3 அம்மாக்களின் விருப்பம்


3 அம்மாக்களின் விருப்பம்

சமையலறையில் இருந்து வரவேற்பறைக்கும், வரவேற்பறையில் இருந்து ஸ்டோர் ரூமுக்கும் பரபரப்பாய் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்த ரத்னாவை பார்க்குமாறு அர்னவிடம் ஜாடை காட்டினார் அரவிந்தன்.

அவரைப் பார்த்து சிரித்த அர்னவ்,

"அவங்களுக்கு என்ன பா ஆச்சு?" என்றான்.

"அவ என்ன சொன்னான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"

உதடு மடித்து, புருவம் உயர்த்தி, அவன் இல்லை என்று தலைசைத்தான்.

"என்னோட டைமை உன்னை யுட்டிலைஸ் பண்ணிக்க சொன்னால்ல? போற போக்கை பார்த்தா, கரிமா இங்க வந்துட்டா, நமக்கு தான் உங்க அம்மாவோட டைம் கிடைக்காது போல இருக்கு. நடக்குதா இல்லையா பாரு"

"அவங்க ஃப்ரெண்ட்ஷிப் உங்களைவிட ஒன்றும் குறைஞ்சது இல்லையே!" என்றான் நந்து கிஷோர்.

"நந்து சொல்றது சரி தானே!" என்றான் அர்னவ்.

"அதுல எந்த சந்தேகமும் இல்ல. அவங்க ரெண்டு பேரும் குடும்பத்தை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நிராதரவா வந்து நின்னப்போ, ரத்னா தான் அவங்களுக்கு சப்போட்டா இருந்தவ"

"அப்படியா பா?" என்றான் நந்தா ஆச்சரியத்துடன்.

"ஆமாம், அவங்க காதலுக்கு கரிமா வீட்ல ஒத்துக்கல. அதனால அவளை மும்பையில் இருந்த நம்ம கோட்ரசுக்கு கூட்டிகிட்டு வந்துட்டான் ஷஷி. நாங்க தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். மிலிட்டரி ஃபார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சு, அவங்களுக்கு தனி வீடு கிடைக்கிற வரைக்கும், கரிமா நம்ம வீட்ல தான் தங்கி இருந்தா"

"ஓஓஓஓ... அவங்களோடதும் லவ் மேரேஜ் தானா?" என்றான் நந்துகிஷோர் கிண்டலாய்.

"ஆமாம், அவங்களும் எங்களை மாதிரி தான். ஆனா நாங்க எங்க பேரன்ட்ஸ் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவங்களுக்கு அது இன்னும் கூட கிடைக்கல"

"இன்னும் கூடவா?"

"ஆமாம். ரெண்டு பேரும் கிட்டத்தட்ட அவங்க குடும்பங்களையே மறந்துட்டாங்க. கரிமாவோட அம்மா இறந்ததப்போ, அவளை அவங்க அம்மாவை பார்க்க கூட விடல அவங்க அண்ணன். நானும் ஷஷியும் சண்டை போட்டு தான் அவளை அவங்க அம்மாவை கடைசியா ஒரு தடவை பார்க்க வச்சோம்"

"அதனால தான் அவங்க உங்களுக்கு இவ்வளவு க்ளோசா இருக்காங்களா?"

"அதுக்காக மட்டும் இல்ல. ஷஷி தங்கமானவன். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற புரிதல் வார்த்தையால சொல்ல முடியாது. நாங்க ரெண்டு பேருமே வேற வேற பின்னணியில வந்தவங்களா இருந்தாலும், அதெல்லாம் எங்களுக்கு குறுக்கே வந்ததே இல்ல. அது நட்புக்கெல்லாம் அப்பாற்பட்டது. நண்பர்கள் எல்லாம் கடவுள் கொடுக்கிற வரம். அப்படித்தான் எனக்கு ஷஷி"

"நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அதிர்ஷ்டசாலி" என்றான் நந்துகிஷோர்.

ஆமாம் என்று தலையசைத்த அரவிந்தன், அர்னவை பார்த்த போது, அவனது நிலைமை என்ன என்பதை உணர்ந்து, குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். தான் செய்த தவறு என்ன என்பதை புரிந்து வருத்தப்பட்டார். அதை நந்துகிஷோரும் புரிந்து கொண்டான். தன் நண்பனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில், அவர் தன் மகனை மறந்து விட்டார். அவர் மெல்ல அவன் கையை பற்ற, அவனது கண்கள் கலங்கி இருந்ததை கண்டார்.

"அரு, ஐ அம் சாரி டா. நான் உன் முன்னாடி பேசியிருக்கக் கூடாது" என்றார் வருத்தத்துடன்.

"பரவால்ல விடுங்க" என்றான் தன்னை சுதாகரித்துக் கொண்ட அர்னவ்.

ஆனால் அவனது உடைந்த குரல் அவன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்த்தியது. அவற்றையெல்லாம் சமையலறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ரத்னாவின் மூளை துரிதமாய் வேலை செய்தது. ஏதாவது செய்து தன் மகனின் கவனத்தை திசை திருப்ப முயன்றார். வெளியில் இருந்தவர்களை, தான் கீழே விழுந்து விட்டதை போல் உணரச் செய்து, சமையல் அறையில் இருந்து சத்தமிட்டார். வெளியே இருந்தவர்கள் தலைத்தெறிக்க ஓடிச்சென்று பார்த்த பொழுது, அவர் கீழே அமர்ந்து தன் காலை பிடித்துக் கொண்டு எழ முயன்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து பதட்டம் அடைந்த அர்னவ்,

"உங்களுக்கு என்னமா ஆச்சு?" என்று அவரை நோக்கி ஓடினான், தன் மன வருத்தத்தை மறந்து.

அர்னவும் நந்தாவும் அவரை கைதாங்கலாக எழுப்பி, வரவேற்பறைக்கு அழைத்து வந்தார்கள்.

"அம்மா, எந்த வேலையும் உங்களால பொறுமையா செய்ய முடியாதா? என்னம்மா அவசரம்?" என்றான் அர்னவ்.

"அவன் சொல்றது சரி தான் ரத்னா, நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல. ஞாபகத்துல வச்சுக்கோ" என்றார் அரவிந்தன்.

"அப்பா, இதை நீங்க அம்மா கூட ரொமான்ஸ் பண்ணும்போது ஏன் நினைச்சு பார்க்கிறதில்ல?" என்றான் நந்துகிஷோர் கிண்டலாய்.

அவனை ஒரு அடி போட்ட அரவிந்தன்,

"எங்க ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்லாத டா" என்றார்.

"அப்படின்னா, நீங்களும் அதை ரகசியமாக வச்சுக்கணும்ல?" என்றான் நந்துகிஷோர் விடாமல்

"காதலுக்கு வயசே கிடையாது மை சன்... என் ரத்னா மாதிரி ஒரு வைஃப் உனக்கு கிடைச்சா, நீயும் அதை புரிஞ்சுக்குவ"

"ரெண்டு பேரும் வாயை மூடுங்க. நீங்க பேசுறதை பார்த்தா, அப்பா பிள்ளை மாதிரியா இருக்கு?" என்றார் ரத்னா.

"அம்மா, அவங்க இப்படி பேசுறது சகஜம் தானே? நீங்க என்னமோ அவங்க ஃபர்ஸ்ட் டைம் பேசுற மாதிரி ஃபீல் பண்றீங்க?" என்று சிரித்தான் அர்னவ்.

"ரொம்ப சங்கடமா இருக்கு அரு. ஆனா இவங்க ரெண்டு பேரும் அதைப்பத்தி கவலையேபடுறதில்ல"

அவரை சோபாவில் அமர வைத்து,

"கால் வலிக்குதா மா?" என்றான் அர்னவ்.

"இல்ல பரவாயில்ல..." என்றார்.

"இப்போ உங்களுக்கு என்ன செய்யணும்? சொல்லுங்க, நான் செய்றேன்"

"இல்ல அரு, நான் கிட்டத்தட்ட எல்லாத்தையும் முடிச்சிட்டேன்"

"அம்மா, உங்க ஆர்வத்தை குறைங்க. குஷி ரொம்ப சாதாரணமா பழகுறா. அவளை அட்ராக்ட் பண்ண நீங்க பெருசா எந்த கஷ்டமும் பட வேண்டாம்" என்று நந்து கிஷோர் கூற, வியப்படைந்தான் அர்னவ். குஷி எப்படி பழகுவாள் என்று அவனுக்கு எப்படி தெரியும்?

"நீ அவ கூட டச்சுல இருக்க போல இருக்கு?" என்றார் அரவிந்தன்.

"ஆமாம் பா. நாங்க சாட்டிங் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். அவ கொஞ்சம் கூட மாறவே இல்ல. நம்ம எப்படி போர்ட் பிளேயர்ல விட்டுட்டு வந்தோமோ, அதே மாதிரி தான் இருக்கா"

அர்னவ்வின் திகைப்புக்கு அளவே இல்லை. அவன் குடும்பத்தில், அவனைத் தவிர மற்ற அனைவரும் அவளுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவனுக்கு தான் அவளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. ஆனால், அவனுக்கு அவளை பற்றி தெரிந்தால் கூட அதனால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? அவன் எப்பொழுதும் போல தானே இருக்கப் போகிறான்?

"ஆமாம் அவ கொஞ்சம் கூட மாறவே இல்ல. அப்படியே தான் இருக்கா. ஆனா முதல்ல இருந்ததை விட ரொம்ப அழகா இருக்கா" என்றார் ரத்னா ஆசையாய்.

"அம்மா நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். நீங்க கவலைப்படாதீங்க. அவளை உங்க மருமகளாக்கிக்கணும் அப்படிங்கிற உங்க ஆசை எனக்கு தெரியும். உங்க ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன். என்ன ஒரு பிரச்சனை, அவர் செம்ம அழகா, எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கா..." என்றான் கவலையுடன்.

"வெல்டன் மை பாய்... நீயாவது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தியே...! மனதை தளர விட்றாத... வேலை அவளுக்கு உன்ன பிடிச்சாலும் பிடிக்கும்" என்ற அரவிந்தன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தார் ரத்னா. ஆனால் அங்கு ஒருவன் சங்கடத்தில் நெளிந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களது பேச்சு அவனுக்கு சங்கடத்தை மட்டுமல்ல, ஏமாற்றத்தையும் தந்தது. ஏனென்றால் ரத்னா எழுதிய மருமகள் கதைக்கு அவன் தான் ஹீரோ. மெல்ல அங்கிருந்து விலகி தன்னறைக்குச் சென்றான். கட்டிலில் அமர்ந்து, கண்களை மூடி தலை குனிந்தான், அந்த பழைய நினைவுகளில் அசை போட்டபடி.

சில வருடங்களுக்கு முன்பு...

போர்ட் பிளேயர்

"எங்க குடும்பம் என்னை இப்படி அடியோடு வெறுத்து ஒதுக்குவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. அவங்களுக்கு என்ன தான் பிரச்சனைன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. ஷஷி மாதிரி ஒருத்தர் தேடினாலும் கிடைக்க மாட்டார்னு ஏன் அவங்களுக்கு புரியல?" என்று ரத்னாவிடம் குறைப்பட்டு கொண்டிருந்தார் கரிமா.

"உன்னை வேண்டாம்னு ஒதுக்கினவங்களை நினைச்சு ஏன் கரிமா கவலைப்பட்டுக்கிட்டு இருக்க? உங்களுக்கு நாங்க இருக்கோம்ல...?"

"நீங்க மட்டும் இல்லேன்னா எங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்னு என்னால யோசிச்சு கூட பாக்க முடியல ரத்னா"

"நீ இன்னும் எத்தனை தடவை தான் இதையே சொல்ல போற? ஃபிரண்டுன்னு சொல்லிக்கிட்டு நாங்க வேற எதுக்கு இருக்கோம்?"

"நம்ம கடைசி வரைக்கும் ஒன்னாவே இருக்கணும் ரத்னா. சும்மா இருந்தோம், போனோம்னு இருக்கக் கூடாது. நம்மளோட ஃபிரண்ட்ஷிப் உறவா மாறி, அடுத்த தலைமுறைக்கும் தொடரணும்... நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா?"

அவர் என்ன கூறுகிறார் என்று புரிந்து இருந்தது ரத்னாவிற்கு.

"புரியுது, ஆனா..."

"தயவு செய்து முடியாதுன்னு மட்டும் சொல்லாத ரத்னா. நம்ம அர்னவ்க்கும் குஷிக்கும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது?"

"அப்படி நடந்ததுன்னா, இந்த உலகத்திலேயே சந்தோஷமானவள் நானா தான் இருப்பேன். ஆனா அந்த முடிவை நம்ம எப்படி எடுக்க முடியும்? அது அவங்க வாழ்க்கை இல்லையா? அவங்களுடைய பார்ட்னரா யார் வரணும்னு தேர்ந்தெடுக்குற உரிமை அவங்களுக்கு இருக்கு இல்ல?"

ஆமாம் என்று தலையசைத்தார் கரிமா கவலையுடன்.

"அவங்க வாழ்க்கையை அவங்க தேர்ந்தெடுக்கட்டும். அர்னவ்வும் குஷியும் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல"

அப்பொழுது அவர்கள்,

"நோ....." என்று கத்தியபடி குஷி அவர்களை நோக்கி ஓடி வருவதை கண்டார்கள்.

அவளை துரத்திக் கொண்டு ஓடி வந்தான் அர்னவ். ரத்னாவிடம் ஓடிவந்து அவருக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் குண்டு குண்டு கன்னங்களுடன் பொம்மை போல் இருந்த குஷி.

"என்ன ஆச்சு குஷி?" ரத்னா.

"நான் அல்லவ்வை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றாள் அவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.

ரத்னாவும் கரிமாவும் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த பெரிய பேச்சை அவர்கள் பிள்ளைகள் கேட்டு விட்டார்கள் என்பது தான் அவர்கள் சங்கடத்திற்கு காரணம்.

"அவன் எப்ப பாத்தாலும் என் முடியை பிடிச்சி இழுத்துகிட்டே இருப்பான்..." என்று குறை கூறினாள் குஷி.

அதைக் கேட்டு சிரித்த அர்னவ்,  அவள் முன்னாள் முழங்காலிட்டு அமர்ந்து,

"ஏய் டின்டின்... (அவன் அவளை டின்டின் என்று செல்லமாய் கூப்பிடுவது வழக்கம். ) என்னை கல்யாணம் பண்ணிக்கோ. நான் உன் முடியை பிடிச்சி இழுக்க மாட்டேன்... ப்ளீஸ் ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ..." என்றான்.

"ப்ராமிஸ்?"

"பிங்கி ப்ராமிஸ். நீயும் என்கிட்ட சண்டை போடக்கூடாது?"

"அப்படின்னா நீ எனக்கு டெய்லி சாக்லேட் தரியா?"

"கொடுத்துட்டா போச்சு..."

"ஹையா... அப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்" அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் குஷி.

அந்த க்யூட்டான குழந்தைகளைப் பார்த்து அவர்களது பெற்றாரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவளை தன் முதுகில் தூக்கிக் கொண்டான் அர்னவ்.

"அவளை எங்கடா கூட்டிகிட்டு போற?" என்றார் ரத்னா.

"வேற எங்க? சாக்லேட் வாங்கி கொடுக்க தான்"

ரத்னாவும் கரிமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து வாய் விட்டு சிரித்தார்கள்.

இன்று...

பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்த அர்னவ், மென்று விழுங்கினான். அம்மாவின் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன் என்று நந்து கிஷோர் கூறியதை ரத்னா ஏற்றுக்கொண்டார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் இதில் அவரது தவறு என்ன இருக்கிறது? அவரது மன மாற்றத்திற்கு காரணம் இவன் தானே? குஷியை ரத்னாவிற்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்று அவனுக்கு தான் தெரியுமே.

முன்பு இருந்ததை விட இப்பொழுது அவள் மிக அழகாய் இருக்கிறாள் என்று அவனது அம்மா கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. தனது கைபேசியை எடுத்த அவன், முகநூல் பக்கத்தை திறந்தான். நந்து கிஷோரின் அக்கவுண்டில் நுழைந்து, அவனது நண்பர்களின் பட்டியலை பார்வையிட்டான். அதில் இருந்தாள் குஷி. அவளது ப்ரொஃபைலுக்குள் நுழைந்த அவன், சிறிது நேரம் மூச்சு விடவும் மறந்தான்.

ஆம், அவள் பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை... அதே பேசும் கண்கள்... அதே புன்னகை... ஆனால் சந்தேகம் இன்றி முன்பு இருந்ததை விட மிகவும் அழகாய் இருந்தாள், இளமையின் பொலிவுடன். அவளது புன்னகை அவன் மனதை ஏதோ செய்தது. அவனை நேரில் சந்திக்கும்போது, அவள் என்ன செய்யப் போகிறாள்? என்ன கேட்பாள்? எதற்குத் தான் அவன் இதைப் பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.

அவனது நிலைமை இப்பொழுதே இப்படி இருந்தால், அவள் வந்த பிறகு என்னவாக போகிறது? கட்டிலில் சரிந்த அவன், அவனது மனம் தோய்வாய் இருப்பதை உணர்ந்தான்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top