற? முதல்ல இங்கிருந்து போ..." அவளை விரட்டினாள் அஞ்சலி.

அப்பொழுது தான் அவள் யார் என்று குஷிக்கு புரிந்தது. சரிதா... அர்னவ்வின் நண்பன் ஆகாஷை காதலித்து, பிறகு ஒரு பணக்காரனை திருமணம் செய்து கொண்டவள்... அனைத்து பிரச்சனைக்கும் காரணமானவள்...!

அதற்குப் பிறகு அங்கு நிற்க அவன் விரும்பவில்லை. கோபத்துடன் வேகமாய் அந்த இடம் விட்டு நடக்க தொடங்கினான். பதற்றத்துடன் அவனை பின்தொடர்ந்தாள் குஷி. அவர்கள் அனைவரையும் விட்டு வெகு தொலைவு வந்த போது அவனை நிறுத்தினாள்.

அந்த பிரச்சனையை சவ்வு மிட்டாய் போல் அவர்கள் அதை இழுத்தது போதும். அதை முடித்து விட வேண்டும் என்று அவள் எண்ணினாள்.  அதைச் செய்ய சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதை எப்படி அவள் தவற விட்டுவிட முடியும்?  நிச்சயம் இல்லை. அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனாலும் அந்த சந்தர்ப்பத்தை தவற விட அவள் தயாராக இல்லை.

"எதுக்கு கிளம்பி போற, அர்னவ்?"

"நான் இப்போ எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கேன்னு உனக்கு தெரியாது"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா தானே இருந்த, இப்போ திடீர்னு என்ன ஆச்சு உனக்கு?"

"என்னை எதுவும் கேட்காத"

"அந்த பொண்ண பார்த்ததுக்கு பிறகு ஏன் உன்னோட முகம் அப்படி மாறுச்சு?"

"அவளை பத்தி பேச நான் விரும்பல"

"ஏன்?"

"குஷி அவ யாருன்னு உனக்கு தெரியாது"

"எனக்கு தெரியும். அவ சரிதா... ஆகாஷோட கேர்ள் ஃபிரண்ட்"

அர்னவ் திகைத்துப் போனான். குஷிக்கு அவளைப் பற்றி எப்படி தெரிந்தது? அவனைப் பற்றிய விவரங்களை அவள் சேகரித்து வைத்திருக்கிறாளா?

"என்னை போக விடு. நான் அவளை மறுபடி பார்க்க விரும்பல"

"ஏன் அர்னவ்? எதுக்காக ஓடுற? எதுக்காக அவ மேல நீ இவ்வளவு கோவமா இருக்க? தற்கொலை பண்ணிக்கிட்டது ஆகாஷோட தப்பு. அப்படி செஞ்சதுக்கு பதில், அவனை இழந்ததுக்காக அவன் சரிதாவை வருத்தப்பட வச்சிருக்கணும். அதை ஒரு சேலஞ்சா எடுத்து ஃபேஸ் பண்ற அளவுக்கு அவன் தைரியம் இல்லாத கோழையா இருந்திருக்கான்...!"

"போதும் நிறுத்து... அவன் ஒன்னும் கோழை இல்ல. 'காதலுக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு' சொன்ன தன் பேச்சை காப்பாத்தினவன்... சொல்றது யாருக்கு வேணும்னாலும் ஈஸியா இருக்கும். ஆனா அதை அனுபவிச்சி பார்க்கிறவனுக்கு தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். ஏன்னா, இது விளக்கி சொல்ற விஷயம் இல்ல. உணர வேண்டிய விஷயம்."

அதைக் கேட்ட அவள் நக்கலாக,

"பாரு, காதலைப் பத்தி யார் பேசுறதுன்னு... காதலுக்காக வக்காலத்து வாங்கி, நீ என்னை ஆச்சரியப்பட வைக்கிற! எது உன்னை இப்படி எல்லாம் பேச வைக்குது? உனக்கு காதலை பத்தி என்ன தெரியும்? காதலோட வலி என்னன்னு நீ எப்பவாவது அனுபவிச்சு இருக்கியா? அதோட மதிப்பு என்னன்னு உனக்கு தெரியுமா?"

"எனக்கு அதோட வேல்யூ நல்லாவே தெரியும்... அதனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஏன்னா, நீ என்னை காதலிக்கிறேன்னு எனக்கு தெரியும்"

அதைக் கேட்டு திகைத்த அவள், தன்னை சமாளித்துக் கொண்டு,

"அப்படியா? நான் உன்னை காதலிச்சா உனக்கு என்ன? அதைப்பத்தி எல்லாம் உனக்கு என்ன கவலை?"

தனக்குள் பொங்கி எழுந்த கோபத்தை தன் விரல்களை மடக்கி அடக்க முயன்றான் அர்னவ்.

"சொல்லு... நீ அதைப்பத்தி எல்லாம் எப்பவாவது கவலைப்பட்டு இருக்கியா?" இந்த முறை அவளும் கூட கோபமாய் தான் கேள்வி எழுப்பினாள்.

அவளது தோள்களைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த அவன்,

"ஆமாம். நான் அதைப் பத்தி ரொம்பவே கவலைப்பட்டு இருக்கேன். அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும். ஏன்னா, நானும் உன்னை காதலிக்கிறேன்...!" என்றான் உரத்த குரலில்.

அவர்களை சுற்றி இருந்த அனைத்தும் நின்று விட்டது போல் தோன்றியது. இருவரும் ஒருவரை ஒருவர் வித்தியாசமான உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் தன் காதலை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் வெளிப்படுத்துவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை, தன் காதலை இப்படி வெளிப்படுத்த வேண்டி வரும் என்று அவனும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அப்படி வெளிப்படுத்த நேர்ந்து விட்டதற்காக இருவருமே கவலைப்படவும் இல்லை.

அந்த இடம் விட்டு சென்றான் அவன், குஷியின் முகத்தில் புன்னகையை துளிர்க்க விட்டு.

அவன் தன் மனதில் இருப்பதை கூற வேண்டும் என்று தான் அவளும் காத்திருந்தாள். இறுதியில் அது நிகழ்ந்து விட்டது. அவர்களது கண்ணாமூச்சி விளையாட்டு முடிவுக்கு வந்தது. ஆனால் குஷிக்கு தெரியாத ஒரு உண்மை வெளிப்பட வேண்டியிருக்கிறது. அது அவளுக்கு தெரிய வரும்போது, அதை அவள் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்...?

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top