30 தெரியாத அர்னவ்
30 தெரியாத அர்னவ்
குறும்புக்கார அர்னவ்வை கையாள்வது அவ்வளவு சுலபமாய் இல்லை. குஷிக்கு மூச்சு முட்டியது. அவளும் லாவன்யாவும் ரத்னாவுக்கு சமையலில் உதவினார்கள். சமையலறையில் இருந்து அவ்வப்போது காணாமல் போனாள் லாவண்யா. இப்பொழுது தான் அவளுக்கும் நந்தாவுக்கும் இடையில் எந்த தடையும் இல்லையே. சமையலறைக்கு வந்த லாவண்யா பிரிட்ஜில் இருந்து காய்கறிகளை எடுத்துக் கொண்டு வந்தாள் ஒன்றும் நடக்காதது போல.
அவளை நோக்கிச் சென்ற குஷி,
"முடிஞ்சிருச்சா?" என்றாள் ரகசியமாய்.
"என்னது?"
"எதுக்காக போனியோ, அது..."
"நான் நந்தாவை எழுப்பத் தான் போனேன். அவன் இன்னும் தூங்கிட்டு இருந்தான். தெரியுமா?"
"அப்படின்னா ராத்திரி எல்லாம் அவன் தூங்கவே இல்ல போல இருக்கே...?" என்றாள் கிண்டலாய்.
"ஏன், நீ நல்லா தூங்கினியா?" என்றாள் லாவண்யா.
"எனக்கென்ன? நான் நல்லா தூங்கினேன்" என்றாள் குஷி.
"நீ தூங்கியிருப்ப. ஆனா உன்னோட அல்லவ் தூங்கி இருக்க மாட்டாரு..."
"அதெல்லாம் இல்ல. அவனும் தூங்கினான்" என்றாள் பதற்றத்துடன்.
"உன்னை இறுக்கமா கட்டிப் பிடிச்சுகிட்டா?"
"அவ்வளவு ஈஸியா என்னை தொட விட்டுடுவேன்னு நினைச்சியா?"
"ஈஸியா விடமாட்ட... கொஞ்சம் கஷ்டப்பட்ட விட்டுடுவ தானே?"
"வாயை மூடு"
"பசங்களா, போய் எல்லாரையும் சாப்பிட கூப்பிடுங்க" என்றார் ரத்னா.
நந்தாவை அழைக்க தங்கள் அறைக்குச் சென்றாள் லாவண்யா. அரவிந்தன் ஏற்கனவே அங்கு தான் இருந்தார். அர்னவ்வை கூப்பிட குஷி செல்வதற்கு முன், அவனே அங்கு வந்தான். அவனைப் பார்த்து நம்முட்டு புன்னகை சிந்தினார் அரவிந்தன்.
"ஏன் சிரிக்கிறீங்க?" என்று ரத்னா முகத்தை சுருக்கினார்.
அனைவரது பார்வையும் அரவிந்தன் பக்கம் திரும்பியது. அர்னவ்வை பார்க்கச் சொல்லி அவர் ரத்னாவுக்கு சைகை செய்தார். அவன் முகத்தைப் பார்த்த ரத்னா, கல் என்று சிரித்தார். குஷியின் பொட்டு, அவன் தாடையில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை பார்த்து வாயை பிளந்தாள் குஷி. புரியாதது போல் அமர்ந்திருந்தான் அர்னவ்.
"அரு, உன் ரூமை விட்டு வெளியில கிளம்புறதுக்கு முன்னாடி, உன் முகத்தை கண்ணாடியில பார்த்துவிட்டு வெளியில் வா" என்று சிரித்தான் நந்தா.
மேசையின் மீது இருந்த தட்டை எடுத்து, தன் முகத்தை பார்த்த அர்னவ், குஷியை பார்த்து குறும்பு புன்னகை வீசினான். தன் பல்லை கோபமாய் கடித்தாள் அவள். அவளுக்கு தெரியும், அவன் வேண்டுமென்றே தான் இப்படி எல்லாம் செய்கிறான் என்று.
குஷியை நோக்கி சாய்ந்த லாவண்யா,
"கஷ்டப்படாமலேயே அவர் உன்னை தொட்டுட்டார் போல இருக்கே?" என்றாள்.
குஷி அவளை பார்த்து முறைக்க, தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள் லாவண்யா. அவள் லாவண்யாவின் பக்கத்தில் அமர நினைத்தபோது, அவளை தடுத்தார் அரவிந்தன்.
"குஷி நீ அரு பக்கத்துல இருக்கிற சேர்ல உக்காரு... எப்பவும்..."
தன் பக்கத்தில் இருந்த நாற்காலியை அவளுக்காக பின்னால் இழுத்தான் அர்னவ். அதில் அமர்ந்து கொண்ட குஷி, யாரையும் பார்க்காமல் சாப்பிட துவங்கினாள். மதிய உணவை முடித்துக் கொண்டு தன் அறைக்குச் சென்ற அர்னவ்வின் பின்னால் சென்றாள்.
"எதுக்காக இப்படி எல்லாம் டர்டி கேம் விளையாடுற?" என்றாள் கோபமாய்.
"டர்டி கேமா? நீ எந்த கேமை பத்தி பேசுற?"
"எதுக்காக என்னோட பொட்டை உன் கன்னத்தில் ஒட்டிகிட்ட?"
"ஏன்னா, அதை நெத்தியில ஒட்டிக்க நான் ஒன்னும் பொம்பள பிள்ளை இல்லையே" என்று சிரித்தான்.
"உன்னை ரொம்ப ஸ்மார்ட்னு நினைச்சிக்காத"
"நான் ஸ்மார்ட்டா? அது எனக்கு தெரியாதே..."
"என்னை கடுப்பேத்துறதை நிறுத்து. இல்லன்னா..."
"இல்லன்னா?"
"நான் உன்னை வார்ன் பண்றேன். எனக்கு இதெல்லாம் பிடிக்கல" என்று அவள் அங்கிருந்து செல்ல நினைத்தாள்.
அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். அவள் அவன் நெஞ்சின் மீது வந்து விழுந்தாள். அவளை தன் கரங்களுக்குள் பூட்டிக் கொண்ட அவன்,
"இந்த கேம் உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்" என்றான்.
அவளது உடலின் ஒவ்வொரு ரத்த செல்லும் நடுங்கியது. அவளுக்குள் என்ன நிகழ்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. திடீரென்று ஏற்பட்டுவிட்ட அந்த நெருக்கம் அவளுக்குள் ஏதோ செய்தது.
"என்னை விடு" என்றாள் தடுமாற்றத்துடன்.
"இது உனக்கு பிடிக்கலையா? அப்போ நான் வேற ஏதாவது ட்ரை பண்றேன்"
"அர்...ன...வ்... என்னை விடு..."
"விடுறேன்... என்கிட்ட வாங்குனதை நீ திருப்பி கொடுத்துட்டா..."
"நான் என்ன வாங்கினேன்?"
"நீ கைல மெஹந்தி வரைஞ்சிருந்தப்போ நான் உனக்கு ஒன்னு கொடுத்தேன்... மறந்துட்டியா?"
அவன் கொடுத்த முத்தத்தை நினைத்து அவள் மென்று விழுங்கினாள்.
"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல"
"நெஜமாவா நான் உனக்கு கொடுத்த கிஸ்ஸ்ஸ்ஸ் பத்தி தான் பேசுறேன்..." என்றான் அவள் காதில் தன் மூச்சு உரச.
"முடியாது..."
"முடியாதுன்னா, நான் அதுக்கு அடுத்த கட்டத்துக்கு போயிட வேண்டியது தான்..." என்றான் ரகசியமாய்
"வாயை மூடு"
"டெஃபனட்டா... உன் வாயை தானே...?" அவளது இதழ்களை நோக்கி குனிந்தான்.
அவன் பிடியிலிருந்து வெளிவர அவள் போராடினாள். ஆனால் அவளால் ஒரு அங்குலத்தை கூட அசைக்க முடியவில்லை. கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள். தன் விரலால் அவள் கன்னத்தில் கோடு வரைந்து அவளது நிலையை மோசமாக்கினான் அர்னவ். ஆனால் சில நொடிகளில் அவள் அமைதியாகி போனாள். அதை அவன் உணர்ந்தான். அவளிடம் ஏற்பட்ட அவனது தாக்கம் அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. அவனது முகத்தில் இருந்த குறும்பு புன்னகை மறைந்தது. அவனது பிடி தளர்ந்தது. ஆனாலும் சிறிதும் அசையாமல் அப்படியே நின்றாள் குஷி. மூடிய கண்களுடன் அவனிடமிருந்து எதையோ எதிர்பார்த்து நின்றாள் அவள்.
தன்னை சுதாகரித்துக் கொண்ட அர்னவ், தன் நெற்றியால் அவள் நெற்றியை செல்லமாய் இடித்தான். அது அவளை ஏலியன் உலகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தது. தான் நின்றிருந்த நிலையை எண்ணி சங்கடமடைந்தாள். எப்படி அவள் இவ்வளவு எளிதாய் விட்டுக் கொடுத்து விட்டாள்? தன் கண் இமைகளை மெதுவாய் உயர்த்தி அவனது முகத்தை படித்தாள். அவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம், தன் கைபேசியை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் அர்னவ்.
அவன் என்ன ரகம்? அவள் அவனை விட்டு ஓடிய போது துரத்தி துரத்தி கிண்டல் செய்தான். ஆனால் அவள் தன்னிலை இழந்த போது, ஒன்றும் நடக்காதது போல் அங்கிருந்து சென்று விட்டான். ஏன்? அவனுக்கு என்ன தான் வேண்டும்? ஒன்றும் புரியாமல் கட்டிலில் சாய்ந்தாள் அவள்.
மாலை
குஷி பாயாசமும், லாவண்யா காரமான தேங்காய் சட்னியுடன் பஜ்ஜியும் செய்து அதை அனைவருக்கும் வழங்கினார்கள்.
"ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு. இவ்வளவு திறமைசாலியான மருமகள் எனக்கு கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். குஷி போய் கரிமாவுக்கும் அண்ணனுக்கும் கொடுத்துட்டு வா" என்றார் ரத்னா.
"சரிங்க ஆன்ட்டி. இது அர்னவ்க்கு. சக்கரை கம்மியா போட்டிருக்கேன். நான் இதை அம்மாகிட்ட கொடுத்துட்டு வரேன்" என்று ஒரு கிண்ணத்தில் பாயசம் எடுத்துக்கொண்டு சென்றாள் குஷி.
........
அவளை பார்த்த கரிமா, ஆவலுடன்
"குஷி... வா, வா..." என்றார்.
முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு அங்கேயே நின்றாள் குஷி.
"என்ன ஆச்சு?"
"இதுக்கு முன்னாடி என்னை எப்பவாவது இப்படி வெல்கம் பண்ணி இருக்கீங்களா? இன்னைக்கு மட்டும் ஏன் செய்றீங்க? நான் இந்த வீட்டுக்கு விருந்தாளி ஆயிட்டேனா?"
அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட கரிமா அவளை அணைத்துக் கொண்டார்.
"ஒரே நாள்ல நம்ம உறவு மாறிடுச்சா மா?"
கலங்கிய கண்களுடன் இல்லை என்று தலையசைத்த அவர்,
"பைத்தியக்காரி, நீ அப்படியெல்லாம் யோசிக்க கூடாது. உன்னோட அப்பா அம்மாவை விட சிறந்த ஒரு உறவு உனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கணும். நம்ம உறவு எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதை யாராலும் மாத்த முடியாது. ஆனா இப்போ, அர்னவ் தான் உன்னோட வாழ்க்கை. அதை எப்பவும் ஞாபகத்துல வச்சுக்கோ"
சரி என்று தலையசைத்த படி தான் கொண்டு வந்த பாயாசத்தை அவரிடம் கொடுத்தாள்.
"என்னோட ப்ரிபரேஷன். டேஸ்ட் பண்ணி பாருங்க"
அதை சாப்பிட்ட கரிமா,
"வாவ்... நீ கலக்கிட்ட... உன் மாமியார் சும்மாவே அலட்டிக்குவாளே இத சாப்பிட்டுட்டு அவ மயக்கம் போட்டு விழுந்திடலையே?" என்றார்
அதைக் கேட்டு சிரித்த குஷி,
"எங்களைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க. நான் என்னோட புக்ஸை கொண்டு போறேன்" என்றாள்.
"உன் புருஷனை பக்கத்துல வச்சுக்கிட்டு நீ டிஸ்டர்பன்ஸ் இல்லாம படிக்க முடியும்ன்னு நினைக்கிறாயா?" என்றார் கிண்டலாய்.
அவரைப் பார்த்து முறைத்து விட்டு தன் அறைக்கு சென்றாள் குஷி. சற்று நேரத்திற்கு பிறகு மாடியில் இருந்து வந்த அலறலை கேட்டார் கரிமா. அது குஷியின் குரல் தான். அவள் அறையை நோக்கி ஓடினார் கரிமா. தனது கணுக்காலை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் குஷி, வேதனையான முகபாவத்துடன்.
"என்ன ஆச்சு குஷி?"
"கால் சுளுக்கிடுச்சு மா"
கரிமா அவளது காலை தொட்ட போது,
"இஸ்ஸ்ஸ்" என்றாள்.
"இரு நான் தைலம் கொண்டு வரேன்" என்று ஓடிச் சென்று தைலத்தோடு திரும்பி வந்தார்.
அவரை தொடவே விடவில்லை குஷி, வலி அதிகமாக இருந்ததால்.
ரத்னாவுக்கு ஃபோன் செய்து அவரிடம் விஷயத்தை கூறினார் கரிமா. அதைக் கேட்டு ரத்னா பதற்றம் அடைந்தார். குஷி சமைத்த பாயசத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அர்னவ் அதை கவனித்து,
"என்ன ஆச்சு மா?" என்றான்.
"குஷிக்கு கணுக்கால்ல சுளுக்கு பிடிச்சிருக்காம்" என்றபடி அவர்கள் வீட்டிற்கு ஓடினார். அவரை பின்தொடர்ந்து லாவண்யாவும் சென்றாள்.
குஷி கட்டிலில் படுத்திருப்பதை பார்த்தார்கள் அவர்கள். அவளது காலை மெல்ல பரிசோதித்தார் ரத்னா. கரிமா அவள் காலை அழுத்திய போது அவள் அலறினாள்.
"ஏற்கனவே அவ வலியில் இருக்கும் போது, நீ எதுக்காக போட்டு அழுத்துற?" என்றார் ரத்னா.
"வேற எப்படி தான் அதுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறது?"
"நீ ஒன்னும் செய்ய வேண்டாம். நான் டாக்டரை கூப்பிடுறேன்"
தனது குடும்ப டாக்டருக்கு ஃபோன் செய்த ரத்னா, அவர் வெளியூர் சென்று விட்டார் என்பதை அறிந்து கொண்டார்.
"இப்போ நம்ம என்ன செய்றது?"
"வேற டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போகலாம்" என்றார் கரிமா.
மெல்ல தன் காலை கீழே வைத்த குஷி, மீண்டும் வலியில் அலறினாள். அவரது அவளது கண்கள் கலங்கின.
"இரு குஷி. நீ நடக்க வேண்டாம். பொறுமையா இரு. டாக்டர் நாளைக்கு வந்துடுவாரு. அவர் வந்து உன்னை ட்ரீட் பண்ணட்டும். அதுவரைக்கும் நீ இங்கேயே இரு" என்றார் ரத்னா.
"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? நேத்து தான் அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்கு" என்றார் கரிமா.
"அதனால என்ன? அவ எவ்வளவு கஷ்டப்படுறான்னு உனக்கு தெரியலையா?"
கரிமா அவரை மறுத்து பேச நினைத்தபோது, அர்னவ்வின் குரல் கேட்டு நின்றார்.
"என்ன ஆச்சிமா?"
"பாரு அரு, குஷியால அவளோட காலை தரையில வைக்க கூட முடியல. அவள் எப்படி நம்ம வீட்டுக்கு வருவா?"
"அதனால?" என்று தன் புருவம் உயர்த்தினான்.
"இன்னைக்கு ராத்திரி அவ இங்கேயே இருக்கட்டும்" என்றார் ரத்னா.
"ஏதோ தவறாய் உணர்ந்தான் அவன். தலை குனிந்தபடி அமர்ந்திருந்த குஷியை பார்த்த அவன், உள்ளுக்குள் புன்னகைத்தான். அவள் தன் அம்மா வீட்டில் தங்க வேண்டும் என்ற அவர்களது சேலஞ்சை ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அமைத்து விட்டதாய் தெரிந்தது.
அவள் கட்டிலை நோக்கி மெல்ல வந்த அவன்,
"உன்னால நடக்க முடியாதா குஷி?" என்றான்.
அவள் முடியாது என்று தலையசைத்தாள்.
"சரி நீ நடக்க வேண்டாம்..." என்று யாரும் எதிர்பாராத வண்ணம், அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு, அங்கிருந்த அனைவரது விழிகளையும் பெரிதாக்கினான் அர்னவ்.
"என் வைஃபை நான் வீட்டுக்கு கூட்டிகிட்டு போறேன், ஆன்ட்டி" என்று, பஞ்சு மூட்டையை சுமந்து செல்பவனை போல், அனாயாசமாய் நடக்க தொடங்கினான்.
அவனது முகத்திலிருந்து தன் கண்களை அகற்றவே முடியவில்லை அவளால். அவர்களது சிறு வயது ஞாபகங்கள் அவள் மனதில் இழையோடியது. இப்படித்தான் எங்கு சென்றாலும் அவளை அவன் தூக்கி சென்றான். அந்த நாட்கள் எல்லாம் எவ்வளவு இன்பமாய் இருந்தது... அதற்காக இப்போது அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல. முன்பிருந்ததை விட இப்பொழுது அவளுக்கு அது அதிக மகிழ்ச்சியை தந்தது. ஒரே ஒரு குறை தான், சிறுவயதில் அவன் கன்னத்தை பிடித்து கடித்ததை போல் அவளால் இப்பொழுது செய்ய முடியவில்லை.
அவன் முகத்தில் புன்னகை எழுந்ததை கவனித்தாள் அவள். அவளை நோக்கி லேசாய் குனிந்து தன் கன்னத்தை காட்டிய அவன்,
"உனக்கு வேணுமின்னா என் கன்னத்தை கடிச்சுக்கலாம்" என்றான்.
திகைத்துப் போனாள் குஷி. அவள் மனதில் என்ன எழுந்தது என்பது அவனுக்கு எப்படி தெரிந்தது? இவ்வளவு தூரம் அவளது மனதை அவனால் படிக்க முடிகிறது என்றால், அவன் தன்னிடம் அவளை காதலிக்கிறேன் என்று கூறலாம் இல்லையா? அதை மட்டும் ஏன் செய்ய மாட்டேன் என்கிறான்?
அவளை கையில் தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான் அவன். அரவிந்தனும் நந்தாவும், தங்கள் கண்களையே நம்ப முடியாமல் எழுந்து நின்றார்கள். அவர்களைப் பார்த்து சிரித்தபடி தன் அறைக்குச் சென்ற அர்னவ், அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.
"உன்னோட டர்டி கேம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று கண்ணடித்தான்.
"நீ என்ன சொல்ற?" என்றாள் அவள் குழப்பத்துடன்.
"நம்ம ரூம்ல தான் யாருமே இல்லையே... இப்போ நீ தாராளமா நடக்கலாம்" என்றான் கிண்டலாக.
பல்லை கடித்தாள் அவள். அவளது கால் வீக்கம் கண்டிருந்ததை கவனித்த அவன், பதற்றம் அடைந்தான்.
"ஏய், உண்மையிலேயே உனக்கு சுளுக்கு புடிச்சிருக்கா?" என்று மெல்ல அவளது காலை தொட்டான்.
அவன் கையை தள்ளிவிட்டு, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, திருப்பிக் கொண்டாள்.
"நீ நம்ம பெட்ல ஜெயிக்க தான் இப்படி செஞ்சேன்னு நினைச்சேன்"
அப்பொழுது தான் அவர்களுக்குள் இருந்த பெட் அவள் நினைவுக்கு வந்தது. ஆம் அவள் அதை மறந்தே போய்விட்டாள்.
ஓடிச் சென்று தைலத்துடன் வந்த அவன், அவள் காலை தொட முயன்றான். தன் காலை இழுத்துக் கொண்ட அவள்,
"ஒன்னும் தேவையில்ல" என்றாள் சலிப்புடன்.
"ஐ அம் சாரி..." என்று அவன் கூறியதை கேட்டு திகைத்தாள் அவள்.
"நான் தைலம் தேச்சு விடுறேன்" என்றான்.
"வேண்டாம் எனக்கு ரொம்ப வலிக்குது"
லேசாய் தலையசைத்து, அவள் காலை இழுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டு, தன்னிடமிருந்து தைலத்தை தடவி லேசாய் மசாஜ் செய்து விட்டான். வெளித்தோற்றத்திற்கு கரடு முரடாய் தெரியும் ஒருவனது தொடுதல் இவ்வளவு மெத்தென்று இருக்குமா?? அன்று காலை அவளை முத்தமிட அவன் முயன்ற போது, அவனது பிடி மிகவும் உறுதியாய் இருந்ததே...!
மயிலிறகால் வருடுவது போல் இருந்த அவனது தொடுதல் அவளை உருகச் செய்தது. ஏன் அவள் உருக மாட்டாள்? அவள் எதிர்பார்த்திருந்தது ஊடலாடும் ஒரு குறும்புக்காரனை ஆயிற்றே...! அதற்கு நேர் மாறாய் அவன் நடந்து கொண்டது தான் அவள் உருகியதற்கு காரணம். அவனது அந்த மென்மையான பக்கம் அவளை பேச்சிழக்க செய்தது. அவன் அனைவருக்கும் தெரிந்த அர்னவ்வும் இல்லை, அவளது அல்லவ்வும் இல்லை. அவனுக்குள் இன்னும் எத்தனை அவதாரங்களை அவன் மறைத்து வைத்திருக்கிறானோ...! அவன் மசாஜ் செய்து விட்டதற்குப் பிறகு அவளுக்கு எவ்வளவோ தேவலாம் போல் இருந்தது.
"இப்போ எப்படி இருக்கு?"
"பெட்டர்"
"ரெஸ்ட் எடுத்துக்கோ பெட்டை விட்டு தேவையில்லாம கீழே இறங்காதே. உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கேளு. தயங்காதே..."
அவனது பேச்சை ரசித்தபடி சரி என்று தலையசைத்தாள். அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தும் போது, உலகத்தில் உள்ள அனைத்து ஆண்களுமே மிகவும் அழகானவர்கள் தான். அப்படி என்றால் அவனும் அழகானவன் தானே?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top